Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

               11  ஐனவரி 2018 - YEAR - B  
                                       பொதுக்காலத்தின் முதல் வாரம் - வியாழன்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
கடவுளின் பேழை பிடிபட்டது. இஸ்ரயேலர் தோற்கடிக்கப்பட்டனர்.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 4: 1-11

அந்நாள்களில் இஸ்ரயேலர் பெலிஸ்தியருக்கு எதிராகப் போர்தொடுத்து, எபனேசரில் பாளையம் இறங்கினர், பெலிஸ்தியரும் அபேக்கில் பாளையம் இறங்கினர். பெலிஸ்தியர் இஸ்ரயேலருக்கு எதிராக அணிவகுத்துச் செல்ல, போர் மூண்டது. பெலிஸ்தியர் இஸ்ரயேலரை முறியடித்து அவர்களுள் நாலாயிரம் பேரைப் போர்க்களத்தில் வெட்டி வீழ்த்தினர்.

வீரர்கள் பாளையத்திற்குத் திரும்பியபோது, இஸ்ரயேலின் பெரியோர் கூறியது: "இன்று பெலிஸ்தியரிடம் நம்மை ஆண்டவர் தோல்வியுறச் செய்தது ஏன்? ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை சீலோவினின்று நம்மிடையே கொண்டு வருவோம். அது நம்மிடையே வந்தால், நம் எதிரிகள் கையினின்று நம்மைக் காக்கும்".

ஆகவே வீரர்கள் சீலோவுக்கு ஆள்களை அனுப்பி, கெருபுகளின்மீது வீற்றிருக்கும் படைகளின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையை அங்கிருந்து கொண்டுவரச் செய்தனர். ஏலியின் இரு புதல்வர்களான ஒப்னியும் பினகாசும் கடவுளின் உடன்படிக்கைப் பேழையோடு இருந்தனர். ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை பாளையத்திற்குள் வந்ததும், இஸ்ரயேலர் அனைவரும் நிலமே அதிரும் அளவிற்குப் பெரும் ஆரவாரம் செய்தனர்.

இந்த ஆரவாரத்தைக் கேட்டதும் பெலிஸ்தியர், "எபிரேயரின் பாளையத்தில் இப்பெரும் ஆரவாரமும் கூச்சலும் ஏன்?" என்று வினவினர். ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை பாளையத்தினுள் வந்துவிட்டது என்று அறிந்து கொண்டனர்.

அப்போது பெலிஸ்தியர் பேரச்சம் கொண்டு, "கடவுள் பாளையத்திற்குள் வந்துவிட்டார். நமக்கு ஐயோ கேடு! இதற்கு முன்பு இப்படி நேர்ந்ததே இல்லை! நமக்கு ஐயோ கேடு! இத்துணை வலிமைமிகு கடவுளிடமிருந்து நம்மைக் காப்பவர் யார்? இக்கடவுள்தான் எகிப்தியரைப் பாலைநிலத்தில் பல்வேறு வாதைகளால் துன்புறுத்தியவர்! பெலிஸ்தியரே! துணிவு கொள்ளுங்கள்! ஆண்மையோடு இருங்கள்! எபிரேயர் உங்களுக்கு அடிமைகளாக இருந்தது போல, நீங்களும் எபிரேயருக்கு அடிமைகளாக ஆகாதபடிக்கு ஆண்மையோடு போரிடுங்கள்!" என்றனர். பெலிஸ்தியர் மீண்டும் போர்தொடுத்தனர்.

இஸ்ரயேலர் தோல்வியுற, அவர்களுள் ஒவ்வொருவனும் தன் கூடாரத்திற்குத் தப்பியோடினான். அன்று மாபெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இஸ்ரயேலருள் முப்பதாயிரம் காலாட்படையினர் மாண்டனர். கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டது. ஏலியின் இரு புதல்வர்கள் ஒப்னியும் பினகாசும் மாண்டனர்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
 
பதிலுரைப் பாடல்  திபா 44: 9-10. 13-14. 23-24 (பல்லவி: 26b)
=================================================================================
பல்லவி: உமது பேரன்பை முன்னிட்டு ஆண்டவரே, எங்களை மீட்டருளும்.

9 இப்போது நீர் எங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டீர்; இழிவுபடுத்திவிட்டீர். எங்கள் படைகளுடன் நீர் செல்லாதிருக்கின்றீர். 10 எங்கள் பகைவருக்கு நாங்கள் புறங்காட்டி ஓடும்படி செய்தீர். எங்களைப் பகைப்போர் எங்களைக் கொள்ளையிட்டனர். பல்லவி

13 எங்களை அடுத்து வாழ்வோரின் பழிப்புக்கு எங்களை ஆளாக்கினீர்; எங்கள் சுற்றுப்புறத்தாரின் ஏளனத்துக்கும் இகழ்ச்சிக்கும் எங்களை உள்ளாக்கினீர். 14 வேற்றினத்தாரிடையே எங்களை ஒரு பழிச்சொல்லாக்கினீர்; ஏனைய மக்கள் எங்களைப் பார்த்துத் தலையசைத்து நகைக்கின்றனர். பல்லவி

23 என் தலைவா! கிளர்ந்தெழும், ஏன் உறங்குகின்றீர்? விழித்தெழும்; எங்களை ஒருபோதும் ஒதுக்கித் தள்ளிவிடாதேயும். 24 நீர் உமது முகத்தை ஏன் மறைத்துக்கொள்கின்றீர்? எங்கள் சிறுமையையும் துன்பத்தையும் ஏன் மறந்துவிடுகின்றீர்? பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 4: 23
அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தொழுநோய் அவரை விட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 40-45

ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, "நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார்.

இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" என்றார்.

உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

பிறகு அவரிடம், "இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்" என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பிவிட்டார்.

ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார்.

அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கி வந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்துகொண்டிருந்தார்கள்.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
பிரபலியமான மனிதர்கள் சூழ்நிலை கைதிகளைப் போலவே வாழ்கின்றார்கள்.
ஆனால் இன்னும் மனிதர்கள் பிரபலியமாகத் தான் உழைக்கிறார்கள்.
இது என்ன முரண்பாடு.

சூழ்நிலை கைதி போன்ற வாழ்வினில் என்ன சுகம்?
மனதினிலே ஏற்படுகின்ற அற்ப சுகம் தான் மனிதனை அடிமைப்படுத்துகின்றது. பணி செய்யும் வாய்ப்பு அற்றுப் போகின்றது. உழைப்பு ஒருவிதத்தில் இல்லாது போகின்றது. சுதந்திரமில்லாத நிலை. தனிச்சு செயல்பட இயலாத நிலை. மனதினிலே ஒரு தனிமையும், வெறுமையும் தான். இதிலே சிலருக்கு ஆனந்தம். இந்த ஆனந்தம் உண்மையானதா?

விளையாட்டு வீரர்களையும், அரசியல்வாதிகளையும், சின்னத்திரை, வெள்ளைத் திரை நட்சத்திரங்களையும் கேட்டால் தெரியும் உண்மை.
பிரபலியமாவதா மனித வாழ்வின் நோக்கம்?


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
"இயேசு தொழுநோயாளர்மீது பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" என்றார் (மாற்கு 1:41)

தொழுநோய் என்னும் பிணியால் பீடிக்கப்பட்ட மனிதர் பிற மனிதரிடமிருந்து பிரிந்து வாழ வேண்டியிருந்தது. அவர்கள் தீட்டுப்பட்டவர்கள் எனக் கருதப்பட்டதால் அவர்களை அண்டிச் செல்வோரும் தீட்டுக்கு உள்ளாவர் என்னும் எண்ணம் நிலவியது. சமுதாயத்திலிருந்து பிரிக்கப்பட்ட தொழுநோயாளருக்குச் சமய வழிபாடுகளிலும் பங்கேற்க வாய்ப்பில்லாதிருந்தது. இவ்வாறு சமுதாயத்தால் ஓரங்கட்டப்பட்ட ஒரு தொழுநோயாளர் இயேசுவை அணுகித் தம்மைக் குணமாக்க வேண்டுகிறார். இயேசு அம்மனிதரிடமிருந்து அகன்று செல்லவில்லை. மாறாக, அவரைத் தொடுகிறார். தீட்டு என்பதைக் குறித்து இயேசு கவலைப்படவில்லை. தேவையில் உழல்கின்ற ஒரு மனிதருக்கு உதவ வேண்டும் என்னும் எண்ணமே இயேசுவின் உள்ளத்தில் எழுகின்றது. இயேசுவின் பரிவு அம்மனிதருக்குக் குணம் நல்குகின்றது.

இந்திய நாட்டில் தொழுநோயாளர் பலர் இன்றும் இருக்கின்றனர். சமுதாயம் அவர்களை முழுமையாக ஏற்க மறுக்கிறது. ஆனால் சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்படுகின்ற வேறு பலரும் தொழுநோயாளரைப் போல ஒதுங்கி வாழத் தள்ளப்படுகின்றனர். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என ஏற்றத்தாழ்வு கற்பிக்கின்ற நம் சமுதாயத்தில் தாழ்ந்த இனத்தவர் என ஒதுக்கிவைக்கப்படுகின்ற மக்கள் பல்லாயிரக் கணக்கில் உள்ளனர். இயேசுவைப் போல நாமும் பரிவுள்ள மனிதராக மாறி, யாரையும் ஒதுக்கிவைக்காமல் அனைவரையும் கடவுளின் பிள்ளைகளாக ஏற்க அழைக்கப்படுகிறோம். இயேசுவின் சீடர் என்பதற்கு வெளியடையாளம் நாம் இயேசுவைப் பின்பற்றி அவரைப் போல வாழ்வதில்தான் அடங்கியிருக்கிறது.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
நம்பினோர் கைவிடப்படுவதில்லை

நியூயார்க் நகரில் ஓர் அடுக்குமாடிக் கட்டடத்தில் பெண்ணும், அவருடைய மூன்று குழந்தைகளும் வசித்து வந்தார்கள். சில மாதங்களுக்கு முன்புதான் அந்தப் பெண்ணின் கணவர் விபத்து ஒன்றில் இறந்திருந்தார். எனவே குடும்பத்தையும், மூன்று குழந்தைகளையும் கவனிக்கின்ற பொறுப்பு முழுவதும் அந்தப் பெண்ணின் தலையில் விழுந்தது. ஏழ்மையான குடும்பம் வேறு.

அந்தப் பெண்மணி தன்னுடைய குடும்பச் செலவுகளுக்கு தையல் மிஷின் ஒன்றை வாடகைக்கு வாங்கிவைத்து, அதிலிருந்து வரக்கூடிய வருமானத்திலிருந்து குடும்பத்தைப் பராமரித்து வந்தாள். குடுப்பத்தில் வறுமை நிலவினாலும், தன்னுடைய பிள்ளைகளுக்கு அவள் இறைநம்பிக்கையை உணர்த்தத் தவறவில்லை. ஒவ்வொருநாளும் அவள் தன்னுடைய குழந்தைகளிடம் "கடவுள் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை" என்று சொல்லிக்கொண்டே வந்தாள். அது அவர்களுக்கு துன்பமயமான சூழலில் ஆறுதலையும், பாதுகாப்பையும் தந்தது.

அன்று தையல்மிஷினுக்கு வாடகை செலுத்தவேண்டிய மாதக்கடைசி நாள். ஏற்கனவே தையல்மிஷின் உரிமையாளர் வாடகையை ஒழுங்காகச் செலுத்தவில்லை என்றால், மிஷினை பிடுங்கிக்கொண்டு போய்விடுவேன் என்று எச்சரித்திருந்தான். இப்போது அந்த பெண்ணிடம் வாடகை செலுத்துவதற்கு போதிய பணமில்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் கதவை அடைத்துக்கொண்டு குழம்பிப்போய் இருந்தாள்.

அப்போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. தையல்மிஷின் உரிமையாளர்தான் கதவைத் தட்டுகிறார், அவரிடம் என்ன சொல்வது என்ற பீதியில் அவள் கதவைத் திறந்தாள். ஆனால் அங்கே ஓர் இளைஞன் கையில் குழந்தையுடன் நின்றிருந்தான். அவன் அந்த பெண்மணியிடம், "அம்மா! என்னுடைய மனைவிக்கு உடம்பு சரியில்லாமல், இப்போது மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள், அவளைக் கவனித்துக்கொள்ள நான் செல்லவேண்டும். எனவே இந்த நேரத்தில் என்னுடைய குழந்தை யார் நன்றாகப் பராமரிப்பார்கள்? என்று பக்கத்து வீடுகளில் கேட்டபோது, அவர்கள் உங்கள் பெயரைச் சொன்னார்கள். உங்களிடம் கொஞ்சம் பணம் தருகிறேன், என்னுடைய மனைவிக்கு உடம்பு சரியாகும்வரை குழந்தையை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு, அந்த இளைஞன் கிளம்பினான்.

வாடகைப்பணம் எப்படிச் செலுத்துவது என்று குழம்பிப் போயிருந்த அந்தப் பெண்மணிக்கு கடவுள் தக்கநேரத்தில் உதவிசெய்து, அவளை இடுக்கண்ணிலிருந்து காப்பாற்றினார்.

கடவுளை நம்பி வாழ்வோர் ஒருநாளும் கைவிடப்படுவதில்லை என்பதை இந்த நிகழ்வானது நமக்கு அருமையாக எடுத்துரைக்கிறது.

நற்செய்தி வாசகத்தில் தொழுநோயாளர் ஒருவர் ஆண்டவர் இயேசுவை அணுகி, "நீர் விரும்பினால், என்னுடைய நோயை நீக்க உம்மால் முடியும்" என்கிறார். அதற்கு இயேசு, "நான் விரும்புகிறேன், உம்முடைய நோய் நீங்குக" என்கிறார். உடனே அவருடைய நோய் அவரைவிட்டு நீங்குகிறது. இங்கே அவருடைய நம்பிக்கை அவருக்கு நலமளிப்பதைப் பார்க்கமுடிகிறது. இயேசுவால் தன்னுடைய நோயை நீக்க முடியும் என்று அவர் நம்பி வந்தார், அதனால் நலம்பெற்றார்.

திருப்பாடல் 22:4 ல் வாசிக்கின்றோம், "எங்கள் மூதாதையர் உன்மீது நம்பிக்கை வைத்தனர், அவர்கள் நம்பியதால் நீர் அவர்களை விடுவித்தீர்" என்று. ஆம், நம்பிக்கைதான் இஸ்ரயேல் மக்களுக்கு மீட்பையும், விடுதலையையும் அளித்தது.

அதேபோல "நம்பிக்கை மலைகளை நகர்த்தும்" என்று ஆண்டவர் இயேசு வார்த்தைகளை அன்னைத் தெரசா தன்னுடைய வாழ்வில் அடிக்கடி மேற்கோள் இட்டுக் காட்டுவர். அவ்வார்த்தை அவர்களுக்கு பலநேரங்களில் உதவியது என்பதையும் சுட்டிக்காட்டுவார். நாம் கடவுள்மீது உண்மையான, ஆழமான நம்பிக்கையோடு வாழ்ந்தால் நமக்கு எந்நாளும் வளமும், நலமும்தான்.

ஆதலால் இறைவன்மீது ஆழமான நம்பிக்கை வைப்போம். அவர்தரும் அருளை நிறைவாய் பெறுவோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
இனி எல்லாம் சுகமே!

ராசியான


கடந்த வாரம் என் பங்கில் திருப்பலி முடிந்து, வெளியே நின்று எல்லாரையும் வாழ்த்தி வழியனுப்பிக் கொண்டிருந்தபோது, ஒரு பெண்மணி தன் கையில் அணிந்திருக்கும் மோதிரத்தை ஆசீர்வதித்துக் கொடுக்கச் சொன்னார்.

திருமண மோதிரம் என்றால் ஜோடியாகத் தான் மந்திரிப்பர்.

இந்த மோதிரம் தனியாக இருந்தது. மேலும், எமரால்ட் என்று சொல்லப்படும் கல் பதித்து மிக அழகாக இருந்தது.

இந்த பெண்மணிக்கு இயல்பாகவே ராசிக்கற்கள் மேல் ஒரு நாட்டம் உண்டு.

தான் ஏற்கனவே ஒரு கல் வைத்த மோதிரம் வைத்திருந்ததாகவும், அது இருந்தால் தன் வாழ்வில் எல்லாம் நன்றாக நடக்கும் என்றும் சொன்னவர், அது தொலைந்து போனதாக சொல்லி வருத்தப்பட்டார்.

ராசியான கல். ராசியான நாள். ராசியான படம். ராசியான நேரம். ராசியான பை. ராசியான சட்டை. ராசியான கடிகாரம். ராசியான மோதிரம். ராசியான நபர். ராசியான முகம்.

நாமும் ராசியான பொருட்களை வைத்திருக்கிறோம்.

இவைகள் உண்மையில் ராசியைக் கொண்டுவருகிறனவா, அல்லது இல்லையா என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட நம்பிக்கை.

நாளைய முதல் வாசகத்தில் (1 சாமுவேல் 4) இப்படித்தான் ஒரு நிகழ்வு நடக்கிறது.

பெலிஸ்தியருக்கு எதிரான போரில் இஸ்ரயேலர் தோற்கின்றனர்.

தோல்வியின் காரணம் என்ன என்று எல்லாரும் யோசித்தபோது, ஊர் பெரியவர்கள் எல்லாரும் சேர்ந்து, "ஆண்டவரின் பேழை நம் நடுவில் இல்லாததால்தான் தோற்றுவிட்டோம்!" என கண்டுபிடிக்கின்றனர்.

உடனடியாக சீலோவுக்கு ஆள்கள் அனுப்பப்பட்டு, ஆண்டவரின் பேழையும் கொண்டுவரப்படுகிறது. பேழை வந்தவுடன் ஒரே ஆர்ப்பாட்டம். இந்த ஆர்ப்பாட்டம் கேட்டவுடன், எதிரிகளும் நடுங்குகின்றனர்.

"ராசியான பேழை நம்மிடம் இருக்கிறது" என்று தைரியமாக போரிடச் சென்றவர்களுக்கு இன்னும் அதிக பேரதிர்ச்சி காத்திருக்கிறது.

பேழை தங்களோடு இல்லாதபோது 4000 இஸ்ரயேலர்கள் இறந்தனர். இப்போது, ராசியான பேழை இருந்தபோது, 30000 இஸ்ரயேலர்கள் இறக்கின்றனர் (ஏறக்குறைய ஏழு மடங்கு பேரழிவு!).

கடவுள் இங்கே அவர்களுக்கு மூன்று விஷயங்களைக் கற்பிக்கின்றார்:

அ. வாழ்க்கையில் ராசியானது, ராசியற்றது என எதுவும் இல்லை. எது எது எந்தெந்த நேரத்தில் நடக்குமோ, அது அது அந்த நேரத்தில் நடக்கும். பிரகாஷ்ராஜ், "மொழி" படத்தில் சொல்வதுபோல, "வாழ்க்கையில் ஒரு சில விஷயங்களை வெள்ளைப் பூண்டினால் கூட காப்பாற்ற முடியாது!"

ஆ. ஆண்டவரின் பிரசன்னம் மேஜிக் பிரசன்னம் அல்ல. வேளாங்கண்ணியில் சுனாமி வந்து, பலர் அழிந்தபோது, "அங்கிருந்த மாதாவும், கடவுளும் மக்களை ஏன் காப்பாற்றவில்லை?" என பலர் விமர்சித்தனர். கடவுள் ஒரு இடத்தில் இருக்கிறார் என்பதற்காக, அங்கே எல்லாம் நன்றாக நடந்துவிடும் என்று பொருளல்ல. ஒரே நொடியில் கசப்பானவற்றை இனிப்பானவைகளாக மாற்றும் மந்திரவாதி அல்ல கடவுள்.

இ. அவரவரின் செயல்கள்தான் அவரவரின் முடிவைக் கொண்டுவருகின்றன. இஸ்ரயேல் பெலிஸ்தியரிடம் தோற்றதற்கு அவர்களின் கீழ்ப்படியாமையும், அவர்களின் குருக்களின் மகன்களின் கீழ்ப்படியாமையும்தான் காரணம். இந்தக் காரணத்திற்காகத்தான் கடவுள் அவர்களை பிலிஸ்தியரிடம் ஒப்புவிக்கின்றார். கடவுள் இரக்கமுள்ளவர்தாம். ஆனால், சில நேரங்களில் ரொம்ப ஸ்டிரிக்ட் ஆன பி.இ.டி. மாஸ்டராகவும் இருக்கிறார்.


Yesu Karunanidhi, Madurai.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!