Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         26 ஆகஸ்ட் 2019  
                                    பொதுக்காலம் 21ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
கடவுளிடம் திரும்பி வந்த நீங்கள் அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-5, 8-10

சகோதரர் சகோதரிகளே, தந்தையாம் கடவுளோடும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கின்ற தெசலோனிக்க சபைக்கு, பவுலும் சில்வானும் திமொத்தேயுவும் எழுதுவது: உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! நாங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இடைவிடாது உங்களை நினைத்து உங்கள் அனைவருக்காகவும் என்றும் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். செயலில் வெளிப்பட்ட உங்கள் நம்பிக்கையையும், அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பையும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருப்பதால் நீங்கள் பெற்றுள்ள உங்கள் மன உறுதியையும் நம் தந்தையாம் கடவுள்முன் நினைவுகூருகிறோம். கடவுளின் அன்புக்குரிய சகோதரர் சகோதரிகளே! நீங்கள் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஏனெனில் நாங்கள் நற்செய்தியை உங்களுக்கு வெறும் சொல்லளவிலன்றி, தூய ஆவி தரும் வல்லமையோடும் மிகுந்த உள்ள உறுதியோடும் கொண்டுவந்தோம். உங்கள் பொருட்டு நாங்கள் உங்களிடையே எவ்வாறு நடந்துகொண்டோம் என்பதும் உங்களுக்குத் தெரியும். எப்படியெனில் ஆண்டவருடைய வார்த்தை உங்கள் நடுவிலிருந்தே பரவியது. கடவுள்மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருப்பது மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் மட்டும் அல்ல, எல்லா இடங்களிலும் தெரிய வந்துள்ளது.

எனவே இதைப்பற்றி நாங்கள் எடுத்துச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை. நாங்கள் உங்களிடம் வந்தபோது எவ்வாறு நீங்கள் எங்களை வரவேற்றீர்கள் என்று அவர்களே கூறுகிறார்கள்.

நீங்கள் எவ்வாறு சிலைகளை விட்டுவிட்டு, உண்மையான, வாழும் கடவுளுக்கு ஊழியம் புரியக் கடவுளிடம் திரும்பி வந்தீர்கள் என்றும் கூறிவருகிறார்கள். இவ்வாறு நீங்கள் வானினின்று வரும் அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள். அவரே வரப்போகும் சினத்திலிருந்து நம்மை மீட்பவர். இறந்த அவரையே தந்தை உயிர்த்தெழச் செய்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 149: 1-2. 3-4. 5-6a, 9b (பல்லவி: 4a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார். அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள். 2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! பல்லவி

3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக! 4 ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார். பல்லவி

5 அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வாராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவாராக! 6a அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்; 9b இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
குருட்டு வழிகாட்டிகளே, ஐயோ! உங்களுக்குக் கேடு!

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 13-22

அக்காலத்தில் இயேசு கூறியது: "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை. வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு, நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்; அவ்வாறு சேர்த்தபின் அவரை உங்களை விட இரு மடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள்.

குருட்டு வழிகாட்டிகளே, ஐயோ! உங்களுக்குக் கேடு! யாராவது திருக்கோவிலின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; ஆனால் அவர் கோவிலின் பொன்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள்.

குருட்டு மடையரே! எது சிறந்தது? பொன்னா? பொன்னைத் தூயதாக்கும் திருக்கோவிலா? யாராவது பலிபீடத்தின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; ஆனால் அவர் அதில் படைக்கப்பட்ட காணிக்கையின்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள்.

குருடரே! எது சிறந்தது? காணிக்கையா? காணிக்கையைத் தூயதாக்கும் பலிபீடமா? எனவே பலிபீடத்தின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதன் மேலுள்ள அனைத்தின்மீதும் ஆணையிடுகிறார். திருக்கோவிலின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதில் குடிகொண்டிருக்கிறவர்மீதும் ஆணையிடுகிறார். வானத்தின்மீது ஆணையிடுகிறவர் கடவுளின் அரியணைமீதும் அதில் வீற்றிருக்கிற கடவுள்மீதும் ஆணையிடுகிறார்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
மத்தேயு 23: 13-22

கு(தி)ருட்டு வழிகாட்டிகளே!

நிகழ்வு

ஒரு நகரின் மிகவும் பரபரப்பான சாலையின் ஓரத்தில் அமர்ந்துகொண்டு பாம்பாட்டி ஒருவர், "அம்மாமாரே! அய்யாமாரே! பெரிய பெரிய பாம்புகளெல்லாம் நடனமாடும் காட்சிகளைக் காணவிரும்புகிறார்களா! வாருங்கள் வருங்கள்" என்று கூவிக் கூவி அழைத்தார். அவர் இவ்வாறு அழைத்ததைத் தொடர்ந்து பலரும் அவர்க்கு முன்பாகக் கூடினார்கள். திரளான மக்கள் அங்கு கூடியபின், பாம்பாட்டி தன்னிடம் இருந்த மகுடியை எடுத்து வாசிக்கத் தொடங்கினார். அவர் வாசிக்க வாசிக்க அவர்க்கு முன்பாக இருந்த பெரிய பெரிய பாம்புகளெல்லாம் படமெடுத்து ஆடத் தொடங்கின. இந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்துவிட்டு அங்கு திரண்டிருந்த மக்கள் தங்களிடமிருந்த பத்து, ஐம்பது, நூறு, ஐநூறு என்று அவர்க்குக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்.

அந்தக் கூட்டத்தில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் சிரித்துக் கொண்டே பாம்பாட்டியின் அருகில் சென்று, அவருடைய காதுக்குள், "நீங்கள் மகுடியை ஊதுவதால் அல்ல, உங்களுடைய கால்களைத் தரையில் அடிப்பதால்தான் தானே பாம்புகள் ஆடுகின்றன" என்றான். அவன் இவ்வாறு சொன்னதைக் கேட்டு, பாம்பாட்டி அதிர்ந்து போனார். "தம்பி! மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் போன பின்பு, இது குறித்து உன்னிடம் பேசுகிறேன். அது வரைக்கும் கொஞ்சம் ஓரமாக நில்" என்றார். அவனும் எல்லாரும் அங்கிருந்து போகும்வரைக்கும் சற்று ஓரமாகவே இருந்தான்.

எல்லாரும் போனபின்பு பாம்பாட்டி இளைஞனைத் தன் அருகே கூப்பிட்டார். "தம்பி! பாம்புகள் நான் ஊதுகின்ற மகுடியினால் அல்ல, என்னுடைய கால்களைத் தரையில் அடிப்பதனால்தான் ஆடுகின்றன என்பது உனக்கு எப்படித் தெரியும்?" என்றார். "அது என்னுடைய தாத்தா சொல்லிக்கொடுத்தது" என்றான் இளைஞன். "அது சரி, இந்த உண்மையை வேறு யாரிடமும் சொல்லிவிடாதே... சொன்னால் என்னுடைய பிழைப்பு நாறிப்போய்விடும்" என்று அவர் அவனைக் கெஞ்சிக் கேட்டார்.

அதற்குப் பின் இளைஞன் அந்தப் பாம்பாட்டியைப் பார்த்து, "உங்களிடம் நான் ஒரு கேள்வியைக் கேட்கவேண்டும்... நீங்கள் எதற்கு 'மகுடி ஊதுவதால் பாம்பு படமெடுத்து ஆடுகின்றது' என்று சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டான். "வேறு எதற்கு? வயிற்றுப் பிழைப்பிற்காகத்தான் மக்களிடம் இப்படிச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். சாதாரண மக்கள், நான் மகுடி ஊதிவதால்தான் பாம்பு படமெடுத்து ஆகின்றது என்று நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையைத்தான் நான் மூலதனமாகப் போட்டு பிழைப்பை ஒட்டிக்கொண்டிருக்கின்றேன்" என்றார் அந்தப் பாம்பாட்டி.

இந்தப் பாம்பாட்டியைப் போன்றுதான், ஒருசில சமயவாதிகள் அல்லது பிழைப்பு வாதிகள், மக்கள் தங்கள்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மூலதனமாகப் போட்டு கொள்ளை இலாபம் அடைந்துகொண்டிருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல், அவர்களைத் தவறான பாதையில் வழிநடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களைத் தான் நற்செய்தியில் இயேசு 'குருட்டு வழிகாட்டிகள்' என்று சாடுகின்றார். அவர்களை ஏன் இயேசு அவ்வாறு சாடுகின்றார் என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

திருச்சட்டத்தைப் போதிக்காமல், மனித சட்டங்களைப் போதித்த மறைநூல் அறிஞர்கள்

நற்செய்தியில் இயேசு, 'விண்ணகத்திற்கு வழி சொல்கின்றேன்' என்று சொல்லிக்கொண்டு, மக்களும் நுழைய விடாமல் அவர்களும் நுழையாமல் இருந்த மறைநூல் அறிஞர்களைக் கடுமையாகச் சாடுகின்றார். அவர்கள் விண்ணக வாயிலை மக்கட்கு அடைத்ததற்கு மிக முக்கியமான காரணம், அவர்கள் கடவுளின் திருச்சட்டத்தைப் போதிக்காமல், மனிதர்கள் உண்டாக்கிய சட்டத்தைப் போதித்ததுதான். இன்றைக்கும் கூட பலர் கடவுளின் வார்த்தையைப் போதிக்காமல், தங்களுடைய வார்த்தைகளை மிகவும் கவர்ச்சியாகப் பேசி, மக்களைப் படுகுழியில் தள்ளுவதைப் பார்க்க முடிகின்றது. இவர்கள் அனைவரும் குருட்டு வழிகாட்டிகள்தான்.

கடவுளின் பெயரைச் சொல்லி, மக்களிடமிருந்து கொள்ளையடித்தவர்கள்

மறைநூல் அறிஞர்களை இயேசு இவ்வளவு கடுமையாகச் சாடுவதற்கு இரண்டாவது காரணம், அவர்கள் கடவுளின் பெயரைச் சொல்லி மக்களைச் சூறையாடியதால் ஆகும். நற்செய்தியில் இயேசு அவர்களுடைய தவற்றினை, 'மக்கள் திருக்கோவிலின் மீதோ அல்லது பீடத்தின்மீதோ ஆணையிட்டால் அவற்றை நிறைவேற்றத் தேவையில்லை. மாறாக கோவிலின் பொன்மீதும் படைக்கப்பட்ட காணிக்கைகள்மீதும் ஆணையிட்டால் அவற்றை நிறைவேற்றவேண்டும்' என்று சொல்கின்றார் என்று சொல்லி, அவர்களைக் கடுமையாகச் சாடுகின்றார். கோவிலில் படைக்க எல்லாமும் அவர்கட்குத்தான் வந்தன. அதன்வழியாக அவர்கள் கொள்ளை இலாபம் அடித்தார்கள். இதை நியாயப்படுத்துவதற்காக அவர்கள். யார் யாரெல்லாம் ஆணையிடுகிறார்களோ அவர்கள் அதை நிறைவேற்றவேண்டும் என்று சொல்லி வந்தார்கள். இதனாலேயே இயேசு அவர்களைக் கடுமையாகச் சாடுகின்றார்.

சிந்தனை

'வழியும் உண்மையும் வாழ்வும் நானே' (யோவா 14:6) என்பார் இயேசு. ஆகவே, நாம் குருட்டு வழிகாட்டிகட்குப் பின்னால் நடக்காமல், ஒப்பற்ற வழிகாட்டியான இயேசுவின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
1 தெசலோனிக்கர் 1: 1-5, 8-10

செயலில் வெளிப்பட்ட நம்பிக்கை, அன்பினால் உந்தப்பட்ட உழைப்பு

நிகழ்வு

ஆப்பிரிக்காவில் உள்ள கானான் நாட்டில் மறைப்போதகப் பணியைச் செய்து வருபவர் அருள்சகோதரர் ட்ராவோ ராபின்சன். இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த இவர், ஆப்பிரிக்க மறைப்போதக சபையில் சேர்ந்து கானான் நாட்டில் பணிசெய்து வருகின்றார்.

ஒருநாள் இவர் கானான் நாட்டில் டாமலே (Tamale) என்ற நகரில் முவாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள் நடக்க முடியாமல் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்ற செய்தியைக் கேள்விப்பட்டார். உடனே இவர் 'இந்த மக்கட்கு ஏதாவது செய்யவேண்டும்' என்று சிந்திக்கத் தொடங்கினார். அப்பொழுது இவருடைய சிந்தனையில் உதித்த ஓர் எண்ணம்தான் 'நடக்க முடியாமல் வாழ்நாள் முழுவதும் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் அந்த மக்கட்கு இரண்டு சக்கர வாகனங்களையும் மூன்று சக்கர வாகனங்களையும் செய்து தருவது'.

இதைத் தொடர்ந்து ராபின்சன் என்ற அந்த அருள்சகோதரர் தன்னோடு ஒருசில பணியாளர்களைச் சேர்த்துக்கொண்டு இரண்டு சக்கர நாற்காலிகளையும் மூன்று சக்கர நாற்காலிகளையும் செய்து கொடுக்கத் தொடங்கினார். இதனால் நடக்க முடியாமல் வீடுகளில் இருந்த பலர் தங்களுடைய வாழ்வில் புதிய ஒளி பிறந்ததாக உணர்ந்தார்கள். மேலும் அவர்கள் சக்கர நாற்காலிகளில் யாருடைய உதவியுமின்ற செல்வதைப் பார்த்த பிற கால் ஊனமுற்றவர்களும் இரண்டு சக்கர, மூன்று சக்கர நாற்காலிகளை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் வாரத்திற்குப் பத்து என்ற எண்ணிக்கையில் சென்றுகொண்டிருந்த சக்கர நாற்காலிகள், வாரத்திற்கு ஐம்பது, அறுபது என்று ஓடத் தொடங்கின. இதற்கேற்றவாறு அருள்சகோதர் ராபின்சன் தன்னோடு மேலும் சில பணியாளர்களைச் சேர்த்துக்கொண்டு அந்த மாற்றுத் திறனாளிகட்கு உதவி வருகின்றார்.

கானான் நாட்டு மக்கள் மத்தியில் மறைப்போதகப் பணியைச் செய்துவரும் அருள்சகோதரர் ட்ராவோ ராபிசன், ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை மட்டும் மக்கட்கு அறிவித்துக் கொண்டு இருக்காமல், அங்குள்ள மாற்றுத் திறனாளிகட்கு இரண்டு சக்கர, மூன்று சக்கர நாற்காலிகளைச் செய்துதருவது உண்மையில் பாராட்டப்படவேண்டிய ஒன்றாக இருக்கின்றது. அதேநேரத்தில் இவருடைய வாழ்க்கை, வழிபாடு என்பது வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்க வேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்வதாகவும்.

இன்றைய முதல் வாசகமும் வழிபாடும் வாழ்வும் பின்னிப் பிணைந்தவாறு வாழ்ந்து வந்த தெசலோனிக்க மக்களைக் குறித்துப் பேசுகின்றது. அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது? அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? என்பதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

தெசலோனிக்க சபையாரின் செயலில் வெளிப்பட்ட நம்பிக்கை

புனித பவுல் தெசலோனிக்கத் திருஅவையார்க்குக் கடிதம் எழுதுகின்றபோது, அவர்களிடம் விளங்கிய மூன்று முக்கியமான பண்புகட்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவதாக இன்றைய முதல் வாசகத்தில் கூறுகின்றார். செயலில் வெளிப்பட்ட நம்பிக்கை. அன்பினால் உந்தப்பட்ட உழைப்பு. ஆண்டவர் இயேசு வருவார் என்று எதிர்நோக்கியிருப்பதால் கிடைக்கும் நம்பிக்கை. என்ற இந்த மூன்று பண்புகளும் தெசலோனிக்கத் திருஅவையாரிடம் நிறைவாக இருந்தன. அதற்காகத்தான் அவர் அவற்றை நினைத்து ஆண்டவர்க்கு நன்றி செலுத்துகின்றார்.

இயேசுவின் பணியாளராகிய புனித பவுல் பல இடங்கட்கும் சென்று ஆண்டவருடைய நற்செய்தியை அறிவித்துவந்தார். ஒருசில இடங்களில் அவரை ஏற்றுக்கொண்டும் அவர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டும் இன்னும் ஒருசில இடங்களில் அவரை புறக்கணித்தும் அவர் அறிவித்த நற்செய்தியைக் கேட்காமலும் அவர்க்குத் தொல்லை கொடுத்தும் வந்தார்கள். ஆனால், தெசலோனிக்கத் திருஅவையில் இருந்தவர்கள், பவுல் அறிவித்த நற்செய்தியைக் கேட்டதோடு நின்றுவிடாமலும் அதைத் தங்களுடைய வாழ்வில் கடைப்பிடித்தும் வந்தார்கள். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், அவர்களுடைய நம்பிக்கை செயலில் வெளிப்பட்டது; அவர்களுடைய உழைப்பு அன்பினால் உந்தப்பட்டதாக இருந்தது. அதனால்தான் பவுல் அவர்களை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றார்.

இங்கு ஒரு கேள்வி எழலாம். தெசலோனிக்க மக்கள் இப்படி எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ்ந்திருகிக்கின்றார்களே... இதற்கெல்லாம் காரணமாக இருந்தது எது என்பதுதான் அந்தக் கேள்வி. அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவரோடு இணைந்த வாழ்க்கை

தெசலோனிக்கத் திருஅவையாரால் எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ முடிந்ததற்கு மிக முக்கியமான காரணம், அவர்கள் ஆண்டவரோடு இணைந்த வாழ்க்கை வாழ்ந்ததுதான். இன்றைய முதல் வாசகத்தில் பவுலடியார் எழுதுகின்றபோது, "தந்தையாம் கடவுளோடும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கின்ற தெசலோனிக்க சபைக்கு" என்றுதான் எழுதுகின்றார். ஒரு காலத்தில் தெசலோனிக்கத் திருஅவையார் சிலை வழிபாடு செய்து வந்தார்கள் (1: 9). ஆனால், அவர்கள் ஆண்டவருடைய போதனையைப் பவுல் வழியாகக் கேட்டறிந்த பின், உண்மைக் கடவுளைச் சிக்கெனப் பற்றிக்கொண்டு, அவரோடு இணைந்து வாழத் தொடங்கினார்கள். அதனால்தான் அவர்களால் செயலில் வெளிப்பட்ட நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை வாழ முடிந்தது.

நாமும் ஆண்டவரோடு இணைந்து வாழ்ந்தோமெனில், நம்முடைய வாழ்க்கையும் எல்லார்க்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

சிந்தனை

'என்னோடு இணைந்து இருந்தாலன்றிக் கனிதர இயலாது' (யோவா 15: 4) என்பார் இயேசு. நாம் ஆண்டவரோடு இணைந்து வாழ்வோம். அதன்வழியாக நம்முடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!