Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       27  ஐனவரி 2018  
                                          பொதுக்காலத்தின் 3ஆம்  வாரம்  
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தேன்.

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 12: 1-7a.10b-17

அந்நாள்களில் ஆண்டவர் நாத்தானைத் தாவீதிடம் அனுப்பினார். நாத்தான் அவரிடம் வந்து, பின்வருமாறு கூறினார்: "ஒரு நகரில் இரு மனிதர் இருந்தனர்; ஒருவன் செல்வன். மற்றவனோ ஏழை. செல்வனிடம் ஆடு, மாடுகள் ஏராளமாய் இருந்தன. ஏழையிடம் ஓர் ஆட்டுக்குட்டி தவிர வேறு ஒன்றுமே இல்லை. அவன் அதை விலைக்கு வாங்கியிருந்தான். அது அவனோடும் அவன் குழந்தைகளோடும் இருந்து வளர்ந்து பெரியதாகியது. அவனது உணவை உண்டு, அவனது கிண்ணத்திலிருந்து நீர் குடித்து, அவனது மடியில் உறங்கி, அவனுக்கு ஒரு மகளைப் போலவே அது இருந்தது.

வழிப்போக்கன் ஒருவன் செல்வனிடம் வந்தான். தன்னிடம் வந்த வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்ய தன் ஆடுமாடுகளினின்று ஒன்றை எடுப்பதை விட்டு, அந்த ஏழையின் ஆட்டுக்குட்டியை எடுத்து வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்தான்."

உடனே தாவீது அம்மனிதன் மேல் சீற்றம் கொண்டு "ஆண்டவர் மேல் ஆணை! இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும், இரக்கமின்றி அவன் இதைச் செய்ததால் அவன் ஓர் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திருப்பித் தரவேண்டும்" என்று நாத்தானிடம் கூறினார்.

அப்போது நாத்தான் தாவீதிடம், "நீயே அம்மனிதன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ என்னைப் புறக்கணித்து இத்தியன் உரியாவின் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய். இதோ! ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உன் குடும்பத்தினின்றே நான் உனக்குத் தீங்கை வரவழைப்பேன்; உன் கண்கள் காண, உன் மனைவியரை உனக்கு அடுத்திருப்பவனிடம் ஒப்புவிப்பேன். அவன் பட்டப்பகலில் உன் மனைவியரோடு படுத்திருப்பான். நீ மறைவில் செய்ததை, அனைத்து இஸ்ரயேலும் காணுமாறு நான் பட்டப்பகலில் நிகழச்செய்வேன்" என்று கூறினார்.

அப்போது தாவீது நாத்தானிடம், "நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்" என்று சொன்னார்.

நாத்தான் தாவீதிடம், "ஆண்டவரும் உனது பாவத்தை நீக்கிவிட்டார். நீ சாகமாட்டாய். ஆயினும், ஆண்டவரின் எதிரிகள் அவரை இழிவாக எண்ணும்படி நீ இவ்வாறு செய்ததால் உனக்குப் பிறக்கும் மகன் உறுதியாகவே சாவான்" என்று சொன்னார்.

பின்பு நாத்தான் தம் வீட்டுக்குச் சென்றார். உரியாவின் மனைவி தாவீதிற்குப் பெற்றெடுத்த குழந்தையை ஆண்டவர் தாக்க, அது நோயுற்றுச் சாகக் கிடந்தது. தாவீது அக்குழந்தைக்காக ஆண்டவரிடம் மன்றாடினார். உண்ணா நோன்பு மேற்கொண்டு உள்ளே சென்று இரவெல்லாம் தரையில் படுத்துக் கிடந்தார். அவர்தம் வீட்டின் பெரியோர்கள் தரையினின்று அவரை எழுப்பச் சென்றனர்; அவருக்கோ விருப்பம் இல்லை. அவர்களோடு அவர் உண்ணவும் இல்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்  தி:பா: 51: 10-11. 12-13. 14-15
=================================================================================

பல்லவி: தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே, கடவுளே! படைத்தருளும்.

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும். 11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். பல்லவி

12 உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். 13 அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். பல்லவி

14 கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்; அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும். 15 என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 35-41

அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, "அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்'' என்றார். அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன. அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது. அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்.

அவர்கள், "போதகரே, சாகப் போகிறோமே! உமக்குக் கவலை இல்லையா?'' என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.

அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்துகொண்டார். கடலை நோக்கி, "இரையாதே, அமைதியாயிரு'' என்றார், காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று.

பின் அவர் அவர்களை நோக்கி, "ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?'' என்று கேட்டார். அவர்கள் பேரச்சம் கொண்டு, "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?'' என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இரையாதே, அமைதியாயிரு


இரவுநேரம். தாய் அவருடைய பத்து வயது மகன் என்றிருந்த வீட்டில் இரவு உணவு தயாராகிக்கொண்டிருந்தது. சமையற்கட்டில் இருந்த தாய் மிகவும் மும்முரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். மகனோ ஹாலில் இருந்த சோபாவில் உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தான்.

அப்போது தாய் மகனை நோக்கி, "மகனே! சமையற்கட்டில் இருந்த உப்பு தீர்ந்துவிட்டது. அதனால் உள்ளறையில் இருக்கும் உப்புப் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு ஓடி வா" என்றார். மகனுக்கு இருட்டைக் கண்டால் பயம். பயம் என்றால் அப்படியொரு பயம். அதனால் மகன் தாயைப் பார்த்து, "அம்மா, என்னால் அந்த இருட்டறைக்குள் போகப் பயமாக இருக்கின்றது. வேண்டுமானால் நீங்கள் போய் உப்புப் பாக்கெட்டை எடுத்துக்கொள்ளுங்கள்" என்றான். "உள்ளறையில்தான் இயேசு இருக்கின்றாரே, அப்புறம் எதற்கு இருட்டைக் கண்டு பயப்படப்படவேண்டும். போ, போய் உப்புப் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு வா" என்று தாய் தன் மகனுக்கு தைரியமூட்டி அனுப்பி வைத்தார். மகனும் மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு உப்புப் பாக்கெட்டை எடுக்க உள்ளறையை நோக்கி விரைந்தான்.

உள்ளறைக்குப் பக்கத்தில் சென்றதும் அதனுள் இருந்த இருட்டைக் கண்டு அவனுக்கு பயம் தொற்றிக்கொண்டது. உள்ளே சென்று உப்புப் பாக்கெட்டை எடுக்கவா? வேண்டாமா? என்ற குழப்பம் அவனுக்கு ஏற்பட்டது. அப்போது அவனுக்கு அவனுடைய தாய் சொன்னது நினைவுக்கு வந்தது. உடனே அவன், "இயேசுவே! நீர்தான் உள்ளே இருக்கிறீரே, உள்ளே இருக்கின்ற உப்புப் பாக்கெட்டை எடுத்துக்கொடுத்து எனக்கு உதவி செய்யக்கூடாதா" என்று கத்தத் தொடங்கினான்.

என்னதான் இயேசு கூடவே இருக்கின்றார் என்று தெரிந்தாலும், ஆபத்து என்று வந்துவிட்டால் எல்லாவற்றையும் மறந்துவிட்டு நாம் பயம்கொள்ளத் தொடங்கிவிடுகின்றோம் என்னும் செய்தியை இந்த நிகழ்வானது வேடிக்கையாகப் பதிவு செய்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவும் அவருடைய சீடர்களும் படகில் போய்க் கொண்டிருக்கின்றார்கள். அப்போது திடிரென்று பெரும் புயல் அடிக்கின்றது. தண்ணீரோ படகில் கொஞ்சம் கொஞ்சமாக நிரம்பத் தொடங்குகின்றது. இதைப் பார்த்துப் பயந்துபோன சீடர்கள், படகின் பின்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிகொண்டிருந்த இயேசுவை எழுப்பி, "போதகரே, சாகப் போகிறோமோ! உமக்குக் கவலையில்லையா?" என்று அலறுகிறார்கள். இயேசு உடனே தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து காற்றையும் கடலையும் கடிந்துகொள்ள அவை அமைதியாகின்றன.

இயேசு செய்த இந்த அற்புதச் செயல் நமக்கு ஒருசில உண்மைகளை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. முதலாவதாக சீடர்களின் நம்பிக்கையற்ற தன்மை. பெரும் புயல் அடித்து, தண்ணீரெல்லாம் படகுக்குள் வந்ததும் சீடர்கள், "போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா? என்று கத்துகிறார்கள். இத்தனைக்கும் இயேசு கிறிஸ்து அவர்களோடுதான் இருக்கின்றார். இந்த நிகழ்விற்கு முன்னதாக இயேசு பல்வேறு அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்திருக்கின்றார். அவற்றையெல்லாம் சீடர்கள் கண்ணாரக் கண்டிருக்கின்றார்கள். அப்படி இருந்தும் அவர்கள் இவ்வாறு கத்தியது அவர்களுடைய நம்பியற்ற தன்மையைக் காட்டுகின்றது.

இரண்டாவதாக இந்நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கும் செய்தி, இயேசு தன்னுடைய சீடர்கள்மீது மிகுந்த அக்கறை கொண்டிருக்கின்றார் என்பதாகும். சீடர்கள், "சாகப்போகிறோமே, உமக்குக் கவலையில்லையா?" என்று சொல்லி அவரை எழுப்பியதும் அவர் காற்றையும் கடலையும் கடிந்துகொள்கின்றார். இவ்வாறு அவர் தன்னுடைய சீடர்கள் மீதிருந்த அக்கறையைக் காட்டுக்கிண்டார். திருப்பாடல் ஆசிரியர் கூறுவார், "இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை, உறங்குவதுமில்லை" என்று (திப 121:4). ஆம், நற்செய்தியில் ஆண்டவர் இயேசு படகில் தலையணை வைத்துத் தூங்கிகொண்டிருந்தாலும் அவர் உறங்கவில்லை என்பதுதான் உண்மை. அதனால் அவர் சீடர்களின் அபயக் குரலைக் கேட்டு, அவர்களின் துயரத்தை சந்தோசமாக மாற்றுகின்றார்.

இறுதியாக இந்நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கும் உண்மை. இயேசு எல்லாவற்றின்மீதும் அதிகாரம் கொண்டவர் என்பதாகும். இந்நிகழ்விற்கு முன்னதாக இயேசு பேய்களை ஓட்டுவார், நோய்நொடிகளைக் குணமாக்குவார். இங்கே அதைவிட ஒரு படி மேலே சென்று காற்றையும் கடலையும் கடிந்துகொண்டு அவற்றை அமைதியாக்குகின்றார். இவ்வாறு அவர், தான் எல்லாவற்றின்மீதும் அதிகாரம் கொண்டவர் என்பதை நிரூபித்துக்காட்டுகின்றார். திருப்பாடல் 107, இறைவார்த்தைகள் 23 லிருந்து 27 வரை உள்ள பகுதியில் ஆண்டவராகிய கடவுள் எல்லாற்றையும் தன்னுடைய அதிகாரத்திற்குள் கொண்டிருக்கிறார் என்று வாசிக்கின்றோம். இயேசுவும் அதே அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றார் என்பதைத்தான் நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஆகவே, இத்தகைய வல்லமையுள்ள இயேசு நம்மோடு இருக்கின்றார் என்னும் உண்மையை உணர்ந்து எல்லாவித அச்ச உணர்வுகளிலிருந்து விடுதலை பெறுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
அஞ்சாதே! ஆண்டவர் துணை என்றும் உன்னோடு

ரவீந்தரநாத் தாகூர் எழுதிய கீதாஞ்சலி என்ற கவிதைப் புத்தகத்தில் வரக்கூடிய நிகழ்ச்சி.
அது ஒரு விவசாயின் வீடு. ஒருநாள் இரவு அவ்வீட்டின் கதவு தட்டப்பட்டது. உள்ளே படுத்துக்கிடந்த விவசாயி தூக்கத்திலிருந்து எழுந்து சென்று கதவைத் திறந்தான். அவனுடைய கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. ஏனென்றால் வீட்டு வாசலில் அரசர் நின்றுகொண்டிருந்தார். அவரை வீட்டிற்குள் அழைத்த விவசாயி, ஓடி ஓடி அரசரைக் கவனித்தான். அரசரும் விவசாயின் விருந்து உபசரிப்பில் மகிழ்ந்து போனார்.

இரவு நீண்டநேரம் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். விவசாயி தன்னுடைய சோகக்கதையை கண்ணீர் மல்கச் சொல்லிக்கொண்டிருந்தான். அரசரும் அவனுடைய பேச்சை மிகவும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் விவசாயி தூக்கக் கலக்கத்தில் அப்படியே படுக்கையில் தூங்கிவிட்டான். சிறுது நேரத்தில் அரசரும் அங்கே தூங்கிவிட்டார்.
விடியற்காலையில் எழுந்துபார்த்த விவசாயி, அரசர் தன்னிடம் ஒன்றும் சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டாரே என்று வருந்தினான். பின்னர் அவன், அரசர் தன்னுடைய வீட்டைத் தேடிவந்திருக்கிறார் என்றால் நிச்சயம் ஏதாவது பரிசுப்பொருள் கொண்டு வந்திருப்பார். என்ன கொண்டு வந்திருப்பார்? என்று அவன் தன்னுடைய வீடு முழுவதும் தேடித் தேடிப் பார்த்தான். அப்போது அவனுடைய வீட்டுமூலையில் ஒரு வாள் இருப்பதைக் கண்டான். எதற்காக இந்த வாளை அரசர் இங்கே வைத்துவிட்டுப் போயிருக்கிறார்? நமது கஷ்டத்தைப் போக்குமாறு ஏதாவது பொன்னோ, பொருளோ தருவார் என்றல்லவா நாம் நினைத்தோம், ஆனால் இவர் இப்படிச் செய்திருக்கிறாரே என்று ஒருநிமிடம் குழம்பிப்போய் நின்றான்.

திடிரென்று ஏதோ ஒரு ஞானம் பெற்றவனாய் கடவுள் எனக்கு இந்த வாளைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார் என்றால், அது என்னைக் கட்டிப்போட்டிருக்கும் துன்பம், கவலை, வேதனை போன்றவற்றை அறுத்து எறியவே என்பதை உணர்ந்துகொண்டு, தன்னுடைய மீதி வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினான்.

வாழ்க்கையில் எவ்வளவுதான் பிரச்சனைகளை நாம் சந்தித்தாலும், அந்தப் பிரச்சனைகளையெல்லாம் எதிர்கொள்வதற்கு கடவுள் நமக்கு வலுவினை, தாங்கிக்கொள்ள ஆற்றலைத் தந்திருக்கிறார் என்பதை இக்கதையானது அருமையாக எடுத்துரைக்கிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களோடு கடலிலே பயணம் செய்கிறார். அப்போது திடிரென்று புயலொன்று அவர்கள் பயணம் செய்த படகைத் தாக்க, அவர்கள் நிலைகுலைந்து போகிறார்கள். அப்போது சீடர்கள் எல்லாரும் பின்னால் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்த இயேசுவிடம், "ஆண்டவரே நாங்கள் சாகப் போகிறோமே, உமக்குக் கவலை இல்லையா? என்று கத்துகிறார்கள். உடனே இயேசு காற்றையும், கடலையும் கடிந்துகொள்ள அங்கே பேரமைதி உண்டாகின்றது. பின்னர் இயேசு தன்னுடைய சீடர்கள் பக்கம் திரும்பி, "ஏன் அஞ்சுகிறீர்கள்?, உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா? என்கிறார்.

இங்கே சீடர்கள் இயேசு தங்களோடு இருக்கிறார் என்பதுகூடத் தெரியாமல் அஞ்சுவதுதான் மிகவும் வேதனையான ஒரு காரியமாக இருக்கின்றது. பல நேரங்களில் நாமும் சீடர்களைப் போன்று இறைவன் நம்மோடு இருக்கிறார், நம்மை பாதுகாக்கின்றார் என்பதுகூடத் தெரியாமல் வருந்துகின்றோம், சாதாரண ஒரு விஷயத்திற்குக்கூட அஞ்சுகின்றோம். திருப்பாடல் 118:6 ல் வாசிக்கின்றோம், "ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்சவேண்டும்" என்று.
ஆகையால் நம்மோடு இருக்கும் இறைவனின் மேலான பாதுகாப்பை உணர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antony, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
''இயேசு விழித்தெழுந்து காற்றைக் கடிந்துகொண்டார். கடலை நோக்கி, "இரையாதே, அமைதியாயிரு" என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று'' (மாற்கு 4:39)

இயேசு புரிந்த புதுமைகள் பல உண்டு. அவை பெரும்பாலும் மனிதருக்கு நலம் அளிக்கவே செய்யப்பட்டன. பசியால் வாடியவர்களுக்கு உணவளிக்கவும், தீய ஆவியால் பீடிக்கப்பட்டோருக்கு விடுதலை வழங்கவும், முடக்குவாதமுற்றவர்க்கு நலமளிக்கவும், பார்வையற்றோருக்கு மீண்டும் கண்பார்வை கொடுக்கவும், ஏன், இறந்தோருக்கு உயிரளிக்கவும் இயேசு புதுமைகள் செய்தார். ஓங்கி எழுந்த புயலை இயேசு அடக்கியதும் தம் சீடர்களை ஆபத்திலிருந்து காத்திடவே. சீடர்கள் பயந்து நடுங்கினார்கள். எங்கே படகு கவிழ்ந்து தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என அஞ்சினார்கள். ஆனால் இயேசு அவர்கள் நடுவே இருந்தததை அவர்கள் மறந்துவிட்டார்கள். இயேசு அவர்களது நம்பிக்கையின்மையைக் கடிந்துகொண்டார். ''ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?'' என்று கேட்டார் (மாற் 4:40). 

கடவுள் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துகிறார் என்னும் ஆழ்ந்த உறுதிப்பாடு நம் உள்ளத்தில் இருக்க வேண்டும். துன்பங்கள் புயல் போல எழலாம். கவலைகள் கடல் அலைபோல நம்மை மூழ்கடிக்க வரலாம். ஆனால் இயேசுவின் உடனிருப்பு அந்த ஆபத்துக்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். ''இயேசு தூங்கிக்கொண்டிருந்தார்'' என மாற்கு குறிப்பிடுகிறார் (மாற் 4:38). ஆனால் இயேசுவுக்கு வல்லமையளித்த கடவுள் ஒருபோதும் தூங்குவதில்லை. அவருடைய கண்கள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. அவருடைய பார்வையிலிருந்து நாம் ஒருபோதுமே அகன்று போய்விடுவதில்லை. கடவுளின் அன்புக் கரங்களில் நாம் தவழ்வதால் நம்மை எவ்வித ஆபத்தும் அணுகாது. அவ்வாறு ஆபத்து எழுகின்ற வேளையில் அவர் நம்மைப் பாதுகாக்க விரைந்து வருவார். திருச்சபை என்னும் மக்கள் குழுவை ஒரு படகுக்கு ஒப்பிடுவது வழக்கம். படகு பயணம் போகின்ற வேளையில் புயற்காற்றும் அலையும் எழுந்து அதைப் பயமுறுத்தலாம். ஆனால் நம்மோடு என்றும் இருப்பதாக நமக்கு வாக்களித்த இயேசு நம்மைக் கைவிடமாட்டார். கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்கின்ற மக்கள் குழுவாகிய தம் திருச்சபைக் குடும்பத்தை அவர் கைவிட மாட்டார் என்னும் உறுதி நமக்கு உண்டு. ''உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?'' என இயேசு இன்றும் நம்மை நோக்கிக் கேட்கின்றார்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!