Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       13  ஐனவரி 2018  
                                       பொதுக்காலத்தின் முதல் வாரம் - சனிக்கிழமை
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================

சாமுவேல் சவுலுக்குக் கூறியது: "நானே திருக்காட்சியாளன். எனக்கு முன்பாக தொழுகை மேட்டுக்குச் செல். இன்று நீ என்னோடு உண்ண வேண்டும். 

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 9: 1-4.17-19; 10: 1

அந்நாள்களில் பென்யமின் குலத்தில் கீசு என்ற ஆற்றல்மிகு வீரர் ஒருவர் இருந்தார். அவர் பென்யமினியன் அபியாவுக்குப் பிறந்த பெக்கோராத்தின் மகனான செரோரின் மகன் அபியேலுக்குப் பிறந்தவர். அவருக்குச் சவுல் என்ற ஓர் இளமையும் அழகும் கொண்ட மகன் இருந்தார். இஸ்ரயேலின் புதல்வருள் அவரைவிட அழகு வாய்ந்தவர் எவரும் இலர். மற்ற அனைவரையும்விட அவர் உயரமானவர். மற்ற அனைவரும் அவர் தோள் உயரமே இருந்தனர். சவுலின் தந்தை கீசின் கழுதைகள் காணாமற் போயின. கீசு தம் மகன் சவுலை அழைத்து, "பணியாளன் ஒருவனை உன்னோடு கூட்டிக் கொண்டு, கழுதைகளைத் தேடிப் போ" என்றார். அவர் எப்ராயிம் மலைநாட்டையும் சாலிசா பகுதியையும் கடந்து சென்றார்; அவற்றைக் காணவில்லை; சாலிம் நாட்டு வழியே சென்றார், அங்கும் அவை இல்லை; பென்யமின் நாட்டைக் கடந்து சென்றார், அங்கும் அவை தென்படவில்லை. சாமுவேல் சவுலைக் கண்டதும், ஆண்டவர் அவரிடம், இதோ நான் உனக்குச் சொன்ன மனிதன்! இவனே என் மக்கள்மீது ஆட்சிபுரிவான்" என்றார். சவுல் வாயிலின் நடுவே சாமுவேலை நெருங்கி, "திருக்காட்சியாளரின் வீடு எங்கே? தயைகூர்ந்து சொல்லும்" என்று கேட்டார். சாமுவேல் சவுலுக்குக் கூறியது: "நானே திருக்காட்சியாளன். எனக்கு முன்பாக தொழுகை மேட்டுக்குச் செல். இன்று நீ என்னோடு உண்ண வேண்டும். உன் உள்ளத்தில் இருப்பது அனைத்தையும் நாளைக் காலையில் நான் உனக்கு எடுத்துரைத்து உன்னை அனுப்பிவிடுகிறேன்." அப்போது சாமுவேல் தைலக் குப்பியை எடுத்து, அவர் தலைமீது வார்த்து, அவரை முத்தமிட்டுக் கூறியது: "ஆண்டவர் தம் உரிமைச் சொத்துக்குத் தலைவனாக இருக்கும்படி உன்னைத் திருப்பொழிவு செய்துள்ளார் அன்றோ?"


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
 
பதிலுரைப் பாடல்  தி:பா: 21: 1-2. 3-4. 5-6
=================================================================================
பல்லவி :உமது வல்லமையில் ஆண்டவரே, அரசர் பூரிப்படைகின்றார். 

1 ஆண்டவரே, உமது வல்லமையில் அரசர் பூரிப்படைகின்றார்; நீர் அளித்த வெற்றியில் எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்! 2 அவர் உள்ளம் விரும்பியதை நீர் அவருக்குத் தந்தருளினீர்; அவர் வாய்விட்டுக் கேட்டதை நீர் மறுக்கவில்லை. - பல்லவி 

3 உண்மையில் நலமிகு கொடைகள் ஏந்தி நீர் அவரை எதிர்கொண்டீர்; அவர் தலையில் பசும்பொன்முடி சூட்டினீர். 4 அவர் உம்மிடம் வாழ்வு வேண்டி நின்றார்; நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை அவருக்கு அளித்தீர். - பல்லவி 

5 நீர்அவருக்கு வெற்றியளித்ததால் அவரது மாட்சிமை பெரிதாயிற்று. மேன்மையையும் மாண்பையும் அவருக்கு அருளினீர். 6 உண்மையாகவே, எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிகளை அவர் பெற்றுள்ளார்; உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கச் செய்தீர். - பல்லவி 

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 4: 18-19
அல்லேலூயா, அல்லேலூயா!  "ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்.

தூயமாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-17


இயேசு மீண்டும் கடலோரம் சென்றார். மக்கள் கூட்டத்தினர் எல்லாரும் அவரிடம் வரவே, அவர் அவர்களுக்குக் கற்பித்தார். பின்பு அங்கிருந்து அவர் சென்றபோது அல்பேயுவின் மகன் லேவி சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், "என்னைப் பின்பற்றி வா" என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். ஏனெனில் இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள். அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், "இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?" என்று கேட்டனர். இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, "நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"என்னைப் பின்பற்றி வா"

ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி இது: "நீங்கள் ஒரு தலைவரா? (Are your a leadar?). அக்கேள்விக்குப் பெரும்பாலான மாணவர்கள், "ஆம், நான்தான் ஒரு தலைவன்தான்" என்றே பதில் எழுதி இருந்தார்கள். ஒரே ஒரு மாணவன் மட்டும், "நான் தலைவன் அல்ல, மாறாக நிர்வாகத்தின் ஒழுங்குமுறைக்குக் கீழ்படிந்து நல்முறையில் வழி நடக்கக்கூடியவன்" (No, But Im a good follower) என்று எழுதியிருந்தான். அவனுடைய பதிலைப் படித்துப் பார்த்த நிர்வாகக் குழுவானது அவனுக்கு இவ்வாறு கடிதம் எழுதியது. "நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு நீங்கள் பதிலளித்த விதம் எங்களுக்குப் பிடித்திருந்தது. ஏனென்றால், இந்த நேர்முகத் தேர்வில் கலந்துகொண்ட ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டோர் "நாங்கள் தலைவர்கள்" என்று பதில் எழுதியிருந்தார்கள். ஆனால், நீங்கள் ஒருவர்தான் நிர்வாகத்தின் ஒழுங்குமுறைகளுக்குக் கீழ்ப்படித்து நல்முறையில் வழி நடக்கக்கூடியவன் என்று எழுதியிருந்தீர்கள். எங்கள் நிறுவனத்திற்கு தலைவர் அல்ல, நல்முறையில் வழி நடக்கக்கூடியவரே தேவை. நீங்கள் சீக்கிரம் வந்து வேளையில் சேர்ந்துகொள்ளுங்கள்".

ஆம், இன்றைய சூழலுக்கு தலைவர்கள் அல்ல, வழி நடக்கக்கூடியவர்களே தேவைப்படுகின்றார்கள் என்னும் உண்மையை இந்த நிகழ்வானது மிக அழுகுபட எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு சுங்கச் சாவடியில் அமர்ந்து வரிவசூலித்துக் கொண்டிருந்த அல்பேயுவின் மகன் லேவியை - மத்தேயுவைப் பார்த்து, "என்னைப் பின்பற்றி வா" என்று சொல்கின்றார். உடனே அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றிச் செல்கின்றார். இயேசு லேவியை அழைத்தபோது, ஏதோ அவர் அழைத்துவிட்டார் என்பதற்காகப் போகவில்லை. மாறாக, முதல் சீடர்களான யோவான், யாக்கோபு, பேதுரு, அந்திரேயா ஆகியோரை அழைத்தபோது எப்படி அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு மனமுவந்து சென்றார்களோ அதுபோன்று லேவி எல்லாவற்றையும் விட்டுவிட்டு மனமுவந்து ஆண்டவர் இயேசுவைப் பின்தொடர்ந்து செல்கின்றார்.

லேவியின் அழைப்பு நமக்கு ஒருசில உண்மைகளை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகின்றது. அவை என்னென்ன என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம். முதலாவதாக லேவி ஒரு வரிதண்டுபவர். வரிதண்டுபவர் என்றால், உரோமை அரசாங்கத்திற்குக் கீழ் வரிதண்டும் வேலையைச் செய்துவந்தார் என்று சொல்லலாம். யூதர்கள், யாராரெல்லாம் உரோமை அரசாங்கத்திற்குக் கீழ் வேலை செய்துவந்து வந்தார்களோ அவர்களைக் கைகூலிகள் என்றும் நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்கள் என்றும் சொல்லிவந்தார்கள். அந்த விதத்தில் லேவி யூதர்களால் நாட்டைக் காட்டிக் கொடுப்பவரைப் போன்றும் ஒரு பெரிய பாவியைப் போன்றும் பார்க்கப்பட்டார். இத்தகைய சூழலில்தான் ஆண்டவர் இயேசு, பாவி என்று கருதப்பட்ட லேவியைத் தன்னுடைய சீடராக அழைக்கின்றார். இதன்மூலம் அவர் தன்னுடைய பணி இத்தகைய பாவிகளுக்கும் ஏழை எளியவருக்கும்தான் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றார்.

அடுத்ததாக, ஆண்டவர் இயேசு சமூகத்தால் பாவி என்று கருதப்பட்ட லேவியைத் தன்னுடைய பணிக்காக அழைத்ததும் அவர் தன்னுடைய வீட்டில் எல்லாருக்கும் விருந்தொன்று கொடுக்கின்றார். லேவி எல்லாருக்கும் கொடுத்த விருந்தானது அவர் மனம்மாறிவிட்டேன் என்பதன் அடையாளமாக இருக்கின்றது. மத்தேயு நற்செய்தி 3:9 ல் திருமுழுக்கு யோவான் தன்னிடம் திருமுழுக்குப் பெற வந்தவர்களிடம் கூறுவார், "நீங்கள் மனமாறிவிட்டீர்கள் என்பதை அதற்கேற்ற செயலில் காட்டுங்கள்" என்று. இதைப் பின்புலமாக வைத்துக்கொண்டு பார்க்கும்போது, லேவி தன்னுடைய இல்லத்தில் கொடுத்த விருந்தானது, அவர் மனம்மாறிவிட்டார் என்பதன் அடையாளமாக இருக்கின்றது.

நிறைவாக, இயேசு லேவியை அழைத்தவுடன் அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கின்றார். அப்படியானால் லேவிக்கு இந்த உலக செல்வங்களை விட, இயேசு மிகவும் உயர்ந்தவர் என்னும் உண்மை நன்றாகவே தெரிந்திருக்கின்றது. அதனால்தான் அவர் தான் செய்துவந்த வரிதண்டும் தொழிலையும் கூட துச்சமென உணர்ந்து, அதனைத் தூக்கி எறிந்துவிட்டு, இயேசுவின் பின்னால் நடக்கின்றார். இயேசுவின் சீடர்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கின்ற நாம் லேவியைப் போன்று இயேசுதான் ஒப்பற்ற செல்வம் என்னும் உணர்ந்திருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்கில் நாம் உலக இன்பமும் சொத்து சுகமும்தான் நிரந்தரமானவை என நினைத்து அவற்றுக்குப் பின்னால் சென்று சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றோம். இத்தகைய சூழலில் லேவியைப் போன்று இயேசுவின் பின்னால் நடப்பது மிகவும் தேவையான ஒன்றாக இருகின்றது.

ஆகவே, நாமும் லேவியைப் போன்று இயேசுவைப் பின்தொடர்ந்து செல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்கவந்த இயேச

"Three Religious Rebels" என்ற புத்தகத்தில் வரக்கூடிய ஒரு நிகழ்வு. தியோடர் என்ற ஒரு பெரும் செல்வந்தன் இருந்தார். அவர் தன்னுடைய மகனை தன்னைவிடப் பெரும் செல்வந்தனாக வளர்க்க விரும்பினார். ஆனால் அவருடைய மகன் ராபர்டோ துறவுமடத்தில் சேர்ந்து ஒரு துறவியாக வாழ நினைத்தான். இது அவருக்கு கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை.

தன்னுடைய மகனைச் சந்திக்கும்போதெல்லாம் நீ துறவியாகப் போகவேண்டாம் என்று சொல்லிக்கொண்டே வந்தார். ஆனால் அவருடைய மகன் அவருடைய பேச்சைக் கேட்பதாக இல்லை.

பல ஆண்டுகள் கடந்தன. ஒரு நாள் அவர் திடீரென்று படுத்த படுக்கையானார். அவரைப் பார்க்கவந்த மருத்துவர்கள் இன்னும் கொஞ்ச காலத்திற்குத்தான் உயிரோடு இருப்பார் என்று சொல்லிவிட்டுச் சென்றனர்.

அப்போது அவர் தன்னுடைய மகன் ராபர்டை அருகே அழைத்தார். அவனிடம், "ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வில் செய்யக்கூடாத தவறு ஒன்று இருக்கிறது" என்றார். உடனே அவருடைய மகன் அவரிடம், "அது என்ன தவறுப்பா" என்று கேட்டான். அதற்கு அவர், "துறவியாக மாறுவதுதான் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வில் செய்யக்கூடாத மிகப்பெரிய தவறு ஆகும்" என்றார். "ஏன்?" என்று ராபர்ட் காரணத்தைக் கேட்க, அவர் மறுமொழியாக, "இந்த உலகத்தில் அனுபவிக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன, அதைவிட்டுவிட்டு, யாராது துறவியாகப் போவார்களாக?" என்று முடித்தார்.

கதையில் வரும் தந்தையைப் போன்றுதான் இன்றைக்கு பெரும்பாலானவர்கள் தன்னுடைய பிள்ளைகளை துறவுவாழ்வுக்கு அனுப்பத் தயங்குகிறார்கள். அவர்களுடைய எண்ணமெல்லாம் துறவுவாழ்வு என்பது துன்பகரமானது என்பதுதான்.

ஆனால் இதற்கெல்லாம் முற்றிலும் மாறாக மத்தேயு/லேவி இயேசு கிறிஸ்து அழைத்தவுடன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அவரைப் பின்தொடர்வதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் படிக்கக் கேட்கின்றோம்.

இயேசு கடற்கரையில் மக்களுக்குப் போதித்துவிட்டு, அங்கிருந்து வரும்போது சுங்கச்சாவடியில் இருக்கக்கூடிய அல்பேயுவின் மகன் மத்தேயுவைப் பார்க்கிறார். உடனே அவர் அவரிடம், "என்னைப் பின்பற்றி வா" என்று சொன்னதும், மத்தேயு எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கிறார். இவ்வாறு மத்தேயு துறவுவாழ்வுக்கு/ சீடத்துவ வாழ்வுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறார்.

விவிலிய அறிஞர்கள் கூறுவார்கள், "இயேசுவின் மற்றெல்லாச் சீடர்களையும்விட மத்தேயுதான் இயேசுவுக்காக அதிக அளவில் துறந்தவர்" என்று. ஏனென்றால் மத்தேயு செய்துவந்த வரிவசூலிக்கும் தொழிலானது அதிகஅளவில் பணம்கொடுத்துப் பெற்றுக்கொள்ளப்படும் ஒரு தொழிலாகும். அதனை ஒருமுறை கைவிடும்போது மறுபடியும் அதனைத் திரும்பப் பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஆனாலும் மத்தேயு இயேசுவுக்காக எல்லாவற்றையும் துறக்கிறார்.

"விவேகானந்தர் கூறுவார், "சமூக நலன் என்னும் அக்கினியில் சுயநல ஆசைகளைச் சுட்டெரிப்பதே தூய துறவு" என்று. ஆம், மத்தேயு இயேசுவுக்காக தன்னுடைய உடமைகள், தான் புரிந்தவந்த தொழில் என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தார்.

மத்தேயு, தான் இயேசுவின் சீடராக மாறிவிட்டதன் அடையாளமாக அவரது வீட்டில் விருந்தொன்று படைக்கிறார். இயேசுவும் அவ்விருந்தில் கலந்துகொள்கிறார். அப்போது ஒருசிலர் இயேசுவைப் பார்த்து, "இவர் பாவிகளோடும், வரிதண்டுபவர்களோடும் உணவருந்துகிறாரே?" என்று பேசுகிறபோது இயேசு அவர்களிடம், "நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்கவந்தேன்" என்கிறார்.

இந்த மண்ணுலகிற்கு இயேசு எதற்காக வந்தார் என்பதன் அர்த்தம் இங்கே விளங்குகின்றது. இயேசு சாதாரண மக்களையும், பாவிகளையும்தான் அழைக்க வந்தார் என்பது நமக்கு மிகப்பெரிய ஆறுதலளிக்கிறது. முதல் வாசகத்தில் சாதாரண ஒரு மனிதனாகிய சவுலை கடவுளை இஸ்ரயேல் மக்களின் முதல் அரசராக திருப்பொழிவு செய்வதிலிருந்து தெரிகிறது கடவுள் எப்படிப்பட்டவர்களை தன்னுடைய பணிக்காக அழைக்கிறார் என்று.

ஆகையில் துறவுவாழ்வு துன்பகரமானது, இந்தக் காலக்கட்டத்தில் யாராது இப்படிப்பட்ட வாழ்வு வாழ்வார்களா? என்று எண்ணிக் கொண்டிருக்காமல், நம்மை பாவிகளைத் - தேடிவருகின்ற இயேசுவின் அழைப்புக்கு நாம் மத்தேயுவைப் போன்று செவிமடுப்போம். இறைவன் அளிக்கும் எல்லா ஆசிரையும், அருளையும் நிறைவாய் பெறுவோம்.

Maria Antony, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
இனி எல்லாம் சுகமே!

அன்போடு வேலை

கழுதையைத் தேடிச் சென்றவர் அரசராக வீடு திரும்புகிறார்.
நாளைய முதல் வாசகத்தை இப்படித்தான் சுருக்கி சொல்ல வேண்டும்.
இஸ்ரயேல் சமூகத்தின் முதல் அரசன் தேர்ந்தெடுக்கப்படும் விதம் மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது.
முதலில் சவுலையும் அவரின் உடல் அழகையும் வர்ணிக்கும் ஆசிரியர் தொடர்ந்து அவரின் குடும்பம் பற்றியும் குறிப்பிடுகின்றார்.
சவுலின் அப்பா வளர்த்த கழுதை காணாமல் போய்விடுகிறது.
3000 வருடங்களுக்கு முன் கழுதை காணாமல் போவது என்பது, இன்று நாம் வைத்திருக்கும் ஆடி அல்லது ரோல்ஸ் ராய்ஸ் அல்லது பெராரி அல்லது அல்லது ஜக்வார் காணாமல்போவது போல. ஆகையால்தான் அதைத் தேடும்படி தன் பணியாளர்களை மட்டுமல்லாமல் தன் மகனையும் உடன் அனுப்புகிறார் சவுலின் தந்தை.
அவர்கள் தேடுகிறார்கள். தேடுகிறார்கள். தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் சவுல், "போனால் போகட்டும்" என திரும்பிவிட நினைக்கின்றார்.
ஆனால் அவரின் பணியாளர்தான், "இல்லை. இன்னும் கொஞ்சம் முயன்று பார்க்கலாம்!" என்கிறார்.
பாதியில் திரும்பிவிட நினைக்கும் சவுலின் இந்தப் போக்கு அவரின் அரசாட்சிக்கு உருவகமாகக் கூட இருக்கலாம். நன்றாக ஆட்சி செய்து கொண்டிருந்த சவுல் பாதியிலேயே கெட்டவனாகிவிடுகிறார்.
செய்யும் வேலையை - கழுதையை தேடுவதோ அல்லது அரசனாக இருப்பதோ - முழுமையாகவும், இனிமையாகவும் செய்ய அழைக்கின்றது நாளைய முதல் வாசகம்.
இன்று, நாளை, மறுநாள் என நாம் திருநாட்கள் எடுத்து சூரியனுக்கு, இயற்கைக்கு, மாடுகளுக்கு என நம் உழைப்புக்கு உடன் நிற்கும் அனைத்திற்கும், அனைவருக்கும் நன்றி கூறுகிறோம்.
இந்த நாளில் வேலை பற்றிய கலீல் கிப்ரானின் பாடல் ஒன்றை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்:
"அன்போடு செய்யப்படாத எந்த வேலையும் வெறுமையானதே.
அன்போடு வேலை செய்வதென்றால் என்ன?
உன் இதயத்திலிருந்து வரும் நார்களை எடுத்து,
உன் அன்பிற்குரியவர் அதை அணிவார் என்று அவருக்கு துணி நெய்வதே அது.
உன் அன்பிற்குரியவர் அங்கே குடிபெயர்வார் என வீடு கட்டுவது அது.
அன்பில்லாமல், வேண்டா-வெறுப்பாக வேலை செய்வதை விட,
கோவிலின் வெளியே அமர்ந்து, தன் வேலையை மகிழ்ந்து செய்யும் ஒருவரிடம் இரத்தல் நலம்.
நீ அன்பில்லாமல் சமைக்கும் ரொட்டி அடுத்தவரின் அரைப்பசியைத்தான் நிரப்பும்.
நீ பகைமையோடு தயாரிக்கும் திராட்சை ரசம் விஷம் போன்றது.
அன்பின் காணக்கூடிய வெளிப்பாடே வேலை."


- Fr. Yesu Karunanidhi, Madurai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
"நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை."

இயேசுவின் அன்புக்குரியவரே!

இந்த ஒரு முத்தான வசனம் இயேசுவிடமிருந்து வருவது ஆச்சரியமில்லை. ஆனால் மத்தேயுவின் வீட்டிலிருந்தபோது வந்தது இன்னும் ஆழமாக சிந்திக்கத் தூண்டுகிறது. மத்தேயு படித்தவர். பெரிய பதவியில் சுங்க இலாக்காவில் இருந்தவர். கை நிறையவும் பை நிறையவும் பணம் படைத்தவர். அவரது வீட்டில் விருந்தில் இந்த முத்தான வார்த்தையை சொல்லும்போது, மத்தேயுவும் இதில் தொடர்புடையவர் என்று சிந்திக்கத் தோன்றுகிறது.

செல்வம், பதவி இருந்தும் மத்தேயு ஒரு நோயாளியாக இருந்தார் என்று உணர முடிகிறது. இயேசுவின் சந்திப்பின் மூலமும் விருந்தின் மூலமும் மத்தேயு ஒரு நோயாளி என்பதையும் இயேசுவே அவருக்கு சிறந்த மருத்துவர் என்றும் இயேசுவே சிறந்த மருந்து என்றும் உணர்த்துகிறார்.

பணம் பதவிகளோடு வாழும் நாம் பல நேரங்களில் நமக்கு இருக்கும் நோயை நாம் அறிவதில்லை. எத்தனையோ பணக்காரர்கள் பதவியில் இருப்பவர்கள் இயேசுவோடு தொடர்பு இல்லாததால் தானும் நோயுற்று தன் குடும்பத்தையும் அழிப்பதை காண்கிறோம். இயேசுவின் முன் நம்மை நிறுத்துவோம். அவருக்கு நம் வீட்டில் விருந்து கொடுப்போம். அப்போது நம் நோயை அறிவோம். இயேசு நல் மருத்துவர் என்பதை உணர்வோம். நோயற்று குறையற்ற செல்வத்தோடு வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்;.

------------------------------------

இயேசுவின் பரிவு

மத்தேயுவின் அழைப்பு நிகழ்ச்சி இன்று நமக்கு தரப்பட்டுள்ளது. மத்தேயுவின் நெஞ்சிலே ஒரு ஆறாத ரணம் இருந்துகொண்டே இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், மக்கள் அனைவரின் ஒட்டுமொத்த கோபத்திற்கும், வெறுப்பிற்கும் ஆளானவர் இந்த மத்தேயு. வரிவசூலிக்கிறவர் செய்கிற அடாவடித்தனத்தை, நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. மத்தேயுவும் அப்படிப்பட்டவராக மக்களால் பார்க்கப்பட்டார். மக்கள் சமுதாயத்திலிருந்து, விலக்கி வைக்கப்பட்டார். எவ்வளவுதான் பணம் இருந்தாலும், அதிகாரம் இருந்தாலும் உறவு இல்லையென்றால், அனைத்துமே வீண் என்பதை, நிச்சயம் அவர் அறிந்திருப்பார். ஆனால் என்ன செய்ய? உறவோடு வாழ, யாருமே முன்வரவில்லை. தன்னை மன்னித்து, தான் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்க யார் வருவார்? இந்த கேள்விகள் இருக்கிறபோதுதான், மத்தேயுவிற்கு இயேசுவின் அழைப்பு வருகிறது.

இயேசு பாவிகளைத் தேடி வந்திருக்கிறார் என்கிற செய்தி, அவருக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும். ஆனால், இயேசுவின் போதனை உண்மையில், அவருடைய செயல்பாடுகளில் எதிரொலிக்குமா? என்கிற சந்தேகமும் அவருடைய உள்ளத்தில் இருந்திருக்கும். எனவே தான், ஒருவிதமான படபடப்போடு, இயேசுவிடம் செல்வதா? வேண்டாமா? என்று நினைத்துக்கொண்டிருக்கிறபோது, இயேசுவிடமிருந்து வந்த அழைப்பு மிகப்பெரிய அதிர்ச்சியும், ஆச்சரியமும். இங்கே இயேசுவின் பணிவாழ்வின் ஆழத்தையும் நாம் பார்க்க முடிகிறது. இயேசு கடலோரம் சென்று கொண்டிருக்கிறார். அப்படிச் செல்கிறபோதும், அவர் யாருக்கு ஆறுதல் தேவையோ அவர்களைப்பற்றியே நினைத்துக்கொண்டும், யாராவது தென்படுகிறார்களா? எனப் பார்த்துக்கொண்டும் செல்கிறார். செல்கிற எல்லா இடங்களிலும், ஆறுதல் தேவைப்படுகிற அனைவருக்கும், அவர் தந்தையின் அன்பை எடுத்துச் செல்கிறார். அதுதான் இயேசு.

நாம் செய்கிற சிறிய செயலில் கூட கருத்தூன்றி இருக்க வேண்டும், என இயேசுவின் வாழ்வு நமக்கு அழைப்புவிடுக்கிறது. பார்க்கிற மனிதர்கள், நடக்கிற நிகழ்வுகள் அனைத்துமே நமக்கு ஆழமான செய்தியை, நமது வாழ்வையே மாற்றுவதற்கான தொடக்கமாக இருக்கலாம். செய்யக்கூடிய செயல் அனைத்தையும் முழுஈடுபாட்டோடு செய்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

ஆண்டவருடைய வார்த்தை அருமருந்து

தொழுகைக்கூடங்களில் இயேசு கற்பிப்பதற்கு உறுதியான எதிர்ப்பு கிளம்பிவிட்டது இன்றைய நற்செய்தியில் தெளிவாகிறது. எனவே, இயேசு தனது போதனையின் இடத்தை மாற்றுகிறார். இயேசுவின் போதனைக்கு இடையே வந்தவர்கள், யூதப்பாரம்பரியவாதிகள். ஏரிக்கரையில் நடந்துகொண்டு அவர் போதிக்கிறார். பாலஸ்தீனப்பகுதி போதகர்களின் போதனை இப்படித்தான் அமைந்திருக்கும்.

மத்தேயு மக்களால் வெறுக்கப்பட்ட மனிதர். ஏனெனில் அவர் ஒரு வரிதண்டுபவர். மத்தேயுவின் இதயத்தில் இது மிகப்பெரிய வலியாக இருந்திருக்கும். அவர் திருந்த வேண்டும் என்று நினைத்தாலும், இந்த சமுதாயம் அவர் பாவி என்று முத்திரை குத்தியிருக்கிறது. பாரம்பரிய யூதர்கள் நிச்சயம் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த நேரத்தில் இயேசுவின் போதனை, அவருக்கு பெரிய ஆறுதல். இயேசுவின் போதனை அவருடைய உள்ளத்தை துளைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. மனம் மாற வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு இயேசுவின் வார்த்தை என்றுமே ஆறுதல்தான்.

ஆண்டவருடைய வார்த்தை, துன்பப்படுகிறவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கிறது. அது சாதாரணமாக வாசிக்கிறவர்களுக்கு அல்ல. மாறாக, உள்ளத்தில் துயரத்தினால், கவலையினால் வாடுகிறவர்களுக்கு மிகப்பெரிய அருமருந்து. இறைவார்த்தையில் நமது முழுமையான நம்பிக்கை வைப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

வரிதண்டுபவர்களை மக்கள் இரண்டு காரணங்களுக்காக வெறுத்தனர்.

ஒன்று: அவர்கள் தங்களை அடிமைப்படுத்தியிருந்த உரோமையர்களுக்கு சேவை செய்து வந்தனர். அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக மக்களை கொடுமைப்படுத்தி வரிவசூலித்தனர்.

இரண்டு: குறிப்பிட்ட அளவுக்கு மேல் வரிவசூலித்து ஏழை, எளியவர்களை சுரண்டி வாழ்ந்தனர்.

மேற்கூறிய இரண்டு காரணங்களுக்காக, வரிதண்டுபவர்கள் பொதுமக்களின் கோபத்திற்கும், வெறுப்புக்கும் உள்ளாகியிருந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், இயேசு லேவியை அழைக்கிறார். அதற்கு இயேசு கூறுகிற காரணம்: பாவிகளையே அழைக்க வந்தேன் என்று சொல்வது. இந்த உலகத்தில் இருக்கிற ஒவ்வொரு மனிதனும் மீட்பு பெற வேண்டும், இறையரசுக்குள் நுழைய வேண்டும் என்பதுதான் தந்தையாகிய கடவுளின் விருப்பம். அதற்காகத்தான் தன் ஒரே மகன் இயேசுகிறிஸ்துவை இந்த உலகிற்கு அனுப்பினார். தவறான வழியில் செல்கிற மனிதர்களுக்கு திருந்தி வாழ கடவுள் பல வாய்ப்புகளைக் கொடுக்கிறார். லேவிக்கு அத்தகைய வாய்ப்பு கிடைத்தபோது அதை முழுமையாகப்பயன்படுத்திக்கொள்கிறார். தன்னுடைய பழைய வாழ்வு அனைத்தையும் விட்டுவிட்டு புதிய வாழ்வை மகிழ்ச்சியோடு, நிறைவோடு ஏற்றுக்கொள்கிறார்.

ஒவ்வொரு நிமிடமும் இறைவன் நமக்கு கொடுக்கிற வாய்ப்பு. அதை உணர்ந்து நம் வாழ்வை மாற்றிக்கொள்வோம். இறையரசை நமதாக்கிக்கொள்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர

 

சேர்ந்து உண்பதேன் ?

லேவியின் வீட்டில் இயேசு விருந்துண்டபோது, வரி தண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர் என்னும் செய்தியைப் பதிவு செய்திருக்கிறார் நற்செய்தியாளர் மாற்கு. காரணத்தோடுதான் அவ்வாறு செய்துள்ளார். தொடர்ந்து, மறைநூல் அறிஞர்கள் இயேசுவின் சீடரிடம் இவ்வாறு பாவிகளோடு சேர்ந்து விருந்துண்பதேன் என்னும் கேள்வியை எழுப்புவதையும் பதிவுசெய்துள்ளார். அதற்கான விடையை இயேசு அளிக்கவேண்டும் என்பதற்காகத்தான்.

இயேசு உணவு உண்பதை, விருந்தில் பங்கேற்பதை வயிற்றை நிரப்பும் நிகழ்வாகவோ, உடல் தேவையை நிறைவுசெய்யும் உடலியல் செயல்பாடாகவோ கருதவில்லை. மாறாக, ஒவ்வொரு விருந்தும் சமூக, இறையியல் பொருளுள்ள நிகழ்வுகள் என்பதனை எடுத்துக்காட்டினார். விருந்தின் வேளைகளில்தான் இயேசு சமூக மாற்ற அருளுரைகளை, அறிவுரைகளை வழங்கினார். சக்கேயு போன்றோரின் மனமாற்றத்தை நிகழ்த்திக் காட்டினார். இறுதியாக, விருந்தின் வேளையில்தான் நற்கருணை, குருத்துவம் என்னும் அருள்சாதனங்களை நிறுவினார்.

நமது உணவு வேளைகள் எப்படி இருக்கின்றன? இயேசுவைப் போலவே நாமும் உணவின் வேளைகளை உறவின் நேரங்களாக, சமத்துவத்தின் நேரங்களாக, நலப்படுத்தும் வேளைகளாக மாற்றுவோம். குடும்பத்தில், பணியகத்தில் இணைந்து உண்போம், இறைநெறி காண்போம்.

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நாள்தோறும் நீர் வழங்கும் உணவுக்காக நன்றி கூறுகிறோம். எங்கள் உணவின் வேளைகள் உமது அருளை உணரும் நேரங்களாக அமைவதாக, ஆமென்.

- பணி குமார்ராஜா

------------------------------------------------------------------------

இணையதள உறவுகளே

இயேசு சுங்கச்சாவடியில் பணிசெய்த மத்தேயுவை தன்னைப் பின்தொடரவும் தன் பணியைச் செய்யவும் அழைத்தார். உடனே அவரும் எழுந்து இயேசுவைப் பின்தொடர்ந்தார். இயேசு தன் வீட்டில் அழைத்து ஒரு பெரிய விருந்து கொடுத்தார். இந்த மத்தேயு நன்கு படித்தவர். உயர் பதவியில் இருந்தவர். கை நிறைய சம்பளம் வாங்கியவர். இயேசுவின் அழைப்பை ஏற்று அவர் பணியைத் தொடர்ந்தார்.

இதைப்பற்றிச் சிந்திக்கும்போது, இணையதளத்தின் இப் பகுதியை தினமும் வாசிக்கும் வாசகர் ஒருவர் எனக்கு அனுப்பிய மின் அஞ்சலில் அந்த சகோதரர் எழுதிய செய்தி, மத்தேயுவின் அழைப்புக்கும் பணிக்கும் மிக நெருக்கமாக இருப்பதாகத் தோன்றியது. இந்த பகுதியை நான் தினமும் வாசிக்கிறேன். இப்பகுதிபற்றி என் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெறியப்படுத்துவேன்3 என்று அந்த சகோதரர் எழுதியிருந்தார்.

இதுபோன்ற எண்ணம் உங்களில் உதயமாகும்போது, நீங்கள் அழைக்கப்பட்ட மத்தேயு போன்றவர்கள். பிறருக்கு இந்த செய்தியை எடுத்துச் செல்லும்போது, நீங்கள் அப்போஸ்தலரின் பணியைச் செய்கிறீர்கள். உங்களோடு, உங்கள் வீட்டில் தங்கி விருந்துண்டு மகிழ்வதை இயேசு விரும்புகிறார். வாய்ப்பு வழங்குங்கள்.மகிழுங்கள்.

-ஜோசப் லீயோன்

 

நமக்காக வந்தவர் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் என்ற இயேசுவின் அருள்மொழிகள் நமக்கு ஆறுதல் தருகின்றன. நமது பாவங்கள், குறைவாடுகள், வலுவின்மை இவற்றைக் குறித்து நாம் வெட்கப்படுகின்றோம். குற்ற உணர்வு கொள்கின்றோம். ஆனால், நமக்காகத்தான் தாம் இவ்வுலகிற்கு வந்ததாக இறைமகன்  இயேசு கூறுவது நம் இதயங்களை ஆட்கொள்கிறது. எனவே, நாம் கலங்க வேண்டாம், கவலை கொள்ளவேண்டாம். நம்மை அவரிடம் ஒப்படைத்து, அவருக்காக வாழ ஆயத்தாமானால் போதும். தாழ்வுற்று நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் புறக்கணிப்பதில்லை என்னும் திருப்பாடல் வரிகளுக்கேற்ப, இறைவன் நமது தாழ்வுற்ற நிலையைக் கண்ணோக்குவதற்காக அவருக்கு நாம் நன்றி சொல்வோமா!

மன்றாடுவோம்: தெய்வீக மருத்துவரான இயேசுவே, நலமோடு இருப்பவர்களுக்காக அல்ல, நோயுற்றோருக்காகவே மனுவுரு எடுத்த உம்மைப் போற்றுகிறோம். நாங்கள் பாவிகளாய் இருந்தபோதே, எங்களை அன்புசெய்து, எங்களுக்காக உம்முயிரை ஈந்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் குறைகளை நீர் பொறுத்துக்கொண்டு, எங்களை அன்பு செய்வதுபோல, நாங்களும் பிறரின் குறைகளைப் பொறுத்துக்கொள்ள அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--: அருள்தந்தை குமார்ராஜா


''இயேசு லேவியிடம், 'என்னைப் பின்பற்றி வா' என்றார். 
அவரும் எழுந்து சென்று இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்'' (மாற்கு 2:14)


இயேசுவின் அன்புக்குரியவரே!

-- இயேசு தம் சீடரை அழைத்த வரலாறு பல விதங்களில் கூறப்பட்டுள்ளது. கலிலேயாக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சீமோன் போன்றோரை இயேசு அழைத்தார். அவர்கள் தம் வலைகளை அப்படியே விட்டுவிட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள். லேவி என்பவர் வரிதண்டும் தொழிலைச் செய்தவர். அவர் வழக்கம்போல சுங்கச் சாவடியில் அமர்ந்து தம் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அப்போது இயேசு அவரை அழைத்தார். லேவியும் ''எழுந்து சென்று இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்'' (மாற் 2:14). வரிதண்டும் தொழில் இழிவாகக் கருதப்பட்டது. மக்களிடமிருந்து உரோமைப் பேரரசு வரியாகப் பணம் பெற்றது; வேறு பல வரிகளும் மக்களுக்குச் சுமையாயின. வரிதண்டுவோர் தமக்கென்றும் ஒரு பகுதியை அநியாயமாகப் பிரித்தனர். எனவே பொது மக்கள் வரிதண்டுவோரை வெறுத்ததில் வியப்பில்லை. இத்தகைய ஒரு மனிதரையே இயேசு அழைத்தார்.

-- நம் வாழ்க்கையில் கடவுளின் அழைப்பு எப்போது எவ்வாறு வரும் என நாம் முன்கூட்டியே அறிய இயலாது. ஆனால் கடவுளின் குரல் நம் உள்ளத்தின் ஆழத்தில் எப்போதுமே ஒலித்துக் கொண்டிருக்கிறது. நாம்தாம் சில வேளைகளில் அக்குரலைக் கேட்க மறக்கிறோம் அல்லது மறுக்கிறோம். நம் உள்ளத்தைத் திறந்து வைத்துக் கடவுளுக்கு அங்கே இல்லிடம் அமைத்துக் கொடுத்தால் அவருடைய குரலை நாம் எளிதில் கேட்கலாம். அக்குரல் நம்மிடம் கோருவதை நாம் மனமுவந்து செய்வோம். இயேசுவைப் பின்பற்றிச் செல்வதற்கு வருகின்ற அழைப்பு முதல் படி என்றால் அந்த அழைப்புக்கு நாம் தருகின்ற பதில் மொழி இரண்டாம் படி எனலாம். அவ்வாறு மனமுவந்து நாம் இயேசுவைப் பின்பற்றிச் செல்லும்போது நம் வாழ்க்கை கடவுளுக்கு உகந்ததாக அமையும். நம் உள்ளத்தில் கடவுள் தரும் மகிழ்ச்சி நிறைந்து வழியும்.

மன்றாட்டு
இறைவா, இயேசுவை மனமுவந்த பின்பற்றிச் செல்ல எங்களுக்கு அருள்தாரும்.
--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!