Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       25  ஐனவரி 2018  
                                          பொதுக்காலத்தின் 3ஆம்  வாரம்  
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
என் ஆண்டவரே! நீர் என்னை வழி நடத்த நான் யார்?

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 18-19, 24-29

அந்நாள்களில் தாவீது ஆண்டவர் திருமுன் வந்து அமர்ந்து இவ்வாறு பேசினார்: "என் தலைவராம் ஆண்டவரே! இதுவரை நீர் என்னை வழிநடத்தி வந்தமைக்கு, நான் யார்? என் குடும்பம் யாது? இருப்பினும் என் தலைவராம் ஆண்டவரே, உம் திருமுன் இது சிறிதே. உம் ஊழியனின் குடும்பத்தைப் பற்றிய எதிர்காலத்தைப் பற்றியும் நீர் பேசியுள்ளீர்! என் தலைவராம் ஆண்டவரே, மனித வழக்கம் இதுவல்லவே! என்றும் உம் மக்களாகவே நிலைத்து இருக்குமாறு இஸ்ரயேலரை நீர் உமக்குரியவர் ஆக்கினீர்! ஆண்டவரே! நீரே அவர்களின் கடவுள் ஆனீர்!

ஆண்டவராகிய கடவுளே! உமது ஊழியனைப் பற்றியும் அவனது குடும்பத்தைப் பற்றியும் நீர் தந்த உறுதிமொழியை என்றும் நிலைநாட்டும்! நீர் வாக்குறுதி அளித்தவாறே செய்யும்! உமது பெயர் என்றும் மாட்சி பெறுவதாக! அப்பொழுது மாந்தர் "படைகளின் ஆண்டவரே இஸ்ரயேலின் கடவுள்" என்பர். உமது ஊழியன் தாவீதின் குடும்பமும் உம் திருமுன் நிலைத்திருக்கும்.

ஏனெனில், படைகளின் ஆண்டவரே! இஸ்ரயேலின் கடவுளே! "நான் உனக்கு ஓர் இல்லம் எழுப்புவேன்" என்று உமது ஊழியனுக்கு வெளிப்படுத் தியவர் நீரே! ஆகவே இவ்வாறு மன்றாட உம் ஊழியனுக்கு மனத் துணிவு ஏற்பட்டது. தலைவராம் ஆண்டவரே! நீரே கடவுள்! உமது வார்த்தைகள் நம்பிக்கைக்கு உரியவை! இந்த நல்வாக்கை அடியேனுக்கு அருளியவர் நீரே! உம் ஊழியனின் குடும்பம் என்றும் உம் திருமுன் இருக்குமாறு நீர் அருள்கூர்ந்து அதற்கு ஆசி வழங்கும்! தலைவராகிய நீர் உரைத்துள்ளீர்! உம் ஊழியனின் குடும்பம் என்றும் உமது ஆசியைப் பெறுவதாக!"


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்  தி:பா: 132: 1-2. 3-5. 11. 12. 13-14 (பல்லவி: லூக் 1: 32)
=================================================================================

பல்லவி: தாவீதின் அரியணையை ஆண்டவர் அவருக்கு அளிப்பார்.

1 ஆண்டவரே! தாவீதையும் அவர் பட்ட இன்னல்கள் அனைத்தையும் நினைவு கூர்ந்தருளும். 2 அவர் ஆண்டவராகிய உமக்கு ஆணையிட்டுக் கூறியதை, யாக்கோபின் வல்லவராகிய உமக்குச் செய்த பொருத்தனையை நினைவுகூர்ந்தருளும். பல்லவி

3 "ஆண்டவருக்கு ஓர் இடத்தை, யாக்கோபின் வல்லவருக்கு ஓர் உறைவிடத்தை நான் அமைக்கும் வரையில், 4 என் இல்லமாகிய கூடாரத்தினுள் செல்லமாட்டேன்; படுப்பதற்காக என் மஞ்சத்தில் ஏறமாட்டேன்; 5 என் கண்களைத் தூங்கவிடமாட்டேன்; என் இமைகளை மூடவிடமாட்டேன்'' என்று அவர் சொன்னாரே. பல்லவி

11 ஆண்டவர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டுக் கூறினார்; அவர்தம் வாக்குறுதியினின்று பின்வாங்க மாட்டார்: "உனக்குப் பிறந்த ஒருவனை அரசனாக ஏற்படுத்தி உன் அரியணையில் வீற்றிருக்கச் செய்வேன். பல்லவி

12 உன் மைந்தர் என் உடன்படிக்கையையும், நான் அவர்களுக்குக் கற்பிக்கும் என் நியமங்களையும் கடைப்பிடித்தால், அவர்களுடைய மைந்தரும் என்றென்றும் உன் அரியணையில் வீற்றிருப்பர்". பல்லவி

13 ஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்; அதையே தம் உறைவிடமாக்க விரும்பினார். 14 இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்; இதை நான் விரும்பினதால் இதையே என் உறைவிடமாக்குவேன். பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திபா 119: 105

அல்லேலூயா, அல்லேலூயா! என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 21-25

அக்காலத்தில் இயேசு மக்களிடம், "விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின்மீது வைப்பதற்காக அல்லவா? வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்'' என்றார்.

மேலும் அவர், "நீங்கள் கேட்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்; இன்னும் கூடுதலாகவும் கொடுக்கப்படும். ஏனெனில், உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்'' என்று அவர்களிடம் கூறினார்.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்!

பணம் சேர்ப்பதையே வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்ட கணவன், மனைவி இருவரும் வயதான காலத்தில் இவ்வளவு பணம் சேர்த்து வைத்திருந்தும் தங்களிடம் யாரும் அன்பு செலுத்தவில்லையே என்று வேதனைப்பட்டனர். தனது சொந்த மகன், மகள்கள் கூட தங்களிடம் அன்பு செலுத்தவில்லையே என்று வருத்தப்பட்ட அவர்கள், அந்த ஊருக்கு வந்திருந்த ஜென் குருவை மன ஆறுதலுக்காகப் பார்க்கச் சென்று தங்கள் பிரச்சனையைச் சொன்னார்கள்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட ஜென் குரு, "உங்களால் வங்கியிலிருந்து இப்போது ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் எடுக்க முடியுமா? என்று கேட்டார். "அவர்கள் ஐம்பதாயிரம் என்ன, ஐம்பது லட்சம் கூட எடுக்க முடியுமே?" என்று சந்தோசமாகச் சொன்னார்கள். உடனே ஜென் குரு அவர்களிடம், "நீங்கள் இவ்வளவு காலமும் பணத்தை வங்கியில் போட்டு வந்தீர்கள், அதனால் எடுக்க முடியும். ஆனால், நீங்கள் இதுவரையும் யாரிடமும் அன்பு செலுத்தவில்லையே. பின் எப்படி அன்பு திரும்பக் கிடைக்கும்" என்றார்.

அவர்கள் இருவரும் அறிவு தெளிந்தவர்களாய் அன்றிலிருந்து எல்லாரையும் அன்பு செய்யத் தொடங்கினார்கள். அதனால் மற்றவர்களிடமிருந்தும் அதே அன்பைத் திரும்பப் பெற்றார்கள். நாம் எதை விதைக்கின்றோமோ அல்லது எதைச் செய்கின்றோமோ அதையே திரும்பப் பெற்றுக்கொள்கின்றோம் என்னும் உண்மையை இந்த நிகழ்வானது நமக்கு அருமையாக எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு ஒருசில அறிவுரைகளை போதனைகளை - மக்களுக்குத் தருகின்றார். அவற்றில் ஒருபோதனைதான் "நீங்கள் எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்" என்பதாகும். ஆண்டவர் இயேசுவின் இப்போதனையை அன்பு தொடர்பாகவும், இருப்பதை பிறருக்குக் கொடுத்து வாழ்வது தொடர்பாகவும் சிந்தித்துப் பார்க்கலாம். முதலில் அன்பு தொடர்பாக சிந்தித்துப் பார்ப்போம். அன்பு என்பது இருவழிப் பாதையாகும். ஆனால் பலர் அதனை ஒருவழிப் பாதையாக நினைத்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அதனால்தான் பிரச்சனையே. வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், இன்றைக்கு பலர், இந்த உலகத்தில் யாருமே தங்களை அன்பு செய்யவில்லை என்று புலம்பிப் கொண்டிருக்கின்றார்கள். இப்படி யாருமே தங்களை அன்பு செய்யவில்லை என்று சொல்லித் திரியும் அவர்கள், தங்களோடு இருக்கின்ற மற்றவர்களை அன்பு செய்கின்றார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாக இருக்கின்றது. அன்பு என்னும் நெருப்பை பற்றி எரியவிட்டுவிட்டால், அது எல்லாரிடத்திலும் சென்று, இறுதியில் நம்மையும் வந்தடையும். அப்போது அது தருகின்ற சுகத்தை வார்த்தைகளால் விவரித்துச் சொல்ல முடியாது. ஆகவே, பிறரிடத்தில் அன்பினை எதிர்பார்க்கின்ற நாம், மற்றவர்களிடத்தில் அந்த அன்பைக் காட்டுவோம்.

அன்பைக் குறித்து சிந்தித்துப் பார்த்த நாம், இப்போது கொடுத்து வாழ்வதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கூறுவார், "கொடுங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்" என்று. ஆம். நாம் கொடுக்கின்றபோது அதனைத் திரும்பப் பெற்றுக்கொள்கின்றோம். ஏன் நாம் கொடுத்ததை விடவும் கூடுதலாகும் பெற்றுக்கொள்கின்றோம். ஏழைக் கைம்பெண் தன்னிடத்தில் இருந்த இரண்டு செப்புக்காசுகளை இறைவனுக்குக் கொடுத்தார் அதனால் இறைமகன் இயேசுவிடமிருந்து மிகுதியாக பாராட்டைப் பெற்றுக்கொண்டார். ஆகவே, நாம் நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்கின்றபோது, நாம் மிகுதியாகப் பெறுவோம் என்பது உண்மை.

இரவிந்தரநாத் தாகூர் எழுதிய கீதாஞ்சலியில் இடம்பெறக் கூடிய நிகழ்வு இது. ஒருநாள் அரசன் தன்னுடைய குதிரையில் அமர்ந்து நகர்வலம் வந்தபோது கையேந்திக் கொண்டே வந்தான். ஒவ்வொருவரும் தங்களிடம் இருந்ததை அரசனுக்குக் கொடுத்து வந்தார்கள். நெல்லை சாக்கில் சுமந்துகொண்டு வந்துகொண்டிருந்த மனிதனிடம் அரசன் வந்தபோது, அவன் வேண்டா வெறுப்பாக தன்னுடைய மூட்டையிலிருந்து ஒரே ஒரு நெல்லை மட்டும் எடுத்து அரசனுக்குக் கொடுத்தான். அரசனும் அதனை அன்போடு வாங்கிக் கொண்டு போய்விட்டான். இப்போது நெல்லை சாக்கில் சுமந்துகொண்டு வந்த அந்த மனிதன் தன்னுடைய வீட்டிற்கு வந்து மூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது ஒரே ஒரு நெல்மணி மட்டும் தங்கமாக மாறியிருந்தது. அப்போதுதான் அவனுக்கு மண்டையில் உரைத்தது, நாம் கூடுதலாக நெல்மணியைக் கொடுத்திருந்தால் நமக்கு கூடுதலாக தங்கம் கிடைத்திருக்குமே, இப்படி கஞ்சத்தனத்தோடு இருந்ததனால் எல்லாவற்றையும் இழந்துவிட்டோமே என்று. ஆம், நாம் கொடுக்கின்றபோது திரும்பப் பெற்றுக்கொள்கின்றோம். இதுதான் நிதர்சனம்.

ஆகவே, நம்மிடம் இருக்கின்ற பொருட்களை, அன்பை பிறருக்குக் கொடுத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!