Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       02  ஐனவரி 2018  
                                                            கிறிஸ்து பிறப்புக்காலம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருக்கட்டும்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 22-28

அன்பிற்குரியவர்களே, இயேசு "
மெசியா" அல்ல என்று மறுப்போரைத் தவிர வேறு யார் பொய்யர்? தந்தையையும் மகனையும் மறுப்போர்தாம் எதிர்க் கிறிஸ்துகள். மகனை மறுதலிப்போர் தந்தையை ஏற்றுக்கொள்வதில்லை; மகனை ஏற்று அறிக்கையிடுவோர் தந்தையையும் ஏற்றுக்கொள்கின்றனர்.

தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருக்கட்டும்; தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருந்தால் நீங்கள் மகனுடனும் தந்தையுடனும் இணைந்திருப்பீர்கள்.

அவரே நமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அவ்வாக்குறுதி நிலைவாழ்வு பற்றியதாகும். உங்களை ஏமாற்றுகிறவர்களை மனத்தில் கொண்டு இவற்றை உங்களுக்கு எழுதியுள்ளேன்.

நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள்பொழிவு உங்களுள் நிலைத்திருக்கிறது. அதனால் உங்களுக்கு எவரும் கற்பிக்க வேண்டிய தேவையில்லை. மாறாக, நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள்பொழிவால் அனைத்தையும் கற்றுக் கொள்கிறீர்கள். அவ்வருள்பொழிவு உண்மையானது; பொய்யானது அல்ல.

நீங்கள் கற்றுக்கொண்டதற்கேற்ப அவரோடு இணைந்து வாழுங்கள். ஆகவே, பிள்ளைகளே, அவர் தோன்றும்போது நாம் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கவும் அவருடைய வருகையின்போது வெட்கி விலகாதிருக்கவும் அவரோடு இணைந்து வாழுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
 
பதிலுரைப் பாடல்தி.பா: 98: 1. 2-3a. 3b-4 (பல்லவி: 3b)
=================================================================================

பல்லவி: உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3a இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

3b உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
எபி 1: 1-2

அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 
நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்.  

+ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 19-28

அக்காலத்தில் எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, "நீர் யார்?" என்று கேட்டபோது அவர், "நான் மெசியா அல்ல" என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.

அப்போது, "அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?" என்று அவர்கள் கேட்க, அவர், "நானல்ல" என்றார். "நீர்தாம் வரவேண்டிய இறைவாக்கினரா?" என்று கேட்டபோதும், அவர், "இல்லை" என்று மறுமொழி கூறினார்.

அவர்கள் அவரிடம், "நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?" என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், "ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலை நிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப் பற்றியே" என்றார்.

பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள் அவரிடம், "நீர் மெசியாவோ எலியாவோ வரவேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால், ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?" என்று கேட்டார்கள்.

யோவான் அவர்களிடம், "நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை" என்றார்.

இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

ஆண்டு / முதல் மாதத்தின் வெள்ளிக்கிழமை இன்று இயேசுவின் திருஇதயத்தை நினைத்து நன்றி கூறும் நல்நாள்.

நம்மை முன்னிலைப்படுத்தாமல் வாழும் போது, நம்முடைய தாழ்ச்சியினால் நாம் உயர்வோம் என்பதுவே உண்மை.

திருமுழுக்கு யோவானின் கூற்று, அவரை பெண்களுள் பிறந்தவர்களில் இவரைப் போல யாரும் இருக்க முடியாது, இனி இருக்கப் போவதும் இல்லை என்ற கூற்றே சான்று.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
"நான் மெசியா அல்ல..."


முன்பொரு காலத்தில் பிலடெல்பியா நகரில் பழமையான ஆலயம் ஒன்று இருந்தது. அந்த ஆலயத்தில் யார் என்ன கேள்வியைக் கேட்டாலும், அந்த கேள்விக்கான பதில் உடனே ஆலயத்திலிருந்து அசரீரியாக ஒலிக்கும். இப்படிப்பட்ட நம்பிக்கை மக்கள் மத்தியில் வெகுகாலமாக இருந்தது.

ஒருசமயம் கிரேக்கர் ஒருவர், "உலகில் சிறந்த ஞானி யார்" என்ற கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார். அதனால் அவர் பிலடெல்பியாவிலிருந்த அந்த ஆலயத்திற்குச் சென்று, தன்னுடைய கேள்வியைக் கேட்டார். உடனே அந்த ஆலயத்திலிருந்து அசரீரியாக "சாக்ரடீஸ்" என்று ஒலித்தது. சாக்ரடீசைக் குறித்து அவர் முன்பே கேள்விப்பட்டிருந்தார், ஆனால், நேரில் பார்த்தது கிடையாது. எனவே, அவர் சாக்ரடீசைப் பார்ப்பதற்காக, அவர் இருப்பிடம் தேடித்போனார். சாக்ரடீஸ் இருப்பதாகச் சொல்லப்பட்ட இடத்திற்கு அவர் வந்ததும், பக்கத்தில் சுவர் எழுப்பிக்கொண்டிருந்த ஒருவரிடம், "இங்கே சாக்ரடீஸ் இருப்பதாகச் சொன்னார்களே, அவர் எங்கே இருக்கின்றார்?" என்று கேட்டார். அதற்கு அம்மனிதரோ, "நான்தான் சாக்ரடீஸ் உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். "நீங்கள்தான் சாக்ரடீசா, உங்களை, உலகில் சிறந்த ஞானி என்று பிலடெல்பியாவில் இருக்கின்ற ஆலயம் சொல்கின்றது, ஆனால், நீங்கள் இப்படி அவலட்சணமாக, சுவர் எழுப்பிக்கொண்டிருக்கிறீர்கள்?, யார் சொல்வதை நம்புவது" என்று கேட்டார்.

சாக்ரடீஸ் தான் எழுப்பிக் கொண்டிருந்த சுவற்றை அப்படியே நிறுத்திவிட்டு, "நேற்றுவரைக்கும் நான்தான் உலகில் சிறந்த ஞானி என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இன்றைக்குத்தான் இதுவரைக்கும் நான் அறிந்தது ஒன்றுமில்லை என்னும் உண்மையை உணர்ந்துகொண்டிருந்தான். அதனால்தான் இப்படி சுவர் எழுப்பும் வேளையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றேன்" என்றார். இதைக்கேட்டு, வந்தவருக்கு குழப்பமாகிப் போய்விட்டது.  எனவே அவர் மீண்டுமாக பிலடெல்பியா ஆலயத்திற்குச் சென்று, "உலகில் சிறந்த ஞானி யார்? என்று உன்னிடம் கேட்டபோது, நீ சாக்ரடீசைச் சொன்னாய், ஆனால், அவரிடத்தில் கேட்டபோது, அவர் தனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்கின்றார். இப்போது நான் யார் சொல்வதை நம்புவது?" கேட்டார். அதற்கு ஆலயத்திலிருந்து ஒலித்த அசரீரி இவ்வாறு சொன்னது, "நேற்றுவரைக்கும் சாக்ரடீஸ் தான்தான் எல்லாம் தெரிந்தவன், பெரிய ஞானி என்ற அகந்தையில் இருந்தார். ஒருவேளை நீ நேற்றுவந்து என்னிடத்தில் இதே கேள்வியைக் கேட்டிருந்தால், நான் வேறொரு பதிலைச் சொல்லியிருப்பேன். இன்றைக்குத்தான் சாக்ரடீஸ் தனக்குத் தெரிந்தது ஒன்றுமில்லை என்பதை உணர்ந்தார். அதனால்தான் நான் அவருடைய பெயரைச் சொன்னேன்".

உணமையில் யார் ஒருவர் தான் ஒன்றுமில்லை, தான் அறிந்ததும் ஒன்றுமில்லை என்று உணர்கின்றாரோ அவர்தான் பெரியவர், அவர்தான் உண்மையான ஞானி.

நற்செய்தி வாசகத்தில், எருசலேமிலிருந்த யூதர்கள் அனுப்பி வைத்த குருக்களும் லேவியர்களும், யோர்தான் ஆற்றில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்த யோவானிடம், "நீர் யார்?, நீர் எலியாவா?" என்று கேள்விகளைக் கேட்கின்றார்கள். அவர்களுடைய கேள்விகளுக்கு திருமுழுக்கு யோவான் சொல்கின்ற பதில்களைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னர், அவர்களை எது இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்பதற்குத் தூண்டியது என்று சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமாகும்.

இயேசு என்னும் மெசியா பிறப்பதற்கு முன்பான நான்கு நூற்றாண்டுகளில் ஆண்டவர் யாரோடும் பேசவில்லை, யாருக்கும் தன்னை வெளிப்படுத்தவில்லை. இதனால் மெசியா வருவார், அவர் தங்களை எதிரிகளிடமிருந்து மீட்டெடுத்து, புதிய ஆட்சியை ஏற்படுத்துவார் என்ற யூதர்களின் கனவு அப்படியே மங்கத் தொடங்கியது. இதற்கிடையில்தான் யூதர்கள் எதிர்பார்த்த இலட்சணங்களோடு திருமுழுக்கு யோவான் யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட யூதர்கள், ஒருவேளை யோவான்தான் மெசியாவாக இருப்பாரோ என்று ஐயப்பாட்டில், அவரிடம் குருக்களையும் லேவியரையும் அனுப்பி விசாரித்துவிட்டு வரச் சொல்கின்றார்கள். அவர்கள் வந்து யோவானிடம் கேள்விகளைக் கேட்கின்றபோது அவர் சொல்கின்ற பதில், நான் மெசியா அல்ல, எலியாவோ, இறைவாக்கினரோ கூட அல்ல, மாறாக பாலைவனத்தில் ஒலிக்கின்ற குரல் என்பதாக இருக்கின்றது.

யோவான் நினைத்திருந்தால் தான்தான் மெசியா என்றுசொல்லி, மக்களுடைய கவனத்தை தன்பக்கம் ஈர்த்திருக்கலாம், ஆனால், அவர் அப்படிச் செய்யாமல், தான் யார் என்கின்ற உண்மையை அவர்களுக்கு எடுத்துச் சொல்கின்றார். அது மட்டுமல்லாமல் அவர்கள், "நீர் மெசியாவோ, இறைவாக்கினரோ இல்லையென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கின்றீர் என்று கேட்கின்றபோது அவர், "நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கின்றேன், ஆனால், எனக்குப் பின் வரக்கூடியவர் தூய ஆவியினால் திருமுழுக்குக் கொடுப்பவர்,  குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட நான் தகுதியற்றவன்" என்கின்றார். இவ்வாறு அவர் தான் யார், தன்னுடைய பணி என்ன என்பதை எடுத்துரைப்பதுடன், மெசியாவிற்கு முன்பாக தான் ஒன்றுமில்லை என்றும் எடுத்துரைக்கின்றார்.

திருமுழுக்கு யோவான் இப்படி தன்னை முழுமையாய் உணர்ந்து, தாழ்ச்சியோடு வாழ்ந்ததினால்தான். பின்னாளில் ஆண்டவர் இயேசு, "மனிதராய் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் யாரும் தோன்றியதில்லை" (மத் 11:11) என்று உயர்வாகப் பேசுகின்றார். நாமும் திருமுழுக்கு யோவானைப் போன்று தாழ்ச்சியோடு வாழ்ந்தோம் என்றால், இறைவனால் மேலும் மேலும் உயர்த்தப்படுவோம் என்பது உறுதி.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம், அவரை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கின்ற நாம், திருமுழுக்கு யோவானைப் போன்று தாழ்ச்சியோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
இனி எல்லாம் சுகமே!

யோர்தான் ஆற்றுக்கு அக்கரை

இன்றைய நற்செய்தி (யோவான் 1:19-28)
(ஜனவரி 2, 2018)

மீட்பு வரலாற்றில் யோர்தான் ஆற்றுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று, செங்கடலைக் கடந்து வந்த இஸ்ரயேல் மக்கள், மோசேயின் தலைமையிலிருந்து யோசுவாவின் வழிநடத்துதலுக்குட்பட்டு யோர்தான் ஆற்றைக் கடக்கின்றனர். யோர்தான் ஆறுதான் வாக்களிக்கப்பட்ட நாட்டின் எல்கை.

யோர்தான் நதி என்பது இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கை நிலையின் ஓர் உருவகமும் கூட.

இஸ்ரயேல் மக்களின் பழைய வாழ்க்கை நிலையை 'நதிக்கு' ஒப்பிடுகின்ற யோசுவா, 'இப்பொழுது ஆண்டவருக்கு அஞ்சி உண்மையோடும் நேர்மையோடும் அவருக்கு ஊழியம் புரியுங்கள். நதிக்கு அப்பாலும், எகிப்திலும், உங்கள் மூதாதையர் பணிந்து வந்த தெய்வங்களை விட்டு விலகுங்கள்.. ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்' (யோசு 24:14-15) என்கிறார்.

ஆகஇ யோர்தான் நதி என்பது ஒருவர் தீர்க்கமான முடிவை எடுக்கின்ற இடம்: "நீ யார் பக்கம்? ஆண்டவர் பக்கமா? அல்லது மாற்றுத் தெய்வத்தின் பக்கமா?"

இவற்றில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய முடியும். தேர்வு செய்ய வேண்டும்.

இரண்டும் வேண்டும் என்று சொல்வதும், இரண்டிற்கும் ஊழியம் செய்கிறேன் என்று சொல்வதும் ஏற்புடைமை அன்று.

மேலும், எவ்வாறு முதல் ஏற்பாட்டு யோசுவா இஸ்ரயேல் மக்களை வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு அழைத்துச் சென்றாரோஇ அப்படியே இரண்டாம் ஏற்பாட்டு யோசுவா ('இயேசு') மக்களை புதிய வாழ்விற்கு அழைத்துச் செல்கிறார். யோவான் அந்த மெசியா அல்லது யோசுவா அல்ல என்பதால் திருமுழுக்கு யோவானை ஆற்றின் அக்கரையிலே நிறுத்திவிடுகின்றார் நற்செய்தியாளர்.

நாம் இரண்டு கேள்விகள் கேட்போம் நம்மை:

அ. என் வாழ்வின் யோர்தானில் நான் எடுக்கும் முடிவு எது? நான் யாருக்கு ஊழியம் புரிகிறேன்? என் முடிவில் உறுதியாக இருக்கிறேனா?

ஆ. புதிய ஏற்பாட்டு யோசுவாவுடன் நான் ஆற்றுக்குள் இறங்க தயாரா?

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!