Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       05  ஐனவரி 2018  
                                                           கிறிஸ்து பிறப்புக்காலம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நாம் சகோதர அன்பு கொண்டுள்ளதால், சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து வந்துள்ளோம்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 11-21

அன்பிற்குரியவர்களே, நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்த செய்தி இதுவே; நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும். காயினைப்போல் நீங்கள் இராதீர்கள்; அவன் தீயோனைச் சார்ந்தவன்; ஏனெனில் தன் சகோதரரைக் கொலை செய்தான். எதற்காக அவரைக் கொலை செய்தான்? ஏனெனில் அவன் செயல்கள் தீயனவாக இருந்தன. அவன் சகோதரருடைய செயல்கள் நேர்மையானவையாக இருந்தன.

சகோதரர் சகோதரிகளே, உலகம் உங்களை வெறுக்கிறதென்றால் நீங்கள் வியப்படைய வேண்டாம். நாம் சகோதர அன்பு கொண்டுள்ளதால், சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து வந்துள்ளோமென அறிந்துள்ளோம்; அன்பு கொண்டிராதோர் சாவிலேயே நிலைத்திருக்கின்றனர்.

தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள். எந்தக் கொலையாளியிடமும் நிலைவாழ்வு இராது என்பது உங்களுக்குத் தெரியுமே. கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்துகொண்டோம். ஆகவே நாமும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதரர் சகோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பரிவு காட்டவில்லை என்றால் அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்?

பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம். இதனால் நாம் உண்மையைச் சார்ந்தவர்கள் என அறிந்துகொள்வோம்; நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தாலும், கடவுள் திருமுன் நம் உள்ளத்தை அமைதிப்படுத்த முடியும். ஏனெனில் கடவுள் நம் மனச்சான்றைவிட மேலானவர்; அனைத்தையும் அறிபவர். அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
 
பதிலுரைப் பாடல்தி.பா:  100: 1-2. 3. 4. 5 (பல்லவி: 1ய)
=================================================================================

பல்லவி: அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!

1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! 2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள். பல்லவி

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள். பல்லவி

4 நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ச்சிப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள். பல்லவி

5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! புலர்ந்தது நமக்குப் புனித நாள்; பிற இனத்தாரே வருவீர், இறைவன் மலரடி தொழுவீர்; ஏனெனில் உலகின்மீது எழுந்தது பேரொளி இன்றே. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 
நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்.  

+ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 43-51

Limage contient peut-tre : une personne ou plus
அக்காலத்தில் இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். அப்போது அவர் பிலிப்பைக் கண்டு, "என்னைப் பின்தொடர்ந்து வா" எனக் கூறினார்.

பிலிப்பு பெத்சாய்தா என்னும் ஊரைச் சேர்ந்தவர். அந்திரேயா, பேதுரு ஆகியோரும் இவ்வூரையே சேர்ந்தவர்கள்.

பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, "இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்" என்றார்.

அதற்கு நத்தனியேல், "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், "வந்து பாரும்!" என்று கூறினார்.

நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, "இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்" என்று அவரைக் குறித்து கூறினார்.

நத்தனியேல், "என்னை உமக்கு எப்படித் தெரியும்?" என்று அவரிடம் கேட்டார்.

இயேசு, "பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்த போதே நான் உம்மைக் கண்டேன்" என்று பதிலளித்தார்.

நத்தனியேல் அவரைப் பார்த்து, "ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்" என்றார்.

அதற்கு இயேசு, "உம்மை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்" என்றார்.

மேலும் "வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று அவரிடம் கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"என்னைப் பின்தொடர்ந்து வா"


ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி ஞானி இப்ராஹிம் இனுப் என்பவர். இவர் சூஃபி ஞானியாக மாறுவதற்கு முன்பு, மாட மாளிகையில் ராஜ வாழ்க்கை வாழ்ந்துவந்தார். இவர் ம்ம்ம் என்று சொன்னால், உடனே பணிவிடை செய்வதற்கு ஏராளமான ஏவலர்கள் இவரிடத்தில் இருந்தார்கள்.

ஒருநாள் இரவில் இப்ராஹிம் இனுப் தன்னுடைய அறையில் தூங்கிக்கொண்டிருந்தபோது, யாரோ ஒருவர் இவர் இருந்த இடத்தின் மேல்கூரையில் மிகவும் சத்தமாக நடப்பது போன்று இருக்க, உடனே தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து, அவர் யார் என்று பார்க்கச் சென்றார். அங்கே ஒருவர் தன்னுடைய கையில் ஒட்டகத்தைப் பிடித்துக்கொண்டு கூரையில் வேகவேக நடந்துக்கொண்டிருந்தார். இதைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போன இப்ராஹிம் இனுப் அந்த மனிதரிடம், "யார் நீ?, என்ன செய்துகொண்டிருக்கின்றாய்?" என்று கேட்டார். அதற்கு அந்த புதிய மனிதர், "ம்ம்ம்! பார்த்ததால் தெரியவில்லையா, நான் என்னுடைய ஒட்டகத்தை இந்த மேற்கூரையில் நடத்திக்கொண்டிருக்கின்றேன்" என்றார். "அது எப்படி இவ்வளவு பெரிய ஒட்டகத்தை இந்த மேற்கூரையில் உம்மால் நடத்திச் செல்ல முடிகின்றது?" என்று கேட்டார்.

அதற்கு அந்தப் புதிய மனிதர், "அரண்மனையும் ஆடம்பரமும்தான் வாழ்க்கை என்று நினைத்து உன்னால் வாழமுடிகின்றபோது, இவ்வளவு பெரிய ஒட்டகத்தை என்னால் ஏன் இந்த மேற்கூரையில் நடத்திச் செல்ல முடியாது" என்றார். இதைக் கேட்ட இப்ராஹிம் இனுப்பிற்கு ஏதோபோல் ஆகிவிட்டது. அப்போது அவர் தன்னிடத்தில் பேசுவது சாதாரண மனிதர் அல்ல, இறைவன்தான் என்னும் உண்மையை உணர்ந்தார். அந்த நேரத்திலே அவர் எல்லாவற்றையும் உதறித்தள்ளிவிட்டு, இறைப்பணிக்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்து வாழத் தொடங்கினார்.

இப்ராஹிம் இனுப் இறைவனின் குரலைக் கேட்ட மறுகணமே எல்லாவற்றையும் உதறித்தள்ளிவிட்டு, இறைப்பணிக்காக தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்துக்கொண்டதுபோல் நற்செய்தியில் பிலிப்பு, ஆண்டவர் இயேசு தன்னை, "என்னைப் பின்தொடர்ந்து வா" என்று சொன்ன உடனே, எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கின்றார்.

பிலிப்பு பெத்சாய்தாவைச் சார்ந்தவர். நிச்சயமாக இவர் மீன்பிடித் தொழிலைத்தான் செய்திருக்கவேண்டும். அப்படிப்பட்டவர் ஆண்டவர் இயேசு அழைத்தவுடன் தன்னுடைய உடைமைகள், தன்னுடைய தொழில் அத்தனையும் உதறிவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்து செல்கின்றார். உண்மையில் இந்த உலக இன்பங்களை விட, இயேசு பெரியவர் என்பதை அவர் உணர்ந்திருக்கவேண்டும். அதனால்தான் அவர்  அப்படிச் செய்கின்றார்.

இயேசு அழைத்தவுடன் அவர் பின்னால் செல்லக்கூடிய பிலிப்பு, அவரோடு இருந்து அவர் எப்படிப்பட்டவர் என்பதை துய்த்து உணர்கின்றார். அதன்பின்னர் அவர் தான் பெற்றுக்கொண்ட இந்த அனுபவத்தை தனக்குப் பழக்கமான நத்தனியேலிடம் சென்று, "இறைவாகினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்" என்று எடுத்துரைக்கின்றார். இவ்வாறு ஒரு சீடருக்கு உரிய எல்லாப் பணிகளையும் பிலிப்பு ஆற்றுகின்றார். எவ்வாறு எனில் மாற்கு நற்செய்தி 3:14 ல் நாம் வாசிப்பதுபோல, பிலிப்பு ஆண்டவர் இயேசுவோடு உடனிருக்கின்றார், அந்த உடனிருப்பின் மூலமாகப் பெற்றுக்கொண்ட அனுபவத்தை நத்தனியேலிடம் எடுத்துச் சொல்லி, அவரை இயேசுவிடம் கொண்டு வந்து சேர்கின்றார். இவ்வாறு பிலிப்பு ஓர் உண்மைச் சீடராக விளங்குகின்றார்.

ஆகவே, பிலிப்பிடமிருந்து நாம் ஏராளமான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். ஒன்று இயேசுவை ஒப்பற்ற செல்வமாகக் கண்டுகொண்டது. இந்த உலகத்தில் வாழக்கூடிய பலர், உலகம் தரும் இன்பங்கள்தான் நிலையானவை என நினைத்து, அவற்றுப் பின்னால் போவதைப் பார்க்கின்றோம். அப்படிப்பட்ட மக்களுக்கு மத்தியல் பிலிப்பு இயேசு ஒருவரே ஒப்பற்ற செல்வம் என்று உணர்ந்து, அவருக்குப் பின்னால் சென்றது நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. அடுத்ததாக, பிலிப்பு ஆண்டவர் இயேசுவைப் பின்தொடர்ந்ததோடு மட்டுமல்லாமல், அவரிடமிருந்து இறையனுபவம் பெற்றுகின்றார். அந்த அனுபவத்தை மற்றவருக்கும் எடுத்துச் சொல்லி, அவரை இயேசுவிடம் கொண்டுவந்து சேர்க்கின்றார். இயேசுவின் வழியில் நடக்கக்கூடிய நாம் ஒவ்வொருவரும், இறையனுபவம் பெறுவதோடு நம்முடைய வாழ்க்கை முடிந்துவிட்டது என எண்ணாமல், பெற்ற அனுபவத்தை பிறருக்கும் அறிவிக்க வேண்டியது நம்முடைய கடமை என நினைத்து அதன்படி வாழவேண்டும். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதாக இருக்கவேண்டும் நம்முடைய சீடத்துவ வாழக்கை.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், அவரிடமிருந்து இறையனுபவம் பெற்று, அதனை மற்றவருக்கு அறிவிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
இனி எல்லாம் சுகமே!

என்னை உமக்கு எப்படித் தெரியும்?

இன்றைய நற்செய்தி (யோவான் 1:43-51)
(ஜனவரி 5, 2018)

இன்றைய நற்செய்தி வாசகத்தில் உரையாடல் இயேசு - பிலிப்பு - நத்தனியேல் என்ற மூன்று கதைமாந்தர்களுக்கு இடையே இரண்டு நிகழ்வுகளாக அல்லது இரண்டு தளங்களில் நடக்கிறது.

"என்னை உமக்கு எப்படித் தெரியும்?" என மெய்சிலிர்க்கின்றார் நத்தனியேல்.

"நீ அமர்வது, நடப்பது, சிந்திப்பது, பேசுவது, உணர்வது, கேட்பது என அனைத்தும் நான் அறிவேன்" என எல்லாம் அறிந்தவராய், "இதைவிட பெரியவற்றைக் காண்பீர்" என்கிறார் இயேசு.

என்னை உமக்கு எப்படித் தெரியும்?

ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே உள்ள உறவை வர்ணிக்கப் பயன்படுத்தப்படும் வார்த்தை "தெரிதல்." "தெரிதல்" என்றால் "நெருக்கம்."

நத்தனியேல் மற்றவர்களிடம் காட்டும் நெருக்கம் முற்சார்பு எண்ணம் கொண்டதாக இருக்கின்றது. ஆகையால்தான், "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" என்று கேட்கின்றார்.

ஆனால், இயேசுவின் தெரிதல் அல்லது நெருக்கம் காணுதல், கேட்டல் ஆகியவற்றைக் கடந்ததாக இருக்கிறது. இந்த நெருக்கமே நத்தனியேலை சரணடையச் செய்கிறது.

இன்று இறைவன் மற்றும் மற்றவர்மேல் காட்டும் என் தெரிதல், நெருக்கம் எப்படி இருக்கிறது? எந்தத் தளத்தில் அது கட்டப்பட்டிருக்கிறது?

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Archdiocese of Madurai

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!