Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         09 ஆகஸ்ட் 2019  
                                    பொதுக்காலம் 18ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 

=================================================================================
உங்கள் மூதாதையர்க்கு அவர் அன்பு காட்டியதால், அவர்களுடைய வழிமரபினரைத் தேர்ந்துகொண்டார்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 32-40

மோசே மக்களை நோக்கிக் கூறியது: உங்களுக்கு முற்பட்ட பண்டைக் காலத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கடவுள், உலகில் மனிதனைப் படைத்த நாள் முதல், வானத்தின் ஒருமுனை முதல் மறுமுனை வரைக்கும் எங்காவது இத்தகைய மாபெரும் செயல் நடந்ததுண்டோ? அல்லது இதுபோல் கேள்விப் பட்டதுண்டா? நெருப்பின் நடுவிலிருந்து பேசிய கடவுளின் குரலொலியைக் கேட்டும், நீங்கள் உயிர்வாழ்ந்தது போல் வேறு எந்த மக்களினமாவது வாழ்ந்ததுண்டா? அல்லது, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் எகிப்தில் உங்கள் கண்முன்னே உங்களுக்குச் செய்த அனைத்தையும் போல சோதனைகள், அடையாளங்கள், அருஞ்செயல்கள், போர், வலிய கரம், ஓங்கிய புயம் மற்றும் அச்சுறுத்தும் நிகழ்ச்சிகள் மூலம் ஓர் இனத்தை வேறொரு நாட்டினின்று தமக்கென உரிமையாக்கிக் கொள்ள முன்வரும் கடவுள் உண்டா? `ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்' என நீங்கள் அறிந்துகொள்ளும்படியாக இவை உங்கள் கண்முன் நிறைவேற்றப் பட்டன. நீங்கள் கற்றுக்கொள்ளும்படி வானினின்று வந்த அவர்தம் குரலை நீங்கள் கேட்குமாறு செய்தார். தமது பெரும் நெருப்பை மண்ணுலகில் நீங்கள் காணச் செய்தார்.

அந்நெருப்பினின்று வந்த அவரது வாக்கை நீங்கள் கேட்டீர்கள். உங்கள் மூதாதையர்க்கு அவர் அன்பு காட்டியதால், அவர்களுக்குப் பின், அவர்களுடைய வழிமரபினரைத் தேர்ந்துகொண்டார். எனவே அவரே முன்நின்று தமது பேராற்றலுடன் உங்களை எகிப்திலிருந்து கூட்டி வந்தார். உங்களை விட ஆற்றலும் வலிமையும் மிகுந்த வேற்றினத்தாரை உங்கள் முன்னின்று துரத்தவும், உங்களை அவர்களது நாட்டிற்குள் இட்டுச்சென்று இன்றும் உள்ளது போல், அதை உங்களது உரிமைச் சொத்தாகத் தரவுமே கூட்டி வந்தார்.

'மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்' என இன்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 77: 11-12. 13-14. 15,20 (பல்லவி: 11a)
=================================================================================


பல்லவி: ஆண்டவரே, உம் செயல்களை என் நினைவுக்குக் கொண்டு வருவேன்.

11 ஆண்டவரே, உம் செயல்களை என் நினைவுக்குக் கொண்டு வருவேன்; முற்காலத்தில் நீர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துப் பார்ப்பேன். 12 உம் செயல்கள் அனைத்தையும் பற்றித் தியானிப்பேன்! உம் வலிமைமிகு செயல்களைப் பற்றிச் சிந்திப்பேன். பல்லவி

13 கடவுளே, உமது வழி தூய்மையானது! மாபெரும் நம் கடவுளுக்கு நிகரான இறைவன் யார்! 14 அரியன செய்யும் இறைவன் நீர் ஒருவரே! மக்களினங்களிடையே உமது ஆற்றலை விளங்கச் செய்தவரும் நீரே. பல்லவி

15 யாக்கோபு, யோசேப்பு என்போரின் புதல்வரான உம் மக்களை நீர் உமது புயத்தால் மீட்டுக்கொண்டீர். 20 மோசே, ஆரோன் ஆகியோரைக் கொண்டு உம் மக்களை மந்தையென அழைத்துச் சென்றீர். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 5: 10

அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப் படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஒருவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 24-28

அக்காலத்தில் இயேசு தம் சீடரைப் பார்த்து, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவர்.

மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கு ஏற்பக் கைம்மாறு அளிப்பார்.

நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை:

ஆதாயம் தேடும் இந்த உலகம், பிள்ளைகளிடம், பெற்றவர்களிடம், என்று எல்லாரிடமும் ஆதாயம் தேடி அலைந்து வாழ்வை தொலைத்து நிற்கின்றது.

என்ன கிடைக்கும்? என்றே கேட்டு அலையும் இந்த உலகம் வாழ்வை தொலைத்து நிற்பதை உணர மறுக்கின்றது.

கொடுப்பதில் நிறைவு காணாத இந்த உலகம் பெறுவதில் மாத்திரமே கவனம் செலுத்துகின்றது.

எல்லாவகையான பேராசைக்கும் இடம் கொடுத்து, வாழ்வை இழந்து பரிதாபமாக நிற்கும் உலகமாக மாறி வருகின்றது.

லூக்கா பதிவு செய்துள்ளார்: மிகுதியான செல்வத்தால் வாழ்வு வராது. எவ்வகை பேராசைக்கும் இடம் கொடாதீர்கள்.

கிறிஸ்துவை ஆதாயப்படுத்த எல்லா உலக காரியங்களையும் குப்பையென கருதிய பவுல் அடிகளாரிடம் பாடம் கற்போம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 மத்தேயு 16: 24-28

தன் வாழ்வையே இழப்பாரெனில்...

நிகழ்வு

கிராமப்புறப் பங்கு ஒன்றில் பங்குத்தந்தையாக இருந்த குருவானவர் ஒருவர், ஒவ்வொருநாளும் மாலைநேரத்தில் அக்கிராமச் சாலை வழியாக நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அவ்வாறு அவர் நடைபயற்சியை மேற்கொள்கின்றபோதும், குதிரையோடு இருக்கின்ற ஒருவனைப் பார்ப்பார். அவன் எப்போதும் தன்னுடைய குதிரையைக் குளிப்பாட்டுவதும் பாராமரிப்பதுமாக இருப்பான். இது குருவானவர்க்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

ஒருநாள் குருவானவர் அந்த குதிரைக்காரனிடம், "தம்பி! நான் இந்தச் சாலை வழியாகப் பல மாதங்களாக நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றேன். எப்போதெல்லாம் நான் இந்த வழியாக வருகின்றேனோ, அப்போதெல்லாம் நீ உன்னுடைய குதிரையைக் குளிப்பாட்டுவதும் அதைப் பராமரிப்பதுமாக இருக்கின்றாயே... ஒருநாளைக்கு இந்தக் குதிரையைப் பராமரிப்பதற்காக எவ்வளவு மணிநேரம் செலவழிப்பாய்?" என்றார். அவன் மிகவும் சாதாரணமாக, "மூன்றிலிருந்து நான்கு மணிநேரம் செலவழிப்பேன்" என்றான்.

"நன்று. இப்பொழுது நான் உன்னிடம் இன்னொரு கேள்வியைக் கேட்கப் போகிறேன்... உன்னிடமுள்ள இந்தக் குதிரையைப் பராமரிப்பதற்காக ஒருநாளைக்கு மூன்றிலிருந்து நான்கு மணிநேரம் செலவழிப்பதாகச் சொல்கின்றாயே! உன்னுடைய ஆன்மாவைப் பராமரிப்பதற்காக ஒரு நாளுக்கு நீ எவ்வளவு மணிநேரம் செலவழிக்கின்றாய்?" என்றார். குருவானவர் கேட்ட இந்தக் கேள்வி அவன், "ஆன்மாவா...? அப்படியென்றால் என்ன..?" என்பது போல் அவரைப் பார்த்தான். குருவானவர்க்கு, "ஏன்தான் இவனிடம் இப்படியொரு கேள்வி கேட்டோமோ' என்பது போல் ஆகிவிட்டது. அதனால் அவர் அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்றார்.

இந்த நிகழ்வில் வருகின்ற குதிரைக்காரனைப் போன்றுதான் பலரும் வேலை வேலையென அலைந்து பணம், பொருள், அதிகாரம், அந்தஸ்து என எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்ட பிறகு இறுதியில் வாழ்வை ஆன்மாவை இழந்து நிற்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில் நம்முடைய வாழ்வை அல்லது ஆன்மாவைக் காத்துக் கொள்வதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்பது மிகவும் நல்லது.

ஆன்மா என்ன அவ்வளவு முக்கியமானதா?

நற்செய்தியில் இயேசு, சீடத்துவ வாழ்வின் முக்கியத்துவத்தைக் குறித்துப் பேசுகின்றபோது, "மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே ஆன்மாவையே இழப்பாரெனில் அவர்க்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?" என்கின்றார். இயேசு சொல்வதுபோல் ஆன்மா என்ன அவ்வளவு பெரிதா? சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒரு கேள்வியாக இருக்கின்றது.

படைப்பின் தொடக்கத்தில், ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, அவன் உயிர்/ஆன்மா உள்ளவன் ஆவான் (தொநூ 2:7). இந்த இறைவார்த்தை உயிர் வாழ்வு ஆன்மா - என்பது ஆண்டவர் தந்தது என்ற உண்மையை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது. மேலும், அதை கடவுளைத் தவிர யாராலும் கொல்லவோ (மத் 10: 28) மீட்கவோ (திபா 49: 6-8) முடியாதது என்பதையும் இறைவார்த்தை எடுத்துச் சொல்கின்றது. அந்தளவுக்கு வாழ்வு உயிர்- ஆன்மா முக்கியமானதாக இருக்கின்றது. அதனால்தான் இயேசு, ஒருவன் எல்லாவற்றையும் தனதாக்கிக் கொண்டாலும் வாழ்வை ஆன்மாவை இழந்துவிட்டால், அதனால் வரும் பயன் என்ன? என்கின்றார்.

இயேசு சொல்லக்கூடிய அறிவற்ற செல்வந்தன் உவமையில் வரும் அந்த செல்வந்தனிடம் எல்லாமும் இருந்தது. குறிப்பாகக் களஞ்சியம் நிறையத் தானியம் இருந்தது. ஆனால், அவனிடம் வாழ்வு இல்லாததால் எல்லாமும் பறிபோனது. அதனால்தான் இயேசு ஆன்மா மிகவும் இன்றியமையாதது என்கின்றார்.

வாழ்வை ஆன்மாவைக் காத்துக் கொள்ள என்ன செய்வது?

வாழ்வு - ஆன்மா எந்தளவுக்கு முக்கியமானது என்பதைச் சிந்தித்துப் பார்த்த நாம், இப்பொழுது வாழ்வைக் காத்துக்கொள்ள என்ன செய்வது? என்று சிந்தித்துப் பார்ப்போம். வாழ்வைக் காத்துக் கொள்வதற்கு இயேசுவே நமக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றார். எப்படியென்றால், பாலைநிலத்தில் சாத்தான் இயேசுவிடம் வந்து, "நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்" என்று சொல்லும்போது, இயேசு அதை வணங்காமல், "அகன்று போ, சாத்தானே" என்று சொல்வார் (மத் 4: 9-10). இங்கு இயேசு சாத்தானின் சோதனையில் விழுந்து, தன்னுடைய வாழ்வையே இழந்திருக்கலாம். ஆனால், அவர் சாத்தானின் சோதனையை முறியடித்து, வாழ்வைக் காத்துக் கொண்டார். அப்படியானால், நாம் இயேசுவைப் போன்று உலக மாயையில் அல்லது சாத்தானின் சோதனையில் விழுந்து விடாமல், தன்னலம் துறந்து, சிலுவையைத் தூக்கிக் கொண்டு அவரைப் பின்தொடர்ந்து சென்றால், வாழ்வைக் காத்துக் கொள்வோம் என்பது உறுதி.

சிந்தனை

'என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகின்றேன்' (பிலி 3: 8) என்பார் பவுல். ஆகையால், நாம் கிறிஸ்துவை வாழ்வை ஆதாயமாக்க மற்ற எல்லாவற்றையும் இழக்கத் துணிவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
இணைச்சட்டம் 4: 32-40

"எல்லாம் நலமாகும்"


நிகழ்வு

மூன்றாம் சிலுவைப் போர் நடந்துகொண்டிருந்த சமயம், கிறிஸ்தவர்களுடைய படையை பின்னாலிருந்து வழிநடத்திக் கொண்டிருந்தவர் ரிச்சர்ட் என்ற அரசர். அப்படையை முன்னாலிருந்து வழிநடத்திக் கொண்டிருந்தவர் பிரான்ஸ் நாட்டு அரசர்.

இதற்கிடையில் ஒருநாள் படையைப் பின்னாலிருந்து வழிநடத்திக் கொண்டிருந்த ரிச்சர்ட் அரசர்க்கு, 'நான் ஏன் இப்படையை முன்னாலிருந்து வழிநடத்தக் கூடாது' என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே அவர் பின்னாலிருந்து முன்னால் சென்று அங்கிருந்த பிரான்ஸ் நாட்டு அரசரிடம், "இனிமேல் நான் இந்தப் படையை முன்னாலிருந்து வழிநடத்துகிறேன்... நீங்கள் பின்னாலிலிருந்து வழிநடத்துகின்றீர்களா?" என்று கேட்டார்.

இதைப் பக்கத்திலிருந்து கேட்டுக்கொண்டிருந்த தொமினிக் என்ற மடாதிபதி, "நீங்கள் மட்டும் இப்படையை முன்னாலிருந்து வழிநடத்தினீர்கள் என்றால், போரில் நாம் தோற்பது நிச்சயம்" என்றார். "நீங்கள் ஏன் இவ்வாறு சொல்கின்றீர்கள்?" என்று அரசர் ரிச்சர்ட் அவரிடம் கேட்டதற்கு, தொமினிக் என்ற அந்த மடாதிபதி அவரிடம், "நம்முடைய படையில் ஒருசில ஒழுங்கு முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. அவற்றுக்கு நாம் கட்டுப்பட்டு நடந்தால்தான் போரில் வெற்றிபெற முடியும். இல்லையென்றால் நாம் தோற்றுத்தான் போகவேண்டும்" என்றார்.

மடாதிபதி சொன்ன இவ்வார்த்தைகள் அரசர் ரிச்சர்டின் உள்ளத்தில் ஆழமான இறங்கின. அதனால் அவர் முன்புபோல், படையைப் பின்னாலிருந்து வழிநடத்தத் தொடங்கினார். இதனால் மூற்றாம் சிலுவைப் போரில் கிறிஸ்தவர்கட்கு சிறப்பானதொரு வெற்றி கிடைத்தது.

எப்படி அரசர் ரிச்சர்ட் படையின் ஒழுங்குகட்குக் கட்டுப்பட்டு நடந்ததினால் சிலுவைப் போரில் எளிதாக வெற்றிபெற முடிந்தது. அதுபோன்று இறைவனின் மக்களாகிய நாம், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தொமெனில் அவர் அளிக்கின்ற எல்லா ஆசியையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இன்றைய முதல் வாசகம், கடவுளின் கட்டளையையும் அவருடைய நியமங்களையும் கடைப்பிடித்து வாழ்ந்தால், எல்லாம் நலமாகும் என்று கூறுகின்றது. அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்,

கடவுளின் கட்டளைகள் யாவை?

இணைச்சட்ட நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் மோசே இஸ்ரயேல் மக்களைப் பார்த்து, 'ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு கடவுள் இலர்' என்பதை உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்; அதைப் பின்பற்றி வாருங்கள். அப்படிச் செய்தால் உங்கட்கும் உங்கள் பிள்ளைகட்கும் எல்லாம் நலமாகும். நீங்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டில் நெடுநாள் வாழ்வீர்கள்" என்று கூறுகின்றார்.

ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்கட்குப் பல கட்டளைகளைத் தந்தாலும் (விப 20: 1-17) அவற்றுள் முதன்மையான வருவது, 'ஆண்டவரே கடவுள் என அறிந்து, அவரை முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு ஆற்றலோடும் அன்பு செய்வதுதான்' (இச 6: 5). நற்செய்தியில் இயேசு இக்கட்டளைக்கு இணையான கட்டளையாக 'பிறரை அன்பு செய்வது' (மத் 23: 39) என்று குறிப்பிடுவார். அது ஒரு பக்கம் இருந்தாலும் இஸ்ரயேல் மக்கள், யாவே கடவுளைத்தான் ஒரு கடவுளாக உள்ளத்தில் இருத்தி, அவர்க்குக் உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று அழைக்கப்பட்டார்கள். ஆண்டவர் கொடுத்த இக்கட்டளைக்கு அவர்கள் உண்மையாக இருந்தார்களா? அதனால் அவர்கள் இறைவன் அளிப்பதாகச் சொன்ன எல்லா ஆசியையும் பெற்றுக்கொண்டார்களா? என்பதைத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

கடவுள்மீது நம்பிக்கைகொள்ளாத, அவரை அன்பு செய்யாத இஸ்ரயேல் மக்கள்

ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களிடம், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டளைகளையெல்லாம் சொல்லிவிட்டு, அவர்கள் அவற்றைக் கடைப்பிடிப்பார்களாக என்று எதிர்பார்த்தார். ஆனால், அவர்கள் பொன்னாலான கன்றுக்குட்டியைச் செய்து வழிபட்டார்கள் (விப 32). அது மட்டுமல்லாமல், ஆண்டவரின் வாக்குறுதியின்மீது நம்பிக்கை கொள்ளாமல், அவர்க்கு எதிராக முறுமுறுத்தார்கள். அதனால் கடவுள் அவர்களைத் தண்டித்தார்.

இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர் மீது உண்மையான அன்பு கொண்டிருந்தால், அவர்கள் அவர்மீது அன்பு அல்லது நம்பிக்கை கொண்டிருப்பார்கள்; அவரது கட்டளைகளையும் கடைப்பிடித்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அவர்மீது அன்பு கொள்ளாமலும் அவரிடம் நம்பிக்கை கொள்ளாமலும் போனதால், யோசுவாவையும் காலேபையும் தவிர, வேறு யாரும் வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டில் நுழைய முடியாமல் போகின்றார்கள். இவ்வாறு அவர்கள் கடவுளை முழுமையான அன்பு செய்யாமலும் அவர்மீது நம்பிக்கை வைக்காமலும் இருந்ததால், அவர் தர இருந்த எல்லா ஆசியையும் இழந்து போனார்கள்.

இதைப் படிக்கின்ற நாம் கடவுட்கு உண்மையுள்ளவர்களாகவும் அவர்மீது நம்பிக்கை கொள்ளக்கூடியவர்களாகவும் இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.

சிந்தனை

'உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கட்குக் கட்டளையிட்டுக் கூறிய எல்லா வழிகளிலும் நடங்கள்; அப்பொழுது வாழ்வீர்கள்' (இச 5: 33) என்கிறது இறைவார்த்தை. ஆகையால், நாம் கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் கட்டளைகளின் படி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.



 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!