Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       18  ஐனவரி 2018  
                                          பொதுக்காலத்தின் 2ஆம்  வாரம்  
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================

என் தந்தை சவுல் உன்னைக் கொல்லத் தேடுகிறார்.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 18: 6-9;19: 1-7

அந்நாள்களில் தாவீது பெலிஸ்தியனைக் கொன்றபின், வீரர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, இஸ்ரயேலின் எல்லா நகர்களிலிருந்தும் பெண்கள் ஆடல் பாடலுடன் அரசர் சவுலைச் சந்திக்க வந்தனர்; அவர்கள் கஞ்சிராக்களோடும் நரம்பிசைக் கருவிகளுடனும் மகிழ்ச்சிப் பாடல் எழுப்பினர்.

அப்பெண்கள் அப்படி ஆடிப்பாடுகையில், "சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார்; தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார்" என்று பாடினர்.

இந்த வார்த்தைகள் சவுலுக்கு அறவே பிடிக்கவில்லை; அவர் மிகவும் சினமுற்று, "அவர்கள் "தாவீதுக்குப் பதினாயிரம் பேர்" என்றனர். எனக்கோ "ஆயிரம் பேர் மட்டுமே" என்றனர். அவனுக்கு இன்னும் குறைவாக இருப்பது ஆட்சி ஒன்றுதான்!" என்று கூறினார்.

அன்று முதல் சவுல் தாவீதைப் பொறாமைக் கண்கொண்டு பார்க்கலானார். தாவீதைக் கொல்ல வேண்டுமென்று தம் மகன் யோனத்தானிடமும் தம் அலுவலர் எல்லாரிடமும் சவுல் தெரிவித்தார்.

ஆனால் சவுலின் மகன் யோனத்தான் தாவீதின்மீது மிகுதியான அன்பு கொண்டிருந்தார்.

ஆதலால் தாவீதைப் பார்த்து யோனத்தான், "என் தந்தை சவுல் உன்னைக் கொல்லத் தேடுகிறார்; ஆதலால் எச்சரிக்கையாய் இரு, காலையிலேயே புறப்பட்டு மறைவான ஓர் இடத்திற்குச் சென்று ஒளிந்து கொள். நீ வெளியில் இருக்கும் சமயத்தில் நான் என் தந்தையின் அருகில் இருந்து கொண்டு, உன்னைப் பற்றி அவரிடம் பேச்சுக் கொடுப்பேன்; அப்படி நான் அறிகிறதையெல்லாம் உனக்குத் தெரிவிப்பேன்" என்றார்.

யோனாத்தான் தாவீதைப்பற்றித் தம் தந்தை சவுலிடம் நல்ல விதமாகப் பேசி, "அரசர் தம் அடியான் தாவீதின் பொருட்டுப் பாவம் செய்ய வேண்டாம்; ஏனெனில் அவன் உமக்குத் தீங்கு ஏதும் செய்ததில்லை; மேலும் அவனுடைய செயல்கள் உம் அரசில் மிகவும் பயனுடையனவாய் இருந்தன; அவன் தன் உயிரை ஒரு பொருட்டாய் எண்ணாது அப்பெலிஸ்தியனைக் கொன்றான்; அதனால் ஆண்டவர் இஸ்ரயேலர் எல்லாருக்கும் பெரும் வெற்றியை அளித்தார். நீர் அதைக் கண்டுமகிழ்ச்சியுற்றீர்;அப்படியிருக்க எக்காரணமும் இல்லாமல் தாவீதைக் கொல்வதன் மூலம் குற்றமற்ற இரத்தத்திற்கு எதிராக நீர் ஏன் பாவம் செய்ய வேண்டும்?" என்று கூறினார்.

சவுல் யோனத்தானின் வார்த்தைகளைக் கேட்டார்; அதனால் சவுல், "வாழும் ஆண்டவர்மேல் ஆணை! அவன் கொலை செய்யப்படமாட்டான்" என்றார்.

பின்பு யோனத்தான் தாவீதை அழைத்து இவ்வார்த்தைகளை எல்லாம் அவருக்குக் கூறினார்; மேலும் யோனத்தான் தாவீதைச் சவுலிடம் அழைத்துச் செல்ல, முன்பு போலவே தாவீது அவரது பணியில் ஈடுபட்டார்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
 
பதிலுரைப் பாடல்  தி:பா: 56: 1-2. 8-9ab. 10. 11-12 (பல்லவி: 4b)
=================================================================================
பல்லவி: கடவுளையே நம்பியுள்ளேன்; எதற்கும் நான் அஞ்ச மாட்டேன்.

1 கடவுளே, எனக்கு இரங்கியருளும்; ஏனெனில், மனிதர் என்னை நசுக்குகின்றனர்; அவர்கள் என்னுடன் நாள்தோறும் சண்டையிட்டுத் துன்புறுத்துகின்றனர். 2 என் பகைவர் நாள்தோறும் கொடுமைப்படுத்துகின்றனர்; மிகப் பலர் என்னை ஆணவத்துடன் எதிர்த்துப் போராடுகின்றனர். பல்லவி

8 என் துன்பங்களின் எண்ணிக்கையை நீர் அறிவீர்; உமது தோற்பையில் என் கண்ணீரைச் சேர்த்து வைத்துள்ளீர்; இவையெல்லாம் உம் குறிப்பேட்டில் உள்ளன அல்லவா? 9யb நான் உம்மை நோக்கி மன்றாடும் நாளில் என் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடுவர். பல்லவி

10 கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன்; ஆண்டவரின் வாக்கை நான் புகழ்கின்றேன். பல்லவி

11 கடவுளையே நம்பியிருக்கின்றேன்; எதற்கும் அஞ்சேன்; மானிடர் எனக்கெதிராய் என்ன செய்ய முடியும்? 12 கடவுளே, நான் உமக்குச் செய்த பொருத்தனைகளை மறக்கவில்லை; உமக்கு நன்றிப்பலி செலுத்துவேன். பல்லவி


================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
2 திமொ 1: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
"இறைமகன் நீரே"" என்று தீய ஆவிகள் கத்தின. இயேசு தம்மை வெளிப்படுத்த வேண்டாமெனச் சொன்னார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 7-12

அக்காலத்தில் இயேசு தொழுகைக்கூடத்திலிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். மேலும் யூதேயா, எருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம் வந்தனர்.

மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தமக்காகப் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு அவர் சீடருக்குச் சொன்னார். ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொட வேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்து கொண்டிருந் தனர்.

தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, "இறைமகன் நீரே"" என்று கத்தின. அவரோ, தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவற்றிடம் மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
புகழ்ச்சியை விரும்பாத இயேசு கிறிஸ்து!!!

பூங்காவில் இரண்டு பெரியவர்கள் சந்தித்துக் கொண்டார்கள். அதில் ஒரு பெரியவரிடம் பணம் அதிகமாக இருந்தது. இன்னொரு பெரியவரிடம் அறிவு அதிகமாக இருந்தது. பணம் அதிகமாக இருந்த பெரியவோருக்கு ஓர் ஆசை, "யாராவது தன்னைப் புகழ்ந்து பேசுவார்களா" என்பதே அந்த ஆசை.

உடனே அவர் அறிவு அதிகமாக இருந்த, அதே நேரத்தில் பணமில்லாத ஏழைப் பெரியவரிடம், "என்னிடம் ஆயிரம் பொற்காசுகள் இருக்கின்றன. நீ என்னைப் புகழ்ந்து பேசினால் என்னிடத்தில் இருக்கின்ற ஆயிரம் பொற்காசுகளில் நூறு பொற்காசுகளை உன்னிடத்தில் தந்துவிடுகிறேன்" என்றார். அதற்கு அந்த ஏழைப் பெரியவர், "இது நீதியான பங்கீடாக இருக்க முடியாது. நீதியான பங்கீடு என்றால், இருவருக்கும் பொற்காசுகள் சமமாகக் கிடைக்கவேண்டும்" என்றார். "அப்படியா, சரி என்னிடத்தில் இருக்கின்ற ஆயிரம் பொற்காசுகளில் ஐநூறு பொற்காசுகளை உனக்குத் தந்துவிடுகின்றேன், அப்போதாவது என்னைப் புகழ்ந்து பேசுவாயா?" என்று கேட்டார் அவர். அதற்கு அந்த ஏழைப் பெரியவர், "என்னிடத்தில் ஐநூறு பொற்காசுகள் வந்துவிட்டால் நம் இருவரிடத்திலும் சமமான அளவில் பொற்காசுகள் இருக்குமே, சம அளவில் இருக்கும் நான் எப்படி உன்னைப் புகழ்வேன்" என்றார்

"சரி, என்னிடத்தில் இருக்கின்ற மீதி ஐநூறு பொற்காசுகளையும் உனக்குக் கொடுத்துவிடுகின்றேன், இப்போதாவது என்னைப் புகழ்ந்து பேசுவாயா?" என்று கேட்டார் முன்னவர். "என்னிடத்தில் ஆயிரம் பொற்காசுகள் வந்துவிட்டால், நீ என்னைவிட மதிப்புக் குறைந்தவனாய் ஆகிவிடுவாய், அப்புறம் எப்படி நான் உன்னைப் புகழ்வேன்" என்றார் பின்னவர். இதைக் கேட்டு அந்த பணக்காரப் பெரியவர், "இந்த மனிதரிடத்தில் நாம் எதைக் கொடுத்தும் நம்மைப் புகழ்ந்து பேச வைக்க முடியாது" என்று சொல்லிக்கொண்டு தோல்வி முகத்தோடு அவ்விடத்தை விட்டு அகன்றார்.

புகழ் என்பது தானாக வரவேண்டும். அதை விடுத்து பணம் கொடுத்து, புகழ்ந்து பேசச் சொல்வது எல்லாம் எந்தவிதமான மனநிலை என்று தெரியவில்லை.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு ஊர்கள் சிற்றூர்கள் தோறும் நற்செய்தியை அறிவித்துக் கொண்டே செல்கின்றார்; பிணியாளர்களைக் குணப்படுத்துகின்றார். இதனால் மக்கள் கூட்டம் அவரை நெருங்கி வந்து அவரைத் தொட்டு குணம் பெறுவதற்கு முண்டியடித்துக்கொண்டு வருகின்றது. இதற்கிடையில் தீய ஆவிகள் அவரைக் கண்டு, "நீரே இறைமகன்" என்று கத்துகின்றன. அப்போது அவர், "தம்மை யாருக்கும் வெளிப்படுத்த வேண்டாம்" என்று மிகக் கண்டிப்பாகக் கூறுகின்றார்.

இந்த உலகத்தில் வாழக்கூடியவர்களில் புகழுக்கு ஆசைப்படாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் பணகாரப் பெரியவரைப் போன்று, ஒருசிலர் பணம் கொடுத்தாவது பிறர் தம்மைப் புகழ்ந்து பேசவேண்டும் என்று விரும்புகின்றார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவோ அப்படியில்லை. அவர் தீய ஆவிகள் தன்னை, "நீரே இறைமகன்" என்று சொன்னபோது, அவர் அவற்றிடம் இதனை யாருக்கும் வெளிப்படுத்தவேண்டாம் என்று மிகக் கண்டிப்பாகக் கூறுகின்றார். இயேசு தீய ஆவிகளிடம் அப்படிச் சொன்னதில் ஒருசில ஆழமான உண்மைகள் இருக்கின்றன. ஒன்று இயேசு, இறைவனுக்கு மட்டுமே புகழ் சேரவேண்டும் என்ற கொள்கையில் மிக உறுதியாக இருந்தார். இரண்டு, தீய ஆவிகள் தன்னை இறைமகன் என்று சொல்வதோடு மட்டுமல்லாமல், அதனை எல்லாருக்கும் வெளிப்படுத்தினது என்றால், மக்கள் அவரைப் பிடித்து அரசராக்கக்கூடிய நிலை ஏற்படும் என்பதால் இயேசு அதனிடம் அப்படிச் சொல்கின்றார். ஆகவே, இவையெல்லாவற்றையும் வைத்து நாம் பார்க்கின்றபோது அடிப்படையில் இயேசு புகழினை விரும்பாதவராகவே இருந்தார் என்பது நாம் புரிந்துகொள்ளவேண்டிய செய்தியாக இருக்கின்றது.

இயேசுவின் வழியில் நடக்கக்கூடிய நாம் வீண் பேரையும் புகழையும் விரும்புகின்றவர்களாக இருக்கின்றோமா? அல்லது இறைவன் ஒருவருக்கு மட்டுமே எல்லா புகழும் மகிமையும் கிடைக்கவேண்டும் என்ற மனநிலையில் இருக்கின்றோமா? என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். வெ. இறையன்பு என்ற எழுத்தாளர் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், "புகழ் என்பது போதை போன்றது. சிறுது நேரத்திற்கு அது மகிழ்ச்சியைத் தந்தாலும், பின்னாளில் அதுவே அழிவுக்குக் காரணமாக அமைந்துவிடும்" என்று. ஆம், சிறுது நேரமே நிலைத்து நிற்கக்கூடிய புகழுக்கு நாம் அலைந்து திரியாமல், "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்ற மனநிலையில் வாழவேண்டும். அப்படி நாம் தாழ்ச்சியோடு வாழ்கின்றபோது இறைவனால் ஆதிர்வதிக்கப்படுவோம் என்பது உறுதி.

ஆகவே, வீண் பெருமையையும் புகழையும் நாடாமல், இறைவன் ஒருவருக்கே புகழ் சேர உழைப்போம், இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
தம்மை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாத இயேசு

பெரிய பணக்காரர் ஒருவர் சேரியில் வாழும் மக்களுக்கு பால்பவுடரும், துணிமணிகளும் கொடுக்கப்போகவதாக அறிவித்தார். இதைக் கேட்டு அங்கு வாழ்ந்த மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

குறிப்பிட்ட அந்த நாளும் வந்தது. மக்கள் அனைவரும் பணக்காரர் தர இருந்த உதவியை வாங்குவதற்காக வரிசையில் காத்துக்கொண்டிருந்தார்கள். பணக்காரரும் பொருட்கள் எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு தயாராக இருந்தார். ஆனால் அவர் யாரோ ஒருவருக்காகக் காத்துக்கொண்டிருப்பதுபோல் தெரிந்தது. ஐந்து நிமிடம் ஆனது, பத்து நிமிடமானது, அரைமணி நேரம், ஒருமணி நேரம் என்று நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. ஆனால் அவர் எதிர்பாத்துக்கொண்டிருந்த மனிதர் மட்டும் வருவதாக இல்லை.

மக்கள் அனைவரும் யாருக்காக இவர் இப்படிக் காத்துக்கொண்டிருக்கிறார் என்று தெரிய ஆவலாக இருந்தார்கள். அந்நேரத்தில் ஒரு புகைப்படக்காரர் அங்கு வந்தார். அவர் வந்ததுதான் தாமதம் பணக்காரர் தனது உதவியைக் கொடுக்கத் தொடங்கினார். அப்போதுதான் தெரிந்தது "வள்ளல் பெருமகனார்" எதற்காக உதவிகளை சேரியில் வாழும் மக்களுக்குக் கொடுக்கிறார் என்று.

ஒரு சாதாரண குண்டூசி தந்தால்கூட அதையும் விளம்பரப்படுத்தும் போக்கிற்கு மேலே சொல்லப்பட்ட நிகழ்வு ஒரு சாட்டையடி.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பல்வேறு அரும் அடையாளங்களைச் செய்கிறார். குறிப்பாக நோயாளிகளைக் குணப்படுத்துகிறார், பேய்களை ஓட்டுகிறார். ஆனால் இவற்றையெல்லாம் செய்துமுடித்த பின்பு "தம்மை யாருக்கும் வெளிப்படுத்த வேண்டாம்" என்று மிகக் கண்டிப்பாகக் கூறுகிறார் (மாற்கு 3:12). இந்தப் பகுதியில் மட்டுமல்லாது, நற்செய்தியில் வரக்கூடிய பெரும்பாலான நிகழ்வுகளில் இயேசு தம்மை யாருக்கும் வெளிப்படுத்தவும்/யாரிடமும் சொல்லவேண்டாம் என்றுதான் கண்டிப்பாகக் கூறுகிறார். உண்மையில் நடந்தது வேறு.

எதற்காக இயேசு இப்படிச் செய்கிறார் என்று சிந்தித்துப் பார்க்கும்போது அவருடைய வார்த்தைகளே அதற்குப் பதிலாக இருக்கின்றது. மத் 6:3-4 ல் வாசிக்கின்றோம், "நீங்கள் தர்மம் செய்யும்போது உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்" என்று. ஆக இயேசு எந்த ஒரு காரியத்தையும் விளம்பரத்திற்காகவோ, அல்லது தன்னுடைய பெயர் விளங்கவோ செய்யவில்லை. மாறாக தந்தையின் பெயர் விளங்கவே செய்தார்.

இன்று நாம் செய்யும் அறச்செயல்களை எப்படிப்பட்ட மனநிலையோடு செய்கிறோம் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். சமீபத்தில் ஏற்பட்ட சென்னை மற்றும் கடலூர் வெள்ளப் பெருக்கின்போது ஏராளமான மக்கள் தாராளமான உதவிகளைச் செய்தார்கள். ஆனால் வேடிக்கை என்னவென்றால் நம்மை ஆளக்கூடிய அரசாங்கமோ பல்வேறு தரப்பினர் செய்த உதவிகளைத் தாங்கள் செய்ததுபோன்று sticker ஒட்டி ஆதாயம் தேடப்பார்த்தார்கள். இது மிகவும் கவலையளிக்கக் கூடிய விஷயம்.

"பலனை எதிர்பார்த்து செய்யப்படும் எந்த ஓர் உதவியும் பயனுள்ள உதவியாகாது" என்பர் பெரியர். ஆதலால் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வாழ்வென்னும் கொடையில் பிறருக்கு நம்மாலான உதவிகளை எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும், விளம்பரமும் இல்லாமல் செய்வோம். அப்போது இறைவன் நமக்கு அருளையும், ஆசிரையும் தந்து வழிநடத்துவார்.

"நாம் அடுத்தவருக்கு எதைத் தருகிறோமோ அது நமக்குத் திரும்பி வந்து சேர்க்கிறது. பன்மடங்காக வருகிறது. வரமாகவும் வரலாம், சாபமாகவும் வரலாம். நாம் எதைத் தருகிறோம் - எப்படித் தருகிறோம் - என்பதைப் பொறுத்தது அது. - வெ. இறையன்பு.

- Fr. Maria Antony, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
அவரைத் தொடவேண்டுமென்று .. .. ..

இயேசுவின் அன்புக்குரியவரே!

தாய் தன் குழந்தையைத் தொட்டு அணைக்கும்போது புனிதமான அன்பை பகிர்ந்தளிக்கிறாள். பாதுகாப்பைப் பரிமாறிக்கொள்கிறாள். அந்த அன்பு குழந்தைக்குத் தெம்பு கொடுக்கிறது.அது மருந்தாகிறது, உணவாகிறது. புனிதமான, கலப்படமற்ற தொடுஉணர்வு, குழந்தைக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இதேபோல உடலுக்கும் உள்ளத்துக்கும் உணவாகிறது, மருந்தாகிறது.

நோயுற்றோர் அனைவரும் இயேசுவைத் தொடவேண்டுமென்று இயேசுவின்மீது விழுந்துகொண்டிருந்த இந்த நற்செய்தி காட்சியிலும் இதே உணர்வு வெளிப்படுவதைக் காண்கிறோம்.பெருங்கூட்டம் இயேசுவின் மேல் விழுந்து அவரைத் தொட்டது. தொட்ட யாவரும் எல்லாவித நோயிலிருந்தும் குணமடைந்தனர். இயேசுவைத் தொட்ட யாவரும் குணமடைந்தனர். "அப்பெண் இயேசுவுக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்" (லூக் 8 :44) இயேசு தொட்ட அனைவரும் குணமடைந்தனர். "இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று"(மத்8 :15) "அவரைத் தொட்டு, "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" (மத் 8 :3)" கண்களைத் தொட்டு, "நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்"(மத் 9 :29)அவர்களைத் தொட்டு," எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்"(மத் 17 :7, மத் 20 :34) நாம் அவரைத் தொட்டாலும் அவர்நம்மைத் தொட்டாலும் நாம் அதன் பலனைப் பெறுகிறோம்.

கைகளால் இயேசுவைத் தொடும்போதும், செபத்தில் இதயத்தில் இயேசுவைத் தொடும்போதும், நற்கருணை வாங்கும்போது இயேசுவைத் தொடும்போதும் இயேசுவின் தெய்வீக ஆற்றல் இங்கு பரிமாறப்படுகிறது. அது உணவாகிறது, மருந்தாகிறது. நாம் நலமடைகிறோம்,வலுவடைகிறோம்.

இயேசுவைத் தொடுவோம். இயேசு நம்மைத் தொடும் நிலையில் வைத்துக்கொள்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்;.

:- ஜோசப் லியோன்

____________

இயேசுவின் நற்செய்திப்பணி

இயேசுவின் நற்செய்தி அறிவிப்பு பணி உண்மையிலே நற்செய்தியை அறிவிக்கிற மக்களுக்கெல்லாம், சிறந்த உதாரணமாக திகழக்கூடிய பணி. இயேசு மக்கள் நடுவில் போதிக்கிறார். மக்கள் அவரது போதனையின் மகிமையில் கட்டுண்டு, உணவே வேண்டாம் என்ற அளவுக்குக்கூட அவர் பின்னால் செல்கிறார்கள். அவருக்கு அதிகாரவர்க்கத்தினரிடமிருந்து எதிர்ப்பு வருகிறது. இயேசு அவர்களை எதிர்க்கவில்லை. மாறாக, தனது பாணியை, இடத்தை மாற்றுகிறார். தேவைக்கு ஏற்றவாறு, நேரத்திற்கு ஏற்றவாறு தனது இலக்கை அடைவதில் புதிய, புதிய திட்டங்களை அவர் தீட்டுகிறார்.

இயேசுவின் பெயரைக் கேள்விப்பட்டு, ஏராளமான மக்கள் பிறநாடுகளிலிருந்து அவரைத்தேடி வருகிறார்கள். அவர்களுடைய முதன்மையான நோக்கம் தேவையை நிறைவேற்றிக்கொள்வதாக இருக்கிறது. அவர்கள் உடல் சுகவீனத்தோடு இருக்கிறார்கள். எப்படியாவது நல்ல உடல் சுகத்தைப் பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். இயேசுவைப் பார்த்தவுடன் அவர்கள் இயேசுவைத் தொட முண்டியடித்துச் செல்கிறார்கள். இயேசு அவர்களை சபிக்கவில்லை. அவர்களின் நிலையை உணர்கிறார். அவர்களைப் புரிந்து கொள்கிறார். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும், உடல் சுகத்தோடு வாழ்வதிலும் அக்கறை கொள்கிறார்.

நற்செய்திப் பணி ஆற்றுகிறபோது, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் நாம் அதிக அக்கறை எடுக்க வேண்டும். பல வேளைகளில் நாம் தியாக உள்ளத்தோடு பணியாற்றுகிறபோது, மக்களின் நடவடிக்கைகள், அவர்களின் சுயநலம் நமக்கு கோபத்தையும் அவர்கள் மீது வெறுப்பையும் கொண்டுவரலாம். ஆனால், அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, தேவைக்கேற்ப, சரியான திட்டமிடலோடு நமது பணியைச் செய்ய வேண்டும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

கடவுளின் அருகாமையில் இருக்க...

தீய ஆவிகள் இயேசுவைக்கண்டதும், "இறைமகன் நீரே" என்று கத்தியதாக நற்செய்தி கூறுகிறது. "இறைமகன்" என்ற வார்த்தையின் பொருளை இங்கு நாம் பார்ப்போம். இறைமகன் என்கிற வார்த்தை, மத்திய கிழக்கு பகுதிகளில் வாழ்ந்த மக்களால், அடிக்கடி பயன்படுத்தப்பட்ட வார்த்தை. எகிப்து தேசத்தின் அரசர்கள் "இறைமகன்" என்று அழைக்கப்பட்டனர். அகுஸ்துஸ் சீசர் முதல் ஒவ்வொரு உரோமை அரசர்களும் "இறைமகன்" என்று அழைக்கப்பட்டனர்.

பழைய ஏற்பாட்டில் நான்கு வழிகளில் இந்த வார்த்தை பயன்படுகிறது. 1. வானதூதர்கள் கடவுளின் மகன்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். தொடக்க நூல் 6: 2 ல் "மனிதரின் புதல்வியர் அழகாக இருப்பதைத் தெய்வப்புதல்வர் கண்டு.... " என்று பார்க்கிறோம். 2. இஸ்ரயேல் நாடு கடவுளின் மகனாகக் கருதப்படுகிறது. ஓசேயா 11: 1 "எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்". இங்கே இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்ததும், அவர்களைக் கடவுள் அழைத்து வந்ததும் தெரியப்படுத்தப்படுகிறது. 3. ஒரு நாட்டின் அரசர், கடவுளின் மகனாக பார்க்கப்படுகிறார். 2சாமுவேல் 7: 14 "நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான்". 4. நல்ல மனிதர்கள் கடவுளின் பிள்ளையாக இருக்கிறார்கள். சீராக் 4: 10 "கைவிடப்பட்டோருக்குத் தந்தையாய் இரு. அப்போது நீ உன்னத இறைவனின் பிள்ளைபோல் இருப்பாய்". ஆக, யாரெல்லாம் கடவுளோடு நெருங்கிய தொடர்பில், கடவுளுக்கு அருகாமையில் இருக்கிறார்களோ, அவர்கள் கடவுளின் பிள்ளைகள்.

திருமுழுக்கு பெற்றுள்ள நாம் அனைவருமே கடவுளுக்குச் சொந்தமானவர்கள். நாம் அனைவரும் கடவுளுக்கு அருகாமையில் இருப்பதற்கு, நெருங்கிய உறவோடு வாழ்வதற்கு அழைக்கப்படுகிறோம். நாம் கடவுளுக்கு அருகாமையில் இருக்கிறோமா? கடவுளோடு நெருங்கிய தொடர்பில் இருக்கிறோமா? சிந்தித்து செயல்படுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இயேசுவே மெசியா!

தீய ஆவிகள் இயேசு முன்னால் வந்து, "இறைமகன் நீரே" என்று கத்தியபோது, இயேசு தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவற்றிடம் மிகக்கண்டிப்பாய்ச்சொன்னதாக நற்செய்தி கூறுகிறது. எதற்காக இயேசு தன்னுடைய அடையாளத்தை மறைக்க வேண்டும்? அவர் கடவுளின் மகன் என்று தெரிவதால் இன்னும் அதிகம் பேர் அவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு ஏதுவாகத்தானே இருக்கும். பின் ஏன் இயேசு அதை விரும்பவில்லை? தான் மெசியா, கடவுளின் மகன் என்று மறைப்பதால் அவருக்கு என்ன இலாபம்?

இந்தக்கேள்விகள் இந்தப்பகுதியை வாசிக்கும்போது நமக்குள்ளாக எழுகின்ற கேள்விகள். இயேசுவின் காலத்திலே மக்கள் உரோமையர்களுக்கு அடிமைகளாக இருக்கின்றனர். தங்களை மீட்க கடவுள் மெசியாவை அனுப்புவார், அவர் வந்து நம்மை அடிமைத்தளையிலிருந்து மீட்பார் என்ற நம்பிக்கை மக்களிடையே அதிகமாக இருந்தது. மெசியாவைப்பற்றிய அவர்களின் புரிதலும் "வலிமையுள்ள அரசர்" என்ற பார்வையாக இருந்தது. இயேசுதான் மெசியா என்ற செய்தி பரவினால், அவர் பின்னால் அணிவகுத்து நிற்க, போரிட மக்கள் தயாராக இருந்திருப்பார்கள். இது தேவையில்லாத பிரச்சனைகளை, குழப்பங்களை நாட்டிலே உருவாக்கும். இயேசு மெசியா தான். ஆனால், மக்கள் எதிர்பார்ப்பது போன்ற மெசியா அல்ல: அவர் அன்பின் மெசியா, மன்னிப்பு வழங்கும் மெசியா, இரக்கத்தை வெளிப்படுத்தும் மெசியா. இப்படிப்பட்ட புரிதலை மக்களுக்குப் புரிய வைக்க இன்னும் காலம் தேவை என்பதை இயேசு உணாந்திருக்க வேண்டும். தன்னால் தேவையில்லாத குழப்பங்கள் உருவாவதை இயேசு விரும்பவில்லை. எனவேதான், மக்களுக்கு மெசியாவைப்பற்றிய சரியான பார்வையை கற்றுக்கொடுக்கும் வரை, தன்னை வெளிப்படுத்த வேண்டாமென இயேசு கட்டளையிடுகிறார்.

இயேசு புகழுக்காக வாழவில்லை, மக்கள் போற்ற வேண்டும் என விரும்பவில்லை. மாறாக, கடவுளின் அன்பு மக்களுக்கு சென்றடைய வேண்டும் என விரும்பினார். நாமும் நம் வாழ்வின் மூலம் கடவுளின் அன்பை மற்றவர்கள் உணரச்செய்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு...

இயேசு வல்ல செயல்கள் பல ஆற்றியதால் மக்களிடையே பிரபலம் அடைந்தார். எனவே, "கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர்" என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். "மேலும் யூதேயா, எருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப் பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம் வந்தனர்" என்றும் சொல்கிறார் நற்செய்தியாளர் புனித மாற்கு. அடுத்த வரியில் அவர் சொல்லும் தகவலையே நமது இன்றைய சிந்தனைக்காக நாம் எடுத்துக்கொள்வோம்.

"மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தமக்காகப் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு அவர் சீடருக்குச் சொன்னார்". இங்கே இயேசு தமது உடல் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படவில்லை, ஆனால், இதன்வழியாக ஒரு படிப்பினையை நமக்குத் தருகின்றார். மக்கள் பெருந்திரளாகக் கூடும்போது, உடல் நெருக்கத்தைவிட, மன நெருக்கம், மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது. குறிப்பாக, அவர்கள் "தம்மைப் பிடித்துக்கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்" (யோவா 6:15) என்று யோவான் நற்செய்தியில் வாசிக்கிறோம். இத்தகைய ஒரு நெருக்குதலைத் தவிர்க்கவே இயேசு முன்னேற்பாடு செய்கின்றார்.

புகழும், பாராட்டும் நம்மை நெருக்கிவிடாதவாறு, நாம் விழிப்பாயிருக்க வேண்டும் என்று கற்றுத் தருகிறார் மாற்கு நற்செய்தியாளர்.

மன்றாடுவோம்: ஆண்டவராகிய இயேசுவே, மக்கள் கூட்டம் உம்மை நெருக்கிவிடாதவாறு காத்துக்கொண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். புகழ்ச்சியும், பாராட்டும் எங்களை நெருக்கி, உம்மிடமிருந்து எங்களைப் பிரித்துவிடாதவாறு எங்களைக் காத்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

ணையதள உறவுகளே

இயேசுவுக்குப் பின்னால் ஒரு பெரிய கூட்டம். குணமானவர்கள் ஒரு கூட்டம். குணம் பெற வேண்டும் என்ற ஆசையில் ஒரு கூட்டம். வியப்பில் ஒரு கூட்டம். வில்லங்கத்திற்கென்றே ஒரு கூட்டம். அர்ப்பணிப்போடு ஒரு கூட்டம். விசித்திர ஆசையோடு ஒரு கூட்டம். இவ்வளவு ஒரு பெரிய கூட்டம் அவரை மணிக்கணக்காக, நாட்களாக, சோறு தண்ணி இல்லாமல் பின்தொடர்ந்து வந்துள்ளது. ஆனால் இந்த இயேசுவோ, யாரும் தன்னைப் பெரிய தலைவனாகவோ அரசனாகவோ கற்பனையில் கூட நினைத்து விடக் கூடாது என்பதற்காக, படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்கச் சொல்லி,பகட்டான பதவி வாழ்வுக்கான சந்தர்ப்பங்களைத் தவிர்க்கிறார்.
இன்றைக்கு, சொந்தக்காரன் சொக்காரனசு;, ஊர்க்காரன் சாதிக்காரன் என்று பத்துபேரை வைத்துக்கொண்டு பதவிக்காக வருகிற வரத்து, சொல்லி மாளாது. காசு கொடுத்தாகிலும் கூட்டத்தைக் கூட்டி, அதைக் கும்பலாக்கி எப்படியாவது நாற்காலியில் உட்கார்ந்துவிட வேண்டும் என்று அரசியல்வாதியும் ஆன்மீகவாதிகளும் அலைகின்ற அலைச்சல், சொல்லவே வேண்டாம். இந்த மாதிரி தலைவர்கள் என்ன சாதிப்பார்கள்?

கூட்டத்தாலும் கும்பலாலும் உருவான தலைவர்கள் வேண்டாம். தெளிவான சிந்தனையும் தீர்க்கமான முடிவும் திடமான செயல்பாடும் உள்ள தலைவர்கள் ஆயர்கள் உருவாக வேண்டும்.

-ஜோசப் லீயோன்

-----------------------


கூட்டம் நெருக்கிவிடாதபடி !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசுவின் மனநிலையைப் படம் பிடித்துக்காட்டும் ஒரு சிறிய வசனத்தை இன்று தியானிப்போம். பெருந்திரளான மக்கள் இயேசுவைத் தேடிவந்தபோது, மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தமக்காகப் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு இயேசு தம் சீடருக்குச் சொன்னார் என்று வாசிக்கிறோம்.

இயேசு சென்ற இடமெல்லாம் நன்மைகள் செய்தார். நோயாளர்களைக் குணமாக்கினார். பிணிகளைப் போக்கினார். இந்தச் செய்தியெல்லாம் பரவியபோது, இயல்பாகவே ஏராளமான மக்கள் இயேசுவைத் தேடிவந்தனர். ஆனால், இயேசு இதையெல்லாம் அறிந்திருந்தார் எனவேதான், முன்னேற்பாடாக படகு ஒன்றை வைத்திருக்கச் சொன்னார். இயேசுவிடம் ஞானமும், இறைப் பற்றும் இருந்தன, எனவே, மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தடுத்துக்கொண்டார். மக்களின் புகழ்ச்சியும், வணக்கமும் தம்மைத் தாக்கிவிடாதவாறு தற்காத்துக்கொண்டார். அத்தகைய ஆன்மீக விழிப்புணர்வை நாமும் பெற மன்றாடுவோம்.

மன்றாடுவோம்: தாயும் தந்தையுமான இறைவா, எங்களுக்கு ஞானத்தைத் தந்தருளும். மக்களின் பாராட்டும், புகழ்ச்சியும் எங்களை ஏமாற்றிவிடாதவாறும், உம்மை விட்டு எங்களைப் பிரிக்கமுடியாதவாறும் எங்களைக் காத்துக்கொள்ளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்

--: அருள்தந்தை குமார்ராஜா

-----------------------------""பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும் அவரைத்
தொடவேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்துகொண்டிருந்தனர்"" (மாற்கு 3:10)

இயேசுவின் அன்புக்குரியவரே!

-- நோயுற்ற மக்களுக்கு இயேசு குணமளித்ததை மாற்கு நற்செய்தி விரிவாக எடுத்துரைக்கிறது. இயேசுவின் பணியில் மிக முக்கியமான கூறு அவர் மக்களுக்கு நலமளித்ததே என உறுதியாகக் கூறலாம். அவரைத் தேடி நலம் பெற வந்த மனிதர் தம்மில் குறையிருப்பதை உணர்ந்தனர். எனவே, தங்களுடைய குறையை நீக்கி நிறைவளிக்க வல்லவர் இயேசு என அவர்கள் நம்பினார்கள். அவர்களுடைய நம்பிக்கை வீண்போகவில்லை. நம்மில் குறையிருப்பதை நாம் கண்டுகொள்ளத் தவறினால் அக்குறையிலிருந்து விடுபடுவதற்கான எண்ணமே நம்மில் எழாது. ஆனால் இயேசுவைத் தேடி வந்த மக்கள் இயேசுவின் வல்லமையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். இயேசுவை அணுகிச் சென்று, அவரை நேரடியாகச் சந்தித்து அவரோடு உரையாட வேண்டும் என்னும் ஆவல் பலரிடம் இருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்புக்கள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும், எப்படியாவது இயேசுவைத் தொட்டுவிட்டால் போதும் தங்களுக்கு நலம் கிடைக்கும் என மக்கள் நினைத்தனர்.

-- இவ்வாறு இயேசுவைத் தொட்டதும் தங்களுக்கு நலம் கிடைக்கும் என மக்கள் நம்பியது முழு நம்பிக்கையின் வெளிப்பாடு எனக் கூறுவதற்கில்லை. எனினும் நம்பிக்கையின் தொடக்கம் அங்கே உள்ளது எனலாம். நம்பிக்கை என்பது உள்ளத்தில் உறுதியான பிடிப்புக் கொண்டு, கடவுளைப் பற்றிக்கொள்வதில் அடங்கும். இத்தகைய பற்றுறுதி மக்களிடம் இருந்ததால் அவர்களுக்குக் கடவுள் இயேசு வழியாக நலம் அளித்தார். ஆனால் இயேசு வழங்கிய நலன் உடலைச் சார்ந்தது மட்டுமல்ல, உள நலமும் ஆன்ம நலமும் இயேசு நமக்குக் கொடையாக அளிப்பதே. இயேசுவைத் தொடவும் அவரால் தொடப்படவும் வேண்டும் என்றால் நாமும் அவரை அணுகிச் செல்ல வேண்டும். அப்போது நாம் கடவுளின் வல்லமையை நம் வாழ்வில் உணர்ந்தறிவோம்.

மன்றாட்டு
இறைவா, எங்களைத் தொட்டு நலமாக்கியருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
நற்செய்தி (மாற்கு 3:7-12)

அவர்மீது விழுந்துகொண்டிருந்தனர்

நாளைய நற்செய்தி வாசகத்தில் வரும் ஒரு வரி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது: "நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொடவேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்து கொண்டிருந்தனர்"

இந்த வரியை கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தால் இன்னும் ஆச்சர்யம் மேலோங்குகிறது.

இந்தப் பக்கம் கடல். அந்தப் பக்கம் மக்கள் கூட்டம். நடுவில் இயேசு.

கூட்டத்தில் நீங்கள் நெரிசல் பட்டதுண்டா? கூட்டநெரிசல் எல்லாம் நம்மை அறியாமல் நிகழும் நெரிசல்கள். மேலும், நெரிப்பவர்கள் நம்மை வேண்டுமென்றே அவ்வாறு செய்வதில்லை. ஆனால், இயேசு அனுபவிக்கும் நெரிசல் சற்று வித்தியாசமானது. அவரையே மையமாக வைத்து அவர்மேல் வந்து விழுகிறார்கள் மக்கள்.

நிற்க.

கடந்த வாரம் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்வு நடந்ததாக என் நண்பர் பகிர்ந்து கொண்டார்.

கணவன், மனைவி, மகள். இவர்கள்தாம் போட்டியாளர்கள். போட்டி என்னவென்றால், கணவன் மற்றும் மகளை ஒரு அறையில் வைத்துவிட்டு மனைவியை மற்ற நான்கு பெண்களோடு இன்னொரு அறையில் வைப்பர். அவர்களின் கைகள் மட்டும் வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும். இந்தப் பக்கம் உள்ள கணவன் மற்றும் மகளின் கண்களைக் கட்டிவிடுவர். இந்தக் கணவர் அந்த நான்கு கைகளையும் பிடித்துப் பார்த்து தன் மனைவியின் கை எது என்பதை சரியாகச் சொல்ல வேண்டும். அதே போல மகளும் தன் அம்மாவின் கை எது எனச் சொல்ல வேண்டும். நிகழ்ச்சியின் இறுதியில் என்ன வியப்பு என்றால், கணவனால் தன் மனைவி யாரென்று சரியாகச் சொல்லவில்லை. (அவருக்கு வீட்டில் அன்றிரவு என்ன நேர்ந்ததோ அது நமக்குத் தெரியாது!) ஆனால் குழந்தை சரியாகச் சொல்லிவிட்டது.

"நீ எப்படி பாப்பா சரியாகச் சொன்னாய்?" என்று கேட்டதற்கு அந்த மகள், "அது எங்க அம்மா கை. அவ்வளவுதான்" என்றது சற்று புன்னகையோடு.

இதுதான் உணர்வு.

நம் உடலின் மிகப்பெரிய உறுப்பு தோல். இந்த தோல் வழியாகவே நாம் உணர்கிறோம். நம்மை உணர்த்துகிறோம்.

இயேசு பலரை குணமாக்கியதால் அவரைத் தொட்டு அவரின் உணர்வைத் தங்கள் உணர்வாக்கக் துடிக்கின்றனர் மக்கள். நம் அனைவரிடமும் இந்த தொடுவுணர்வு, குணமாக்கும் உணர்வு இருக்கின்றது. நம் நெருங்கிய வட்டத்திற்குள் நம்மால் ஒருவர் மற்றவரின் வாழ்வைத் தொட்டு மாற்ற முடிகிறதென்றால் அது எல்லாரையும் நோக்கியிருப்பதும் சாத்தியம்தானே!

இயேசுவைத் தொட வேண்டுமென்று அவர்மேல் விழுந்துகொண்டிருந்த கூட்டத்தினர் ஒருவரைப் போல இயேசுவுக்கான என் தேடல் இருக்கிறதா?

நான் இன்று நலம் பெற வேண்டுமா?

இந்த நலம் பெறுதலுக்காக நான் அவரை நெரித்துக்கொண்டு தேடத் தயாரா?

அல்லது விலகி நின்று வேடிக்கை பார்ப்பதே போதும்! என நினைக்கிறேனா?

Fr. Yesu Karunanidhi
Thanjavur
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 5
=================================================================================
உடனே தூய ஆவியால் இயேசு பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்'' (மாற்கு 1:12-13)

பாலைநிலம் என்பது சோதனை ஏற்படுகின்ற இடம் என்றும், கடவுளைச் சந்தித்து அனுபவம் பெறுகின்ற இடம் என்றும் இரு பொருள் கொண்ட உருவகமாக விவிலியத்தில் வருகிறது. இயேசு திருமுழுக்குப் பெற்றதும் தூய ஆவியால் பாலைநிலத்துக்கு இட்டுச்செல்லப்படுகிறார். ஒருவிதத்தில் தூய ஆவி இயேசுவை அங்கே ஈர்த்து இழுக்கின்றார். இயேசு சோதிக்கப்பட்ட நிகழ்ச்சியை மாற்கு சுருக்கமாகவும், மத்தேயு மற்றும் லூக்கா விரிவாகவும் பதிவுசெய்துள்ளனர் (காண்க: மாற் 1:12-13; மத் 4:1-11; லூக் 4:1-13). தம்மைச் சக்திவாய்ந்த மந்திரவாதியாக எண்ணும்படி (கல்லை அப்பமாக்கும் சோதனை) இயேசுவுக்கு சோதனை வருகிறது. தம் உயிருக்கு ஆபத்துவரும் என்றாலும் கடவுள் தம் வல்லமையைக் காட்டட்டுமே என்னும் மூடத் துணிச்சல் கொள்ள அவருக்கு சோதனை வருகிறது (கோவில் உச்சியிலிருந்து கீழே குதிக்கும் சோதனை). உலக செல்வங்களை நல்வழியிலோ தீயவழியிலோ பெற்றிடலாம் என்னும் சோதனை வருகிறது (அலகையை வணங்குவதற்கான சோதனை). இயேசு ஒருவிதத்தில் கடவுளால் சோதிக்கப்படுகிறார் எனலாம். ஆனால் சோதனையின்போது கடவுளின் உடனிருப்பை இயேசு ஒருகணமேனும் மறக்கவில்லை. 

இயேசுவின் சோதனைக் காலம் உண்மையிலேயே இறையனுபவக் காலமாக மாறிற்று. நமக்கும் பாலைநிலச் சோதனைகள் வருவதுண்டு. கடவுள் நம்மைவிட்டு அகன்றதுபோன்ற நிலை ஏற்படுவதுண்டு. அவ்வேளையில் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்னும் உள்ளுணர்வு நம்மைவிட்டு அகன்றுவிடலாகாது. சிலவேளைகளில் நாம் தேடிச் செல்கின்ற பாலைநிலம் கடவுளின் உடனிருப்பை நாம் வேண்டும் என்றே ஒதுக்குகின்ற முயற்சியாக இருக்கக் கூடும். அந்த அனுபவம் நம்மைக் கடவுளிடமிருந்து பிரிக்குமே தவிர கடவுளனுபவம் பெற நமக்குத் துணையாகாது. ஆக, உண்மையான பாலைநில அனுபவம் என்பது சோதனை வேளையிலும், துன்பவேளையிலும் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்னும் ஆழ்ந்த உணர்வை நாம் பெறுவதில் அடங்கும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.


மனம் மாற்றமும், நற்செய்தியை நம்புதலும் !

இன்றைய நற்செய்தி வாசகத்தில் "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்தவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்னும் இயேசுவின் அழைப்பைக் கேட்கிறோம்.

இது இயேசுவின் பொதுவான அழைப்பாக இருந்தாலும், இத்தவக்காலத்திற்கான சிறப்பான அழைப்பு. மனம் மாறுவது நற்செய்தியை நம்புவது என்னும் செய்தியில் நமது கவனத்தைச் செலுத்துவோம். இயேசுவின் அழைப்பு இரண்டு அம்சங்களைக் கொண்டிருக்கிறது:

1. மனம் மாறவேண்டும்.

2. நற்செய்தியை நம்பவேண்டும்.

நமது பாவச் செயல்கள், தீய மனநிலைகள், இறைவனுக்கெதிரான வாழ்வு இவற்றை விட்டுவிடுவது என்பது அழைப்பின் முதல் கட்டம். இது கடினமானது. ஆனால், அழைப்பின் இரண்டாம் கட்டம் நற்செய்தியை நம்புவது. அதாவது, தீய செயல்களை விட்டுவிடுவது மட்டும் போதாது. இயேசுவின் நற்செய்தியை நம்பவேண்டும். அதாவது, இறைவனைத் தந்தையாக ஏற்றுக்கொண்டு. அவரை அன்பு செய்து, அவருக்காகவே வாழவேண்டும். இதுவே நற்செய்தி வாழ்வு. இதுவே நற்செய்தியை நம்புவது.

இத்தவக்காலத்தில் தீய செயல்களை விட்டுவிடுவோம். இறைவன்மீது நமக்குள்ள நம்பிக்கையை ஆழப்படுத்தி, அவரிடம் நெருங்கி வருவோம்.

மன்றாடுவோம்: மனமாற்றத்திற்கான அழைப்பு விடுக்கும் இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது அழைப்பை ஏற்று, மனம் மாறவும், நற்செய்தியை நம்பி, உம்மிடம் நெருங்கி வரவும் அருள்தருவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!