|
|
27 ஆகஸ்ட் 2019 |
|
|
பொதுக்காலம்
21ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
கடவுளுடைய நற்செய்தியை மட்டுமன்றி,
எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம்.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் 2: 1-8
சகோதரர் சகோதரிகளே! நாங்கள் உங்களிடம் வந்த நோக்கம் வீணாகவில்லை
என்பது உங்களுக்கே தெரியும். உங்களிடம் வருமுன்பே பிலிப்பி நகரில்
நாங்கள் துன்புற்றோம், இழிவாக நடத்தப்பட்டோம் என்பது உங்களுக்குத்
தெரியும். இருப்பினும் பெரும் எதிர்ப்புக்கிடையில் கடவுளுடைய
நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்க நம் கடவுளிடமிருந்து துணிவு
பெற்றோம்.
எங்கள் அறிவுரைகள் தவற்றையோ, கெட்ட எண்ணத்தையோ, வஞ்சகத்தையோ அடிப்படையாகக்
கொண்டவை அல்ல. நாங்கள் தகுதி உடையவர்கள் எனக் கருதி, நற்செய்தியைக்
கடவுளே எங்களிடம் ஒப்படைத்தார். அதற்கேற்ப, நாங்கள்
பேசுகிறோம். மனிதர்களுக்கு அல்ல, எங்கள் இதயங்களைச் சோதித்தறியும்
கடவுளுக்கே உகந்தவர்களாய் இருக்கப் பார்க்கிறோம். நாங்கள் என்றும்
போலியாக உங்களைப் புகழ்ந்ததே இல்லை. இது உங்களுக்குத் தெரிந்ததே.
போதனை என்னும் போர்வையில் நாங்கள் பொருள் பறிக்கப் பார்க்கவில்லை,
இதற்குக் கடவுளே சாட்சி. கிறிஸ்துவின் திருத்தூதர்கள் என்னும்
முறையில் நாங்கள் உங்களிடம் மிகுதியாக எதிர்பார்த்திருக்க
முடியும். ஆனால் மனிதர் தரும் பெருமையை உங்களிடமிருந்தோ, மற்றவர்களிடமிருந்தோ
நாங்கள் தேடவில்லை.
மாறாக, நாங்கள் உங்களிடையே இருந்தபொழுது, தாய் தன் குழந்தைகளைப்
பேணி வளர்ப்பதுபோல், கனிவுடன் நடந்துகொண்டோம். இவ்வாறு உங்கள்மீது
ஏக்கமுள்ளவர்களாய், கடவுளுடைய நற்செய்தியை மட்டுமன்றி, எங்களையே
உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம்; ஏனெனில் நீங்கள்
எங்கள் அன்புக்குரியவர்கள் ஆகிவிட்டீர்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
139: 1-3, 4-6 (பல்லவி: 1)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!
1 ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! 2 நான்
அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை
எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர். 3 நான் நடப்பதையும்
படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத்
தெரிந்தவையே. பல்லவி
4 ஆண்டவரே! என் வாயில் சொல் உருவாகுமுன்பே, அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர்.
5 எனக்கு முன்னும் பின்னும் என்னைச் சூழ்ந்து இருக்கின்றீர்;
உமது கையால் என்னைப் பற்றிப் பிடிக்கின்றீர். 6 என்னைப் பற்றிய
உம் அறிவு எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது; அது உன்னதமானது; என்
அறிவுக்கு எட்டாதது. பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
எபி 4: 12
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல்
வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும்
சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கண்டிப்பாய்க் கடைப்பிடிக்க
வேண்டும்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 23-26
அக்காலத்தில் இயேசு கூறியது: "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே,
பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, சோம்பு, சீரகம்
ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள். ஆனால் திருச்சட்டத்தின்
முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்
பிடிக்காமல் விட்டுவிடுகிறீர்கள். இவற்றைக் கண்டிப்பாய்க் கடைப்
பிடிக்கவேண்டும். அவற்றையும் விட்டுவிடக் கூடாது.
குருட்டு வழிகாட்டிகளே! நீங்கள் பருகும்போது கொசுவை வடிகட்டி
அகற்றுகிறீர்கள். ஆனால் ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள்.
வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக்
கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில்
தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப்
பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள்.
குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத்
தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிப்புறமும்
தூய்மையாகும்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
மத்தேயு 23: 23-26
"உங்கள் உட்புறத்தை எதனால் நிரப்பியிருக்கிறீர்கள்?"
நிகழ்வு
பத்தொன்பதாம் நூற்றாண்டில், இங்கிலாந்து நாட்டில்
'தண்டர்போல்ட்' என்ற பிரபலத் திருடன் ஒருவன் இருந்தான். அவன்
யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் திருடுவதில் கைதேர்ந்த ஆள். ஒருசமயம்
அவன் ஒரு வீட்டில் திருடிவிட்டு வெளியேறுபோது, அங்கிருந்த காவலாளி
அவனைப் பார்த்துவிட, அவன் அவரிடமிருந்து தப்பித்து ஓடினான். ஆனால்,
அந்தக் காவலாளி தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து அவனைக்
குறிபார்த்துச் சுட்டார். குறி எப்படியோ தப்பி, குண்டு தண்டர்போல்ட்டின்
வலதுகாலில் பாய்ந்தது. அப்படியிருந்தும் அவன் அங்கிருந்து தப்பித்து,
தான் இருந்த இடத்திற்கு ஓடிப்போனான்.
காலில் குண்டு பாய்ந்த பிறகு சில மாதங்கட்கு அவன் எங்கேயும்
திருடச் செல்லாமல், வீட்டிலே முடங்கிக் கிடந்தான். 'ஆடிய
காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா?' என்பார்களே அதுமாதிரி,
பிரபலத் திருடனாக இருந்த தண்டர்போல்ட்டால் திருடாமல் இருக்க
முடியவில்லை. எனவே, அவன் ஒரு பெரிய செல்வந்தரின் வீட்டில்
திருடுவதற்குத் திட்டம் தீட்டினான். குறிப்பிட்ட நாளில் அவன்
அந்த செல்வந்தரின் வீட்டில் திருடிக் கொண்டிருக்கும்போது, ஏதோவொரு
சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்திலிருந்த எல்லாரும்
முழித்துக்கொண்டார்கள். இதைத் தொடர்ந்து அவர்கள் அவனை நையப்புடைத்து
வழக்காடு மன்றத்தில் ஒப்படைத்தார்கள். வழக்காடு மன்றம் அவனுக்கு
பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனையை அளித்தது.
சிறையில் அடைக்கப்பட்ட அவன் ஓரிரு நாள்களிலேயே அங்கிருந்து தப்பித்து,
1818 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு வந்தான். அவன் தப்பித்த செய்தி
ஐரோப்பாக் கண்டம் முழுவதும் பரவியது. இதனால் அவன் தன்னுடைய முகத்தோற்றத்தையும்
குண்டடிபட்ட தன்னுடைய காலையும் 'தண்டர்போல்ட்' என்ற தன்னுடைய
பெயரை மருத்துவர். ஜான் வில்சன் எனவும் மாற்றிகொண்டு ஒரு மருத்துவரைப்
போன்று, மக்கள் மத்தியில் வலம் வந்தான். இதனால் யாருக்கும் அவன்மீது
ஐயம் வரவேயில்லை.
ஆண்டுகள் மெல்ல உருண்டோடின. அவனுக்கு வயது ஏறிக்கொண்டே சென்றது.
ஒருநாள் அவன் தன்னுடைய சாவு நெருங்கி வருவதை உணர்ந்து, தனக்குத்
தெரிந்தவர்களிடம், "நான் இறந்தபிறகு என்னுடைய உடையை என் உடலிலிருந்து
அகற்றாமல், அப்படியே அடக்கம் செய்துவிடுங்கள்" என்றான். அவர்களும்
அதக்குச் சரியென்று சொன்னார்கள். இது நடந்து ஒருசில நாள்களிலேயே
அவன் இறந்துபோனான். அவன் இறந்தபிறகு அவனுக்குத் தெரிந்தவர்கள்
அவனை அப்படியே அடக்கம் செய்ய முயன்றபோது, அந்த ஊரில் இருந்தவர்களெல்லாம்,
"இறந்தவரை அவர் உடுத்தியிருந்த உடையோடா அடக்கம் செய்வார்கள்?.
புத்தாடை உடுத்தித்தானே அடக்கம் செய்வார்கள்" என்றார்கள்.
இதனால் அவன்மீது இருந்த உடையானது களையப்பட்டது. அப்பொழுது அவனுடைய
காலில் இருந்த தழும்பும் அவனுடைய உண்மையான முகமும் மக்களுக்குத்
தெரிய வந்தது. "இது பிரபலத் திருடன் தண்டர்போல்ட் அல்லவா...
இவன்தான் ஒரு மருத்துவரைப் போன்று வேடம் தரித்துக்கொண்டு, நல்லவனைப்
போன்று வலம்வந்தானா!" என்று திட்டித் தீர்த்தார்கள்.
இந்தத் திருடனைப் போன்றுதான் பலரும் வெளிப்புறத்திற்கு நல்லவர்கள்
போன்றும் உள்ளுக்குள் மிகவும் மோசமாகவும் இருக்கின்றார்கள். இதேபோன்றுதான்
இயேசுவின் காலத்தில் இருந்த பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும்
வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் வெளிவேடத்தனத்தை நற்செய்தியில்
இயேசு மிகக் கடுமையியாகச் சாடுகின்றார். அதைக் குறித்து இப்பொழுது
சிந்தித்துப் பார்ப்போம்.
வெளியே நல்லவர்களாகவும் உள்ளுக்குள் கொடூரமானவார்களாகவும்
வாழ்ந்து வந்த பரிசேயக் கூட்டம்
இயேசுவின் காலத்தில் வாழ்ந்து வந்த பரிசேயக் கூட்டம், மோசேயின்
சட்டத்தில் சொல்லப்பட்டது போன்று 'புதினா, சோம்பு, சீரகம்' ஆகியவற்றிலிருந்து
பத்திலொரு பங்கைக் காணிக்கையாகச் செலுத்தினார்கள் (இச 14: 22;
லேவி 27: 30). இவற்றையெல்லாம் அவர்கள் செலுத்தக் காரணம், மக்கட்கு
முன் தங்களை நல்லவர்கள் என்று காட்டிக்கொள்வதற்காக. ஆனால், அவர்கள்
இன்னொரு பக்கம், திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளான நீதி, இரக்கம்,
நம்பிக்கை போன்றவற்றைக் கடைப்பிடிக்கத் தவறினார்கள்.
இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், பரிசேயக் கூட்டம்
மக்கள் பார்வைக்கு பக்திமான்களாக, நல்லவர்களாகக்
காட்டிக்கொண்டார். உள்ளேயோ அடுத்தவரை எப்படி அடக்கியாளலாம்; அடுத்தவருடைய
உடைமையை எப்படி அபகரிக்கலாம் என்ற எண்ணத்தோடு வாழ்ந்து வந்தார்கள்.
அதனால்தான் இயேசு அவர்களை வெளிவேடக்காரர்கள் என்று
சாடுகின்றார். பரிசேயர்களின் வெளிவேடத்தைக் குறித்துச்
சிந்தித்துப் பார்க்கும் நாம், நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கின்றது
என்று சிந்தித்துப் பார்ப்பது மிகவும் முக்கியமாகும்.
இறைவாக்கினார் ஓசேயா, ஆண்டவர் கூறுவதாக இஸ்ரயேல் மக்களைப்
பார்த்து இவ்வாறு சொல்வார், "பலியை அல்ல, இரக்கத்தையே
விரும்புகிறேன்." ஆகையால், இறைவன் விரும்புகின்ற இரக்கத்தை, பிறர்
மீதான அன்பை நம்முடைய வாழ்வில் கடைப்பிடிக்க முயற்சித்து,
வெளிவேடமில்லா வாழ்க்கை வாழ்வோம்.
சிந்தனை
'அன்பே திருச்சட்டத்தின் நிறைவு' (உரோ 13:10) என்பார் பவுல்.
ஆகையால் அன்பை நம்முடைய வாழ்வின் ஆணிவேராகவும் அடித்தளமாகவும்
கொண்டு ,வெளிவேடமில்லா வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
1 தெசலோனிக்கர் 2: 1-8
மனிதர்கட்கு அல்ல, கடவுட்கு உகந்த்வர்களாக இருப்போம்!
நிகழ்வு
குருவாக அருள்பொழிவு செய்யப்பட்ட ஐந்தாவது ஆண்டிலேயே ஓர் இளம்
குருவானவர் மறைமாவட்டதிலிருந்த ஒரு பிரசித்த பெற்ற திருத்தலத்தில்
பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
இது நடந்து இரண்டு மூன்று நாள்கள் கழித்து, அந்தக் குருவானவர்க்கு
அறிமுகமான பெரியவர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். "சாமி நம்முடைய
மறைமாவட்டத்தில் இருக்கக்கூடிய பெரிய திருத்தலத்தில் உங்களைப்
பங்குத்தந்தையாக நியமித்திருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டேன்...
அந்தத் திருத்தலப் பங்கில் ஆயிரத்தும் மேற்பட்ட குடும்பங்கள்
இருக்கின்றன... வெளியிலிருந்தும் ஏராளமான மக்கள் ஒவ்வொருநாளும்
அங்கு வந்துபோவார்கள். அப்படியிருக்கையில், சிறிய வயதினராக
நீங்கள் இத்தனை பேர்கட்கும் எப்டி உகந்தவராக இருக்கப் போகிறீர்கள்?"
என்றார் அந்தப் பெரியவர்.
அந்த இளங்குருவானவர் ஒரு நிமிடம் அமைதியாக அந்தப் பெரியவரையே
பார்த்தார். பின்னர் அவர் அவரிடம், "அந்தத் திருத்தலப் பங்கில்
எத்தனை பேர்கள் வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகவேண்டும்.
அத்தனை பேர்கட்கும் நான் உகந்தவனாக இருக்கவேண்டிய அவசியமே இல்லை.
நான் என் ஆண்டவர் இயேசுவுக்கு உகந்தவனாக இருந்தாலே போதும்" என்று
நெற்றிப் பொட்டில் அறைந்தாற்போல் அவர்க்குப் பதிலளித்தார்.
இறைப்பணிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் (அவர்கள் மட்டுமல்லாமல்
எல்லாரும்) மனிதர்கட்கு அல்ல, இறைவனுக்கு உகந்தவர்களாக வாழவேண்டும்
என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.
இன்றைய முதல் வாசகத்தில், பவுல் தன்னுடைய உடன் உழைப்பாளர்களோடு
சேர்ந்து, மனிதர்கட்கு அல்ல, இறைவனுக்கு உகந்தவர்களாக இருக்கப்
பார்க்கின்றோம்" என்று கூறுகின்றார். அவர் எப்படி இறைவனுக்கு
உகந்தவராக இருந்தார். அதற்காக அவர் கொடுத்த விலையென்ன என்பதைக்
குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
இறைவனுக்கு உகந்தவராய் இருந்துவந்த பவுல்
புனித பவுல் தெசலோனிக்கர்க்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் அவர், "மனிதர்கட்கு அல்ல,
எங்கள் இதயங்களைச் சோதித்தறியும் கடவுட்கு உகந்தவர்களாக இருக்கப்
பார்க்கின்றோம்" என்கிறார். பவுல், கடவுட்கு உகந்தவர்களாக இருக்கக்
பார்க்கின்றோம் என்று சொல்கின்றார் என்றால், அதற்காக அவர்
கொடுத்த விலை அதிகம்.
இன்றைய முதல் வாசகத்தின் தொடக்கத்தில் பவுல், தாங்கள் பிலிப்பி
நகரில் துன்புறுத்தப்பட்டதாகவும் இழிவாக நடத்தப்பட்டதாகவும்
கூறுகின்றார். இதுபோன்று அவரும் அவரோடு இருந்தவர்களும் அடைந்த
துன்பங்களும் ஏராளம். இது குறித்து அவர் 2 கொரி 11: 16-27 பகுதியில்
மிக விரிவாக எழுதுகின்றார். ஒருவேளை அவரும் அவரோடு இருந்தவர்களும்
மனிதர்கட்கு உகந்தவராக நடந்து, வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும்
என்றால், மனிதர்கட்குத் துதிபாடித் தங்களுடைய பிழைப்பை ஒட்டியிருக்கலாம்.
ஆனால், அவர்கள் அப்படியில்லாமல் ஆண்டவர்க்கு உகந்தவர்களாக இருக்கின்றார்கள்;
அதற்காக அவர்கள் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவிக்கின்றார்கள்.
பவுலடியாரைப் போன்று அவரோடு இருந்த உடன் பணியாளர்களைப் போன்று
நாம் ஆண்டவர்க்கு உகந்தவர்களாக நடக்கின்றபோது நிச்சயம் எதிர்ப்புகள்
வரும். அந்த எதிர்ப்புகட்கு மத்தியிலும் நாம் மனவுறுதியோடு இருக்கவேண்டும்.
அப்பொழுதுதான் நாம் இயேசுவின் உண்மையான சீடர்களாக இருக்க
முடியும். ஏனெனில் எவரும் இரு தலைவர்கட்குப் பணிவிடை செய்ய
முடியாது (மத் 6: 24)
தெசலோனிக்கத் திருஅவையாரைத் தன் பிள்ளைகளைப் போன்று அன்பு
செய்த பவுல்
இன்றைய முதல் வாசகத்தின் முற்பகுதியில் தானும் தன்னோடு இருந்தவர்களும்
கடவுட்கு உகந்தவர்களாக இருக்கின்றோம்... அதன்பொருட்டுத் துன்பங்களை
அனுபவித்து வருகின்றோம்... என்று சொன்ன பவுல், இரண்டாவது பகுதியில்
தெசலோனிக்கத் திருஅவைமீது ஒரு தாய்க்குரிய வாஞ்சையோடு இருப்பதை
வெளிப்படுத்துகின்றார்.
தெசலோனிக்கத் திருஅவையில் இருந்தவர்கள் ஆண்டவரின் நற்செய்தியைத்
திறந்த மனதோடு ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல், இறைப்பணிக்காகத்
தாராளமாகத் தந்து உதவினார்கள். அதனால் பவுல் அவர்களிடம், நாங்கள்
உங்களிடம் கடவுளின் நற்செய்தியை மட்டுமல்ல, எங்களையே உங்கட்குத்
தந்துவிட ஆவலாய் இருந்தோம். ஏனெனில், நீங்கள் எங்கள் அன்புக்குரியவர்களாகிவிட்டீர்கள்
என்கின்றார். உண்மையில் யார் யாரெல்லாம் இறைவார்த்தையைக்
கேட்டு, அதனை அறிவிக்கின்ற இறையடியார்களையும் ஏற்றுக்கொள்கின்றார்களோ
அவர்கள் இறையடியார்களால் மட்டுமல்ல, இறைவானாலும் அன்பு செய்யப்படுவார்கள்
என்பது உறுதி.
ஆகவே, நாம் இறையடியார்கள் அறிவிக்கின்ற இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாகவும்
இறையடியார்களை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாகவும் வாழ்ந்து, இறைவனின்
அன்பிற்கு உகந்தவர்களாவோம்.
சிந்தனை
'நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். இவ்வகைப் பலிகளே
கடவுட்கு உகந்தவை' (எபி 13: 16) என்பார் எபிரேயர் திருமுகத்தின்
ஆசிரியர். நாம் பவுலடியாரைப் போன்று கடவுட்கு உகந்த வழியில்
நடந்து, தெசலோனிக்க திருஅவையாரைப் போன்று நன்மையானதைச்
செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
முதல் வாசகம் (1 தெச 2:1-8)
தாய் தன் குழந்தைகளை
கடந்த ஆண்டு எங்கள் இறையியல் கல்லூரியில் 'விவிலியத்தில் மறைத்தூதுப்பணி'
என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், 'திருத்தூதர் பவுல்
அருட்சாதனம்
செய்தவரா?' என்ற கேள்வி ஒருவரால் எழுப்பப்பட்டது. அதற்கு
பதில் அளித்த அருள்பணியாளர், 'அருட்சாதனம்
செய்தவர் என்பதற்கும்
சில சான்றுகள் உள்ளன. அருட்சாதனம்
செய்யாதவர் என்பதற்கும் சில
சான்றுகள்' உள்ளன என்று சொன்னார். பவுலின் தனிப்பட்ட வாழ்வு பற்றி
நமக்கு ஒன்றும் தெரியாததால் நாம் இதை அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.
இன்றைய முதல் வாசகத்தில் தன்னுடைய பணியைப் பற்றி எழுதுகின்ற பவுல்,
'தாய் தன் குழந்தைகளைப் பேணி வளர்ப்பது போல கனிவுடன் நடந்துகொண்டோம்'
என்கிறார். இந்த வரியைப் பார்க்கும்போது பவுல் தன்னுடைய தாயை
மனத்தில் கொண்டிருந்தாரா அல்லது தன்னுடைய மனைவியை மனத்தில்
கொண்டிருந்தாரா அல்லது பொதுவான ஒரு தாயை மனத்தில்
கொண்டிருந்தாரா என்று தெரியவில்லை. வழக்கமாக தாய்மையோடு அதிகமாக
இணைக்கப்படும் மதிப்பீடு தியாகம். ஆனால், பவுல் சற்றே மாறுபட்டு,
'கனிவு' என்பதே 'தாய்மை' என்கிறார்.
கனிவு என்பதை எப்படிப் புரிந்துகொள்வது?
இந்த வரிக்கு முன்பாக, பவுல், 'மனிதர் தரும் பெருமையை உங்களிடமிருந்தோ
மற்றவர்களிடமிருந்தோ நாங்கள் தேடவில்லை' என்கிறார். பெருமை
கொள்கின்ற உள்ளம் தன்னையே உயர்த்தி நிற்கும். ஆனால், கனிவு
கொள்கிற உள்ளம் தாழ்ந்து நிற்கும். இதுதான் தாய்மை. கனிந்து தரையில்
விழப்போகும் பழம் தாழ்ந்தே இருக்கும். தன்னுடைய குழந்தையை
நோக்கித் தாழ்ந்து பணிகின்ற தாய்தான் அதற்கு வழிகாட்ட
முடியும், அதை அள்ளி அணைத்துக்கொள்ள, அதன் அழுகையைத் தணித்துக்கொள்ள
முடியும்.
தன்னுடைய நற்செய்திப் பணியின் முக்கிய மதிப்பீடாக கனிவை
முன்வைக்கிறார் பவுல். இன்று நான் செய்கின்ற எல்லாப் பணிகளிலும்
கனிவு தெரிகிறதா? அல்லது பெருமை தெரிகிறதா? கனிவு தெரிந்தால்
மட்டுமே பணி சிறக்க முடியும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத் 23:23-26) மறைநூல் அறிஞர் மற்றும்
பரிசேயரைத் தொடர்ந்து சாடுகின்ற பவுல், அவர்கள் சமயத்தின்
முக்கியக்கூறான கனிவை மறந்துவிட்டு, வீணான பாரம்பரியங்களையும்,
தூய்மைச் சடங்கையும் பற்றிக்கொண்டிருப்பதைச் சாடுகின்றார்.
இன்று நாம் கொண்டாடும் புனித மோனிக்கா, புனித அகுஸ்தினாரின்
தாய், கனிவிற்கு நல்ல எடுத்துக்காட்டு. தன் வயிற்றின் கனியாகிய
அகுஸ்தின் கனியும் வரை இவர் கண்ணீரால் கரைந்தார். இவரின் கண்ணீரின்
சூட்டில் அகுஸ்தின் என்னும் காய் கனிந்தது. இவர் தன் மகனைப்
பார்த்துக் கனிவுடன் குணிந்ததால் தான், அந்த மகன் கடவுளைப்
பார்த்து துணிவுடன் எழுந்தான்.
இன்று நான் என் பணியிலும், வாழ்விலும் கொண்டிருக்க வேண்டியது
இந்த ஒரு மதிப்பீடே: கனிவு.
என் சொல், செயல், எதிர்நோக்கு அனைத்திலும் இது பிரதிபலிக்க
வேண்டும்.
நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் இந்த மோனிக்கா போல ஏதோ ஒன்றிற்காய்
கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்க, நான் இவரின்
கண்ணீரைக் கூட்டலாமா?
கனிவில் வளர என்ன செய்ய வேண்டும்?
அ. யாரையும் தீர்ப்பிடக் கூடாது. தீர்ப்பிடும் மனம் தன்னையே
தாழ்த்தாது. தனக்கென்று ஒரு அளவுகோல் வைத்துக்கொண்டு எல்லாரையும்
அதைக் கொண்டு மதிப்பிடும். மோனிக்கா ஒருவேளை இப்படிப்பட்ட அளவுகோலை
வைத்திருந்தால், தன் மகனைவிட தான் புனிதமானவர், தன் மகன் சாபத்திற்குரியவர்
என்று அவரை அவமானப்படுத்துவதில் கருத்தாயிருந்திருப்பார். தன்
மகனுடைய பிறழ்வான உணர்வுகள், நல்ல படிப்பு, நல்ல அறிவு, நல்ல
நட்பு வட்டம் என அனைத்தையும் ஒன்றுபோல எடுத்துக்கொள்கின்றார்.
தன் மகனின் படிப்பிற்காக அவரை உச்சி முகரவும் இல்லை. தன் மகன்
தவறான உறவில் இருந்ததற்கா எட்டி உதைக்கவும் இல்லை. தீர்ப்பிடாத
உள்ளம்தான் இப்படிக் கனிவோடு இருக்க முடியும்.
ஆ. நான்தான் மையம் என்பதை விட்டு நகர வேண்டும். என்னைப் போலவே
அல்லது என்னைவிட நிறைய மையங்கள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ள
வேண்டும். தாய் ஒருபோதும் தன் குழந்தையைவிட அதிகம் தெரிந்தவள்
என்று காட்டுவதே இல்லை. தன் மகள் வரையும் 'அ' என்ற எழுத்தை அப்படிப்
பாராட்டுகிறாள். ஏன்? அவள் தன் மையம் கொண்டிருப்பதில்லை. அவளின்
மையம் குழந்தையே.
இ. சட்டதிட்டங்கள், வரைமுறைகள், வரையறைகள் அனைத்தையும் விட்டு
வெளியேற வேண்டும். இவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட நிலை வரைதான்
அன்றி இறுதி வரை அவை வருவதில்லை. 'நீங்கள் நிறைய நண்பர்கள்
வைத்திருக்கலாம். சொத்து சேர்த்திருக்கலாம். பெரிய வேலையில் இருக்கலாம்.
ஆனால் எத்தனை பேர் உங்கள் இறுதி ஊர்வலத்திற்கு வருகிறார்கள் என்பது
அன்றைய நாளின் தட்பவெப்ப நிலையைப் பொறுத்தே (க்ளைமேட்டை)
பொறுத்தே' என்பது அமெரிக்காவில் நான் லிஃப்ட் ஒன்றில் வாசித்த
வாசகம். ஆக, கனிவு கொண்டிருப்பவர் தன் வாழ்க்கையின் வரையறையைத்
தானே நிர்ணயம் செய்வார்.
கனிவு நோக்கி நாம் நகர மோனிக்கா நமக்கு உதவி செய்வாராக!
Rev. Fr. Yesu Karunanidhi |
|