Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       29  ஐனவரி 2018  
                                          பொதுக்காலத்தின் 4ஆம்  வாரம்  
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
தப்பி ஓடுவோம்; இல்லையேல் அப்சலோமிடமிருந்து தப்ப முடியாது.

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 15: 13-14, 30;16: 5-13a
 
அந்நாள்களில் தூதன் ஒருவன் தாவீதிடம் வந்து, "அப்சலோம் இஸ்ரயேலரின் உள்ளங்களைக் கவர்ந்து கொண்டார்" என்று கூறினான்.

தாவீது தம்மோடு எருசலேமிலிருந்த அலுவலர் அனைவரிடமும், "வாருங்கள், நாம் தப்பியோடுவோம்; ஏனெனில் அப்சலோமிற்கு முன்பாக நாம் தப்ப முடியாது. விரைவில் வெளியேறுங்கள், இல்லையேல் அவன் விரைவில் நம்மை மேற்கொண்டு, நமக்குத் தீங்கு விளைவிப்பான்; நகரையும் வாள்முனையால் தாக்குவான்" என்றார்.

தாவீது அழுதுகொண்டே ஒலிவ மலை ஏறிச் சென்றார். தலையை மூடிக்கொண்டு வெறுங்காலோடு அவர் நடந்தார். அவரோடு இருந்த மக்கள் அனைவரும் தம் தலையை மூடிக்கொண்டு அழுதுகொண்டே ஏறிச்சென்றனர். தாவீது பகூரிம் வந்தபோது, சவுலின் குடும்பத்தையும் வீட்டையும் சார்ந்த ஒருவன் அவரை எதிர்கொண்டான். அவன் கேராவின் மகனான சிமயி. அவன் பழித்துக் கொண்டே எதிரே வந்தான் .

அவன் தாவீது மீதும், தாவீது அரசரின் எல்லாப் பணியாளர் மீதும், எல்லா மக்கள் மீதும், அவர்தம் வலமும் இடமும் இருந்த வீரர்கள் மீதும் கல்லெறிந்தான். சிமயி பழித்துக் கூறியது: "இரத்த வெறியனே! பரத்தை மகனே! போ! போ! நீ சிந்திய சவுல் வீட்டாரின் இரத்தப் பழி அனைத்தையும் ஆண்டவர் உன்மீது வரச்செய்துள்ளார். சவுலுக்குப் பதிலாக நீ ஆட்சி செய்தாய் அன்றோ! ஆண்டவர் உன் மகன் அப்சலோமின் கையில் அரசைத் தருவார்! இரத்த வெறியனான நீ உன் தீமையிலேயே அழிவாய்."

அப்போது செரூயாவின் மகன் அபிசாய் அரசரிடம் வந்து, "இச்செத்த நாய் என் தலைவராம் அரசரைப் பழிப்பதா? இதோ நான் சென்று அவனது தலையைக் கொய்து எறிய எனக்கு அனுமதி தாரும்" என்றான்.

அதற்கு அரசர், "செரூயாவின் மக்களே! இதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். அவன் பழிக்கட்டும்! ஒருவேளை "தாவீதைப் பழி!" என்று ஆண்டவரே அவனுக்குச் சொல்லியிருந்தால், "இவ்வாறு நீ ஏன் செய்தாய்?" என்று யார் சொல்ல முடியும்" என்றார்.

மீண்டும் தாவீது அபிசாயிடமும் தம் பணியாளர் அனைவரிடமும் கூறியது: "இதோ! எனக்குப் பிறந்த என் மகனே என் உயிரைப் பறிக்கத் தேடுகிறான். பென்யமின் குலத்தைச் சார்ந்த இவன் செய்யலாகாதோ? அவனை விட்டுவிடு! அவன் பழிக்கட்டும்! ஏனெனில் ஆண்டவரே அவனைத் தூண்டியுள்ளார். ஒருவேளை ஆண்டவர் என் துயரத்தைக் காண்பார். இன்று அவன் பழித்துப் பேசியதற்காக எனக்கு அவர் நன்மை செய்வார்." தாவீது தன் ஆள்களோடு பயணத்தைத் தொடர்ந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்  தி:பா: 3: 1-2. 3-4. 5-7a (பல்லவி: 7a)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, எழுந்தருளும்; என்னை மீட்டருளும்.

1 ஆண்டவரே, என் எதிரிகள் எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்! என்னை எதிர்த்து எழுவோர் எத்தனை மிகுந்துவிட்டனர்!  2 "கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்" என்று என்னைக் குறித்துச் சொல்வோர் பலர். பல்லவி

3 ஆயினும், ஆண்டவரே, நீரே எனைக் காக்கும் கேடயம்; நீரே என் மாட்சி; என்னைத் தலை நிமிரச் செய்பவரும் நீரே. 4 நான் உரத்த குரலில் ஆண்டவரிடம் மன்றாடுகின்றேன்; அவர் தமது திருமலையிலிருந்து எனக்குப் பதிலளிப்பார். பல்லவி

5 நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்; ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு. 6 என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன். 7ய ஆண்டவரே, எழுந்தருளும்; என் கடவுளே, என்னை மீட்டருளும். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-20

அக்காலத்தில் இயேசுவும் அவர் சீடரும் கடலுக்கு அக்கரையில் இருந்த கெரசேனர் பகுதிக்கு வந்தார்கள். இயேசு படகை விட்டு இறங்கிய உடனே தீய ஆவி பிடித்த ஒருவர் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார். கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம். அவரை எவராலும் ஒருபொழுதும் சங்கிலியால் கூடக் கட்டிவைக்க முடியவில்லை. ஏனெனில், அவரைப் பல முறை விலங்குகளாலும் சங்கிலிகளாலும் கட்டியிருந்தும் அவர் சங்கிலிகளை உடைத்து விலங்குகளைத் தகர்த்து எறிந்தார். எவராலும் அவரை அடக்க இயலவில்லை. அவர் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்; தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார்.

அவர் தொலையிலிருந்து இயேசுவைக் கண்டு, ஓடிவந்து அவரைப் பணிந்து, "இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? கடவுள் மேல் ஆணை! என்னை வதைக்க வேண்டாம்'' என்று உரத்த குரலில் கத்தினார்.

ஏனெனில் இயேசு அவரிடம், "தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ'' என்று சொல்லியிருந்தார்.

அவர் அம்மனிதரிடம், "உம் பெயர் என்ன?'' என்று கேட்க அவர், "என் பெயர் இலேகியோன், ஏனெனில் நாங்கள் பலர்'' என்று சொல்லி, அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாம் என்று அவரை வருந்தி வேண்டினார்.

அங்கே மலைப் பகுதியில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. "நாங்கள் அப்பன்றிகளுக்குள் புகும்படி எங்களை அங்கே அனுப்பிவிடும்'' என்று தீய ஆவிகள் அவரை வேண்டின.

அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார். பின் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது. பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்களோ ஓடிப்போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர்.

அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பேய் பிடித்திருந்தவர், அதாவது இலேகியோன் பிடித்திருந்த அவர், ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள். நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்.

அவர் படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடுகூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்.

ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, "உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கம் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்'' என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
மனிதர்களை மனிதர்களாக மதிப்போம்!

அந்த ஊரின் ஆற்றங்கரையோரம் அமர்ந்து போதித்துக்கொண்டிருந்த துறவியைப் பார்ப்பதற்காக ஒவ்வொருநாளும் ஏராளமான மக்கள் வந்து போனார்கள். சிலர் துறவியிடமிருந்து ஆலோசனை கேட்பதற்கும், மற்றும் சிலர் ஒருசில தெளிவுகளைப் பெறுவதற்கும் அவரிடத்தில் வந்தார்கள்.

ஒருநாள் தொலைதூரத்திலிருந்து வந்திருந்த இளைஞன் ஒருவன் அவரிடத்தில், "சுவாமி! நீண்ட நாட்களாக ஒரு கேள்விக்கு பதில் தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருக்கின்றேன். பலரிடத்திலும் அந்தக் கேள்விகக்கான பதிலைக் கேட்டுப் பார்த்துவிட்டேன். ஆனால், யாருமே அதற்கான பதிலை சரியாகச் சொல்லவில்லை. இந்த நேரத்தில்தான் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அதனால்தான் நீங்கள் என்னுடைய கேள்விக்கான பதிலை நிச்சயம் சொல்வீர்கள் என்ற நம்பிக்கையோடு இங்கே வந்திருக்கின்றேன்" என்றான். "உன்னுடைய கேள்வி என்ன என்று என்னிடத்தில் சொல் மகனே, நான் அதற்கான பதிலைச் சொல்கிறேன்" என்று துறவி அவனிடத்தில் பொறுமையோடு பதில் சொன்னார்.

உடனே அவன் துறவியிடத்தில், "சுவாமி! என்னுடைய கேள்வி இதுதான், "ஒருவன் நல்லவனா, கெட்டவனா என்பதை எதைவைத்து அடையாளம் காண்பது?" என்றான் இளைஞன். துறவி சிறுநேரம் அமைதியாக இருந்துவிட்டு பதில்சொன்னார், "ஒருவன் நல்லவனா, கெட்டவனா என்பதை அவன் அடுத்துவர்மீது கொள்கின்ற அக்கறையை வைத்து அடையாளம் கண்டுகொள்ளலாம். ஏனென்றால் பக்தியாக இருக்கின்ற பலர் நல்லவர்களாக இருப்பதில்லை, அதேநேரத்தில் கடவுள் பக்தியில்லாமல் இருப்பவர்கள் தீயவர்களாகவும் இருப்பதில்லை. இத்தகைய நிலையில் ஒருவன் நல்லவனா, கெட்டவனா என்பதை அவன் அடுத்தவர் மட்டில் கொள்கின்ற அக்கறையை (The Concern for others) வைத்துத்தான் அடையாளம் கண்டுகொள்ள முடியும்".

துறவி சொன்ன பதிலில் திருப்பி அடைந்த அந்த இளைஞன் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, அவ்விடத்தை விட்டு அகன்றான்.

ஆம், ஒருவன் தன்னுடைய சக மனிதனிடத்தில் கொள்கின்ற அக்கறைதான் அவனை நல்லவனாக இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கெரசேனர் வாழுகின்ற பகுதிக்குச் செல்கின்றார். அங்கே தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் கல்லறையை விட்டு வெளியேறி ஆண்டவர் இயேசுவை எதிர்கொண்டு வருகின்றார். அவர் சங்கிலியால் கட்டப்பட்டு இருக்கின்றார்; அவருடைய தோற்றமோ மிகவும் விகாரமாக இருக்கின்றது; கல்லறைத்தான் அவருடைய உறைவிடமாக இருக்கின்றது. இப்படிப் பட்ட நிலையிலிருந்த அந்த "மனிதர்"மீது ஆண்டவர் இயேசு பரிவு கொண்டு அவரிடமிருந்து தீய ஆவியை விரட்டியடித்து அவனைப் புதிய மனிதனாக மாற்றுக்கொள்கின்றார். இங்கே இன்னொரு செய்தியையும் நாம் நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டும். அது என்னவெனில், ஆண்டவர் இயேசு அம்மனிதனிடமிருந்து தீய ஆவியை விரட்டும்போது, அந்த ஆவி(கள்) அங்கு மேய்ந்துகொண்டிருந்த பன்றிகளிடம் புக, அவை கடலில் போய் விழுந்து தங்களை மாய்த்துக்கொள்கின்றன. இதனால் பன்றிகளுக்குப் பொறுப்பாளர்கள் இயேசுவிடம் வந்து, அவரை அங்கிருந்து போகச் சொல்கின்றார்கள். இயேசுவும் படகில் ஏறி, அவ்விடத்தை விட்டுப் போகின்றார்.

இங்கே இருவிதமான மனிதர்களைப் பார்க்கின்றோம். ஒருவர் தீய ஆவி பிடித்து மனிதரைப் போன்றே இல்லாத மனிதரிடம் அக்கறை கொண்ட இயேசு. இன்னொருவர் பன்றிகள்தான் முக்கியம், தீய ஆவி பிடித்திருந்த மனிதர் எப்படி இருந்தால் எனக்கென்ன என்ற மனநிலையோடு வாழக்கூடிய பன்றிகளின் பொறுப்பாளர். இன்றைய சமூகச் சூழலைப் பார்க்கின்றபோது சக மனிதன் எப்படிக் கிடந்தால் எனக்கென்ன, என்னுடைய உடைமைகள், பொருட்கள்தான் எனக்கு முக்கியம் என்றிருந்த பன்றிகளின் பொறுப்பாளர்களைப் போன்றுதான் நிறைய பேர் இருக்கின்றார்கள். இவர்களால் சமூகம் மேலும் பாழ்பட்டுப் போகும் என்பதுதான் நிதர்சன உண்மை. இந்த சூழ்நிலையில் ஒவ்வொருவரும் இயேசுவைப் போன்று முகமின்றி, முகவரி இன்றி இருக்ககூடியவர்களுக்கு முகவரி கொடுப்பதும், அவர்கள் மீது உண்மையான அக்கறையோடு வாழ்வதுதான் காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

ஆண்டவர் இயேசு தீய ஆவி பிடித்து, மனிதத் தன்மையே இல்லாது இருந்த அம்மனிதனைப் புது மனிதனாக மாற்றுகின்றார். அதுமட்டுமல்லாமல், அவனை புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கும் பணியானாக மாற்றுகின்றார். ஆகவே, நாம் ஒவ்வொருவரும் இயேசுவைப் போன்று தாழ்நிலையில் இருக்கின்ற மக்கள்மீது பரிவுகொண்டு அவர்களை மேன்மையுறச் செய்வதுதான் நம்முடைய தேவையாக இருகின்றது.

"இறக்கத்தான் பிறந்தோம், அதுவரை இரக்கத்தோடு இருப்போம்" என்பார் அன்னைத் தெரசா. நாம் நம்மோடு வாழக்கூடிய மக்கள்மீது உண்மையான இரக்கத்தோடும் அக்கறையோடும் இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
ஆண்டவர் உம்மீது இரக்கம்கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் அறிவி



இந்திய நாட்டிலிருந்து முதன்முறையாக இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் ரவீந்தர நாத் தாகூர். அவர் இந்த விருதை 1913 ஆம் ஆண்டு பெற்றார். அப்போதெல்லாம் அவரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பேச அழைப்பார்கள்.

ஒருநாள் அவரை வங்கத்தில் இருக்கக்கூடிய டாக்காவில் ஒரு நிகழ்ச்சியில் பேசுவதற்காக அழைத்திருந்தார்கள். தாகூரும் அதற்குச் சரி என்று ஒத்துக்கொண்டிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் தன்னால் வர இயலாது என்று தந்தி கொடுத்தார். இதை அறிந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. எப்போதும் நிகழ்ச்சிக்குத் தவறாமல் வந்துவிடும் தாகூர், எதற்கு இன்றைக்கு மட்டும் வரமுடியாது என்று சொல்கிறார் என காரணத்தை அறிந்துகொள்ள நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் தாகூர் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றார். டாக்காவிலிருந்து தாகூர் இருந்த இடத்திற்கு 50 கிலோமீட்டர் தூரம்தான்.

தாகூரைப் பார்க்கப் போனவர், அவர் இருக்கும் இடத்தை அடைந்ததும் வியப்புக்கு உள்ளானார். ஏனென்றால் தாகூர் அங்கே நோய்வாய்ப்பட்டுக் கிடந்த ஒருமனிதருக்கு, கூடவே இருந்து சிசிக்கை அளித்துகேக் கொண்டிருந்தார். வந்தவர் தாகூரிடம் தான் யார் என்று சொல்லிவிட்டு, "நீங்கள் எதற்காக நிகழ்ச்சிக்கு வரவில்லை? என்று கேட்டார். அதற்கு தாகூர், "ஐயா! இதோ இங்கே ஒருவர் படுத்திருக்கிறாரே, இவர் என்னுடைய பணியாளர். கடந்த வாரம் இந்த நகரைத் தாக்கிய காலரா நோய் இவரையும் கடுமையாகத் தாக்கியது. இதனால் இவர் உயிருக்கு மிகவும் போராடினார். இவரைக் கவனித்துக்கொள்வதற்கு யாருமில்லை. அதனால்தான் நான் இவர் அருகே இருந்து, இவரைக் கவனித்துக் கொண்டிருக்கிறன்" என்றார்.

இதைக்கேட்ட அந்த மனிதர் தாகூர் இலக்கியத்தில் மட்டும் பெரிய மனிதரில்லை, வாழ்க்கையிலும்தான் என்ற உண்மையை உணர்த்துகொண்டார்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தீய ஆவியின் பிடிக்குள் இருந்த ஒரு மனிதருக்கு புதிய வாழ்வுகொடுக்கிறார். கெரசனேர் பகுதியில் வாழ்ந்த பேய்பிடித்த மனிதன், மனிதன் என்ற நிலையை விடவும் மிகவும் கீழாக, விலங்கைப் போன்றே சங்கிலியால் கட்டிவைக்கப்பட்டு கல்லறைகளில் இருக்கிறார். அப்படிப்பட்ட மனிதன்மீது ஆண்டவர் இயேசு இரக்கம்கொண்டு அவனிடமிருந்த தீய ஆவியை விரட்டி அடிக்கின்றார்; அவருக்குப் புதுவாழ்வு கொடுக்கிறார். இப்போது அம்மனிதன் புதிய ஒருமனிதனாக உருவெடுக்கின்றான்.

வழக்கமாக எந்த ஒரு புதுமையை யாருக்குச் செய்தாலும் ஆண்டவர் இயேசு அம்மனிதரிடம், "இதை யாருக்கும் சொல்லாதே" எனச் சொல்வார். ஆனால் இங்கே இயேசு அம்மனிதரிடம், "உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கம்கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் வீட்டாருக்கு அறிவியும்" என்கிறார். அவரும் சென்று கடவுள் எவ்வளவு இரக்கமுள்ளவர் என்பதை மக்களுக்கு அறிவிக்கின்றார்.

இந்நற்செய்திப் பகுதியானது கடவுள் எவ்வளவு இரக்கமுள்ளவர் என்பதை நமக்குச் சுட்டிக்காடுக்கிறது. ஏனென்றால் விலங்கைப் போன்றே சங்கிலியால் கட்டப்பட்ட அம்மனிதனை ஆண்டவர் இயேசு மனிதராக நடத்தி, அவனுக்கு புதுவாழ்வு கொடுக்கிறார். எல்லாவற்றிலும் கடையவராகிய நம்மீதும்கூட கடவுள் இத்தனை அன்பு கொண்டிருக்கிறார் என்றால் அது கடவுளின் இரக்கமன்றி வேறொன்றுமில்லை.

விடுதலைப் பயணநூல் 34:6 ல் வாசிக்கின்றோம், "ஆண்டவர் இரக்கமும், பரிவும் இறைவன்" என்று. ஆகையால் கடவுளின் மேலான இரக்கத்தை உணர்ந்துகொண்டு, அந்த இரக்கத்தை பிறரிடமும் காட்டுவோம். இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Maria Antony, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
இனி எல்லாம் சுகமே!
சிமயி


நம்மிடம் மற்றவர்கள் கோபப்படும்போது,

நம்மை புரிந்து கொள்ளாதபோது,

நம்மிடம் பகைமை பாராட்டும்போது

நாம் எப்படி இருக்க வேண்டும்?

நாளைய முதல் வாசகத்தில் தாவீது இதற்கு விடையளிக்கின்றார்.

சிமயி என்பவன் தாவீதை,"ரத்த வெறியனே! பரத்தையின் மகனே!" என சாடுகிறான்.

தாவீதுடன் இருந்தவர்கள் சிமயின் மேல் கோபப்படுகின்றனர்.

ஆனால் தாவீது ரொம்ப கூலாக இருக்கின்றார்:

சிமயி திட்டுவதை இரண்டு நிலைகளில் நேர்முகமாக பார்க்கின்றார் தாவீது:

ஒன்று, ஒருவேளை ஆண்டவரே இதைச் செய்யும்படி சிமியிடம் சொல்லியிருக்கலாம். இதுதான் தாவீதின் உச்சகட்ட நம்பிக்கை. நம் வாழ்வில் நடப்பது எல்லாவற்றுக்கும் காரணம் ஆண்டவர் என நினைப்பது.

இரண்டு, ஒருவர் செய்த தீங்கை ஆண்டவர் நமக்கு நன்மையாக மாற்றுவார்.

Yesu Karunanidhi, Madurai.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!