Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   07  ஜனவரி 2020  
    திருக்காட்சி விழாவுக்குப்பின் செவ்வாய்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
கடவுள் அன்பாய் இருக்கிறார்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-10

அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்துகொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 72: 1-2. 3-4. 7-8 (பல்லவி: 11) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.
1
கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.
2
அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! - பல்லவி

3
மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்; குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும்.
4யb
எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக! ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக. - பல்லவி

7
அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.
8
ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(லூக் 4: 18-19)

அல்லேலூயா, அல்லேலூயா! "ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிட்டு அறிவிக்கவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார்." அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசு அப்பம் பெருகச் செய்து, தாம் இறைவாக்கினர் எனக் காட்டுகிறார்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 34-44


அக்காலத்தில் இயேசு படகிலிருந்து கலிலேயா கடற்கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். இதற்குள் நெடு நேரமாகிவிடவே, சீடர் அவரிடம் வந்து, "இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, ஏற்கெனவே நெடுநேரம் ஆகிவிட்டது. சுற்றிலுமுள்ள பட்டிகளுக்கும் ஊர்களுக்கும் சென்று உண்பதற்கு ஏதாவது அவர்களே வாங்கிக் கொள்ளுமாறு நீர் மக்களை அனுப்பிவிடும்" என்றனர். அவர் அவர்களிடம், "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்று பதிலளித்தார். அவர்கள், "நாங்கள் போய் இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கி இவர்களுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும் என்கிறீரா?" என்று கேட்டார்கள். அப்பொழுது அவர், "உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள்" என்று கூற, அவர்களும் பார்த்துவிட்டு, "ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன" என்றார்கள். அவர் எல்லாரையும் பசும்புல் தரையில் அமரச் செய்யும்படி சீடர்களைப் பணித்தார். மக்கள் நூறு பேராகவும், ஐம்பது பேராகவும் வரிசை வரிசையாய் அமர்ந்தனர். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறுவதற்காகத் தம் சீடரிடம் கொடுத்தார். அவ்வாறே அந்த இரு மீன்களையும் எல்லாருக்கும் பகிர்ந்தளித்தார். அனைவரும் வயிறார உண்டனர். பின் எஞ்சிய அப்பத் துண்டுகளையும் மீன் துண்டுகளையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். அப்பம் உண்ட ஆண்களின் தொகை ஐயாயிரம்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 1 யோவான் 4: 7-10

"ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக!"


நிகழ்வு

இளம்பெண் ஒருத்தி திருட்டுத் தொழிலில் ஈடுபட்டதற்காக ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டாள். அவள் சிறையில் அடக்கப்பட்ட பின்பு யாருடனும் பேசாமலும் பழகாமலும் இருந்தாள். மட்டுமல்லாமல், யாராவது அவளிடம் பேச வந்தபொழுது, அவள் மிகவும் மூர்கத்தனமாக நடந்துகொண்டாள். இதனால் யாரும் அவளிடம் பேசுவதுகூட இல்லை.

இப்படியிருக்கையில் ஒருநாள் சிறையில் இருந்த கைதிகளைப் பார்ப்பதற்கும் அவர்களை ஆற்றுப்படுத்துவதற்கும் கிறிஸ்தவப் பெண்மணி ஒருவர் வந்தார். அவர் அந்த சிறைக்கு அவ்வப்பொழுது வந்து, கைதிகளிடம் பேசுவதும் ஆற்றுப்படுத்துவதும் உண்டு. அந்த நாளில் அவர் வழக்கம்போல் எல்லாக் கைதிகளிடமும் பேசிக்கொண்டு வந்தார். திருட்டு தொழிலில் ஈடுபட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்தப் இளம்பெண்ணின் அறைக்கு அருகில் வந்ததும், அங்கிருந்த காவலர் அவரிடம், "அம்மா! இந்த அறையில் இருக்கும் பெண்ணிடம் பேசாதீர்கள். இவர் உங்களிடம் மூர்க்கமாக நடந்துகொள்வார்கள். பிறகு நீங்கள் வருத்தப்படுவீர்கள்" என்று எச்சரித்தார். "நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு கிறிஸ்தவப் பெண்மணி, உள்ளே இருந்த இளம்பெண்ணை அழைத்தார்.

தொடக்கத்தில் அவரைக் கண்டுகொள்ளாமல் இருந்த இளம்பெண், அவர் மீண்டும் மீண்டுமாக அழைத்ததும் அவள், "உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கடுஞ்சினத்தோடு வந்தாள். அவ்வாறு வந்தவளை கிறிஸ்தவப் பெண், கட்டியணைத்து முத்தமிட்டாள். அது அந்த இளம்பெண்ணின் உள்ளத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. "மிகவும் அழுகாக, பார்ப்பது மிகவும் அவலட்சணமாக இருக்கும் என்னையும் அன்புசெய்வதற்கு இப்புவியில் ஒருவர் இருக்கின்றாரே...!" என்று அவள் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.

இந்த சந்திப்புக்குப் பின் அந்த இளம்பெண்ணின் நடவடிக்கைகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருந்தது. அவள் சிறையில் இருந்த எல்லாரிடமும் பேசினாள், பழகினாள். நல்லமுறையில் உடையுடுத்தி, நல்லமுறையில் இருந்தாள். அவளை இவ்வாறு பார்த்த சிறையதிகாரி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். மட்டுமல்லாமல், அவளுடைய நன்னடத்தையின் பொருட்டு, அவளை விரைவில் சிறையிலிருந்து விடுவித்தார். இதற்குப் பின்பு அந்த இளம்பெண், தன்னை மிகவும் அன்புசெய்த அந்தக் கிறிஸ்தவப் பெண்ணைச் சென்று சந்தித்தாள். அவர் அவளுக்கு நல்லதொரு வழியைக் காட்டவே, அவள் புதியதொரு வாழ்க்கை வாழத் தொடங்கினாள்.

நாம் ஒருவரிடம் காட்டு அன்பு செலுத்துகின்றபொழுது, அது அவருடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற உண்மையை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய முதல் வாசகத்திலும் புனித யோவான் நமக்கு இதே செய்தியைத்தான் தருகின்றார். நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

அன்புசெலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்

முதல் வாசகத்தில் புனித யோவான், "ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக" என்று கூறுகின்றார். இயேசுவின் அன்பு கட்டளையை (யோவா 13: 34) அப்படியே உள்வாங்கிக் கொண்ட யோவான், தன்னுடைய சபையாரிடம் அதே செய்தியை எடுத்துச் சொல்கின்றார். மட்டுமல்லாமல், ஒருவர் மற்றவரை அன்பு செலுத்துவோர் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்; அவர்கள் கடவுளை அறிந்தவர்களாகவும் இருக்கின்றார்கள் என்று கூறுகின்றார்.

கடவுள் அன்பாய் இருக்கின்றார். அப்படிப்பட்டவரை அறிந்து, ஒருவர் மற்றவரை அன்பு செலுத்துகின்றவர்கள் கடவுளின் பிள்ளைகளாகத்தான் இருக்கமுடியும். அலகைதான் பகைமையை, வெறுப்பை விதைப்பதாக இருக்கும்; ஆனால், ஆண்டவர் மனித உள்ளங்களில் அன்பை விதைப்பவர். அப்படிப்பவரைப் போன்று ஒருவர் மற்றவரை நாம் அன்பு செய்து வாழ்கின்றபொழுது, நாம் அவருடைய அன்பு மக்களாக இருப்போம் என்பது உறுதி.

அன்பு செயலில் வெளிப்படவேண்டும்

கடவுள் அன்பாய் இருக்கின்றார்; அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள் என்று கூறும் யோவான், இன்னொரு முக்கியமான செய்தியைக் கூறுகின்றார். அது என்னவெனில், கடவுள் தன்னுடைய அன்பின் வெளிப்பாடாக தன் ஒரே மகனை இவ்வுலகிற்கு அனுப்பினார் என்பதாகும். கடவுள் தன்னுடைய அன்பினை தன் மகனை இவ்வுலகிற்கு அனுப்பியதன் மூலம் வெளிப்படுத்தியதுபோல, நாமும் நம்முடைய அன்பினை ஒருவர் மற்றவரிடம் வெளிப்படுத்தவேண்டும். இல்லையென்றால், நம்முடைய அன்பு போலியாக அன்பாக மாறிவிடும். இன்றைக்குப் பலர் எல்லாரையும் அன்பு செய்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு மனிதர்களில் வேறுபாடு காட்டுவதைக் காணமுடிகின்றது. இத்தகையோரின் அன்பு போலியான அன்பு. அவர்கள் போலியானவர்கள் என்று உறுதியாகச் சொல்லலாம்.

சிந்தனை

"உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக" (உரோ 12:9) என்பார் புனித பவுல். ஆகையால், நம்முடைய அன்பு உண்மையானதாக, செயலில் வெளிப்படுவதாக, கள்ளமற்றதாய் இருக்கச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மாற்கு 6: 34-44

"அவர்களுக்குப் பரிமாறுவதற்காகத் தம் சீடரிடம் கொடுத்தார்"

நிகழ்வு

பிலிப்பைன்ஸில் உள்ள மணிலாவில் சீனாவைச் சார்ந்த சிறுவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு மிதிவண்டி வாங்க வேண்டும் என்று நீண்ட நாள்களாக ஆசை. ஆதலால், அவன் தனக்குக் கிடைத்த பணத்தைச் சிறுகச் சிறுக சேகரிக்கத் தொடங்கினான். குறிப்பிட்ட ஒரு நாளில் மிதிவண்டி வாங்குவதற்குப் போதுமான மூன்று பவுண்டுகள் அவனிடம் வந்ததும், அவன் மிதிவண்டி வாங்குவதற்காகக் கடைக்குச் சென்றான். செல்கின்ற வழியில், "ஜப்பானின் தாக்குதலால் நம்முடைய நாட்டில் எத்தனையோ பேர் உணவில்லாமல் தவிக்கின்றபொழுது நமக்கு மிதிவண்டி தேவையா...? இந்த மூன்று பவுண்டுகளுக்கும் ரொட்டி வாங்கி, அவற்றை இங்குள்ள சீனத் தூதரகத்தின் வழியாக நம்முடைய நாட்டிற்கு அனுப்பிவைத்தால், அங்குள்ளவர்கள் பயனடைவார்களே! என்ற எண்ணமானது அவனுக்கு வந்தது.

உடனே அவன் மீதிவண்டிக் கடைக்குச் செல்லாமல், ரொட்டிக்கடைக்குச் சென்று "மூன்று பவுண்டுகளுக்கு ரொட்டி தாருங்கள்" என்று கடைக்காரரிடம் கேட்டான். கடைக்காரரும் மூன்று பவுண்டுகளுக்கு உரிய ரொட்டிகளை ஒரு கோணிப்பையில் வைத்து அவனிடம் கொடுத்தார்கள். அதைப் பெற்றுக்கொண்ட சிறுவன், நேராக சீனத் தூதரகத்திற்குச் சென்று, அங்கிருந்தவர்களிடம், "இவற்றை சீனாவில் உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு அனுப்பி வையுங்கள்" என்றான். அவன் சொன்னதைக் கேட்டு அங்கிருந்தவர்களுக்கு வியப்பாக இருந்தது.

இருந்தாலும், "மிகக் குறைந்த அளவில் இருக்கும் இந்த ரொட்டியை சீனாவிற்கு அனுப்பி வைத்தால், எத்தனை பேருக்குப் பயன்படும்...? இவை போகிற வழியிலேயே கெட்டுப் போய்விடுவதற்கான வாய்ப்புகள் மிகுதி. அதனால் இவற்றை என்ன செய்வது...?" என்று கலந்தாலோசிக்கத் தொடங்கினார்கள். பின்னர் அவர்கள் அந்தச் சிறுவன் கொண்டுவந்திருந்த ரொட்டிகளில் "நாட்டுப்பற்று ரொட்டி" (Patriotic Bread) என எழுதி, அவற்றைச் சீன மக்கள் மிகுதியாக வாழும் பகுதிகளில் விற்கச் சொன்னார்கள். சிறுவனும் அவர்கள் சொன்னதுபோன்று, சீனர்கள் மிகுதியாக வாழும் பகுதிக்குச் சென்று, நாட்டுப்பற்று ரொட்டிகளை விற்கத் தொடங்குகின்றான்.

முதல் நாள் அவனுக்கு பத்துப் பவுண்டுகள் வரைக்கும் கிடைத்தன. அந்தப் பத்துப் பவுண்டுகளைக் கொண்டு மேலும் ரொட்டிகளை வாங்கி, அவற்றில் "நாட்டுப்பற்று ரொட்டிகள்" என எழுதி விற்கத் தொடங்கினான். இந்த முறை அவன் ரொட்டிகளை விற்கத் தொடங்கியபொழுது, சீனாவிலிருந்து அங்கு தங்கியிருத ஒருசில பெண்களும் அவனுக்கு உதவி புரிந்தார்கள். அவர்கள் நாட்டுப்பற்று ரொட்டிகளை கிராமப்புறங்களில் இருந்த சீனர்களிடம் விற்றுத் தந்தார்கள். இவ்வாறு அவனுக்கு மூன்று பவுண்டுகளிலிருந்து முந்நூறு பவுண்டுகள் கிடைத்தன. அந்தப் பணத்தை அவன் சீனத் தூதரகத்திற்குக் கொண்டுசென்று, அங்கிருந்தவர்களிடம், சீனாவில் மீட்புப்பணியை மேற்கொள்ளும் குழுவினரிடம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டான். அவர்களும் அவனுடைய இந்த முயற்சியைப் பாராட்டி, அவன் கொடுத்த பணத்தை சீனாவில் மீட்புப் பணியில் ஈடுபடுவோரிடம் அனுப்பி வைத்தார்கள்.

இதற்கிடையில் மணிலாவில் இருந்த ஓர் அமெரிக்கப் பெண்மணி, தன்னுடைய நாட்டிற்குத் திரும்பிச் சென்று, அங்கிருந்தவர்களிடம் சிறுவனின் இரக்கச் செயல்களைப் பற்றி எடுத்துச் சொன்னார். இதைக் கேட்ட ஒரு பெண்மணி (ஹென்றி போர்டின் மனைவி), "சிறுவன் மிதிவண்டி வாங்குகின்ற காசில்தான் மக்களுக்கு உதவி செய்கின்றான்... அதனால் அவனுக்கு ஒரு மிதிவண்டியை வாங்கித் தருவோம்" என்ற உயர்ந்த எண்ணத்தில் மிதிவண்டி வாங்குவதற்கான பணத்தை அவனுக்கு அனுப்பி வைத்தார். அவன் அந்தப் பணத்தில் ஒரு மிதிவண்டி வாங்கி, அதனை ஒரு பணிநேரத்திக்கு இரண்டு சில்லிங்க்ஸ் என்று வாடகைக்குவிட்டு, அந்தப் பணத்தை சீனாவில் உள்ள மக்களுக்கு அனுப்பி வைத்தான். இவ்வாறு அவன் அனுப்பிய பணத்தால் ஓர் அநாதை இல்லமே சிறப்பாக நடக்கத் தொடங்கியது..

இந்த நிகழ்வில் வருகின்ற சிறுவன் மிதிவண்டி வாங்குவதற்காக வைத்திருந்த பணத்தை சீனாவில் இருந்த மக்களுக்கு அனுப்பியதால் பலரும் பயன்பெற்றார்கள். அதுபோன்று நாமும் நம்மிடம் இருப்பதைப் பிறரோடு பகிரும்பொழுது, பலரும் பயன்பெறுவார்கள் என்று இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துச் சொல்கின்றது. அதுகுறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

உணவுகொடுக்கவேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு

நற்செய்தியில் இயேசுவின் போதனையைக் கேட்க வரும் மக்களை, சீடர்கள் "உண்பதற்கு ஏதாவது அவர்களே வாங்கிக்கொள்ளுமாறு நீர் அவர்களை அனுப்பிவிடும்" என்று சொல்கின்றபொழுது, இயேசு அவர்களிடம், "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்கின்றார். இயேசு சீடர்களிடம் சொல்கின்ற இவ்வார்த்தைகள், எளிய மற்றும் வறிய நிலையில் இருக்கக்கூடிய மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வது நம் ஒவ்வொருவருடைய கடமை என்பதை நமக்கு உணர்த்துகின்றன. மேலும் இயேசு அப்பங்களையும் மீன்களையும் பலுகச் செய்தபிறகு, அவற்றைப் பரிமாறுவதற்குத் தன் சீடரிடமே கொடுக்கின்றார். இதுவும் கடவுள் நமக்குக் கொடுத்ததைப் பிறரோடு பகிர்ந்து வாழவேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது.

இன்றைக்குப் பலர் கடவுள் தங்களுக்குக் கொடுத்ததைத் தாங்கள் மட்டுமே அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலை மாறி, ஒவ்வொருவரும் தங்களிடம் இருப்பதைப் பிறருக்குக் கொடுக்க முன்வரவேண்டும். அப்பொழுதுதான் எல்லாரும் எல்லா வளமும் நலமும் பெறமுடியும்.

சிந்தனை

"கொடுத்ததெல்லாம் கொடுத்தான். அவன் யாருக்காகக் கொடுத்தான். ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்" என்பார் கவிஞர் வாலி. கடவுள் நமக்கு கொடுத்ததைப் பிறருக்குக் கொடுக்கவேண்டும். அதைத்தான் வாலியின் வரிகள் நமக்கு எடுத்துச்சொல்கின்றன. ஆகவே, கடவுள் நமக்குக் கொடுத்ததைப் பிறருக்குக் கொடுக்க முன்வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!