Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       30  ஐனவரி 2018  
                                          பொதுக்காலத்தின் 4ஆம்  வாரம்  
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
என் மகன் அப்சலோமே! உனக்குப் பதில் நான் இறந்திருக்கலாமே!

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 18: 9-10,14b,24-25a,30-19: 3

அந்நாள்களில் அப்சலோம் தாவீதின் பணியாளரை எதிர்கொள்ள நேர்ந்தது. அவன் ஒரு கோவேறு கழுதைமீது ஏறி வந்து கொண்டிருந்தான். அது ஒரு பெரிய கருவாலி மரத்தின் அடர்த்தியான கிளைகளுக்குக் கீழே சென்று கொண்டிருந்தது. அப்போது அவனது தலை கருவாலி மரத்தில் சிக்கிக் கொள்ள, அவன் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே தொங்கினான். அவன் ஏறிவந்த கோவேறு கழுதை முன்னே சென்றுவிட்டது.

இதைக் கண்ட ஒரு வீரன் யோவாபிடம் சென்று, "இதோ! அப்சலோம் கருவாலி மரத்தில் தொங்குவதைக் கண்டேன்" என்று கூறினான். யோவாபு தம் கையில் மூன்று ஈட்டிகளை எடுத்துச்சென்று உயிருடன் கருவாலி மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அப்சலோமின் நெஞ்சில் அவற்றைப் பாய்ச்சினார்.

அப்போது தாவீது இரு வாயில்களுக்கும் இடையே அமர்ந்து கொண்டிருந்தார். காவலன் மதிலின் வாயிலுக்கு மேல் ஏறிச் சென்று கண்களை ஏறெடுத்துப் பார்த்தான். ஓர் ஆள் தனியாக ஓடிவருவதைக் கண்டான். காவலன் குரலெழுப்பி அரசரிடம் கூற, அரசர், "தனியாக வந்தால் அவனிடம் நற்செய்தியுள்ளது" என்றார்.

அந்த ஆள் இன்னும் அருகில் வந்துகொண்டிருந்தான். அரசர் அவனை நோக்கி, "விலகி, அங்கே நில்" என்று கூற, அவனும் விலகி நின்றான்.

அப்போது கூசியனும் வந்து, "என் தலைவராம் அரசே! நற்செய்தி! இன்று ஆண்டவர் உமக்கு எதிராக எழுபவர்களின் கரத்தினின்று உம்மை விடுவித்துள்ளார்" என்று கூறினான்.

"இளைஞன் அப்சலோம் நலமா?" என்று அரசர் வினவ, கூசியன், "என் தலைவராம் அரசரின் எதிரிகளும் உமக்கு எதிராகத் தீங்கிழைக்க எழுந்துள்ள அனைவரும், அந்த இளைஞனைப்போல் ஆவார்களாக!" என்றான்.

அப்போது அவர் அதிர்ச்சியுற்று, "என் மகன் அப்சலோமே! என் மகனே! என் மகன் அப்சலோமே! உனக்குப் பதில் நான் இறந்திருக்கலாமே! அப்சலோமே! என் மகனே!" என்று கதறிக்கொண்டே அவர் வாயிலின் மாடியறைக்குச் சென்றார்.

அரசர் தம் மகனுக்காக அழுது புலம்புவதாக யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது. "அரசர் தம் மகனுக்காக வருந்துகிறார்" என்று வீரர்கள் அனைவரும் கேள்விப்பட்டதால், அன்றைய வெற்றி அனைவருக்குமே ஒரு துக்கமாயிற்று. போரிலிருந்து புறமுதுகு காட்டி வெட்கத்தோடு ஓடுபவர்களைப் போன்று, அன்று வீரர்கள் நகருக்குள் யாருமறியாமல் நுழைந்தார்கள்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்  தி:பா: 86: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 1a)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்.

1 ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்; ஏனெனில், நான் எளியவன்; வறியவன். 2 என் உயிரைக் காத்தருளும்; ஏனெனில் நான் உம்மீது பற்றுடையவன்; உம் ஊழியனைக் காத்தருளும்; நீரே என் கடவுள்! நான் உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். பல்லவி

3 என் தலைவரே! என்மேல் இரக்கமாயிரும்; ஏனெனில், நாள் முழுவதும் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். 4 உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்; என் தலைவரே! உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். பல்லவி

5 ஏனெனில் என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். 6 ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 8: 17

அல்லேலூயா, அல்லேலூயா! அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
சிறுமியே! உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 21-43

இயேசு படகிலேறி, கடலைக் கடந்து மீண்டும் மறுகரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார்.

தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, "என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்'' என்று அவரை வருந்தி வேண்டினார்.

இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர். அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வரவர மிகவும் கேடுற்றது. அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார்.

ஏனெனில், "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்'' என்று அப்பெண் எண்ணிக்கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப்போக்கு நின்றுபோயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார்.

உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, "என் மேலுடையைத் தொட்டவர் யார்?'' என்று கேட்டார்.

அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், "இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், "என்னைத் தொட்டவர் யார்?" என்கிறீரே!'' என்றார்கள்.

ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், "மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு'' என்றார்.

அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், "உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?'' என்றார்கள்.

அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், "அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்'' என்று கூறினார்.

அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை. அவர்கள் தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, `"ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்'' என்றார்.

அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், "தலித்தா கூம்'' என்றார்.

அதற்கு, "சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு' என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள்.

"இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது'' என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்!!!

ஒரு சமயம் வேகமாகப் பறந்து வந்த புறா ஒன்று, உயர்ந்து வளர்ந்திருந்த மரத்தின் கிளையொன்றில் அமர்ந்தது. இதை அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அணிலொன்று அந்தப் புறாவிடம், "பறந்து வந்த வேகத்திலேயே ஏதாவதொரு கிளை மீது அமர்ந்துவிடுகிறீர்களே, கிளை முறிந்து விழுந்துவிடுமோ என்று பயம் உங்களுக்கு இல்லையா? என்று கேட்டது. அதற்கு புறா மிகவும் நிதானமாகப் பதில் சொன்னது, "நான் நம்புவது கிளைகளை மட்டுமல்ல என்னுடைய சிறகுகளையும்தான்" என்று.

ஆம், ஒருவர் (தன்) நம்பிக்கையோடு இருக்கின்றது அவருக்கு எதுவும் சாத்தியப்படும் என்பதைத்தான் மேலே உள்ள கதை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கடற்கரையில் இருக்கும்போது தொழுகைக்கூடத் தலைவராகிய யாயிர் அவரிடத்தில் வந்து, "என் மகள் சாகும்தருவாயில் இருக்கின்றாள். நீர் வந்து உமது கையை அவள்மீது வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்" என்கின்றார். இயேசு கிறிஸ்துவிடம் வந்த யாயிர் யார், அவர் யூத சமூகத்தில் எத்தகைய நிலையில் இருந்தார் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். யாயிர், தொழுகைக்கூடத்திற்குத் தலைவர். அப்படியானால் அவர் தொழுகைக்கூடத்தில் நடைபெறும் திருவழிபாட்டிற்கு அவர்தான் பொறுப்பு என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இத்தகைய உயர் பதவியில் இருக்கின்ற யாயிர் சாகும்தருவாயில் இருக்கின்ற தன்னுடைய மகளை இயேசு கிறிஸ்துவால்தான் குணப்படுத்த முடியும் என்று நம்பி வருகின்றார். அது மட்டுமல்லாமல், அவர் இயேசு கிறிஸ்துவை அணுகி வந்ததும், அவருடைய காலில் விழுந்து பணிந்து வணங்குகின்றார். இத்தகைய பணிவும் நம்பிக்கையையும் இயேசுவை அவர் பக்கம் திரும்புகின்றது. ஆகையால், நாம் ஆண்டவர் இயேசுவிடம் நம்பிக்கையோடும் அதே நேரத்தில் பணிவோடும் இருக்கின்றபோது நமது வேண்டுதல் கேட்கப்படும் என்பது உண்மையாகின்றது.

யாயிரின் வேண்டுதலுக்கு இணங்கி, இயேசு கிறிஸ்து அவருடைய இல்லத்திற்குச் செல்கின்றார். அப்படிச் செல்லும்போது வழியில், யாயிரின் இல்லத்திலிருந்து வருகின்ற ஆட்கள் அவரிடம், "உம்முயடைய மகள் இறந்துபோய்விட்டால். ஆகையால் ஏன் இன்னும் போதகரைச் தொந்தரவு செய்கிறீர்?" என்கிறார்கள். அவர்கள் சொன்ன செய்தி இயேசுவின் காதிலும் விழ, அவர் அவரை நோக்கி, "அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்" என்கின்றார். இப்படிச் சொல்லிவிட்டு இயேசு யாயிரின் வீட்டிற்குள் செல்கின்றார். அங்கோ ஒரே அழுகையும் புலம்பலுமாக இருக்கின்றது. அப்போது இயேசு அவர்களிடம், "ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை உறங்குகிறாள்" என்கிறார். இயேசு இவ்வாறு சொன்னதைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் நகைகின்றார்கள். இந்த நிகழ்ச்சிக்கு விளக்கம் தருகின்றபோது விவிலிய அறிஞராகிய எரோனிமுஸ் (St. Jerome), "மக்களைப் பொறுத்தளவில் சிறுமி இறந்திருக்கலாம், ஆனால் ஆண்டவர் இயேசுவைப் பொறுத்தளவில் அவள் இறக்கவில்லை, உறங்குகிறாள். அதனால்தான் இயேசு அப்படிச் சொல்கிறார். இதைப் புரிந்துகொள்ளாத மக்கள்தான் அவரைப் பார்த்து நகைக்கிறார்கள்" என்று சொல்வார்.

அதன்பின் இயேசு, சிறுமியின் தந்தை மற்றும் அவருடைய நெருக்கமான சீடர்களைத் தவிர்த்து மற்ற எல்லாரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு சிறுமியை உயிர்பெற்றெழச் செய்கின்றார். மட்டுமல்லாமல் அவருக்கு உணவும் கொடுக்கச் சொல்கின்றார்.

மக்களெல்லாம் சிறுமி இறந்துவிட்டாள் என்று இருக்கும்போது, இயேசுவோ அவள் உறங்குகிறாள் என்று சொல்லி யாயிரை நம்பிக்கையோடு இருக்கச் சொல்கின்றார். இயேசு சொன்னதற்கேற்ப யாயிர் நம்பிக்கையோடு இருக்கின்றார். அதனால் இறந்துபோன தன்னுடைய மகளை, ஆண்டவர் இயேசுவால் உயிர்பெற்றெழச் செய்து பெற்றுக்கொள்கின்றார். ஆகையால், யாயிர் ஆண்டவர் இயேசுவின் கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கை, அவருக்கு இறந்த அவருடைய மகளை மீண்டும் பெற்றுக்கொள்ள உறுதுணை புரிந்தது என்று நாம் உறுதியாகச் சொல்லலாம்.

இந்த நிகழ்வில் ஆண்டவர் இயேசுவின் செயல்பாடுகளும் நம்முடைய சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. சிறுமியை எல்லாரும் இறந்துபோய்விட்டாகச் சொல்கின்றபோது, இயேசு யாயிரிடம், "அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்" என்று அவருக்கு நம்பிக்கையை ஊட்டுகின்றார். பின்னர் சிறுமியை உயிர்த்தெழச் செய்தபின் மிகவும் கரிசனையோடு அவருக்கு உணவு கொடுக்கச் சொல்கின்றார். இவ்வாறு இயேசு நமக்கு நம்பிக்கையூட்டக் கூடியவராகவும் நம்மீது உண்மையான அன்போடும் இருக்கின்றார் என்பதை இதன்வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.

ஆகவே, நாம் நமக்கு நம்பிக்கை ஊட்டக்கூடியவரும் நம்மீது உண்மையான கரிசனையோடும் இருக்கின்ற ஆண்டவர் இயேசுவிடம் யாயிரைப் போன்று அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

கடவுளின் வல்லமை

யூதர்களின் துக்கச்சடங்கு மிகவும் விரிவானது. ஒருவர் இறந்தவுடனே, அழுகையும், கூப்பாடும் வெளிப்பட்டு, இறப்பை, அங்கிருக்கிறவர்களுக்கு அறிவித்துவிடும். அழுகிறவர்கள் இறந்தவர்களின் மேல் விழுந்தும், தங்கள் முடிகளை பிய்த்துக்கொண்டும், தங்கள் உடைகளை கிழித்துக்கொண்டும் அழுவார்கள். எவ்வாறு உடைகள் கிழிக்கப்பட வேண்டும் என்பது பற்றி ஒழுங்குகள் இருந்தன. குழல்கள் ஊதப்பட வேண்டும். ஏழையாக இருந்தாலும், குறைந்தது இரண்டு குழல் ஊதுவோராவது இருக்க வேண்டும். சோகத்தை வெளிப்படுத்தும் இசைக்கருவியாக இது பார்க்கப்பட்டது.

புலம்புகிறவர்கள் துக்கநாட்களில் வேலைக்குச் செல்லக்கூடாது. ஒரு கூலித்தொழிலாளி கூட, குறைந்தபட்சம் மூன்று நாட்கள் வேலைக்குச் செல்வதிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். இறைவாக்கு நூல்களை வாசிக்கக்கூடாது. ஏனெனில், இறைவாக்கு நூல்களை வாசிப்பது, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாகும். யோபு, எரேமியா மற்றும் புலம்பல் நூல்களை மட்டும் வாசிக்கலாம். முப்பது நாட்களுக்கு ஊரைவிட்டு எங்கும் வெளியே செல்லக்கூடாது. திருமணமாகாதவர்கள் இறந்தால், அடக்கம் செய்வதற்கு முன்னதாக, திருமணச்சடங்குகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு, பல சடங்குகள் துக்கக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.

இனிமேல் ஒன்றும் நடப்பதற்கில்லை. அனைத்துமே முடிந்துவிட்டது என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருந்த வேளையில், இயேசுவின் வார்த்தைகள் அங்கிருந்தவர்களை ஒன்றும் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால், இயேசுவின் வார்த்தைகளுக்குப்பின்னால் நடந்தது, அனைவரையும் மலைக்க வைத்தது. நம்பிக்கையின்மையை ஒரு வினாடியில் இயேசுவின் வார்த்தைகள் மலைக்க வைத்தன. அதுதான் கடவுளின் ஆற்றல். அதுதான் கடவுளின் வல்லமை. அதை நமது வாழ்க்கையில் நம்புவோம். வாழ்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

நம்பிக்கையின் ஆழம்

மாற்கு நற்செய்தியாளர் தலித்தா கூம் என்கிற அரேமேய வார்த்தையைப் பயன்படுத்துகிறார். எதற்காக மாற்கு நற்செய்தியாளர் கிரேக்க மொழியில் தனது நற்செய்தியை எழுதுகிறபோது, அரேமேய வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும்?  மாற்கு நற்செய்தியாளர் இந்த வார்த்தையை பேதுருவிடமிருந்து அறிந்திருக்க வேண்டும். பேதுரு இயேசுவின் மூன்று முக்கிய சீடர்களுள் ஒருவர். இறந்த சிறுமியை உயிர்ப்பிக்கும்போது, அவர் இயேசுவோடு நிச்சயம் இருந்திருப்பார். இறந்த போயிருக்கிற சிறுமி உயிரோடு எழுந்தது, பேதுருவின் நெஞ்சில் பசுமரத்தாணி போல் நிச்சயமாக பதிந்திருக்கும். அந்த நிகழ்வு அவருடைய கண்களை விட்டு எளிதாக அகலக்கூடியது அல்ல. எனவே, இயேசு பயன்படுத்திய தலித்தா கூம் என்கிற வார்த்தை நிச்சயமாக அவர் மறந்திருக்க மாட்டார். அதனால் தான் அந்த வார்த்தை மறக்கப்படாமல் இங்கே பயன்படுத்தப்படுகிறது.

இந்த பகுதியில் இரண்டு விதமான மனநிலையைப்பார்க்கிறோம். 1. சுற்றிருக்கும் மக்கள் கூட்டம் நம்பிக்கையிழந்த மனநிலையோடு இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால், இயேசு நம்பிக்கையோடு காணப்படுகிறார். அதன் வெளிப்பாடுதான் அஞ்சாதே என்கிற வார்த்தை. 2. அழுது, புலம்பி அங்கலாயித்துக்கொண்டிருக்கும் மக்கள் கூட்டம். மற்றொருபுறம் அமைதியான இயேசு. இறப்பு வருத்தமளிக்கும், நெஞ்சைக்கிழிக்கும் ஒரு நிகழ்வுதான். ஆனாலும், எதிர்பாராத நிகழ்வுகளையும் தாங்கும் உறுதியான நெஞ்சம் கொண்டிருக்க வேண்டும். இந்த இரண்டுவிதமான மனநிலையின் வேறுபாட்டிற்கான காரணம், இயேசு கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறார். ஆனால், மக்கள் கூட்டத்தினருக்கு நம்பிக்கையில்லை.

கடவுள் நம்பிக்கை எந்த அளவுக்கு வைக்கலாம், என்று நம்பிக்கையின் ஆழத்தை நமக்குக் காட்டுகிறவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. இயேசுவை நமது வாழ்வில் பின்பற்றினால், நிச்சயம் நம்பிக்கையின் ஆழத்திற்கு நாமும் செல்ல முடியும். வாழ்வை இயேசுவின் மனநிலையோடு அணுக முடியும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இறைநம்பிக்கை எது?

தொழுகைக்கூடத்தலைவர் பதவி என்பது யூத மக்களால் மதிப்பும், மரியாதையுமிக்க ஒரு பதவி. தொழுகைக்கூடத்தில் நடைபெறும் அனைத்து செயல்பாடுகளுக்கும் அவர்தான் பொறுப்பு. அப்படிப்பட்ட நபர் இயேசுவிடத்திலே உதவிக்கு வந்தார் என்பது ஆச்சரியமான செய்தி. ஏனென்றால், இயேசுவின் போதனைகளும், புதுமைகளும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்த போதிலும், மேல்மட்டத்தலைவர்களிடையே வெறுப்பைத்தான் சந்தித்திருந்தது. இயேசுவைப்பற்றி தவறான எண்ணங்கள் அவர்களிடையே மேலோங்கியிருந்தது. அதனால் தான், தொடக்கத்தில் தொழுகைக்கூடங்களில் போதிப்பதற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் பிற்காலத்தில் அவ்வளவாக இயேசுவுக்கு கிடைத்திருக்கவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு தொழுகைக்கூடத்தலைவர் இயேசுவைத்தேடி வருவது, மேல்மட்டத்தலைவர்கள் மத்தியில் அவருக்கு அவப்பெயரைப்பெற்றுத்தரலாம். அதையெல்லாம் மீறி அவர் இயேசுவிடத்திலே உதவிக்கு வந்திருப்பது, இயேசுவின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் மகள் மீது வைத்திருந்த பாசம்.

சிறுமி இறந்துவிட்டாள். போதகரைத்தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற செய்தி கிடைத்தபோதிலும், இயேசு அவரிடத்திலே நம்பிக்கையை மட்டும் விடாமலிருக்கச்சொல்கிறார். தொழுகைக்கூடத்தலைவர் வந்ததே நம்பிக்கையில்தான். ஏனெனில் அவருடைய மகள் வருகின்றபோதே சாகுந்தருவாயில் இருந்தார். அதாவது, மருத்துவர்களால் கைவிடப்பட்டநிலையில், அவர் எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியைச்சந்தித்த நிலையில், கடைசி முயற்சியாக இயேசுவிடம் வந்திருக்கிறார். கடவுள் மீது வைத்துவிட்ட நம்பிக்கையை எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் இழந்துவிடக்கூடாது என்பதே இயேசு கற்றுத்தரும் பாடம். இந்த உலகத்தை ஒன்றுமில்லாமையிலிருந்து இறைவன் படைத்திருக்கிறார். இறைவனால் முடியாதது இந்த உலகத்தில் எதுவும் இல்லை என்கிற சிந்தனையை இயேசு இங்கே ஆழப்படுத்துகிறார்.

இறைவனை நம்பி நாம் செய்கிற எந்தவொரு செயலும் பொய்த்துப்போவதில்லை. அது எப்போதும் நமக்கு வெற்றியே என்பதை உணர்ந்து, நம் விசுவாசத்தை ஆழப்படுத்த இறைவனிடம் மன்றாடுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

அஞ்சாதீர், நம்பிக்கையை விடாதீர்!

இன்றைய நற்செய்தி வாசகம் உணர்ச்சிகளின் குவியலாக இருக்கிறது.

துயரம்: யாயிரின் மகள் சாகும் தறுவாயில் இருந்ததால், இயேசுவை நாடி வருகிறார். எவ்வளவு நெருக்கடியான மனநிலையில் இருந்தார் என்றால், இயேசுவின் காலிலேயே விழுந்துவிட்டார்.அச்சமும், அவநம்பிக்கையும்: யாயிரின் மகள் இறந்துவிட்ட செய்தியைக் கொண்டுவந்த ஆள்கள் போதகரை இன்னும் ஏன் தொந்தரவு செய்கிறீர்? என்று சொல்லி, அவருடைய நம்பிக்கையையும், மனவலிமையையும் குலைக்கிறார்கள்.ஊக்கம்: இயேசுவோ அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர் என்று சொல்லி அவருக்கு ஊக்கமூட்டி, உடன் செல்கிறார்.அழுகை, துயரம்: இறந்த வீட்டில் ஒப்பாரியும், ஓலமும், புலம்பலும் நிலவுகின்றன.துணிவான நம்பிக்கை: சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள் என்னும் இயேசுவின துணிச்சலும், நம்பிக்கையும் நிறைந்த சொற்கள்.நகைப்பு: மக்களின் நம்பிக்கை இல்லாத நகைப்புவியப்பும், மலைப்பும்: இயேசு சிறுமியை உயிர்ப்பித்தபோது, அங்கிருந்தோர் யாவரும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள்.

இத்தனை உணர்வுகளுக்கும் நடுநாயகமாக விளங்குவது இயேசுவின் நம்பிக்கையும், இயேசுமீது யாயிர் கொண்டிருந்த நம்பிக்யையும். அச்சம், கலக்கம், துயரம், அழுகை, ஓலம், புலம்பல், அமளி... போன்றவை இறைநம்பிக்கையின் எதிரிகள். இவை இருக்கும் இடத்தில் நம்பிக்கை இருக்காது, எனவேதான், இயேசு, அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர் என அறிவுறுத்துகிறார்.

நமது வாழ்க்கையில் எவ்வளவு கொந்தளிப்புகள் வந்தாலும், உணர்ச்சிகளுக்கு அடிமையாகிவிடாமல், நம்பிக்கையுடன் வாழ்வோம்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்க்கையில் நாங்கள் சந்திக்கின்ற அச்சம், அவமானம், கலக்கம், குழப்பம், துயரம், சாவு போன்ற வேளைகளில் நம்பிக்கை இழந்துவிடாமல், உம்மைப் பற்றிக்கொள்ளும் அருள்தாரும், ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

----------------------------------------

இயேசுவைத் தொட்ட பெண் ... !

இயேசு தம் பணிவாழ்வில் பலரைத் தொட்டுக் குணமாக்கினார். இயேசுவைத் தொட்டுக் குணம் பெற்ற மனிதர்களில் ஒருவராகப் பெருமை அடைகிறார் பெயர்கூடக் குறிப்பிடப்படாத இந்தப் பெண். பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் என்றுதான் இவர் அடையாளம் காட்டப்படுகிறாரே தவிர, பெயரினாலோ, வேறு எந்த சமூக அடையாளத்தினாலோ அல்ல. அதுதான் அன்றைய பெண்களின் நிலை!

ஆனால், இயேசு அவரைப் பெருமைப்படுத்துகிறார். எப்படியெல்லாம்...
1. இயேசுவைத் துணிவுடனும், நம்பிக்கையுடனும் தொட்டவர் என்னும் பெருமையை அறிவிக்கும் வண்ணம் "என் மேலுடையைத் தொட்டவர் யார்?" என்று கேட்டதன் மூலம்.

2. "மகளே" என்று உரிமையுடன் அழைத்ததன் மூலம்.

3. "உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று" என்று பாராட்டியதன்மூலம்.

4. "அமைதியுடன் போ" என்று வாழ்த்தியதன்மூலம்.

5. "நீ நோய் நீங்கி நலமாயிரு" என்று ஊக்கப்படுத்தியதன்மூலம்.

பெண்களைப் பற்றிய பார்வையையும், பழக்கங்களையும் மாற்றியவர் என்ற பெருமை இயேசுவுக்கு உண்டு. இன்றைய நற்செய்தி வாசகம் அதற்கான ஒரு சான்று

மன்றாடுவோம்: பெண்களைப் பெருமைப்படுத்திய ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம்மைப் போல நாங்களும் பெண்களை மாண்புடன் நடத்த தூய ஆவி என்னும் கொடையைத் தந்தருள்வீராக. உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

 

இணையதள உறவுகளே

என் ஆடையைத் தொட்டு சுகம் பெற்றது யார்? சுற்றிச் சுற்றி தேடிப் பார்க்கிறார். கொடுத்த சுகத்தைத் திரும்ப பெறுவதற்கா? அவளைப் பிடித்து நான்கு வார்த்தை நறுக்கென்று கேட்வா? அதைக் கேட்டு அவளை அத்தனைபேர் முன்னிலையில் அவமானப்படுத்தவா? நிச்சயமாக இல்லை. கொடுத்த எந்த கொடையையும் திரும்ப எடுத்துக்கொள்பவர் அல்ல நம் இயேசு (நாமாக கெடுத்து அழித்தால் மட்டுமே). அப்புறம் ஏன் தேடினார்?

நற்செயல்கள் நான்குபேர் முன்னிலையில் அங்கீகரிக்கப்பட வேண்டும். நற்செயலைச் செய்தவர்களும் அதுபோல பாராட்டப்பட வேண்டும். அந்த பெண்ணை சந்தித்து நேரடியாக பாராட்டுகிறார். தொழுகைக் கூடத்தலைவனிடம் நான் உன் குழந்தையைக் குணமாக்க உன் வீட்டிற்கு வருகிறேன் என்று சொல்லி புறப்பட்டதும், தனக்கும் தன் பக்தர்களுக்கும் இடையே உள்ளார்ந்த உறவு உண்டாக்கவே.

உங்களையும் நேரடியாக பார்த்து பேசி, உண்டு உறவாடி மகிழ நம் இயேசு விரும்புகிறார். உங்கள் வீட்டுக்கு வருவதற்கு அலாதி விருப்பம் அவருக்கு. தனிமையில் உங்களோடு பேச அவர் விரும்புகிறார். உங்கள் அன்றாட வாழ்க்கையை, வாழ்வின் எல்லாவற்றையும் தினமும் அவரோடு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சுமைகளை அவர் தாங்குவார். நற்சுகத்தோடு நல்வாழ்வு வாழ உதவுவார்.

-ஜோசப் லீயோன்

-------------------------

''இயேசு சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம் 'தலித்தா கூம்' என்றார். 
அதற்கு, 'சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு' என்பது பொருள். 
உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள்'' (மாற்கு 5:41-42)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- பன்னிரண்டு என்னும் எண் தனிப்பொருள் உடையது என்பது யூதர்களின் கருத்து. இயேசுவின் வல்லமையால் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த சிறுமிக்கு வயது பன்னிரண்டு. சிறுவயதில் இறப்பது ஒரு பெரிய இழப்புதான். அக்கால வழக்கப்படி பன்னிரண்டு வயதான பெண் திருமணத்திற்குத் தகுதி பெற்று, குழந்தைப் பேறு அடையும் பருவத்தை எய்தியவர். அவ்வயதில் இறக்க நேர்ந்தால் தாய்மைப் பேறு இன்றி இவ்வுலகிலிருந்து மறைந்துபோகின்ற அவல நிலை அவருக்கு ஏற்படும். அது குடும்பத்தின் நற்பெயருக்கும் களங்கமாகும். இயேசுவைப் பார்க்கச் சென்ற தொழுகைக் கூடத் தலைவர் யாயிர் தம் மகள் இறந்துபோகும் தறுவாயில் இருப்பதாகத் தான் முதலில் தெரிவித்தார். ஆனால் பிறகு தம் மகள் இறந்துவிட்டாள் என்னும் செய்தியை அவருக்குத் தெரிவிக்கிறார்கள். அச்செய்தி இயேசுவின் காதிலும் விழுகிறது. இயேசுவின் உள்ளத்தில் இரக்கம் பொங்கி எழுகிறது. அவர் யாயிரின் வீட்டுக்குள் செல்கிறார். பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூன்று சீடர்களை மட்டுமே தம்மோடு வர அனுமதிக்கிறார். இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளின் போது இந்த மூன்று சீடர்கள் மட்டுமே இருப்பதை நாம் கருதலாம். எடுத்துக்காட்டாக, இயேசு மலை மீது தோற்றம் மாறியபோது இம்மூன்று சீடர்களும் அவரோடு இருந்தார்கள் (மாற் 9:2). எருசலேமின் அழிவுபற்றி இயேசு அறிவித்தபோது அவர்கள் இருந்தார்கள் (மாற் 13:3-4). கெத்சமனித் தோட்டத்தில் இயேசு இறைவேண்டல் செய்தபோதும் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவருமே இயேசுவோடு இருந்தார்கள் (மாற் 14:33). எனவே, இயேசு பன்னிரு வயது நிரம்பிய சிறுமியைச் சாவிலிருந்து உயிர்பெற்றெழச் செய்த நிகழ்ச்சி ஒரு புதுமை மட்டுமல்ல, ஆழ்ந்த பொருளுடைய ஒரு நிகழ்ச்சியாகவும் இருந்தது.

-- அதாவது, இயேசு மக்களுக்கு வாழ்வளிக்க வந்தார். அவர்களுக்குப் புத்துயிர் வழங்க வந்தார். அவர்களுக்குக் கடவுளின் வாழ்வில் பங்களிக்க வந்தார். எனவே, பன்னிரு வயது நிரம்பிய சிறுமியை நோக்கி ''எழுந்திடு'' என இயேசு கூறிய சொற்கள் நாம் இயேசுவின் வல்லமையால் ஒருநாள் உயிர்பெற்றெழுவோம் என்பதற்கு முன் அடையாளமாயிற்று. சிறுமியின் தந்தையிடம் இயேசு, ''அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்'' (மாற் 5:36) என்று கூறினார். கடவுளால் எல்லாம் நிறைவேற்ற முடியும் என நாம் உளமார நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை நம் வாழ்வில் வெளிப்பட வேண்டும். அப்போது இயேசு நமக்கு வாழ்வளிப்பார். நம்மைச் சாவிலிருந்து மீட்டு நாம் இறைவனோடு என்றென்றும் வாழ்கின்ற பேற்றினை நமக்கு அளிப்பார்.

மன்றாட்டு
இறைவா, உம் வல்லமையில் நாங்கள் நம்பிக்கை கொள்ளவும் அதனால் வாழ்வு பெறவும் அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

''இயேசு இரத்தப் போக்குடைய பெண்ணிடம்,
'மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. 
அமைதியுடன் போ, நீ நோய் நீங்கி நலமாயிரு' என்றார்'' (மாற்கு 5:34)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசுவை அணுகிச் சென்ற மக்கள் அவரிடமிருந்து என்ன எதிர்பார்த்தார்கள்? சிலர் அவர் புரிந்த அதிசய செயல்களால் கவரப்பட்டார்கள். சிலர் அவருடைய போதனையைக் கண்டு வியந்து அவரைப் பின்சென்றார்கள். மற்றும் சிலர் அவரை ஓர் இறைவாக்கினராகக் கருதி அவர் தங்களுக்குக் கடவுள் பெயரால் அறிவித்ததைக் கேட்குமாறு சென்றார்கள். இயேசுவின் எதிரிகளோ அவரிடத்தில் குற்றம் காண்பதற்காக அவரை அணுகினார்கள். இவ்வாறு பலரும் பல நோக்கங்களோடு இயேசுவிடம் சென்றதை நற்செய்தி ஆசிரியர்கள் பதிவுசெய்துள்ளனர். இயேசு கடவுளின் பெயரால் மக்களுக்குச் செய்தி கூறியதை ஏற்றுக்கொண்டவர்களின் உள்ளத்தில் நம்பிக்கை என்னும் விளக்கு ஒளிர்ந்தது. அவர்கள் இயேசுவிடம் வெளிப்பட்ட வல்லமை கடவுளிடமிருந்தே வருகிறது என்பதை ஏற்றுக்கொண்டார்கள். இவ்வாறு கடவுளின் வல்லமையை இயேசுவிடம் கண்ட மக்களுக்கு இயேசு மனமிரங்கி நன்மை புரிந்த தருணங்கள் பல உண்டு.

-- பல ஆண்டுகள் இரத்தப் போக்கினால் அவதிப்பட்ட பெண் இயேசுவை நம்பிக்கையோடு அணுகிச் சென்று, அவருடைய மேலாடையைத் தொடுகிறார். இவ்வாறு தொடுவதால் தனக்கு நலம் கிடைக்கும் என நம்புகிறார். அந்நம்பிக்கை வீண் போகவில்லை. மக்கள் கூட்டத்தின் நடுவில் அப்பெண்ணை அடையாளம் கண்ட இயேசு அவருடைய நம்பிக்கையைப் போற்றியுரைக்கிறார்: ''மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று'' (மாற் 5:34). மனிதருக்கு நலம் வழங்கிய இயேசு எப்போதுமே அவர்களுடைய நம்பிக்கையைப் போற்றுவதைக் காண்கிறோம். நலம் பெறுவது தானாகவே நிகழ்வதல்ல, மாறாக, நம்பிக்கையோடு கடவுளை அணுகுவோர் நலம் பெறுவர். கடவுளின் வல்லமையால்தான் நமக்கு நலம் கிடைக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் நம் உள்ளத்தில் நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை இல்லாத இடத்தில் நலம் பெறுவதற்கான ஆவல் கூட இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால் நம்பிக்கையோடு இயேசுவை அணுகுவோருக்குக் கடவுளின் அமைதி பரிசாகக் கிடைக்கும் (மாற் 3:54).

மன்றாட்டு
இறைவா, நாங்கள் உம்மை நம்புவதில் ஒருநாளும் குறைபடாதிருக்க அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!