Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         03 ஆகஸ்ட் 2019  
                                    பொதுக்காலம் 17ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 

=================================================================================
யூபிலி ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப் பகுதிக்கும் உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும்.

லேவியர் நூலிலிருந்து வாசகம் 25: 1, 8-17


ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயிடம் கூறியது: தொடர்ந்து வரும் ஏழு ஓய்வுஆண்டுகளை - ஏழேழு ஆண்டுகளாக - ஏழுமுறை எண்ணிக்கையிட்டு அவை நாற்பத்தொன்பது ஆண்டுகள் ஆகும். ஏழாம் மாதம் பத்தாம் நாள் எக்காள ஒலி எழட்டும்; பாவக் கழுவாய் நிறைவேற்றும் அந்த நாளில் உங்கள் நாடெங்கும் எக்காளம் முழங்கச் செய்யுங்கள்.

ஐம்பதாம் ஆண்டைத் தூயதாக்கி, நாட்டில் வாழ்வோருக்கு எல்லாம் தன்னுரிமை அறிவியுங்கள். அது உங்கள் யூபிலி ஆண்டு - அந்த ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப் பகுதிக்கும் உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும். ஐம்பதாம் ஆண்டு உங்களுக்கு யூபிலி ஆண்டு; அந்த ஆண்டு பயிரிட வேண்டாம்; தானாய் விளைந்ததை அறுக்க வேண்டாம். கிளை நறுக்காத திராட்சைக் கொடியினின்று கனி சேர்க்கவும் வேண்டாம்;

ஏனெனில், அந்த ஆண்டு யூபிலி ஆண்டு; அது உங்களுக்குத் தூயது. நிலத்தினின்று அவ்வப்போது கிடைக்கும் பலனை உண்ணுங்கள். அந்த யூபிலி ஆண்டில் அவரவர் தம் காணியாட்சிக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். உங்களுக்குள் ஒருவனுக்கு நிலத்தை விற்கவோ அவனிடத்தில் வாங்கவோ செய்யும்பொழுது ஒருவரை ஒருவர் ஏமாற்றாதிருங்கள்.

யூபிலி ஆண்டிற்குப் பின், ஆண்டுகளைக் கணக்கிட்டு அவற்றின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாங்கலாம். பயன்படுத்தும் ஆண்டுகளுக்கு ஏற்ப அவன் அதை உனக்கு விற்கவேண்டும். பலனைப் பயன்படுத்தும் ஆண்டுகள் எண்ணிக்கை மிகுந்திருந்தால் விலையை உயர்த்த வேண்டும்; குறைந்திருந்தால் விலையைக் குறைக்க வேண்டும். ஏனெனில், பயனுள்ள ஆண்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவே அவன் விற்கிறான். உங்களுள் எவரும் தம் இனத்தாரை ஏமாற்றலாகாது. கடவுளுக்கு அஞ்சி நடங்கள்! ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 67: 1-2. 4. 6-7 (பல்லவி: 3)
=================================================================================
பல்லவி: கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்ந்து போற்றிடுவர்.

1 கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! 2 உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். பல்லவி

4 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். பல்லவி

6 நானிலம் தன் பலனை ஈந்தது; கடவுள், நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார். 7 கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லை வரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 5: 10

அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஏரோது யோவானின் தலையை வெட்டச் செய்தான். யோவானுடைய சீடர் வந்து இயேசுவிடம் அறிவித்தனர்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-12


அக்காலத்தில் குறுநில மன்னன் ஏரோது, இயேசுவைப் பற்றிய செய்தியைக் கேள்வியுற்றான். அவன் தன் ஊழியரிடம், "இவர் திருமுழுக்கு யோவான்தான். இறந்த யோவானைக் கடவுள் உயிர்பெற்றெழச் செய்தார். இதனால்தான் இந்த வல்ல செயல்களை இவர் செய்கிறார்" என்று கூறினான்.

ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவியாகிய ஏரோதியாவின் பொருட்டு யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில் யோவான் அவனிடம், "நீர் அவளை வைத்திருப்பது முறையல்ல" என்று சொல்லி வந்தார்.

ஏரோது அவரைக் கொலை செய்ய விரும்பினான்; ஆயினும் மக்கள் கூட்டத்தினர் அவரை ஓர் இறைவாக்கினர் எனக் கருதியதால் அவர்களுக்கு அஞ்சினான்.

ஏரோதின் பிறந்த நாளில் ஏரோதியாளின் மகள் அவையினர் நடுவில் நடனம் ஆடி ஏரோதை அகமகிழச் செய்தாள். அதனால் அவள் எதைக் கேட்டாலும் அளிப்பதாக அவன் ஒரு வாக்குறுதியை ஆணையிட்டு அறிவித்தான்.

அவள் தன் தாய் சொல்லிக் கொடுத்தபடியே, "திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இங்கேயே எனக்குக் கொடும்" என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் வருந்தினான்; ஆனாலும் தான் விருந்தினர்முன் ஆணையிட்டதால் அதை அவளுக்குக் கொடுக்கக் கட்டளையிட்டான்; ஆள் அனுப்பிச் சிறையில் இருந்த யோவானின் தலையை வெட்டச் செய்தான்; அவருடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வரச் செய்து அதைச் சிறுமியிடம் கொடுத்தான். அவளும் அதைத் தன் தாயிடம் கொண்டு சென்றாள்.

யோவானுடைய சீடர் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்; பின்னர் இந்நிகழ்ச்சியினை இயேசுவிடம் போய் அறிவித்தனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை:

பிள்ளையையும் பாவம் செய்ய தூண்டும் செயலால், பாவத்திற்கு மேல் பாவம் செய்து, பாவத்தை பலப்படுத்திக் கொள்கின்றாள்.

குழந்தைக்கு இடறலாக இருப்பவர்களின் கழுத்தில் எந்திர கல்லைக் கட்டி ஆழ்கடலில் ஆழ்த்துவது நலம்.

குழந்தைகளுக்கு தாயே முதல் ஆசிரியர்.

தூயின் வழியே குழந்தைகள் தன்னுடைய தகப்பனையும் அறிகிறார்கள். மொழியையும் அறிகிறார்கள். தங்களது தெய்வத்தையும் அறிகிறார்கள்.

தவறாக நடந்து, தவறாக கற்றுக் கொடுத்து, தவறாக வழிநடத்தும் போது, குழந்தைகளின் பாவம் தாய்க்கே போய் சேருகின்றது. காரணம் கூடுதலான பொறுப்பு யாருக்கு தரப்பட்டுள்ளதோ அவர்களிடமிருந்து கூடுதலாக எதிர்பார்க்கப்படும் என்று சொல்லுகின்றது இறைவார்த்தை.

பெற்றோர் விழிப்படைந்து கொள்ள வேண்டும்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 லேவியர் 25: 1, 8-17

பாவக் கழுவாய் நிறைவேற்றும் அந்த நாள்...

நிகழ்வு

வாழ்க்கையில் தடுமாறி, தடமாறி வாழ்ந்து வந்து இளைஞன் ஒருவன், ஒருநாள் தன்னுடைய தவற்றை உணர்ந்தான். எனவே, அவன் குருவானவரிடம் சென்று தன்னுடைய பாவங்களை அறிக்கையிட்டு ஒப்புரவு அருளடையாளம் மேற்கொள்ள முடிவுசெய்தான்.

ஒரு குறிப்பிட்ட நாளில் அவன் தான் செய்த பாவங்களையெல்லாம் ஒரு வெள்ளைக் காகிதத்தில் எழுதிக்கொண்டு, குருவானவரிடம் சென்று, அவற்றையெல்லாம் அறிக்கையிட்டான். குருவானவரும் அவனுடைய பாவங்களையெல்லாம் மன்னித்து, அவன் செய்யவேண்டிய பொருத்தனைகளையும் அவனிடம் சொன்னார். அதைக் தொடர்ந்து அவன் கோயிலின் ஓர் ஓரத்தில் முழந்தாள்படியிட்டு, பொருத்தனைகளை நிறைவேற்றத் தொடங்கினான்.

குருவானவர் சொன்ன பொருத்தனைகளை எல்லாம் நிறைவேற்றிவிட்டு, அவன் தான் செய்த பாவங்களையெல்லாம் எழுதி வைத்திருந்த அந்த வெள்ளைக் காகிதத்தைப் பார்த்தான். அதை பார்த்த அவன் அப்படியே ஆச்சரியப்பட்டு போனான். ஆம், அந்த வெள்ளைக் காகிதத்தில் அவன் எழுதி வைத்திருந்த பாவங்கள் எல்லாம் முற்றிலுமாக மறைந்து போயிருந்தன. உடனே அவன் 'கடவுள் என்னுடைய பாவங்களை எல்லாம் மன்னித்து விட்டார்' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டு, அவருடைய அன்பிற்கு உகந்த நல்ல மனிதனாக வாழத் தொடங்கினான்.

பாவம் செய்யும் ஒருவர் தன்னுடைய பாவத்தை உணர்ந்து இறைவனிடம் மன்னிப்புக் கேட்கின்றபோது, அவர் மனதார மன்னித்து ஏற்றுக்கொள்கின்றார் என்ற செய்தியை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய முதல் வாசகத்தில் 'பாவக் கழுவாய் நிறைவேற்றும் அந்த நாளில் உங்கள் நாடெங்கும் எக்காளம் முழங்கச் செய்யுங்கள்' என்று என்றோர் அழைப்பானது விடுக்கப்படுகின்றது. பாவக் கழுவாய் நிறைவேற்றும் அந்த நாளில் எதற்கு எக்காலம் முழங்கவேண்டும். இதற்குப் பின்னால் இருக்கும் பொருளென்ன என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

பாவக்கழுவாய் நிறைவேற்றும் நாள் யூபிலி ஆண்டின் தொடக்கம்

லேவியர் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், யூபிலி ஆண்டில் மக்கள் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதைக் குறித்துப் பேசுகின்றது. அதற்கு முன்னம் பாவக் கழுவாயை நிறைவேற்றவேண்டும் என்பதைக் குறித்துப் பேசுகின்றது. யூபிலி ஆண்டினை இறைவாக்கினர் எசாயா, 'ஆண்டவரின் அருள்தரும் ஆண்டு' (எசா 61: 2) என்று குறிப்பிடுகின்றார். அப்படியானால் அருள்தரும் ஆண்டிற்குள் ஒருவர் நுழையவேண்டும் என்றால், அவர் தூயவராக, மாசற்றவராக இருக்கும். அதனால்தான் ஆண்டவரின் அருள்தரும் ஆண்டாம் யூபிலி ஆண்டில் நுழைவதற்கு முன்னம் பாவக் கழுவாய் நிறைவேற்றும் நாளானது இடம்பெறுகின்றது. இந்த நாளில் இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் பாவக் கழுவாயை நிறைவேற்றி அதன் பின் யூபிலி ஆண்டில் நுழைய ஆண்டவர் அழைக்கின்றரர். .

இங்கு இன்னொரு முக்கியமான விடயத்தையும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில், யூபிலி ஆண்டில் நான்கு முதன்மையான அம்சங்கள் இடம்பெறுகின்றன. ஒன்று, பாவத்திற்குப் பரிகாரம் செய்தல். அதைத்தான் மேலே நாம் பார்த்தோம். இரண்டு, அடிமைகள் விடுவிக்கப்படுதல் (விப 21: 2). மூன்று, நிலத்திற்கு ஓய்வுதருதல். நிலத்திற்கு ஓய்வுதருதல் என்றால், அதற்கு முந்தைய ஆண்டுகளில் விளைந்தவற்றைக் கொண்டு தங்களைப் பராமரித்துக் கொள்ளுதல் 4. மறுசீரமைப்பு. இதைவேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், யார்க்கு நிலம் சொந்தமோ, அவர்க்கு அந்த நிலமானது கொடுக்கப்படவேண்டும்.

இந்த நான்கு முக்கியமான அம்சங்களும் இடம்பெறுவதால்தான் இது யூபிலி ஆண்டாக அழைக்கப்படுகின்றது. அத்தகைய ஆண்டிற்குள் நுழைவதற்கு ஒருவர் பாவக் கழுவாயை நிறைவேற்றுவது மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது.

ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவித்து மக்கட்கு விடுதலையளித்த இயேசு

லேவியர் புத்தகத்தில் சொல்லப்படுகின்ற யூபிலி ஆண்டினை இஸ்ரயேல் மக்கள் கொண்டாடியதாக அல்லது கடைப்பிடித்ததாக விவிலியத்தில் எங்கும் குறிப்பு இல்லை. ஆனால், நற்செய்தியில் இயேசு, 'ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்க வந்தேன்' என்று கூறுகின்றார். இதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது எனச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

இயேசு தன்னுடைய போதனையினாலும் செய்த வல்ல செயல்களாலும் யூபிலி ஆண்டு தரக்கூடிய விடுதலையையும் இளைபாற்றியையும் அல்லது ஓய்வினையும் அளித்தார். அதனால்தான் அவர் அவ்வாறு கூறினார். நாமும் இயேசு தருகின்ற இளைப்பாற்றியையும் விடுதலையும் பெற்றுக்கொள்ள, யூபிலி ஆண்டிற்குள் ஒருவர் நுழைவதற்கு எப்படி அவர் பாவக் கழுவாய் நிறைவேற்றி தூயவராக இருக்கவேண்டுமோ அதுபோன்று நாமும் நம்மிடம் இருக்கின்ற பாவங்களைக் களைந்துவிட்டு நம்பிக்கையோடு இருக்கவேண்டும். அப்படி நாம் இருந்தோமெனில், அவர் தருகின்ற எல்லா ஆசியையும் பெற்றுக்கொள்ள முடியும்.

சிந்தனை

'ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன்' (திபா 51: 7) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் திருப்பாடல் ஆசிரியரைப் போன்று நமது உள்ளத்தைத் தூய்மையாக்க இறைவனிடம் மன்றாடுவோம். அதற்கு நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்து இறைவனிடம் மன்னிப்புக் கேட்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 14: 1-12

முறையல்ல...

நிகழ்வு

அமெரிக்காவில் தோன்றிய மிகப்பெரிய தொழிலதிபரான ஆண்ட்ரூ கார்னேகியிடம் (Andrew Carnegie) சமூக சேவகர் ஒருவர் வந்தார். அவர் மிகவும் வறிய நிலையில் இருந்தார்.

அவர் ஆண்ட்ரூ கார்னேகியிடம், ஐயா! உங்களிடம் ஒருசில வார்த்தைகள் பேசவேண்டும். என்னுடைய வார்த்தைகட்கு நீங்கள் செவிமடுப்பீர்களா? என்றார். ஆண்ட்ரூ கார்னேகியிடம் அவரிடம், ம்ம்ம்... என்னவென்று சொல்லுங்கள்... கேட்கின்றேன் என்றார். உடனே அந்தச் சமூக சேவகர், நான் சொல்கின்றேன் என்று என்மேல் சினம் கொள்ளவேண்டாம்... உங்களைப் போன்ற செல்வம் படைத்தவர்கள் எங்களைப் போன்ற வறியவர்கட்குச் சேரவேண்டியதையும் சேர்த்து வைத்திருப்பதால்தான், நாங்கள் இப்படி வறியநிலையில் இருக்கின்றோம் என்றார்.

அந்தச் சமூக சேவகர் சொன்ன வார்த்தைகள் ஆண்ட்ரூ கார்னேகியை ஏதோ செய்தன. உடனே அவர் தன்னுடைய உதவியாளரை அழைத்தார். அவரிடம், இப்பொழுது என்னுடைய சொத்து மதிப்பு என்ன என்பதையும் உலக மக்கள் தொகை எவ்வளவு என்றும் கணக்கிட்டுச் சொல் என்றார். உடனே அவருடைய உதவியாளர் அந்த இரண்டையும் கணக்கிட்டுச் சொன்னார். பின்னர் ஆண்ட்ரூ கார்னேகி தன்னுடைய உதவியாளரிடம், என்னுடைய சொத்திலிருந்து இந்த உலக மக்கள் தொகையில் ஓர் ஆளுக்குச் சேரவேண்டிய தொகை எவ்வளவு? என்றார். ஒருசில நிமிடங்களில் அவருடைய உதவியாளர், உங்கள் சொத்திலிருந்து இந்த உலகில் உள்ள தனியொரு மனிதர்க்கு சேரவேண்டிய தொகை பதினாறு சென்டுகள் என்றார்.

மறுகணம் ஆண்ட்ரூ கார்னேகி தன்னிடம் இருந்த பதினாறு சென்டுகளை அந்தச் சமூக சேவகரிடம் எடுத்துக் கொடுத்து, உங்கட்குச் சேரவேண்டிய பதினாறு சென்ட் பணத்தை இத்தனை நாளும் நான் வைத்திருந்ததற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். மற்றவர்கட்குச் சேரவேண்டிய பணத்தையும் நான் உடனே கொடுத்துவிடுகிறேன் என்றார்.

ஒரு சாதாரண மனிதர், தன்னுடைய தவற்றைச் சுட்டிக்காட்டியதும் அதனை உடனே மாற்றிக்கொண்ட மிகப்பெரிய பணக்காரரும் கொடைவள்ளலுமான ஆண்ட்ரூ கார்னேகி நமது கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் ஒருவருடைய தவற்றைச் சுட்டிக் காட்டிய பின்னும் அதைத் திருத்திக் கொள்ளாத, ஏன், தவற்றைச் சுட்டிக்காட்டிய திருமுழுக்கு யோவானையே கொல்லத் துணிந்த ஒருவனைக் குறித்து வாசிக்கின்றோம். அவன் வேறு யாருமல்ல ஏரோது மன்னன்தான். உண்மையில் அவன் செய்த தவறுகள் என்னென்ன? அதனால் அவனுக்கு நேர்ந்த கதியென்ன? என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

தவறைச் சுட்டிக்காட்டிய திருமுழுக்கு யோவான்

திருமுழுக்கு யோவான், எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையையும் பெற்றவராய் (லூக் 1: 17) ஆண்டவருடைய பணியைச் சிறப்பாகச் செய்துகொண்டு வந்தார். இந்நிலையில் ஏசாவின் வழிவந்த இதுமேயனாகிய ஏரோது தன் சகோதரர் பிலிப்பின் மனைவியான ஏரோதியாவோடு வாழ்ந்துவந்தான். இதைக் கண்ட திருமுழுக்கு யோவான் அவன் அவ்வாறு வாழ்வது 'முறையல்ல' என எச்சரித்தார். திருமுழுக்கு யோவான் ஏரோதை எச்சரித்ததற்கு முக்கியமான ஒரு காரணம் இருந்தது. அது என்னவெனில், எல்லார்க்கும் எடுத்துக்காட்டாக வாழவேண்டியவன் அரசன். அவனே முறைதவறி வாழ்ந்தால் என்றால், அவனுடைய மக்களும் முறைதவறி வாழநேரிடும். இதனால் முறைதவறி நடக்கும் மக்கள்மீதும் ஆண்டவரின் சினம் வரும் (மலா 3: 5) என்பதால்தான் திருமுழுக்கு யோவான் அவனை எச்சரித்தார். ஆனால், அவன் திருமுழுக்கு யோவானின் குரலைக் கேட்காமல்போனதோடு மட்டுமல்லாமல், அவரையே கொன்று போடுகின்றான்.

தவறுக்கு மேல் தவறுசெய்த ஏரோது

திருமுழுக்கு யோவான் ஏரோதின் தவற்றைச் சுட்டிக்காட்டிய பின்னும் அதற்குச் செவிகொடுக்காமல், ஏரோதியாவிற்குச் செவிமடுத்து யோவானைக் கொன்றுபோட்டதால், மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்தான். அது மட்டுமல்லாமல், அரபு நாட்டவர்களிடம் தோற்றுப் போய் எல்லாவற்றையும் இழந்து, கடைசியில் கால் எனப்படும் பிரான்சு நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டு, ஸ்பெயினில் இறந்து போனான். ஒருவேளை அவன் மட்டும் திருமுழுக்கு யோவானின் பேச்சைக் கேட்டு, இறைவனுக்கு அஞ்சி வாழ்ந்திருந்தால், அவனுடைய வாழ்க்கை சிறப்பானதாக இருந்திருக்கும். என்ன செய்வது! முறையற்ற காரியங்களில் மனத்தைச் செலுத்தினால், இறுதியில் அழிவுதானே மிஞ்சும்.

இன்றும்கூட பலர் பணத்திற்கும் பொருளுக்கும் அதிகாரத்திற்கும் அற்ப சுகத்திற்கும் முறையற்ற வழியில் சென்றுகொண்டிருக்கின்றார்கள். இத்தகையோர் ஆண்டவரின் / அவருடைய அடியாரின் குரலைக் கேட்டு வாழ்வது தேவையானது.

சிந்தன

'உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீங்கள் கீழ்ப்படியாமல் இருந்தால், உங்கள் கண்கள் காண, அவர் அழியச் செய்த மற்ற இனங்களைப் போல், இறுதியில் நீங்களும் அழிந்து போவீர்கள்' (இச 8:20) என்கிறது இறைவார்த்தை.. ஆகையால், நாம் ஆண்டவரின் குரலைக் கேளாமல், அழிந்து போகாமல் இருக்க, அவருடைய குரலைக் கேட்டு அவர்க்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
 


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!