Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       20  ஐனவரி 2018  
                                          பொதுக்காலத்தின் 2ஆம்  வாரம்  
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
போர் முனையில் வீரர் எங்ஙனம் வீழ்ந்துபட்டனர்?

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 1: 1-4,11-12,19,23-27

அந்நாள்களில் சவுல் இறந்தபின், அமலேக்கியரைத் தோற்கடித்துத் திரும்புகையில் தாவீது சிக்லாகில் இரண்டு நாள்கள் தங்கினார். மூன்றாம் நாள், சவுலின் பாசறையினின்று கிழிந்த ஆடைகளோடும், புழுதிபடிந்த தலையோடும் ஒருவன் வந்தான். அவன் தாவீதிடம் வந்ததும், தரையில் வீழ்ந்து வணங்கினான்.

"நீ எங்கிருந்து வருகிறாய்?" என்று தாவீது அவனை வினவ, "நான் இஸ்ரயேல் பாசறையினின்று தப்பி வந்துவிட்டேன்" என்று அவன் பதில் கூறினான்.

"என்ன நடந்தது? என்னிடம் சொல்" என்று தாவீது கேட்க, அவன், "வீரர்கள் போரினின்று ஓடிவிட்டனர்; அவர்களுள் பலர் வீழ்ந்து மடிந்துவிட்டனர்; சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துவிட்டனர்" என்று கூறினான்.

தாவீது தம் ஆடைகளைப் பற்றிக் கிழித்தார். அவரோடு இருந்தவர்களும் அவ்வாறே செய்தனர். சவுலுக்காகவும், அவருடைய மகன் யோனத் தானுக்காகவும், ஆண்டவரின் மக்களுக்காகவும் இஸ்ரயேல் வீட்டாருக்காகவும் அவர்கள் அழுது புலம்பி மாலைவரை நோன்பு இருந்தார்கள். ஏனெனில் அவர்கள் வாளால் மடிந்துவிட்டார்கள்.

"இஸ்ரயேலே! உனது மாட்சி உன் மலைகளிலே மாண்டு கிடக்கின்றது! மாவீரர் எவ்வாறு மடிந்தனர்! சவுல்! யோனத்தான்! அன்புடையார், அருளுடையார்! வாழ்விலும் சாவிலும் இணைபிரியார்! கழுகினும் அவர்கள் விரைந்து செல்வர்! அரியினும் அவர்கள் வலிமைமிக்கோர்! இஸ்ரயேல் புதல்வியரே! சவுலுக்காக அழுங்கள்! செந்நிற மென்துகிலால் உங்களை உடுத்தியவர் அவரே! பொன்னின் நகைகளினால் உம் உடைகளை ஒளிரச் செய்தாரே! போர் முனையில் வீரர் எங்ஙனம் வீழ்ந்துபட்டனர்! உன் மலைகளிலே யோனத்தான் மாண்டு கிடக்கின்றான்! சகோதரன் யோனத்தான்! உனக்காக என் உளம் உடைந்து போனது! எனக்கு உவகை அளித்தவன் நீ! என்மீது நீ பொழிந்த பேரன்பை என்னென்பேன்! அது மகளிரின் காதலையும் மிஞ்சியது அன்றோ! மாவீரர் எவ்வாறு மடிந்தனர்! போர்க்கலன்கள் எங்ஙனம் அழிந்தன!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்  தி:பா:80: 1-2. 4-6 (பல்லவி: 3b)
=================================================================================

பல்லவி: ஆண்டவரே, எம்மை மீட்குமாறு உம் முக ஒளியைக் காட்டியருளும்!

1 இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்! 2 எப்ராயிம், பென்யமின், மனாசேயின் முன்னிலையில் உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! பல்லவி

4 படைகளின் கடவுளாம் ஆண்டவரே! உம் மக்களின் வேண்டுதலுக்கு எதிராக எத்தனை நாள் நீர் சினம் கொண்டிருப்பீர்? 5 கண்ணீராம் உணவை அவர்கள் உண்ணச் செய்தீர்; கண்ணீரை அவர்கள் பெருமளவு பருகச் செய்தீர்; 6 எங்கள் அண்டை நாட்டாருக்கு எங்களைச் சர்ச்சைப் பொருள் ஆக்கினீர்; எங்கள் எதிரிகள் எம்மை ஏளனம் செய்தார்கள். பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திப 16: 14b

அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி, ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசு மதிமயங்கி இருக்கிறார் என்று இயேசுவின் உறவினர் பேசிக்கொண்டனர்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 20-21

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுடன் வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை. அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக்கொண்டனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
விமர்சனங்களும் அவற்றை நாம் எதிர்கொள்ளும் விதமும்

முன்பொரு காலத்தில் மலை நாட்டை வேங்கையன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். பிறரைக் கேலி செய்து இழிவாகப் பேசுவதன் மூலம் மகிழ்ச்சி அடைவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

ஒருநாள் அவன் வழக்கம்போல அரியணையில் வீற்றிருந்தான். அப்போது புத்த துறவி ஒருவர் அங்கே வந்தார். அவர் மெல்ல நடந்து வருவதைப் பார்த்தான் அவன். உடனே அவரைக் கேலி செய்ய நினைத்தான் "எருமைமாடு போல் மெல்ல நடந்து வருகிறீரே, பார்ப்பதற்கும் எருமை மாடு போல் உள்ளீரே?" என்று சொல்லிச் சிரித்தான் அவன். இதைக் கேட்ட அவர் சிறிதும் கோபம் கொள்ளவில்லை. பாராட்டைப் பெற்றதுபோல் புன்முறுவல் தவழும் முகத்துடன் அவனைப் பார்த்தார். "அரசே! நான் நாளும் வணங்கும் புத்த பெருமானைப் போல நீங்கள் காட்சி தருகிறீர்கள். உங்களை வணங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று பணிவுடன் கூறினார்.

இதைக் கேட்ட அவன், "நான் இவரை எருமை மாடு என்று இகழ்ந்தேன். இவரோ என்னை புத்தர் பெருமான் என்று புகழ்ந்தார். என் வலிமையைக் கண்டு அஞ்சிவிட்டார். அதனால்தான் இப்படிப் பேசுகிறார். புத்தர் பெருமான் என்று புகழ்ந்ததற்கான காரணத்தை இவர் வாயிலாகவே அறிய வேண்டும். மற்றவர்களும் இதைக் கேட்டு என்னைப் பெருமையாக நினைக்கவேண்டும் என்று நினைத்தான். உடனே தலைநிமிர்ந்து பெருமிதத்துடன் அவரைப் பார்த்தான். "துறவியே! நான் உன்னை எருமை மாடு என்று இகழ்ந்தேன். பதிலுக்கு நீர் என்னை புத்தர் பெருமான் என்று புகழ்ந்தீர். நீர் அப்படி என்னைப் புகழ்ந்ததற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாமா? என்று சிரித்தபடியே கேட்டான்.

அரசே! நாம் எப்படி இருக்கின்றோமோ அப்படித்தான் உலகமும் காட்சி அளிக்கும். துறவியாகிய எனக்கு எல்லாரும் புத்தர் பெருமானாகவே காட்சி தருவார்கள். அதே போல் நீங்களும் தோன்றினீர்கள். அதனால் உங்களை புத்தர் பெருமான் என்று வணங்கினேன்" என்று விளக்கம் தந்தார் அவர். இதைக் கேட்ட அவன், "தன்னை அவர் எருமை மாடாக்கிவிட்டாரே... இப்படிப்பட்ட அவமானம் நேர்ந்துவிட்டதே" என்று தலை கவிழ்ந்தான். பிறரைக் கேலி செய்யும் தீய பழக்கம் அன்றே அவனைவிட்டு நீங்கியது.

நம்மைத் தேவையில்லாமல் விமர்சிப்பவர்களை நாம் எப்படி விவேகத்தோடு கையாளவேண்டும் என்ற உண்மையை இந்த நிகழ்வின் வழியாக அறிந்துகொள்ளலாம்.

ஆண்டவர் இயேசு சரியாக உண்ணாமல், உறங்காமல் ஓய்வின்றி இறையாட்சிப் பணியைச் செய்துவருகின்றார். ஆனால் மக்களுள் சிலரோ அவர் மதி மயங்கிப்போய்விட்டார் என்று விமர்சனம் செய்கின்றார்கள். இவர்கள் எல்லாம் என்ன மாதிரியான மக்கள் என்று தெரியவில்லை!. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எல்லா மக்களும் வாழ்வு பெறவேண்டும் என்பதற்கு தன்னுடைய உடல் பொருள் ஆவி அத்தனையும் கொடுத்து இறையாட்சிப் பணியை செய்து வந்தார். ஆனால், அவருக்கு மக்கள் கொடுத்த பட்டம் "மதி மயங்கியவர் என்பதாகும். சென்ற இடங்களிலெல்லாம் நன்மையே செய்த இயேசுவுக்கு இத்தகைய ஒருநிலை ஏற்பட்டதை நாம் என்னவென்று சொல்வது. நாமாக இருந்திருந்தால் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, இந்த உலகினை சபித்துவிட்டு ஓர் மூலையில் முடங்கி இருப்போம். ஆனால், ஆண்டவர் இயேசு அப்படியில்லை. தன்னை மதிமயங்கியவர் என்று மக்கள் விமர்சனம் செய்தபோதும் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல், தொடர்ந்து இறையாட்சிப் பணியைச் செய்துவந்தார். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், இயேசு தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கண்டோ, விமர்சனங்களைக் கண்டோ சிறுதும் பயப்படாமல், தன் முயற்சியில் பின்வாங்காமல் தொடர்ந்து இறையாட்சிப் பணியைச் செய்து வந்தார். இயேசுவிடம் இருந்த இதே மனதிடம்தான் நம்மிடத்தில் இருக்கவேண்டும்.

பல நேரங்களில் நாம் மற்றவர் நம்மீது சுமத்துகின்ற சிறிய சிறிய விமர்சனங்களுக்கும்கூட மனம் நொறுங்கிப் போய் நம்முடைய முயற்சியைக் கைவிட்டுவிடுகின்றோம். இந்த இடத்தில் "பழுத்த மரம்தான் கல்லடி படும்" என்று உண்மையை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

ஓர் அழகான பொன்மொழி இருக்கின்றது, "குறைகின்ற நாய்களையெல்லாம் கல்லெடுத்து அடித்துக்கொண்டே போனோம் என்றால், நாம் போய்ச் சேர வேண்டிய ஊர் போய் சேரமுடியாது" என்பதே அந்தப் பழமொழி. ஆம், நம்மீது விழுகின்ற விமர்சனங்களை எல்லாம் நினைத்து வருந்திக்கொண்டிருந்தோம் என்றால், ஒருகாலமும் நம் இலக்கினை அடையமுடியாது. எல்லாவற்றையும் உதறித்தள்ளிவ்ட்டு தொடர்ந்து போய்க்கொண்டிருக்க வேண்டும்.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், நம்மீது விழும் தேவையற்ற விமர்சனங்களை எல்லாம் தூக்கித் தூர எறிந்துவிட்டு தொடர்ந்து இறைவழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
விமர்சனங்களைத் துணிவுடன் எதிர்கொள்வோம்

பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆர்ஸ் நகரில் பங்குத்தந்தையாக இருந்தவர் அருட்தந்தை ஜான் மரிய வியான்னி. அவரிடமிருந்து அறிவுரை மற்றும் பாவசங்கீர்த்தனம் கேட்பதற்காக நாட்டில் இருந்த சாதாரண மக்களிலிருந்து பெரிய, பெரிய மனிதர்கள் எல்லாம் வந்தார்கள். அவரும் இரவு நீண்ட நேரம்வரை ஆலயத்தில் இருந்து ஜெபித்துவிட்டு, மீண்டுமாக அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் வந்துவிடுவார். இப்படி அவர் இடையாறது இறைப்பணியில் தன்னையே ஈடுபடுத்திக் கொண்டார்.

அந்நேரத்தில் ஜான் மரியா வியான்னியின் வளர்ச்சியைப் பிடிக்காத ஒரு குருவானவர், "போதிய இறையியல் அறிவு இல்லாத நீரெல்லாம் இங்கு குருவாக இருப்பதற்கு இலாயக்கில்லை. தயவுசெய்து இவ்விடத்தைக் காலிசெய்துபோய்விடு" என்று ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

ஓய்வெடுக்கக்கூட போதுமான நேரம் இல்லாமல் எப்போதுமே பரபரப்பாக இருக்கும் வியான்னி அந்த குருவானவரின் கடிதத்திற்கு மட்டும் இவ்வாறு பதில் எழுதினார், "அன்புத் தந்தையே! என்மேல்தான் உங்களுக்கு எத்தனைப் பிரியம். யாருமே செய்யாத காரியத்தை அதாவது என்னிடம் இருக்கின்ற குறைபாடைச் சுட்டிக்காட்டியதற்காக நன்றி. அருள்கூர்ந்து நான் இருக்கும் இடத்தில் நீங்கள் பங்குத்தந்தையாக மாறி, எனக்கு ஓய்வளித்தால், நான் எங்காவது ஓரிடத்தில் சென்று பணிசெய்வேன்" என்று எழுதி அனுப்பினார்.

இந்தக் கடிதம் கண்ட குருவானார், கடினமான வார்த்தைகளால் அவரை வசைபாடி இருக்கும் என்னை, அவர் அன்பு செய்வதாகச் சொல்கிறாரே என்று சொல்லி வியான்னியிடம் மன்னிப்புக் கேட்டார். அருட்தந்தை வியான்னியோ மக்கள் தன்மீது சுமத்திய குற்றச்சாட்டுகள், தேவையற்ற விமர்சங்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, இறைப்பணியில் தன்னை முழுவதுமாகக் கரைத்துக்கொண்டு தூய குருவாக வாழ்ந்தார்.

தன்மீது விழக்கூடிய விமர்சனம் என்னும் கற்களைக்கொண்டே கோபுரம் எழுப்புகிறவன்தான் உண்மையான சாதனையாளன் என்ற வார்த்தையை நிரூபித்துக் காட்டினார் அருட்தந்தை ஜான் மரியா வியான்னி அவர்கள்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு உணவருந்தக்கூட நேரம் இல்லாமல் இறைப்பணியை செய்கிறார். ஆனால் மக்களோ அவரை மதிமயங்கிப் போய்விட்டார் என்று பேசுகிறார்கள். அதனால் இயேசுவின் உறவினர்களில் சிலர் அவரைக் கூட்டிக்கொண்டுபோக வருகிறார்கள்.

"இறைவாக்கினருக்கு ஏச்சுக்களும், பேச்சுகளும் இலவசம் என்பதுபோல இடையறாது இறைப்பணி செய்த ஆண்டவர் இயேசுவை மக்கள் மதிமயங்கிவிட்டார் என்று விமர்சிக்கிறார்கள். இன்னும் பேய்களின் தலைவனாகிய பெயல்சபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான் என்றும், பெருந்தீனிக்காரன், பாவிகளின் நண்பன் என்றும் பலவாறாக விமர்க்கிறார்கள். ஆண்டவர் இயேசு அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் இறைப்பணியை இன்னும் சிறப்பாகச் செய்கிறார்.

இறைப்பணியில், சமூக மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் நம்மீதும்கூட பலநேரங்களில் விமர்சனங்கள், குற்றச்சாட்டுங்கள் வரலாம். அத்தகைய விமர்சனங்களையெல்லாம் நாம் எப்படிப்பட்ட மனநிலையோடு எடுத்துக்கொள்கிறோம் என்பதில்தான் நம்முடைய வாழ்வானது அடங்கியிருக்கிறது.

"விமர்சனங்களை நல்லவிதமாக எடுத்துக்கொண்டால் எந்தப் பிரச்னையும் இருக்காது" என்பார் ஜிக்ஜிக்லர் என்ற அறிஞர். ஆம், தேவையற்ற விமர்சனமும், குற்றச்சாட்டும் நம்மீது வரும்போது அதனை நேர்மறையாக எடுத்துக்கொண்டால் நமது வாழ்வில் துன்பங்கள் இல்லை. அதைவிடுத்து அந்த விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் அதனால் நமக்குத் தான் துன்பம்.

ஆதலால் ஆண்டவர் இயேசுவைப் போன்று பணிவாழ்வில் வரும் விமர்சனங்களைத் துணிவுடன் எதிர்கொள்வோம்; இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antony, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
இனி எல்லாம் சுகமே!
மூவொரு உறவு


"நீ எங்கிருந்து வருகிறாய்?"

"போர்க்களத்திலிருந்து வருகிறேன்."

"என்ன நடந்தது? சொல்!"

"வீரர்கள் பலர் ஓடினர். பலர் மடிந்தனர்

சவுலும், யோனத்தானும் இறந்துவிட்டனர்!"

சவுலும், யோனத்தானும் இறந்த செய்தியை நேரிடையாக தாவீதுக்கு சொல்லத்

தயங்கும் வீரன், "எல்லாரும் இறந்துவிட்டார்கள்" என்று சுற்றி வளைத்து சொல்கிறான்.

ஆறாம் வகுப்பு அரையாண்டில் ஆங்கிலத்தில் நான் 16 மதிப்பெண்கள் வாங்கியிருந்தேன். வீட்டில் வந்து, "நான் ஆங்கிலத்தில் பெயில்" என்று சொல்வதற்கு பயந்து கொண்டு, "எங்க கிளாஸ்ல எல்லாரும் பெயிலு, நானும் பெயிலு!" என்று சொன்னது இன்னும் நினைவிருக்கிறது.

சவுல் மற்றும் யோனத்தான் இறந்த செய்தியை கேட்டு தாவீது புலம்பல் பாடல் ஒன்று இசைக்கின்றார். அதில் சில வார்த்தைகள் மிக அழகாக இருக்கின்றன:

"அன்புடையார், அருளுடையார்!"

"வாழ்விலும், சாவிலும் இணைபிரியார்!"

"சகோதரன் யோனத்தான்!"

"என் உள்ளம் உடைந்து போனது!"

"எனக்கு உவகை அளித்தவன் நீ!

என்மீது பொழிந்த பேரன்பை என்னென்பேன்!

அது மகளிரின் காதலையும் மிஞ்சியது அன்றோ!"

தாவீது யோனத்தானை மூன்று உறவு நிலைகளில் வைத்திருக்கிறார்: நண்பன்,

சகோதரன், காதலி

இரத்தம் மற்றும் திருமண உறவு வழியாக வராமல், மற்ற வழிகளில் நம் வாழ்விற்குள்

வரும் உறவுகளுக்கு சில நேரங்களில் நாமும் பெயர் வைக்க முடிவதில்லை.

ஒரு சிலர் ஒரே நேரத்தில் இந்த மூன்றுமாகவும் இருப்பார்கள்.

இந்த மூவொரு உறவு நிலையை கம்பனும் பதிவு செய்துகின்றார்:

"பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து,

ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்

வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்,

இருவரும் மாறிப்புக்கு, இதயம் எய்தினார்"

(கம்பராமாயணம், பால காண்டம், மிதிலை காட்சிப் படலம், 37)


Yesu Karunandhi, Madurai.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!