|
|
16 ஆகஸ்ட் 2019 |
|
|
பொதுக்காலம் 19ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உங்கள் தந்தையரை எகிப்திலிருந்து வெளியே கொணர்ந்தேன்.
யோசுவா நூலிலிருந்து வாசகம் 24: 1-13
அந்நாள்களில் செக்கேமில் யோசுவா இஸ்ரயேலின் எல்லாக் குலங்களையும்
ஒன்று கூட்டினார். இஸ்ரயேலின் முதியோர்களையும் தலைவர்களையும்
நடுவர்களையும் அதிகாரிகளையும் அழைத்தார். அவர்கள் கடவுள்
முன்னிலையில் ஒன்றுகூடினர்.
யோசுவா எல்லா மக்களுக்கும் கூறியது: "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர்
இவ்வாறு கூறுகின்றார்: முற்காலத்தில் ஆபிரகாம், நாகோர் ஆகியோரின்
தந்தை தேரா உட்பட்ட உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் வாழ்ந்தபொழுது
அவர்கள் மற்ற தெய்வங்களுக்கு ஊழியம் செய்தனர். உங்கள் தந்தையாகிய
ஆபிரகாமை நதிக்கு அப்பாலிருந்து அழைத்து வந்து, கானான் நாடு
முழுவதிலும் நடத்திச் சென்றேன்; அவனது வழிமரபைப் பெருக்கினேன்;
அவனுக்கு ஈசாக்கை அளித்தேன். ஈசாக்கிற்கு யாக்கோபையும் ஏசாவையும்
அளித்தேன்; ஏசாவுக்கு செபீர் மலையை உடைமையாக அளித்தேன்.
யாக்கோபும் அவன் மக்களும் எகிப்திற்குச் சென்றனர். மோசேயையும்
ஆரோனையும் அனுப்பி அங்கே என் செயல்களின் மூலம் எகிப்தை வதைத்தேன்.
பின்னர் உங்களை வெளியே கொணர்ந்தேன். உங்கள் தந்தையரை எகிப்திலிருந்து
வெளியே கொணர்ந்தேன். அவர்கள் கடலுக்குள் சென்றார்கள். எகிப்தியர்
தேரில் குதிரைகளுடன் செங்கடலுக்குள் உங்கள் தந்தையரைத் துரத்திச்
சென்றனர். அவர்கள் ஆண்டவரை நோக்கிக் கதறினர். அவர் அவர்களுக்கும்
எகிப்தியருக்கும் இடையில் இருளை வைத்தார். அவர் எகிப்தியரைக்
கடலில் அமிழ்த்தினார். நான் எகிப்தியருக்குச் செய்ததை அவர்கள்
கண்கள் கண்டன. நீங்கள் நீண்ட காலம் பாலைநிலத்தில் வாழ்ந்தீர்கள்.
யோர்தானுக்குக் கிழக்கில் வாழும் எமோரியரின் நாட்டுக்கு உங்களைக்
கொண்டு வந்தேன். அவர்கள் உங்களுடன் போரிட்டார்கள். நான் அவர்களை
உங்கள் கையில் ஒப்படைத்தேன். அவர்களது நிலத்தை நீங்கள் உடைமையாக்கிக்
கொண்டீர்கள். உங்கள் முன்னிருந்து அவர்களை அழித்து ஒழித்தேன்.
மோவாபின் அரசன் சிப்போரின் மகன் பாலாக்கு இஸ்ரயேலுக்கு எதிராகப்
படை திரட்டிப் போர் தொடுத்தான். உங்களைச் சபிக்குமாறு பேகோரின்
மகன் பிலயாமை அழைக்க ஆள் அனுப்பினான். நான் பிலயாமுக்குச்
செவிகொடுக்க விரும்பவில்லை. அவன் உங்களுக்கு ஆசி வழங்கினான்.
உங்களைப் பாலாக்கின் கையினின்று விடுவித்தேன். நீங்கள்
யோர்தானைக் கடந்து எரிகோவுக்கு வந்தீர்கள். எரிகோவின் மக்களும்,
எமோரியரும், பெரிசியரும், கானானியரும், இத்தியரும், கிர்காசியரும்,
இவ்வியரும், எபூசியரும், உங்களுக்கு எதிராகப் போர் தொடுத்தனர்.
அவர்களையும் உங்கள் கையில் ஒப்படைத்தேன். நான் உங்களுக்கு
முன்னே குளவிகளை அனுப்பினேன். அவை உங்கள் முன்னிருந்து இரு எமோரிய
அரசர்களை விரட்டின. இது நிகழ்ந்தது உங்கள் வாளாலும் அன்று; உங்கள்
அம்பாலும் அன்று. நீங்கள் உழுது பயிரிடாத நிலத்தில் அறுவடை
செய்தீர்கள். நீங்கள் கட்டாத நகர்களில் நீங்கள் வாழ்கின்றீர்கள்.
நீங்கள் நடாத திராட்சை, ஒலிவத் தோட்டங்களின் பயனை நீங்கள் நுகர்கின்றீர்கள்.
இவை அனைத்தும் நான் உங்களுக்குக் கொடுத்தவையே."
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
136: 1-3. 16-18. 21, 22, 24 (பல்லவி: 1c)
=================================================================================
பல்லவி: என்றும் உள்ளது ஆண்டவரது பேரன்பு.
1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர். 2
தெய்வங்களின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். 3 தலைவர்களின்
தலைவருக்கு நன்றி செலுத்துங்கள். பல்லவி
16 பாலை நிலத்தில் தம் மக்களை வழிநடத்தியவர்க்கு நன்றி
செலுத்துங்கள். 17 மாபெரும் மன்னர்களை வெட்டி வீழ்த்தியவர்க்கு
நன்றி செலுத்துங்கள். 18 வலிமைமிகு மன்னர்களைக் கொன்றழித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள். பல்லவி
21 அவர்களது நாட்டைத் தம் மக்களுக்கு உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள். 22 அதைத் தம் அடியார்களாகிய இஸ்ரயேலர்க்கு
உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள். 24 நம் எதிரிகளினின்று
நம்மை விடுவித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
1 தெச 2: 13
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் வார்த்தையை நீங்கள்
எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல,
கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிட
மோசே அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கமுதல் அவ்வாறு இல்லை.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 3-12
அக்காலத்தில் பரிசேயர் இயேசுவை அணுகி, அவரைச் சோதிக்கும்
நோக்குடன், "ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு
விலக்கி விடுவது முறையா?" என்று கேட்டனர்.
அவர் மறுமொழியாக, "படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் `ஆணும்
பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்' என்று நீங்கள் மறைநூலில்
வாசித்ததில்லையா?" என்று கேட்டார். மேலும் அவர், "இதனால்
கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன்
ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள்
இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர்
பிரிக்காதிருக்கட்டும்" என்றார்.
அவர்கள் அவரைப் பார்த்து, "அப்படியானால் மணவிலக்குச்
சான்றிதழைக் கொடுத்து மனைவியை விலக்கி விடலாம் என்று மோசே
கட்டளையிட்டது ஏன்?" என்றார்கள்.
அதற்கு அவர், "உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள்
மனைவியரை விலக்கிவிடலாம் என்று மோசே உங்களுக்கு அனுமதி
அளித்தார். ஆனால் தொடக்கமுதல் அவ்வாறு இல்லை.
பரத்தைமையில் ஈடுபட்டதற்காக அன்றி வேறு எக்காரணத்தையாவது
முன்னிட்டுத் தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை
மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான் என நான் உங்களுக்குச்
சொல்கிறேன்" என்றார்.
அவருடைய சீடர்கள் அவரை நோக்கி, "கணவர் மனைவியர் உறவு நிலை
இத்தகையது என்றால் அருட்சாதனம்
செய்துகொள்ளாதிருப்பதே நல்லது"
என்றார்கள்.
அதற்கு அவர், "அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை
ஏற்றுக்கொள்ள முடியாது. சிலர் பிறவியிலேயே மணஉறவு கொள்ள
முடியாதவராய் இருக்கின்றனர். வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு
ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் விண்ணரசின் பொருட்டு
அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர்.
இதை ஏற்றுக்கொள்ளக் கூடியவர் ஏற்றுக்கொள்ளட்டும்" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
மத்தேயு 19: 3-12
கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?
நிகழ்வு
ஒரு நாட்டு மருத்துவரும் அவருடைய மனைவியும் ஊர்க்கு ஒதுக்குப்புறமாக
இருந்த ஒரு காட்டுப் பகுதியில் வாழ்ந்து வந்தார்கள். அந்த
நாட்டு மருத்துவரைத் தேடி பலரும் பல இடங்களிலிருந்தும் வருகை
தந்தார்கள். அவரும் அவர்கட்கு நல்ல முறையில் மருத்துவம்
பார்த்து வந்தார். இதற்கிடையில் அவர் ஏதோ ஒன்றைத்
தொலைத்துவிட்டு அதைத் தேடு தேடு என்று தேடினார். அவருடைய மனைவிக்கு
அவர் என்ன தேடுகின்றார் என்று சுத்தமாகத் தெரியவில்லை. இருந்தாலும்
அது குறித்து அவரிடம் கேட்டால், அவர் கடுமையாகக் கோபப்படுவார்
என்று எதுவும் கேட்காமல், அமைதியாக இருந்தார்.
ஒருநாள் அந்த நாட்டு மருத்துவர் மூலிகை இலைகளைத் தேடி
காட்டுக்குள் சென்றார். காட்டுக்குள் சென்றுவிட்டு
வீட்டுக்குத் திரும்பும்போது இரவுநேரம் ஆகிவிட்டது. அவர்
வீட்டுக்கு வந்தபோது, அவருடைய வீட்டிற்கு முன்னம் ஓர் இளம்பெண்
நின்றுகொண்டிருந்தாள்.
"யாரம்மா நீ! உனக்கு என்னவேண்டும்?" என்று கேட்டார் நாட்டு மருத்துவர்.
அதற்கு அந்த இளம்பெண், "என்னைத் தெரியவில்லையா... நான்தான் உங்கள்
மனைவி?" என்றாள் அந்த இளம்பெண். "நீ என் மனைவியா? கொஞ்சம்
புரியும்படி சொல்" என்றார் அவர். அவள் நடந்ததைப் பின்வருமாறு
விவரிக்கத் தொடங்கினாள். "இரவு உணவுக்காகக் கூழ் காய்ச்சிக்
கொண்டிருந்தேன். அவ்வாறு காய்ச்சும்போது கரண்டி திடீரென உடைந்துபோனது.
எனவே, பக்கத்தில் கிடந்த ஒரு குச்சியை எடுத்து, கூழைக் காய்ச்சத்
தொடங்கினேன். எப்பொழுது அந்தக் குச்சியை வைத்து கூழைக் காய்ச்சத்
தொடங்கினேனோ, அப்பொழுதே அது கறுப்பு நிறத்தில் மாறிவிட்டது. கறுப்பு
நிறத்தில் இருக்கும் கூழை உங்கட்குக் கொடுத்தால், நீங்கள் என்மீது
கடுங்கோபம் கொள்வீர்கள் என்று அந்தக் கூழை நான் குடிக்கத் தொடங்கினேன்.
அப்பொழுதுதான் நான் இளம்பெண்ணைப் போன்று ஆனேன்."
இவ்வாறு பேசிக்கொண்டு சென்ற தன மனைவியை இடைமறித்த அந்த நாட்டு
மருத்துவர், "அது சரி! கூழைக் காய்ச்சுவதற்காகப் பயன்படுத்திய
அந்தக் குச்சி எங்கே?" என்று கேட்டார். "அதுவா! உங்கட்காகக்
கூழ் காய்ச்சுகின்றபோது, அந்தக் குச்சியை அடுப்பெரிக்கப் பயன்படுத்திவிட்டேன்"
என்றார். தன் மனைவி இவ்வாறு சொன்னதைக் கேட்டு அந்த நாட்டு மருத்துவர்க்குக்
கடுமையான கோபம் வந்தது, "அடியே! இத்தனை நாள்களும் அந்தக்
குச்சியைத் தானே தேடிக்கொண்டிருந்தேன்... இது தெரியாமல் நீ இப்படி
அடுப்பெரிக்கப் பயன்படுத்திவிட்டாயே!" என்று கத்தினார்.
"நீங்கள் அந்தக் குச்சியைத்தான் தேடிக்கொண்டிருக்கின்றீர்கள்
என்று எனக்கு எப்படித் தெரியும்" என்று பதிலுக்குக் கத்தினார்
நாட்டு மருத்துவரின் மனைவி. இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம்
முற்றி அதில் சண்டையில் போய் முடிந்து, அதுவரைக்கும் சண்டையே
போட்டிராதே அவர்கள் இருவரும் பிரிந்துபோனார்கள்.
இந்த நிகழ்வில் வருகின்ற கணவன் மனைவியைப் போன்றுதான் பல கணவன்
மனைவிகள் ஒருவர்க்கு ஒருவர் வெளிப்படையாமல் இல்லாமல், ஒருவரோடு
ஒருவர் மனம்விட்டுப் பேசமால், சாதாரண ஒரு பிரச்சினைக்கும்
பிரிந்துபோகின்றார்கள் அல்லது விவாகரித்து செய்துகொள்கின்றார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் கணவன் தன் வாழ்க்கைத்துணை விலக்கி விடுவது
முறையா? என்பதையும் திருமணத்தின் மாண்பினையும் எடுத்துச்
சொல்லும் இன்றைய நற்செய்தி வாசகத்தைக் குறித்து சிந்தித்துப்
பார்ப்போம்.
பரத்தமைக்காக அன்றி வேறு எக்காரணத்தைக் கொண்டும் விலக்கிவிடுவது
முறையல்ல
நற்செய்தியில், இயேசுவிடம் வருகின்ற பரிசேயர், "கணவன் தன் மனைவியை
எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கிவிடுவது முறையா? என்று
கேட்கும்போது, இயேசு அவரிடம், ஈருடல் ஓருயிர் தத்துவத்தை எடுத்துக்கூறுகின்றார்.
அது என்ன 'ஈருடல் ஓருயிர்' தத்துவமெனில், மனிதன் தனிமையாக இருப்பது
நல்லதல்ல என்று கண்ட கடவுள், அவனுக்கு ஏற்ற துணையாகப் பெண்ணை
ஏவாளைப் படைத்தார். அவர்கள் இருவரும் உடலால் வேறு வேறாக இருந்தாலும்,
உள்ளத்தால் ஒன்றாக இருக்கப் பணிக்கப்பட்டார்கள். இதுதான் ஈருடல்
ஓருயிர் தத்துவமாகும். இதைத்தான் இயேசு தன்னிடம் கேள்வி கேட்ட
பரிசேயரிடம் கூறுகின்றார். ஆனால், அவர், 'மணவிலக்குச் சான்றிதழைக்
கொடுத்து மனைவியை விலக்கிவிடலாம்' என்ற மோசேயின் கட்டளைக்
குறித்துப் பேசுகின்றபோது, இயேசு அவரிடம், "உங்கள் கடின உள்ளத்தின்
பொருட்டே மோசே அவ்வாறு அனுமதியளித்தார்" என்கின்றார்.
தொடர்ந்து இயேசு அவரிடம், "பரத்தமையில் ஈடுபட்டதற்காக அன்றி
வேறு எக்காரணத்தையாவது முன்னிட்டுத் தன் மனைவியை விலக்கிவிட்டு
வேறொரு பெண்ணை மணப்பவன் விச்சாரம் செய்கின்றான்" என்கின்றார்.
கடவுளின் நோக்கம், கணவனும் மனைவியும் இணைந்திருக்கவேண்டும்.
அதற்காகத்தான் அவர் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார். இதுதான்
இயேசுவின் வார்த்தைகளிலிருந்து வெளிப்படுகின்றது. மேலும் பரத்தமையைத்
தவிர்த்து வேறு எக்காரணத்தைக் கொண்டு கணவனும் மனைவியும் பிரிவது
நல்லது கிடையாது. அதையும் இயேசு மிக ஆணித்தரமாகக்
கூறுகின்றார்.
ஆதலால் கணவனும் மனைவியும் ஓருயிராய் இருந்து நல்ல குடும்பத்தைக்
கட்டியெழுப்புவது மிகவும் இன்றியமையாதது என்று உணர்ந்து வாழ்வது
நல்லது.
சிந்தனை
'நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள். அவரது அன்பிற்குரிய
இறைமக்கள். எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை,
கனிவு, பொறுமை ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள்' (கொலோ
3: 12) என்பார் பவுல். கணவன், மனைவி மட்டுமல்லாது ஒவ்வொருவரும்
இத்தகைய பண்புகளால் அணி செய்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
யோசுவா 24: 1-13
அன்புசெய்யும் இறைவன்
நிகழ்வு
இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய மிகப்பெரிய இறையியல் அறிஞர்
'கார்ல் பர்த் (Karl Barth). ஒருசமயம் இவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில்
உரை நிகழ்த்துவதற்காக அழைக்கப்பட்டார். இவரும் பல்கலைக்கழகம்
விடுத்த அன்பான அழைப்பினை ஏற்று உரை நிகழ்த்துவதற்குச்
சென்றார்.
இவர் உரை நிகழ்த்தத் தொடங்கியதும் அரங்கில் இருந்த அனைவரும் அவ்வளவு
ஆர்வமாக கேட்கத் தொடங்கினார்கள். ஒரு மணிநேரத்திற்கும் குறைவான
நேரத்தை எடுத்துக்கொண்டு இவர் உரையாற்றி முடித்ததும், அரங்கிலிருந்த
ஒருவர் அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். "கார்ல் பெர்த் அவர்களே!
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இறையியல் அறிஞர் நீங்கள்! உங்களைப்
பொறுத்தளவில் எது ஆழமான இறையியல் உண்மை?" இதுதான் அந்த மனிதர்
கார்ல் பெர்த்திடம் கேட்ட கேள்வி.
அந்த மனிதர் இப்படியொரு கேள்வியைக் கேட்டதும், அரங்கிலிருந்த
அனைவரும், 'கார்ல் பெர்த் இப்பொழுது மிக நீண்ட, அதே சமயம் பலருக்கும்
புரியாத ஒரு விளக்கத்தைத் தரப்போகிறார்' என்று நினைத்தார்கள்.
ஆனால், கார்ல் பெர்த் மிகவும் அமைந்த குரலில், "இறைவன்/இயேசு
என்னை அன்பு செய்கின்றார். இதுதான் நான் கண்டுகொண்ட மிக ஆழமான
இறையியல் உண்மை; விவிலியமும் இதையேதான் கூறுகின்றது" என்றார்.
கார்ல் பெர்த் கூறுவது போல, இறைவன் நம்மை முழுமையான அன்பு
செய்கின்றார். அதுதான் விவிலியத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் காணக்கிடக்கின்றது.
இன்றைய முதல் வாசகமும் இறைவனின் பேரன்பை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது.
நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து
நிறைவுசெய்வோம்.
ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்த இறைவன்
இன்றைய முதல் வாசகத்தில், யோசுவா இஸ்ரயேல் மக்களின் எல்லாக் குலங்களையும்
முதியோர்களையும் தலைவர்களையும் நடுவர்களையும் செக்கேமிற்கு அழைத்து
அவர்களிடம் தாங்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு எப்படி வந்தோம்
என்பதைக் குறித்து மிக விரிவாகப் பேசுகின்றார். முதலில் யோசுவா
எதற்கு இஸ்ரயேலில் இருந்த பன்னிரு குலங்களையும் தலைவர்களையும்
செக்கேமிற்கு அழைத்தார் எனத் தெரிந்துகொள்ளவேண்டும். ஆண்டவராகிய
கடவுள் ஆபிரகாமை அழைக்கின்றபோது, அவர் செக்கேமில்தான் இருந்தார்
(தொநூ 11: 27- 12-9) அதனுடைய ஓர் அடையாளமாகக் கூட யோசுவா இஸ்ரயேல்
மக்களை செக்கேமிற்கு அழைத்திருக்கக்கூடும்.
அடுத்ததாக, ஆபிரகாம் கடவுளைத் தேர்ந்து கொள்ளவில்லை. மாறாக ஆண்டவர்தான்
ஆபிரகாமைத் தேர்ந்துதெடுத்து, நம்பிக்கைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக
விளங்கிய அவரிடமிருந்து மிகப்பெரிய இனம் தோன்றுமென்று வாக்களிக்கின்றார்.
எனவே, இறைவன், ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்தது அன்பினாலன்றி வேறு
எதுவுமில்லை.
இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து விடுவித்த இறைவன்
ஆபிரகாமிற்குப் பிறகு ஈசாக்கோடு இருந்த இறைவன், அவர்க்குப்
பின்பு யாக்கோடு இருக்கின்றார். அப்பொழுதான் யாக்கோபு இருக்கும்
இடத்தில் பஞ்சம் ஏற்பட, அண்டிப் பிழைக்கத் தன்னுடைய குடிகளோடு
எகிப்திற்குச் செல்கின்றார். அங்கு கடவுள், யோசேப்பின் வழியாக
எல்லார்க்கும் உணவளிக்கின்றார். உண்மையில் யோசேப்பினால் பஞ்ச
காலத்தில் எகிப்திலிருந்த எல்லாரும் தப்பிப் பிழைத்தார்கள். ஆனால்,
ஆண்டுகள் பல உருண்டோடத் தொடங்கியதும், எகிப்தை ஆண்டுவந்தவர்கள்
அந்த நன்றியை மறந்து இஸ்ரயேல் மக்களை அடிமைகளைப் போன்று நடத்தத்
தொடங்கினார்கள். இதனால்தான் கடவுள் அவர்கள் நடுவில் மோசேயை அனுப்பி,
இஸ்ரயேல் மக்களை அங்கிருந்து மீட்டுக்கொண்டு வருகின்றார். அடிமைகளாக
இருந்தவர்கள் வாழ்வு பெறவேண்டும் என்று இறைவன் விரும்பியதால்,
இங்கேயும் அவருடைய அன்புதான் மிளிர்கின்றது.
இஸ்ரயேல் மக்களை வழிநடத்திய இறைவன்
இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்து வந்த பிறகு இறைவன்
அவர்களைத் தனியாக விட்டுவிடவில்லை. மாறாக, செங்கடலைக் கால் நனையாமல்
கடக்கச் செய்கின்றார்; பாலை நிலத்தில் மன்னாவையும் காடையும் தண்ணீரும்
தந்து அவர்களைப் பராமரிக்கின்றார். இப்படி இஸ்ரயேல் மக்கள்மீதுகொண்ட
தன்னுடைய அன்பினை இறைவன் வெளிப்படுத்துகின்றார்.
இஸ்ரயேல் மக்கட்கு கானான் நாட்டை வழங்கிய இறைவன்
ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களைப் பாலைநிலத்தில்
கூட்டிக்கொண்டு போனபோது, அவர்கள் அவர்க்கு எதிராக
முறுமுறுத்தார்கள்; அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல் இருந்தார்கள்.
அதனால் அவர்களை வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டிற்குள் நுழைய
விடாமல் தடுத்து, யோசுவா தலைமையில் புதிய தலைமுறையை கானான்
நாட்டில் நுழையச் செய்கின்றார். இவ்வாறு அவர் தான் வாக்களித்ததை
இஸ்ரயேல் மக்கட்குக் கொடுத்து, அவர்மீதான தன்னுடைய அன்பினை
வெளிப்படுத்தி, தான் அன்பே உருவானவன் என்பதை அவர்கட்குக்
காட்டுகின்றார்.
இத்தகைய வரலாற்றைத்தான் யோசுவா இஸ்ரயேல் மக்கட்கு எடுத்துச்
சொல்லி, தங்கள்மீது இவ்வளவு அன்புகொண்டிருக்கும் இறைவனுக்கு நம்பிக்கைக்குரியவர்களாய்
இருக்கவேண்டும் என்று கூறுகின்றார். நாமும் நம்மீது பேரன்புகொண்டிருக்கும்
இறைவனுக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்து, அவரது அன்பில்
நிலைத்திருப்போம்.
சிந்தனை
'ஆண்டவர்! ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்' (விப 34:
6) என்கின்றது இறைவார்த்தை. ஆகையால், இரக்கமும் பரிவும் உள்ள
இறைவனை நாம் அன்பு செய்து, அவர்க்கு உகந்த மக்களாய் வாழ்வோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|