Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         17 ஆகஸ்ட் 2019  
                                    பொதுக்காலம் 19ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள்.

யோசுவா நூலிலிருந்து வாசகம் 24: 14-29

அந்நாள்களில் யோசுவா மக்களிடம் கூறியது: "ஆண்டவருக்கு அஞ்சி உண்மையோடும் நேர்மையோடும் அவருக்கு ஊழியம் புரியுங்கள். நதிக்கு அப்பாலும், எகிப்திலும், உங்கள் மூதாதையர் பணிந்து வந்த தெய்வங்களை விட்டு விலகுங்கள். ஆண்டவருக்கு ஊழியம் புரிவது தீயது என்று உங்கள் பார்வைக்குத் தோன்றினால், உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் பணிந்து வந்த தெய்வங்களுக்கோ, உங்கள் நாட்டில் உங்களுடன் வாழும் எமோரியரின் தெய்வங்களுக்கோ இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்."

மக்கள் மறுமொழியாக, "ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்குவது எங்களிடத்தே அறவே நிகழாதிருப்பதாக! ஏனெனில் எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களையும் எங்கள் மூதாதையரையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வந்தார். எங்கள் கண்முன் இப்பெரிய அடையாளங்களைச் செய்தார். நாங்கள் நடந்து வந்த எல்லா வழிகளிலும் நாங்கள் கடந்து வந்த மக்களிடையிலும் எங்களைக் காத்தருளினார். ஆண்டவர் எல்லா மக்களையும், இந்நாட்டில் வாழ்ந்த எமோரியரையும் எங்கள் முன்னிருந்து விரட்டினார். நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில் அவரே எங்கள் கடவுள்"என்றனர்.

யோசுவா மக்களிடம், "உங்களால் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய இயலாது. ஏனெனில் அவர் தூய கடவுள். அவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத கடவுள். உங்கள் குற்றங்களையும் பாவங்களையும் அவர் மன்னிக்க மாட்டார். ஆனால் நீங்கள் ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்கினால் அவர் மீண்டும் உங்களுக்குத் தீங்கு செய்வார். உங்களுக்கு நன்மை செய்த அவர் உங்களை அழித்துவிடுவார்"என்றார். மக்கள் யோசுவாவிடம், "இல்லை, நாங்கள் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்"என்றனர்.

யோசுவா மக்களிடம் "ஆண்டவருக்கு ஊழியம் செய்ய அவரை நீங்களே தெரிந்துகொண்டீர்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகள்"என்றார். அவர்கள், "நாங்களே சாட்சிகள்"என்றனர். இப்பொழுது உங்கள் நடுவில் உள்ள வேற்றுத் தெய்வங்களை விலக்கி விடுங்கள். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரிடம் உங்கள் இதயங்களைத் திருப்புங்கள்"என்றார்.

மக்கள் யோசுவாவிடம், "எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள் ஊழியம் புரிவோம். அவரது குரலுக்குக் கீழ்ப்படிவோம்"என்றனர். அன்று யோசுவா மக்களுக்காக உடன்படிக்கை செய்தார். செக்கேமில் அவர் அவர்களுக்கு விதிமுறைகளையும் ஒழுங்குகளையும் கொடுத்தார். யோசுவா இவ்வார்த்தைகளைக் கடவுளின் திருச்சட்ட நூலில் எழுதினார். ஒரு பெரும் கல்லை எடுத்து அதை ஆண்டவரின் திருத்தலத்தில் ஒரு கருவாலி மரத்தின் கீழ் நாட்டினார்.

யோசுவா எல்லா மக்களிடமும், "இதோ! இக்கல் நமக்கு எதிரான சான்றாக இருக்கும். ஏனெனில் ஆண்டவர் நம்மோடு பேசிய எல்லாவற்றையும் இது கேட்டது. நீங்கள் உங்கள் கடவுளை ஏற்றுக்கொள்ள மறுத்தால் இது உங்களுக்கு எதிரான சான்றாக இருக்கும்"என்றார்.

யோசுவா மக்களை அவரவர் உரிமைச் சொத்தாகிய பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சிக்குப்பின் நூனின் மகனும் ஆண்டவரின் ஊழியருமாகிய யோசுவா இறந்தார். அவருக்கு வயது நூற்றுப்பத்து.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 16: 1-2a,5. 7-8. 11 (பல்லவி: 5a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து.

1 இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். 2ய நான் ஆண்டவரிடம் 'நீரே என் தலைவர்' என்று சொன்னேன். 5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. பல்லவி

7 எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. 8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி

11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 11: 25
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 13-15

அக்காலத்தில் சிறு பிள்ளைகள் மேல் இயேசு தம் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறு அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். ஆனால் இயேசு, "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது"என்றார். அவர்களைத் தொட்டு ஆசி வழங்கிய பின்பு அவர் அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
யோசுவா 24: 14- 29

'ஆண்டவர்க்கு ஊழியம் செய்வோம்'

நிகழ்வு

நியூயார்க்கில் உள்ள தீயணைப்புப் படையில், தீயணைப்புப் படைவீரராகப் பணிபுரிந்து வந்தவர் வில்லியம் ஸ்டாக்போல் என்பவர். மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வந்த இவர், 1998 ஆம் ஆண்டு நியூயார்க்கில் ஏற்பட்ட பயங்கரத் தீவிபத்தில் சிக்குண்ட மக்களைக் காப்பாற்றும்போது, உடல் முழுவதும் தீக்காயங்களோடு உயிர் தப்பினார். இதற்குப் பின்பு அவருடைய குடும்பத்தாரும் அவருடைய நலவிரும்பிகளும் அவரிடம், வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வீட்டில் ஓய்வெடுக்குமாறு கேட்டார்கள். ஆனால், அவர் அவர்களிடம், "ஒவ்வொரு நாளும் எத்தனையோ மக்கள் தீவிபத்துகளில் சிக்கி உயிரை இழந்துகொண்டிருக்கின்றார்கள். அவர்களையெல்லாம் காப்பாற்றுவது என்னுடைய கடமையல்லவா!" என்று சொல்லி, தன்னுடைய பணியைத் தொடர்ந்து செய்து வந்தார்.

நாள்கள் மெல்ல நகர்ந்தன. வில்லியம் ஸ்டாக்போல் அர்ப்பணிப்போடு பணிகளைச் செய்துவருவதை பார்த்த மேலிடம் தீயணைப்புப் படைவீர்கட்குத் தலைவராக அவரை ஏற்படுத்தியது. இதற்குப் பின்பு அவர் முன்பைவிட மிகுந்த அர்ப்பணிப்போடு பணிசெய்து வந்தார்.

ஒருநாள் ஓர் அடுக்குமாடிக் கட்டிடத்தில் பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டிருக்கின்றது என்ற செய்தி வில்லியம் ஸ்டாக்போலுக்குத் தெரிந்த வந்தது. உடனே அவர் தன்னுடைய வீரர்களோடு விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றார். தீயானது கட்டிடம் முழுவதும் பரவிக் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. தீக்குள் சிக்கிய ஒவ்வொருவரையும் வில்லியம் ஸ்டாக்போல் தன்னோடு இருந்த வீரர்களோடு சேர்ந்து பத்திரமாக இறக்கினார். இந்நிலையில் கடைசி மாடியில் ஒருசிலர் தீயில் மாட்டிகொண்டது வில்லியம் ஸ்டாக்போலுக்குத் தெரியவந்தது. மற்றவர்களெல்லாம் 'அந்த மாடிக்கு எப்படிச் செல்வது?' என்று யோசித்துக் கொண்டிருக்கையில், இவர் எதைக் குறித்தும் கவலைப்படாமல், அந்தக் கடைசி மாடியில் இருந்தவர்களைக் காப்பாற்ற விரைந்துசென்றார். மாடியில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்டவர்களைப் பத்திரமாகத் தரையிறக்கிவிட்டு, இன்னும் யாராவது அங்கு இருக்கின்றார்களா> என்று அவர் பார்த்துக்கொண்டிருக்கும்போது, மேலே இருந்த கூரை அவர்மேல் விழுந்து, தீயில் கருகி இறந்துபோனார்.

வில்லியம் ஸ்டாக்போல் தான் செய்துவந்த தீயணைப்புப் பணியை மிகவும் அர்ப்பண உள்ளத்தோடு செய்துவந்தார். அதன்பொருட்டு தன்னுடைய உயிரையும் தந்தார். அவரைப் போன்று இறைவனின் இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் ஒவ்வொருவரும் அவரை முழுமையாக அன்பு செய்து. அவர்க்கு ஊழியம் அல்லது பணிசெய்யவேண்டும், தேவைப்படின் நம்முடைய உயிரையும் தரவேண்டும். அத்தகைய உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகமும் அர்ப்பணிப்புடன் ஆண்டவர்க்கு ஊழியம் புரிவதைக் குறித்துப் பேசுகின்றது. அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவர்க்கு ஊழியம் புரிதல் என்றால் என்ன

முதல் வாசகத்தில், யோசுவா இஸ்ரயேல் மக்களை செக்கேமிற்கு வரவழைத்து, அவர்களிடம், ஆண்டவர்க்கு அஞ்சி, உண்மையோடும் நேர்மையோடும் அவர்க்கு ஊழியம் புரியுங்கள் என்கின்றார். இங்கு யோசுவா இஸ்ரயேல் மக்களிடம் சொல்லக்கூடிய ஒவ்வொரு வார்த்தையும் மிக முக்கியமானது.

ஆண்டவர் ஊழியம் புரிவது என்றால், அவர்க்கு அஞ்சி, அவர் கொடுத்திருக்கின்ற கட்டளைகளை உண்மையோடும் நேர்மையோடும் கடைப்பிடித்து அவரை வணங்கவேண்டும். அதுதான் ஆண்டவர்க்கு ஊழியம் புரிவதாகும். பெயர்க்கு கடவுளின் மகன்/மகள் என்று சொல்லிவிட்டு, நம்முடைய விருப்பத்தின்படி நடப்பது ஒருபோதும் ஆண்டவர்க்கு புரிவது ஆகாது (லேவி 17:7)

ஆண்டவர்க்கு ஊழியம் புரிவதாய் உறுதியளித்த யோசுவா/ இஸ்ரயேல் மக்கள்

யோசுவா இஸ்ரயேல் மக்களிடம், ஆண்டவர்க்கு ஊழியப் போகிறீர்களா? பிற தெய்வங்கட்கு ஊழியம் புரியப் போகிறீர்களா? என்று கேட்டுவிட்டு, "நானும் என் வீட்டாரும் ஆண்டவர்க்கே ஊழியம் செய்வோம்" என்று உறுதியாகச் சொல்கின்றார்.

நற்செய்தியில் இயேசு கூறுவது போல, எவரும் இரு தலைவர்கட்குப் பணிவிடை செய்ய முடியாது (மத் 6:24) ஒருவரை வெறுத்துத் தான் இன்னொருவரை அன்பு செய்ய முடியும். இந்த உண்மையை உணர்ந்ததால்தான் யோசுவா, "நானும் என் வீட்டாரும் ஆண்டவர்க்கு ஊழியம் செய்வோம்" என்று உறுதியாகச் சொல்ல முடிந்தது. இஸ்ரயேல் மக்கட்கு இந்தத் துணிச்சல் இல்லை. அவர்கள் பெயரளவுக்கு ஆண்டவர்க்கு ஊழியம் புரிவதாய் சொல்லிக்கொண்டாலும், பிற தெய்வங்களை வழிபட்டுத் தான் வைத்தார்கள். அதனாலேயே அவர்கள் பல்வேறு விதமான துன்பங்களைச் சந்தித்தார்கள்.

ஆகையால், நாம் இறைவனுக்கு ஊழியம் புரிகின்றோம் என்றால், அவர்க்கு உண்மையுள்ளவர்களாக இருந்து அர்ப்பணிப்புடன் ஊழியம் புரிய வேண்டும்.

சிந்தனை

'அவர்கள் ஆண்டவரைக் கைவிட்டு பாலுக்கும் அஸ்தரோத்துக்கும் ஊழியம் செய்தனர்' (நீத 2:13) என்கின்றது இறைவார்த்தை. நாம் இஸ்ரயேல் மக்களைப் போன்று பாகாலுக்கும் இறைவனுக்கும் ஊழியனுக்கும் ஊழியம் செய்து கொண்டிருக்காமல், உண்மையான, ஒரே இறைவனாகிய ஆண்டவர்க்கு மட்டும் ஊழியம் புரிவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 19: 13-15

'அவர்களைத் தடுக்காதீர்கள்'


நிகழ்வு

அது காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்துபின் வந்த திங்கட்கிழமை காலை வேளை. அந்தக் காலை வேளையில் யாழினி, மழலையர் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த தன்னுடைய மூன்று வயது மகன் மகிழனைப் படுக்கையிலிருந்து எழுப்பி, குளிக்க வைத்து, பள்ளிச் சீருடையை அணிவித்து, சாப்பாடு கொடுத்து இறுதியாக அவனுடைய கால்களில் காலணிகளைப் போட்டுவிட முயன்றாள். அதுவரைக்கும் அமைதியாக இருந்த மகிழன் தன்னுடைய தாய் தனது கால்களில் காலணிகளை மாட்டத் தொடங்கியதும், முரண்டு பிடிக்கத் தொடங்கினான். யாழினியோ, தன் மகன் நீண்ட நாள்கள் கழித்துப் பள்ளிக்கூடம் போவதால்தான் இப்படி முரண்டு பிடிக்கின்றான் என்று நினைத்து, அவளுடைய கால்களில் காலணிகளை மாட்டினாள்.

அதற்குப் பிறகு யாழினி தன் மகனின் புத்தகப் பையை ஒரு கையிலும் அவனது சாப்பாட்டுக் கூடையை இன்னொரு கையிலும் தூக்கிக்கொண்டு, மகனை முன்னே நடக்கவிட்டுவிட்டு, அவள் அவன் பின்னே நடந்துசென்றாள். வழியெங்கும் மகிழன் இருப்புக் கொள்ளாமலேயே நடந்துசென்றான். அதைப் பார்த்துவிட்டு யாழினி அவனிடம், "விடுமுறையில் இங்கும் அங்கும் ஓடியாடித் திரிந்துவிட்டு பள்ளிக்கூடம் போவதற்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். இரண்டு மூன்று நாள்களில் எல்லாம் சரியாகிவிடும். அதனால் வருத்தப்படாமல் போ" என்றான். அவனோ அதைக் காதில் வாங்கிக்கொள்ளாதவன் போல் நடந்துசென்றான்.

மகிழன் படித்து வந்த பள்ளிக்கூடம் வந்ததும், அவனை அவனுடைய தாய் அவனது வகுப்பு ஆசிரியையிடம் விட்டுவிட்டு வெளியே வந்தாள். அப்பொழுதும் அவன் அவளிடம் ஏதோ சொல்வதற்கு வாய் எடுத்தான். அவளோ, "பேசாமல் இரு... சாயந்தரம் வந்து உன்னைக் கூட்டிக்கொண்டு போகிறேன்" என்று சொல்லிவிட்டு வெளியே வந்தாள். அவள் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வந்த சிறிதுநேரத்தில் ஒரு சிறுவனின் அலறல் சத்தம் கேட்டது. ஆம், அது வேறு யாருடைய சத்தமும் அல்ல, யாழினியின் மகன் மகிழனின் சத்தம்தான். மகனின் அலறல் சத்தம் கேட்டதும் யாழினி மகன் இருந்த வகுப்பறையை நோக்கி ஓடிச் சென்றாள். அங்கு அவளுடைய மகன் வாயில் நுரைதள்ள, இறந்துகிடந்தான்.

மகனுக்கு என்னவாயிற்று என்று யாழினி அவனுடைய உடல் முழுவதும் சோதித்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது, அவனுடைய காலணிக்குள் உள்ள இருந்த கருந்தேள் அவனைக் கொட்டியிருக்கின்றது என்று. 'இதைச் சொல்வதற்குத்தான் நான் இவனுக்குக் காலணியை அணிவிக்கின்றபோது முரண்டு பிடித்தானோ... இதைக்கூட உணர்ந்துகொள்ளாமல் மகனைக் கொன்ற பாவியானேனே" என்று யாழினி கதறி அழுதாள். என்ன செய்ய! போன உயிரைத் திரும்பப் பெற்றுவிட முடியுமா என்ன?

இந்த நிகழ்வில் வரும் யாழினிப் போன்றுதான் பலரும் சிறுவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள். அவர்களுடைய உணர்வுகள் என்ன என்பதைக் காதுகொடுக்கக் கேட்பதில்லை. இன்னும் ஒருசிலர் இருக்கின்றார்கள். அவர்கள் சிறுவர்களை, வறியர்களை ஒரு பொருட்டாகக்கூடக் கருதுவதில்லை. இத்தகைய சூழ்நிலையில், "சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்... அவர்களைத் தடுக்காதீர்கள்" என்று சொல்லும் இயேசுவின் வார்த்தைகளைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவின் ஆசியை வேண்டிக் குழந்தைகளைக் கொண்டு வந்த பெற்றோர்

நற்செய்தியில், ஒருசில பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை இயேசுவிடம் கொண்ட வந்து, அவர் அவர்கள்மீது தன் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறு வருகின்றார்கள். வழக்கமாக யூதத் தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகள்மீது இரப்பிக்கள் ஆசி வழங்கவேண்டும் என்று அவர்களை அவர்களிடம் கொண்டு வருவார்கள். இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, இரபிக்கள் குழந்தைகட்கு ஆசி வழங்கவேண்டும். இரண்டாவது முக்கியமான காரணம், இரபிக்களின் முன்மாதிரியைத் தங்களுடைய குழந்தைகளும் கடைப்பிடித்து வாழவேண்டும். இதற்காகத்தான் யூதத் தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளை இரபிக்களிடம் கொண்டுவந்தார்கள். இயேசுவையும் மக்கள் ஓர் இரபியைப் போன்று பார்த்தார்கள். அதனால் யூதத் தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள்.

குழந்தைகளோடு வந்த பெற்றோரைத் தடுத்த இயேசுவின் சீடர்கள்

தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளோடு இயேசுவிடம் வருவதைப் பார்த்த சீடர்கள் அவர்களை அதட்டுகின்றார்கள். சீடர்கள் இயேசுவுக்குப் பாதுகாப்புக் கொடுக்க நினைத்திருக்கலாம். அதனால் அவர்கள் அவ்வாறு செய்திருக்கலாம். இன்னொரு புறம். குழந்தைகளை அவர்கள் ஒரு பொருட்டாகக்கூட நினையாமல் இருந்திருக்கலாம். இப்படிப்பட்ட சமயத்தில்தான் இயேசு அவர்களிடம், "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில், இறையாட்சி இத்தகையோர்க்கே உரியது" என்கின்றார்.

இயேசுவின் காலத்திலும் சரி. நம்முடைய காலத்திலும் சிறு பிள்ளைகள் அல்லது குழந்தைகள் மிகவும் மோசமாகவே நடத்தப்படுக்கின்றார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்கட்கு எதிராக நடக்கும் வன்முறைகள் ஏராளம். இத்தகைய தருணத்தில் நாம் குழந்தைகளின் உரிமைகளைப் பேணுவதும் அவர்கட்கு உரிய மதிப்புத் தருவதும் அவர்கள் சார்பாக நிலைப்பாடு எடுப்பதும் தேவையானதாக இருக்கின்றது.

சிந்தனை

'நீ இளைஞனாக இருப்பதால் யாரும் உன்னைத் தாழ்வாகக் கருதாதிருக்கட்டும்' (1 திமொ 4:12) என்பார் பவுல். பவுலின் இவ்வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டவர்களாய் யாரையும் அவர்கள் சிறியவர்களாக, வறியவர்களாக இருக்கின்றார்களே என்று நினைத்து அவர்களை இரண்டாம் தரக்குடிகளாக நடத்தாமல், அவர்கட்கு உரிய மதிப்பளிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!