|
|
02 ஆகஸ்ட் 2019 |
|
|
பொதுக்காலம் 17ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
சபையாய்க் கூடி ஓய்வு நாளைப் புனிதமாய்க் கடைப்பிடியுங்கள்.
லேவியர் நூலிலிருந்து வாசகம் 23: 1, 4-11, 15-16, 27, 34b-38
ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீங்கள் சபையாகக் கூடிக்
குறிப்பிட்ட நாள்களில் புனிதமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஆண்டவரின்
பண்டிகை நாள்களாவன: முதல் மாதம் பதினான்காம் நாள் மாலையில் ஆண்டவருக்கான
பாஸ்கா. அந்த மாதம் பதினைந்தாம் நாள் ஆண்டவருக்கான புளிப்பற்ற
அப்பப் பண்டிகை; ஏழு நாள் புளிப்பற்ற அப்பங்களை உண்பீர்கள். பண்டிகையின்
முதல் நாள் சபை கூடும் புனித நாள். அன்று வேலை செய்யலாகாது. ஏழு
நாளும் ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும். ஏழாம் நாள் சபை
கூடும் புனித நாள். அன்று வேலை செய்யலாகாது.
ஆண்டவர் மோசேயிடம் கூறியது: இஸ்ரயேல் மக்களிடம் நீ சொல்ல
வேண்டியது: நான் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டில் நீங்கள் வந்து
அறுவடை செய்யும்போது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க்
கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும். உங்கள் சார்பாக ஏற்கத்
தக்கதாக, குரு அந்தத் தானியக் கதிர்க்கட்டினை, ஓய்வு
நாளுக்குப் பின்வரும் அடுத்த நாளில் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப்
பலியாக்குவார். ஆரத்திப் பலியாகக் கதிர்க் கட்டினைக் கொண்டு வந்த
ஓய்வு நாளின் மறு நாளிலிருந்து ஏழு வாரங்களைக் கணக்கிடவும். ஏழாம்
ஓய்வு நாளுக்கு மறு நாளான ஐம்பதாம் நாளில் ஆண்டவருக்குப் புது
உணவுப் படையலைச் செலுத்துங்கள். அந்த ஏழாம் மாதம் பத்தாம்
நாள், பாவக் கழுவாய் நாள்; புனித சபை கூடும் நாள். அன்று நீங்கள்
உங்களையே தாழ்த்திக் கொண்டு, ஆண்டவருக்கு எரிபலி செலுத்த
வேண்டும். ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளன்று ஆண்டவரின் கூடாரப்
பெருவிழா தொடங்குகின்றது. அது ஏழு நாள்கள் தொடரும். முதல் நாள்
திருப்பேரவை கூடும் நாள்; அன்று எத்தகைய வேலையையும் செய்ய
வேண்டாம். ஏழு நாள்களும் ஆண்டவருக்கு நெருப்புப் பலி
செலுத்துங்கள். எட்டாம் நாளன்று திருப்பேரவை கூடும்; அன்றும்
ஆண்டவருக்கு நெருப்புப் பலி செலுத்துங்கள். அது நிறைவு நாள்.
அன்று எத்தகைய வேலையையும் செய்யலாகாது. ஓய்வு நாளில் ஆண்டவருக்குச்
செலுத்தும் காணிக்கைகள், நேர்ச்சைகள், தன்னார்வப் பலிகள் தவிர,
அந்தந்த நாள்களுக்கு ஏற்ப எரிபலி, உணவுப் படையல், இரத்தப் பலி,
நீர்மப் படையல் முதலிய பலிகளைச் செலுத்தத் தக்கதாகவும் சபையாய்க்
கூடி அந்த நாளைப் புனிதமாய்க் கடைப்பிடியுங்கள். இவையே நீங்கள்
கொண்டாட வேண்டிய விழாக்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
81: 2-3. 4-5. 9-10a (பல்லவி: 1a)
=================================================================================
பல்லவி: நமது வலிமையாகிய கடவுளை மகிழ்ந்து பாடுங்கள்.
2 இன்னிசை எழுப்புங்கள்; மத்தளம் கொட்டுங்கள்; யாழும்
சுரமண்டலமும் இசைத்து இனிமையாய்ப் பாடுங்கள். 3 அமாவாசையில்,
பௌர்ணமியில், நமது திருவிழா நாளில் எக்காளம் ஊதுங்கள். பல்லவி
4 இது இஸ்ரயேல் மக்களுக்குரிய விதிமுறை; யாக்கோபின் கடவுள்
தந்த நீதிநெறி. 5 அவர் எகிப்துக்கு எதிராகச் சென்றபொழுது
யோசேப்புக்கு அளித்த சான்று இதுவே. அப்பொழுது நான் அறியாத
மொழியைக் கேட்டேன். பல்லவி
9 உங்களிடையே வேற்றுத் தெய்வம் இருத்தலாகாது; நீங்கள் அன்னிய
தெய்வத்தைத் தொழலாகாது.
10a உங்களை எகிப்து நாட்டினின்று
அழைத்து வந்த கடவுளாகிய ஆண்டவர் நானே. பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
1 பேது 1: 25
அல்லேலூயா, அல்லேலூயா! "நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும்
நிலைத்திருக்கும்." இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட
நற்செய்தி. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இவர் தச்சருடைய மகன் அல்லவா? எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு
வந்தது?
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 54-58
அக்காலத்தில் இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள
தொழுகைக்கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக்
கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.
அவர்கள், "எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி
இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா?
இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன்,
யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள்
எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு
இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?" என்றார்கள்.
இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு
அவர்களிடம், "தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும்
இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்" என்றார். அவர்களுக்கு
நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச்
செய்யவில்லை.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
லேவியர் 23: 1, 4-11,
15-16, 34b-37
'ஆண்டவர்க்கான பாஸ்கா'
நிகழ்வு
ஐரோப்பாக் கண்டத்தில் அசரியா என்றொரு பெரியவர் இருந்தார். அவர்
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையிலும் ஊர்க்கு வெளியே இருந்த
கல்லறைத் தோட்டத்திற்குச் சென்று, அங்குள்ள ஒரு கல்லறையில்
மெழுகுதிரி ஏற்றி வைத்துவிட்டு, அதற்கு முன்னம் முழந்தாள் படியிட்டு
வேண்டிவிட்டு வந்தார். இதை அந்த வழியாகச் சென்ற பலரும் கவனித்து
வந்தனர். ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில், அசரியா வழக்கம்
போல் குறிப்பிட்ட அந்தக் கல்லறைக்கு முன்னம் முழந்தாள் படியிட்டு
வேண்டிக்கொண்டிருக்கையில், அவர் அருகில் வந்த இளைஞர் ஒருவர்,
"ஐயா! உங்களைப் பல நாள்களாகக் கவனித்து வருகின்றேன்... ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையிலும் நீங்கள் இந்தக் கல்லறைக்கு
முன்னம் மெழுகுதிரி ஏற்றிவைத்து விட்டு, முழந்தாள் படியிட்டு
வேண்டுகின்றீர்கள்... இந்தக் கல்லறையில் இருப்பவர் உங்கட்கு என்ன
அவ்வளவு முக்கியமானவரா?" என்று கேட்டார்.
"தம்பி! அது ஒரு பெரிய கதை... சொல்கிறேன் கேள்" என்று
சொல்லிவிட்டுத் கண்களில் கண்ணீர் மல்கத் தொடர்ந்தார்: "முப்பது
ஆண்டுகட்கு முன்னம் நம்முடைய நாட்டில் இராணுவத்திற்கு ஆள் எடுக்கும்போது,
ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஓர் ஆண் வரவேண்டும் என்று அரசாங்கம்
உத்தரவு பிறப்பித்தது. அப்பொழுதுதான் எனக்குத் திருமணமாகி இருந்தது;
என்னுடைய மனைவி கருவுற்றிருந்தாள். 'இந்நிலையில் என்னால் இராணுவத்தில்
சேர்ந்து பணியாற்ற முடியாது. ஒருவேளை நான் இராணுவத்தில் பணியாற்றும்போது
எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் என்னுடைய மனைவியையும்
பிள்ளையும் யார் பார்த்துக்கொள்வார்' என்று அரசாங்கத்திடம்
முறையிட்டேன். அரசாங்கமோ 'அதெல்லாம் எங்கட்குத் தெரியாது. ஒரு
வீட்டிற்கு ஓர் ஆள் வரவேண்டும். அவ்வளவுதான்' என்றது.
எனக்கு என்ன செய்வதென்றே தெரிவில்லை. இந்நிலையில் என்னுடைய இந்த
இக்கட்டான நிலையை உணர்ந்த என்னுடைய வீட்டிற்குப் பக்கத்துவீட்டில்
இருந்த இளைஞர் ஒருவர் 'உங்கள் சார்பாக நான் இராணுவத்தில்
சேர்ந்து பணியாற்றுகின்றேன்' என்று முன்வந்தார். அவர்களுடைய
வீட்டில் மூன்று ஆண்கள் இருந்தார்கள். அதனால் அவர்களுடைய
குடும்பம் தொடக்கத்தில் தயங்கினாலும் இறுதியில் சம்மதித்தது.
இதைத் தொடர்ந்து அந்த இளைஞன் என் சார்பாக இராணுவத்தில்
சேர்ந்து பணியாற்றத் தொடங்கினான். இரண்டு மூன்று மாதங்கள் கழித்து,
எதிரிநாட்டவரால் கொல்லப்பட்ட அவனுடைய உடல்தான் ஊர்க்கு வந்தது.
கொல்லப்பட்ட அவனுடைய உடலைக் கண்டதும் அப்படியே நான் உறைந்து
போய்விட்டேன். அதன்பிறகு நான், 'இவன் எனக்காகவும் என்னுடைய
குடும்பத்திற்காகவும் இறந்தவன். எனவே இவன் செய்த தியாகத்தை எந்நாளும்
நினைவுகூரும் வகையில் அவனுக்கு அஞ்சலி செலுத்தவேண்டும்' என்று
அவனுடைய உடலை, இங்கு அடக்க செய்துவிட்டு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்
அவன் அடக்கம் செய்துவைக்கப்பட்ட இந்தக் கல்லறைக்கு வந்து அஞ்சலி
செலுத்தி வருகிறேன்."
அவர் எல்லாவற்றையும் சொல்லி முடிக்கையில், அதைக்
கேட்டுக்கொண்டிருந்த அந்த இளைஞரும் கண்ணீர் வடிக்கத் தொடங்கினார்.
இந்த நிகழ்வில் வருகின்ற அசாரியா என்ற பெரியவர்க்காகத் தன்னுடைய
இன்னுயிரையே தியாகம் செய்த அந்த இளைஞனைப் போன்றுதான்
'ஆண்டவரின் செம்மறியான இயேசுவும்' நமக்காகத் தன்னுடைய உயிரையே
தந்தார். அதைத்தான் நாம் ஒவ்வொரு திருப்பலியிலும்
நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றோம். இன்றைய முதல் வாசகம் பாஸ்கா
விழா எப்படிக் கொண்டாடப்பட வேண்டும் என்ற செய்தியை எடுத்துச்
சொல்கின்றது. நாம் அதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு, புதிய
பாஸ்காவின் பொருளைத் தெரிந்துகொள்வோம்.
பழைய பாஸ்கா
பார்வோன் மன்னனிடமிருந்து இஸ்ரயேல் மக்களை ஆண்டவர் விடுவிக்க
நினைத்தார். அதன்பொருட்டு அவர் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களை ஒரு
குறைபாடில்லாத ஓர் ஆட்டுக்குட்டியை எடுத்து, அதை வெட்டி, அதன்
இரத்தத்தை அவர்களுடைய வீட்டின் கதவு நிலைகளில் தெளிக்கச்
சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்ய, இரத்தம் தெளிக்கப்பட்ட
வீடுகளில் இருந்த ஆண் குழந்தைகள் காக்கப்பட்டார்கள்; இரத்தம்
தெளிக்கப்படாத எகிப்தியர்களின் வீடுகளில் இருந்த ஆண்
குழந்தைகள் கொல்லப்பட்டார்கள். இதைத் தொடர்ந்து பார்வோன்
மன்னன் இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து விடுவித்தான். இந்த
விடுதலைச் செயலை நினைவுகூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டின் முதல்
மாதத்தில் வருகின்ற பத்தாம் நாளில், குறைபாடில்லாத ஓர்
ஆண்டினைத் தேர்ந்துதெடுத்துக் கொண்டு, அதனை அம்மாதத்தின்
பதினைந்தாம் நாளில் வெட்டி, புளிப்பற்ற அப்பத்தோடு
சாப்பிட்டவேண்டும். இவ்வாறு பாஸ்கா விழா கொண்டாடவேண்டும் என்று
ஆண்டவராகிய கடவுள் அவர்கட்கு அறிவுறுத்தினார். அவர்களும்
அவ்வாறு செய்துவந்தார்கள். இதுதான் பழைய பாஸ்கா விழாவாகும்.
புதிய பாஸ்கா
புதிய பாஸ்கா விழாவில் ஆட்டிற்குப் பதிலாக, பாவமறியாத (2 கொரி
5:21), பாவம் செய்யாத (1 பேதுரு 2:22), பாவம் இல்லாத (1 யோவா
3:5) இயேசு தன்னுடைய உடலைத் தந்து (யோவா 1:29) உலகத்தின்
பாவத்தைப் போக்கத் திருவுளமாகி, அதை நிறைவேற்றவும் செய்து,
அதன்மூலம் நம்மை மீட்டுக்கொண்டார். அதுதான் புதிய
பாஸ்காவாகும்.
இங்கு நாம் செய்யவேண்டிய கடமை ஒன்றிருக்கின்றது. அது
என்னவெனில், அவர்மீது நம்பிக்கைக் கொண்டு அவரை
ஏற்றுக்கொள்வதாகும் (யோவா 1: 12) எப்படி ஆட்டின் இரத்தம்
தெளிக்கப்பட்ட வீடுகளில் இருந்தவர்களெல்லாம் அழியாமல்
காக்கப்பட்டார்களோ, அதுபோன்று இயேசு நமக்காகத் தன்னுடைய
இன்னுயிரையே தந்து நம்மை மீட்டார் என்று நம்பி
ஏற்றுக்கொண்டால், நாம் அவர் தருகின்ற மீட்பினைப்
பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.
சிந்தனை
'இது உங்கட்காகக் கொடுக்கப்படும் எனது உடல்' (லூக் 22: 19 )
என்பார் இயேசு. ஆம், இயேசு நமக்காகத் தன்னையே தந்த புதிய
பாஸ்கா ஆடு. ஆகையால், அவர்மீது நாம் ஆழமான நம்பிக்கை வைத்து,
அவருடைய தியாக வழியில், அன்பின் வழியில் நடப்போம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்,
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மத்தேயு 13: 54-58
புறக்கணிப்புகளை நாம் எப்படி அணுகுகின்றோம்?
நிகழ்வு
ஒரு நகரில் விற்பனைப் பிரதிநிதி (Sales Representative) ஒருவர்
இருந்தார். அவர் தான் பணிசெய்து வந்த நிறுவத்தின் பொருள்களை
ஒவ்வோர் இடமாகச் சென்று விற்பனை செய்கையில், யாரும் அவர்க்குச்
சரியாகப் பதிலளிக்கவில்லை. ஒருசிலர் அவரை கெட்ட வார்த்தைகளால்
திட்டியும் இன்னும் ஒருசிலர் அவரை அவமதிக்கும் மற்றும் சிலர்
அவரைக் கண்டுகொள்ளாமலும் அனுப்பிவைத்தனர்.
இவற்றையெல்லாம் அவர் தான் பணிபுரிந்து வந்த நிறுவனத்தின் மூத்த
விற்பனைப் பிரதிநிதியிடம் சொல்லி, "எல்லாரும் என்னை இப்படிப்
புறக்கணிக்கின்றார்களே" என்று கண்ணீர் விட்டு அழுதார். அதற்கு
அந்த மூத்த விற்பனைப் பிரதிநிதி, "உன்னைப் போன்றுதான்
எல்லாரும் என்னை அவமானப்படுத்தினார்கள்... அசிங்கப்படுத்தி
வெளியே அனுப்பினார்கள். சில சமயங்களில் என்னை அடிக்காத குறையாக
அனுப்பி வைத்தார்கள். அவற்றையெல்லாம் முதலில் நான்
சந்தித்தபோது எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆனாலும், நான்
அவர்கள் புறக்கணிக்கின்றார்கள் என்று வருத்தப்படவில்லை. மாறாக,
எந்தெந்த வழிகளில் பேசினால் அவர்களுடைய கவனத்தை ஈர்க்கலாம்...
எந்தெந்த வழிகளில் பேசினால் அவர்களுடைய கவனத்தை ஈர்க்க
முடியாது என்பதைப் புரிந்துகொண்டேன். பின்னர் அந்த வழிகளில்
நடந்தேன். இப்பொழுது என்னுடைய பணியில் தொடர்ந்து வெற்றிதான்.
நீயும் உன்னுடைய வாழ்க்கையில் எதிர்கொள்கின்ற
புறக்கணிப்புகளைப் புறக்கணிப்புகளாகப் பார்க்காமல்,
கற்றுக்கொள்ளவேண்டிய பாடமாகப் பார்த்தால், உன்னுடைய
வாழ்க்கையிலும் வெற்றிதான்" என்றார்.
இதைக் கேட்டுப் புத்துணர்வு அடைந்த அந்த இளைய விற்பனைப்
பிரதிநிதி, தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த புறக்கணிப்புகளை
கற்றுகொள்ளவேண்டிய பாடமாக எடுத்துக்கொண்டு, வெற்றிப் பயணத்தைத்
தொடங்கினார்.
நம்முடைய வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கின்ற புறக்கணிப்புகளை
வெறும் புறக்கணிப்புகளாகப் பார்க்காமல், கற்றுக்கொள்ள வேண்டிய
பாடமாகப் பார்த்தால், வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்ற
உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது
சிந்தனைக்குரியது.
இயேசுவைப் புறக்கணித்த அவருடைய சொந்த ஊர் மக்கள்
நற்செய்தியில் இயேசு தன்னுடைய சொந்த ஊர்க்கு வந்து, அங்குள்ள
தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்குகின்றார். முதலில்
அவருடைய போதனையைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்தவர்கள்,
சிறிதுநேரத்தில், "இவர் தச்சர் மகன் அல்லவா...?" என்று
புறக்கணிக்கத் தொடங்குகின்றார்கள்.
இயேசுவை அவருடைய சொந்த ஊர்க்காரர்கள் புறக்கணித்ததற்கு
முதன்மையான காரணம், அவர்கள் இயேசுவை மனித முறைப்படி
மதிப்பிட்டதுதான். பவுல் கொரிந்தியர்க்கு எழுதிய இரண்டாம்
திருமுகத்தில் சொல்கின்ற, "முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித
முறைப்படிதான் மதிப்பிட்டோம்" (2 கொரி 5:16) என்ற வார்த்தைகள்
இதை நிரூபிப்பதாக இருக்கின்றன. இயேசு மனிதராகப் பிறந்தாலும்
மனிதர்களோடு வளர்ந்தாலும் இறைமகனாக இருந்தார். இந்த உண்மையை
உணராமல்தான் நாசரேத்தைச் சார்ந்தவர்கள் இயேசுவைப்
புறக்கணித்தார்கள்.
இயேசுவை அவர்கள் புறக்கணித்ததற்கு மற்றுமொரு காரணம் இருந்தது.
அதுதான் அவர்களுடைய அறியாமை. இயேசுவின் ஊரைச் சார்ந்தவர்கள்
எளிய மனத்தவர்களாகவோ, தாழ்ச்சியானவர்களாகவோ இல்லாமல் மண்டை
வீங்கிகளாக இருந்தார்கள். இதனால் அவர்கட்டு இயேசு தன்னை
வெளிப்படுத்தவில்லை. இயேசு தன்னை வெளிப்படுத்தாமல் போனதாலேயே
(மத் 11: 27) அவர்கள் அவரை அறிந்துகொள்ள முடியாமல்,
அறியாமையில் இருந்தார்கள். அதனாலேயே அவர்கள் அவரைப்
புறக்கணித்தார்கள்.
இயேசுவைப் புறக்கணித்ததால், இழப்பு இயேசுவுக்கு அல்ல,
அவர்கட்குதான்
'தன்னுடைய சொந்த மக்களே தன்னைப் புறக்கணித்து விட்டார்களே!'
என்று இயேசு வருத்திக் கொண்டிருக்கவில்லை; அதனால் அவர்க்கு
இழப்பு எதுவும் ஏற்படவில்லை. மாறாக, அவரைப் புறக்கணித்ததற்காக
மக்கள் பெரிய இழப்பினைச் சந்தித்தார்கள். அது என்ன இழப்பு
எனில், அவர்கள் அவரிடமிருந்து ஆசியைப் பெற முடியாமல் போனார்கள்
என்பதாகும். இன்றைய நற்செய்தியின் இறுதியில், 'அவர்கட்கு
நம்பிக்கை இல்லாததால் அவர் அங்கு பல வல்ல செயல்களைச்
செய்யவில்லை' என்ற சொற்றொடர் வருகின்றது. உண்மைதான். இயேசுவின்
மீது மக்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருந்ததால், அவர்கள்
அவரிடமிருந்து கிடைக்கவிருந்த ஆசியைப் பெற முடியாமல்
போனார்கள்.
இன்றைக்கும் கூட பலர் இயேசுவின் மீதும் அவருடைய
வார்த்தையின்மீது நம்பிக்கை கொள்ளாமல் இருந்து, அவரிடமிருந்து
கிடைக்கும் ஆசியைப் பெறாமல் இருக்கின்றார்கள். ஆதலால், நாம்
இயேசுவிடமிருந்து ஆசியைப் பெற, அவர்மீது நம்பிக்கை கொண்டு
வாழ்வது தேவை என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.
சிந்தனை
'மக்கள் உன்னை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று
வாழ்ந்துகொண்டிருந்தால், அவர்களுடைய புறக்கணிப்பால் நீ
இறந்துபோய்விடுவாய்' என்பது பொன்மொழி. நாம் மக்கள் நம்மை
ஏற்றுக்கொண்டாலும் ஏற்காவிட்டாலும் மனந்தளராமல், இலக்கை
நோக்கித் தொடர்ந்து நடந்துசெல்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
5
=================================================================================
|
|