Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       19  ஐனவரி 2018  
                                          பொதுக்காலத்தின் 2ஆம்  வாரம்  
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================

ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் நான் கை வைக்கக்கூடாது.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 24: 2-20

அந்நாள்களில் சவுல் இஸ்ரயேல் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் தாவீதையும் அவர்தம் ஆள்களையும் தேடி வரையாடுகளின் பாறைகளுக்கு எதிர்ப்புறம் சென்றார். அவர் சென்றபோது வழியோரத்தில் ஆட்டுப் பட்டிகளைக் கண்டார்; அதனருகில் ஒரு குகை இருந்தது. இயற்கைக்கடன் கழிப்பதற்கு சவுல் அதனுள் சென்றார். அப்பொழுது தாவீதும் அவர்தம் ஆள்களும் அக்குகையின் உட்பகுதியில் இருந்தனர்.

தாவீதின் ஆள்கள் அவரிடம், " இதோ! உன் எதிரியை உன்னிடம் ஒப்புவிப்பேன்; உன் விருப்பத்திற்கேற்ப அவனுக்குச் செய்," என்று ஆண்டவர் சொன்ன நாள் இதுவே!" என்றனர்.

உடனே தாவீது தவழ்ந்து சென்று சவுலின் மேலங்கியின் தொங்கலை அவருக்குத் தெரியாமல் அறுத்தார். தாவீது சவுலின் தொங்கலை அறுத்தபின் அதற்காக மனம் வருந்தினார்.

அவர் தம் ஆள்களைப் பார்த்து, "ஆண்டவர் திருப்பொழிவு செய்த என் தலைவருக்கு எத்தீங்கும் செய்யாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக! அவர் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரானதால் நான் அவர்மேல் கை வைக்கக் கூடாது" என்றார்.

ஆதலின் தம் ஆள்கள் சவுலைத் தாக்காதவாறு தாவீது இவ்வார்த்தைகளால் அவர்களைத் தடைசெய்தார்.

பின்பு சவுல் எழுந்து குகையை விட்டுத் தம் வழியே சென்றார். அதன் பின் தாவீதும் எழுந்து குகையிலிருந்து வெளியேறிச் சவுலைப் பின்தொடர்ந்து, "அரசே, என் தலைவரே!" என்று அழைத்தார்.

சவுல் பின்புறம் திரும்பியபோது தாவீது தரையில் முகம் குப்புற வீழ்ந்து வணங்கினார்.

பின்பு தாவீது சவுலை நோக்கி, " தாவீது உமக்குத் தீங்கு செய்யத் தேடுகிறான்" என்று சொல்லும் மனிதனின் வார்த்தைகளை நீர் கேட்கலாமா? இதோ! குகையில் ஆண்டவர் உம்மை என்னிடம் ஒப்புவித்தார் என்பதை இன்று உம் கண்களே கண்டன; உம்மைக் கொல்ல வேண்டுமெனச் சிலர் என்னை வற்புறுத்தினார்கள்; ஆனால், அவர் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பெற்றவர்; என் தலைவருக்கு எதிராக நான் கை ஓங்கக் கூடாது" என்று சொல்லி நான்தான் உம்மைக் காப்பாற்றினேன்.

என் தந்தையே, பாரும்! என் கையிலிருக்கும் உம் மேலங்கியின் தொங்கலைப் பாரும். உம்மைக் கொல்லாமல் உம் மேலங்கியின் தொங்கலை மட்டும் அறுத்து எடுத்துள்ள என் செயலைப் பார்த்தாலே என்னிடம் யாதொரு குற்றமோ துரோகமோ இல்லை என்பதை நீர் அறிவீர்! நீர் என் உயிரைப் பறிக்கத் தேடினாலும், உமக்கெதிராக நான் ஒரு குற்றமும் செய்யவில்லை. உமக்கும் எனக்கும் ஆண்டவர் நடுவராய் இருப்பாராக!

என் பொருட்டு ஆண்டவரே உமக்கு நீதி வழங்கட்டும்; ஆனால் உமக்கெதிராக என் கை எழாது. முன்னோரின் வாய்மொழிக்கேற்ப, "தீயோரிடமிருந்தே தீமை பிறக்கும்". ஆதலால் உம்மேல் நான் கைவைக்க மாட்டேன். இஸ்ரயேலின் அரசர் யாரைத் தேடிப் புறப்பட்டார்? யாரைப் பின்தொடர்கிறீர்? ஒரு செத்த நாயை அன்றோ? ஒரு தெள்ளுப் பூச்சியை அன்றோ? ஆண்டவர் நடுவராயிருந்து உமக்கும் எனக்கும் நீதி வழங்குவாராக! அவரே எனக்காக வழக்காடி உம் கையினின்று என்னை விடுவிப்பாராக!" என்றார்.

தாவீது இவ்வாறு சவுலிடம் பேசி முடித்தபின் சவுல், "என் மகன் தாவீதே! இது உன் குரல்தானா?" என்று சொல்லி உரத்த குரலில் அழுதார்.

அவர் தாவீதிடம், "நீ என்னிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; ஆனால் நானோ உனக்குத் தீங்கு செய்தேன். ஆண்டவர் என்னை உன்னிடம் ஒப்புவித்திருந்தும் நீ என்னைக் கொல்லவில்லை. இதனால் நீ எனக்கு நன்மையே செய்து வந்திருப்பதை இன்று நீ வெளிப்படுத்தியிருக்கிறாய்.

ஏனெனில் ஒருவன் தன் எதிரியைக் கண்டபின் அவன் நலமுடன் செல்ல அனுமதிப்பானா? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்கு ஈடாக, ஆண்டவரும் உனக்கு நன்மை செய்வாராக! இதோ, நீ திண்ணமாய் அரசனாவாய் என்றும் இஸ்ரயேலின் அரசை நீ உறுதிப்படுத்துவாய் என்றும் இப்பொழுது நான் அறிகிறேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்  தி:பா: 57: 1. 2-3. 5,10
=================================================================================

பல்லவி: கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்.

1 கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்; நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்; இடர் நீங்கும்வரை உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன். பல்லவி

2 உன்னதரான கடவுளை நோக்கி, எனக்காக யாவையும் செய்து முடிக்கும் இறைவனை நோக்கியே நான் மன்றாடுகின்றேன். 3 வானகத்தினின்று அவர் எனக்கு உதவி அனுப்பி என்னைக் காத்தருள்வார்; என்னை நசுக்குவோரை இழிவுபடுத்துவார். கடவுள் தம் பேரன்பையும் வாக்குப் பிறழாமையையும் வெளிப்படுத்துவார். பல்லவி

5 கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்த்தப்பெறுவீராக! பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக! 10 ஆண்டவரே! உமது பேரன்பு வானளவு உயர்ந்துள்ளது! உமது வாக்குப் பிறழாமை முகில்களைத் தொடுகின்றது! பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தம்மிடம் இருக்கும்படி தாம் விரும்பியவர்களை அழைத்தார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-19

இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.

அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் - இவ்விருவருக்கும் "இடியைப் போன்றோர" எனப் பொருள்படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார் - அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இயேசுவின் சீடர்களாக


சாக்ரடீசின் சீடர்களுக்கு நீண்ட நாள் ஒரு சந்தேகம் இருந்தது. அது என்னவென்றால் தங்களுடைய குரு சாக்ரடீசிடம் சீடர்களாக இருக்க வருபவர்களை குளத்தருகே அழைத்துச் சென்று அவர் என்ன செய்கிறார் என்பதே அந்தச் சந்தேகம்.

ஒருநாள் அவர்கள் சாக்ரடீசிடம் நேரடியாகப் அதைக் கேட்டார்கள். அதற்கு அவர், "என்னிடம் சீடர்களாக இருக்க வருபவர்களை குளத்தருகே அழைத்துச் சென்று அவர்களிடம், "இந்தக் குளத்தில் என்ன தெரிகிறது? என்று கேட்பேன். அவர்கள் இந்த குளத்தில் மீன்கள் தெரிகிறது என்று சொன்னால் அவர்களை என்னுடைய சீடர்களாக ஏற்றுக்கொள்வேன். ஏனென்றால் அவர்கள் எளியவர்கள், எதார்த்தமானவர்கள். ஒருவேளை அவர்கள் நான் கேட்கும் கேள்விக்கு, "குளத்தில் என்னுடைய முகம் தெரிகிறது என்று சொன்னால் அவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டேன். ஏனென்றால் அவர்கள் தன்முனைப்பு மிக அதிகம் கொண்டவர்கள்; எல்லாம் எனக்குத் தெரியும் எனக் காட்டிகொள்பவர்கள். அதனால் அவர்களை என்னுடைய சீடர்களாக ஏற்றுக் கொள்ளமாட்டேன்" என்று சொல்லி அவர்களுக்கு பதிலளித்தார்.

ஒன்றும் தெரியாதவருக்குக் எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்துவிடலாம். ஆனால் எல்லாம் எனக்குத் தெரியும் என்று காட்டிக் கொள்பவர்களுக்கு நிச்சயம் ஒன்றையும் கற்றுத் தரமுடியாது. அவர்கள் யாருக்கும் சீடராக இருக்கமுடியாது என்பதை இந்த நிகழ்வானது நமக்குத் தெளிவாக விளக்குகிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கிறார். தம்மோடு இருந்து கற்றுக்கொள்ளவும், நற்செய்தியை அறிவிக்கவும், பேய்களை ஒட்டவும் இயேசு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கிறார்.

நற்செய்தியின் இப்பகுதி நமக்கு உணர்த்தும் ஒருசில உண்மைகளை சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம். முதலாவதாக இயேசு படித்தவர்களையோ அல்லது பெரிய பணக்காரர்களையோ தன்னுடைய சீடர்களாகத் தேர்ந்துகொள்ளவில்லை. மாறாக சாதாரண, படிக்காத பாமரர்களைத் தேர்ந்தெடுக்கிறார்.

பொதுவாக கடவுள் சாதாரண மக்களை, அடியவர்களைத் தன்னுடைய பணியாளர்களாகத் தேர்ந்தெடுப்பார். அப்படிப்பட்ட தன்மை இயேசு திருத்தூதர்களை சீடர்களாகத் தேர்ந்தெடுப்பதிலும் காணமுடிகிறது. (காண் மத் 9:12).

இரண்டாவதாக இயேசு சீடர்களை அழைப்பதற்குக் காரணம் நாம் அனைவரும் அவரது நட்புறவில் பங்குகொள்ளவே. தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் அதிகாரம் 1:9 ல் வாசிக்கின்றோம், "கடவுள் நம்பிக்கைக்கு உரியவர். அவர் தம் மகனும், நம் ஆண்டவருமாகிய இயேசுவின் நட்புறவில் பங்குகொள்ளவே அழைக்கிறார்" என்று. ஆக, இயேசு கிறிஸ்து தான் இறைமகனாக இருந்தாலும், உலகை மீட்கும் பணியை தனி ஒருவராகச் செய்துமுடிக்கும் எல்லா ஆற்றலையும், வல்லமையும் பெற்றிருந்தாலும் சாதாரண மக்களைத் திருதூதர்களாக தேர்ந்தெடுக்கிறார் என்று சொன்னால் அதற்குக் காரணம் நாம் அனைவரும் அவரது நட்புறவில் பங்குகொள்ளவேண்டும் என்பதே.

மூன்றாவதாக இயேசு திருதூதர்களைத் தேர்ந்தெடுக்கிறார் என்றால் அவர்களுக்கு எல்லா அதிகாரமும் குறிப்பாக பேய்களை ஒட்டவும், நோய்களைக் குணமாக்கவும் அதிகாரத்தை அளிக்கின்றார். யோவான் நற்செய்தி 14:18 ல் வாசிப்பதுபோல நம்மைத் திக்கற்றவர்களாக விடவிரும்பாத இயேசு நமக்கு/சீடர்களுக்கு எல்லா அதிகாரத்தையும், தூய ஆவியின் துணையையும் கொடையாகத் தருகிறார்.

ஆதலால் இயேசுவின் சீடர்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கும் நாம் ஒவ்வொருவரும் கடவுளின் மேலான இரக்கத்தையும், பாதுகாப்பையும் உணர்ந்து இயேசுவின் உண்மையுள்ள சீடர்களாக வாழ்வோம். அதன்வழியாகக் இறைவன் தரும் அருளை, ஆசிரைப் பெற்று மகிழ்வோம்.

"தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார், அழைத்தவர்களை தமக்கு ஏற்புடையோர் ஆக்குகிறார். தமக்கு ஏற்புடையோரை தம் மாட்சியில் பங்குகொள்ளச் செய்கிறார்" (உரோ 8:30).

- Fr. Maria Antony, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
இயேசு, விரும்பும் சீடர்களாக!!!

முன்பொரு காலத்தில், சீனாவில் யாங், யுவாங், சுவாங் என்று மூன்று நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் மூவருமே அறிவைத் தேடுவதில் நாட்டம் கொண்டிருந்தனர். ஒருநாள் யாங் மற்ற இருவரிடமும், "வெகு தொலைவில் ஜென் துறவி ஒருவர் உள்ளார். அவர் சோதனை வைத்தே சீடர்களைச் சேர்ப்பார். நாம் அவரிடம் செல்வோம். அவர் வைக்கக்கூடிய சோதனையில் வெற்றி பெற்றால் அவருடைய சீடர்களாக இருந்து மேலும் அறிவைப் பெருக்கிக் கொள்வோம். இல்லையென்றால் திரும்பி வந்துவிடுவோம்" என்றார். மற்ற இருவரும் இதற்கு சம்மதம் தெரிவிக்க, மூவரும் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

பல நாட்கள் பயணம் செய்து ஒருவழியாக அந்த ஜென் துறவியின் இருப்பிடத்தை அடைந்தனர். பின்னர் அங்கிருந்த துறவியிடம் "எங்களைச் சீடர்களாக ஏற்றுக் கொள்ளவேண்டும்" என்று வேண்டினர். உடனே அந்தத் துறவி அருகே கிடந்த மரக்குச்சியை கையில் எடுத்துகொண்டு, "என் பின்னால் வாருங்கள்" என்றார். மூவரும் அவர் பின்னாலேயே சென்றனர். சிறுது நேரத்தில் துறவி ஒரு தோட்டத்திற்கு முன்புபோய் நின்றார். அங்கே நிறைய பூக்கம் அழகாகப் பூத்திருந்தன. பின்னர் துறவி தன் கையிலிருந்த குச்சினால் அந்த அந்தப் பூக்களை எல்லாம் அடித்து வீழ்த்தினார். அவர்கள் மூவரும் அதை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். பிறகு அவர் அவர்களிடம், "நான் செய்ததைப் பார்த்தீர்கள் அல்லவா? அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் ஒவ்வொருவராகச் சொல்லுங்கள்" என்றார்.

அதற்கு யுவாங், "மற்றவர்களை விட தன்னை உயர்ந்தவனாக நினைக்கக்கூடாது. அப்படி நினைத்தால் அழிவு ஏற்படும். அதைத்தான் இந்தப் பூக்களின் நிலை காட்டுகின்றது" என்றார். அவரைத் தொடர்ந்து சுவாங், "தோற்றத்தில் அழகாக இருப்பவை எல்லாம் உயர்ந்தவை அல்ல. அதைத்தான் இந்தப் பூக்களின் நிலை காட்டுகின்றது" என்றார். இறுதியாக யாங், "உயிர் இல்லாத குச்சி உயிர் உள்ள பூக்களுக்குத் துன்பம் தந்தது. அறிவு இல்லாதவர்களால் அறிவு உள்ளவர்களுக்கு துன்பம் தரமுடியும். அதைத்தான் இந்தப் பூக்களின் நிலை காட்டுகின்றது" என்றார்.

மூவர் சொன்னதையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த துறவி, "நீங்கள் மூவருமே நான் உங்களுக்கு வைத்த சோதனையில் தேர்வில் வெற்றிபெற்று விட்டீர்கள். ஆதனால் உங்களை என்னுடைய சீடர்களாக ஏற்றுக்கொள்கின்றேன்" என்றார்.

யார் வேண்டுமானாலும் சீடராகிவிட முடியாது, அவர்களுக்கென்று சில தகுதிகள் வேண்டும் அல்லது அவர்கள் சில சோதனைகளை வென்றாக வேண்டும். அப்போதுதான் அவர்கள் சீடர்களாக முடியும் என்னும் உண்மையை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துரைக்கின்றது. இயேசுவும் தன்னுடைய சீடர்கள் எப்படி இருக்கவேண்டும், அவர்கள் எத்தகைய பணிகளைச் செய்யவேண்டும் என எதிர்பார்க்கின்றார். இயேசுவின் சீடர்களாக இருப்பதற்கு (நமக்கு) என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று இப்போது சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தாம் விரும்பியவர்களை தம்மிடம் வரவழைத்து அவர்களைத் திருத்தூதர்களாக நியமிக்கின்றார். இயேசு எல்லாரையும் தன்னுடைய சீடராக ஏற்றுக்கொள்ளவில்லை, தனது விருப்பத்திற்கு (விண்ணகத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுகின்ற தன்னுடைய விருப்பத்திற்கு) யாராரெல்லாம் இசைந்து வந்தார்களோ அவர்களையே தன்னுடைய சீடர்களாகத் தேர்ந்தெடுக்கின்றார். பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் இறைத்திருவுளம் நிறைவேறுவதற்கு முட்டுக்கட்டையாக இருந்தார்கள் (மாற் 2:20). அதனால் அவர்கள் இயேசுவின் சீடர்களாக மாறுவதற்கான தகுதியை இழந்து போனார்கள்.

இயேசு தாம் விரும்பியர்களைத் தேர்ந்து கொண்டபிறகு அவர்கள் என்னென்ன செய்யவேண்டும் என்று பணிக்கின்றார். தம்மோடு இருக்கவும், நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் இயேசு சீடர்களை நியமிக்கின்றார். ஆகையால், இயேசுவின் சீடர் என்பவர் முதலில் அவரோடு இருக்க வேண்டும். அவர் எத்தகையவர் என்பதை அறிந்துணர்ந்த பிறகு, அவரைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கவேண்டும். அப்படிப்பட்டவர் தான் இயேசுவின் சீடராக இருக்கமுடியும்.

இயேசுவின் வழியில் நடக்கும் நாம் அவரோடு (தங்கி) இருந்து அவரைக் குறித்து முழுமையாக அறிந்திருக்கின்றோமா? அறிந்த இயேசுவை மற்ற மக்களுக்கு எடுத்துரைக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் இயேசு கிறிஸ்துவைக் குறித்து முழுமையாக அறிந்துகொள்வதுமில்லை, ஒருவேளை அவரைப் பற்றி அறிந்திருந்தாலும் அவரை மற்ற மக்களுக்கு அறிவிக்க முன்வருவதில்லை. இந்த நிலை வரவேண்டும். நாம் ஒவ்வொருவரும் இயேசு எதிர்பார்க்கின்ற, விரும்புகின்ற சீடர்களாக மாறவேண்டும்.

ஆகவே, இயேசுவின் சீடர்களாக வாழ அழைக்கப்படிருக்கின்ற நாம் அவரோடு இருந்து அனுபவம் பெறுவோம், பெற்ற அனுபவத்தை பிறருக்கு எடுத்துச் சொல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
விரும்பியவர்களை அழைத்தார் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசு தம் திருத்தூதர்களை அழைத்த நிகழ்ச்சியை இன்று வாசிக்கிறோம். நமக்கு நன்கு அறிமுகமான பகுதிதான். அதில் இன்று நாம் சிந்திக்க எடுத்துக்கொள்ளும் இரு செய்திகள்:

1. அவர் தாம் விரும்பியவர்களை தம்மிடம் அழைத்தார். கிறித்தவ அழைத்தல் என்பது ஒரு கொடை. அது சம்பாதிப்பது அல்ல, இறைவன் தாமாக விரும்பி இலவசமாகக் கொடுப்பது. அந்த அழைத்தலுக்குத் தகுதி என்று எதுவுமில்லை. இறைவனின் இரக்கம் ஒன்றுதான் அலகு. யாரையெல்லாம் அவர் அழைத்திருக்கிறாரோ, அவர்களெல்லாம் பேறுபெற்றவர்கள். நன்றி சொல்ல வேண்டியவர்கள்.

2. தம்மோடு இருக்க... என்பது அவரது அழைத்தலின் நோக்கங்களுள் ஒன்று. அவரால் அழைக்கப்பட்டவர்கள் அடிப்படையில் செய்யவேண்டியது அவரோடு ஒன்றி வாழ்வது, அவரோடு வாழ்வது. இந்த இரு செய்திகளையும் இன்று நம் இதயத்தில் பதித்துக்கொள்வோம்.

மன்றாடுவோம்: எம்மைப் பெயர் சொல்லி அழைத்த ஆண்டவரே, நாங்கள் உம்மைப் புகழ்ந்து போற்றுகிறோம். எங்கள் தகுதியின்மையைப் பாராமல், உமது பேரன்பையே மனதில் கொண்டு, எங்களை விரும்பி அழைத்தீரே, உமக்கு நன்றி. உம்மால் அழைக்கப்பட்ட நாங்கள் என்றும் உம்மோடு வாழவும், ஒன்றித்திருக்கவும் அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--: அருள்தந்தை குமார்ராஜா

-----------------------------



""தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட
அதிகாரம் கொண்டிருக்கவும் இயேசு பன்னிருவரை நியமித்தார்"" (மாற்கு 3:14-15)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- இயேசு பன்னிரு சீடரைத் தனிப்பட்ட முறையில் தேர்ந்துகொண்டார் என்பது நற்செய்தி நூல்களில் காணப்படுகின்ற உறுதியான செய்தி. பண்டைக் காலத்தில் பன்னிரு குலமுதல்வர்கள் யூத மக்களின் தந்தையர்களாக விளங்கியதுபோல, புதிய உடன்படிக்கையின் காலத்தில் புதிய இன மக்களுக்குக் குலமுதுவர்கள் போல அமைந்தவர்கள்தான் இந்தப் பன்னிருவர். இவர்களுக்கு இயேசு ""திருத்தூதர்"" என்னும் பெயரைக் கொடுக்கிறார். தூது அறிவிக்க அனுப்பப்பட்டதால் அவர்கள் இப்பெயர் பெற்றனர். ஆயினும், தூது சொல்லச் செல்வதற்கு முன்னால் அவர்கள் இயேசுவோடு ""இருக்க வேண்டும்"" - அதாவது, இயேசு யார் என்பதை அவர்கள் அவரோடு இருந்து, பழகி, நேரடியாக அனுபவித்து உணர வேண்டும். இவ்வாறு தாங்கள் அனுபவித்து அறிந்ததை அவர்கள் மக்களுக்குப் பறைசாற்ற வேண்டும். மேலும் தீய சக்திகளை முறியடிக்கவும் அவர்களுக்கு அதிகாரம் தரப்படுகிறது.

-- பன்னிரு திருத்தூதர்களுக்கு இயேசு வழங்கிய பொறுப்பு திருச்சபைக்கு அளிக்கப்படுகின்ற பொறுப்பாகும். இயேசுவின் பெயரால் ஒன்றுகூடி வருகின்ற மக்கள் குழுவே திருச்சபை. இக்குழு இயேசுவோடு ஒன்றித்திருக்க வேண்டும். இயேசுவிடமிருந்து பெற்ற அனுபவத்தை உலக மக்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். இவ்வாறு நற்செய்தி அறிவிக்கும்போது திருச்சபை தீய சக்திகளை எதிர்த்து நின்று, கடவுளின் சார்பாகப் போராடிட அழைக்கப்படுகிறது. திருச்சபைக்கு வழங்கப்படுகின்ற திருத்தூதுப் பணி இயேசுவின் பணியைத் தொடர்வதையே குறிக்கிறது. இது புதிய பணியல்ல, மாறாக இயேசுவின் பணித்தொடர்ச்சியே. இப்பணியில் பங்கேற்க நாம் அழைக்கப்படுகிறோம் என்பதை உணரும்போது நம்மில் நன்றியுணர்வு பொங்கி எழ வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, உம் திருமகனின் பள்ளியில் பயின்ற பாடத்தைப் பிறரோடு பகிர்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-----------------------------

உண்மையான சீடர்கள்

இந்த உலகப்போக்கின்படி பார்த்தால், இயேசு எப்படி இந்த படிக்காத பாமரர்களை தனது திருத்தூதர்களாக தேர்ந்தெடுத்தார் என்பது நமது கேள்வியாக இருக்கும். காரணம், அவர்கள் செல்வந்தர்கள் அல்ல, அந்த சமுதாயத்தின் விளிம்புநிலை மக்கள். அவர்கள் வாழ்ந்த சமுதாயத்தில் அவர்களுக்கென்று எந்த செல்வாக்கும் கிடையாது. அவர்கள் படிக்காதவர்கள். மறைநூலைப்பற்றிய அறிவே இல்லாதவர்கள். இப்படிப்பட்டவர்கள் எப்படி போதனையாளர்களாக மாற முடியும்? இப்படிப்பட்டவர்கள் எப்படி இயேசுவின் போதனையைப் புரிந்து, அறிவிக்க முடியும்? எந்த அடிப்படையில் இயேசு இவர்களை தனது சீடர்களாக அழைத்தார்?

இரண்டு காரணங்களை நாம் உறுதியாகச் சொல்ல முடியும்? இயேசுவிடத்தில் அவர்களுக்கு ஏதோ ஒருவிதமான ஈர்ப்பு இருந்தது. அதனால் தான் இயேசு அழைத்தவுடன் மறுப்பு சொல்லாமல், அவரைப்பின்தொடர்ந்தனர். அதாவது, இயேசுவை தங்களது போதகராக ஏற்றுக்கொள்வதில் எந்த தயக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை. அவர் சிறந்த போதகர் என்கிற நம்பிக்கை அவர்களுடைய மிகப்பெரிய பலம். இரண்டாவது காரணம், அவர்கள் இயேசுவின் சார்பில் துணிவோடு நின்றார்கள். ஏனென்றால், இயேசு பாரம்பரியம் என்ற பெயரில் நடந்துகொண்டிருந்த அநீதிகளை, அக்கிரமங்களை துணிவோடு எதிர்த்து நின்றார். எதிர்ப்பைச் சம்பாதித்தார். அவருக்கு பல முனைகளிலிருந்து எதிர்ப்புகள் வரத்தொடங்கின. அந்த சமயத்தில், சீடர்கள் துணிவோடு அவர் பக்கம் நின்றார்கள். துணிவு, சீடர்களின் மிகப்பெரிய பலம்.

இயேசுவைப் பின்பற்றுகிற நம்மிடத்தில், சீடர்களிடம் இருந்த இந்த இரண்டு குணங்களும் இருக்கிறதா? என்று சிந்திப்போம். இயேசுவிடத்தில் நமக்குள்ள நம்பிக்கையும், இயேசுவோடு நிற்கக்கூடிய துணிவும் தான், நம்மை உண்மையான சீடர்களாக அடையாளம் காட்டும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இறைவார்த்தை அறிவிக்கிறவர்களாக.

சீடர்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி, இயேசுவின் வாழ்வில் மிக, மிக முக்கியமான நிகழ்ச்சி. இயேசு தனது போதனையின் மையக்கருத்தான "காலம் நிறைவேறிவிட்டது. மனம்திரும்பி நற்செய்தியை நம்புங்கள்" என்ற சிந்தனையை மக்கள் மனதில் வேரூன்றிவிட்டார். கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதற்கான திட்டங்களையும் அவர் மனதில் நிச்சயம் வைத்திருப்பார். கலிலேயா பகுதி முழுவதும் சுற்றிவந்து, போதித்து, நோயாளர்களைக் குணப்படுத்தி தனது வல்லமையை நிரூபித்து விட்டார். இயேசுவை மக்கள் சிறந்த போதகராக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு, மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டார்.

இப்போது, இயேசுவுக்கு இரண்டு பிரச்சனைகள் வருகிறது. 1. அவருடைய செய்தி, அவருக்குப்பின்னாலும் அறிவிக்கப்பட வேண்டும். 2. அந்தப்போதனையை, புத்தகங்களும், செய்தித்தாள்களும் இல்லாத அந்த காலகட்டத்தில், மக்களுக்கு தொடர்ந்து கொடுக்கப்பட வேண்டும். இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் தீர்வாக இயேசு கண்டுபிடித்த முறைதான் சீடர்களைத் தேர்ந்தெடுத்தது. போதகர்களுக்குப் பின்னால் சீடர்கள் செல்வது என்பது, பாலஸ்தீனத்தில் புதிதல்ல. ஆனால், குருவுக்கும் பிறகும், அதே தாகத்தோடு போதிப்பது என்கிற நிலை இல்லாமலிருந்தது. குருவோடு, ஏறக்குறைய அவருடைய போதனையும் மறைந்துவிடும். அப்படி ஒன்றாக இயேசுவின் வாழ்வும் இருந்துவிடக்கூடாது என்பதில் இயேசு கருத்தாயிருக்கிறார். எனவே தான், அவர் சீடர்களைத் தேர்ந்தெடுத்தது மட்டுமல்ல, அவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சியும் தருகிறார்.

நாம் அனைவருமே இயேசுவின் சீடர்கள். கிறிஸ்தவர்கள் அனைவருக்குமே நற்செய்தி அறிவிக்கும்பணி இருக்கிறது. நாம் இறைவார்த்தையோடு கேட்டதோடு நமது வாழ்வு நின்றுவிடக்கூடாது. அது நமது வாழ்வில் வெளிப்பட வேண்டும். இறைவார்த்தை தொடர்ந்து நமது வாழ்வில், வாழ்வு மூலமாக அறிவிக்கப்பட வேண்டும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

விசுவாசம் - கடவுளின் கொடை

இயேசு கடவுளின் நற்செய்தியை உலகெங்கும் எடுத்துச்செல்ல திருத்தூதர்களை தேர்ந்தெடுக்கிறார். இயேசுவின் இந்த செயல், விசுவாசம் என்பது போற்றிப்பாதுகாக்க வேண்டியது மட்டுமல்ல, அது பறைசாற்றப்பட வேண்டியது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

கத்தோலிக்க திரு அவை இரண்டாயிரம் வருடத்திற்கும் மேலான பாரம்பரியத்தைகொண்டு இருக்கிறது. இந்த இரண்டாயிரம் வருட பாரம்பரியத்தின் வெற்றி, ஒவ்வொரு தலைமுறையினரின் அர்ப்பணத்திலே இருந்திருக்கிறது. அன்றைக்கு சீடர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட விசுவாசத்தை அர்ப்பண உணர்வோடு தலைமுறையினர் தோறும் அடுத்த தலைமுறையினர்க்கு மிகுந்த பாதுகாப்போடு, மகிச்சியோடு, தியாக உள்ளத்தோடு பரிமாறியிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் சந்தித்த துன்பங்கள், துயரங்கள், கொடுமைகள் எண்ணிலடங்காதவை. ஆனாலும், தாங்கள் பெற்றுக்கொண்ட அந்த மாட்சிமையை, உண்மையை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக தாங்கள் சந்தித்த இன்னல்களை பொறுமையோடு ஏற்றுக்கொண்டார்கள். இதற்கு சிறந்த உதாரணம் திருத்தூதர்கள். திருத்தூதர்கள் அனைவரும் இயேசுவுக்காக சிந்திய இரத்தம் அதற்கு சாட்சி.

இன்றைக்கும் நாம் பெற்றிருக்கிற இந்த பாரம்பரியமான விசுவாசத்தை சிதைக்காமல் எந்தச்சேதாரமும் இல்லாமல் அடுத்த தலைமுறையினருக்குக் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. குறிப்பாக பொய்யையும், புரட்டையும், மாயத்தோற்றத்தையும் கல்வியறிவில்லா மக்கள் மனதில் விதைத்து, சாதாரண மக்களின் விசுவாசத்தில் குழப்பம் செய்து, குழம்பிய குட்டையில் மீன்களை தேடும் வேலை செய்கின்ற பிரிவினைச்சபைகளிடமிருந்து இந்த பாரம்பரியமான விசுவாசத்தை பாதுகாத்து, பறைசாற்றக்கூடிய பொறுப்பை உணர்வோம். சிலை வழிபாடு, அன்னைக்கு வணக்கம், நற்கருணையில் இறைப்பிரசன்னம் போன்ற நம்முடைய விசுவாச வடிவங்களை சிதைக்க நினைப்பவர்களுக்கு இறைவார்த்தையின் துணைகொண்டு பதிலடி கொடுப்பது, ஒவ்வொரு கிறிஸ்தவரின் கடமை என்பதை உணர்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------------------

பன்னிரு திருத்தூதர்களை நியமித்தார் !

இயேசு பன்னிரு திருத்தூதர்களை நியமித்த நிகழ்வை இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கக் கேட்கிறோம். தம்மோடு இருக்கவும், நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும், பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் பன்னிருவரை நியமித்தார். அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார் என்று வாசிக்கிறோம்.

திருத்தூதர் என்னும் பெயரை என்று சிந்திப்போம். அப்போஸ்தலோஸ் என்னும் கிரேக்கச் சொல்லுக்கு "அனுப்பப்பட்டவர்" என்று பொருள். இ;ந்தப் பெயரிலிருந்துதான் திருத்தூதுப் பணி, நற்செய்தி அறிவிப்புப் பணி என்னும் சொல்லாடல்கள் எழுகின்றன. அது மட்டுமல்ல, இந்தப் பன்னிரு திருத்தூதர்களின் வாரிசுகளாகத்தான் இன்றைய திருத்தந்தையும், ஆயர்களும் திகழ்கின்றனர். நமது திருச்சபையும், ஏக, பரிசுத்த, கத்தோலிக்க, "அப்போஸ்தலிக்க" திருச்சபை என்று இவர்களைக் கொண்டே அழைக்கப்படுகின்றது. உலகெங்கும் பரவியுள்ள ஒரே தூய திருச்சபை திருத்தூதர்களை அடிக்கல்லாகவும், திருத்தூதுப் பணியைத் தனது உயிர்த் துடிப்பாகவும் கொண்டுள்ளது. திருத்தூதுப் பணியின்றி திருச்சபை இயங்க முடியாது. திருத்தூதர்கள், அவர்களின் வாரிசுகளான திருத்தந்தை மற்றும் ஆயர்கள் இன்றியும் திருச்சபை இயங்க முடியாது. ஏனென்றால், நாம் "கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய்" இருக்கிறோம் (எபே 2: 20) என்கிறார் பவுலடியார்.

இதுவே நமது விசுவாசம், இதுவே நமது கத்தோலிக்க மரபு. இந்தத் திருத்தூது மரபில் பெருமிதம் கொண்டு, திருச்சபைத் தலைவர்களுக்கு மதிப்பும், கீழ்ப்படிதலும் தந்து, பவுலடியார் சொல்வதுபோல, "கிறிஸ்துவின் உறவில் கட்டடம் முழுவதும் இசைவாகப் பொருந்தி, ஆண்டவருக்கென்று தூய கோவிலாக வளர்ச்சி" (எபே 2: 21) வளர்ச்சி பெறுவோமாக!

மன்றாடுவோம்: ஆண்டவராகிய இயேசுவே, திருத்தூதர்களுக்காகவும், அவர்களின் இன்றைய வாரிசுகளான எங்கள் திருத்தந்தை, ஆயர்களுக்காக உம்மைப் போற்றுகிறோம். திருத்தூதர்களை அடிக்கல்லாகக் கொண்டு நீர் உருவாக்கிய திருச்சபையில் நாங்கள் உயிர்த் துடிப்புள்ள உறுப்பினர்களாக வாழ அருள்தாரும். உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.


இணையதள உறவுகளே

"இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள்.
தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்."(மாற் 3:13-15) பன்னிரெண்டு திருத்தூதரை அழைக்க, இவ்வளவு சிரமப்பட்டு மலை உச்சிக்குப்போய், தந்தை இறைவனோடு செபத்தில் கலந்தாலோசித்து தேர்ந்தெடுத்துள்ளார்.

சாதிக்கு ஒரு திருத்தூதர், சங்கத்துக்கு இன்னொருவர், கோடி பணம் கொடுத்தவர் மற்றொருவர், குடும்பத்தில் பாதிபேர் என்று மிக எளிதாக தேர்ந்தெடுத்திருக்கலாம். ஒரு குருமாணவனைப்பற்றிய ஒரு புகார் அந்த ஆயரிடம் வந்தபோது, நான் செபித்து முடிவு செய்வேன் என்றார். அவர் இன்று இல்லை.

அது ஆயராக இருக்கலாம், அமைச்சராக இருக்கலாம், குருக்களாக இருக்கலாம், குருத்துவப் பணியிடமாக இருக்கலாம், உங்கள் கணவனாக மனைவியாக இருக்கலாம், பிள்ளைகளின் படிப்பு, எதிர்கால வாழ்வாக இருக்கலாம். மலைக்குச் செல்லுங்கள். ஆண்டவரின் உதவியைத் தேடுங்கள். சரியான முடிவு எடுப்பீர்கள். நடப்பவை நல்லவையான இருக்கும்.

-ஜோசப் லீயோன்..

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

இனி எல்லாம் சுகமே!
நல்லவராக


சவுலுக்கு கெட்ட நேரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

யாரோ ஒரு குரூப், வாட்ஸ்ஆப்பில், "தாவீது உன்னைக் கொல்லத் தேடுகிறான்! கவனமாக இரும்!" என்று தட்டிவிட, அதை சீரியசா எடுத்துக்கொண்டு, அரச வேலைகளை விட்டு, காடு, மேடு என்று சுற்றி, தாவீதைத் தேடித் திரிகிறார் சவுல்

சவுலுக்கு ஒன் பாத்ரூம் வர ஒரு குகைக்குள் நுழைகிறார். அந்த குகைக்குள் ஏற்கனவே ஒன் பாத்ரூம் போயிருந்த தாவீது, சவுலுக்கு தெரியாமல், சவுலின் ஆடையின் நுனியை தன் கத்தியால் வெட்டிவிடுகிறார்.

சவுல் வெளியே சென்றபோது, தூரத்தில் நின்று கொண்டு தான் அறுத்தெடுத்த துணியைக் காட்டி, தான் சவுலுக்கு ஒருபோதும் தீங்கு நினைப்பதில்லை என சத்தம் போட்டு அறிக்கையிடுகின்றார் தாவீது.

தாவீது ரொம்ப நல்லவராக இருக்கிறார்:

1. தீமை கிடைக்க வாய்ப்பு கிடைத்தும் தீமை செய்யாமல் இருக்கிறார். தாவீதின் நல்ல குணம் எனக்கு இரண்டு திருக்குறள் வரிகளை நினைவுபடுத்துகிறது:

அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல் (203)

(அறிவினுள் சிறந்த அறிவு என்பது தமக்கு தீமை செய்தவர்க்கும் தாம் தீமை செய்யாது இருந்துவிடல்)
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல் (314)

2. "Character is what you are in the dark" (நல்ல பண்பு என்பது நீ இருளில் எப்படி இருக்கிறாயோ அதுவே!)

யாரும் பார்க்கவில்லையென்றாலும் நாம் எப்படி நடக்கிறோமோ அதுதான் நம் கேரக்டர். அடுத்தவர்கள் பார்க்கிறார்கள் என்பதற்காக நல்லவர்களாக இருப்பதைவிட, எப்போதும் நல்லவர்களாக இருப்பது.

3. திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் கைவைக்க கூடாது. அதாவது, ஆண்டவரின் கை பட்ட ஒருவர்மேல் தன் கையை வைக்கக் கூடாது என்று இங்கே தாவீது ஆண்டவரின் அருள்பொழிவை மதிக்கிறவராக இருக்கின்றார்.

4. "என் தந்தையே." தனக்கு தீங்கிழைக்க வந்த சவுலை, "அப்பா" என அழைக்கிறார் தாவீது. ஒரு தந்தை தன் மகனுக்கு தீங்கிழைக்கலாமா? அல்லது மகன்தான் தந்தைக்கு தீங்கிழைப்பானா? என நினைவுபடுத்துகிறார் தாவீது.

5. இறுதியாக, தன்னை செத்த நாய் என்றும், தௌளுப்பூச்சி என்றும் தாழ்த்திக்கொள்வதோடல்லாமல், "நீ அரசனுக்குரிய நிலையிலிருந்து உன்னையே தாழ்த்திக்கொள்ளலாமா?" என சவுலுக்கு, தன்மதிப்பை அறிந்துகொள்ளத் தூண்டுகிறார்.

சவுலும் தாவீதின் நல்ல உள்ளத்தை உடனே புரிந்து கொள்கிறார்.

இன்று நீ எனக்கு செய்த நன்மைக்கு ஈடாக, ஆண்டவரும் உனக்கு நன்மை செய்வாராக!
நீ அரசனாய் இஸ்ரயேலை உறுதிப்படுத்துவாய்!

என வாயார தாவீதை வாழ்த்துகிறார்.

தாவீதும் சவுலின் வாட்ஸ்ஆப் க்ரூப்பில் இணைந்துகொள்கிறார்.

Yesu Karunanidhi, Madurai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை
=================================================================================

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!