Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         10 ஆகஸ்ட் 2019  
                                    பொதுக்காலம் 18ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
உன் முழு இதயத்தோடு உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 6: 4-13


மோசே மக்களை நோக்கிக் கூறியது: இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக! இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும். நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின்போதும், நீ படுக்கும்போதும், எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு. உன் கையில் அடையாளமாக அவற்றைக் கட்டிக்கொள். உன் கண்களுக்கிடையே அடையாளப் பட்டமாக அவை இருக்கட்டும். உன் வீட்டின் கதவு நிலைகளிலும் நுழைவாயில்களிலும் அவற்றை எழுது.

மேலும், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு எனும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள் உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புகச் செய்யும்போதும், நீ கட்டி எழுப்பாத, பரந்த வசதியான நகர்களையும், நீ நிரப்பாத எல்லாச் செல்வங்களால் நிறைந்த வீடுகளையும், நீ வெட்டாத பாறைக் கிணறுகளையும், நீ நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும் அவர் உனக்குக் கொடுக்கும்போதும், நீ உண்டு நிறைவுகொள்ளும்போதும், அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியே கூட்டிவந்த ஆண்டவரை மறந்துவிடாதபடி கவனமாய் இரு. உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நட! அவருக்குப் பணிந்து அவர் பெயராலே ஆணையிடு!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 18: 1-2a, 2bc-3, 46,50 (பல்லவி: 1)
=================================================================================
பல்லவி: என் ஆற்றலாகிய ஆண்டவரே, உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன். 1 என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூர்கின்றேன். 2ய ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர். பல்லவி

2bc என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண். 3 போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். பல்லவி

46 ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப்பெறுவாராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக! 50 தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்; தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
2 திமொ 1: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 14-20

அக்காலத்தில் இயேசுவும் சீடர்களும் மக்கள் கூட்டத்தினரிடம் வந்தபோது ஒருவர் இயேசுவை அணுகி அவர் முன் முழந்தாள்படியிட்டு, "ஐயா, என் மகனுக்கு இரங்கும்; அவன் வலிப்பு நோயால் பெரிதும் துன்புறுகிறான். அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் விழுகிறான். உம் சீடர்களிடம் அவனைக் கொண்டு வந்தேன்; அவனைக் குணமாக்க அவர்களால் முடியவில்லை" என்றார்.

அதற்கு இயேசு, "நம்பிக்கையற்ற சீரழிந்த தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்" என்று கூறினார்.

கொண்டு வந்ததும் இயேசு அப்பேயைக் கடிந்துகொள்ளவே, அது அவனை விட்டு வெளியேறியது. அந்நேரமே சிறுவன் குணமடைந்தான்.

பின்பு சீடர்கள் தனிமையாக இயேசுவை அணுகி வந்து, "அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?" என்று கேட்டார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து, "உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம். உங்களுக்கு கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து 'இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ' எனக் கூறினால், அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை:

முடியவில்லை என்று ஒரு கிறிஸ்தவன் சொல்லலாமா?

முடிந்தால் முடியும் என்றும், முடியவில்லையென்றால் முடியவில்லையென்று சொல்லுவது தான் சிறப்புடையது என்று உலகம் சொல்லுகின்றது. இது உண்மைத் தான்.

ஆனால் ஒரு கிறிஸ்தவன் சொல்ல வேண்டியது, கிறிஸ்துவின் துணை கொண்டு என்னால் எல்லாம் செய்ய முடியும் என்று பவுல் அடிகளாரைப் போல சொல்லிட வேண்டும்.

முடியவில்லை என்பது முட்டாள்களின் அகராதியில் மட்டும் தான் உண்டு என்பார் அறிஞர்.

என்னைவிட என் சீடர்கள் பல நல்ல வல்ல செயல்களைச் செய்வார்கள் என்றார் இயேசு. யோ 14: 12

அப்பா எட்டு அடி பாய்ந்தா, மகன் 16 அடி பாய்வார் என்பது இதுதானோ?

அவர் நம்மோடு இருக்கும் போது, நாம் அவரோடு இருக்கும் போது எல்லாம் நம்மால் முடியும்.

இறைவாக்கினர்கள், சீடர்கள் அற்புதங்களை செய்தார்கள், இதனை விசுவசிக்கும் நாம் நம்மாலும் முடியும் என்று நம்புவோம்.

கேட்போருக்கு என் தந்தை இன்னும் அதிகமாக செய்வார் என்று சொன்னவரோடு நாம் இருக்கும் போது சாத்தியமே.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!