Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       22  ஐனவரி 2018  
                                          பொதுக்காலத்தின் 3ஆம்  வாரம்  
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர். 

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் (5: 1-7,10)


அந்நாள்களில் இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களும் எபிரோனுக்கு வந்து தாவீதிடம் கூறியது: நாங்கள் உம் எலும்பும் சதையுமானவர்கள். சவுல் எங்கள் மீது ஆட்சி செய்த கடந்த காலத்திலும் கூட நீரே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர். நீயே என் மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய்; நீயே இஸ்ரயேலுக்குத் தலைமை தாங்குவாய் என்று உமக்கே ஆண்டவர் கூறினார். இஸ்ரயேலின் பெரியோர்கள் எல்லாரும் அரசரைக் காண எபிரோனுக்கு வந்தனர். அரசர் தாவீது எபிரோனில் ஆண்டவர் திருமுன் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர். முப்பது வயதில் அரசரான தாவீது, நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். எபிரோனில் தங்கி யூதாவை ஏழு ஆண்டுகள் ஆறு மாதங்களும், பிறகு எருசலேமில் தங்கி அனைத்து இஸ்ரயேல்-யூதாவை முப்பத்து மூன்று ஆண்டுகளும் அவர் ஆட்சி புரிந்தார். அரசரும் அவருடைய ஆள்களும் அம்மண்ணின் மைந்தர் எபூசியருக்கு எதிராக எருசலேம் சென்றபோது, அவர்கள் தாவீதை நோக்கி, நீர் இங்கே வர முடியாது; பார்வையற்றவரும் முடவரும்கூட உம்மை அப்புறப்படுத்தி விடுவார்கள் - அதாவது இங்கே தாவீது வர முடியாது என்றனர். இருப்பினும், தாவீது சீயோன் கோட்டையைக் கைப்பற்றினார். அதுவே தாவீதின் நகர். தாவீது தொடர்ந்து வளர்ச்சி பெற்றார். படைகளின் கடவுளாகிய ஆண்டவர் அவரோடு இருந்தார்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்  தி:பா: 89: 19. 20-21. 24-25
=================================================================================
என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும். 

19 முற்காலத்தில் உம் பற்றுமிகு அடியார்க்கு நீர் காட்சி தந்து கூறியது: வீரன் ஒருவனுக்கு வலிமை அளித்தேன்; மக்களினின்று தேர்ந்தெடுக்கப்பட்டவனை உயர்த்தினேன்.
-பல்லவி 

20 என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்.
21 என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும். .
-பல்லவி 

24 என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்; என் பெயரால் அவனது வலிமை உயர்த்தப்படும்.
25 அவன் கையைக் கடல்வரைக்கும் அவன் வலக்கையை ஆறுகள் வரைக்கும் எட்டச் செய்வேன். .
-பல்லவி 
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்து சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்.  அல்லேலூயா!
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (3: 22-30)

அக்காலத்தில் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், "இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது'' என்றும் "பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்'' என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆகவே இயேசு அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: "சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது. சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு. முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது; அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார். ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.'' "இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது" என்று தம்மைப்பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இயேசுவையே பெயல்செபூல் என்று அழைத்தவர்கள்!


அந்த நகரில் பிரபல நீதிபதி ஒருவர் இருந்தார். அவர் மனசாட்சிக்குப் பயந்து நல்ல தீர்ப்புகளை மக்களுக்கு வழங்கிக்கொண்டு வந்தார். ஆனால், இது ஒருசில ஆட்களுக்குப் பிடிக்கவே இல்லை. எனவே அவர்கள் அவரைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமான செய்திகளைப் பரப்பி வந்தார்கள். இவற்றுக்கெல்லாம் அந்த நீதிபதி சிறிதும் அஞ்சாமல் தன்னுடைய பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டே வந்தார்

ஒருநாள் அந்த நீதிபதியும் அவருடைய உதவியாளரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது உதவியாளர் மெதுவாக அவரிடம், "ஐயா! உங்களுடைய எதிரிகள் உங்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக மக்களிடத்தில் சொல்லிக்கொண்டு வருகிறார்களே, அதைப்பற்றி நீங்கள் ஏன் கண்டும் காணாதது போல் இருக்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு நீதிபதி, "இதை விளக்க உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா?" என்று சொல்ல, உதவியாளரும் சரி என்று சொல்ல, நீதிபதி தொடர்ந்து பேசத் தொடங்கினார். "மூதாட்டி ஒருத்தி தனக்குத் துணையாக நாயொன்றை வளர்த்து வந்தாள், அந்த நாயானது நிறைந்த பவுர்ணமி வந்துவிட்டால் நிலாவைப் பார்த்து குறைக்கத் தொடங்கிவிடும். நாய் குறைத்துக்கொண்டே இருக்கின்றது என்பதற்காக நிலா ஒருநாளும் தன்னுடைய வெளிச்சத்தைக் குறைவாகத் தந்தது இல்லை. இப்போது இந்தக் கதையில் வரும் நிலாதான் நான். நாய்தான் என்னுடைய எதிரிகள். நாய் குறைக்கிறது என்பதற்காக நிலா தன்னுடைய வெளிச்சத்தை தராமல் இல்லை. அதுபோன்றுதான் என்னுடைய எதிரிகள் என்னைப் பற்றி தப்பான செய்திகளை பரப்புகிறார்கள் என்பதற்காக நான் பணியை நிறுத்திவிடப்போவதுமில்லை; அதைக் கண்டு பயப்படப்போவதுமில்லை" என்றார் அந்த நீதிபதி.

பொதுவாழ்வில் ஈடுபடக்கூடக்கூடியவர்கள் தங்கள்மீது சுமத்தப்படும் தேவையற்ற விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ளலாம் என்னும் உண்மையை இந்த நிகழ்வானது மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர்கள் சிலர் ஆண்டவர் இயேசுவைப் பற்றி, "இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கின்றது", "பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்" என்று விமர்சிக்கின்றார்கள். இதை அறிந்த இயேசு தன்னை விமர்சித்தவர்களைத் தம்மிடம் வரவழைத்து, "சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது" என்று சொல்லி அவர்களுடைய வாதம் தவறானது என்று சொல்லி அவர்களை வாயடைக்கின்றார்.

வழக்கமாகத் தன்னைத் தேவையில்லாமல் விமர்சிப்பவர்களைக் கண்கொள்ளாத இயேசு, இப்பகுதியில் தம்மை விமர்சிப்பவர்களை அழைத்து, வாதம் செய்து அவர்களை வாயடைக்கச் செய்கின்றார். ஏனென்றால் ஆண்டவர் இயேசு தூய ஆவியால் நிரப்பப்பட்டு இறையாட்சிப் பணிகளைச் செய்துகொண்டு வந்தார். இதையறியாத அரைவேக்காட்டு மறைநூல் அறிஞர்கள் கூட்டம் இயேசுவை பெயல்செபூல் பிடித்திருக்கின்றது என்றும், பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைகக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார் என்று விமர்சனம் செய்கின்றார்கள். அப்போதுதான் இயேசு அவர்களை (தன்னை விமர்சனம் செய்தவர்களை) தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு சரியாக பதில் கொடுக்கின்றார். ஏனென்றால், அவர்கள் இயேசுவுக்கு எதிராக மட்டுமல்ல, தூய ஆவிக்கு எதிராகப் பேசுகின்றார்கள்.

இயேசு மறைநூல் அறிஞர்களிடம் பேசுகின்ற வார்த்தைகள் நம்முடைய கவனத்திற்கு உரியதாக இருக்கின்றன. தனக்கு எதிராக தானே எந்த அரசும், ஏன் யாரும் பிளவுபட மாட்டார்கள். ஒவ்வொருவரும் தாங்கள் நன்றாக இருக்கவேண்டும் என்றே விரும்புவார்கள். அப்படி இருக்கும்போது சாத்தான் தனக்கு எதிராக எப்படிப் பிளவுபடும் என்பதுதான் இயேசு எழுப்பும் கேள்வியாக இருக்கின்றது. இயேசு கேட்ட கேள்விக்கு, முன்வைக்கும் வாதத்திற்கு மறைநூல் அறிஞர்களால் பதில் சொல்லமுடியவில்லை. ஆம், பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்துக்கொண்டு பிழைப்பை ஓட்டிக்கொண்டு வந்த மறைநூல் அறிஞர்களால் உண்மையே உருவான ஆண்டவர் இயேசுவுக்கு முன்பாக எப்படி நிலைத்து நிற்கமுடியும்?. அவர்களால் இயேசுவை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை.

இயேசு தன்னை விமர்சனம் செய்தவர்களை எப்படி எதிர்கொண்டார் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும் இவ்வேளையில், நாம் நம்மை விமர்சிப்பவர்களை எப்படி எதிர்கொள்வது என்பது நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது. இந்த உலகம் நாம் நன்றாக வாழ்ந்தாலும் அதே நேரத்தில் பாதாளம் வரை தாழ்ந்தாலும் விமர்சிக்கத்தான் செய்யும். இவர்களை எல்லாம் ஆண்டவர் இயேசுவைப் போன்று கையாள வேண்டும் என்பதுதான் நாம் நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டிய செய்தியாக இருக்கின்றது.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், அவரைப் போன்று நம்மை விமர்சிப்பவர்களை ஞானத்தோடு எதிர்கொள்வோம். இறைவனுக்கு உகந்த வழியில் எப்போதும் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
''தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும்  எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார்'' (மாற்கு 3:28-29)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- எவ்வளவு பெரிய குற்றங்களைச் செய்தாலும் மனிதர் உண்மையாகவே மனம் திரும்பி, பாவ வழியிலிருந்து விலகி நன்னெறியைக் கடைப்பிடிப்பதாக இருந்தால் கடவுள் அவர்களை மன்னிப்பார் என்பது கிறிஸ்தவக் கொள்கை. அப்படியானால் ''தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவருக்கு மன்னிப்பே கிடையாது'' என்று இயேசு ஏன் கூறினார் என்னும் கேள்வியை எழுப்புவது பொருத்தமானதே. இங்கே குறிப்பிடப்படுகின்ற பாவம் என்ன? இயேசு கடவுளின் வல்லமையால் அதிசய செயல்களைச் செய்வதை மக்கள் எல்லாரும் பார்க்கின்றனர். ஆனால் சிலர் இயேசுவை ஏற்க மறுக்கின்றனர். அவர்கள் இயேசுவின்மீது ஒரு பெரிய குற்றத்தையும் சுமத்துகின்றனர். அதாவது, இயேசு புரிகின்ற அதிசய செயல்கள் கடவுளின் வல்லமையால் அல்ல, சாத்தானின் வல்லமையால் நிகழ்கின்றன என்பது குற்றச்சாட்டு. இது கடவுளின் ஆவியை ஏற்க மறுப்பது; நேரடியாகக் கடவுளை எதிர்த்து நிற்பது. இவ்வாறு கடவுளின் ஆவியை எதிர்ப்போர் கடவுள் வழங்குகின்ற மன்னிப்பையும் வேண்டாம் என மறுத்துவிடுவார்கள்.

-- எனவே, உண்மையிலேயே மன மாற்றம் அடைந்து, கடவுளின் ஆவியின் செயலை ஏற்பவர்களுக்குத்தான் மன்னிப்பு உண்டு. ஆகவே, தூய ஆவியைப் பழித்துரைப்போர் தம் செயல் முரண்பட்டது என உணர வேண்டும்; தம் சிந்தனைப் பாணியை மாற்ற வேண்டும். அப்போது கடவுளின் மன்னிப்பு அவர்களுக்குக் கிடைக்கும். தூய ஆவியாரின் வல்லமையை எதிர்த்து நிற்கும்வரை அந்த ஆவியார் அருளுகின்ற கொடைகளைப் பெற்றிட மனிதர் தங்களையே தகுதியற்றவர்களாக மாற்றிக்கொண்டுவிட்டார்கள் என்றுதான் கூற வேண்டும். அந்நிலை மாறும்போது அவர்களுக்குக் கடவுளின் மன்னிப்பு உண்டு.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!