Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                             18 ஆகஸ்ட் 2019  
                                பொதுக்காலம் 19ம் ஞாயிறு - 3ம் ஆண்டு
     
=================================================================================
முதல் வாசகம்

=================================================================================
நாடெங்கும் வழக்குக் காரணமாய் இருக்கும்படி என்னைப் பெற்றாயே!

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 38: 4-6, 8-10

அந்நாள்களில் தலைவர்கள் அரசனைப் பார்த்து, "இம்மனிதன் கண்டிப்பாய்ச் சாக வேண்டும்; ஏனெனில் இவன் இவ்வாறு பேசி இந்நகரில் எஞ்சியுள்ள போர் வீரர்களையும் மக்கள் அனைவரையும் மனம் தளரச்செய்து வருகிறான். இந்த ஆள் இம்மக்களின் அழிவைத் தேடுகிறானே அன்றி, நலனைத் தேடுவதில்லை" என்றார்கள்.

அதற்கு அரசன் செதேக்கியா, "நன்று. அவனை உங்களிடமே கையளிக்கிறேன். ஏனெனில் உங்களைப் பகைத்துக்கொண்டு அரசனால் எதுவும் செய்ய இயலாதே" என்றான்.

எனவே அவர்கள் எரேமியாவைப் பிடித்து, காவல் கூடத்தில் அரச மகன் மல்கியாவுக்குச் சொந்தமான பாழ்ங்கிணற்றுக்குள் கயிற்றில் கட்டி அவரைக் கீழே இறக்கிவிட்டார்கள். அக்கிணற்றில் தண்ணீர் இல்லை; சேறு மட்டுமே இருந்தது. எனவே எரேமியா சேற்றுக்குள் புதையத் தொடங்கினார்.

எபேது மெலேக்கு அரண்மனையினின்று வெளியே சென்று அரசனை நோக்கி, "என் தலைவரே! என் அரசரே! இறைவாக்கினர் எரேமியாவைப் பாழ்ங்கிணற்றில் தள்ளியதால் இம்மனிதர்கள் பாவம் செய்தார்கள். அவர் அங்குப் பட்டினியால் மடிந்துபோவார்; ஏனெனில் நகரில் அப்பம் ஏதும் கிடையாது" என்று கூறினார்.

அதைக் கேட்ட அரசன் எத்தியோப்பியரான எபேது மெலேக்கை நோக்கி, "உன்னோடு மூன்று பேரை இங்கிருந்து கூட்டிச்செல். இறைவாக்கினர் எரேமியா சாவதற்கு முன்பே கிணற்றினின்று அவரைத் தூக்கிவிடு" என்று கட்டளையிட்டான்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 40: 1. 2. 3. 17 (பல்லவி: 13b)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்.

1 நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். பல்லவி

2 அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார். பல்லவி

3 புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர். பல்லவி

17 நானோ ஏழை; எளியவன்; என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்; நீரே என் துணைவர், என் மீட்பர்! என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
 நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-4

சகோதரர் சகோதரிகளே, திரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக.

நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மீது கண்களைப் பதிய வைப்போம். அவர் தாம் அடைய இருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார்.

இப்போது, கடவுளது அரியணையின் வலப் பக்கத்தில் வீற்றிருக்கிறார். பாவிகளால் தமக்கு உண்டான எந்த எதிர்ப்பையும் மன உறுதியோடு தாங்கிக்கொண்ட அவரை எண்ணிப்பாருங்கள்.

அப்போது நீங்கள் மனம் சோர்ந்து தளர்ந்து போக மாட்டீர்கள். பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 49-53

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்.

மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்.

இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================

I எரேமியா 38: 4-6, 8-10; II எபிரேயர் 12: 1-4; III லூக்கா 12: 49-53



உண்மையான அமைதியைத் தருபவர் இயேசு



நிகழ்வு



பப்புவா நியூ கினிவா (Papua New Guinea) என்ற தீவில் உள்ள பழங்குடி மக்கள் மத்தியில் பல ஆண்டுகாலம் மறைபோதகப் பணியைச் செய்தவர் டான் ரிச்சர்ட்சன் (Don Richardson). இவர் 'அமைதியின் குழந்தை' (The Peace Child) என்றொரு புத்தகம் எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தில் இடம்பெறும் நிகழ்வு இது.



பப்புவா நியூ கினியாவில் இரண்டு இனக்குழுக்கள் உண்டு. அந்த இரண்டு இனக்குழுக்களுமே காலங்காலமாக ஒருவரோடு இருவர் போரிட்டுக்கொண்டு செத்து மடிந்துகொண்டிருந்தார்கள். இதனால் அந்த இரண்டு இனக்குழுக்களிலும் இருந்த மக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. இந்நிலையில் அந்த இரண்டு இனக்குழுக்களின் தலைவர்கள் ஒன்றுகூடி வந்து, இப்பிரச்சினையை எப்படி முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று பேசினார்கள்.



அப்பொழுது ஒரு இனக்குழுவின் தலைவர் இன்னோர் இனக்குழுவின் தலைவரைப் பார்த்து, "உனக்கொரு மகன் இருக்கின்றான் அல்லவா... அவனை என்னிடம் விட்டுவிட்டு... நான் அவனை வளர்க்கின்றேன்... ஒருவேளை உன்னுடைய மகனை நான் சரியாக வளர்க்கவில்லை என்றால், நீ என் இனத்தின்மீது போர்த்தொடுக்கலாம். உன் மகனுக்கு ஏதாவது நான் செய்துவிட்டால், நீ என் இனத்தின்மீது போர்த்தொடுப்பாய் என்ற ஒருவிதமான அச்சத்தில், நானும் உன்னுடைய மகனை என்னுடைய மகன் போன்று வளர்ப்பேன்!" என்றார். அவர் சொன்ன யோசனை இன்னோர் இனக்குழுத் தலைவர்க்குப் பிடித்துப் போகவே, அவர் தன்னுடைய மகனை அந்த இனக்குழுவின் தலைவரிடம் ஒப்படைத்து வளர்க்கவிட்டார்.



ஆண்டுகள் மெல்ல உருண்டோடின. 'தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பக்கத்து இனக்குழுவின் தலைவருடைய மகனை நல்லமுறையில் வளர்க்கவேண்டும்... இல்லாவிட்டால் அவர் என்னுடைய இனத்தின்மீது போர்த்தொடுத்துவிடுவார்' என்ற ஒருவிதமான அச்சம் கலந்த தவிப்பில் சிறுவனை நல்லமுறையில் வளர்த்துப் பெரியவாக்கினார் இவர். பக்கத்து இனக்குழுவின் தலைவரோ தன்னுடைய மகன் பக்கத்து இனக்குழுத் தலைவரின் வீட்டில் நல்லமுறையில் வளர்கின்றான் என்ற நம்பிக்கையில் அவருடைய இனத்தின்மீது போர்த்தொடுக்காமல் இருந்தார். இதனால் இரண்டு இனக்குழுக்களும் பகைமையை மறந்து ஒருவரை ஒருவர் அன்புசெய்யத் தொடங்கினர்.



இந்த நிகழ்வைச் சொல்லிவிட்டு டான் ரிச்சர்ட்சன் இவ்வாறு நிறைவுசெய்வார்: "ஒருவர் மாற்றி ஒருவர் சண்டை போட்டுக்கொண்டும் போர்த்தொடுத்துக்கொண்டும் இருந்த அந்த இரண்டு இனக்குழுக்களும் எப்படி 'அமைதியின் குழந்தையின்' வருகைக்குப் பின்னால் சமரசமானார்களோ, அதுபோன்று அமைதியின் குழந்தையாய் இந்த அவனிதனில் பிறந்த இயேசு கிறிஸ்துவால் உண்மயான அமைதி பிறக்கும்."



இயேசுவால் இப்புவியில் அமைதி வரும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. பொதுக்காலத்தின் இருபதாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு, இன்றைய நாளின் நற்செய்தி வாசகம் 'உண்மையான அமைதியைத் தரும் இயேசு' என்ற சிந்தனையைத் தருகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்



இயேசு இவ்வுலகில் ஏற்படுத்த வந்தது அமைதியையா? பிளவையா?



லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, "மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. பிளவு உண்டாக்கவே வந்தேன் என் உங்கட்குச் சொல்கிறேன்" என்கின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகள் அவர் இவ்வுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தாரா? இல்லை, பிளவை உண்டாக்க வந்தாரா? என்ற கேள்வியை எழுப்புவதாக இருக்கின்றன. ஏனென்றால், அவருடைய பிறப்பின்போது வானதூதர்கள், "உலகில் அவர்க்கு உகந்தோர்க்கு அமைதி உண்டாகுக" (லூக் 2: 14) என்றார்கள். இயேசுகூட தன் சீடர்களைப் பணித்தளங்கட்கு அனுப்புகின்றபோது, "இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக" (லூக் 10:5) என்றுதான் வாழ்த்தச் சொன்னார். அப்படியிருக்கையில், இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகின்ற வார்த்தைகள், ஒருவேளை அவர் இன்றைக்கு இருக்கின்ற ஒருசில அரசியல் தலைவர்களைப் போன்றும் மனிதர்களைப் போன்றும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகின்றாரா? என்றொரு கேள்வி எழுகின்றது.



பிளவின் வழியாக அமைதி



இயேசு, இன்றைக்கு இருக்கின்ற அரசியல் தலைவர்களைப் போன்று முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகின்றாரா? என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படியானால் இயேசுவின் இவ்வார்த்தைகளை எப்படிப் புரிந்துகொள்வது? அதற்கு நாம் இதே பகுதி இடம்பெறுகின்ற மத்தேயு நற்செய்தியை இணைத்துச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.



மத்தேயு நற்செய்தியில் இயேசு, "அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்" (மத் 10: 34) என்று சொல்லிவிட்டு, இருசில இறைவார்த்தைக்குப் பின்னால், "என்னைவிடத் தன் தந்தையிடமோ, தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்..." (மத் 10: 37) என்பார். இந்த இரண்டு இறைவார்த்தைகளையும் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்போமேயானால், ஒருவர் இயேசுவைப் பின்பற்றுவதால் அவருடைய தாயோ, தந்தையோ, சகோதரனோ, சகோதரியோ அவரை வெறுக்கலாம். அதனால் குடும்பத்தில் பிளவு உண்டாகலாம். ஆனாலும் அந்தப் பிளவு அங்கு அமைதி ஏற்படுவதற்காக ஒரு முகாந்திரம் அல்லது தொடக்கம் என்று சொல்லலாம். எப்படியென்றால், இயேசுவைப் பின்பற்றி நடக்கின்றவருடைய வாழ்க்கையைப் பார்த்துவிட்டு, குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் இயேசுவின் வழியில் நடக்கலாம். இதனால் அங்கு உண்மையான அமைதி நிலவலாம். இதைதான் இயேசு, அமைதியை அல்ல, பிளவையே உண்டாக்க வந்தேன் என்று கூறுகின்றார்.



பிரான்சிஸ் அசிசியாரின் தந்தை, தன் மகன் பெரிய போர்வீரனாக வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கையில், அவர் உடைமைகளையெல்லாம் விற்று ஏழைகட்குக் கொடுத்துவிட்டு, இயேசுவைப் பின்பற்றத் தொடங்குகின்றார். இதைக் கண்டு பிரான்சிஸ்சின் தந்தை அவரிடம், "நீ எனக்கு மகனே இல்லை" என்று தலைமொழுகுகின்றார். அதற்கு பிரான்சிஸ், "எனக்கு விண்ணகத் தந்தை இருக்கின்றார்" என்று சொல்லிவிட்டு இறைப்பணி செய்யத் தொடங்கினார். இது வெளிப்பார்வைக்கு இயேசுவின் பொருட்டு பிளவாக இருந்தாலும், உண்மையில் அங்கு அமைதிக்கான விதை தூவப்படுகின்றது. இத்தகைய அமைதியைத்தான் இயேசு இவ்வுலகிற்கு தருவதாகச் சொல்கின்றார்.



இயேசுவுக்கு உகந்தோர்க்கு அமைதி



இயேசு தருகின்ற அமைதி, வழக்கமாக இவ்வுலகம் தருகின்ற அமைதி போன்றது அல்ல, அவ்வமைதி பிளவின் வழியாக... உண்மையான தியாகம், அன்பு, கரிசனை போன்றவற்றின் வழியாக வரும் என்று பார்த்தோம். இப்பொழுது இயேசு தருகின்ற அமைதியைப் பெற ஒருவர் என்ன செய்வது என்று சிந்தித்துப் பார்ப்போம். இயேசுவின் பிறப்பின்போது வானதூதர்கள், "மண்ணுலகில் அவர்க்கு உகந்தோர்க்கு அமைதி உண்டாகுக" (லூக் 2: 14) என்று பாடியதாக வாசிக்கின்றோம். அந்த வாழ்த்துப் பாடலிலேயே இயேசு தரும் அமைதியைப் பெறுவதற்கான வழி இருக்கின்றது. உண்மையில் யார் யாரெல்லாம் இயேசுவுக்கு உகந்த தியாக வழியில், அன்பு வழியில், மற்ற எல்லாரையும் விட அவர்க்கு முக்கியத்துவம் கொடுத்து வாழும் வழியில் நடக்கிறார்களோ அவர்கட்கு, இயேசு தரும் அமைதி நிச்சயம் உண்டு என்பதில் எந்தவித ஐயமுமில்லை.



சிந்தனை



'உலக அமைதி உனக்குள் இருந்து தொடங்குகின்றது' என்பார் தலாய் லாமா. ஆகையால், நாம் இன்மண்ணில் இயேசுவின் உண்மையான சீடர்களாய் வாழ்வதால், வரும் அமைதியை உலகிற்குத் தருவோம். அதன்வழியாக இப்புவியில் உண்மையான அமைதி நிலவச் செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 


=================================================================================
திருப்பலி முன்னுரை
=================================================================================
திருப்பலி முன்னுரை

இறைவனை நாடித் தேடுவதில் நாம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளை எடுத்தியம்புகின்றது இன்றைய பொதுக்காலம் 20 ஆம் ஞாயிறு திருப்பலி. இயேசுவைப் பின்பற்ற விரும்பும் சீடர்கள் எவ்வகையான வாழ்வை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதையும் அவற்றை எதிர்கொள்ளத் தேவையான ஆற்றல் தரும் வல்லவர் நம்மிடையே உண்டு என்பதையும் விசுவசிப்போம்.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கு உரைத்த எரேமியா பாழுங்கிணற்றில் தள்ளப்படுவதை காண்கின்றோம். இறைவாக்கு உரைத்து, குறைகளைச் சுட்டிக்காட்டி, உண்மையை வெளிப்படுத்திய காரணத்திற்காக தலைவர்களால் கிணற்றில் தள்ளப்பட்டாலும் இறைவனின் ஆற்றலால் மீட்டெடுக்கபடுகின்றார். இன்றைய சூழலிலும் இவ்வாறே உள்ளது. உண்மையையும் தவறுகளையும் சுட்டிக்காட்டி சமூக வளர்ச்சியில் அக்கறை கொண்டோர் காணாமலே போகின்றார்கள். ஆனாலும் காலமும் கடவுளும் அவர்களை வெளிக்கொண்டு வருவார் என நம்புகின்றோம்.

இன்றைய நற்செய்தியில் பிளவை ஏற்படுத்தவே வந்தேன் என்கிறார் இயேசு. இயேசுவின் காலத்தில் குடும்பத்தில் சிலர் இயேசுவையும் சிலர் சீசரையும் பின்பற்றினர். இதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பிளவு ஏற்பட்டது. இன்றைய சூழலில் இயேசுவையும் இவ்வுலக பகட்டையும் சமமாக எண்ணுவதால் இயேசுவுக்கும் நமக்கும் இடையே விரிசல் ஏற்படுகின்றது. இயேசுவின் மேல் கண்களைப் பதிய வைக்க மற்றவர்களின் மேலான கவனக் குறைப்பை அகற்றவேண்டும். இயேசுவுக்கும் சவால்களும் நெருக்கடிகளும் ஏற்பட்டது. அவ்வேளையிலும் துணிவோடு தனித்து நின்றதைப் போல நாமும் தடைகளைப் படிகளாக்கி இறைவனின் பாதையில் முன்னேறிச் செல்வோம்.

மன்றாட்டுகள்

1. எரேமியாவைத் தேர்ந்தெடுத்து இன்னல்களில் மீட்டெடுத்தவரே எம் இறைவா!
எம் தாயாம் திருச்சபையை வழிநடத்தும் எம் திருச்சபை பணியாளர்கள், இறை பாதையில் மக்களை வழி நடத்துவதில் ஏற்படும் சவால்களையும் துன்பங்களையும் கண்டு மனம் தளராது எரேமியா போல துன்பத்தையும் துணிவுடன் கடக்க ஆற்றல் தர வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. மண்ணுலகில் தீ மூட்டவே வந்தேன் என்றவரே எம் இறைவா!
உம் வருகை ஏற்படுத்திய பிளவுகள் தெளிவை ஏற்படுத்தியது. எம் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் நாட்டை வளமான பாதையில் நடத்தவும், அழிவை ஏற்படுத்தும் சாதிமத பிளவுகளை மக்களிடத்தில் ஏற்படுத்தாது, நற்பாதையை திட்டமிட்டு, அனைத்து துறைகளிலும் குறிப்பாக வேளாண்மை துறையில் முன்னேற்றம் கண்டிட தேவையான திட்டங்களை செயல்படுத்த நல்லறிவு தரவேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. நம்பிக்கையின் ஊற்றே எம் இறைவா!
எங்கள் அனுதின வாழ்வில் நாங்கள் சந்திக்கும் சூழ்நிலைகளில் மனிதநேயத்தோடு செயல்படவும், பிரிவினை, ஏற்றத்தாழ்வு எனப் புறக்கணிக்கப்படும் சகோதர சகோதரிகளிடம் அன்போடு பழகி, அவர்களுக்கு மனத்திடம் பெற்று தந்து மறுவாழ்வு அமைத்து தரும் கருவிகளாக நாங்கள் செயல்பட வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. நலன்களால் எம்மை நிரப்புபவரே எம் இறைவா!
எங்களுக்குத் தேவையான மழை பொழிந்து வறட்சி வளமாக மாறவும், வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள எம் அண்டை மாநிலங்கள் விரைவில் நல்வாழ்வை, நல்சூழலைப் பெறவும், குடும்ப அமைதி, மகிழ்ச்சி பெருகவும், மக்களிடையே நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு சமூகம் ஏற்றமடையவும், படிக்கும் மாணவர்கள் கல்வி, ஞானத்தில் சிறக்கவும், வேலைவாய்ப்பு, அருட்சாதனம் , குழந்தை வரம் வேண்டுவோர் உமது அருளால் பெற்று நிறைவடையவும் வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.


=================================================================================
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!