|
|
08
செப்டம்பர் 2019 |
|
|
பொதுக்காலம்
23ம் ஞாயிறு
- 3ம் ஆண்டு |
| |
தூய கன்னி மரியாவின் பிறப்பு
(ஆரோக்கிய அன்னை) விழா |
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இஸ்ரயேலை ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்.
இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம்
5: 2-5a
ஆண்டவர் கூறுவது: நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே!
யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும்,
இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே
தோன்றுவார்; அவர் தோன்றும் வழிமரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்.
ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர்
அவர்களைக் கைவிட்டுவிடுவார்; அதன் பின்னர் அவருடைய இனத்தாருள்
எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள். அவர்
வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின்
மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி
வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள் வரை அப்போது அவர்
மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்; அவரே அமைதியை அருள்வார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
அல்லது
ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
8: 28-30
சகோதரர் சகோதரிகளே, கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது
திட்டத்திற்கு ஏற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே
ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத்
தெரியும். தம்மால் முன்பே தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் தம் மகனின்
சாயலுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டுமெனக் கடவுள் முன்குறித்து
வைத்தார்; அச்சகோதரர் சகோதரிகள் பலருள் தம் மகன் தலைப்பேறானவராய்
இருக்க வேண்டும் என்றே இப்படிச் செய்தார். தாம் முன்குறித்து
வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்; தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி
இருக்கிறார்; தமக்கு ஏற்புடையோர் ஆனோரைத் தம் மாட்சியில் பங்கு
பெறச் செய்தார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா: 13: 5. 6 (பல்லவி: எசா 61: 10a)
=================================================================================
பல்லவி: ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.
5 நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்திருக்கின்றேன்; நீர் அளிக்கும்
விடுதலையால் என் இதயம் களிகூரும். பல்லவி
6 நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்; ஏனெனில், அவர் எனக்கு நன்மை
பல செய்துள்ளார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா!
புனித கன்னிமரியே, நீர் பேறுபெற்றவர்; புகழ் அனைத்திற்கும் மிக
ஏற்றவரும் நீரே; ஏனெனில் என் இறைவன் இயேசு கிறிஸ்து நீதியின்
ஆதவனாய் உம்மிடமிருந்து உதயமானார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.
+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
1: 1-16, 18-23
தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர்
பட்டியல்:
ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின்
புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும்.
யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும்
செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம்.
இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின்
மகன் சல்மோன்.
சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும்
ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின் மகன் ஈசாய்.
ஈசாயின் மகன் தாவீது அரசர். தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம்
பிறந்த மகன் சாலமோன்.
சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின்
மகன் ஆசா.
ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின்
மகன் உசியா.
உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன்
எசேக்கியா.
எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமோன்; ஆமோனின் மகன்
யோசியா.
யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள்
காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.
பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப்
பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல்.
செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின்
மகன் அசோர்.
அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின்
மகன் எலியூது.
எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின்
மகன் யாக்கோபு.
யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே
கிறிஸ்து என்னும் இயேசு.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய்
மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தது.
அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது.
அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு
நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல்
மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.
அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர்
அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி
மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது
தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார்.
அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய
பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார்.
"இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு
இம்மானுவேல் எனப் பெயரிடுவர்" என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர்
உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால்
`கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
அல்லது
குறுகிய வாசகம்
மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.
+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 18-23
இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய்
மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தது.
அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது.
அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு
நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல்
மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.
அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர்
அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி
மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது
தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு
எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து
மீட்பார்" என்றார்.
"இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு
இம்மானுவேல் எனப் பெயரிடுவர்" என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர்
உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால்
`கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
நிகழ்வு
ஒரு சமயம் இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையே கடுமையாகப்
போர் நடைபெற்றபோது இங்கிலாந்து படைவீரன் ஜெர்மானிய வீரன் ஒருவனைக்
கொல்ல நேர்ந்தது. அப்போது இங்கிலாந்து படைவீரன் ஜெர்மானிய படைவீரனின்
அன்னைக்கு இவ்வாறு ஒரு கடிதம் எழுதினான்: "போர் நிமித்தமாக உங்களது
மகனைக் கொல்ல வேண்டி வந்தது. ஆனாலும் உங்களிடம் மன்னிப்புக்
கேட்க விரும்புகிறேன். என்னை மன்னிப்பீர்களா?". அதற்கு அந்தத்
தாய் பதில் எழுதினாள்: "மனதார உன்னை மன்னித்துவிட்டேன். போர்
முடிந்து நாம் இருவருமே உயிர்வாழ நேர்ந்தால் கிளம்பி வா. என்
உள்ளத்திலும் இல்லத்திலும் மகனாக வாழ உன்னை அன்புடன் அழைக்கின்றேன்".
இக்கடிதம் கண்ட அந்த இங்கிலாந்து நாட்டுப் படைவீரன், அந்த
ஜெர்மானியத் தாயின் மன்னிக்கும் அன்பை நினைத்து பெருமிதம்
கொண்டான்.
தாய் என்றாலே எப்போதும் மன்னிப்பவள்தானே. இன்று நாம் பிறந்த
நாளைக் கொண்டாடும் மரியன்னையும்கூட நாம் செய்யும் தவறுகளை மன்னித்து,
தன்னுடைய மகனிடம் நமக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறாள் என்பது
ஆழமான உண்மை.
வரலாற்றுப் பின்னணி
மரியாவின் பிறப்பைக் குறித்து 170 ஆம் ஆண்டு எழுதப்பட்ட
திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத தூய யாக்கோபு நற்செய்தியில்
இடம்பெறும் நிகழ்வு.
மரியாவின் பெற்றோரான ஜோக்கினும் அன்னாவும் அருட்சாதனம்
செய்து இருபது
ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. இருந்தாலும்
அவர்கள் இறைவனிடத்தில் இடைவிடாது ஜெபித்துக்கொண்டிருந்தார்கள்.
இந்த நேரத்தில் ஜோக்கின் எருசலேம் திருக்கோவிலுக்கு பலி ஒப்புக்கொடுக்கச்
சென்றார். அப்போது அங்கிருந்த தலைமைக்குரு ரூபன் என்பவர்
ஜோக்கினிடம், "உனக்குத்தான் குழந்தை இல்லையே. பிறகு எதற்கு இங்கு
வந்து பலி செலுத்துகிறீர். உம்முடைய பலியை எல்லாம் கடவுள் ஏற்றுக்கொள்ளமாட்டார்.
அதனால் தயவுசெய்து இங்கிருந்து போய்விடும்" என்று கடினமான
வார்த்தைகளால் திட்டி அனுப்பி விட்டார். இதனால் மனம் உடைந்துபோன
ஜோக்கின் தனிமையான இடத்திற்குச் சென்று ஜெபிக்கத் தொடங்கினார்.
இதற்கிடையில் எருசலேம் திருக்கோவிலுக்குச் சென்று, நீண்ட நாட்கள்
ஆகியும் தன்னுடைய கணவர் திரும்பி வராததைக் கண்ட அன்னா, தன்னுடைய
கணவர் உண்மையிலே இறந்துவிட்டார் என நினைத்து, விதவைக்கோலம்
பூண்டு நின்றார். அப்போதுதான் ஆண்டவரின் தூதர் அவருக்குத்
தோன்றி, "அன்னா! உன்னுடைய ஜெபம் கேட்கப்பட்டது. நீர் கருவுற்று
ஒரு மகளைப் பெற்றெடுப்பீர். அவருக்கு மரியா எனப் பெயரிடுவீர்"
என்று சொல்லிவிட்டுச் சென்றார். பின்னர் வானதூதர் ஜோக்கினுகுத்
தோன்றி, அதே செய்தியை அவரிடத்திலும் சொன்னார். இச்செய்தியைக்
கேட்ட ஜோக்கின் மிகவும் மகிழ்ந்தார். வானதூதர் அவர்களுக்குச்
சொன்னது போன்றே மரியா அவர்களுக்கு மகளாகப் பிறந்தார்.
மரியாவின் பிறப்பு உண்மையிலே இறை வல்லமையால்தான் நிகழ்ந்திருக்கவேண்டும்
என்று சொன்னால் அது மிகையாகாது. எப்படியென்றால், விவிலியத்தில்
நிகழ்ந்த ஒருசில முக்கியமான நபர்களின் பிறப்பு இறைவல்லமையால்
நிகழ்ந்திருக்கின்றது. ஈசாக்கு (தொநூ 21: 1-3) சிம்சோன் (நீதி
13: 2-7), சாமுவேல் (1சாமு 1: 9-19), திருமுழுக்கு யோவான்
(லூக் 1:5-24), இயேசு கிறிஸ்து (லூக்1:26-38) இவர்களுடைய பிறப்பு
எல்லாம் சாதாரணமாக நிகழ்ந்துவிடவில்லை. இறை வல்லமை அங்கே அதிகதிகமாக
செயல்பட்டிருக்கிறது. மரியாவும் மீட்பின் வரலாற்றில் சாதாரணமான
ஒரு நபர் இல்லை. இந்த உலகத்தை உய்விக்க வந்த ஆண்டவர் இயேசுவையே
பெற்றெடுத்தவள். எனவே, அவருடைய பிறப்பிலும் இறை வல்லமை அதிகமாகச்
செயல்பட்டிருக்கும் என நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
பாவக்கறை சிறுதும் இல்லாது பிறந்தவர் இயேசு. எனவே, இயேசு மாசற்றவராக
இருப்பதனால், அவரைப் பெற்றெடுக்கும் தாய் மரியாவும் மாசற்றவராக
இருக்கவேண்டும் என்பதற்காக அவரைக் கருவிலே பாவக்கறையில்லாமல்
தோன்றச் செய்கிறார் கடவுள். ஆகவே, மரியா கடவுளின் படைப்பில் தனிச்
சிறப்பு வாய்ந்தவராக விளங்குகின்றார்.
இத்தகைய பல்வேறு சிறப்புகளைக் கொண்ட மரியாவின் பிறப்பு விழா
நான்காம் நூற்றாண்டிலிருந்தே கொண்டாடப்பட்டு வருகின்றது.
கி.பி.330 ஆம் ஆண்டு புனித ஹெலன் என்பவர் மரியன்னைக்கு ஓர்
ஆலயம் கட்டி, மரியாவின் பிறப்பு விழாவைக் கொண்டாடியதற்கான வரலாற்றுக்
குறிப்புகள் இருக்கின்றன. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த எபிபெனஸ்,
கிறிசோஸ்டம் போன்றோர் மரியன்னையின் பிறப்பு விழாவைக் கொண்டாடியதாக
அறிகின்றோம். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மரியாவின் பிறப்பு விழா
உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. திருத்தந்தை பதினான்காம்
பெனடிக்ட் என்பவர்தான் இவ்விழாவை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8
ஆம் நாள் கொண்டாடப் பணித்தார். அன்றிலிருந்து இன்றுவரை மரியன்னையின்
பிறப்பு விழா அவ்வாறே கொண்டாடப்பட்டு வருகின்றது.
திருச்சபை வழக்கமாக புனிதரின் தூயவரின் இறந்த நாளை அல்லது
அவருடைய விண்ணகப் பிறப்பைத்தான் கொண்டாடும், மண்ணகப் பிறப்பைக்
கொண்டாடுவதில்லை. இதற்கு விதிவிலக்கு ஆண்டவர் இயேசு,
திருமுழுக்கு யோவான், அன்னை மரியா. இதை வைத்துப்
பார்க்கும்போது திருச்சபையில் மரியா எந்தளவுக்கு முக்கியத்துவம்
வாய்ந்தவர் என நாம் புரிந்துகொள்ளலாம். மரியா பாவத்தால்
வீழ்ந்துகிடந்த இந்த மானுட சமூகத்தை தன்னுடைய திருமகனால் மீட்டவர்.
எனவே, அவருடைய பிறப்பு விழாவைக் கொண்டாடுவது என்பது அன்னைக்கும்
ஆண்டவருக்கும் பெருமை சேர்ப்பதாக இருக்கும் என்பதில் எந்தவித
சந்தேகமும் இல்லை.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
இறைவனின் தாய், மீட்பரின் தாய் என அன்போடு அழைக்கப்படும் மரியன்னையின்
விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக்
கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்ப்போம்.
தேவையில் இருப்போருக்கு இரங்குதல்
மரியா தேவையில் இருப்போருக்கு இரங்கும் நல்ல குணம் படைத்த பெண்மணியாக
வாழ்ந்து வந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. பேறுகால
வேளையில் இருந்த தன்னுடைய உறவுக்கார பெண்மணிக்கு காடு மலைகளை
கடந்து உதவச் செல்கிறார். இரசம் தீர்ந்துபோனதால் இக்கட்டான
சூழ்நிலையில் இருந்த கானாவூர் திருமண வீட்டாருக்கு உதவச்
செல்கிறார். இவற்றையெல்லாம் மரியா யாரும் கேட்காமல் தாமாகவே
சென்றுசெய்கிறார். மரியாவின் பிறப்பு விழாவைக் கொண்டாடும்
நாம், நம்மிடத்தில் அவரிடம் இருந்த இரக்க குணம், தேவையில் இருக்கின்ற
மக்கள்மீது இரங்கும் குணம் இருக்கின்றதா? என சிந்தித்துப்
பார்க்கவேண்டும். நாம் தேவையில் இருப்போர்மீது இரங்கும்போது மரியாவின்
கடவுளின் அன்புப் பிள்ளைகளாக - மாறுவதோடு மட்டுமல்லாமல், அப்படிப்பட்ட
குணம் நம்முடைய உள்ளத்திற்கு ஆறுதலையும் தருகின்றது. இது
யாராலும் மறுக்க முடியாத உண்மை.
இந்த உண்மையை விளக்க ஒரு கதை. ஒருமுறை இளைஞன் ஒருவன் ஒரு
குருவிடம் சென்று, தனக்கிருக்கும் சந்தேகங்களைக் கேட்டான்.
"நீண்ட நேரம் பூஜை செய்கிறேன். நெடுநேரம் தியானம் செய்கிறேன்.
மனம் அமைதியடையவில்லை. அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?" என்று
கேட்டான். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, பின்னர்
குரு அவனிடத்தில் சொன்னார், "உன்னால் முடிந்த வரை ஏழைகளுக்கு
உதவி செய். யாரேனும் ஏழை நோயுற்றிருந்தால் சிகிச்சைக்கு ஏற்பாடு
செய்து அவனுக்கு பணிவிடை செய். அதனால் உனக்கு மன அமைதி உண்டாகும்"
என்றார்.
ஆம், தேவையில் இருக்கும் ஓர் ஏழைக்கு உதவும்போது நம்முடைய உள்ளத்தில்
மன அமைதி உண்டாகின்றது. அதேவேளையில் நாம் மரியாவின் அன்புப்
பிள்ளைகள் ஆகின்றோம்.
கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து வாழ்தல்
மரியா எப்போதும் கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து வாழ்ந்தவராக
விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாகாது. வானதூதர் கபிரியேல்
மரியாவிடம் மீட்புத் திட்டத்தை எடுத்துச் சொன்னபோது, தொடக்கத்தில்
தயங்கினாலும், பின்னர் "இதோ ஆண்டவரின் அடிமை, உம்முடைய சொற்படி
ஆகட்டும்" என்று சொல்லி இறைவனின் விருப்பம் நிறைவேற தன்னை முழுவதுமாய்
கையளிக்கின்றார். ஒருவேளை மரியா மட்டும் வானதூதரின்
வார்த்தைக்குச் சம்மதம் தெரிவிக்காமல் இருந்திருந்தால், நமக்கு
மீட்புக் கிடைத்திருக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக
இருக்கின்றது. மரியாவின் சம்மதத்தால் நாம் அனைவரும் மீட்கப்பட்டோம்
என்பதே உண்மை.
இன்றுக்கு நாம் கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்கின்றோமா?
அல்லது நம்முடைய விருப்பத்தின் படி நடக்கின்றோமா? என
சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் கடவுளின் விருப்பத்தை
மறந்து, நம்முடைய விருப்பத்தின் படி மனம் போன போக்கில்
வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இந்நிலை மாறவேண்டும். நாம் அனைவரும்
மரியாவைப் போன்று கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்கக்
கற்றுக்கொள்ளவேண்டும்.
தாழ்ச்சி
மரியாவிடம் விளங்கிய எல்லா நற்பண்புகளைவிடவும் தாழ்ச்சி என்ற
நற்பண்பே மேலோங்கி இருக்கின்றது. ஏனென்றால் அவர் ஒருபோதும் தன்னை
இறைவனின் தாய் என்று காட்டிக்கொள்ளவில்லை. மாறாக பணிவிடை செய்வதிலேயே
எப்போதும் மகிழ்ந்திருந்தார். அதனால்தான் இறைவன் அவரை மேலும்
மேலும் உயர்த்துகின்றார். நாமும் தாழ்ச்சியோடு வாழும்போது இறைவனால்
உயர்த்தப்படுவோம் என்பது உறுதி.
ஆனால் வேடிக்கை என்னவென்றால், நம்மிடத்தில் தாழ்ச்சி என்ற நற்பண்பு
பெருகுவதை விடவும், ஆணவம் என்ற துர்பண்புதான் அதிகமாகப்
பெருகுகின்றது. அதனால் நாம் மேலும் மேலும் அழிவைச் சந்திக்கின்றோம்.
நீதிமொழிகள் புத்தகம் 29:23 ல் வாசிக்கின்றோம், "இறுமாப்பு ஒருவரைத்
தாழ்த்தும், தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும்". இது எவ்வளவு அர்த்தம்
நிறைந்த வார்த்தைகள். நாம் ஆணவத்தோடும் இறுமாப்போடும் இருக்கின்றபோது
அழிவுதான் உறுதி.
ஓர் ஊரில் மிகவும் படித்த அறிஞர் ஒருவர் இருந்தார். தன் கல்வி
பற்றி அவருக்கு எப்போதும் அகந்தை உண்டு. ஒருநாள் அவர் ஒரு
குருவை அணுகி தனக்கு ஞானம் தருமாறு வேண்டினார். அப்போது வெளியே
மழை பெய்துகொண்டிருந்தது. ஞானி அவரிடத்தில் சொன்னார். "முதலில்
மழையில் போய் நின்று கைகளை உயர்த்தி ஆகாயத்தைப் பார்". படித்தவர்
அப்படியே செய்தார். ஆனால் அவருக்குப் பிடிக்கவில்லை. குருவிடம்
வந்து, "கொட்டும் மழையில் முழுக்க நனைந்து ஒரு முட்டாள் போல
நின்றுகொண்டிருக்கிறேன்" என்றார். அதற்கு குரு, "முதல் நாளே
உனக்கு உன்னைப் பற்றிய தெளிவு வந்துவிட்டதே!, அது நல்லது" என்றார்.
எல்லாம் தெரிந்தவன் என்று ஆணவத்தோடு இருந்த அந்த அறிஞருக்கு
குருவின் வார்த்தைகள சாட்டையடி போன்று இறங்கின.
அகந்தையினால் அழிவு ஒன்றே மிஞ்சும் என்பதை இந்தக் கதை நமக்கு
எடுத்துக்கூறுகின்றது. நாம் ஆணவத்தோடும், அகந்தையோடும் வாழாமல்,
தாழ்ச்சியோடு வாழவேண்டும் என்பதைத்தான் மரியாவின் வாழ்வு நமக்குக்
கற்றுத்தருகின்றது.
ஆகவே, மரியன்னையின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் இன்று, அவரைப்
போன்று வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய்
பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மரியாவின் பிறப்பு விழா (செப்டம்பர்
08)
"நிலத்துக்கடியில் நிறைந்து கிடக்கும் நீர் கிணற்றில் தெரிவது
போல், பசுவின் உடலில் வியாபித்திருக்கும் பால் மடிக்காம்பில்
தெரிவதுபோல் தெய்வம் ஒவ்வொருவருக்கும் தாயில் தரிசனம் தருகிறது"
வைதீக மதம்.
இன்று அன்னையாம் திருச்சபை அன்னை மரியாவின் பிறப்பு விழாவைக்
கொண்டாடி மகிழ்கின்றது. எத்தனையோ தலைவர்களுடைய, எத்தனையோ மனிதர்களுடைய
பிறப்பு விழாக்களைக் கொண்டாடுகின்றோம். ஆனால் அன்னையின் பிறப்புவிழாவோ
மற்ற எல்லாப் பிறப்பு விழாக்களைவிடவும் தனித்துவமிக்கதாக இருக்கின்றது.
ஏனென்றால் அன்னையானவள் நம் அருகிலிருப்பவள்; நமக்கு அடைக்கலம்
தருபவள்; நமக்காகப் பரிந்து பேசுபவள். எனவே இப்படிப்பட்ட
தாயின் பிறப்பு விழாவைக் கொண்டாவது என்பது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய
வரம் என்றே சொல்லலாம்.
மரியாவின் பிறப்பைக் குறித்துச் சொல்லப்படும் ஒரு நிகழ்வு. மரியாவின்
பெற்றோர்களான சுவக்கினுக்கும், அன்னாவுக்கும் நீண்ட நாட்கள் குழந்தையே
இல்லை. இப்படிப்பட்ட தருணத்தில் மரியாவின் தந்தையாகிய சுவக்கின்
பாலைவனத்திற்குச் சென்று, நீண்ட நாட்கள் கடுந்தவம்
மேற்கொண்டார். ஒருநாள் கடவுள் அவருடைய ஜெபத்தை கனிவுடன் கண்ணோக்கினார்.
ஆம், கடவுள் அவரிடம் ஒரு வானதூதரை அனுப்பி, "நான் உன்னுடைய ஜெபத்திற்கு
செவி சாய்த்திருக்கிறேன். ஆதலால் உனக்கொரு குழந்தை பிறக்கும்"
என்று சொல்லப் பணித்தார். அதன்படியே மரியா, சுவக்கின், அன்னா
தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். (இந்த நிகழ்வு திருச்சபையால்
அங்கீகரிக்கப்படாத தூய யாக்கோபு நற்செய்தியில் வருகிறது).
மரியாள் கருவில் உதிக்கும்போதே பாவக்கறையின்றி பிறந்தார். உலக
மீட்பரும், ஆண்டவருமான இயேசு ஒரு பெண்ணின் வயிற்றில் உதிக்கவேண்டும்
என்றால், அவள் பாவ மாசின்றி இருக்கவேண்டும். அதனால்தான் கடவுள்
மரியாவை அமல உற்பவியாகத் தோன்றச் செய்தார். மரியாளின் இந்த அமல
உற்பவம் கடவுள் தன்னுடைய மகன் இயேசுவின் பொருட்டு மரியாளுக்குக்
கொடுத்த மிகப் பெரிய கொடை என்று சொன்னால் அது மிகையாது.
இந்த நல்ல நாளில் மரியாவின் பிறப்பு விழா நமக்கு என்ன
செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்த்து
நிறைவுசெய்வோம். தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8:30
ல் கூறுவார், "தாம் முன்குறித்து வைத்தோரை கடவுள் அழைத்திருக்கிறார்;
தாம் அழைத்தோரை தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்; தமக்கு ஏற்புடையோரைத்
தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்" என்று. ஆம், தன்னுடைய
மீட்புத் திட்டம் நிறைவேற வேண்டும் என்பதற்காக இறைவன் மரியாவைத்
தேர்ந்தெடுக்கிறார்; அவரைப் பல்வேறு வரங்களால் அணிசெய்கிறார்.
இறைவன் மரியாவை அழைத்ததும் மரியா, "இதோ நான் ஆண்டவரின் அடிமை
உமது சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்கிறார். ஆகவே இறைவனின்
மீட்புத் திட்டம் நிறைவேற நம்மையே நாம் அன்னை மரியாவைப் போன்று
இறைவனின் கரங்களில் ஒப்புக்கொடுக்க வேண்டும்.
அடுத்ததாக இறைவன் மரியாவை தன்னுடைய மீட்புத் திட்டத்தில் பங்குகொள்ளவேண்டும்
என்று அழைத்ததற்குப் பிறகு, மரியா தான் ஆண்டவரின் தாய் என்ற
ஆணவத்தில் வாழவில்லை, மாறாக அவள் தாழ்ச்சி நிறைந்தவளாகவே இருக்கிறாள்.
எந்தளவுக்கு என்றால் தன்னுடைய உறவுக்காரப் பெண்மணியாகிய எலிசபெத்
பேறுகாலத்தில் இருக்கிறாள் என்பதை அறிந்து, உடனே அவளுக்கு உதவச்
செய்கிறார். ஆண்டவரையே பெற்றெடுக்க இருக்கும் தான் பெரியவள் என்ற
ஆணவத்தில் இருக்கவில்லை. இவ்வாறு மரியாள் தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு
கட்டத்திலும் தாழ்ச்சி நிறைந்தவளாகவே விளங்கினாள். அதனால்தான்
கடவுள் அவரை மேலாக உயர்த்தினார்.
இறைவாக்கினர் மீக்கா எழுதிய இன்றைய முதல் வாசகத்தில்,
"எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களில் மிகச்
சிறியதாய் இருக்கிறாய். ஆயினும் இஸ்ரேயலை என் சார்பாக ஆளப்போகிறவர்
உன்னிடமிருந்தே தோன்றுவார்" என்று படிக்கின்றோம். யூதா ஆட்சிமையங்கள்
அனைத்திலும் சிறியது. ஆனால் அந்த சிறிய மையத்திலிருந்துதான் இறைவன்
தன்னுடைய மகனைத் தோன்றச் செய்தார். அதுபோன்றுதான் மரியா எளியவளாக,
தாழ்ச்சி நிறைந்தவளாக இருந்ததால்தான் கடவுள் அவரை உயர்த்தினார்.
ஆகவே நாம் ஒவ்வொருவரும் மரியாவைப் போன்று தாழ்ச்சி நிறைந்தவர்களாக
வாழ்வோம்.
நிறைவாக ஒரு நிகழ்வோடு நிறைவு செய்வோம். புவியீர்ப்பு விசையைக்
கண்டு பிடித்த சர் ஐசக் நியூட்டன் அவர்களுடைய வாழ்வில் நடந்த
நிகழ்வு.
நியூட்டன் பிறந்த ஒருசில ஆண்டுகளிலே அவருடைய தந்தையானவர் இறந்துபோனார்.
தாயும்கூட நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாய் கிடந்தார். ஆனால்
அவர் தன்னுடைய மகனுக்காக இறைவனிடம் ஜெபிக்காத நாளில்லை.
பின்னாளில் நியூட்டன் வளர்ந்து பெரிய ஆளானபிறகு சொல்வார்,
"நான் இன்றைக்கு இவ்வளவு பெரிய மனிதாக வளர்வதற்குக் காரணம் என்னுடைய
தாயின் ஜெபம்தான்" என்று. ஆம் தாயின் ஜெபம்தான் அவரை சிறந்த மனிதராக
உயர்த்தியது. நமது தாயும் நமக்காக இறைவனிடம் பரிந்து
பேசுகிறார். கானாவூர் நிகழ்வு இதற்குச் சான்று.
ஆகவே நமக்காக என்றும் இறைவனிடம் பரிந்துபேசும் அன்னை மரியாவை
நமக்குத் தந்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். அவரைப்
போன்று இறைத் திட்டம் நிறைவேற நம்மையே இறைவனின் கரங்களில் ஒப்புக்கொடுப்போம்,
தாழ்ச்சி நிறைந்தவர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருள்
பெறுவோம். - Fr Palay Mariaantonyraj, Palayamkottai.
=================================================================================
திருப்பலி முன்னுரை
=================================================================================
அற்புதமான திருவிழா. அன்னையின் திருவிழா. அன்னைக்கு பிறந்த
நாள் விழா.
கொண்டாட வந்துள்ள அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
அன்னையின் நாமம் கொண்ட நல்உள்ளங்களுக்கும் திருவிழா நல்வாழ்த்துக்கள்.
பெண் சிசுக்களை பாதுகாப்போம் என்ற உறுதிப்பாட்டோடு விழாவை
கொண்டாட அழைக்கப்படுகின்றோம்.
இந்த அழைப்பு காலத்தின் கட்டாயம். பெண்ணை பெற்றதால், பெண்ணை
வெறுக்கும் சமுதாயம். அந்த பெண்ணால்தானே தாங்கள் பிறப்பெடுத்தோம்
என்பதனை வெகுதிறமையாக மறந்து விடுகின்ற இந்த மனிதத்தை என்னவென்று
சொல்லுவது.
கருவறையை கல்லறையாக்கி விட்டு, கருக்கலைப்பு செய்து விட்டு,
வாழ வரும் சிசுவின் உரிமையை பறித்து கொண்டு, வயிற்றின் கனியை
கொடையாக தரும், இறை பரிசை உதாசீனப்படுத்தி விட்டு, அன்னையே,
தாயே, அம்மா, ஆரோக்கியத் தாயே, அடைக்கலம் தாரும்மாம்மா என்று
அழைப்பதனால் யாரை ஏமாற்ற பார்க்கின்றோம்.
ஆணோ பெண்ணோ, பாகுபாடு வேறுபாடு இன்றி, இறைவன் தரும் பரிசையேற்று,
வாழ வரும் சிசுவின் உரிமையை பேணி பெண்சிசுக்கள் வாழ
வழிகாணுவோம். அதுவே ஆரோக்கியமான சமூகத்திற்கு உகந்தது.
அந்த ஆரோக்கிய அன்னையின் பிறப்பு எல்லாருக்கும் மீட்பு தர உதவியது
போல, நம்முடைய பிறப்பின் வழி இறைவன் விரும்பும் திருவுளம் அறிந்து
செயலாற்ற முன்வருவோம். பிறப்பை அர்த்தமுள்ளதாக்குவோம். அப்பொழுது
நம் கொண்டாட்டங்கள் நிறைந்த மகிழ்வு தரும். நம்முடைய யாத்திரை,
நம்முடைய நேர்ச்சைகள், நாம் செலுத்தும் காணிக்கைகள் மிகுந்த
பலனையும், பயனையும் தரும்.
அன்னை மரியாளின் பிறப்புப் பெருவிழா (08.09.15) திருப்பலி
முன்னுரை
நமது தாய் திருச்சபை அன்னை மரியாளின் மகத்துவத்தை ஐந்து
பெருவிழாக்கள் மூன்று திருவிழாக்கள் பதினேழு நினைவு நாட்கள்
முலம் பறைசாற்றி குதுகலிக்கிறது. நாம் மகிழ்ந்து கொண்டாடும்
விழாக்களில் ஒன்றுதான் அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா.
"அன்னை மரியாவை நாடாமல் இறையருளை பெறுவதற்கான விருப்பம் என்பது
சிறகுகளின்றி பறக்க விரும்புவதைப் போன்றது." என்றார் திருத் தந்தை
12ம் பத்தி நாதர்.
அமல உற்பவியாய் அழகின் முழுமை கொண்டவளாய் அலகையின் தலை
மிதிக்க முன் குறிக்கப் பட்டவளாய் அகிலம் உருவாகும் முன்னரே
ஆண்டவரின் திட்டத்தில் இடம் பெற்றவளாய்த் திகழ்ந்தவள் நம் அன்னை,
அருள் நிறைந்தவரே வாழ்க " என்று ஆண்டவரின் தூதராலும்
பெண்களுக்குள் பேறு பெற்றவர் நீரே " என்று அன்பு உறவினர் எலிசபெத்தாலும்
அன்னை புகழ்ந்தேற்றப் படுகிறார்.
தாழ் நிலை நின்ற தன்னை, தலைமுறைகள் போற்றும் பேறுடையாளாக உயர்த்திய
இறைவனின் கருணையை எண்ணி, இதயம் களி கூர்ந்து அன்னையின் இதழ்கள்
உதிர்த்தவையே இவ்வார்த்தைகள். " என் ஆன்மா ஆண்டவராம் கடவுளை ஏற்றிப்
போற்றுகிறது."
தாழ்ச்சியையும் நன்றி உணர்வையும் நமக்கு உணர்த்தும் இவ்வார்த்தைகளை
, நாமும் நமது உள்ளத்தில் இறுத்தி ஆவியிலும் உண்மையிலும் அதனை
தியானிப்பவர்களாய் இத்திருப்பலியில் பங்கேற்போம். இறையருளைப்
பெற்று செல்வோம்.
எழுத்தாக்கம்: M.M.Louis
=================================================================================
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
=================================================================================
அன்னையின் மைந்தனே இறைவா! திருஅவை முன்னேடுக்கும் எல்ல நல்ல
காரியங்களிலும், அன்னையின் வேண்டுகோளுக்கிணங்க அவர் சொல்லுவது
போல நீர் விரும்புவது போல செயலாற்ற அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அன்னையின் மைந்தனே இறைவா! அர்ப்பண அன்பர்கள் அதன் அர்த்தத்தின்
முழுமையை உணர்ந்து, முழு மனித குல மீட்புக்காக அர்ப்பணித்து
வாழ, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அன்னையின் மைந்தனே இறைவா! குடும்பத்தின், திருமணத்தின்
மாண்பினை காத்து, எல்லா வியாகுலங்களிலும், பிரமாணிக்கம் தவறாது
பயணிக்க, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அன்னையின் மைந்தனே இறைவா! பெண்மையை போற்றி மதித்து, பெண்சிசுக்களு;
சமூகத்தில் வாழ உரிமை பெற்றவர்களே என்பதனை உணர்ந்து, கரு அழிப்பு,
கலைப்பு செய்யாது நீh தரும் பரிசினை போற்றி பாதுகாத்திட, அருள்தர
இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அன்னையின் மைந்தனே இறைவா! பிறப்பு கொடை, பரிசு, செல்வம் என்பதனை
உணர்ந்து அறிந்து, பிறப்பின் அர்த்தம் நிலைநாட்டப்பட, உமது
திருவுளம் அறிந்து நடந்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம். |
|