Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         07 ஆகஸ்ட் 2019  
                                    பொதுக்காலம் 18ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 

=================================================================================
விருப்பிற்குரிய நாட்டை அவர்கள் அசட்டை செய்தார்கள்.

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 13: 1-2,25-33, 14: 1,26-30,34-35

அந்நாள்களில் ஆண்டவர் மோசேயிடம், "இஸ்ரயேல் மக்களுக்கு நான் கொடுக்கும் கானான் நாட்டை உளவு பார்க்க ஆள்களை அனுப்பு; மூதாதையர் குலம் ஒவ்வொன்றிலிருந்தும் அவர்களுள் தலைவனாயிருக்கும் ஒருவனை நீ அனுப்ப வேண்டும்" என்றார். நாற்பது நாள்கள் நாட்டை உளவு பார்த்த பின் அவர்கள் திரும்பி வந்தனர்.

அவர்கள் பாரான் பாலைநிலத்தில் காதேசில் இருந்த மோசேயிடமும் ஆரோனிடமும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரிடமும் வந்தனர்; அவர்களுக்கும் முழு மக்கள் கூட்டமைப்புக்கும் அவர்கள் செய்தி கொண்டு வந்தனர்; நாட்டின் கனியையும் அவர்களுக்குக் காட்டினர்.

அவர்கள் மோசேயிடம் கூறியது: நீர் எங்களை அனுப்பிய நாட்டுக்கு நாங்கள் சென்று வந்தோம்; அதில் பாலும் தேனும் வழிந்தோடுகிறது; இதுவே அதன் கனி. ஆயினும் அந்நாட்டில் வாழும் மக்கள் வலிமை மிக்கவர்கள்; நகர்கள் அரண் சூழ்ந்தவை, மிகப் பெரியவை; அத்துடன் ஆனாக்கின் வழி மரபினரையும் நாங்கள் அங்குக் கண்டோம்; அமலேக்கியர் நெகேபு நாட்டில் வாழ்கின்றனர்; இத்தியர், எபூசியர், எமோரியர் ஆகியோர் மலைநாட்டில் வாழ்கின்றனர்; கானானியர் கடலருகிலும் யோர்தானை ஒட்டியும் வாழ்கின்றனர். காலேபு மோசே முன் மக்களை உடனே அமைதிப்படுத்தி, "நாம் உடனடியாகப் போய் நாட்டைப் பிடித்துக்கொள்வோம்; ஏனெனில் நாம் அதை எளிதில் வென்றுவிட முடியும்" என்றார்.

ஆனால் அவருடன் சென்றிருந்த ஆள்கள், "நாம் அம்மக்களுக்கு எதிராகப் போக முடியாது; ஏனெனில் அவர்கள் நம்மிலும் வலிமை மிக்கவர்கள்" என்றனர். இவ்வாறு அவர்கள் உளவு பார்த்து வந்த நாட்டைப் பற்றித் தவறான தகவலை இஸ்ரயேல் மக்களுக்குக் கொண்டு வந்தனர்; அவர்கள் கூறியது: உளவு பார்க்கும்படி நாங்கள் சென்றிருந்த நாடு தன் குடிமக்களையே விழுங்குவதாய் இருக்கிறது; அதில் நாங்கள் கண்ட மனிதர் அனைவரும் மிகவும் நெடிய உருவத்தினர்; அத்துடன் நெப்பிலிமில் இருந்து வருகிற ஆனாக்கின் புதல்வராகிய அரக்கரையும் கண்டோம்; எங்கள் பார்வையில் நாங்கள் வெட்டுக்கிளிகள் போன்றிருந்தோம்; அவர்களுக்கும் நாங்கள் அவ்வாறே காணப்பட்டோம். உடனே மக்கள் கூட்டமைப்பு முழுவதும் உரத்தக் குரலில் புலம்பிற்று; மக்கள் அன்றிரவு அழுதுகொண்டே இருந்தனர்.

மேலும் ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது: இப்பொல்லாத மக்கள் கூட்டமைப்பினர் எதுவரை எனக்கு எதிராக முறுமுறுப்பர்? எனக்கு எதிராக முறுமுறுக்கும் இஸ்ரயேல் மக்களின் முறுமுறுப்புகளை நான் கேட்டேன். நீங்கள் அவர்களிடம் சொல்ல வேண்டியது, "ஆண்டவர் கூறுவதாவது: என் உயிர் மேல் ஆணை! என் செவிகளில் படுமாறு நீங்கள் சொன்னதையே நான் உங்களுக்குச் செய்வேன்; எனக்கெதிராக முறுமுறுத்த, இருபது வயதும் அதற்கு மேலும் எண்ணப்பட்ட மொத்தத் தொகையினரான நீங்கள் இப்பாலை நிலத்தில் பிணங்களாக விழுவீர்கள். நீங்கள் குடியிருக்கும்படி நான் வாக்களித்த நாட்டிற்குள் எப்புன்னே மகன் காலேபையும் நூன் மகன் யோசுவாவையும் தவிர ஒருவருமே வரமாட்டீர்கள். நீங்கள் நாட்டை உளவு பார்த்த நாள்களின் எண்ணிக்கைப்படி ஒரு நாளைக்கு ஒரு ஆண்டாக, நாற்பது நாள்களுக்கும் நாற்பது ஆண்டுகள் நீங்கள் குற்றப் பழியைச் சுமப்பீர்கள்; என் வெறுப்பையும் அறிந்துகொள்வீர்கள். ஆண்டவராகிய நானே பேசியுள்ளேன்; எனக்கு எதிராக ஒன்று கூடிய இப்பொல்லாத மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் இதை நான் கட்டாயம் செய்து முடிப்பேன்; இப்பாலை நிலத்தில் அவர்கள் முற்றிலும் அழிந்தொழிந்து அங்கேயே மடிவார்கள்" என்றார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 106: 6-7a. 13-14. 21-22. 23 (பல்லவி: 4a)
=================================================================================
பல்லவி: உம் மக்கள்மீது இரங்கும்போது ஆண்டவரே என்னை நினைவுகூரும்!

6 எங்கள் மூதாதையரின் வழிநடந்து, நாங்களும் பாவம் செய்தோம்; குற்றம் புரிந்தோம்; தீமை செய்தோம். 7a எங்கள் மூதாதையர் எகிப்தில் நீர் செய்த வியத்தகு செயல்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை. பல்லவி

13 ஆயினும், அவர் செய்தவற்றை அவர்கள் விரைவிலேயே மறந்துவிட்டார்கள்; அவரது அறிவுரைக்காக அவர்கள் காத்திருக்கவில்லை. 14 பாலை நிலத்தில் அவர்கள் பெருவிருப்புக்கு இடங்கொடுத்தார்கள். பாழ்வெளியில் அவர்கள் இறைவனைச் சோதித்தார்கள். பல்லவி

21 தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்; எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்; 22 காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்; செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர். பல்லவி

23 ஆகையால், அவர்களை அவர் அழித்து விடுவதாகக் கூறினார்; ஆனால், அவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்முன் உடைமதில் காவலர்போல் நின்று அவரது கடுஞ்சினம் அவர்களை அழிக்காதவாறு தடுத்தார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அம்மா, உமது நம்பிக்கை பெரிது.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 21-28

அக்காலத்தில் இயேசு தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்துவந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, "ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்" எனக் கதறினார்.

ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, "நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்" என வேண்டினர்.

அவரோ மறுமொழியாக, "இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்" என்றார். ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, "ஐயா, எனக்கு உதவியருளும்" என்றார்.

அவர் மறுமொழியாக, "பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்றார். உடனே அப்பெண், "ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே" என்றார்.

இயேசு மறுமொழியாக, "அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்" என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

உரிமையுடையவர் சொல்லும் வார்த்தைகளால் உருக்குலைந்து போவதில்லை, காரணம் உரிமையேடுப்போரின் உண்மைத் தன்மையை உணர்ந்திருப்பதால் உருக்குலைந்து போவதில்லை. மாறாக, அவர் காட்டும் உள்ளாந்த அன்பின் தன்மையை உணர்ந்து, மன்றாட முன்வருகிறார் இந்தத் தாய்.

இதை உணர்வது கடினமே. மிக நெருக்கமான உறவு இருந்தாலேயே நம்மால் உரிமையுடையவர்கள் சொல்லும் வார்த்தையை கேட்டு உருக்குலைந்து போகாமல் உண்மையை உணர்ந்து, விடாது பற்றிக் கொள்ள முடியும்.

இந்த உறவு இருபக்கமும் இருந்திடல் வேண்டும்.

பிள்ளைக்கும் வேண்டும். பெற்றோருக்கும் வேண்டும்.

இது இல்லாது போகும் போதே, தந்தை தாய் திட்டியதால் உருக்குலைந்து, உடைந்து போய் தங்களை பிள்ளைகள் மாய்த்துக் கொள்கின்றனர்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 மத்தேயு 15: 21-28

பெரிய நம்பிக்கை

நிகழ்வு

மிகப்பெரிய மறைபோதகரான ராபர்ட் மோஃபட் (Robert Moffat) தென்னாப்பரிக்காவில் உள்ள பேசுவனாலான்ட் (Bechuanaland) என்ற இடத்தில் நற்செய்திப் பணியாற்றி வந்தார். அவர் பல ஆண்டுகள் அங்கு நற்செய்திப் பணியாற்றி வந்தபோதும், ஒருவர்கூட கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. இதனால் அவருடைய நலவிரும்பிகள் யாவரும் அவரிடம், 'கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள யாரும் முன்வராத இடத்தில் எதற்கு நற்செய்தி பணியாற்றிக் கொண்டிருக்கவேண்டும்... பேசாமல் நீ சொந்த நாட்டிற்குத் திரும்பி வந்துவிடு" என்றார்கள். அவரோ, "எப்படியும் இங்குள்ள மக்கள் என்றைக்காவது ஒருநாள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வார்கள். அதுவரைக்கும் நான் இங்கிருந்து நற்செய்திப் பணியாற்றுகின்றேன்" என்று சொல்லி வந்தார்.

இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்த அவருடைய நண்பர் ஒருவர் அவர்க்கு ஒரு கடிதம் எழுதினர். அந்தக் கடிதத்தில் அவர், "நண்பா! உனக்கு என்ன வேண்டும் என்று சொல். இங்கிருந்து நான் உனக்கு அதை அனுப்பி வைக்கிறேன்" என்றார். அதற்கு ராபர்ட் மோஃபட் அவர்க்கு இவ்வாறு பதில் கடிதம் எழுதி அனுப்பி வைத்தார்: "இங்கு நான் திருப்பலி நிறைவேற்றுவதற்குத் தேவையான திருப்பண்டங்களை அனுப்பி வை. அது போதும்" என்றார்.

இந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதும், ராபர்ட் மோஃபட்டின் நண்பர் அவர்க்கு இப்படியோர் பதில் கடிதம் எழுதினார்: "கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள யாருமே தயாராக இல்லாத நிலையிலும், நீ என்றைக்காவது ஒருநாள் அங்குள்ள மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு திருப்பலியை நிறைவேற்றுவதற்குத் தேவையான திருப்பண்டங்களை அனுப்புமாறு கேட்டிருக்கின்றாயே... அந்த நம்பிக்கை வீண்போகாது. வாழ்த்துகள்." இந்தக் கடிதத்தோடு அவர் ராபர்ட் மோஃபட் கேட்ட திருப்பலி நிறைவேற்றுவதற்கான திருப்பண்டங்களையும் அனுப்பி வைத்தார்.

ராபர்ட் மோஃபட்டின் நண்பர் இங்கிலாந்திலிருந்து அவர்க்கு அனுப்பி வைத்த திருப்பண்டங்கள் ஓரிரு மாதங்களிலேயே கிடைத்தன. அவற்றைக் கொண்டு அவர் தன்னுடைய கூடாரத்தில் திருப்பலி நிறைவேற்றத் தொடங்கினார். இதைக் கண்ட பேசுவனாலான்ட் மக்கள், 'இவர் நிறைவேற்றும் வழிபாடு வித்தியாசமாக இருக்கின்றதே' என்று அதில் கலந்துகொண்டார்கள். அதில் அவர்கட்கு இறைவார்த்தையை எடுத்துச் சொன்னார். அது அவர்களுடைய உள்ளத்தைத் தொடவே, ஒவ்வொருவராக கிறிஸ்தவை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினார்கள். இப்படியே அந்த ஊரில் இருந்த அனைவரும் ராபர்ட் மோஃபட்டின் நிறைவேற்றிய திருப்பலியும் அதில் எடுத்துரைத்த இறைவார்த்தையையும் கேட்டு, கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள தொடங்கினார்கள்.

பல ஆண்டுகளாக நற்செய்தியை எடுத்துரைத்தும் யாரும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத நிலையிலும், அதை நினைத்து மனந்தளர்ந்து போகாமல், நம்பிக்கையோடு இருந்து அந்தப் பகுதியில் இருந்த எல்லாரையும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளச் செய்த ராபர்ட் மோஃபட்டி நமது பாராட்டிற்கு உரியவராக இருக்கின்றார். இன்றைய நற்செய்தி வாசகதிலும் பல்வேறு இடர்பாடுகள் மற்றும் நெடுக்கடிகட்கு மத்தியிலும் பெரிய நம்பிக்கையோடு இருந்த பெண்மணி ஒருவரைக் குறித்து வாசிக்கின்றோம். அந்தப் பெண்மணி கொண்டிருந்த நம்பிக்கை எத்தகையது. அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது என்ன என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

எல்லாமும் தனக்கெதிராக இருந்தபோதும் நம்பிக்கையோடு இருந்த பெண்மணி

நற்செய்தியில் இயேசு தீர், சீதோன் பகுதிகட்குச் செல்கின்றபோது, அங்கிருந்த கானானியப் பெண்மணி ஒருத்தி, பேய் பிடித்திருந்த மகளிடமிருந்து பேயை ஓட்டுமாறு கேட்கின்றார். முதலில் அந்தப் பெண்மணியின் நிலை எந்தளவுக்குப் பரிதாபமாக இருந்தது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இயேசுவிடம் வந்த அந்தப் பெண்மணி யூத இனத்தைச் சார்ந்தவர் கிடையாது; புறவினத்துப் பெண்மணி. யூதப் பெண்களையே இரபிக்கள் பொது இடங்களில் கண்டுகொள்ளாமல் போகும்போது, புறவினத்துப் பெண்மணியை மட்டும் கண்டுகொள்வார்களா என்ன? அடுத்ததாக, அந்தப் பெண் இயேசுவின் பின்னால் கத்திக் கொண்டுவருவதைப் பார்த்துவிட்டு, இயேசுவின் சீடர்கள் அவரிடம், அந்தப் பெண்மணியை அனுப்பிவிடும் என்று சொல்கின்றார். இது பக்கம் என்றால், இயேசு (அந்தப் பெண்மணியையின் நம்பிக்கையைச் சோதிப்பதற்காக அவளைக் கொள்ளாமல் இருக்கின்றார். இத்தகைய நெருக்கடிகட்கு மத்தியிலும் அந்தப் பெண்மணி இயேசுவின் மீது நம்பிக்கையோடு இருக்கின்றாள்.

பெரிய நம்பிக்கையோடு இருந்தவட்கு பெரிய பரிசு

இயேசு அந்தப் பெண்மணியின் நம்பிக்கையைச் சோதிப்பதற்காக அவளைக் கண்டுகொள்ளாமலும், ஏன் அவளை நாய் என்று சொல்லியும் அவள் மனந்தளராமல் நம்பிக்கையோடு இருந்ததைக் கண்டு, "அம்மா, உமது நம்பிக்கை பெரியது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்" என்கின்றார்.

நற்செய்தி நூல்களில் இயேசு இரண்டு பேருடைய நம்பிக்கையைக் கண்டு வியக்கின்றார். ஒருவர் இன்றைய நற்செய்தியில் வருகின்ற கானானியப் பெண்மணி. இன்னொருவர் நூற்றுவத் தலைவர் (மத் 8: 5-13). இதில் சிறப்பு என்னவென்றால், இரண்டு பேருமே புறவினத்தார். கானானியப் பெண்மணியிடம் உறுதியான பெரிய நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை அவளுடைய மகளுக்கு இயேசுவிடமிருந்து நலனைப் பெற்றுத் தந்தது. நாமும் இயேசுவிடம் உறுதியான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அவர் தருகின்ற ஆசியைத் தொடர்ந்து பெறுவோம்.

சிந்தனை

'உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும்' (யாக் 1:3). ஆகையால், நம்முடைய வாழ்க்கையிலும், நமது நம்பிக்கை சோதிக்கப்பட்டாலும், கானானியப் பெண்மணியைப் போன்று மனவுறுதியோடு இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
எண்ணிக்கை 13: 1-2, 25-33, 14: 1, 26-30, 34-35

உயர்வும் தாழ்வும் ஆண்டவர்மீது நாம் கொள்ளும் நம்பிக்கையைப் பொறுத்தது

நிகழ்வு

சூஃபி ஞானி ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் தன் சீடனிடம், "வா! மலையடிவாரத்தில் இருக்கின்ற ஓர் ஊர்க்குப் போய்வருவோம்" என்றார். ஞானி இவ்வாறு சொன்னதும், சீடன் பயணத்திற்குத் தேவையான பொருள்களை எல்லாம் எடுத்துக்கொண்டு, கூடவே ஒரு வாளியையும் நீளமான கயிறையும் எடுத்துக் கொண்டான்.

இருவரும் பேசிக்கொண்டே போகும்போது சீடனுக்குத் தாகமெடுத்தது. அவன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தான். சற்றுத் தொலைவில் ஒரு கிணறு இருக்கக் கண்டான். உடனே அவன் தான் கையோடு கொண்டுவந்திருந்த வாளியையும் கயிற்றையும் எடுத்துகொண்டு, அந்தக் கிணற்றின் அருகே சென்றான். கிணற்றில் தண்ணீர் பொங்கி வழிந்துகொண்டிருந்தது; அதை அங்கு மேய்ந்துகொண்டிருந்த மான்கள் நின்றவாறே குடித்துக்கொண்டிருந்தன. இவன் கயிற்றோடும் வாளியோடும் வருவதைக் கண்ட மான்கள் அங்கிருந்து ஓடி ஒளிந்தன. 'தன்னைப் பார்த்ததும் அவை ஏன் ஓடி ஒளிந்தன' என்று அவனுக்குப் புரியவே இல்லை.

பின்னர் அவன் தன்னுடைய கையில் வைத்திருந்த வாளியைக் கிணற்றுக்குள் விட்டுத் தண்ணீர் மொள்ளத் தொடங்கினான். அவன் வாளியைக் கிணற்றுக்குள் விடத் தொடங்கியதும் தண்ணீர் தரைவரைக்கும் சென்றது. இதைப் பார்த்துவிட்டு அவன் ஒரு நிமிடம் அதிர்ந்து போனான். எப்படியோ வாளியில் கிடைத்த கொஞ்சத் தண்ணீரை எடுத்துக் குடித்துத் தன்னுடைய தாகத்தைத் தணித்துக்கொண்டான். இதற்குப் பிறகு அவன் தன்னுடைய குருவிடம் வந்து, நடந்தது அனைத்தையும் அவரிடம் எடுத்துச் சொன்னான். அதற்கு அவர் அவனிடம், "அந்த மான்கட்கு இருந்த நம்பிக்கைகூட உனக்கு இல்லை. 'இறைவன் எப்படியும் தங்கட்குத் தண்ணீர் தருவார்' என்ற நம்பிக்கை மான்களிடம் இருந்தன. ஆனால் நீ 'போகிற வழியில் நமக்குத் தண்ணீர் கிடைக்குமோ? கிடையாதோ? என்று அவநம்பிக்கையோடு கயிறையும் வாளியையும் தூக்கிக்கொண்டு வந்தாய். அதனால்தான் உனக்குத் தண்ணீர் கிடைப்பதற்கு மிகவும் கஷ்டமாயிருக்கின்றது" என்றார்.

ஞானி சொன்ன இவ்வார்த்தைகள் சீடனின் உள்ளத்தில் ஆழமாக இறங்கின. எனவே, அவன் தான் வைத்திருந்த கயிற்றையும் வாளியையும் வீசி எறிந்துவிட்டு, ஞானியைப் போன்று வெறுங்கையோடு நடந்தான். சிறிதுநேரத்தில் இருவரும் சேரவேண்டிய இடம் வந்தது. அந்த இடத்தில் ஞானி ஒருவார காலம் தங்கி அங்குள்ள மக்கட்குப் போதித்துவிட்டு, ஒருவாரம் முடிந்தபின் தன்னுடைய மடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார். அவருடைய சீடன் அவர் பின்னாலேயே வந்து கொண்டிருந்தான்.

கிணறு இருக்கும் இடம் வந்ததும் சீடனுக்குத் தாகம் எடுக்கத் தொடங்கியது. எனவே, அவன் அந்தக் கிணற்றை நோக்கி நடக்கத் தொடங்கினான். முன்பு அவன் அந்தக் கிணற்றை நோக்கிச் சென்றபோது, எப்படி அந்தக் கிணறு பொங்கி வழிந்ததோ அதுபோன்று அன்றைக்கும் கிணற்றில் தண்ணீர் பொங்கி வழிந்துகொண்டிருந்தது. அதற்குப் பக்கத்தில் நின்றுகொண்டு மான்கள் தண்ணீர் பருகிக்கொண்டிருந்தன. ஆனால், அவன் இந்த முறை அந்தக் கிணற்றின் அருகே சென்றபோது, மான்கள் அங்கிருந்து ஓடாமல் அப்படியே இருந்தன. அவன் கிணற்றில் தண்ணீர் பருகியபோதும், அந்தத் தண்ணீர் கீழே போகாமல் அப்படியே இருந்தன. இவையெல்லாம் அவனுக்கு மிகவும் ஆச்சரியத்தைத் தந்தன.

தண்ணீர் பகுகிவிட்டு குருவிடம் வந்த சீடன் நடந்த எல்லாவற்றையும் அவரிடம் சொன்னான். அப்பொழுது அவர் அவனிடம், "இந்த முறை தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு நீ அங்கு சென்றாய். அதனால்தான் தண்ணீர் அப்படியே இருந்தது; மான்களும் அங்கிருந்து ஓடி ஒளியவில்லை" என்றார்.

இறைவன்மீது நாம் நம்பிக்கையோடு இருக்கின்றபோது எத்தகைய ஆசியையும் அதே நேரத்தில் அவரிடம் நாம் நம்பிக்கையில்லாமல் இருக்கின்றபோது கிடைக்கின்ற ஆசியை எப்படி இழக்கின்றோம் என்பதையும் இந்நிகழ்வு நமக்கு எடுத்துச் சொல்கின்றது. இன்றைய முதல் வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துச் சொல்கின்றது. எனவே, அதை குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவரின் வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொள்ளாத இஸ்ரயேல் மக்கள்

ஆண்டவராகிய கடவுள், இஸ்ரயேல் மக்கட்கு அளிக்க இருந்த கானான் நாட்டை உளவு பார்க்க ஆள்களை அனுப்புமாறு மோசேயிடம் கேட்டபோது, மோசே ஓர் இனத்திற்கு ஒருவராக பன்னிரு உளவாளிகளை அங்கு அனுப்பி வைத்தார். அவர்கள் அங்கு சென்று, உளவு பார்த்துவிட்டு மோசேயிடம் திரும்பி வந்து, "அவர்கட்கு எதிராகப் போக முடியாது; அவர்கள் நம்மிலும் வலிமை மிக்கவர்கள்" என்று சொல்கின்றார்கள். இதனால் கடவுள் அவர்கள்மீது சினம் கொள்கின்றார். ஏனென்றால் அவர் கானான் நாட்டை இஸ்ரயேல் மக்கட்கு அளிப்பதாக ஆபிரகாமிடமும் (தொநூ 12: 7) மோசேயிடமும் (விப 3:8) சொல்லியிருந்தார். அப்படியிருக்கையில் உளவு பார்க்கச் சென்றவர்கள் ஆண்டவரின் வார்த்தைகளின் மீது நம்பிக்கை வைக்காமல், 'கானான் நாட்டில் உள்ளவர்கள் மிகவும் பலசாலிகள்; அங்கு போகமுடியாது' என்று சொன்னதால், கடவுள் அவர்களிடம், காலேபையும் யோசுவாவையும் தவிர வேறு யாரும் வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டிற்குள் நுழைய முடியாது என்று சொல்கின்றார்.

கடவுள் இன்றைக்கு இருக்கும் தலைவர்களைப் போன்று வாக்கு மாறுகின்றவர் அல்ல, அவர் வாக்கு மாறாதவர். எனவே, அவருடைய வார்த்தைகளின்மீது நம்பிக்கை கொண்டு வாழவேண்டிய இஸ்ரயேல் மக்கள், அவற்றின்மீது நம்பிக்கை கொள்ளாமல் இருந்தததால் அப்படிப்பட்ட ஒரு தண்டனையைப் பெறுகின்றார்கள். ஆகையால், நாம் இஸ்ரயேல் மக்களைப் போன்று இல்லாமல், ஆண்டவர் மீதும் அவருடைய வார்த்தைகளின் மீதும் நம்பிக்கை கொண்டு வாழ்வோம்.

சிந்தனை

'அருமையான நாட்டை அவர்கள் இழந்தார்கள். அவரது வாக்குறுதியில் நம்பிக்கை கொள்ளவில்லை' (திபா 106: 24) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் கடவுள் கொடுத்த வாக்குறுதியில் நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
 

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!