Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         15 ஆகஸ்ட் 2019  
                                    பொதுக்காலம் 19ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா
=================================================================================
 திருநாள் திருப்பலி

பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 11: 19ய; 12: 1-6,10ab

விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது. வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது: பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார். அவர் கருவுற்றிருந்தார்; பேறுகால வேதனைப்பட்டுக் கடுந்துயருடன் கதறினார்.

வானில் வேறோர் அடையாளமும் தோன்றியது; இதோ நெருப்பு மயமான பெரிய அரக்கப் பாம்பு ஒன்று காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. அதன் தலைகளில் ஏழு மணி முடிகள் இருந்தன. அது தன் வாலால் விண்மீன்களின் மூன்றில் ஒரு பகுதியை நிலத்தின்மீது இழுத்துப்போட்டது. பேறுகால வேதனையிலிருந்த அப்பெண், பிள்ளை பெற்றவுடன் அதை விழுங்கிவிடுமாறு அரக்கப் பாம்பு அவர்முன் நின்றுகொண்டிருந்தது. எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருந்த ஓர் ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். அக்குழந்தையோ கடவுளிடம் அவரது அரியணை இருந்த இடத்துக்குப் பறித்துச் செல்லப்பெற்றது. அப்பெண் பாலைநிலத்துக்கு ஓடிப்போனார்; அங்கு ஆயிரத்து இருநூற்று அறுபது நாள் அவரைப் பேணுமாறு கடவுள் அவருக்கென ஓர் இடத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

பின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது: "இதோ, மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி, அவருடைய மெசியாவின் அதிகாரம் ஆகிய அனைத்தும் வந்துவிட்டன."

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 45: 9. 10-11. 15 (பல்லவி: 9b)
=================================================================================
 பல்லவி: ஓபீரின் பொன் அணிந்து வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி!

9 அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்; ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி! பல்லவி

10 கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு. 11 உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு! பல்லவி

15 மன்னவரின் மாளிகைக்குள் நுழையும் போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர். பல்லவி

இரண்டாம் வாசகம்

கிறிஸ்துவே முதலில் உயிர்பெற்றார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 20-26

சகோதரர் சகோதரிகளே, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்தது போல ஒரு மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர்.

ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர் பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர் பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர்.

அதன் பின்னர் முடிவு வரும். அப்போது கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்து விட்டு, தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார். எல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும் வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும். சாவே கடைசிப் பகைவன், அதுவும் அழிக்கப்படும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================

அல்லேலூயா, அல்லேலூயா! மரியா விண்ணகத்திற்கு எடுக்கப்பட்டார்; வானகத் தூதரணிகள் மகிழ்கின்றன. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-56


அந்நாள்களில் மரியா புறப்பட்டு யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.

அப்போது அவர் உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்றார்.

அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்: "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.

தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்."

மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
பிரபல பிரஞ்சு எழுத்தாளரான விக்டர் பூகோ என்பவர் சொல்லும் நிகழ்ச்சி இது.

1700 களின் தொடக்கத்தில் பிரஞ்சுப் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த தருணம். ஒரு தாயானவள் தன்னுடைய இரண்டு மகன்களோடு வீட்டிலிருந்து வெளியே தப்பித்து ஓடினாள். கலகக்காரர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க அவள் ஒரு அடர்ந்த காடு வழியாகப் பயணமானாள். இரண்டு மூன்று நாட்களாக உணவு எதுவுமே சாப்பிடக் கிடைக்காததால் அவளும், அவளுடைய இரண்டு மகன்களும் உடல் தளர்ந்து காணப்பட்டார்கள்.

அப்பொழுது அந்த வழியாக வந்த இரண்டு இராணுவ வீரர்கள் அவர்களின் நிலைகண்டு, அவர்களுக்கு தங்களிடம் இருந்த ஒரு பெரிய துண்டை எடுத்துக் கொடுத்தனர். உடனே அந்தத் தாயானவள், ரொட்டித் துண்டை இரண்டாக உடைத்து, அதை தன்னுடைய மகன்களுக்கும் உண்ணக் கொடுத்தார்.

இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு நின்ற அந்த இரண்டு இராணுவ வீரர்களில் ஒருவர், "ஏன் இவள் இப்படிச் செய்கிறாள். தனக்குக் கிடைத்த ரொட்டித் துண்டை, தன்னுடைய பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டு, இவள் சாப்பிடாமல் இருக்கிறாளே, ஒருவேளை இவளுக்குப் பசிக்கவில்லையா?" என்று கேட்டார். அதற்கு இன்னொரு இராணுவ வீரர் அவரிடம், "அவளுக்குப் பசிக்காமல் இருக்காது, தன்னுடைய பிள்ளைகள் இருவரும் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே அவள் இப்படிச் செய்கிறாள்" என்றார்.

ஆம், தாயானவள் எப்போதுமே தன்னுடைய பிள்ளைகள் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டிருப்பவள். அந்த வகையில் பார்க்கும்போது, அன்னை மரியாள் பிள்ளைகளாகிய நம்மீது எப்போதும் அன்பும், கரிசனையும் கொண்டவளாய் விளங்குகிறாள்.

இன்று திருச்சபையானது அன்னை மரியாளின் விண்ணேற்புப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. அன்னை மரியாள் தன்னுடைய மண்ணக வாழ்வை முடித்துகொண்ட உடன், உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்ற உண்மை இவ்விழா எடுத்துரைக்கிறது.

கி.பி.நான்காம் நூற்றாண்டிலிருந்து கீழைத் திருச்சபையில் இவ்விழா டார்மிஷன் என்ற பெயரில் அதாவது 'அன்னை ஆண்டவரில் துயில் கொள்கிறாள்' என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருவதற்கான வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. அதன்பிறகு எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த யோவான் டமாசின் என்பவர், "அன்னை மரியாள் ஆண்டவர் இயேசுவைப் பெற்றெடுப்பதன் பொருட்டு, கருவிலே பாவக்கறையின்றி உதித்ததால், அவள் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்" என்று கூறுவார்.

1568 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த ஐந்தாம் பத்திநாதர் என்பவர் மரியாளின் விண்ணேற்புப் பெருவிழாவை உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார். 1950 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி, மரியாள் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்ற விசுவாசப் பிரகடனமானது இயற்றப்பட்டது. பின்னர் இரண்டாம் வத்திக்கான் சங்கமானது, "மாசற்ற கன்னி மரியாள் மண்ணக வாழ்வை முடித்ததும், உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று கட்டியம் கூறியது (திச 59). இவ்வாறுதான் மரியாளின் விண்ணேற்புப் பெருவிழா உலக முழுவதும் கொண்டாடும் நிலை உருவானது.

இந்த நல்ல நாளில் இவ்விழா நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்க்க அழைக்கப்பட்டிருக்கிறோம். இவ்விழா தரும் முதலாவது சிந்தனை மரியாள் புதிய உடன்படிக்கையின் பேழை என்பதாகும்.

திருவெளிப்பாடு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் 'விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது' என்று வாசிக்கின்றோம். இந்த உடன்படிக்கைப் பேழை என்னவாக இருக்கும் என்று சிந்தித்துப் பார்த்தோமேயானால் அன்னை மரியாள்தான் என்ற உண்மை நமக்கு விளங்கும்.

மரியாளின் பிராத்தனையில் மரியாளை நாம் 'உடன்படிக்கையின் பேழையே' என்றுதான் சொல்கிறோம். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் குறிப்பிடப்படும் உடன்படிக்கைப் பேழையில் மன்னாவும், பத்துக்கட்டளைகள் அடங்கிய இரண்டு கற்பலகைகளும், ஆரோனின் கோலும் இருந்தன. புதிய உடன்படிக்கைப் பேழையான மரியா, உலகிற்கு வாழ்வளிக்கும் உணவும், வார்த்தையுமான இயேசுவை தன்னுடைய உதிரத்தில் தாங்கி இருந்தாள். எப்படி பழைய ஏற்பாட்டுக் காலத்தில் எங்கெல்லாம் உடன்படிக்கைப் பேழை இருந்ததோ, அங்கெல்லாம் மகிழ்ச்சியும், கடவுளின் ஆசிர்வாதமும் இருந்தtது. அதுபோல, புதிய உடன்படிக்கைப் பேழையான மரியாள் இருந்த இடத்தில் கடவுளின் ஆசிரும், மகிழ்ச்சியும் நிறைவாக இருந்தது. எனவே தான் மரியாவை புதிய உடன்படிக்கைப் பேழை என்று சொல்வது மிகவும் பொருத்தமானதாக இருக்கின்றது.

இவ்விழா நமக்குத் தரும் இரண்டாவது சிந்தனை மரியாள் தேவையில் இருப்போருக்கு உதவுபவளாக விளங்குகின்றாள் என்பதாகும். மரியாள் தூய ஆவியினால் கருவுற்று ஆண்டவர் இயேசுவை தன்னுடைய உதிரத்தில் தாங்கி இருக்கிறாள். அப்படிப்பட்ட தருணத்திலும் தன்னுடைய உறவுக்காரப் பெண்மணி எலிசபெத்து கருவுற்றிருக்கிறாள் என்பதைக் கேள்விப்பட்டு, அவளுக்கு ஓடோடிச் சென்று உதவுகிறாள்; அவளுக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்து தருகிறாள்.

மரியாள் எப்போதும் 'தான் ஆண்டவரின் தாய் அதனால் தனக்கு மற்றவர் உதவி செய்யவேண்டும்' என்று நினைக்கவில்லை. அவள் தேவையில் இருப்பவர் யாராக இருந்தாலும், அவர்களுக்கு ஓடோடிச் சென்று உதவுவதுதான் இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தாள். அதனால்தான் கடவுள் அவருக்கு மேலான கொடைகளை வழங்கினார், அவரை உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொண்டார்.

ஆகவே, மரியாளின் விண்ணேற்புப் பெருவிழாவைக் கொண்டாடும் நாமும் அன்னை மரியாவைப் உடன்படிக்கைப் பேழையாக/கடவுளின் பிரசன்னை மற்றவருக்கு தரும் கருவியாக வாழ்வோம். அதோடு மட்டுமல்லாமல் தேவையில் இருப்பவருக்கு ஓடோடிச் சென்று உதவும். அப்போது நாம் அன்னையின் அன்புப் பிள்ளைகளாக மாறுவோம்.
அன்னை தெரசா தன்னுடைய வாழ்வில் நடந்ததாகப் குறிப்பிடும் நிகழ்ச்சி இது.


ஒருமுறை அன்னைத் தெரசா கல்கத்தா வீதிகளில் வலம்வந்தபோது சிறுவன் ஒருவன் கிழிந்த ஆடையோடும், வற்றிய தேகத்தோடும் தரையில் சுருண்டு கிடந்தான். இதைப் பார்த்த அன்னை அவனை தோள்மேல் தூக்கிப் போட்டுக்கொண்டு, தன்னுடைய இல்லத்திற்கு கொண்டு சென்றான். அங்கே அவனுக்கு நல்ல உணவு கொடுத்து, உடையும் கொடுத்து, அங்கேயே தங்கச் சொன்னாள். ஆனால் அவனோ அங்கிருந்து தப்பித்து வெளியே ஓடிப்போனான்.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து அதே சிறுவன் அன்னைத் தெரசா வீதியில் வலம்வந்தபோது தரையில் சுருண்டு படுத்துக்கிடந்தான். உடனே அன்னையானவள் அவனை மீண்டுமாக இல்லத்திற்கு தூக்கிச் வந்து, பராமரித்து வந்தாள். இந்த முறை தன்னுடைய அருட்சகோதரிகளிடம், "ஒருவேளை அவன் எங்காவது ஓடிச்சென்றால், அவன் எங்கே செல்கிறான் என்று பின்தொடர்ந்து பாருங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.

இரண்டு நாட்கள் கழித்து, அவன் வெளியே ஓடத் தொடங்கினான். ஏற்கனவே அன்னை சொன்னதுபோன்று, அருட்சகோதரிகள் அவனைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அப்போது சிறுவன் ஒரு மரத்தடிக்குக்கீழ் போய் நின்றான். அந்த மரத்தடியில் அழுக்கு உடையில், உடலெல்லாம் புண்ணாக இருந்த ஒரு பெண்மணி படுத்துக்கிடந்தாள். அவள் அவனுடைய தாய் போன்று இருந்தாள்.

இந்த வேளையில் சிறுவனைப் பின்தொடர்ந்து வந்த அருட்சகோதரிகள் அவனிடம், "எதற்காக வீட்டை விட்டு, இப்படி அடிக்கடி ஓடிவந்து விடுகிறாய், உனக்கு என்ன ஆயிற்று" என்று கேட்டார்கள். அதற்கு அவன், "எது என்னுடைய வீடு? அதுவா?. நிச்சயமாக அதுவல்ல, என்னுடைய தாய் இருக்கும் இந்த இடம்தான் என்னுடைய வீடு, மகிழ்ச்சி எல்லாம்" என்றான்.

ஆம், மரியா என்னும் விண்ணகத் தாயிருக்கும் இடம்தான் நமது மகிழ்ச்சி, நிம்மதி எல்லாம். ஆகவே, மரியாளின் விண்ணேற்புப் பெருவிழாவில் நாம் தாயோடு இருப்போம், தாயின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மரியன்னையின் விண்ணேற்பு (ஆகஸ்ட் 15)

நிகழ்வு

மரியன்னையின் விண்ணேற்பைக் குறித்து சொல்லப்படும் தொன்மம். மரியா தன்னுடைய கடைசி காலத்தை சியோன் மலையருகிலே இருந்த ஓர் இல்லத்தில் செலவழித்தார். அவருக்கு 60 வயது நடந்துகொண்டிருந்தபோது ஒருநாள் வானதூதர் அவருக்குக் காட்சி கொடுத்து, அவர் எப்படி இறப்பார், இறந்த பிறகு என்ன ஆவார் என்பது குறித்து சொல்லிவிட்டுச் சென்றார். அதுபோன்று ஒரு குறிப்பிட்ட நாளில் மரியாள் இறந்துபோனார். அவருடைய இறப்புச் செய்தியைக் கேள்விப்பட்டு எல்லாச் சீடர்களும் அங்கு வந்தார்கள், தோமாவைத் தவிர. பின்பு அவர்கள் மரியாவைக் கல்லறையில் அடக்கம் செய்துவிட்டுத் திரும்பிவிட்டார்கள். இதற்குள் மரியாவின் இறப்புச் செய்தி தோமாவின் காதுகளை எட்டியது. அவர் சீடர்களிடம் வந்து, "நான் இறந்த மரியன்னையின் உடலைக் கண்டால் ஒழிய எதையும் நம்பமாட்டேன்" என்று சொன்னார். உடனே சீடர்கள் தோமாவை, மரியா அடக்கம் செய்து வைக்கப்பட்ட கல்லறைக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கு கல்லறையைத் திறந்து பார்த்தபோது, மரியாவின் உடல் இல்லாததைக் கண்டு, அவர் உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை நம்பத் தொடங்கினார்கள்.

வரலாற்றுப் பின்னணி

இன்று நாம் கொண்டாடும் மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவிற்கு நீண்ட நெடிய பாரம்பரியங்கள் உண்டு. மரியாவின் விண்ணேற்பைக் குறித்து தொடக்கத்தில் தூய ஜெர்மானுசும், தமஸ்கு நகர யோவானும்தான் பேசத் தொடங்கினார்கள். அவர்கள்தான் மரியாவின் விண்ணேற்பைக் குறித்து மறையுரை ஆற்றினார்கள். மூன்றாம் நூற்றாண்டில் மரியா விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதைக் குறிக்கும் விதமாக மக்கள் விண்ணகம் நோக்கி ஜெபிக்கத் தொடங்கினார்கள். ஐந்தாம் நூற்றாண்டில் இவ்விழா மரியாவின் துயில் என்ற பெயரில் கொண்டாடப் பட்டது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த அதிரியான் என்பவர் மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா என்ற பெயரிலேயே 'மரியாவின் விண்ணேற்பைக் கொண்டாடத் தொடங்கினார்.

இப்படி வளர்ந்து வந்த இவ்விழா 1950 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள் திருத்தந்தை பனிரெண்டாம் பத்திநாதர் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. அவர் எழுதிய Magnificatissimus Deus' என்னும் திருமடலில் அதனை இவ்வாறு உறுதி செய்தார்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தினாலும், தூய திருதூதர்களான பேதுரு, பவுலின் அதிகாரத்தினாலும், நமது தனிப்பட்ட அதிகாரத்தினாலும் நாம் எடுத்தியம்பி, அறிவித்து கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட மறைகோட்பாடாக வரையறுப்பது என்னவென்றால், அமல உற்பவியாகிய கடவுளின் தாய், எப்பொழுதும் கன்னியான மரியா தனது மண்ணக வாழ்க்கைப் பயணத்தை முடித்தபின், விண்ணக மகிமைக்கு ஆன்மாவோடும் உடலோடும் எடுத்துக்கொள்ளப்பட்டார். எனவே, யாராவது வரையறுக்கப்பட்ட இதை மறுத்தாலோ, சந்தேகித்தாலோ, அவர் இறை விசுவாசத்திலிருந்தும் கத்தோலிக்க விசுவாசத்திலிருந்தும் பிரண்டு விட்டார் என்று அறிந்து கொள்ளட்டும்". திருத்தந்தை அவர்கள் மரியாவின் விண்ணேற்பை ஒரு விசுவாசப் பிரகடனமாக அறிவித்ததில் இருந்து இன்றுவரை மரியாவின் விண்ணேற்பை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் நாள் கொண்டாடி மகிழ்கின்றோம்.

விவிலியப் பின்னணி

மரியா விண்ணகத்திற்கு உடலோடும் ஆன்மாவோடும் எடுத்துக்கொள்ளப்பட்டது என்பது, அவர் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்ததால், கடவுள் அவருக்குக் கொடுத்த மிகப்பெரிய கொடை என நாம் புரிந்துகொள்ளலாம்.

கடவுளால் படைக்கப்பட்ட மனிதனுடைய உடலும் அவனுடைய ஆன்மாவும் தூயது, மாசற்றது (தொநூ 2: 1-7) அப்படிப்பட்டதை மனிதன் தன்னுடைய தவற்றால் தூய்மையற்றதாக, மாசு உள்ளதாக மாற்றிக்கொண்டான். எனவே பாவத்தின் சம்பளம் மரணம் (உரோ 5:12) என்பதைப் போன்று மரணமில்லா பெருவாழ்வைக் கொடையாகப் பெற்றிருந்த மனிதன், தான் செய்த பாவத்தினால் அக்கொடையை இழந்தான்; மரணத்தைத் தழுவினான். இது ஒரு பக்கம் இருந்தாலும் பாவக்கறையோடு இந்த மண்ணுலகத்தில் பிறந்தாலும், கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்தனால் மரணத்தைத் தழுவாமல் விண்ணகத்திற்கு இருவர் எடுத்துக்கொள்ளப்பட்டனர். அவர்கள் வேறுயாருமல்ல ஏனோக்கும், இறைவாக்கினர் எலியாவுமே ஆவார் (தொநூ 5:24, 2 அர 2:1). ஏனோக்கு கடவுளோடு நடந்தார். அதனால் அவர் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். இறைவாக்கினர் எலியா கடவுளுக்கு உகந்த இறைவாக்கினராய் விளங்கினார். அதனால் அவரும் நெருப்புத் தேரோடு விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.

மரியாவைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்போது அவர் கருவிலே பாவக்கறையில்லாமல் பிறந்தாள், ஆண்டவரின் தூதரால் 'அருள்மிகப் பெற்றவளே' என அழைக்கப்பட்டாள் (லூக் 1:28). அது மட்டுமல்லாமல் ஆண்டவர் இயேசுவையே தன்னுடைய உதிரத்தில் தாங்கிடும் பேறுபெற்றாள், இறைவனுக்கு உகந்த வாழ்ந்தாள். இத்தகைய பேற்றினால் மரியாள் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என நாம் உறுதியாகச் சொல்லலாம். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், "நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர்" (யோவா 12:26). மரியா தலை சிறந்த சீடத்தியாக வாழ்ந்ததனால் அவர் இயேசு இருக்கும் விண்ணக வீட்டில் இருப்பார் என நாம் உறுதிபடச் சொல்லலாம்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

மரியன்னையின் விண்ணேற்புப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் பாடம் என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. கடவுளுக்கு உகந்த வாழ்ந்த வாழ்தல்

மரியாவின் விண்ணேற்பு என்பது அவர் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்ததனால் கிடைத்த மிகப்பெரிய பேறு என்று சொன்னால் அது மிகையாகாது. மரியா தன்னுடைய வாழ்வை கடவுளுக்கு உகந்த தூய, மாசற்ற பலிபொருளாகத் தந்தார்; தாழ்ச்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கினார்; தேவையில் இருந்த மக்கள்மீது அன்பும் அக்கறையும் கொண்டு அவர்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்தார்; எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனுடைய திருவுளத்தை இறுதி வரைக்கும் கடைப்பிடித்து வாழ்ந்தார்; அதற்காக பல்வேறு இன்னல்களையும் இடையூறுகளையும் சந்தித்தார். இத்தகையதோர் வாழ்க்கை வாழ்ந்ததால்தான் மரியாவை இறைவன் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொண்டார். நாம் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழும்போது இறைவன் அளிக்கும் விண்ணக மகிமையைப் பெறுவோம் என்பது உறுதி.

லேவியர் புத்தகம் 19:2 ல் வாசிக்கின்றோம், "தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமான நான் தூயவராக இருக்கின்றேன்" என்று. ஆம், கடவுளின் மக்களாகிய நாம் அனைவரும் கடவுளைப் போன்று தூயவராக இருக்கும்போது அவர் மரியாவுக்கு அளித்த அதே பேற்றினை நமக்கும் அளிப்பார் என்பது வெள்ளிடை மலை. ஆகவே, நாம் ஒவ்வொருவரும் தூய மாசற்ற வாழ்க்கை வாழ முற்படுவோம்.

2. நம் அன்னையருக்கு மதிப்பளிப்போம்

மரி(அன்னை)க்கு விழா எடுத்து அவரை மகிமைப்படுத்தும் இந்த நாளில் நம்மோடு வாழும் நம் அன்னையருக்கும் நாம் மதிப்பும் மரியாதையும் செலுத்துவோம். ஏனென்றால் பல நேரங்களில் நாம், பல்வேறு இடங்களில் உள்ள அன்னையின் ஆலயங்களுக்குச் சென்று, அவரை வழிபடுகிறோம். அவர் முன்பாக உருகி நிற்கின்றோம். ஆனால் நம் அன்னையரை நாம் சரியாகக் கவனிக்கத் தவறிவிடுகின்றோம். இது ஒருவிதத்தில் வெளிவேடம்தான். மரியன்னையின் மீது அன்பு வைத்திற்கும் நாம், நம்மைப் பெற்றெடுத்த அன்னையின்மீது அன்புகொண்டு அவருக்கு தக்க உதவிகளைச் செய்யவேண்டும். அப்போதுதான் நாம் அன்னையின் பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்ளமுடியும்.

இன்றைக்கு நாம் நம்முடைய அன்னையரை எப்படி பார்த்துக்கொள்கிறோம் என்பதைச் சுட்டிகாட்ட வேடிக்கையாகச் சொல்லப்படும் நிகழ்வு.

அன்று அன்னையர் தினம்! தங்கள் அன்னையை எங்கேனும் வெளியே சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று மகிழ்விக்கவேண்டும் என்று விரும்பிய அவள் பிள்ளைகள், குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சுற்றுலா செல்வதற்கு ஏற்றவகையில் ஓர் வாகனத்தை ஏற்பாடு செய்தார்கள். சுற்றுலாவுக்கு எடுத்துச் செல்லவேண்டிய தின்பண்டங்கள் தயாரிப்பதில் அவர்களின் அன்னை மிகவும் மும்முரமாக ஈடுபட்டிருக்கப் (பாவம்! அந்தத் தாய்க்கு அன்றுகூட ஓய்வு இல்லை!) பிள்ளைகள் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு வாகனத்தில் இடம்பிடித்து அமர்ந்தார்கள். கடைசியில் மிஞ்சியிருந்ததோ ஒரே ஓர் இடம்! ஆனால் அங்கே அமர்வதற்காக எஞ்சியிருந்ததோ இருவர்!

ஒருவர் அந்த அன்னையின் கடைசிப் பிள்ளையான மரியான் எனும் சிறுவன், இன்னொருவர் 'விழா நாயகியான' அந்த அன்னை. இருவரில் யாரை அழைத்துச் செல்வது என்று புரியாமல் வண்டியில் அமர்ந்திருந்தோர் விழிக்க, சுற்றுலாச் செல்லவேண்டும் என்று மிகுந்த ஆசையோடு புத்தாடைகளையெல்லாம் அணிந்துகொண்டு வண்டியில் ஏறத் துடித்துக் கொண்டிருந்த அந்தக் கடைக்குட்டிப் பையன் மரியான், தன் அன்னையின் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தான். அந்தப் பார்வையின் பொருளை உடனே புரிந்துகொண்டுவிட்டாள் அன்புவடிவான அந்த அன்னை!. உடனே அவள், "நான் வயதானவள்; பிறிதொரு சமயம் சுற்றுலாவுக்கு வருகிறேன். மரியானை அழைத்துச் செல்லுங்கள்! அவன் மகிழ்ச்சியாக இருக்கட்டும்!" என்று அன்போடு கூறித் தன் மகனை வாகனத்தில் ஏற்றி அமரச் செய்தாள். வாகனத்தில் அமர்ந்திருந்த அனைவருக்கும் அந்த அன்னை அன்போடு கையசைத்து விடைகொடுக்க, அவளை ஏற்றிக்கொள்ளாமலேயே அந்த வாகனம் மற்றவர்களோடு சுற்றுலாவுக்குப் புறப்பட்டுச் சென்றது.

அன்னைக்கு விழா எடுத்த நாளில் அன்னையையே மறந்துபோனது வேதனையிலும் வேதனையான ஒரு செயல். பல நேரங்களில் நாமும் இதே தவற்றைத்தான் செய்துகொண்டிருக்கிறோம்.

ஆகவே, மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவான இன்று மரியன்னைக்கு மகிமை செலுத்துவோம், அதே நேரங்களில் நம்முடைய அன்னையருக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் செலுத்துவோம். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
மரியாளின் விண்ணேற்பு (15 ஆகஸ்ட் 2019) திருநாள்

'தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்.
தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையவராக்கி இருக்கிறார்.
தமக்கு ஏற்புடையரானோரய்த் தம் மாட்சியில் பங்குபெறச் செய்தார்.' (உரோ 8:30)

குருக்களின் மாலைச் செபத்தில் மேற்காணும் இறைவார்த்தைகளே வாசகமாக கொடுக்கப்பட்டுள்ளன.

தன்னுடைய கணவரை வாகன விபத்தில் இழந்த இளம்பெண் ஒருத்தி, ஒரு வாரமாக வேலைக்குச் சென்று, கூலி வேலை செய்து, தன்னுடைய மூன்று குழந்தைகளைக் காப்பாற்ற வழி தெரியாமல், தன் கணவனின் இழப்பையும் காணாமல் தன் கணவனின் கல்லறைக்குச் சென்று தன்னையே தீக்கு இரையாக்கினாள் என்ற செய்தியை இன்று காலை வாசித்தேன்.

இந்தப் பெண் செய்தது நியாயமா? நியாமில்லையா? என்று சமூக வலைதளங்களில் நிறையப் பேர் வாதாடிக்கொண்டிருந்தனர்.

என்னதான் நாம் வாதாடினாலும் இப்பெண் நமக்குத் திரும்பக் கிடைக்கப்போவதில்லை.

இன்று ஒரு பெண்ணின் விண்ணேற்பு பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

ஒரு பெண்ணால் அடைக்கப்பட்ட விண்ணகத்தின் வாயில்களை இன்னொரு பெண்ணால் திறக்கக் கடவுள் திருவுளம் கொண்டார் என்கிறது இன்றைய அழைப்புப் பல்லவி.

தீக்கிரையான அந்தப் பெண் அந்த முடிவை எடுக்க என்ன காரணம்?

தன்னையும் தாண்டித் தன் வாழ்க்கையை அவளால் ஏன் பார்க்க முடியவில்லை?

மரியாளின் விண்ணேற்பு தரும் புரிதல் இதுதான்: கொஞ்சம் விரிவாக அல்லது அகலமாகப் பார்ப்பது.

'எல்லாரும் இறக்கத்தானே போகிறோம். சும்மா இருந்தா என்ன?' என்று கேட்பதும் தவறு.

'சும்மாதான் இருக்கிறோம். இறந்தா என்ன?' என்று கேட்பதும் தவறு.

இப்போது இருக்கின்ற நிலையைவிட இன்னொரு நிலை நன்றாக இருக்கும் என்ற எதிர்நோக்கே நம்மை உந்தித் தள்ளுகிறது. விண்ணகம் பற்றிய எதிர்பார்ப்பே நம்மை மண்ணகத்தில் நன்றாக வாழச் செய்கிறது.

ஆக, நாளையைப் பற்றிய எதிர்நோக்கு உள்ளவரே வாழ முடியும். அந்த எதிர்நோக்கு நேர்முகமாக இருந்தால்தான் ஒருவர் வெற்றியாளராக முடியும்.

மரியாள் தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்வை நேர்முகமாகப் பார்த்தார்.

சத்திரத்தில் இடமில்லாத நிலையில் இந்த உலகமே தன் வீடு என்று பார்த்தார்.

திராட்சை இரசம் தீர்ந்து போன வெற்றுக் கற்சாடிகளை திராட்சை இரசம் ததும்பும் குடுவைகளாகப் பார்த்தார்.

கல்வாரியில் தன் மகனுடைய இறப்பில் ஒட்டுமொத்த மனுக்குலத்தின் மீட்பைப் பார்த்தார்.

நேர்முகமாகப் பார்த்தலும், எதிர்நோக்குதலும் வாழ்வை நீட்டிக்கின்றன.

ஆங்கிலேயர்கள் இல்லாத ஒரு நாட்டை நம் முன்னோர்கள் எதிர்நோக்கியதால்தான் விடுதலைக்காக அவர்களால் போராட முடிந்தது.

கொஞ்சம் நேர்முகப்பார்வை. இன்னும் கொஞ்சம் எதிர்நோக்கு. நிறைய பொறுமை.

இதுவே விடுதலை. இதுவே விண்ணேற்பு.

Rev. Fr. Yesu Karunanidhi

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா 15 08 2019

விண்ணேற்பும் விடுதலையும்


'மனிதன் கட்டின்மையோடு பிறக்கிறான். பிறந்தவுடன் எல்லாக் கட்டுக்களுக்கும் ஆளாகிறான்' என்று 'சமூக ஒப்பந்தம்' என்னும் தன் நூலைத் தொடங்குகிறார் ரூசோ. மனிதர்கள் தங்கள் சுதந்திரத்தை இந்தச் சமூகத்திற்கு விற்றுத்தான் தங்கள் வாழ்வை நகர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பது இவரின் எண்ணம்.

நான் பிறந்தவுடன் - என் குடும்பம், என் நாடு, என் மொழி, என் சமயம், என் இனம், என் கலாச்சாரம், என் உணவுப் பழக்கம், என் ஆதார், என் கடவுச்சீட்டு, என் பான் எண், என் வாகன எண், என் ஓட்டுரிம எண் என என்னைக் கேட்காமலே நான் கட்டுக்களால் கட்டப்படுகிறேன். நான் விரும்பியும் இந்தக் கட்டுக்களை என்னால் உடைக்க முடியாது. உடைக்க நினைத்தாலும் நான் ஒரு கட்டிலிருந்து இன்னொரு கட்டிற்கு மாற்றப்படுவேன். 'இந்தியன்' என்ற என் தேசிய அடையாளம் பிடிக்கவில்லை என்று நான் இத்தாலியில் குடியேறினால் நான் 'இத்தாலியன்' என்ற கட்டைக் கட்டியாக வேண்டும். கட்டின்மை சாத்தியமே அன்று.

அப்படி என்றால், கட்டுக்களோடு இருக்கும், இயங்கும், இறக்கும் எனக்கு கட்டின்மையே கிடையாதா?

உண்டு. கட்டுக்களுக்குள் கட்டின்மை.

அதாவது, நான் ஒரு மாடு என வைத்துக்கொள்வோம். அந்த மாட்டை ஒரு கயிறு கட்டி கம்பத்தோடு இணைத்திருக்கிறது. அந்தக் கயிறு தரும் கட்டின்மைக்குள் நான் இரை தேடிக்கொள்ளலாம். இன்பம் தேடிக்கொள்ளலாம். அவ்வளவுதான்.

ஆனால், இந்தக் கட்டிற்கு நான் என்னையே சரணாகதி ஆக்க வேண்டும்.

நாளை நாம் கொண்டாடுகின்ற விண்ணேற்படைந்த அன்னை மரியாள் சொல்லும் வாழ்க்கைப் பாடமும் இதுதான்.

நாசரேத்தில் பிறந்தவர், யூதர், பெண், திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றவர் என இவருக்கு நிறைய கட்டுக்கள் இருந்தாலும், அந்தக் கட்டுக்களுக்குள் இறைத்திட்டத்திற்கு - கட்டுக்கள் இல்லாதவர்க்கு - 'ஆம்' என்று சொன்னதால் கட்டுக்களை வென்றவர் ஆகிறார். பாவம் இல்லாத அவருடைய உடலை இறப்பும் தன் கட்டுக்குள் வைத்திருக்கவில்லை.

ஆங்கிலேயரிடமிருந்து 72 ஆண்டுகளுக்கு முன் நாம் கட்டின்மை அடைந்தோம். ஆனால், இன்று நான் என்னையே அநீதி என்னும் கட்டுக்களுக்குக் கையளிக்காமல், இக்கட்டின்மை தரும் வாய்ப்பைப் பயன்படுத்தி என் கட்டுக்களை நீக்கி, பிறர் கட்டுக்களைகத் தளர்த்த உதவினால், என் விடுதலையும் விண்ணேற்பே.

அனைவருக்கும் விடுதலை மற்றும் விண்ணேற்பு பெருவிழா வாழ்த்துக்கள்.

- Rev. Fr. Yesu Karunanidhi
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!