|
|
06 ஆகஸ்ட் 2019 |
|
|
பொதுக்காலம் 18ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
ஆண்டவரின் தோற்றமாற்றம் விழா
=================================================================================
அவருடைய ஆடை வெண்பனி போல இருந்தது.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 9-10,13-14
நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன;
தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும்,
அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை
தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன.
அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி
வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல
கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க
அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன.
இரவில் நான் கண்ட காட்சியாவது; வானத்தின் மேகங்களின் மீது மானிடமகனைப்
போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர்
வந்தார்; அவர் திருமுன் கொண்டுவரப்பட்டார். ஆட்சியுரிமையும்
மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும்
நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை
என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்துபோகாது.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
97: 1-2. 5-6. 9 (பல்லவி: 9a,1a)
=================================================================================
பல்லவி: உலகனைத்தையும் ஆளும் உன்னதராம் ஆண்டவர் ஆட்சி
செய்கின்றார்.
1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான
தீவு நாடுகள் களிகூர்வனவாக! 2 மேகமும் காரிருளும் அவரைச்
சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம்.
பல்லவி
5 ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள்
மெழுகென உருகுகின்றன. 6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன;
அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. பல்லவி
9 ஏனெனில், ஆண்டவரே! உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்; தெய்வங்கள்
அனைத்திற்கும் மேலானவர் நீரே! பல்லவி
இரண்டாம் வாசகம்
விண்ணிலிருந்து வந்த இக்குரலொலியை நாங்களே
கேட்டோம்.
திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம்
திருமுகத்திலிருந்து வாசகம் 1: 16-19
சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும்
வருகையையும் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவித்தபோது
சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு பேசவில்லை.
நாங்கள் அவரது மாண்பை நேரில் கண்டவர்கள். "என் அன்பார்ந்த
மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று
மாட்சிமிகு விண்ணகத்திலிருந்து அவரைப் பற்றிய குரல் ஒலித்தபோது,
தந்தையாகிய கடவுளிடமிருந்து மதிப்பும் மாட்சியும் பெற்றார்.
தூய மலையில் அவரோடு இருந்தபோது விண்ணிலிருந்து வந்த இக்குரலொலியை
நாங்களே கேட்டோம். எனவே, இறைவாக்கினர் கூறியது இன்னும் உறுதியாயிற்று.
அவர்கள் கூறியதை நீங்கள் கருத்திற் கொள்வது நல்லது; ஏனெனில்
பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும் வரை
அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 17: 5c
அல்லேலூயா, அல்லேலூயா! என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர்
பொருட்டு நான் பூரிப்படைகிறேன். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
என் அன்பார்ந்த மைந்தர் இவரே.
+மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
9: 2-9
அக்காலத்தில் இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து,
ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்
கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய
ஆடைகள் இவ்வுலகில் எந்தச் சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு
வெள்ளை வெளேரென ஒளிவீசின. அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத்
தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
பேதுரு இயேசுவைப் பார்த்து, "ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது.
உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று
கூடாரங்களை அமைப்போம்" என்றார்.
தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள்
மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மேகம் வந்து
அவர்கள் மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, "என் அன்பார்ந்த
மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்" என்று ஒரு குரல் ஒலித்தது.
உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில்
இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.
அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர்,
"மானிடமகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும்
எடுத்துரைக்கக் கூடாது" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
மனித உரு எடுத்த இறைமகனின் முகத்தை கண்டவர்கள், இறைமாட்சியோடு
கூடிய முகத்தை கண்டார்கள். தங்களுக்கு முன்சுவையாய் தரப்பட்ட
இந்த அனுபவத்தை அவர்களால் ஜீரணிக்க இயலாது போனார்கள்.
மனத்தில்பட்டதை பேதுரு தெரிவிக்கின்றார். நாம் இங்கேயே இருந்திடலாமே
என்று. அத்தகைய மனஅமைதியை பெற்றார்கள்.
மறுவுலக வாழ்வு நிரந்தரமான வாழ்வு இத்தகைய மனஅமைதியை கொண்டது.
இதனை நாமும் சுதந்தரித்துக் கொள்ள இவ்வுலக வாழ்வில் நம்மை ஆயத்தமாக்குவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
ஆண்டவரின் தோற்றமாற்றம் விழா 06
08 2019
நிகழ்வு
1456 ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கும் துருக்கியர்களுக்கும் இடையே
பெல்கிரேட் என்னும் இடத்தில் கடுமையான போர் மூண்டது. இந்தப்
போரில் ஹுன்யாடி ஜோன்ஸ் என்பவர் கிறிஸ்தவர்களின் சார்பாக
நின்று போர்தொடுத்தார். போரின் முடிவில் கிறிஸ்தவர்கள்
துருக்கியர்களை வெற்றிகொண்டார்கள். அவர்கள் இத்தகையதொரு
வெற்றியை இறைவனின் துணையால்தான் பெற்றார்கள் என்பதை நன்கு உணர்ந்தார்.
இதை அறிந்த அப்போதைய திருத்தந்தை மூன்றாம் கலிஸ்துஸ் என்பவர்
ஆண்டவரின் உருமாற்றப் பெருவிழாவை கிறிஸ்தவர்கள் துருக்கியர்களை
வெற்றிகொண்ட அந்த ஆகஸ்ட் 6 ஆம் நாளில் கொண்டாடப் பணித்தார். அன்றிலிருந்து
இன்றுவரை ஆண்டவரின் உருமாற்றப் பெருவிழா ஆகஸ்ட் 06 ஆம் தேதி
கொண்டாடப்பட்டு வருகின்றது.
வரலாற்றுப் பின்னணி
இன்று நாம் ஆண்டவரின் உருமாற்றப் பெருவிழாவைக்
கொண்டாடுகின்றோம். இந்த நிகழ்வை விழாவைக் - குறித்துச்
சொல்கின்றபோது திருத்தந்தை பெரிய கிரகோரியார், "இயேசு சொன்ன
'மானிட மகன் எருசலேமிற்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள்,
மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும், மூன்றாம்
நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்' என்று வார்த்தைகளால்
சீடர்கள் குழம்பிப் போய் இருந்தார்கள். எனவே, அப்படிப்பட்ட சீடர்களுக்கு
தன்னுடைய விண்ணக மகிமையைக் காண்பிப்பதற்காகவும், தாம் அடைய இருக்கும்
பாடுகளின் உட்பொருளை உணர்த்தவுமே இயேசு இந்த உருமாற்ற நிகழ்வை
நிகழ்த்திக் காட்டினார்" என்று சொல்வார். ஆம், இது முற்றிலும்
உண்மை. ஏனென்றால் உலகை மீட்க வந்த மெசியா துன்புறவேண்டும் என்பது
சீடர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்தது. எனவேதான், இயேசு
தன்னுடைய உருமாற்ற நிகழ்வின் வழியாக எருசலேமில் தான் அடைய இருக்கும்
பாடுகளின் உட்பொருளை அவர்களுக்கு தெளிவாக விளக்குகின்றார்.
இயேசுவின் உருமாற்ற நிகழ்வில் மோசேயும் எலியாவும் தோன்றியதன்
அர்த்தம் என்ன என்பதும் நம்முடைய சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.
அதற்கு விவிலிய அறிஞர்கள் சொல்லக்கூடிய காரணங்களில் முதலாவது,
இயேசு வாழ்ந்த காலத்தில் அவரை சிலர் திருமுழுக்கு யோவான் எனவும்
மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் எனவும்
நினைத்தார்கள் (மத் 16:14). இத்தகைய குழப்பங்களைத் தெளிவுபடுத்தவும்,
இயேசு, தான் ஓர் இறைவாக்கினர் மட்டுமல்ல, இறைவாக்கினர்களுக்கு
எல்லாம் மேலான இறைவன் என்பது இந்த நிகழ்வின் வழியாகத்
தெளிவாகின்றது. இரண்டாவது, இயேசுவின் மீது எப்போதும்
'மூதாதையர்களின் சட்டங்களை மீறுகின்றார்' என்ற குற்றச்சாட்டு
இருந்துகொண்டே வந்தது. ஆனால் இந்த உருமாற்ற நிகழ்வில்
திருச்சட்டத்தை வழங்கிய மோசேயும் பெரிய இறைவாக்கினராகிய
எலியாவும் வருவதால், இயேசு திருச்சட்டத்தையும்,
இறைவாக்கினையும் அழிக்க அல்ல, மாறாக அதனை நிறைவேற்ற
வந்திருக்கிறார் என்ற உண்மையை வெளிப்படுத்தபடுகின்றது (மத்
5:17)
மூன்றாவது விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மோசேயும்
எலியாவும் மீண்டுமாக மண்ணகத்திற்கு வந்திருக்கிறார்கள்
என்றால், அவர்களுக்கு வாழ்வுகொடுக்கின்ற ஆற்றல் இயேசுவுக்கு
உண்டு என்ற செய்தியும் வலியுறுத்தப்படுகின்றது. நான்காவதாக
மோசேயும் எலியாவும் தோன்றியது, எருசலேமில் நிகழ இருக்கும்
இயேசுவின் பாடுகளைக் குறித்து பேசுவதற்கே என்றும்
சொல்லப்படுகின்றது. இந்த நிகழ்வின் வழியாக குழப்பத்தில், அவ
நம்பிக்கையில் இருந்த சீடர்கள் இயேசுவின் பாடுகளைக் குறித்த
தெளிவைப் பெறுகிறார்கள், அவர்மீது நம்பிக்கை கொள்ளத்
தொடங்குகிறார்கள் என்றும் நாம் புரிந்துகொள்ளலாம்.
இயேசுவின் உருமாற்ற நிகழ்வில் மூவொரு கடவுளின் பிரசன்னமும்
இருக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். எப்படி என்றால்,
இயேசுவும் மோசேயும் எலியாவும் தொடர்ந்து
பேசிகொண்டிருக்கும்போது, ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல்
நிழலிடுகிறது. அந்த மேகத்தினின்று, "என் அன்பார்ந்த மைந்தர்
இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவி
சாயுங்கள்" என்ற குரல் ஒலிக்கிறது (மத் 17:5). மேகம் என்பது
பழைய ஏற்பாட்டில் கடவுளின் பிரசன்னத்தை உணர்த்தக்கூடியதாக
இருக்கின்றது (விப 19:9). ஆகவே, இயேசுவின் உருமாற்றத்தின்
மூலமாக இயேசு ஒரு சாதாரண மனிதர் அல்ல, இறைவனின் திருமைந்தன்,
அவருடைய விண்ணக மகிமையின் ஒரு பகுதிதான் இந்த உருமாற்றம் போன்ற
செய்திகள் வலியுறுத்தப்படுகின்றது.
இவ்விழா ஏழாம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்பட்டு
வந்திருக்கின்றது. 1456 ஆம் ஆண்டுதான் திருத்தந்தை மூன்றாம்
கலிஸ்துஸ் என்பவர் இவ்விழாவை ஆகஸ்ட் 6 ஆம் தேதி உலகம்
முழுவதும் கொண்டாடப் பணித்தார். அன்றிலிருந்து இன்று வரை
இவ்விழா அந்நாளிலேயே கொண்டாடப்பட்டு வருகின்றது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
இயேசுவின் உருமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்ல
நாளில், இவ்விழா நமக்கு உணர்ந்து செய்தி என்ன என்று
சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
1. இயேசுவுக்கு இறைவனுக்கு செவிசாய்த்தல்
இயேசுவின் உருமாற்றத்தின் போது ஒளிமயமான மேகத்திலிருந்து
ஒலித்த குரல், "இவரே என்னுடைய அன்பார்ந்த மைந்தர். இவர்
பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்கு செவிசாயுங்கள்"
என்றது. அப்படியானால் நாம் இயேசுவுக்கு செவிகொடுத்து
வாழவேண்டும். அப்படி நாம் வாழ்கின்றபோது இறைவன் நம் பொருட்டு
பூரிப்படைவார். அது மட்டுமல்லமால், நிலைவாழ்வைப்
பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி. நற்செய்தியில் பேதுரு ஆண்டவர்
இயேசுவிடம், "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு
அளிக்கும் வார்த்தைகள் உம்மிடதானே உள்ளன" (யோவா 6: 68) என்று
கூறுவார். ஆம், இயேசுவின் வார்த்தைகள் வாழ்வுதரக் கூடிய
வார்த்தைகள். அவருடைய வார்த்தைக்கு நாம் செவிமடுத்து
வாழும்போது நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வோம் என்பதில் எந்தவித
சந்தேகமும் இல்லை.
நாம் இயேசுவின் குரலுக்கு செவிமடுத்து வாழ்கின்றோமா என
சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம்
யாராருக்கெல்லாமோ செவிகொடுக்கின்றோம். இயேசுவுக்கு
செவிகொடுப்பதில்லை. அதனாலேயே நாம் நிலைவாழ்வைப் பெற
தகுதியற்றுப் போய்விடுகின்றோம். ஆகவே நாம் இயேசுவுக்கு
செவிகொடுத்து வாழும் மக்களாவோம்.
2. இன்பமான வாழ்வுக்கு, துன்பங்களை ஏற்கத் துணிய வேண்டும்
இவ்விழா நமக்கு உணர்த்தும் மிக முக்கியமான செய்தி துன்பங்களை
ஏற்றுக்கொள்வதாகும். இயேசு கிறிஸ்து மானுட மீட்புக்காக
பாடுகளை, சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்டார்; துன்பத்தின் வழியே
இன்பமான வாழ்க்கையை அடைய முடியும் என்பதை எடுத்துச் சொன்னார்.
ஆனால் இதைப் புரிந்துகொள்ளாத சீடர்கள் குறிப்பாக பேதுரு
இயேசுவிடம், ஆண்டவரே உமக்கு இந்த துன்பம் வேண்டாம் என்று
தடுக்கப் பார்க்கின்றார். அதனால்தான் இயேசு அவரைக்
கடிந்துகொள்கிறார். நாம் துன்பங்களை மன உறுதியோடு ஏற்கின்றபோது
மகிழ்வான வாழ்வைப் பெறுவோம் என்பது உறுதி.
ஒருமுறை கோவில் சிலையும் வாயிற்படியும் பேசிக்கொண்டன.
வாயிற்படி வருத்தமாய் சொன்னது: "இருவரும் ஒரே மலையில்தான்
பாறையாய்க் கிடந்தோம். ஒரே கோவிலில் நீ சிலையானாய். நான்
படியானேன். வருபவர்கள் என்னை மிதிக்கிறார்கள். உன்னைத்
துதிக்கிறார்கள். இது என்ன நியாயம்?". அதற்கு சிலை சொன்னது,
"உன்னையும் என்னையும் ஒரே உளிதான் பரிசோதித்தது. நான் என் மேல்
விழுந்த அடிகளை ஏற்றேன். நீ அதற்கு எதிர்ப்பு காட்டினாய்.
அடிகள் நம்மை அழிப்பதற்கல்ல, செதுக்குவதற்கு. இதைப் படியாததால்
நீ படியாகவே இருக்கின்றாய்" என்று கூறியது.
ஆம், நாம் வலிகளைத், துன்பங்களைத் தாங்கிக்கொண்டு வாழும்போது
அதனால் உயர்வடைவோம் என்பது உண்மை. எனவே, இயேசுவின் உருமாற்றப்
பெருவிழாவில், அவருக்கு செவிமடுத்து வாழ, துன்பங்களைத்
துணிவோடு ஏற்றுக்கொள்ள தீர்மானம் எடுப்போம். அதன்படி வாழ
முயல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மறையுரைச் சிந்தனை (ஆகஸ்டு 06)
இன்று திருச்சபையானது ஆண்டவர் இயேசுவின் உருமாற்றப்
பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இவ்விழா கி.பி.நான்காம்
நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டு வரையிலான காலக் கட்டத்திலிருந்து
கொண்டாடப் பட்டு வருகிறது. ஆனால் 1456 ஆம் ஆண்டு கிறித்தவர்கள்
துருக்கியவர்களை வெற்றிகொண்டதன் பேரில் அப்போது திருத்தந்தையாக
இருந்த முதலாம் கலிஸ்டஸ் என்பவர்தான் இதனை உலகம் முழுவதும்
கொண்டாடப் பணித்தார். அன்றிலிருந்துதான் இவ்விழா உலகம் முழுவதும்
கொண்டாடப்பட்டு வருவதாக வரலாறு சொல்கிறது.
இப்போது ஆண்டவர் இயேசுவின் உருமாற்றப் பெருவிழா நமக்கு என்ன
செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு
செய்வோம்.
முதலாவதாக இவ்விழா ஆண்டவர் இயேசுவின் விண்ணக மகிமையை அவருடைய
சீடர்களும், அவருடைய மக்களாகிய நமக்கும் எடுத்துரைப்பதாக இருக்கின்றது.
நற்செய்தியின் இந்த பகுதிக்கு முன்பாக இயேசு தன்னுடைய சீடர்களிடம்
தான் அடைய இருக்கும் சிலுவைச் சாவு, மரணம் ஆகியவற்றைப் பற்றி
பேசுகிறார். இதனால் குழம்பிபோன இயேசுவின் சீடர்கள் 'இயேசு உண்மையிலே
மெசியாதானா ? என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய குழப்பத்தைப்
போக்கவே இயேசுவின் இந்த உருமாற்ற நிகழ்வு ஏற்படுகின்றது.
தூய பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய இரண்டாம் வாசகத்தில் அவர் கூறுவார், "நாங்கள் இயேசுவின்
மாண்பை நேரில் கண்டவர்கள். 'என் அன்பார்ந்த மகன் இவரே. இவர்
பொருட்டு நான் பூரிப்படைக்கிறேன்' என்று மாட்சிமிகு விண்ணகத்திலிருந்து
அவரைப் பற்றிய குரல் ஒலித்தபோது தந்தையாகிய கடவுளிடமிருந்து மதிப்பும்,
மாட்சியும் பெற்றார். தூய மலையில் அவரோடு இருந்தபோது விண்ணகத்திலிருந்து
வந்த இக்குரலொலியை நாங்களே கேட்டோம்" என்று. ஆக, இயேசுவின் உருமாற்ற
நிகழ்வு, இயேசுவின் சீடர்கள் அவரை இறைமகன், மெசியா என ஏற்றுக்கொள்ளவேண்டும்
என்பதற்காக நிகழ்ந்தது என்று கூடச் சொல்லலாம்.
அடுத்ததாக இயேசுவின் உருமாற்ற நிகழ்வு, எருசலேமில் அவர் (இயேசு)
அடைய இருக்கும் துன்பம், சிலுவைச் சாவு போன்றவற்றின் முன் அடையாளமாக
இருக்கின்றது. அதைக் குறித்துப் பேசத்தான் மோசேயும், எலியாவும்
அங்கு வந்தார்கள் என்று விவிலிய அறிஞர்கள் சொல்வார்கள். இயேசு
தான் அனுபவிக்கப் போகும் பாடுகள், சிலுவைச் சாவு போன்றவற்றைக்
கண்டு பயப்படவில்லை. மாறாக அதனைத் துணிவுடன் ஏற்றார். அதன்வழியாக
நமக்கு மீட்பினைப் பெற்றுத் தந்தார். ஆகவே இயேசுவின் சீடர்களாக
இருக்கும் நாமும் நமது வாழ்வில் வரும் துன்பங்களைத் துணிவுடன்
தாங்கிக்கொண்டு தொடர்ந்து நடப்போம். இந்த மண்ணுலகிற்கு உப்பாக,
ஒளியாக மாறுவோம்.
அகில உலகத் திருச்சபையின் தலைவராக, பாப்பரசராக இருபத்து ஏழு ஆண்டுகள்
இருந்தவர் முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள்.
2005 ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி இந்த மண்ணுலகை விட்டுச் சென்றவர்.
அவருக்கு புற்று நோய், இடுப்பு வலி, முதுகு வலி, உடல் நடுக்கம்
போன்ற பல்வேறு வியாதிகள் இருந்தன. அப்படியிருந்தும் அவர்
திருச்சபையை சிறப்பாக வழிநடத்தி வந்தார்.'
ஒருமுறை நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஒரு இளம் பத்திரிக்கையாளர்
அவரிடம், "திருத்தந்தை அவர்களே, உங்களுக்கு ஏராளமான நோய்கள் இருக்கின்றன.
உடலில் அடிக்கடி நடுக்கம் ஏற்படுகிறது. வயது வேறு ஆகிக்கொண்டிருக்கிறது.
அதனால் நீங்கள் திருத்தந்தை பொறுப்பை விட்டு விலகி, அதனை
வேறொருவருக்குக் கொடுக்கலாமே?" என்று கேட்டார்.
அதற்கு திருத்தந்தை அவர்கள், "இயேசு சிலுவையில் வேதனையை அனுபவித்தபோது
உங்களால் அவரை இறக்கிவிட முடிந்ததா? இல்லை அவர்தான் சிலுவையே
வேண்டாம் என்று இறங்கி வந்தாரா?. அவர் சிலுவைச் சாவை துணிவுடன்
ஏற்றுக்கொண்டார். அதுபோன்றுதான் நானும் எனக்கு வந்த நோய் என்னும்
துன்பத்தை துணிவோடு ஏற்றுக்கொண்டு இயேசுவுக்காக சான்று பகர்வேன்"
என்றார்.
இதைக் கேட்டு கேள்வி கேட்டவர் அமைதியானார். ஆம், திருத்தந்தை
இரண்டாம் ஜான் பால் அவர்கள் தனக்கு வந்த துன்பத்தை துணிவோடு ஏற்றுக்கொண்டார்.
அதனால்தான் கடவுளால் அவர் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.
நாமும் வாழ்வில் நமக்கு வரும் துன்பங்களைத் துணிவோடு
தாங்கிக்கொள்வோம். இயேசு விட்டுச் சென்ற பணியை தொடர்ந்து
செய்வோம்.
நிறைவாக இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசுவைப் பார்த்து,
"இவரே என்னுடைய அன்பார்ந்த மைந்தன். இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்"
என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலிக்கிறது. இயேசு கிறிஸ்து
எப்போதும் தந்தையின் திருவுளம் என்ன? அவருடைய மீட்புத் திட்டம்
என்ன? என எல்லாவற்றையும் உணர்ந்து, அதன்படி தன்னுடைய
வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, கடவுளுக்கு உகந்த வாழ்க்கை
வாழ்ந்தார். அதனால்தான் கடவுளிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு
பாராட்டைப் பெறுகிறார். நாமும் இறைவனின் திருவுளம் என்ன என்பதை
அறிந்து, அதன்படி நம்முடைய வாழ்வை அமைத்துகொள்ளும்போது, நாமும்
கடவுளுக்கு உகந்த அன்பார்ந்த மக்களாகின்றோம்
ஆகவே, இயேசுவின் உருமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில்
இயேசுவே இறைமகன் என நாம் ஏற்றுக்கொண்டு வாழ்வோம். அவரைப்
போன்று துன்பங்களை துணிவுடன் ஏற்கத் துணிவோம். அதன்வழியாக கடவுளின்
அன்பார்ந்த மக்களாவோம், இறையருள் நிறைவாய் பெறுவோம்
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
ஆண்டவரின் தோற்றமாற்றம் விழா 06 08 2019
விடிவெள்ளி
நாளை நம் ஆண்டவரின் தோற்றமாற்றப் (உருமாற்றம்) பெருவிழாவை நாம்
கொண்டாடுகிறோம். தாபோர் மலையில் தன் நெருங்கிய சீடர்கள்
பேதுரு, யோவான், யாக்கோபு முன் உருமாறுகின்றார் இயேசு. எலியாவும்,
மோசேயும் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருக்கின்றனர். மேகத்திலிருந்து
தந்தையின் குரல் கேட்கிறது.
இந்த நிகழ்வைப் பற்றி தன் திருஅவைக்கு எழுதுகின்ற பேதுரு
(நாளைய இரண்டாம் வாசகம்) மிக அழகான வரியோடு நிகழ்வை
நிறைவுசெய்கின்றார்:
'பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும்வரை
அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது' (2 பேதுரு
1:19)
கடந்த வாரம் சந்திர கிரகணம் தோன்றியது. அந்த நிகழ்வில் நிலவு
செந்நிறமாய் ஒளிவீச அதன் அருகில் குட்டியாய் வெள்ளையாய்
செவ்வாய் கிரகம் மின்னியது. ஒவ்வொரு நாள் காலையிலும் நிலவிற்கு
அருகில் தெரியும் விடிவெள்ளி புதன் கிரகம் என்பதை நாம் அறிவோம்.
பொழுது புலரும்போதுதான் அந்த விடிவெள்ளி தோன்றும். அந்த
விடிவெள்ளி அந்நேரம் தோன்றுவதால் அது அதுவரைக்கும் மறைந்திருந்தது
என்பது பொருள் அல்ல. மாறாக, அது ஒட்டுமொத்த இருளில் எங்கோ ஒளிர்ந்துகொண்டிருந்தது.
ஆக, விடிவெள்ளி என் உள்ளத்தில் எழும்வரை அது எங்கோ ஒளிரும் விளக்குத்தான்.
இன்று தூய அகுஸ்தினாரின் 'ஒப்புகைகள்' நூலில் அவரின் மனமாற்றப்
பகுதியினை (நூல் 8) மீண்டும் வாசித்துக்கொண்டிருந்தேன். தன் நண்பன்
ஆல்பியுஸ் கிளாடியேட்டர்களின் வெற்றியைத் தன் வெற்றியாகப்
பாவிப்பதைப் பார்த்து அகுஸ்தினார், 'நீ வெற்றி பெறும் வரை மற்றவர்கள்
பெறும் வெற்றி வெறும் வேடிக்கையே. ஆக, நீ உன் வாழ்வை அதிலிருந்து
திருப்பி அவசியமானவற்றில் அக்கறை கொள்' என்கிறார். நாம் என்னதான்
கிரிக்கெட் பார்த்து கோஹ்லி அவர்களின் அல்லது கால்பந்து
பார்த்து பிரான்சின் வெற்றியைக் கொண்டாடினாலும், அந்த வெற்றி
நமதாகிவிடப்போவதில்லை. அது எங்கோ ஒளிரும் விளக்காக இருக்கின்றது.
ஆனால், என் வாழ்வில் நானே வெற்றிபெறும்போது அது என் வாழ்வின்
விடிவிளக்காக மாறுகிறது.
இயேசுவின் உருமாற்றத்தின்போது எழுந்த ஒளியை எல்லாரும்
பார்த்திருப்பார்கள். ஆனால், அந்த நிகழ்வில் அவர்கள் பங்கேற்காததால்
அது எங்கோ மின்னும் ஒளிதான். ஆனால் உடனிருந்த திருத்தூதர்களுக்கு
அது விடிவெள்ளியாக மாறி அவர்களின் வாழ்வின் விடியலை
முன்னுரைக்கின்றது.
எங்கோ ஒளிரும் விளக்கு என் வாழ்வின் விடிவெள்ளியாக மாற நான் இயேசுவோடு
மலைமேல் ஏற வேண்டும். மலையின் தனிமையை அனுபவிக்க வேண்டும்.
காட்சிகள் மாறி மறைந்தாலும், மீண்டும் தனிமை பிறந்தாலும் அதை
ஏற்றுக்கொள்ள வேண்டும். தந்தையின் குரல் கேட்க வேண்டும்.
என் வாழ்வின் வெற்றி எது என்பதை எனக்கு வெளியில் இருப்பவர்
முடிவுசெய்யக்கூடாது. எனக்கு உள்ளிருக்கும் நபர்தான்
முடிவுசெய்ய வேண்டும். என் வாழ்வின் விடிவெள்ளியை நான் காண, அதுவே
என் வாழ்வின் உருவை மாற்ற உருமாற்றத்தின் ஆண்டவர் அருள்கூர்வாராக!
Rev. Fr. Yesu Karunanidhi
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
முன்னுரை:ஆண்டவரின்
தோற்ற மாற்றப் பெருவிழா
=================================================================================
நண்பனாய் நாளும் தோள் கொடுத்து, கரம் பிடித்து, அரவணைத்து
அன்பு செய்யும் நண்பனாகிய நம் இயேசுவிடம் நலன்களை நாடி வந்துள்ள
உங்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் கூறி ஆண்டவரின்
உருமாற்றப் பெருவிழா திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு நேசத்தோடு
வரவேற்கின்றோம்.
அன்பினாலே நம் அனைவருக்கும் வாழ்வளித்து, அந்த அன்பினை இன்று
பல உறவுகள் வழியாக நமக்கு வெளிப்படுத்தும் இறைவனுக்கு நன்றி
சொல்லி, சில நேரங்களில் அந்த அன்பினை உணராமல் இருந்த தருணங்களுக்காக
இறைவனிடம் மன்னிப்பு வேண்டுவோம். பிரிந்து போன, இழந்த உறவுகளுக்காக,
தோழமைகளுக்காக இன்றைய திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.
இன்றைக்கு நமக்குத் தரப்பட்டுள்ள வாசகங்கள் உருமாற்றத்தையே மையமாகக்
கொண்டுள்ளன.
இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் தானியேல் கண்ட கனவின்
காட்சி விளக்கப்படுகிறது. அழிந்து போகாத அரசில் ஆட்சி செய்யும்
இறைவனின் மாட்சியும், மானிட மகனின் வருகையும் இங்குக் காட்சிப்படுத்தப்படுகிறது.
இன்றைய திருப்பாடலில், தாவீது அரசர் உலகு அனைத்தையும் ஆளும் உன்னதராம்
ஆண்டவரின் அரசின் மாண்பினைப் பாடுகின்றார். தெய்வங்கள் அனைத்திற்கும்
மேலான இறைவனைப் போற்றிப் புகழ்கின்றார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் பேதுரு உருமாற்றத்தின்
போது ஆண்டவர் இயேசு பெற்ற மாட்சியை சான்று பகர்கின்றார். வரவிருக்கும்
மானிட மகனின் வல்லமையையும், தந்தையாம் கடவுளிடமிருந்து இயேசு
பெற்ற மதிப்பினையும் பறைசாற்றுகின்றார்.
இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசுவின் உருமாற்ற நிகழ்வு
லூக்கா நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. முந்தின பகுதிகளில்
தன் சாவினை முன்னறிவித்த இயேசு, இங்குத் தான் பெறப் போகும்
விண்ணக மாண்பினைக் காட்சிப்படுத்துகின்றார். இறைவனும் 'தன் அன்பார்ந்த
மைந்தர் இவர்' எனச் சான்று பகர்கின்றார்.
துன்பங்களைக் கடந்து, சாவினை வென்றதாலே இறைவனின் மகனாய் அவரது
வலப்புறம் அமர்ந்து ஆட்சி செய்கின்றார் இயேசு. நாமும் துன்பங்களில்
துவண்டு போகாமல், இறைத் திருவுளம் ஏற்று நடக்கும் போது இறைவனின்
பிள்ளைகளாகும் பேரின்பம் பெறுகிறோம். இயேசுவின் உருமாற்றம் அவருடைய
சீடர்களுக்கு புது ஆற்றலையும், உத்வேகத்தையும் அளித்தது. இன்றும்
பலிபீடத்தில் காணிக்கையாக்கப்படும் கோதுமை அப்பத்திலும்,
திராட்சை இரசத்திலும் ஏற்படும் உருமாற்றமே இயேசுவின் திரு உடலாகவும்,
திரு இரத்தமாகவும் மாறி நமக்கு நிலை வாழ்வை அளிக்கின்றது.
நாம் நம்மையே எந்த நிலையில் உருமாற்றுகின்றோம்? சிந்திப்போம்.
அன்பின் உச்சக்கட்டமாக தன் உயிரை ஈந்து, இன்றும் ஒவ்வொரு
நாளும் பலிபீடத்தில் தன்னையே தியாகப் பலியாக்கும் இறைவனிடத்தில்
அன்பினைக் கற்றுக் கொள்வோம். அன்பின் மக்களாக உருமாறுவோம். நம்மிடையே
வாழும் அனைவருக்கும் அன்பினைப் பகிர்ந்தளிப்போம். மேலும் நம்மோடு
நம் அன்பினைப் பரிமாறிக் கொள்ளும் நண்பர்களின் நலன்களுக்காக இறைவனிடம்
மன்றாடுவோம். நம் மேல் கொண்ட அன்புக்காக தன் இன்னுயிரை ஈந்த நம்
நண்பன் இயேசுவிடத்தில் நம்மையே ஒப்புக்கொடுப்போம்.
இந்த வாரம் இன்னும் சிறப்பாக இளையோர் ஞாயிறை தமிழக ஆயர் பேரவை
சிறப்பிக்கின்றது. நம்மிடையே வாழும் இளைய தலைமுறையினருக்காக இறைவனிடத்தில்
சிறப்பாக மன்றாடுவோம். "இவர் என் அன்பார்ந்த மகன்" என்று இயேசுவைச்
சான்று பகர்ந்த இறைவன், நம்மையும் இவன் என் மகன்(ள்) என்று
சான்று பகர நம்மையே இறைத் திருவுளத்திற்கு அர்ப்பணிப்போம். உயிர்
அளித்துக் காத்த நம் நண்பன் இயேசுவுக்கு நண்பர்கள் தின
வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வோம்.
மன்றாட்டுக்கள்:
அழிந்து போகாத அரசில் ஆட்சி செய்பவரே எம் இறைவா!
உம் இறையரசினை இவ்வுலகில் கட்டியெழுப்ப அயராது உழைக்கும்
திருச்சபைப் பணியாளர்களை ஆசீர்வதியும். இவர்கள் மேற்கொள்ளும்
திருச்சபைப் பணிகளில் உமது அருட்கரம் இவர்களோடு இருந்து வழிநடத்த
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2.உன்னதத்தில் ஆட்சி செய்யும் உன்னதரே எம் இறைவா!
நாடுகளை ஆளும் ஆட்சியாளர்களை ஆசீர்வதியும். இவர்கள் தங்களிடம்
ஒப்படைக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக தம்மையே உருமாற்றும்
தியாக உள்ளத்தைத் தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
இளையோரை உம் இறை வழியில் நடத்துபவரே எம் இறைவா!
எம்மிடையே வாழும் இளைய தலைமுறையினரை ஆசீர்வதியும். இவர்கள் உலகின்
மாயக் கவர்ச்சிகளுக்கு உட்படாமல், தம்மையே உம் இறைத் திருவுளத்திற்கு
கையளித்து, உமது மகனா(ளா)க வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பனானவரே எம் இறைவா!
அன்பு காட்டி, அரவணைக்கும் உள்ளங்களை ஆசீர்வதியும். பல்வேறு
சூழ்நிலைகளினால் பிரிந்து போன உறவுகளை இணைத்து, உயிராய் நேசித்தவர்களை
இழந்து வாடும் உள்ளங்களுக்கு நீரே நல்ல நண்பனாக இருந்து வழிநடத்த
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
5
=================================================================================
|
|