Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       25  டிசம்பர் 2017  
                                            கிறிஸ்து பிறப்புப் பெருவிழா
 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இதோ, உன் மீட்பர் வருகின்றார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 62: 11-12

உலகின் கடைக்கோடி வரை ஆண்டவர் பறைசாற்றியது: "மகள் சீயோனிடம் சொல்லுங்கள்; இதோ, உன் மீட்பு வருகின்றது. அவரது வெற்றிப் பரிசு அவருடன் உள்ளது; அவரது செயலின் பயன் அவர் முன்னே உள்ளது." "புனித மக்களினம்' என்றும் "ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள்' என்றும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்; நீயோ, "தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவள்' என்றும் இனி "கைவிடப்படாத நகர்' என்றும் பெயர் பெறுவாய்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -  திபா 97: 1,6. 11-12
=================================================================================
பல்லவி: பேரொளி இன்று நம்மேல் ஒளிரும்; ஏனெனில் நமக்காக ஆண்டவர் பிறந்துள்ளார்.

1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! 6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. பல்லவி

11 நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன. 12 நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள். பல்லவி



================================================================================
இரண்டாம் வாசகம்
கடவுள் தம் இரக்கத்தை முன்னிட்டு நம்மை மீட்டார்.

திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 4-7

நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார்.

அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார். நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப் பேறாகப் பெறும்பொருட்டே இவ்வாறு செய்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 2: 14

அல்லேலூயா, அல்லேலூயா! உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! அல்லேலூயா.


=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 
இடையர் மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள்.  

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 15-20

வானதூதர் இடையர்களை விட்டு விண்ணகம் சென்ற பின்பு, இடையர்கள் ஒருவரையொருவர் நோக்கி, "வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கிற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்" என்று சொல்லிக்கொண்டு, விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்.

பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர்.

ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.




=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
மானிடமகன்கள் எல்லாம் இறைமகனாகவே! (டிசம்பர் 25)

ஜப்பான் நாட்டு மக்களிடையே சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த வழக்கம். ஜப்பானியர்கள் வயதானவர்களைக் காட்டிலே போய் விட்டுவிட்டு வந்துவிடுவார்கள். அவர்கள் தங்களுடைய கடைசிக் காலத்தை அங்கேதான் கழிக்கவேண்டும். அப்படி ஒரு மகன் தன்னுடைய வயதான தாயை காட்டில் விட்டுவரப் புறப்பட்டான். காட்டுவழியாகப் போகும்போது வயதான தாய் வழியோரம் இருந்த செடியை கொடிகளை ஒடித்துப் போட்டுக்கொண்டே வந்தாள். இதைப் பார்த்த மகன் கேட்டான் எதற்காக இப்படி செடி கொடிகளை ஒடித்துப் போட்டுக்கொண்டே வருகிறாய் என்று. அதற்கு அந்த தாய் சொன்னாளாம் "மகனே நீ என்னை காட்டில் விட்டுவிட்டு வீட்டிற்கு வரும்போது ஒருவேளை வழி தெரியாமல் தவிக்கலாம். இந்த ஒடிந்து கிடக்கின்ற செடி கொடிகளைப் பார்த்துக்கொண்டே சென்றாய் என்றால் உன்னால் வீட்டுக்கு எளிதாகச் சென்றுவிடமுடியும் அல்லவா? அதற்காகத் தான் இப்படிச் செய்தேன்" என்றாளாம். அப்போதுதான் மகனுக்கு தன்னுடைய தாய் அன்பு புரிந்ததாம்.

ஒரு சாதாரண தாயே தன் பிள்ளையின் மீது இவ்வளவு அன்பு செலுத்துகிறாள் என்று சொன்னால் கடவுள் நம்மீது எவ்வளவு அன்பு காட்டுவார். யோவா 3:16 ல் கடவுள் தன் மகனையே அளிக்கும் அளவுக்கு இவ்வுலகின் மீது அன்பு கூர்ந்தார் என்று படிக்கிறோம். கிறித்து பிறப்பு கடவுளின் மேலான அன்பை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. தூய அகுஸ்தினார் கூறுவார். "இறைமகன் மானிடமகனானார். ஏதற்கு? மானிடமகன்கள் எல்லாம் இறைமகனாகவே. நம்மையெல்லாம் மீட்கவே இயேசு இந்த உலகில் மனிதனாகப் பிறக்கின்றார். இந்த நாளில் கிறித்து பிறப்பின்போது இடம் பெறும் முக்கிய மனிதர்களைக் குறித்தும் அவர்கள் நமக்கு என்ன செய்தியைத் தருகிறார்கள் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

அன்னை மரியாள் - பெற்றெடுத்தார்

வளனார் - பாதுகாத்தார்

வானதூதர்கள் - அறிவித்தார்கள்

இடையர்கள் - புகழ்ந்தார்கள்.


அன்னை மரியாளைப் போன்று நாமும் பெற்றெடுக்க வேண்டும்


இந்த கிறித்து பிறப்பு விழா நாளிலே நாம் அன்னை மரியாளை நினைக்காமல் இருக்கமுடியாது. இயேசுகிறித்து பிறப்புக்கு முன்பாக வானதூதர் கபிரியேல் மரியாளுக்குத் தோன்றியபோது அவர், "இதோ உம்முடைய அடிமை. உம்முடைய விருப்பப்படியே ஆகட்டும்" என்று இறைவனின் திருவுளம் நிறைவேறச் செய்தார். மத் 12: 48-50 பகுதியில் யார் என் தாய் தந்தையும், சகோதரர்களும் என்று கேட்டு இறைத்திருவுளம் நிறைவேற்றுபவர்களே என்னுடைய தாய், தந்தை, சகோதரர்கள் என்பார். இதன்படி அன்னைமரியாள் இயேசுவைப் பெற்றெடுத்ததால் மட்டுமல்லாமல் இறைவனின் திருவுளம் நிறைவேற்றுவதாலும் இயேசுவுக்கு தாயாக மாறுகிறார்.

நாம் இயேசுவைப் பெற்றெடுக்க வேண்டுமென்று சொன்னால் இறைவனின் திருவுளப்படி நடக்கவேண்டும். பல நேரங்களில் நாம் மனம்போன போக்கிலே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால் இறைவனின் திருவுளப்படி நடந்தால்தான் இயேசுவைப் பெற்றெடுக்கும் பேறுபெற முடியும்.



தந்தை வளனாரைப் போன்று இயேசுவைப் பாதுகாப்போம்.


தந்தை வளனார் குழந்தை இயேசுவை சிறந்த விதமாய் வளர்த்தார் என்று சொன்னால் மிகையாகாது. தமிழ் மொழியிலே சொல்வார்கள் "சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே". என்று. இயேசுவை சிறந்த ஒரு மனிதராக வளர்த்திருக்கிறார் என்பது உண்மையாக இருக்கிறது.

தந்தை வளனார் இயேசுகிறித்துவை சிறந்த விதமாய் பாதுகாத்திருக்கிறார். அகத்தில் இயேசுவை குளிர் வெயில், இடநெருக்கடி போன்றவற்றிலும், புறத்தில் எதிரிகளிடமிருந்து, ஏரோதிடமிருந்து சிறந்த பாதுகாப்பை தந்த ஒரு தந்தையாக விளங்கினார். இதே போல் இயேசுகிறித்துவை நாம் எப்படிப் பாதுகாக்கவேண்டும் என்று சொன்னால் அகத்தில் நாம் இயேசுவின் விழுமியங்களை ஏற்று வாழ்வதே இயேசுவை பாதுகாப்பதற்குச் சமமாகும். இயேசு நமக்குப் போதித்த பிறரன்பு, உண்மை, சகோதரத்துவம் போன்ற பண்புகளை நாம் நம்முடைய வாழ்விலே கடைப்பிடிக்கும்போது நாம் இயேசுவைப் பாதுகாப்பவர்களாக மாறமுடியும்.


வானதூதர்களைப் போன்று அறிவித்து மகிழ்வோம்


கிறித்து பிறப்பில் வானதூதர்களை மறக்க முடியாது. அவர்கள் நமக்கு என்ன பாடத்தைக் கற்றுத் தருகின்றார்கள் என்று சிந்தித்துப் பார்ப்பது பொருத்தமான ஒன்றாகவும் இருக்கும். வானதூதர்கள் இயேசு கிறித்துவின் பிறப்புச் செய்தியை மகிழ்வோடு அறிவித்தார்கள். குழந்தை இயேசு எங்கே, எப்படி பிறந்திருக்கிறார் என்பதை இடையர்களுக்கு அவர்கள் தெளிவாக அறிவித்தார்கள்.

நற்செய்திப் பணியிலே, இயேசுவை அறிவிக்கின்ற பணியிலே ஈடுபட்டிருக்கும் நாம் இயேசுவை மகிழ்ச்சியாக பிற மக்களுக்கு அறிவிக்கின்றோமா என்று சிந்தித்துப்பார்ப்போம். எத்தனையோ நற்செய்திப் பணியாளர்கள் தங்களுடைய சொந்த நாட்டை விட்டு, உறவை விட்டு நற்செய்தியை அறிவித்தார்கள். நாம் அப்படி அறிவிக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்ப்போம். உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியையை பறைசாற்றுகள் என்றார் இயேசு கிறித்து. நாம் நாம் வாழும் இடத்தில் நற்செய்தியை அறிவிப்பவர்களாக மாறுவோம்.


4. இடையர்களைப் போன்று நம்புவோம்


இயேசுவின் பிறப்புச் செய்தியைக் கேட்ட முதல் குழுவினர் இந்த இடையர்கள் தான். அவர்கள் வானதூதர்கள் பிறப்புச் செய்தியைச் சொன்னவுடன் நம்பினார்கள். இயேசுவைக் காணச் சென்றார்கள். இந்த நம்பிக்கை நமதாக்குவோம். இடையர்கள் சாதாரண மனிதர்கள். அவர்கள் வானதூதர்கள் சொன்னது பொய்யாக இருக்கலாம் என்று நினைக்கவில்லை. அவர்கள் சொன்னதை முழுமையாக நம்பினார்கள். அதனால் விரைந்து சென்று இயேசுவைச் சந்தித்தார்கள்.

நம்பிக்கை என்பது நம்முடைய வாழ்விலே இன்றியமையாத ஒன்று. இயேசு செய்யும் எல்லா அற்புதங்களுக்கும், அதிசயங்களுக்கும் பின்னால் இருக்கும் துருப்புச் சீட்டு இந்த நம்பிக்கைதான். உன் நம்பிக்கை உன்னை குணமாக்கிற்று, நான் உன்னைக் குணமாக்குவேன் என்று நீ நம்புகிறாயா? என்றுதான் கேட்கிறார். எனவே இந்த கிறித்து பிறப்பு நாளிலே இடையர்களைப் போன்று கடவுளின் மீது, கடவுளின் கட்டளைகளின் மீது நம்பிக்கை வைப்போம். எல்லாவிதமான ஆசீர்வாதங்களையும் பெறுவோம்..

மிகப்பெரிய அறிவியல் விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசனிடம் ஒருவர், "நீங்கள் மிகப்பெரிய விஞ்ஞானி அப்படி இருக்கும்போது ஏன் நீங்கள் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை என்று கேட்டாராம். அப்போது அவர் நான் எதற்கு பிறந்த நாள் கொண்டாட வேண்டும். நான் எத்தனையோ பொருள்களைக் கண்டுபிடித்திருக்கிறேன். மக்கள் அவற்றையெல்லாம் பயன்படுத்தும்போது என்னை நினைவுகூர்கிறார்கள். அதுவே போதும் நான் பிறந்தநாள் கொண்டாடுகிறது போன்று இருக்கிறது" என்று சொன்னாராம்.

அன்பார்ந்தவர்களே நாம் அன்னை மரியைப்போன்று கடவுளின் திருவுளத்தின்படி நடக்கின்றபோது, வளனாரைப் போன்று இயேசுவின் விழுமியங்களின்படி நடக்கின்றபோது, வானதூதர்களைப் போன்று இயேசுவை அறிவிக்கின்றபோது, இடையர்களைப் போன்று இயேசுவை நம்புகிறபோது அது கிறித்து பிறப்புப் பெருவிழாவாக மாறுகின்றது.

எனவே நாம் இறைத்திருவுளப்படி நடப்போம். இயேசு பிறப்பை அர்த்தமுள்ளதாக்குவோம். Fr. Maria Antonyraj, Palayamkottai.

=======================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!