Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       09  ஐனவரி 2018  
                                       பொதுக்காலத்தின் முதல் வாரம் - செவ்வாய்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவர் அன்னாவை நினைவுகூர்ந்தார்; அவரும் சாமுவேலை ஈன்றெடுத்தார்.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 9-20

அந்நாள்களில் சீலோவில் உண்டு குடித்தபின், அன்னா எழுந்தார். குரு ஏலி, ஆண்டவரின் கோவில் முற்றத்தில் ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தார். அன்னா மனம் கசந்து அழுது புலம்பி, ஆண்டவரிடம் மன்றாடினார். அவர் பொருத்தனை செய்து வேண்டிக்கொண்டது: "படைகளின் ஆண்டவரே! நீர் உம் அடியாளாகிய என் துயரத்தைக் கண்ணோக்கி, என்னை மறவாமல் நினைவுகூர்ந்து எனக்கு ஓர் ஆண் குழந்தையைத் தருவீரானால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவராகிய உமக்கு ஒப்புக்கொடுப்பேன். அவனது தலைமேல் சவரக் கத்தியே படாது."

அவர் இவ்வாறு ஆண்டவர் திருமுன் தொடர்ந்து மன்றாடிக் கொண்டிருந்தபோது, ஏலி அவருடைய வாயைக் கவனித்தார். அன்னா தம் உள்ளத்தினுள் பேசிக் கொண்டிருந்தார்: அவருடைய உதடுகள் மட்டும் அசைந்தன; குரல் கேட்கவில்லை. ஆகவே ஏலி அவரை ஒரு குடிகாரி என்று கருதினார்.

ஏலி அவரை நோக்கி, "எவ்வளவு காலம் நீ குடிகாரியாய் இருப்பாய்? மது அருந்துவதை நிறுத்து" என்றார். அதற்கு அன்னா மறுமொழியாக, "இல்லை என் தலைவரே! நான் உள்ளம் நொந்த ஒரு பெண். திராட்சை இரசத்தையோ வேறு எந்த மதுவையோ நான் அருந்தவில்லை. மாறாக, ஆண்டவர் திருமுன் என் உள்ளத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன். உம் அடியாளை ஒரு கீழ்த்தரப் பெண்ணாகக் கருத வேண்டாம். ஏனெனில், என் துன்ப துயரங்களின் மிகுதியால் நான் இதுவரை பேசிக் கொண்டிருந்தேன்" என்று கூறினார்.

பிறகு ஏலி, "மனநிறைவோடு செல். இஸ்ரயேலின் கடவுள் நீ அவரிடம் விண்ணப்பித்த உனது வேண்டுகோளைக் கேட்டருள்வார்" என்று பதிலளித்தார். அதற்கு அன்னா, "உம் அடியாள் உம் கண்முன்னே அருள் பெறுவாளாக!"என்று கூறித் தம் வழியே சென்று உணவு அருந்தினார். இதன்பின் அவர் முகம் வாடியிருக்கவில்லை. அவர்கள் காலையில் எழுந்து ஆண்டவர் திருமுன் வழிபட்டுவிட்டுத் திரும்பிச்சென்று இராமாவில் இருந்த தங்கள் இல்லம் அடைந்தனர்.

எல்கானா தம் மனைவி அன்னாவோடு கூடி வாழ்ந்தார். ஆண்டவரும் அவரை நினைவுகூர்ந்தார். உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தார். "நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்" என்று சொல்லி, அவர் அவனுக்குச் "சாமுவேல்என்று பெயரிட்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
 
பதிலுரைப் பாடல்  1 சாமு 2: 1. 4-5. 6-7. 8 (பல்லவி: 1a)
=================================================================================
பல்லவி: ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது!

1 ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது! ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது! என் வாய் என் எதிரிகளைப் பழிக்கின்றது! ஏனெனில் நான் நீர் அளிக்கும் மீட்பில் களிப்படைகிறேன். பல்லவி

4 வலியோரின் வில்கள் உடைபடுகின்றன! தடுமாறினோர் வலிமை பெறுகின்றனர்! 5 நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு உணவு பெறுகின்றனர்; பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தார் ஆகியுள்ளனர்! மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள், பல புதல்வரைப் பெற்றவளோ தனியள் ஆகின்றாள்! பல்லவி

6 ஆண்டவர் கொல்கிறார்; உயிரும் தருகின்றார்; பாதாளத்தில் தள்ளுகிறார்; உயர்த்துகின்றார்; 7 ஆண்டவர் ஏழையாக்குகிறார்; செல்வராக்குகின்றார்; தாழ்த்துகின்றார்; மேன்மைப்படுத்துகின்றார்! பல்லவி

8 புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்! குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்! உயர்குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்! பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 
இயேசு அதிகாரத்தோடு மக்களுக்குப் போதித்து வந்தார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 21-28

இயேசுவும் சீடர்களும் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.

அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, "நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்'' என்று கத்தியது. "வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ'' என்று இயேசு அதனை அதட்டினார்.

அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று. அவர்கள் அனைவரும் திகைப்புற்று, "இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!'' என்று தங்களிடையே பேசிக்கொண்டனர். அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================

இயேசுவின் அதிகாரம் கொண்ட போதனை!

 உலகில் தோன்றிய தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவர் கிரேக்க நாட்டைச் சார்ந்த டெமஸ்தனிஸ் (Demosthenes) என்பவர்.
ஒருசமயம் அவருக்கு ஏதென்ஸ் நகரில் இருந்த அறிவுஜீவிகளுக்கு மத்தியில் பேசவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தில் இருந்தார்கள். அப்பட்டவர்களுக்கு மத்தியில் டெமஸ்தனிஸ் பேசத் தொடங்கியபோது, அங்கிருந்தவர்கள் அவரைக் கண்டுகொள்ளாமலும் பொறுமையிழந்தும் இருந்தார்கள். உடனே அவர், "நான் உங்களுக்கு ஒரு சிறுகதை சொல்கிறேன் கேளுங்கள்" என்று சொல்லி தன்னுடைய பேச்சை ஆரம்பித்தார். "கோடை காலத்தில் ஒருநாள் ஒரு வாலிபன் தன் வீட்டிலிருந்து மேகரா நகரத்திற்குச் செல்ல ஒரு கழுதையை வாடகைக்கு அமர்த்திக் கொண்டான். கழுதையின் சொந்தக்காரனும் அவனுடன் பயணம் செய்தான். உச்சி வெயிலின் கடுமையை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் கழுதையின் நிழலில் இருவரும் உட்கார முயற்சிசெய்து ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டிருந்தனர். அப்போது கழுதையின் சொந்தக்காரன், "நான் கழுதையைத்தான் வாடகைக்கு விட்டேன். கழுதையின் நிழலையல்ல" என்று சொன்னான். அதற்கு அந்த வாலிபன், "நான் கழுதையை வாடகைக்கு எடுத்திருப்பதால் கழுதை சம்பந்தப்பட்ட அனைத்துமே எனக்குச் சொந்தம்" என்று வாதாடினான். இதைச் சொல்லிவிட்டு டெமஸ்தனிஸ் அங்கிருந்து புறப்படத் தயாரானார்.
சுவாஸ்ரயமான கதையைப் பாதியிலே நிறுத்த விருப்பமில்லாத அங்கிருந்த அறிவுஜீவிகள்  அவரைத் தொடர்ந்து பேசச் சொன்னார்கள். அதற்கு டெமஸ்தனிஸ், "அதெப்படி? ஒரு கழுதையின் நிழலின் கதையைக் கேட்கத் துடிக்கும் நீங்கள் நான் பேசப்போகும் ஒரு முக்கியமான விசயத்தைப் பற்றிக் கேட்க விருப்பமில்லாமல் இருக்கின்றீர்களே" என்றார். இதைக் கேட்டு வெட்கித் தலைகுனிந்து போன அந்த அறிவுஜீவிகள் அவரைத் தொடர்ந்து பேச அனுமதித்தார்கள்.

 உலகில் தோன்றிய மிக உன்னதமான பேச்சாளர்கள்/ தலைவர்கள் தங்களுடைய பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்க எப்படிப்பட்ட யுக்திகளை எல்லாம் பயன்படுத்தி இருக்கின்றார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எளிய உதாரணம். ஆனால், ஆண்டவர் இயேசு தன்னுடைய பேச்சைக் கேட்கக்கூடியவர்கள் வியந்து போகக்கூடிய அளவுக்கு எந்தவொரு யுக்தியையும் பயன்படுத்தவில்லை. அவர் செய்ததெல்லாம் அதிகாரத்தோடு போதித்ததுதான். அந்த போதனைதான் மக்களை, ஏன் அவருடைய எதிரிகளைக் கூட அவர்பக்கம் இழுத்தது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கப்பர்நாகுமில் உள்ள தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பிக்கத் தொடங்குகின்றார். அவருடைய போதனையைக் கேட்ட மக்கள் வியப்பில் ஆழ்ந்துபோகின்றார்கள். ஏனென்றால், அவர் மறைநூல் அறிஞரைப் போன்று அல்லாமல், அதிகாரத்தோடு போதிக்கின்றார். இங்கே நமக்கு ஒரு கேள்வி எழலாம், மக்கள் மறைநூல் அறிஞர்களின் போதனையைக் கேட்டு வியப்படையாமல் இருந்திருக்கின்றார்களே அப்படியானால் அவர்களுடைய போதனை எப்படி இருந்திருக்கும் என்பதே அக்கேள்வி. பொதுவாக மறைநூல் அறிஞர்கள் போதிக்கின்றபோது அவர் சொன்னார், இவர் சொன்னார், அங்கே அப்படி சொல்லப்பட்டிருக்கின்றது, இங்கே இப்படி எழுதப்பட்டிருகின்றது என்று சொல்லித்தான் போதிப்பார்கள். இது இயேசுவின் போதிக்கும் பாணிக்கு முற்றிலும் எதிர்பதமானது. ஏனென்றால், இயேசு போதிக்கின்றபோது, "நான் உங்களுக்குச் சொல்கின்றேன்" என்றுதான் போதித்தார். இது மக்களுக்கு மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

 அடுத்து மறைநூல் அறிஞரின் போதனை மக்களுக்கு மத்தியில் எடுபடாமல் போனதற்கு இன்னொரு காரணம். அவர்கள் போதிப்பது ஒன்றும் வாழ்வது ஒன்றுமாக இருந்தது. எடுத்துக்காட்டாக ஒருபுறம் அவர்கள் ஏழைகள் மீது அக்கறை கொண்டு வாழவேண்டும் என்று போதித்தார்கள். இன்னொரு புறத்தில் அவர்கள் கைம்பெண்களின் வீடுகளை அபகரித்துக்கொண்டார்கள். இதனால் மக்கள் அவர்களுடைய போதனையை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், ஆண்டவர்  இயேசுவோ தான் போதித்ததை வாழ்வாக்கினார், வாழ்ந்ததைப் போதித்தார். அதனால் அவருடைய போதனை மக்களால் வியந்து பார்க்கக்கூடியதாக, வல்லமை உள்ளதாக இருந்தது. என்றைக்கு ஒரு மனிதர் உள்ளத்தில் உண்மையோடும் நேர்மையோடும், பிறர்மீது அன்போடு இருக்கின்றாரோ அன்றைக்கு அவனுடைய போதனை வல்லமையுள்ளதாகவும், அதிகாரம் கொண்டதாகும் இருக்கும். இது யாராலும் மறுக்க முடியாத  உண்மை. ஆண்டவர் இயேசு தன்னுடைய உள்ளத்தில் உண்மையோடும், பிறர்மீதும் அக்கறையோடும் இருந்தார். அவையே அவருடைய போதனையை அதிகாரம் கொண்டதாகும், வல்லமையுள்ளதாகும் மாற்றிக் காட்டியது.

 நம்முடைய போதனை வல்லமையுள்ளதாகும் அதிகாரம் கொண்டதாகும் இருக்கவேண்டும் என்றால், நம்முடைய வாழ்வு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்வைப் போன்று எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும்.

ஆகவே, நம்முடைய போதனை வல்லமையுள்ளதாக இருக்க, நாம் எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!