Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       31  ஐனவரி 2018  
                                          பொதுக்காலத்தின் 4ஆம்  வாரம்  
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
பாவம் செய்தவன் நானல்லவோ? இம்மந்தை எக்குற்றம் செய்தது?

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 24: 2,9-17

அந்நாள்களில் தாவீது அரசர் யோவாபையும் அவரோடிருந்த படைத்தலைவர்களையும் அழைத்து, "மக்கள் தொகை என்னவென்று நான் அறிய வேண்டும். நீங்கள் தாண் முதல் பெயேர்செபா வரை அனைத்து இஸ்ரயேல் குலங்களிடையே சென்று வீரர்கள் தொகையைக் கணக்கிடுங்கள்" என்றார்.

யோவாபு, வீரர்களின் தொகைக் கணக்கை அரசரிடம் தந்தார். வாளை ஏந்தும் வீரர்கள் எண்ணூறு ஆயிரம் பேர் இஸ்ரயேலிலும், ஐந்நூறு ஆயிரம் பேர் யூதாவிலும் இருந்தனர். வீரர்களின் தொகையைக் கணக்கெடுத்த பிறகு தாவீது மனம் வருந்தினார். "நான் மாபெரும் பாவம் செய்தேன்! ஆண்டவரே! உம் அடியானின் குற்றத்தை மன்னித்தருளும்! ஏனெனில் நான் பெரும் மதியீனனாய் நடந்து கொண்டேன்" என்று தாவீது ஆண்டவரிடம் மன்றாடினார். தாவீது காலையில் எழுந்தார்.

தாவீதின் திருக்காட்சியாளராகிய இறைவாக்கினர் காதிற்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது: "நீ சென்று இவ்வாறு ஆண்டவர் கூறுவதாகத் தாவீதிடம் சொல்: "நான் உன்மீது மூன்று தண்டனைகளைக் குறிப்பிடுகிறேன். நீ ஒன்றைத் தேர்ந்தெடு. அதன்படி நான் செய்வேன் ".

காது தாவீதிடம் வந்து அவரிடம் பேசி வெளிப்படுத்தியது: "உனது நாட்டில் ஏழு ஆண்டுகள் பஞ்சம் வரட்டுமா? உன் எதிரிகள் உன்னைப் பின்தொடர, மூன்று மாதங்கள் நீ தப்பியோட வேண்டுமா? அல்லது உன் நாட்டில் மூன்று நாள்கள் கொள்ளை நோய் ஏற்படலாமா? என்னை அனுப்பியவருக்கு நான் என்ன மறுமொழி சொல்ல வேண்டும் என்று சிந்தித்து முடிவுசெய்". "நான் மிகவும் மனவேதனையுற்றுள்ளேன். ஆண்டவரது கையில் நாம் விழுவோம்; ஏனெனில் அவரது இரக்கம் பெரிது! மனிதரின் கையில் விழ வேண்டாம்" என்று தாவீது கூறினார்.

ஆண்டவர் காலைமுதல் குறித்த நேரம்வரை இஸ்ரயேலின் மீது கொள்ளைநோய் அனுப்பினார். தாண் முதல் பெயேர்செபாவரை எழுபதாயிரம் மக்கள் மாண்டனர். வானதூதர் எருசலேமை அழிப்பதற்காக அதன்மீது தம் கையை ஓங்கினார்.

ஆண்டவர் அத்தீமையைக் குறித்து மனம் வருந்தி மக்களை அழித்துக்கொண்டிருந்த வானதூதரை நோக்கி, "போதும்! உன் கையைக் கீழே போடு" என்றார்.

அப்போது ஆண்டவரின் தூதர், எபூசியன் அரவுனாவின் போரடிக்கும் களத்தருகே இருந்தார். மக்களை அழித்துக்கொண்டிருந்த ஆண்டவரின் தூதரைத் தாவீது கண்டபோது, அவர் ஆண்டவரை நோக்கி, "பாவம் செய்தவன் நானல்லவோ? தீச்செயல் புரிந்தவன் நானல்லவோ? இம்மந்தை எக்குற்றம் செய்தது? இப்போது உம் கை என்னையும் என் தந்தையின் வீட்டாரையும் வதைப்பதாக!" என்று கூறினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்  தி:பா: 32: 1-2. 5. 6. 7 (பல்லவி: 5c)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர்.

1 எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறுபெற்றவர். 2 ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். பல்லவி

5 "என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக் கொள்வேன" என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். பல்லவி

6 ஆகவே, துன்ப வேளையில் உம் அன்பர் அனைவரும் உம்மை நோக்கி மன்றாடுவர்; பெருவெள்ளம் பாய்ந்து வந்தாலும் அவர்களை அது அணுகாது. பல்லவி

7 நீரே எனக்குப் புகலிடம்; இன்னலினின்று என்னை நீர் பாதுகாக்கின்றீர்; உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச் சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
சொந்த ஊரிலும் சுற்றத்திலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினருக்கு மதிப்பு உண்டு.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6

அக்காலத்தில் இயேசு தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிலிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின்தொடர்ந்தனர். ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர்.

அவர்கள், "இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?"" என்றார்கள்.

இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம், "சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர"" என்றார்.

அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர, வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்து வந்தார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்"


பிரான்சு நாட்டைச் சார்ந்த மிகச் சிறந்த எழுத்தாளர் தாமஸ் கார்லைல் என்பவர். அவர் பல ஆண்டுகள் சிரமப்பட்டு எழுதிய கையெழுத்துப் பிரதியை - புத்தகத்தை - தன் நெருங்கிய நண்பரிடம் கொடுத்து, படித்துப் பார்த்து திருத்தச் சொன்னார். அவரோ அப்புத்தகத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், தன்னுடைய மேசையில் புழுதி படுகின்ற அளவுக்கு வைத்துவிட்டு அதனை மறந்துபோய்விட்டார். இதற்கிடையில் அவருடைய வீட்டில் வேலை பார்த்துவந்த வேலைக்காரியோ, தாமஸ் கார்லைலின் கையெழுத்துப் பிரதிகளை பழைய பேப்பர்கள் என நினைத்து அவற்றைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்.

இச்செய்தியை அறிந்த தாமஸ் கார்லைல், தனது நண்பரும், அவர்வீட்டு வேலைக்காரியும் தன்னுடைய படைப்பை இப்படிக் "குப்பையாக" நினைத்து புறக்கணித்துவிட்டார்களே என்று பெரிதும் வருந்தினார். இருந்தாலும் தளரா மனவுறுதியுடன் தன்னுடைய எண்ணங்களை மீண்டுமாகப் புத்தகமாக எழுதினார். பின்னாளில் அப்புத்தகம் மிகப் பிரபலம் அடைந்து, பிரஞ்சுப் புரட்சிக்கே வித்திட்டது. இப்படி நெருங்கியவர்களால் புறக்கணிக்கப்பட்டு, பின்னாளில் பிரஞ்சுப் புரட்சிக்கே வித்திட்ட அந்த புத்தகத்தின் பெயர் "பிரெஞ்சுப் புரட்சி" ஆகும். தாமஸ் கார்லைல் ஆகச் சிறந்த எழுத்தாளராக இருந்ததும், தொடக்கத்தில் அவருடைய நண்பரால் புறக்கணிக்கப்பட்டது மிகவும் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்து, அங்கு உள்ள தொழுகைக்கூடத்தில் போதிக்கத் தொடங்குகின்றார். இயேசுவின் போதனைக் கேட்ட மக்கள், "இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்ட ஞானம். என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்" என்று வியந்துபோய் நின்றார்கள். ஆனால் அவர்களுடைய வியப்பு சிறிது நேரம்தான் இருக்கின்றது. அதன்பிறகு அவர்கள், "இவர் தச்சர் அல்லவா! இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கின்றார்கள் அல்லாவா?" என்று சொல்லி அவரைப் புறக்கணிக்கத் தொடங்குகின்றார்கள். அப்போதுதான் இயேசு அவர்களிடம், "சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்" என்கின்றார்.

தொடக்கத்தில் இயேசுவின் போதனையைக் கேட்டு வியந்தவர்கள், சிறிது நேரத்தில் அவரைப் புறக்கணித்ததற்கு அடிப்படைக் காரணங்களாக அவர் அவர்களுக்கு அறிமுகமானதையும் அவருடைய குடும்பத்தின் பொருளாதாரப் பின்னணியையும்தான் சொல்லலாம். இயேசு, நாசரேத்தில் வளர்ந்ததினால், அங்கிருந்தவர்கள் அவரை நன்றாகத் தெரிந்து வைத்திருந்தனர். எனவே, அவர்கள் நமக்குத் தெரியாததையாக இவர் பேசிவிட்டார் என்று அவரைப் புறக்கணிக்கின்றார்கள். நிறைய நேரங்களில் பல கலைஞர்கள், திறமைசாலிகள் நமக்கு தெரிந்தவர்களாக, அறிமுகமானவர்களாக இருக்கின்றார்கள் என்பதாலேயே அவர்களைப் பெரிதாக நாம் நினைப்பதில்லை. இது ஒரு மிகப் பெரிய தவறாகும். நம்மோடு இருக்கின்றார்கள் என்பதால், அவர்களுக்குத் திறமையில்லை என்று எந்த விதத்தில் அவர்களை புறக்கணிக்க முடியும்?. அப்படிச் செய்வது மிகப் பெரிய தவறாக இருக்காதா?.

தொழுகைக்கூடத்தில் இருந்தவர்கள் இயேசுவைப் புறக்கணித்ததற்கு மற்றொரு காரணம் அவருடைய குடும்பப் பொருளாதாரப் பின்னணி ஆகும். இயேசுவோ தச்சர் என்றுதான் அறியப்படுகின்றார். ஒரு தச்சருக்கு பெரிதாக என்ன தெரிந்துவிடப் போகிறது என்பதுதான் அவர்களுடைய புறக்கணிப்பிற்குக் காரணமாக இருக்கின்றது. ஒருவேளை இயேசு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்திருந்தால், அவரைப் புறக்கணிப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்திருக்கும் இன்றைக்கு நாம் நம்மோடு வாழக்கூடிய திறமைசாலிகளை அவர்கள் ஏழைகள் என்பதற்காக புறக்கணித்துக்கொண்டிருக்கின்றோம் இதுவும் மிகப் பெரிய தவறு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஒருவர் ஏழை, எனவே அவரிடத்தில் திறமையில்லை என்று புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம்?. அப்படிப் பார்த்தோம் என்றால், இந்த உலகத்தில் நிகழ்த்தப்பட்ட, நிகழ்த்தப்படுகின்ற சாதனைகள் பெரும்பாலும் ஏழைகளால் நிகழ்த்தப்படுகின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. ஆகையால், ஒருவரிடம் திறமை இருக்கின்றதா என்று பார்க்கவேண்டுமே ஒழிய, அவர் நமக்குத் தெரிந்தவரா? அல்லது அவர் ஏழையா? என்று பார்ப்பது சரியான ஒரு பார்வையல்ல.

ஆண்டவர் இயேசு மக்களை அவர்கள் இருக்கக்கூடிய நிலையிலே பார்த்தார். அவர்கள் பாவிகள் என்றோ, ஏழைகள் என்றோ புறக்கணிக்க வில்லை. இயேசுவிடம் இருந்த அதே மனநிலை நம்மிடத்திலும் இருக்கின்றபோது நாம் யாரையும் புறக்கணிக்க மாட்டோம் என்பது உண்மை.

ஆகவே, இயேசுவைப் போன்று மக்களை, அவர்கள் இருக்கக்கூடிய நிலையிலே ஏற்று வாழப் பழகுவோம், ஒருவரின் பொருளாதார மட்டும் சமூகப் பின்னணியைக் கொண்டு அவரைப் புறக்கணிக்கின்ற தவற்றைச் செய்யாதிருப்போம். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
பாராட்டுவோம், ஏற்றுக்கொள்வோம்

அறிஞர் அண்ணா, "குடியரசு" என்ற பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் எழுதி வந்த கட்டுரைகளை அதன் நிறுவனரான தந்தைப் பெரியார் படித்துப் பார்த்துவிட்டு எண்ணி எண்ணி மகிழ்ந்தார்.

அப்போது பெரியாருக்கு அறுபது வயதிருக்கும். அவர் ஒருநாள் மிகச் சிறப்பாக கட்டுரை எழுதும் அண்ணாவைப் பாராட்டுவதற்காக அவர் இருந்த குடியிருப்புக்கே சென்றுவிட்டார். குடியிருப்பில் அண்ணாவின் வீடு மூன்றாவது மாடியில் இருந்தது. தன்னுடைய முதுமையை எல்லாம் பொருட்படுத்தாமல் தந்தைப் பெரியார் அண்ணாவின் பெயரை சத்தமாகச் சொல்லிக்கொண்டே மூன்றாவது மாடிக்கு ஏறினார்.

ஏதோ ஒரு முக்கியமான விஷயமாகத்தான் பெரியார் தன்னைத் தேடிவந்திருக்கிறார் என்று நினைத்த அண்ணா வேகமாக வெளியே வந்தார். அப்போது தந்தைப் பெரியார் அண்ணாவிடம், "குடியரசுப் பத்திரிகையில் நீ எழுதும் கட்டுரைகள் மிகவும் அருமையாக இருக்கின்றன. அதனைச் சொல்லி பாராட்டுவதற்காகத் தான் இங்கே வந்திருக்கிறேன்" என்றார். இதைக் கேட்ட அறிஞர் அண்ணா, "இதற்காகவா இவ்வளவு தூரம் வந்தீர்கள். இதனை நீங்கள் மிகவும் சாவாகசமாகச் சொல்லியிருக்கலாமே" என்றார்.

அதற்கு தந்தைப் பெரியார், "அப்படியல்ல, என்னைப் பொறுத்தளவில் நல்ல காரியம் யார் செய்தாலும் அதனை உடனே பாராட்டிவிடவேண்டும், இல்லையென்றால் எனக்கு எந்த வேளையில் ஓடாது. அதனால்தான் உன்னைப் பாராட்ட இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்" என்றார்.

நல்லதை யார் செய்தாலும் அதனை உடனே பாராட்டவேண்டும் என்பதுதான் தந்தைப் பெரியார் நமக்குக் கற்றுத்தரும் வாழ்வியல் பாடமாக இருக்கின்றது. ஆனால் இன்றைக்கு மக்களுக்கு ஒருவரிடம் இருக்கும் நல்ல பண்பை பாராட்டும் மனமே வருவதில்லை என்பதுதான் மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு வழக்கம்போல தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பிக்கின்றார். மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்பில் ஆழ்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் "இவர் தச்சர் மகன்தானே, இவருடைய தாய் மரியாதானே, இவருடைய சகோதரர்கள் எல்லாரையும் நமக்குத் தெரியாதா? என்று அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். உடனே தான் இயேசு, "தன் சொந்த ஊரிலும், சுற்றத்திலும், வீட்டிலும் தவிர மற்ற இடங்களிலெல்லாம் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவார்" என்கிறார்.

உயர்ந்த மனிதர்கள், திறமையான நபர்கள், அதிசயமான காரியங்கள் நம்மோடு இருப்பதால் என்னோமோ அவற்றினுடைய மதிப்பை நாம் உணராமல் இருக்கின்றோம். இயேசு கிறிஸ்து, எல்லாம் வல்ல இறைவனின் ஒரே மகன். ஆனால் அவரையே யூதர்கள் ஏற்றுக் கொள்ளாததுதான் மிகவும் வேதனையாக இருக்கின்றது. இன்றைக்கும்கூட நாம் யூதர்களைப் போன்று நம்மோடு இருப்பவற்றின்/ இருப்பவர்களின் மதிப்பை உணராமல் இருக்கின்றோம். அவர்களிடம் இருக்கின்ற நல்ல காரியங்களைப் பாராட்டாமல் இருக்கின்றோம்.

ஒருசிலர் நினைக்கலாம் பாராட்டுவதால் நம்முடைய மதிப்பு குறைந்துபோய்விடும் என்று. ஆனால் அது உண்மையில்லை. ஒருவரிடம் இருக்கும் திறமைகளை, நல்ல பண்புகளைப் பாராட்டும்போது நாமும் வளர்கிறோம் என்பதுதான் ஆழமான உண்மை.

ஒருவருக்கு பொன்னையா, பொருளையோ பரிசாகத் தருவதைவிடவும், அவரிடம் இருக்கும் நல்ல பண்புகளை, திறமைகளைப் பாராட்டினால் அது அவருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தரும் என்பார் ஒர் எழுத்தாளர். ஆதலால் பிறரிடம் இருக்கும் நன்மையான காரியங்களைப் பாராட்டுவோம். அதோடு மட்டுமல்லாமல் இன, மொழி, வேறுபாடு பாராட்டாமல் எல்லாரையும் மனிதராகப் பார்ப்போம். இறையருள் பெறுவோம்.

Fr. Maria Antony, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

இனி எல்லாம் சுகமே!
என்ன பிளான்

60 வயது நிரம்பிய ஒருவர், தன் வாழ்க்கையில் கற்ற 10 பாடங்களை, ஹார்வர்ட் மேலாண்மையியல் மாத இதழ் ஒன்றில் எழுதியிருந்தார் (இரண்டு வருடங்களுக்கு முன்).

அதை மீண்டும் எடுத்து நேற்று வாசித்துக் கொண்டிருந்தேன்.

அவர் சொல்லும் ஒரு பாடம் என்னவென்றால்,

"Let go off certainty!"

அதாவது, இது இது செய்தால் இது இது நடக்கும் என வாழ்க்கையில் எல்லாவற்றையும் ஒரு ஆய்வகத்தில் எதிர்பார்ப்பது போல எதிர்பார்த்து வாழ்வது.

நாம் தினமும் காலையில் எழும்போது இந்த நாள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று திட்டம் போட்டு எழுகிறோம். ஆனால் அந்த நாள் நாம் திட்டமிடுவது போல இருப்பதில்லை. சில நாள்கள் திட்டமிட்டதைவிட நன்றாக இருக்கும். சில நாட்கள் மோசமாக மாறிவிடும்.

நம் அன்பிற்குரியவர்கள், நண்பர்கள் எல்லாரும் இப்படித்தான் பிஹேவ் பண்ணுவார்கள் என நினைப்போம். ஆனால் அது சில நேரங்களில் நிறைவேறாது.

Certainty - இதற்கு எதிர்ப்பதம் uncertainty அல்ல. மாறாக, திறந்த மனதுடன் இருப்பது (openness). எது நடந்தாலும் ஏற்றுக்கொள்வது. வியப்புக்களை கண்டுணர்ந்து பாராட்ட கற்றுக்கொள்வது.

நாளைய முதல் வாசகத்தில் (2 சாமுவேல் 24:2-17) இப்படித்தான் ஒரு நிகழ்வு நடக்கிறது.

தாவீது தன்னுடன் இருந்த வீரர்களைக் கணக்கெடுக்கிறார். இது கடவுளின் பார்வையில் தீயதெனப்படுகிறது.

நாம் கேட்கலாம்! கணக்கெடுப்பதில் என்ன தப்பு? அடிக்கடி இன்வென்ட்டரி எடுப்பது நல்லதுதானே! எது குறைவாக இருக்கிறது, எது நிறைவாக இருக்கிறது என நாம் தெரிந்து கொள்ளலாமே!

எதற்காக கடவுள் இதை தவறு எனப்பார்க்கிறார் என்றால், தாவீது எல்லாவற்றையும் "..." ஆக இருக்க வேண்டும் என நினைக்கிறார். இவ்வளவு வீரர்கள் இருந்தால் இவ்வளவு வெற்றி என கணக்கு போடுகின்றார். ஆக, தன் வெற்றியை தன்னைக் கொண்டு, தன்னிடம் இருப்பவற்றைக் கொண்டு உறுதி செய்ய நினைக்கிறார்.

ஆனால், கடவுளுக்கு இந்த உறுதித்தன்மை பிடிப்பதில்லை. அவர் வியப்புக்களின் இறைவன்.

நான் வாரத்தின் முதல் நாளெல்லாம் ப்ளானரில் இந்த வாரம் என்ன செய்ய வேண்டும் என எழுதும்போது எனக்குள்ளே சிரித்துக்கொள்வேன். நாம நம்ம வாழ்க்கைய பிளான் பண்றோம். அவரு என்ன பிளான் வச்சிருக்காரோ? என்று.

சில நேரங்களில் கடவுளுக்கும் "ல", "ழ" பிரச்சினை வருவதுண்டு:

"எனக்கு நல்ல வழி காட்டும" என வேண்டுவோம்.

ஆனா, அவரு, "நல்ல வலி காட்டிக்கொண்டிருப்பார".

இருந்தாலும் வியப்புக்களை எதிர்கொள்வதும் இன்பமே.


Yesu Karunanidhi, Madurai.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!