Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       17  ஐனவரி 2018  
                                          பொதுக்காலத்தின் 2ஆம்  வாரம்  
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================

தாவீது கவணும் கல்லும் கொண்டு, பெலிஸ்தியனை வீழ்த்தினார்.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 32-33, 37, 40-50

அந்நாள்களில் தாவீது சவுலை நோக்கி, "இவன் பொருட்டு யாருடைய இதயமும் கலங்க வேண்டியதில்லை; உம் அடியானாகிய நானே சென்று அந்தப் பெலிஸ்தியனோடு போரிடுவேன்" என்றார்.

அதற்குச் சவுல் தாவீதிடம், "இந்தப் பெலிஸ்தியனை எதிர்த்துப் போரிட உன்னால் இயலாது; நீயோ இளைஞன், ஆனால் அவனோ தன் இள வயதுமுதல் போரில் பயிற்சியுள்ளவன்" என்றார்.

மேலும் தாவீது, "என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த ஆண்டவர் இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார்" என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம், "சென்றுவா! ஆண்டவர் உன்னோடு இருப்பார்" என்றார்.

தாவீது தம் கோலைக் கையில் எடுத்துக் கொண்டார்; நீரோடையிலிருந்து வழுவழுப்பான ஐந்து கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்து இடையனுக்குரிய தம் பையில் போட்டுக் கொண்டார்; தம் கவணைக் கையில் பிடித்துக் கொண்டு பெலிஸ்தியனை நோக்கிச் சென்றார். தன் கேடயம் ஏந்துபவன் முன் செல்ல, அந்தப் பெலிஸ்தியனும் தாவீதை நோக்கி நடந்து அவரை நெருங்கினான். பெலிஸ்தியன் தாவீதைக் கூர்ந்து பார்த்து ஏளனம் செய்தான்; ஏனெனில் அவன் சிவந்த மேனியும் அழகிய தோற்றமும் உடைய இளைஞனாய் இருந்தான்.

அப்பெலிஸ்தியன் தாவீதைப் பார்த்து, "நீ கோலுடன் என்னிடம் வர, நான் என்ன நாயா?" என்று சொல்லித் தன் தெய்வங்களின் பெயரால் தாவீதைச் சபிக்கத் தொடங்கினான்.

மீண்டும் பெலிஸ்தியன் தாவீதை நோக்கி, "அருகே வா! வானத்துப் பறவைகளுக்கும் வனத்து விலங்குகளுக்கும் உன் உடலை இரையாக்குவேன்" என்றான்.

அப்பொழுது தாவீது பெலிஸ்தியனிடம், "நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய்; நானோ நீ இகழ்ந்த இஸ்ரயேலின் படைத்திரளின் கடவுளாகிய, படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன். இன்றே ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்புவிப்பார்; நான் உன்னை வீழ்த்தி உன் உடலைத் துண்டிப்பேன்; பெலிஸ்தியரின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் பூவுலக விலங்குகளுக்கும் கையளிப்பேன்; இஸ்ரயேலரிடையே கடவுள் இருக்கிறார் என்பதை உலகிலுள்ள எல்லாரும் இதனால் அறிந்துகொள்வர்.

மேலும், ஆண்டவர் வாளினாலும் ஈட்டியினாலும் மீட்கின்றவர் அல்லர் என்று இந்த மக்கள் கூட்டம் அறிந்து கொள்ளட்டும்; ஏனெனில் இது ஆண்டவரின் போர்! அவரே உங்களை எங்கள் கையில் ஒப்புவிப்பார்" என்றார்.

பெலிஸ்தியன் எழுந்து தாவீதை நோக்கிப் புறப்படுகையில், தாவீதும் அவனுடன் போரிட பெலிஸ்தியப் படைத்திரளை நோக்கி விரைந்து ஓடினார். தாவீது தம் பையில் கை வைத்து ஒரு கல்லை எடுத்தார்; அதைக் கவணில் வைத்துச் சுழற்றிப் பெலிஸ்தியனுடைய நெற்றியைக் குறி பார்த்து எறிந்தார். அந்தக் கல்லும் அவனது நெற்றிக்குள் தாக்கிப் பதியவே, அவன் தரையில் முகம் குப்புற விழுந்தான். இவ்வாறு தாவீது, கையில் வாளேதும் இன்றிக் கவணும் கல்லும் கொண்டு பெலிஸ்தியன்மீது வெற்றிகொண்டு, அவனை வீழ்த்திக் கொன்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
 
பதிலுரைப் பாடல்  தி:பா: 144: 1. 2. 9-10 (பல்லவி: 1a)
=================================================================================

பல்லவி: என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!

1 என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! போரிட என் கைகளுக்குப் பயிற்சி அளிப்பவர் அவரே! போர்புரிய என் விரல்களைப் பழக்குபவரும் அவரே! பல்லவி

2 என் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே! என் கேடயமும் புகலிடமும் அவரே! மக்களினத்தாரை எனக்குக் கீழ்ப்படுத்துபவர் அவரே! பல்லவி

9 இறைவா, நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்; பதின் நரம்பு வீணையால் உமக்குப் புகழ் பாடுவேன். 10 அரசர்களுக்கு வெற்றி அளிப்பவர் நீரே! உம் ஊழியர் தாவீதைக் கொடிய வாளினின்று தப்புவித்தவரும் நீரே! பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 4: 23b

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஓய்வு நாளில் எது செய்வது முறை? உயிரைக் காப்பதா, அழிப்பதா?

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-6

இயேசு மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர்.

இயேசு கை சூம்பியவரை நோக்கி, "எழுந்து, நடுவே நில்லும்" என்றார்.

பின்பு அவர்களிடம், "ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?" என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள்.

அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி, "கையை நீட்டும்" என்றார். அவர் நீட்டினார். அவருடைய கை மீண்டும் நலமடைந்தது.

உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
குறைகாணும் மனிதர்கள்

ஐரோப்பிய நாடுகளிலே ஹென்றி போர்டு பீக்கர் என்ற சமய சொற்பொழிவாளர் இருந்தார். அவருடைய பேச்சைக் கேட்க ஏராளமான மக்கள் கூடிவருவார்கள். அவருடைய சொற்பொழிவின் சிறப்பே புரிந்துகொள்ள மிகக் கடினமான கருத்தையும் நகைச்சுவை உணர்வோடு எளிமையாகச் சொல்வதுதான்.

ஒருநாள் அவர் மக்கள் கூட்டத்தைப் பார்த்து, "அன்பர்களே! நீங்கள் உங்களுடைய பிரச்சனைகளை ஒரு துண்டிச்சீட்டில் எழுதிப்போடுங்கள், நான் அதை வாசித்துவிட்டு, உங்களுடைய பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு தருகிறேன்" என்றார். மக்களும் தங்களுடைய பிரச்சனைகளை ஒரு துண்டிச்சீட்டில் எழுதி, அவரிடம் கொடுத்தனர். அவரும் அவர்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது கூட்டத்திலிருந்த ஹென்றி போர்டு பீக்கரைப் பிடிக்காத ஒருவன் துண்டுச் சீட்டில் "முட்டாள்" என்று எழுதி அனுப்பிவைத்தான். அதை வாசித்த பீக்கர் ஒரு நிமிடம் தடுமாறினாலும், சுதாரித்துக்கொண்டு சொன்னார், "அன்பு மக்களே, எல்லாரும் தங்களுடைய பிரச்சனைகளைத் தான் எழுதி அனுப்புவார்கள். ஆனால் இங்கே ஒருவர் "முட்டாள்" என்று தன்னுடைய பெயரையே அனுப்பி வைத்திருக்கிறார்" என்று. இதைக் கேட்க மக்கள் சத்தம்போட்டுச் சிரித்தார்கள்.

"எந்தச் செயல் புரிந்தாலும், அதில் எந்தளவுக்கு வெற்றி பெறுகிறோமோ அந்தளவுக்கு நீ விமர்சனத்துக்கு ஆளாகிறாய்" என்பார் ஜிக்ஜிக்லர் என்ற அறிஞர். ஆம், எந்தக் காரியத்தைச் செய்தாலும், அதை விமர்கிக்க, அதைப்பற்றி குறிசொல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதையே மேலே உள்ள நிகழ்வானது நமக்கு எடுத்துக் கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்திற்குச் செல்கிறார். அப்போது அங்கே இருந்த பரிசேயர்கள் ஓய்வுநாளில் இயேசு கைசூம்பிய மனிதரைக் குணப்படுத்துவாரா? என்று குற்றம் காணும் நோக்குடன் இருக்கிறார்கள். இயேசு அவர்களுடைய தீய எண்ணத்தை அறிந்தவராய், "ஓய்வுநாளில் நன்மை செய்வதா? தீமை செய்வதா? உயிரைக் காப்பதா? அழிப்பதா? எனக் கேட்டுவிட்டு, அம்மனிதரைக் குணப்படுத்துகிறார். அவர்களோ இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என்று திட்டம் தீட்டுகிறார்கள்.

நமது வாழ்விலும் இதுபோன்று குற்றம் காண்பதையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழும் ஏராளமான மனிதர்களைப் பார்க்கலாம். இவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள். மனம்மாற வேண்டியவர்கள்.

பொதுவாகச் சொல்வார்கள், "நமக்குப் பின்னால் இருந்து குறைசொல்லும் மனிதர்களைக் குறித்துக் கவலைப்படாதே, ஏனென்றால் நாம் அவர்களை விட இரண்டடி முன்னால் இருக்கிறோம்" என்று. ஆனால் நடைமுறை வாழ்வில் நம்மீது சுமத்தப்படும் தேவையில்லாத குற்றச்சாட்டுகளைக் கண்டு நம்மால் அமைதியாக இருக்கமுடிவதில்லை. அது நமது மனதை வெகுவாகப் பாதிக்கிறது. நிறைய நேரங்களில் நாம் நிலைகுலைந்து போகிறோம்.

இந்த நிலையில்தான் இயேசு நமக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். ஏனென்றால் அவர் பரிசேயர்கள் தன்மீது சுமத்திய குற்றச்சாட்டுகளைக் கண்டு மனம்வருந்தவில்லை. அவர் எத்தகைய தடைகள் வந்தாலும் நன்மை செய்வதில் மட்டும் கருத்தாய் இருந்தார். நாமும் நமதாண்டவர் இயேசுவைப் போன்று எத்தகைய இடர்கள், விமர்சங்கள் வந்தாலும் நன்மை செய்வதில் மட்டும் கருத்தாய் இருப்போம்.

தூய பவுல் 2 தெசலோனிக்கேயர் 3:13 ல் கூறுவார், "நீங்கள் நன்மை செய்வதில் மனம்தளர வேண்டாம்" என்று. நாம் நமது பணிவாழ்வில் வரும் தேவையற்ற விமர்சனங்களைக் ஒதுக்கி வைத்துவிட்டு, ஆண்டவர் இயேசுவைப் போன்று நன்மை செய்வதில் மனந்தளராது இருப்போம். இறையருள் நிரம்ப பெறுவோம்.

Maria Antony, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
நன்மை செய்வது மட்டுமே நம் இலட்சியமாக இருக்கட்டும்!!!

ஜென் குரு ஒருவர் ஓவியம் வரைந்து கொண்டிருந்தார். அவருடைய பிரதான சீடன் அவர் அருகில் அமர்ந்திருந்தான். "ஓவியத்தில் சிறிய குறையும் ஏற்பட்டு விடக்கூடாதே" என்று இருவரும் கவலையுடன் இருந்தார்கள். அன்றைய தினத்தில் ஜென் குருவுக்கும் நேரம் சரியில்லை போலும். எப்படி வரைந்தாலும் ஓவியம் குறைபட்டுக் கொண்டே இருந்தது.

ஒவ்வொரு முயற்சியிலும் தவறுகள் அதிகமாகிக் கொண்டே இருப்பதை சீடன் சுட்டிக்காட்டிக் கொண்டே இருந்தான். திரும்பத் திரும்ப முயற்சித்துப் பார்த்து ஜென் குரு களைத்துவிட்டார். சீடனோ, "எதுவும் சரியாக வரவில்லை" என்று மறுப்பு சொல்லிக்கொண்டே இருந்தான். அப்போது குரு சீடனிடத்தில், "வரைவதற்கு மை தீர்ந்துவிட்டது. நீ ஓடிச்சென்று வாங்கி வா" என்று சீடனை அனுப்பி வைத்தார். சிறுது நேரத்தில் மையுடன் வந்த சீடனுக்கு ஒரே அதிர்ச்சி. நினைத்தபடியே அழகாக பிழையின்றி அங்கே ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. "இவ்வளவு குறுகிய நேரத்தில் எப்படி ஓவியத்தை வரைந்து முடித்தீர்கள்?" என்று சீடன் குருவிடம் ஆர்வத்துடன் கேட்டான். அதற்கு அவர், "உன்னுடைய இருப்பை நான் உணர்ந்தபடியே ஓவியம் வரைந்தேன். பாராட்டவோ - குறைகூறவோ பக்கத்தில் ஒருவர் உள்ளார் என்ற உணர்வு என்னுடைய சிந்தனையைக் குலைத்தது. நீ வெளியே சென்றிருந்த சமயத்தில் கவனம் இம்மியளவும் பிசகவில்லை. ஓவியமும் நினைத்தபடி வந்துவிட்டது" என்றார்.

குரு இவ்வாறு சொல்லிவிட்டு சீடனிடத்தில் தொடர்ந்து சொன்னார், "பிறர் விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாமல் நம்முடைய செயல்களில் கவனம் செலுத்தினால் எளிதில் வெற்றி கிடைக்கும்" என்று. ஆம், அடுத்தவருடைய விமர்சனங்களை அல்லது குறை சொல்லைக் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து நல்லதை மட்டும் செய்துகொண்டிருந்தால் நாம் நம்முடைய வாழ்வில் உயர்வது உறுதி.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு ஓய்வுநாள் ஒன்றில் தொழுகைக்கூடத்திற்கு செல்கின்றார். அங்கே அவர் சென்றபோது கைசூம்பிய ஒருவரைக் காண்கின்றார். இதற்கிடையில் தொழுகைக்கூடத்தில் இருந்த சிலர், இயேசு ஓய்வுநாளில் கைசூம்பிய அந்த மனிதரைக் குணப்படுத்துவாரா?, அவரிடம் குற்றம் காணலாமா? என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றாகள். இயேசு அவர்களுடைய தீய எண்ணங்களை அறிந்து, ஓய்வுநாளில் நன்மை செய்வதா? தீமை செய்வதா? உயரைக் காப்பாதா? அழிப்பதா? எது முறை?" என்று கேட்க அவர்கள் அமைதியாக இருக்கின்றார்கள். உடனே அவர் அந்த கைசூம்பிய மனிதனிடம் கையை நீட்டச் சொல்லி அவரைக் குணப்படுத்துகின்றார்.

இங்கே ஆண்டவர் இயேசு கைசூம்பிய மனிதரைக் குணப்படுத்துவதினால், தொழுகைக்கூடத்தில் இருப்பவர்கள் தன்னைக் குறித்து என்ன நினைப்பார்களோ, தனக்கு எதிராக என்ன சூழ்ச்சி செய்வார்களோ என்றல்லாம் நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கவில்லை. கைசூம்பிய நிலையில் இருக்கும் அம்மனிதர் நலம் பெறவேண்டும், அதுதான் அவருடைய பிரதான நோக்கமாக இருந்தது. அதனால் எல்லாவிதமான இடர்பாடுகளையும் மீறி இயேசு அவரைக் குணப்படுத்துகின்றார்.

இந்த நிகழ்வின் வழியாக நாம் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மை ஒன்றே ஒன்றுதான். அது பிறர் சொல்லக்கூடிய விமர்சனங்களை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து நன்மைகள் செய்வதாகும். ஏனென்றால், இங்கே நிறையப் பேர், தன்னைவிட அடுத்துவன் வளர்ந்துவிடக்கூடாது, நன்றாக இருந்துவிடக்கூடாது வாழ்வில் முன்னுக்கு வந்துவிடக்கூடாது என்ற பொறாமையுணர்வோடு அலைந்துகொண்டிருக்கின்றார்கள். இத்தகையவர்களுக்கு அடுத்தவருடைய வளர்ச்சி என்பது பாகற்காயைப் போன்று கசக்கத்தான் செய்யும். ஆண்டவர் இயேசு இறைவனின் வார்த்தையை எடுத்துரைத்து, மக்களிடத்தில் வல்ல செயல்கள் செய்துவந்ததால் மக்கள் செல்வாக்கு அவருக்கு அதிகமாக இருந்தது. அது பிடிக்காத பரிசேயக்கூட்டம் இயேசு ஓய்வுநாளில் குணப்படுத்திவிட்டார் என்று விமர்சனம் செய்துகொண்டிருந்தது. இத்தகைய விமர்சனங்களை எல்லாம் இயேசு ஒருபோதும் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து நன்மையானவற்றையே செய்துவந்தார் என்பதுதான் அவருடைய வாழக்கைக் குறித்து நமக்கு எடுத்துரைக்கும் செய்தியாக இருக்கின்றது. ஆகவே, இயேசுவிடமிருந்த அதே உணர்வு, மனதிடம் நம்மிடத்தில் இருக்கவேண்டும்.

தூய பவுல் கூறுவார், "நன்மை செய்வதில் மனம் தளராமல் இருங்கள்" என்று. ஆம், நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பணிவாழ்வில் பிறருடைய விமர்சனத்திற்கோ அச்சுறுத்தலுக்கோ ஒருபோதும் பயப்படக்கூடாது, மாறாக நாம் நம்முடைய கொள்கையில் மிக உறுதியாக இருந்து எப்போதும் நன்மை செய்யக் கூடியவர்களாக இருக்கவேண்டும். அப்போதுதான் நாம் இயேசுவின் அன்புச் சீடர்களாக மாறமுடியும்

ஆகவே, நாம் எத்தகைய இடர்வரினும் நம்முடைய கொள்கையில் மிக உறுதியாக இருப்போம்; நன்மையானதை தொடர்ந்து செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
இனி எல்லாம் சுகமே!

கவனின் பெயரால்

போர் மற்றும் சண்டைக் காட்சிகளை வர்ணிப்பதில் விவிலிய ஆசிரியர்கள் திறமை இல்லாதவர்கள். போர் மற்றும் சண்டை நடப்பதற்கு முன் அது பற்றி நிறைய பில்ட்-அப் இருக்கும். ஆனால், போர் அல்லது சண்டை சப்பென்று முடிந்துவிடும்.

நாளைய முதல்வாசகத்தில் (1 சாமு 17:32-33, 37, 40-50) இப்படியொரு சண்டையைத்தான் வாசிக்கின்றோம். தாவீது கோலியாத்தை எதிர்கொண்டு வெற்றிபெரும் நிகழ்வே நாளைய இறைவாக்கு பகுதி.

வாளோடு வானாளவ உயர்ந்து நின்றவனை, ஒரு கவன் மற்றும் கைத்தடியோடு எதிர்கொள்கிறார் இளவல் தாவீது.

"நீயோ வாளோடும், ஈட்டியோடும், எறிவேலோடும் வருகின்றாய். நானோ ஆண்டவர் பெயரால் வருகிறேன்!"

இதுதான் பஞ்ச் லைன்.

இது எனக்கு மகாபாரத நிகழ்வு ஒன்றை நினைவுபடுத்துகிறது.

பாரதப்போரில் பகவான் கண்ணன் (கிறிஷ்ணன்) யார்பக்கம் இருக்கிறார் என்று கேட்பதற்காக துரியோதனனும், தருமனும் கண்ணனின் வீட்டிற்கு செல்வர். கண்ணன் ஒய்யாரமாக தூங்கிக் கொண்டிருப்பார். துரியோதனன் வேகமாய் போய் கண்ணனின் தலைமாட்டில் அமர்ந்து கொள்வான். தருமன் கண்ணனின் காலடியருகில் அமர்ந்திருப்பான். தூக்கம் விழிக்கும் கண்ணனின் பார்வையில் தருமன்தான் படுவான். "என்ன விடயம் தருமா?" என்று கேட்க, துரியோதனும், தருமனும் சேர்ந்து, "நீர் போரில் யார் பக்கம்?" எனக் கேட்பர். கண்ணனோ, "நீங்களே முடிவெடுங்கள். என் படைபலம், படைக்கலம் அனைத்தும் ஒரு பக்கம். நிராயுதபாணியாய் நான் மறுபக்கம். உங்களுக்கு எது வேண்டும்?" துரியோதணன் உடனே, "உம் படைபலமும், படைக்கலங்களும் எனக்கு!" என்பான். தருமனுக்கு நிராயுதபாணியான கண்ணனைத் தேர்ந்தெடுப்பதை தவிர வேறு வழியில்லை. இருந்தாலும் மகிழ்வோடு வீடு திரும்புவான். போரில் யார் வெற்றி பெற்றார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

தாவீது செய்யும் ஒரு விடயத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன்:

நீரோடையிலிருந்து வழுவழுப்பான ஐந்து கூழாங்கற்களை எடுத்துக்கொள்கிறான் தாவீது.

ஆனால், தாவீது பயன்படுத்துவது ஒரே ஒரு கல்லைத்தான்.

இங்கேதான் கடவுளின் வெற்றி மிக அழகாக சித்தரிக்கப்படுகிறது.

சின்ன வயதில் கவன் பயன்படுத்தி அணில் மற்றும் பறவைகளை அடித்து விளையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்:

அ. கவனில் வைக்கப்படும் கல் ஈரமாக இருக்கக் கூடாது. ஈரப்பசை இருந்தால் காற்றின் பதம் படுவதால் வேகம் குறையும். மேலும் கவனோடு கல் ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

ஆ. கவனில் வைக்கப்படும் கல் ஒரு பக்கம் கூர்மையாகவும், மற்ற பக்கம் தட்டையாகவும் இருக்க வேண்டும். கூர்மையான பகுதி முன்னோக்கி இருக்க வேண்டும். (விமானம் மற்றும் ராக்கெட் அறிவியிலில் இதே டெக்னாலஜிதான் பயன்படுத்தப்படுகிறது. முன்பகுதி கூர்மையாக இருந்தால்தான் வேகம் கிடைக்கும். காற்றை எதிர்த்துச் செல்ல முடியும்.)

இ. ஒரே நேரத்தில் ஒரு கல்தான் கவனில் ஏற்ற முடியும். ஆர்வக் கோளாறில் இரண்டு கற்களை வைத்து அடித்தால், கற்கள் ஒன்றை ஒன்று உரசிக்கொண்டு எதிரெதிர் திசைகளில் சென்றுவிடும்.

இப்போது தாவீது செய்ததைப் பார்ப்போம்.

அ. நீரோடையிலிருந்து எடுத்த கல் கண்டிப்பாக ஈரமாக இருந்திருக்கும்.

ஆ. வழுவழுப்பான கற்களை தாவீது எடுத்துக்கொள்கிறார்.

இ. ஐந்து கற்களை ஒரே நேரத்தில் வீசினால் ஏதாவது ஒன்றாவது கோலியாத்து மீது படும் என நினைக்கிறார். அதாவது, குருட்டாம் போக்கில் எறிய நினைக்கிறார்.

ஆனால், என்ன ஆச்சர்யம்?

பேசிக் கவன் டெக்னாலஜி பிழைத்தாலும், கடவுள் வெற்றி தருகின்றார்.

ஏனெனில் தாவீது தன் கவனின் பெயரால் வரவில்லை. மாறாக, கடவுளின் பெயரால் வருகின்றார்.

இன்று நான் வருவது கவனின் பெயராலா அல்லது கடவுளின் பெயராலா?

Yesu Karunanidhi, Madurai.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!