Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       04  ஐனவரி 2018  
                                                           கிறிஸ்து பிறப்புக்காலம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருக்கட்டும்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 22-28

அன்பிற்குரியவர்களே, இயேசு "மெசியா" அல்ல என்று மறுப்போரைத் தவிர வேறு யார் பொய்யர்? தந்தையையும் மகனையும் மறுப்போர்தாம் எதிர்க் கிறிஸ்துகள். மகனை மறுதலிப்போர் தந்தையை ஏற்றுக்கொள்வதில்லை; மகனை ஏற்று அறிக்கையிடுவோர் தந்தையையும் ஏற்றுக்கொள்கின்றனர்.

தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருக்கட்டும்; தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருந்தால் நீங்கள் மகனுடனும் தந்தையுடனும் இணைந்திருப்பீர்கள்.

அவரே நமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அவ்வாக்குறுதி நிலைவாழ்வு பற்றியதாகும். உங்களை ஏமாற்றுகிறவர்களை மனத்தில் கொண்டு இவற்றை உங்களுக்கு எழுதியுள்ளேன்.

நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள்பொழிவு உங்களுள் நிலைத்திருக்கிறது. அதனால் உங்களுக்கு எவரும் கற்பிக்க வேண்டிய தேவையில்லை. மாறாக, நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள்பொழிவால் அனைத்தையும் கற்றுக் கொள்கிறீர்கள். அவ்வருள்பொழிவு உண்மையானது; பொய்யானது அல்ல.

நீங்கள் கற்றுக்கொண்டதற்கேற்ப அவரோடு இணைந்து வாழுங்கள். ஆகவே, பிள்ளைகளே, அவர் தோன்றும்போது நாம் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கவும் அவருடைய வருகையின்போது வெட்கி விலகாதிருக்கவும் அவரோடு இணைந்து வாழுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
 
பதிலுரைப் பாடல்தி.பா: 98: 1. 7-8. 9 (பல்லவி: 3b)
=================================================================================

பல்லவி: மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

7 கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக! 8 ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். பல்லவி

9 ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
எபி 1: 1-2

அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 
மெசியாவைக் கண்டோம்.  

+ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 35-42

அக்காலத்தில் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் பெத்தானியாவில் நின்றுகொண்டிருந்தார். இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, "இதோ! கடவுளின் செம்மறி!"" என்றார். அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர்.

இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, "என்ன தேடுகிறீர்கள்?" என்று அவர்களிடம் கேட்டார்.

அவர்கள், "ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?"" என்று கேட்டார்கள். "ரபி" என்னும் எபிரேயச் சொல்லுக்குப் "போதகர்" என்பது பொருள். அவர் அவர்களிடம், "வந்து பாருங்கள்" என்றார்.

அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள். யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, "மெசியாவைக் கண்டோம்"" என்றார்.

"மெசியா" என்றால் "அருள்பொழிவு பெற்றவர்" என்பது பொருள். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார்.

இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, "நீ யோவானின் மகன் சீமோன். இனி "கேபா" எனப்படுவாய்" என்றார். "கேபா" என்றால் "பாறை" என்பது பொருள்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"என்ன தேடுகிறீர்கள்?"

அந்த ஊரில் இருந்த இளைஞன் ஒருவன் வாழ்வின் அர்த்தம் என்ன?" என்பதைத் தெரிந்துகொள்வதற்கு மிகவும் ஆர்வமாக இருந்தான். தன்னுடைய இந்தக் கேள்விக்கான பதில் அவன் பலரிடம் கேட்டுப் பார்த்தான். ஆனால் அவனுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. இந்த நேரத்தில் அவ்வூருக்கு பக்கத்தில் இருக்கின்ற மலையடிவாரத்தில் ஒரு முனிவர் இருக்கின்றார் என்பதும், அவர் மக்கள் தன்னிடம் கேட்டக்கூடிய எல்லாக் கேள்விகளுக்கும் சரியான பதிலைத் தருகின்றார் என்னும் செய்தி அவனுக்குத் தெரியவந்தது. உடனே அவன் மலையடிவாரத்தில் இருந்த முனிவரைச் சந்திக்க புறப்பட்டுச் சென்றான்.

அவன் முனிவரைத் சந்தித்து, சாஸ்டாங்கமாக அவருடைய காலில் விழுந்து பணிந்தான். பின்னர் அவன் அவரிடம் தன்னுடைய நீண்ட நாளைய கேள்வியை முன்வைத்தான். இளைஞன் கேட்ட கேள்வியை அமைதியாகக் கேட்டுக்கொண்டுவிட்டு, சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்தார் அவர். பின்னர் அவர் அவனிடம், "நீ இப்போது என்ன வேலை பார்த்துக்கொண்டிருக்கின்றாய்?" என்று கேட்டார். அதற்கு அவன், "நான் மருத்துவராக வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றேன்" என்றான். "மருத்துவராக வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றாயா! அப்படியானால் உன்னிடத்தில் வரக்கூடிய நோயாளிகளை நல்லவிதமாய் கவனி. அவர்களிடத்தில் முகம் கோணாமல் சேவை. அப்படிச் செய்தாயானால், நீ வாழ்வின் அர்த்தத்தைக் கண்டுகொள்வாய்" என்றார். அந்த இளைஞனும் முனிவரிடமிருந்து விடைபெற்றுவிட்டு, தான் ஆற்றி வந்த மருத்துவப் பணியை மிகச் சிறப்பாகச் செய்துவந்தான். அதன்மூலம் தன்னுடைய வாழ்விற்கான அர்த்தத்தைக் கண்டுகொண்டான்.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் இளைஞன், தன்னுடைய வாழ்விற்கான அர்த்தத்தைக் கண்டடைய பல மனிதர்களைத் தேடி அலைந்ததுபோல், இன்றைய உலகில் பலரும் பலவற்றைத் தேடி அலைகின்றார்கள். அவர்களுடைய தேடலுக்கான விடையைக் கண்டடைந்துகொண்டார்களா என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில், தன் பின்னால் வந்துகொண்டிருந்த திருமுழுக்கு யோவானின் சீடர்களிடம் இயேசு கேட்கக்கூடிய கேள்வி, "என்ன தேடுகிறீர்கள்?" என்பதுதான். யோவான் நற்செய்தியில் இயேசு பேசக்கூடிய முதல் வார்த்தையும் இதுதான். இயேசு கேட்ட இக்கேள்விக்கு முதலில் திருமுழுக்கு யோவானின் சீடர்களாக இருந்து, பின்னாளில் இயேசுவின் சீடர்களாக மாறிய யோவானும் அந்திரேயாவும், "நாங்கள் பணத்தை, அறிவை, நிம்மதியைத் தேடிவந்தோம்" என்று பதில் சொல்லவில்லை. மாறாக அவர்கள், "ரபி, நீர் எங்கே தங்கியிருக்கின்றீர்?" என்று கேட்கின்றார்கள். உடனே இயேசு அவர்களிடம், "வந்து பாருங்கள்" என்கின்றார். அவர்களும் அவர் பின்னால் சென்று அவரோடு தங்குகிறார்கள். இயேசு உண்மையில் யார் என்பதை உணர்ந்துகொள்கின்றார்கள்.

ஒருவேளை அவர்கள், நாங்கள் பணத்தை, ஞானத்தைத் தேடி உம்மிடத்தில் வந்திருக்கின்றோம்" என்று சொன்னால், அதற்கு இயேசுவின் பதில் வித்தியாசமாகவே இருந்திருக்கின்றோம். ஏனென்றால் இயேசு அப்பங்களைப் பலுகச் செய்ததனால், அவர் பின்னாலேயே வந்துகொண்டிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து அவர் சொல்லக்கூடிய பதில் வித்தியாசமாக இருக்கும் (யோவா 6: 1-15). ஆனால், இங்கே திருமுழுக்கு யோவானின் சீடர்கள் மற்ற மக்களைப் போன்று அல்லாமல், இயேசு என்ற மனிதரைத் தேடி வந்ததால், இயேசு அவர்களிடம் வந்து பாருங்கள் என்று சொல்லி, அவர்களைத் தம்மோடு தங்க அனுமதிக்கின்றார், தான் யார் என்ற உண்மையை அவர்களுக்கு வெளிப்படுத்துக்கின்றார். ஆகவே, நாம் இயேசுவிடமிருந்து என்ன ஆதாயத்தைப் பெற்றுக்கொள்ளப் போகின்றோம் என்பதை விட, இயேசு யார் என்ற அனுபவம் சிறப்பான ஒன்றாகும்.

இயேசுவோடு தங்கி அனுபவம் பெற்ற பிறகு யோவான் மற்றும் அந்திரேயாவின் இயேசு பற்றிய புரிதலானது வித்தியாசமானதாக இருகின்றது. அதற்கு முன்பு வரை அவர்களை இயேசுவை "ரபி" என்றே அழைக்கின்றார்கள். ஆனால் இந்த அனுபவத்திற்குப் பிறகு, அவர்கள் இயேசுவை மெசியாவாகப் பார்க்கத் தொடங்குகின்றார்கள். அந்திரேவோ இன்னும் ஒருபடி மேலே சென்று, தான் பெற்ற இந்த அனுபவத்தை தன்னுடைய சகோதரரான பேதுருவிடம் எடுத்துச் சொல்லி, அவரை இயேசுவிடம் அழைத்து வருகின்றார். ஆகையால், இயேசுவை உண்மையான மனநிலையோடு தேடிவருகின்றபோது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய ஆசிர் அளப்பெரியது என்பது நாம் உறுதியாகச் சொல்லலாம்.

பல நேரங்களில் நாம் நம்முடைய அன்றாடத் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்வதற்கே இயேசுவைத் தேடி வருகின்றோம். அதனால் நாம் அவரிடமிருந்து பெரிதாக நன்மை எதையும் பெற்றுக்கொள்ளாமலே போய்விடுகின்றோம். ஆனால், உண்மையான மனநிலையோடு அவரைத் தேடிச் சென்றோம் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய ஆசிர்வாதம் அளப்பெரியது.

ஆகவே, இயேசுவை உண்மையான மனநிலையோடு தேடிச் செல்வோம். அவரிடமிருந்து எல்லா ஆசிரியும் பெற்று நிறை நல்வாழ்வு வாழ்வோம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!