Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                             25 ஆகஸ்ட் 2019  
                                பொதுக்காலம் 21ம் ஞாயிறு - 3ம் ஆண்டு
     
=================================================================================
முதல் வாசகம்

=================================================================================
உங்கள் உறவின் முறையாரை அனைத்து மக்களினத்தாரிடையே இருந்து என் திருமலைக்கு அழைத்து வருவார்கள்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66: 18-21

ஆண்டவர் கூறியது: மானிடர் அனைவரின் செயல்களையும் எண்ணங்களையும் நான் அறிவேன்; பிறஇனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன்; அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள்.

அவர்களிடையே ஓர் அடையாளத்தை நான் ஏற்படுத்துவேன்; அவர்களுள் எஞ்சியிருப்போரை மக்களினத்தாரிடையே அனுப்பி வைப்பேன்; அவர்கள் தர்சீசு, பூல், வில் வீரர் வாழும் லூது, தூபால், யாவான், தொலையிலுள்ள தீவு நாடுகள் ஆகியவற்றிற்குச் செல்வார்கள்.

இந்நாட்டினர் என் புகழ் பற்றிக் கேள்விப்படாதவர்; என் மாட்சியைக் கண்டிராதவர்; அவர்களும் என் மாட்சி பற்றி மக்களினத்தாருக்கு எடுத்துரைப்பார்கள்.

அவர்கள் உங்கள் உறவின் முறையார் அனைவரையும் அனைத்து மக்களினத்தாரிடையே இருந்து ஆண்டவருக்கு அளிக்கும் படையலாகக் கொண்டு சேர்ப்பார்கள்; இஸ்ரயேல் மக்கள் தூய கலம் ஒன்றில் உணவுப் படையலை ஆண்டவரின் கோவிலுக்கு எடுத்து வருவதுபோல், அவர்களைக் குதிரைகள், தேர்கள், பல்லக்குகள், கழுதைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றின்மேல் ஏற்றி, எருசலேமிலுள்ள என் திருமலைக்கு அழைத்து வருவார்கள், என்கிறார் ஆண்டவர்.

மேலும் அவர்களுள் சிலரைக் குருக்களாகவும், லேவியராகவும் நியமிப்பேன், என்கிறார் ஆண்டவர்.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:117: 1. 2 (பல்லவி: மாற் 16: 15)
=================================================================================
 பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். அல்லது: அல்லேலூயா.

1 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! பல்லவி

2 ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
 ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 5-7,11-13

சகோதரர் சகோதரிகளே, தம் பிள்ளைகளிடம் பேசுவதுபோல் இறைவன் உங்களுக்குத் தந்த பின்வரும் அறிவுரையை நீங்கள் மறந்துவிட்டீர்கள்: 'பிள்ளாய், ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் எனத் தள்ளிவிடாதே.

அவர் கண்டிக்கும்போது தளர்ந்துபோகாதே. தந்தை தாம் ஏற்றுக் கொண்ட மக்களைத் தண்டிக்கிறார்; ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்.'

திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளுங்கள். கடவுள் உங்களைத் தம் பிள்ளைகளாக நடத்துகிறார். தந்தை தண்டித்துத் திருத்தாத பிள்ளை உண்டோ? இவ்வாறு திருத்தப்படுவது இப்போது மகிழ்ச்சிக்குரியதாய் இராமல், துயரத்துக்குரியதாகவே தோன்றும்.

ஆனால் பின்னர், இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் அமைதியையும் நேர்மையான வாழ்வையும் பயனாகப் பெறுவர்.

எனவே, 'தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள், தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். நீங்கள் நேர்மையான பாதையில் நடந்து செல்லுங்கள்.'' அப்போதுதான் ஊனமாய்ப் போன கால்மூட்டு பிசகாமல் குணமடையும்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 6

அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 22-30

அக்காலத்தில் இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக் கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார்.

அப்பொழுது ஒருவர் அவரிடம், 'ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?" என்று கேட்டார்.

அதற்கு அவர் அவர்களிடம் கூறியது: 'இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். 'வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்' என்று கேட்பீர்கள்.

அவரோ, 'நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது' எனப் பதில் கூறுவார்.

அப்பொழுது நீங்கள், 'நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே' என்று சொல்வீர்கள்.

ஆனாலும் அவர், 'நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்' என உங்களிடம் சொல்வார். ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
I எசாயா 66: 18-21; II எபிரேயர் 12: 5-7, 11-13; III லூக்கா 13: 22-30

இடுக்கமான வழியே இறைவழி

நிகழ்வு

அரசர் ஒருவர் இருந்தார். அவர்க்கு இசையின்மீது அதிகமான ஈடுபாடு இருந்தது. எனவே அவர் தன்னுடைய நாட்டில் இருந்த ஒரு பிரபல இசைக்குழுவை அழைத்து, தான் கேட்கும்போதெல்லாம் அரண்மனைக்கு வந்து இசைக் கச்சேரி நடத்திவிட்டுச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

அரசர் அந்த இசைக்குழுவின் தலைவரைக் கூப்பிட்டுப் பேசிய செய்தி, எப்படியோ ஒரு செல்வந்தரின் மகனுக்குத் தெரியவந்தது. அவனுக்கு ஏதோ கொஞ்சம் புல்லாங்குழல் வாசிக்கத் தெரியும். அதனால் அவன் அந்த இசைக்குழுவின் தலைவரிடம் சென்று, தன்னை எப்படியாவது அந்த இசைக்குழுவில் சேர்த்துக்கொள்ளுமாறு கெஞ்சிக் கேட்டான். இசைக்குழுத் தலைவர் என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்தார். 'சரியாக வாசிக்கத் தெரியாத இவனை இசைக்குழுவில் சேர்த்து இசைக்கச்சேரி நிகழ்த்தும்போது, இவன் ஏதாவது தவறுசெய்தால் அது ஒட்டுமொத்த இசைக்குழுவிற்கும் அவமானமாகப் போய்விடுமே... அதேநேரத்தில் இவனை இசைக்குழுவில் சேர்க்காவிட்டால், செல்வம் படைத்த இவனுடைய தந்தை நம்மை ஏதாவது செய்துவிடுவானே... என்ன செய்வது?'என்று புரியாமல் தவித்தார்.

பின்னார் ஏதோ சிந்தனை வயப்பட்டவராய் அவனிடம், "சரி, நாம் இசைக் கச்சேரி நிகழ்த்தும்போது இரண்டாம் வரிசையில் இருந்துகொண்டு, புல்லாங்குழல் வாசிப்பது போல், சப்தம் எழுப்பாமல் விரல்களை மட்டும் அசை. அரசரும் உன்னைப் பார்த்த மாதிரி இருக்கும். நீயும் புல்லாங்குழல் வாசித்த மாதிரி இருக்கும். சரியா?" என்றான். அவனும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு இசைக்கச்சேரி நிகழ்த்தப்படும் நாளுக்காகக் காத்திருந்தான்.

குறிப்பிட்ட நாளும் வந்தது. இசைக்கச்சேரி நிகழவிருந்த அரங்கத்திற்கு முன்னம் அரசர் அமர்ந்திருக்க, இசைக்கசேரி தொடங்கியது. எல்லா இசைக்கலைஞர்களும் உண்மையாக வாசிக்க, சரியாக வாசிக்கத் தெரியாத அந்த இளைஞன் ஒரு கைதேர்ந்த கலைஞனைப் போன்று புல்லாங்குழலை எடுத்து வாயில் வைத்து, தாளத்திற்குத் தக்க விரல்களை அங்குமிங்கும் ஆடினான். இப்படியே இரண்டு ஆண்டுகட்கும் மேல் நடந்தது. இதற்கிடையில் இசைக்குழுவைத் தலைமை தாங்கி வழிநடத்தியவர்க்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவருடைய மகன் இசைக்குழுவிற்குத் தலைமை தாங்கும் நிலைமை ஏற்பட்டது. அவன் இசை குழுவிற்குத் தலைமை தாங்கியதும், 'ஒவ்வோர் இசைக் இசைஞரும் இசைக்குழுவில் இருப்பதற்குத் தகுதியானவர்தானா...? ஒருவேளை யாரும் தகுதியில்லாமல் இருந்தால், அவர்களை இசைக்குழுவை விட்டு வெளியே அனுப்பிவிட்டு, புதிய இசைக் கலைஞர்களை உள்ளே கொண்டு வரலாம்' என்று முடிவுசெய்தான். அவன் இப்படியொரு முடிவெடுத்ததும் சரியாகப் புல்லாங்குழல் வாசிக்கத் தெரியாத அந்த இளைஞனுக்குத் தூக்கி வாரிப்போட்டது.

அவன் தனக்கு 'உடம்பு சரியில்லை... சரியாக வாசிக்க முடியாது' என்றெல்லாம் சொல்லிப் பார்த்தான். இதைத் தொடர்ந்து மருத்துவர் அங்கு வரவழைக்கப்பட்டார். அவர் அந்த இளைஞனைச் சோதித்துப் பார்த்தபோது, அவன் நன்றாக இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவன் இசைக்குழுவை விட்டு வெளியே அனுப்பப்பட்டான்.

இந்த நிகழ்வில் வரும் இளைஞரைப் போன்றுதான் பலர் பெயர்க்குக் கிறிஸ்தவார்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் எல்லாரையும் போல் அகலமான பாதையில் சென்றுகொண்டிருக்கின்றார்கள். இப்படி அகன்ற பாதையில் அல்ல, இடுக்கமான பாதையில் செல்வோர்தான் மீட்படைய முடியும் என்றொரு செய்தியை இன்றைய இரைவார்த்தை எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

மீட்புப் பெறுவது சிலரா? பலரா?

இயேசு எருசலேம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில், அவரிடம் வருகின்ற ஒருவர், "ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?" என்று கேட்கின்றார். இயேசுவிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்டவர் நிச்சயம் யூதராகத்தான் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அவர் தன்னை/ தன் இனத்தை மையப்படுத்தி அப்படியொரு கேள்வியைக் கேட்கின்றார். இயேசு அந்த மனிதர் கேட்ட கேள்விக்கு, 'மீட்புப் பெறுவது சிலர் மட்டும்தான்... அல்லது எல்லாரும்தான்' என்று பதில் சொல்லிக்கொண்டிருக்காமல் (இத்தனைக்கும் அனைவரும் மீட்புப் பெறுவது கடவுளின் திருவுளமாக இருந்தாலும் (1 திமொத் 2:14) ஒருவர் மீட்புப் பெற, என்ன செய்யவேண்டும் என்று பதில் சொல்கின்றார். அதுதான், (இடுக்கமான வாயில் வழியாக வருந்தி முயலுங்கள்' என்பதாகும். இயேசு சொல்கின்ற இடுக்கமான வாயில் என்ன? அந்த வாயில் வழியாக நுழைய ஒருவர் என்ன செய்வதென்று என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு வாழவேண்டும்

இயேசு சொல்கின்ற இடுக்கமான வழி எதுவெனச் சிந்தித்துப் பார்க்கையில், நமக்குக் கிடைக்கின்ற முதன்மையான பதில், இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து வாழ்வதாகும். இன்றைய நற்செய்தியின் இரண்டாம் பகுதியில், கதவு அடைக்கப்பட்ட பின், "வீட்டு உரிமையாளரே! எழுந்து கதவைத் திறந்துவிடும்" என்று சொல்பவர்களிடம் அவர், "நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது" என்கின்றார்.

இவ்வுவமையில் கதவு அடைக்கப்பட்டபின் கதவைத் தட்டுகின்றவர்கள் தாமதமாக வந்தவர்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், இயேசு மூன்றாண்டு காலம் மக்கள் மத்தியில் பல்வேறு அருமடையாளங்களையும் வல்ல செயல்களைச் செய்தபோதும், கொராசின் நகரைப் போன்று, பெத்சாய்தா நகரைப் போன்று, கப்பர்நாகும் நகரைப் போன்று அவர்மீது நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தார்கள் (லூக் 10: 13-15) அதனால்தான் அவர்கள் இறைவன் அளித்த விருந்தில் (லூக் 13: 28) மீட்பில் கலந்துகொள்ள முடியாமல் போனார்கள். உண்மையில் ஒருவர் இயேசுவின் விருந்தில் கலந்துகொள்ளவும் அவர் அளிக்கும் மீட்பினைப் பெற்றுக்கொள்ளவும் வேண்டும் என்றால், பவுல் சொல்வது போல் 'இயேசுவே ஆண்டவர்' என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என்று நம்பவேண்டும்" (உரோ 10:9).

தாழ்ச்சியோடு வாழவேண்டும்

இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து வாழ்வது இடுக்கமான வாயில் வழியாக நுழைய ஒருவர் எடுத்துவைக்கும் முதல் அடி என்றால், தாழ்ச்சியோடு வாழ்வது ஒருவர் எடுத்து வைக்கும் இரண்டாவது மற்றும் இறுதி அடியாகும். இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு, "கடைசியானோர் பலர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்" என்கின்றார். இவ்வார்த்தைகளை இயேசு சொல்கின்ற, "தம்மைத் தாமே உயர்த்துகிறவர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்" (லூக் 14:11) என்ற வார்த்தைகளோடு இணைத்துப் பார்ப்பது நல்லது. யூதர்கள் தங்களை மற்ற எல்லாரையும் விட உயர்ந்தவர்களாக, தங்கட்குத்தான் மீட்பு உண்டு என்ற ஆணவத்தில் இருந்தார்கள். அதுகூடப் பரவாயில்லை. மற்றவர்களை அவர்கள் பாவிகளாகவும் (லூக் 18: 11- 14) மீட்புப் பெறத் தகுதியற்றவர்கள் என்றும் நினைத்தார்கள். இதனால் உயர்ந்தவர்கள் என்று காட்டிக் கொண்ட அவர்களிடமிருந்து இறையாட்சி மீட்பு பறிக்கப்பட்டடு, மனத்தாழ்ச்சியோடு வாழ்ந்த புறவினத்து மக்கட்குக் கொடுக்கப்பட்டது. ஆகையால், ஒருவர் மீட்புப்பெற தாழ்ச்சியும் அதோடு இறைநம்பிக்கையையும் தம்முடைய இரு கண்களைப் போன்று முக்கியமானவையாக உணர்ந்து வாழவேண்டும்.

சிந்தனை

'வாழ்க்கையில் முன்னேற மின்தூக்கி (Elevator) எதுவும் கிடையாது. ஒவ்வோர் அடியாகத்தான் எடுத்து வைத்து முன்னேறவேண்டும்.' அதுபோன்று நாம் மீட்புப் பெற அகன்ற பாதையில் சென்றுகொண்டிருக்கக்கூடாது. மாறாக, இடுக்கமான குறுகலான வழியில்தான் செல்லவேண்டும். ஆகையால், நாம் இறைவனுக்குகந்த இடுக்கமான வழியில் நுழைவோம். அதன்வழியாக இறைவன் தரும் மீட்பைக் கொடையாகப் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 


=================================================================================
திருப்பலி முன்னுரை
=================================================================================

=================================================================================
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!