|
|
19 ஆகஸ்ட் 2019 |
|
|
பொதுக்காலம்
20ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவர் நீதித் தலைவர்களை எழச் செய்தார். ஆயினும் மக்கள்
அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.
நீதித் தலைவர்கள் நூலிலிருந்து வாசகம் 2: 11-19
அந்நாள்களில் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்
பட்டதைச் செய்தனர். அவர்கள் பாகால்களுக்கு ஊழியம் செய்தனர்.
அவர்கள் தங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து வெளியே
கொண்டுவந்த தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரைக் கைவிட்டனர்.
தங்களைச் சுற்றி வாழ்ந்த மக்களினங்களின் தெய்வங்களைப் பின்பற்றி,
வழிபட்டு, ஆண்டவருக்குச் சினமூட்டினர். அவர்கள் ஆண்டவரைக்
கைவிட்டுப் பாகாலுக்கும் அஸ்தரோத்துக்கும் ஊழியம் செய்தனர். இஸ்ரயேலின்மேல்
ஆண்டவரின் கோபக் கனல் கனன்றது.
எனவே, அவர் கொள்ளையடிப்போரிடம் அவர்களை ஒப்படைக்க, அவர்களும்
அவர்களைக் கொள்ளையடித்தனர். அவர்களைச் சூழ்ந்திருந்த எதிரிகளிடம்
ஆண்டவர் அவர்களை விற்றார். அதனால் அவர்கள் எதிரிகளின் முன்,
அவர்களால் எதிர்த்து நிற்க இயலாமற் போயிற்று.
ஆண்டவர் அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறியதுபோல், அவர்கள்
போருக்குச் சென்றபொழுதெல்லாம், ஆண்டவரின் கை அவர்களுக்கு எதிராகத்
தீமை விளைவித்தது. அவர்கள் பெருந்துயரத்துக்கு உள்ளாயினர். ஆண்டவர்
நீதித் தலைவர்களை எழச் செய்தார். அவர்கள் அவர்களைக் கொள்ளையடித்தவர்களின்
கைகளிலிருந்து விடுவித்தனர்.
ஆயினும் அவர்கள், தங்கள் நீதித் தலைவர்களுக்குச் செவி கொடுக்கவில்லை.
ஏனெனில் அவர்கள் வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றித் தொழுது
வேசித்தனம் செய்தனர்; தங்கள் மூதாதையர் ஆண்டவரின் கட்டளைகளுக்குச்
செவிகொடுத்து நடந்த நெறியை விட்டு விரைவில் விலகினர். ஆண்டவர்
அவர்களுக்காக நீதித் தலைவர்களை எழச் செய்த பொழுதெல்லாம் அவர்
அந்தத் தலைவர்களுடன் இருந்து, அத்தலைவர்களின் வாழ்நாள் முழுவதும்
எதிரிகளின் கையிலிருந்து மக்களை விடுவித்தார். ஏனெனில்
துன்புறுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்ட அவர்களின் அழுகுரலைக் கேட்டு
ஆண்டவர் அவர்கள் மீது இரக்கம் கொண்டார்.
ஆனால் அவர்கள் ஒவ்வொரு நீதித் தலைவர் இறந்த பொழுதும், வேற்றுத்
தெய்வங்களைப் பின்பற்றியும், அவற்றுக்கு ஊழியம் செய்தும், அவற்றை
வழிபட்டும், தங்கள் மூதாதையரை விட இழிவாக நடந்தனர். அவர்களுடைய
தீய பழக்கங்களையும் முரட்டுத்தனமான நடத்தையையும் விட்டு அகலவில்லை.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
106: 34-35. 36-37. 39-40. 43,44 (பல்லவி: 4a)
=================================================================================
பல்லவி: உம் மக்கள்மீது இரங்கும்போது ஆண்டவரே, என்னை
நினைவுகூரும்!
34 ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக, மக்களினங்களை அவர்கள் அழிக்கவில்லை.
35 வேற்றினத்தாரோடு கலந்துறவாடி, அவர்களின் வழக்கங்களைக் கற்றுக்கொண்டனர்.
பல்லவி
36 அவர்களின் தெய்வச் சிலைகளைத் தொழுதனர்; அவையே அவர்களுக்குக்
கண்ணிகளாயின. 37 அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைப் பேய்களுக்குப்
பலியிட்டனர். பல்லவி
39 அவர்கள் தங்கள் செயல்களால் தங்களைக் கறைப்படுத்திக் கொண்டனர்;
தங்கள் செயல்கள்மூலம் வேசித்தனம் செய்தனர். 40 எனவே, ஆண்டவரின்
சினம் அவர்தம் மக்களுக்கு எதிராகப் பற்றியெரிந்தது; தமது உரிமைச்
சொத்தை அவர் அருவருத்தார். பல்லவி
43 பன்முறை அவர் அவர்களை விடுவித்தார்; அவர்களோ திட்டமிட்டே
அவருக்கு எதிராகக் கலகம் செய்தனர்; தங்கள் தீச்செயல்களினால்
அவர்கள் தாழ்நிலை அடைந்தனர். 44 எனினும் அவர் அவர்களது மன்றாட்டுக்குச்
செவிசாய்த்து, அவர்களது துன்பத்தைக் கண்டு மனமிரங்கினார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 5: 3
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில்
விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக்
கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 16-22
அக்காலத்தில் செல்வரான இளைஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து, "போதகரே,
நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய
வேண்டும்?" என்று கேட்டார்.
இயேசு அவரிடம், "நன்மையைப் பற்றி என்னை ஏன் கேட்கிறீர்? நல்லவர்
ஒருவரே. நீர் வாழ்வடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடியும்"
என்றார்.
அவர், "எவற்றை?" என்று கேட்டார். இயேசு, "கொலை செய்யாதே; விபசாரம்
செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச் சான்று சொல்லாதே; தாய் தந்தையை
மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்
மீதும் அன்பு கூர்வாயாக" என்று கூறினார்.
அந்த இளைஞர் அவரிடம், "இவை அனைத்தையும் நான் கடைப்பிடித்து வந்துள்ளேன்.
இன்னும் என்னிடம் குறைபடுவது என்ன?" என்று கேட்டார்.
அதற்கு இயேசு, "நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை
விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய்
இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்றார்.
அவர் சொன்னதைக் கேட்ட அந்த இளைஞர் வருத்தத்தோடு
சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
மத்தேயு 19: 16-22
'அந்த இளைஞர் வருத்ததோடு சென்றுவிட்டார்'
நிகழ்வு
எல்லா மதத்தவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த அழகிய கிராமம் அது.
அந்தக் கிராமத்தில் செல்வம் படைத்த பலர் இருந்தனர். அதே கிராமத்தில்
ஓர் ஏழைக் கிறிஸ்தவச் சிறுவன் ஒருவன் இருந்தான். அவனிடம் நல்லதோர்
ஆடையோ சரியான காலணியோகூடக் கிடையாது. ஆனாலும் அந்தச் சிறுவன்
அது குறித்துப் பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை.
ஒருநாள் காலைவேளையில் அந்தச் சிறுவன் பள்ளிக்கூடத்திற்குச்
சென்றுகொண்டிருந்தான். போகிற வழியில் எது குறித்தோ மிகத் தீவரமாகப்
பேசிக்கொண்டிருந்த அவ்வூரில் இருந்த, பிற சமயத்தைச் சார்ந்த
செல்வந்தர்கள் சிலர் அந்தச் சிறுவனைக் கூப்பிட்டு அவனோடு
'விளையாட' நினைத்தார்கள். எனவே, அந்தக் கூட்டத்திலிருந்த செல்வந்தர்களில்
ஒருவர் அவனிடம், "தம்பி இங்கே வா! உன்னிடம் சில வார்த்தைகள் பேசவேண்டும்"
என்றார். சிறுவனும் அவருடைய பேச்சுக்கு மதிப்பளித்து, அவரருகே
சென்றான்.
அப்பொழுது அந்தச் செல்வந்தர் அவனிடம், "தம்பி! நீ கிறிஸ்தவன்
தானே! உங்களுடைய சமயத்தில் நீங்கள் கடவுளை உங்களுடைய தந்தை என்றும்
அவர் உங்களைக் கண்ணின் கருவிழி போலப் பாதுகாப்பார் என்றும்தானே
சொல்வீர்கள். அப்படிக் கண்ணின் கருவிழி போலப் பாதுகாக்கின்ற உங்கள்
தந்தைக் கடவுள், உனக்கு ஏன் ஒரு நல்ல சட்டையோ, காலணியோ
கொடுக்காமல் இருக்கின்றார்" என்று நக்கலாகக் கேட்டார். சிறுவன்
ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டுச் சொன்னான்: "என்னைக் கண்ணின்
கருவிழி போலப் பாதுகாக்கின்ற தந்தைக் கடவுள் எனக்கு நல்ல சட்டையும்
நல்ல காலணியையும் இன்னும் பிற வசதிகளையும்
கொடுத்திருக்கின்றார். ஆனால், அவர் என்னிடம் கொடுக்கவில்லை. உங்களைப்
போன்ற செல்வம் படைத்தவர்களிடம் கொடுத்து வைத்திருக்கின்றார்.
நீங்கள்தான் அதை என்னிடம் தராமல் பதுக்கி வைத்திருக்கின்றீர்கள்.
இப்பொழுது பிரச்சினை யாரிடமிருக்கின்றது? என்னிடமா? உங்களிடமா?"
செல்வந்தரால் எதுவும் பேசமுடியவில்லை. பின்னர் அவன் அந்தச்
சிறுவன் செல்வந்தரிடமிருந்து விடைபெறும்போது, இவ்வாறு
சொல்லிவிட்டுப் போனான்: "கடவுள் எல்லாரையும் கண்ணனின் கருவிழி
போலப் பாதுகாத்து வருகின்றார். ஆனால், ஒருசிலரோ மற்றவர்கட்குச்
சேரவேண்டியதை அபகரித்துக்கொண்டு தாங்கள் மட்டும் வசதி
வாய்ப்போடு இருந்துவிட்டு, கடவுளை எல்லாரையும் பராமரிக்க
விடாது செய்துகொண்டிருக்கின்றார்கள்."
மற்றவர்கட்குச் சேரவேண்டியதை அபகரித்துக் கொண்டு வாழ்வது எவ்வளவு
பெரிய குற்றம் என்பதை இந்த நிகழ்வானது மிக அருமையாக எடுத்துக்கூறுகின்றது.
நற்செய்தி வாசகத்தில் இதுபோன்று மற்றவர்கட்குச் சேரவேண்டியதை
அபகரித்துக் கொண்டு வாழ்ந்து வந்த செல்வந்தர் ஒருவர் இயேசுவைப்
பின்பற்ற முயற்சி செல்வதைக் குறித்து வாசிக்கின்றோம். அதைக்
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து
நிறைவுசெய்வோம்.
இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வந்தரான இளைஞர்
நற்செய்தியில் இயேசுவிடம் வருகின்ற செல்வரான இளைஞர் அவரிடம்,
"போதகரே, நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை
செய்யவேண்டும்?" என்று கேட்கின்றார். முதலில் நாம் இந்த இளைஞரை
நிச்சயம் பாராட்டியாக வேண்டும். ஏனெனில், இவர் தன்னுடைய இளமைப்
பருவத்திலேயே ஆண்டவரை நிலைவாழ்வைத் - தேடவேண்டும் என்ற எண்ணத்தோடு
இருந்தார். அப்படிப்பட்டரிடம் இயேசு, கட்டளைக் கடைப்பிடி என்று
சொல்கின்றபோது, அவரோ, தன்னுடைய சிறுவயதிலிருந்தே அனைத்தையும்
கடைப்பிடித்து வருவதாகச் சொல்கின்றார்.
உண்மையில் அந்தச் செல்வரான இளைஞர் ஒரு கட்டளையைக் கடைப்பிடிக்கவில்லை.
அது என்ன கட்டளை? அந்தக் கட்டளையைக் கடைப்பிடிக்காததினால்
நிலைவாழ்வை எப்படி இழந்தார் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
'பிறர்க்குரியத்தைக் கவர்ந்திடாதே' என்ற கட்டளையைக் கடைப்பிடிக்க
மறந்த செல்வந்தர்
கட்டளையைக் கடைப்பிடித்து வருகிறேன் என்று சொன்ன அந்த செல்வரான
இளைஞர், 'பிறர்க்கு உரியதைக் கவர்ந்திட விரும்பாதே' (விப 20:
17) என்ற கட்டளையைக் கடைப்பிடிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
ஏனெனில் அவர் செல்வந்தராய் இருந்தார். அப்படிப்பட்டவரிடம் இயேசு,
"உம் உடைமைகளை விற்று ஏழைட்குக் கொடும்" என்று சொல்கின்றபோதும்
அவர் அதை விற்கத் தயாராக இல்லை. அதனால் அவர் இயேசுவின் சீடராகவும்
நிலைவாழ்வையும் பெறமுடியாமல் போகின்றார்.
இயேசு கூறுவது போல், எவரும் இரு தலைவர்கட்குப் பணிவிடை செய்ய
முடியாது (மத் 6: 24). இந்த மனிதர் தன்னிடம் இருப்பதை இழக்க
விரும்பாமல், இயேசுவைப் பின்பற்ற நினைத்ததால், அது
சாத்தியப்படாமல் போகவே, மிக வருத்ததோடு சென்றார். நாம்
இயேசுவைப் பின்பற்றுகின்றோம் எனில், நம்மிடம் இருப்பதை
இழப்பதற்குத் தயாராகவேண்டும். அப்பொழுது நாம் இயேசுவின்
உண்மையான சீடராக முடியும் நிலைவாழ்வையும் பெற்றுக்கொள்ள
முடியும்.
சிந்தனை
'செல்வதற்குத்தான் செல்வம்' என்பர். ஆகையால், நம்மிடம்
இருக்கின்ற செல்வத்தை பிறர்க்கு கொடுத்து உதவவும் பகிர்ந்து
வாழவும் முன்வருவோம். அதன்வழியாக இயேசுவின் உண்மையான
சீடர்களாகி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
நீதித்தலைவர்கள் 2: 11-19
இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்காத இஸ்ரயேல் மக்கள்
நிகழ்வு
சிறுவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு முந்திரிப் பருப்பு
என்றால் உயிர். ஆனால், அவனுடைய தாய் அவனுக்கு அதை மிகவும்
குறைவாகத்தான் கொடுத்து வந்தார். இது அவனுக்கு மிகவும்
எரிச்சலைத் தந்தது. 'என்ன அம்மா இவர்! இந்த வீட்டிற்கு ஒரே
பிள்ளை நான். அப்படியிருக்கும்போது ஆசை ஆசையாய் நான் கேட்பதை
இவர் கொடுக்கவேண்டியதுதானே! எதற்காக இவர் கொஞ்சமாகக்
கொடுக்கின்றார்' என்று புலம்பத் தொடங்கினான்.
ஒருநாள் இதுபற்றி அவன் தன்னுடைய தாயிடம் நேரடியாகவே
கேட்டுவிட்டான். அதற்கு அவனுடைய தாய் அவரிடம், "தம்பி!
முந்திரிப் பருப்பு அதிகமாகச் சாப்பிடக் கூடாது. அப்படிச்
சாப்பிட்டால், அது உன்னுடைய உடம்பிற்கு நல்லதல்ல" என்றார்.
சிறுவன் தன்னுடைய தாய் சொன்னதை நம்பவில்லை. மாறாக அவன், "நாம்
முந்திரிப் பருப்பு அதிகமாகச் சாப்பிட்டு விடக்கூடாது
என்பதற்காகத்தான் இப்படியெல்லாம் சொல்கின்றார்' என்று
நினைத்துக் கொண்டான். ஒருநாள் அவனுடைய தாய் அவனை வீட்டில்
தனியாக விட்டுவிட்டுக் கடைக்குச் சென்றார். 'இதுதான் சரியான
சமயம்' என்று அவன் தன்னுடைய தாய் சமயலறையில் மறைத்து
வைத்திருந்த முந்திரிப் பருப்பு டாப்பை எடுத்து, அதிலிருந்த
முந்திரி பருப்பை எல்லாம் காலி செய்தான்.
சிறிது நேரத்தில் கடைக்குச் சென்றிருந்த அவனுடைய தாய்
வீட்டிற்குத் திரும்பி வந்தார். ஆனால், அவன் எதுவும் நடக்காதது
போல் காட்டிக்கொண்டான். நேரம் ஆக ஆக சிறுவனின் வயிற்றுக்குள்
சென்ற முந்திரிப் பருப்பு தன்னுடைய வேலையைக் காட்டத்
தொடங்கினான். ஆம், அவன் 'வயிறு வலிக்கின்றது', 'வயிறு
வலிக்கின்றது' என்று கத்தினான். 'மகன் எதற்கு இப்படி
கத்துகிறான்... இவனுக்கு என்ன ஆயிற்று?' என்று
நினைத்துக்கொண்டு அவனுடைய தாய் அவனிடம், "நீ ஏதாவது செய்தாயா?
என்று கேட்டார். அதற்கு அவன், "நீங்கள் சாப்பிடக்கூடாது என்று
சொன்ன முந்திரிப் பருப்பை எல்லாம் சாப்பிட்டேன். அதனால்தான்
எனக்கு வயிறு வலிக்கிறதுபோலும்... என்னை மன்னித்துக்
கொள்ளுங்கள்" என்றான். அதன்பிறகு அந்தத் தாய் அவனை
தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடி அவனைக் குணமாக்கினார்.
இந்த நிகழ்வில் வருகின்ற சிறுவனைப் போன்றுதான் இஸ்ரயேல் மக்கள்
ஆண்டவர் சொன்னதற்கு கீழ்ப்படியாமல், தாங்கள்
விரும்பியதையெல்லாம் செய்தார்கள். அதனாலேயே அவர் அழிவைச்
சந்தித்தார்கள். இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள்
ஆண்டவரோடு செய்த உடன்படிக்கையை மீறி நடந்ததையும், அதனால்
அவர்கட்கு என்ன நேர்ந்தது என்பதையும் எடுத்துச் சொல்கின்றது.
அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து
நிறைவுசெய்வோம்.
ஆண்டவரோடு செய்த உடன்படிக்கையை மீறிய இஸ்ரயேல் மக்கள்
இஸ்ரயேல் மக்கள் மோசே தங்களோடு இருந்தபோதும் யோசுவா தங்களோடு
இருந்தபோதும் "ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள்
செயல்படுத்துவோம்" விப 24: 3-8) என்றும் "ஆண்டவருக்கு அஞ்சி
நடப்போம்" (யோசு 23-25) என்றும் வாக்குறுதி தந்தார்கள். ஆனால்,
அவர்கள் நாள்கள் செல்லச் செல்ல, ஆண்டவரோடு செய்துகொண்ட
உடன்படிக்கையை மீறி, பாகாலையும் அஸ்தரோத்தையும் வழிபடத்
தொடங்கினார்கள். இவ்வாறு அவர்கள் ஒரே கடவுளும் ஆண்டவருமான யாவே
இறைவனைப் புறக்கணித்து தங்களுடைய வழியில் நடக்கத்
தொடங்கினார்கள்.
உடன்படிக்கையை மீறியதால் அழிவைச் சந்தித்த இஸ்ரயேல் மக்கள்
இஸ்ரயேல் மக்கள் யாவே கடவுளோடு செய்துகொண்ட உடன்படிக்கையை
மீறியதால் அழிவுக்கு மேல் அழிவினை சந்திக்கத் தொடங்கினார்கள்.
எப்படிப்பட்ட அழிவு என்றால், எதிரி நாட்டவர் அவர்கள்மீது
படையெடுத்து வந்து, அவர்களிடமிருந்த அனைத்தையும் சூறையாடிச்
சென்றார்கள். அது மட்டுமல்லாமல், இஸ்ரயேல் மக்கள்
எப்போதெல்லாம் போர்க்குச் சென்றார்களோ, அப்போதெல்லாம் அவர்கள்
போரில் தோற்றுப் போனார்கள். இப்படிப்பட்ட கொடிய அழிவுகளை
அவர்கள் சந்தித்தார்கள்.
இங்கு ஒரு கேள்வி எழலாம், ஆண்டவராகிய கடவுள் தன் மக்கள்
எதிரிகளால் தோற்கடிக்கப்பட்டபோது ஏன் கண்டும் காணாமலும்
இருந்தார் என்பதுதான் அந்தக் கேள்வி. ஆண்டவர் தன் மக்கள்
எதிரிகளால் தோற்கடிக்கப்படும்போது கண்டும் காணாமலும் இருக்க
வில்லை. மாறாக, அவர்களை நல்வழிக்குக் கொண்டுவரவேண்டும்
என்பதற்காக அவர் அவ்வாறு இருந்தார். இதற்குப் பிறகுதான்
இஸ்ரேயல் மக்கள் தங்களுடைய தவற்றை உணர்ந்து ஆண்டவரிடம்
திரும்பி வந்தார்கள்.
ஆகையால், நாம் ஆண்டவரின் கட்டளைகளை மீறி எப்போதெல்லாம்
நம்முடைய வழியில் நடக்கின்றோமோ, அப்போதெல்லாம் அதற்கான
தண்டனையைப் பெறுவோம் என்பது உறுதி
சிந்தனை
'அவரது கட்டளைகளையும் நியமங்களையும் முறைமைகளையும் கடைப்பிடி.
அப்பொழுது நீ வாழ்வாய்" (இச 30: 16) என்கின்றது இறைவார்த்தை.
ஆகையால், கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் கட்டளைகளைக்
கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|