Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       03  ஐனவரி 2018  
                                                            கிறிஸ்து பிறப்புக்காலம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
கடவுளோடு இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 29-3: 6

அன்பிற்குரியவர்களே, இறைவன் நேர்மையாளர் என நீங்கள் அறிந்துகொண்டால், நேர்மையாகச் செயல்படுவோர் அனைவரும் அவரிடமிருந்து பிறந்தவர்கள் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை.

என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை.

ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப்போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம். அவரை எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூயவராய் இருப்பதுபோல் தம்மையே தூயவராக்க வேண்டும்.

பாவம் செய்யும் அனைவரும் சட்டத்தை மீறுகின்றனர். சட்டத்தை மீறுவதே பாவம். பாவங்களை நீக்கவே அவர் தோன்றினார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரிடம் பாவம் இல்லை. அவரோடு இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை. பாவம் செய்பவர் எவரும் அவரைக் கண்டதுமில்லை, அறிந்ததுமில்லை.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
 
பதிலுரைப் பாடல்தி.பா: 98: 1. 3b-4. 5-6 (பல்லவி: 3b)
=================================================================================

பல்லவி: மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

3b உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

5 யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். 6 ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 1: 14,12b

அல்லேலூயா, அல்லேலூயா! வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகளாகும் உரிமையை அளித்தார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 
இதோ! கடவுளின் செம்மறி.
 

+
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-34

அக்காலத்தில் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், "இதோ! கடவுளின் செம்மறி! செம்மறியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது.

ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன்'' என்றார்.

தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: "தூய ஆவி புறாவைப் போல வானிலிருந்து இறங்கி இவர்மீது இருந்ததைக் கண்டேன். இவர் யாரென்று என்குத் தெரியாதிருந்தது.

ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் `தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர் என்று என்னிடம் சொல்லியிருந்தார். நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறி வருகிறேன்.''


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இறைமகனோடு இருப்பவர்களுக்கு இருள் இல்லை.


பாவம் அவர்களை தீண்டாது.

அவர் தூயவராக இருப்பதனால், அவரோடு இருப்பவர்களும் தூயவராகவே இருப்பார்கள் என்பதுவே உண்மை.

சிமியோன், அன்னா, திருமுழுக்கு யோவான் என பலரை இங்கு கூறிப்பிடலாம்.

அவரோடு இருப்பவர்கள் யாரும் சட்டத்தை மீறுவதில்லை.

சட்டத்தை மீறுபவர்களோடு அவரும் இருப்பதில்லை. அவர்களுக்கு அவர் தன்னை வெளிப்படுத்துவதும் இல்லை.

அவரை விட்டுச் சென்ற பின்னரே யூதாஸ் பாவம் செய்ய முன்வந்தான். ஆதனால் தன்னையும் அழித்துக் கொண்டான்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
"உலகின் பாவங்களைப் போக்குகின்ற கடவுளின் ஆட்டுக்குட்டி இயேசு"

ஜெர்மனியில் உள்ள எவட்டன் நகரில், ஒரு பெரிய பேராலயம் இருக்கின்றது. அந்த பேராலயத்தின் உச்சியில் வழக்கமாக இருக்கும் சிலுவைக்குப் பதிலாக செம்மறியாடு ஒன்று பொறிக்கப்பட்டிருந்தது. ஏன், ஒரு பேராலயத்தில் சிலுவையில் இல்லாமல், செம்மறியாடு பொறிக்கப்பட்டிருக்கின்றது என்று நாம் கேள்வியை எழுப்பினால், அதற்கான பதிலை பேராலயத்தின் முன்பாக இருக்கக்கூடிய கல்வெட்டில் நாம் கண்டுகொள்ளலாம். அந்தக் கல்வெட்டானது, பேராலயத்தைக் கட்டி எழுப்பிய கட்டடக் கலைஞரால் எழுத்தப்பட்டிருக்கின்றது.

அந்தக் கல்வெட்டில் கட்டடக் கலைஞர் இவ்வாறு எழுதி இருக்கின்றார். "நான் இந்த பேராலயத்தைக் கட்டி எழுப்பிக்கொண்டிருந்த தருணத்தில், ஒருநாள் ஆலயத்தின் உச்சியிலிருந்து நான் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது எதிர்பாராத விதமாக, என் கால் மேலிருந்து கீழே விழுந்தேன். விழும்போது நான் என்னுடைய எலும்பெல்லாம் சுக்கி நூறாக உடைந்து சாகப்போகிறேன் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தான். ஆனால், அதிர்டவசமாக அந்த நேரத்தில் கீழே புல்வெளியில் செம்மறியாடு ஒன்று மேய்ந்துகொண்டிருந்தது. நான் அந்த ஆட்டின்மீது விழுந்தததால், நான் உயிர் பிழைத்தேன். அந்த செம்மறியாடோ அந்த இடத்திலேயே இறந்துபோனது. இப்படி தன்னுடைய இழந்து, என்னுடைய உயிரை அந்த செம்மறியாடு காப்பாற்றியதால், அதற்கு நன்றிக்கடாக அந்த செம்மறியாட்டின் உருவத்தை ஆலயத்தின் முகப்பில் பொறித்தேன்".

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் செம்மறி ஆடு, தன்னுடைய உயிரை இழந்து, கட்டடக் கலைஞருடைய உயிரைக் காப்பாற்றியது. ஆனால், ஒப்பற்ற செம்மறியாகிய இயேசு, பாவத்தில் விழுந்துகிடந்த நம் ஒவ்வொருவரையும் தன் உயிரைத் தந்து மீட்டுக்கொண்டது மட்டுமல்லாமல், நம் பாவம் அனைத்தையும் போக்கினார். அதனாலேயே அவர் உலகின் பாவத்தை போக்கிய கடவுளின் செம்மறியானார்.

நற்செய்தி வாசகத்தில், யோர்தான் ஆற்றில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்த யோவானிடம் இயேசு வருவதைப் பார்த்து அவர், "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக் குட்டியம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்" என்கின்றார். திருமுழுக்கு யோவான் இயேசு கிறிஸ்துவைப் பார்த்து இப்படிச் சொன்னதும் அங்கிருந்தவர்கள் "இயேசு தன்னுடைய உயிரை பலியாகத் தரப்போகிறார்" என்ற ஒரு முடிவுக்கு வந்திருக்கக்கூடும். ஏனென்றால், எருசலேம் திருகோவிலில் இரவும் பகலும் செம்மறியாடானது பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்தப் பின்னணியில்தான், திருமுழுக்கு யோவான் இயேசு  கிறிஸ்துவைப் பற்றிச் சொன்னதும் அவர் தன்னை பலியாகத் தரப்போகிறார் என்று புரிந்திருக்கக்கூடும்.

ஆனால் திருமுழுக்கு யோவான் இயேசு கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லும்போது "உலகின் பாவத்தைப் போக்குகின்றவர்" என்று சொல்கின்றார். இந்த உலகத்தில் பிறந்த யாராலும் யாருடைய பாவத்தைப் போக்கமுடியாது. ஆனால், ஆண்டவர் இயேசு தனிப்பட்ட ஒரு மனிதருடைய பாவத்தை அல்ல, மனுக்குலத்தின் பாவத்தையே போக்கக்கூடியவராக இருக்கின்றார். இவ்வாறு இயேசு உலகின் பாவத்தைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியாக இருக்கின்றார் என்பதைத் திருமுழுக்கு யோவான் எடுத்துரைக்கின்றார்.

இங்கே இன்னொரு உண்மையையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். அது என்னவென்றால், இயேசு உலகின் பாவத்தை மட்டும் போக்கவில்லை, நமக்குத் தூய ஆவியையும் பெற்றுத்தருகின்றார். அதைத்தான் திருமுழுக்கு யோவான் கூறுகின்றபோது, "நானோ தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கின்றேன். அவரோ தூய ஆவியினால் திருமுழுக்குக் கொடுப்பார்" என்கின்றார். பவுலடியார் இதைக் குறித்துச் சொல்லும்போது, தூய ஆவியினால் ஆட்கொள்ளப்படுங்கள்" என்கின்றார் (எபே 5:18). ஆகையால், இயேசு கிறிஸ்து நம்முடைய பாவத்தை மட்டும் போக்குபவராக இல்லாமல், நமக்குத் தூய ஆவியாரையும் தந்து நம்மை நிறைவுள்ளவர்களாக, முழுமையானவர்களாகச் செய்கின்றார் என்று உறுதியாகச் சொல்லலாம். இந்த உலகத்தில் பிறந்த யாராலும் யாருடைய பாவத்தையும் போக்கிவிட முடியாது. ஆனால், ஆண்டவர் இயேசு ஒரு மனிதருடைய பாவத்தை மட்டும் இல்லை, ஒட்டுமொத்த மனிதர்களுடைய பாவத்தையும் போக்குகின்றார், அதுமட்டுமல்லாது தூய ஆவியையும் பெற்றுத்தருகின்றார். எனவே, இப்படிப்பட்டவர் தான் எனக்குப் பின் வர இருக்கின்றார். அவரே உண்மையான மெசியா என்பதுதான் திருமுழுக்கு யோவான் மக்களுக்குச் சொல்லக்கூடிய வார்த்தைகளாக இருக்கின்றது.

ஆம், இயேசு கிறிஸ்து உலகின் பாவத்தை(யே) போக்குகின்ற கடவுளின் ஆட்டுக்குட்டி. அவருடைய வழியில் நாம் நடக்கும்போது, அவரிடமிருந்து ஆசிரைப் பெற்றுக்கொள்வது உறுதி. ஆகவே, நாம் உலகின் பாவத்தைப் போக்கும் கடவுளின் செம்மறியான இயேசுவின் நம்பிக்கை கொள்வோம். அவருடைய போதனைகளின் படி நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


 
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
இனி எல்லாம் சுகமே!

இவர் யாரென்று தெரியாமலிருந்தது

இன்றைய நற்செய்தி (யோவான் 1:29-34)
(ஜனவரி 3, 2018)

இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் இயேசுவைப் பற்றிச் சான்று பகர்கின்றார்.

"இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது" என தன் அறியாமையை இரண்டு முறை ஏற்றுக்கொள்கின்றார் திருமுழுக்கு யோவான்.

"யாரென்று தெரியாமல் இருந்த இவருக்கு இயேசு யார் என்று எப்படி தெரிந்தது?" - என்ற கேள்வி நம்முள் எழலாம். இந்தக் கேள்விக்கான விடை நற்செய்தி வாசகத்திலேயே இருக்கிறது. முதலில், திருமுழுக்கு யோவானை அனுப்பியவரின் வார்த்தைகள் இவரை யாரென்று இவருக்குச் சொல்கின்றன. இரண்டு, அவர் காண்கின்ற தூய ஆவி இறங்குகின்ற அடையாளம்.

தனக்குள் உள்ள வெளிப்படுத்துதல் பற்றியும், தனக்கு வெளியே நடக்கும் அடையாளம் பற்றியும் தெளிவாக இருக்கின்றார் யோவான். ஆகையால் அவர் மெசியாவை கடவுளின் ஆட்டுக்குட்டியாக அடையாளம் கண்டுகொள்கின்றார்.

எனக்கு ரோமில் இலத்தீன் கற்றுக்கொடுத்த பேராசிரியர் முதல் நாள் புதிய புத்தகத்தை எல்லார் கையிலும் கொடுத்துவிட்டு, "இன்று எதிரிகள் போல தெரியும் இந்த புத்தகத்தின் பக்கங்கள் கோர்ஸ் முடியும்போது உங்களுக்கு நண்பர்களாக வேண்டும்" என்றார்.

நண்பர்களாக ஆக்கிக்கொண்டுவிட்டால் அவற்றை அடையாளம் கண்டுகொள்வது எளிது.
ஒருவரைத் தெரிந்துகொள்வதற்கு முதலில் அவரைப் பற்றிய அக்கறை தேவை. அது வந்துவிட்டால் தெரிந்துகொள்வதற்கான நேரமும், இடமும், சூழலும் தானே வந்துவிடும்.

இன்று இறைவனை நான் தெரிந்துகொள்ள அவருக்கான அக்கறை என்னிடம் இருக்கிறதா?

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Archdiocese of Madurai

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!