Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       23  ஐனவரி 2018  
                                          பொதுக்காலத்தின் 3ஆம்  வாரம்  
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
தாவீதும் இஸ்ரயேல் வீட்டாரும் ஆரவாரத்தோடு ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள்.

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 6: 12b-15.17-19

அந்நாள்களில் தாவீது புறப்பட்டுச் சென்று கடவுளின் பேழையை ஓபேது - ஏதோமின் இல்லத்திலிருந்து தாவீதின் நகருக்கு அக்களிப்போடு கொண்டு வந்தார். ஆண்டவரின் பேழையை ஏந்தியவர்கள் ஆறு அடிகள் எடுத்து வைத்ததும் ஒரு காளையையும் ஓர் ஆட்டுக் கிடாயையும் பலியிட்டார். நார்ப் பட்டால் நெய்யப்பட்ட ஏபோத்தை அணிந்துகொண்டு, தாவீது தம் முழு வலிமையோடு ஆண்டவர் முன்பாக நடனமாடிக் கொண்டிருந்தார்.

தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரவாரத்தோடும் எக்காள முழக்கத்தோடும் ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள். ஆண்டவரின் பேழையைக் கொணர்ந்து, அதற்கென நிறுவிய கூடாரத்தின் நடுவில் அதை வைத்தார்கள்.

தாவீது ஆண்டவர் முன்பு எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தினார். எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தியபின் தாவீது படைகளின் ஆண்டவர் பெயரால் மக்களுக்கு ஆசி வழங்கினார்.

பிறகு தாவீது ஆண் முதல் பெண் வரை மக்கள் அனைவருக்கும் இஸ்ரயேல் கூட்டம் முழுவதற்கும் ஆளுக்கொரு அப்பத்தையும், பொரித்த இறைச்சியையும், திராட்சைப் பழ அடையையும் கொடுத்தார். மக்கள் அனைவரும் தம் இல்லங்களுக்குச் சென்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்  தி:பா: 24: 7. 8. 9. 10 (பல்லவி: 8a)
=================================================================================
பல்லவி: மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? ஆண்டவர் இவரே.

7 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். பல்லவி

8 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர்; இவரே போரில் வல்லவரான ஆண்டவர். பல்லவி

9 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள். மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். பல்லவி

10 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர். பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே, என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 31-35

அக்காலத்தில் இயேசுவின் தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்றுகொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.

அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. "அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்றுகொண்டு உம்மைத் தேடுகிறார்கள்'' என்று அவரிடம் சொன்னார்கள்.

அவர் அவர்களைப் பார்த்து, "என் தாயும் என் சகோதரர்களும் யார்?'' என்று கேட்டு, தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, "இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே இயேசுவின் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்"


ஜென் துறவுமடத்தில் இருந்த நான்கு சீடர்களுள் ஒருவனுக்கு மட்டும் ஜென் குரு தனி அக்கறை காட்டி வந்தார். இது கண்டு, மற்ற மூவருக்கும் பொறாமையாக இருந்தது. இதை உணர்ந்த குரு, அவர்களுக்குப் பாடம் புகட்ட எண்ணினார்.

ஒருநாள் கடுமையாக அடைமழை பெய்தது. அப்போது அந்தக் குரு சீடர்கள் மூவரையும் தம்மிடம் வரவழைத்து, "இந்த மழையில் விறகு எரியாது. அதனால் உங்களில் ஒருவர் தன் இரு கைகளையும் அக்னிக்குத் தந்தால் ஈர விறகு தானே எரியும்" என்றார். உடனே ஒருவன் பதைத்துப் போய், "குருவே! உங்களை வணங்க கைகள் வேண்டுமே" எனச் சொல்லி அகன்றான். இரண்டாமவனோ, "சூரிய நமஸ்காரம் மற்றும் இதர பூஜைகள் செய்ய கைகள் வேண்டும், அதை இழந்தால் எப்படி?" என இழுத்தபடியே அகன்றான். மூன்றாமவனோ, "குருவே! தினமும் இரவில் உங்கள் பாதங்களைப் பிடித்துவிட கைகள் வேண்டுமல்லவா?" எனச் சொல்லி அகன்றான். குரு முதன்மைச் சீடனைக் கூப்பிட்டுச் சொன்னதும், "அப்படியே ஆகட்டும்" என சொல்லி தன்னுடைய இரு கைகளை வெட்டிக் கொண்டான்.

இதை அறிந்த மூவரும் திகைத்து நிற்க, "எவனொருவன் குருவின் கட்டளையை ஏன், எதற்கு எனக் கேளாது அடிபணிகிறானோ, அவனே உண்மையான சீடன்" என்றபடி, தன் தவ வலிமையால் அவன் கைகளை ஒட்டச் செய்தார் குரு. மற்ற மூவரும் அதைப் பார்த்து வெட்கித் தலை குனிந்தனர்.

குருவின் வார்த்தைகளுக்கு அப்படியே கட்டுப்பட்டு நடப்பவன்தான் உண்மையான சீடன் என்னும் செய்தியை மேலே சொல்லப்பட்ட கதையின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம். உண்மையான சீடன் எப்படி குருவின் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து நடக்கவேண்டும் என்னும் நியதி இருக்கின்றதோ அது போன்று ஆண்டவர் இயேசுவின் சகோதரராக, சகோதரியாக, தாயாக இருப்பதற்கு கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற வேண்டும் என்னும் நியதி இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு போதித்துக் கொண்டிருக்கின்றார். அப்போது அவருடைய தாய் மரியாவும் அவருடைய சகோதர சகோதரரிகளும் அவரைப் பார்க்க வருகின்றார்கள். ஆனால், அவர்கள் இயேசுவைக் காணமுடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் அவரைச் சூழ்ந்துகொண்டு இருக்கின்றது. இதனால் இயேசுவின் தாய் மரியா ஆள் அனுப்பி தாங்கள் வந்திருக்கும் செய்தியை இயேசுவிடத்தில் எடுத்துச் சொல்கின்றார். இயேசு தன்னிடத்தில் இந்த செய்தியைச் சொன்னவரிடம், "யார் என்னுடைய தாய்?, யார் என்னுடைய சகோதர சகோதரிகள்?" என்று கேட்டுவிட்டு, தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்த மக்களைப் பார்த்து, "இதோ என்னுடைய தாய், சகோதர, சோதரிகள்; கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் தாயும் சகோதர சகோதரிகள் " என்கின்றார்.

நற்செய்தியில் இடம்பெறக்கூடிய இந்த நிகழ்வு நமது ஆழமான சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. இந்த நிகழ்விற்கு முன்பாக இயேசுவுக்கு அவருடைய உறவினர்களிடமிருந்தும் மறைநூல் அறிஞர்களிடமிருந்தும் எதிர்ப்புக் கிளம்பியதைப் படித்திருப்போம். ஒருபுறம் இயேசுவின் உறவினர்கள் (?) அவரை மதிமயங்கிவிட்டார் என்று சொல்கிறார்கள், இன்னொரு புறத்தில் மறைநூல் அறிஞர்களோ அவரை பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார் என்று விமர்சிக்கின்றார்கள். இதனால் மக்கள்மீது ஒருவிதமான அதிருப்தியோடு இயேசு இருக்கின்றார். இத்தகைய பின்னணியில்தான் இயேசுவின் உறவினர்கள் அவரைப் பார்க்க வருகின்றார்கள். இயேசு, தம்மை அவர்கள் அவரைப் பார்க்க வந்ததை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு இறையாட்சி என்னும் குடும்பத்தில் யாராரெல்லாம் உறைவினர்கள் என்றொரு செய்தியை எடுத்துரைகின்றார்.

இயேசுவின் குடும்பத்தில் இயேசுவின் உறவினர்களாக மாறுவதற்கு அவர் இரண்டு உண்மையை எடுத்துரைக்கின்றார். முதலாவதாக அவரோடு இருத்தல், இயேசு தம்மைச் சூழ்ந்திருந்த மக்களைப் பார்த்துதான் என் தாயும் சகோதர சகோதரிகளும் இவர்களே என்கின்றார். ஆகவே, நாம் இயேசுவின் உண்மையான உறவினர்களாக மாறுவதற்கு அவரோடு நெருக்கமாக இருக்கவேண்டும். இறையாட்சி என்னும் குடும்பத்தில் உறவினர்களாக மாறுவதற்கு இயேசு சொல்லக்கூடிய இரண்டாவது செய்தி, கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவது ஆகும். யாராரெல்லாம் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி வாழ்கின்றார்களோ அவர்கள் இயேசுவின் உண்மையான உறவுகளாக மாறமுடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. மேற்கண்ட இரண்டு நியதிகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது மரியாவும் இயேசுவின் உண்மையான உறவினர் ஆகிறார் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆகவே, இயேசுவின் உண்மையான உறவினர்களாக வாழ, நாம் இயேசுவோடு இணைந்திருப்போம், இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றி வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!