Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   30  ஜனவரி 2020  
    பொதுக்காலம் 3 ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 ++நீ நம்மைப் புறக்கணித்து, உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக்கிக் கொண்டாய்.

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 11: 1-4a,c, 5-10a,13-17

அந்நாள்களில் இளவேனில் காலத்தில் அரசர்கள் போருக்குப் புறப்பட்டுச் செல்வது வழக்கம். அப்பொழுது தாவீது யோவாபைத் தம் பணியாளரோடும் இஸ்ரயேலர் அனைவரோடும் அனுப்பினார். அவர்கள் அம்மோனியரைத் தோற்கடித்து இரபாவை முற்றுகை இட்டனர். தாவீதோ எருசலேமிலேயே தங்கிவிட்டார். ஒரு நாள் மாலை வேளை, தாவீது தம் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்ததை தாவீது மாடியிலிருந்து கண்டார். அவள் மிகவும் அழகிய தோற்றம் கொண்டிருந்தாள். தாவீது அவள் யாரென்று கேட்க, ஆள் அனுப்பினார். "அவள் எலியாவின் மகளும் இத்தியர் உரியாவின் மனைவியுமான பத்சேபா" என்று கூறினர். தாவீது தூதரை அனுப்பி அவளை வரவழைத்தார். அவள் தம்மிம் வந்ததும் அவர் அவளோடு உடலுறவு கொண்டார். பிறகு அவள் தன் இல்லம் சென்றாள். அப்பெண் கருவுற்றுத் தாவீதிடம் ஆள் அனுப்பி, தான் கருவுற்றிருப்பதாக அவரிடம் தெரிவித்தாள். அப்பொழுது தாவீது "இத்தியனான உரியாவை என்னிடம் அனுப்பிவை" என்று யோவாபுக்குச் செய்தி அனுப்பினார். யோவாபு உரியாவைத் தாவீதிடம் அனுப்பி வைத்தார். உரியா தாவீதிடம் வந்ததும் அவர் யோவாபின் நலம் பற்றியும் வீரர்களின் நலம் பற்றியும் போரின் போக்குப் பற்றியும் விசாரித்தார். பிறகு தாவீது உரியாவிடம், "உன் வீட்டுக்குச் சென்று உன் பாதங்களைக் கழுவிக்கொள்" என்றார். உரியா அரண்மனையை விட்டுச் சென்றதும் அவர் பின்னாலேயே அரசர் அன்பளிப்பு அனுப்பி வைத்தார். உரியாவோ தம் தலைவரின் பணியாளர் அனைவரோடும் அரண்மனை வாயிலிலேயே படுத்துக்கொண்டார்; தம் வீட்டுக்குச் செல்லவில்லை. உரியா தம் வீட்டுக்குச் செல்லவில்லை என்று தாவீது அறிந்ததும் தாவீது அவரிடம், "நீ நெடும் தொலையிலிருந்து வரவில்லையா? பின் ஏன் நீ வீட்டிற்குச் செல்லவில்லை?" என்று கேட்டார். தாவீது அவரை அழைத்து அவரோடு உண்டு குடித்து, அவருக்குக் குடிபோதையூட்டினார். மாலையில் அவர் தம் தலைவரின் பணியாளரோடு தம் படுக்கையில் தூங்கச் சென்றார்; தம் வீட்டுக்கு அவர் செல்லவே இல்லை. காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு மடல் எழுதி, அதை உரியாவின் கையில் கொடுத்தனுப்பினார். அம்மடலில் அவர், "உரியாவைப் போர் கடுமையாக நடக்கும் முன்னிலையில் நிறுத்தி, அவனைவிட்டுப் பின்வாங்கு. அவன் வெட்டுண்டு மடியட்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். யோவாபு நகரை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தபொழுது வலிமைமிகு எதிர்வீரர்கள் இருந்த இடத்தை அறிந்து அங்கே உரியாவை நிறுத்தினார். நகரின் ஆள்கள் புறப்பட்டுவந்து யோவாபைத் தாக்கினர். அப்பொழுது போரில் வீழ்ந்தவர்களுள் தாவீதின் வீரர்களும் சிலர். இத்தியர் உரியாவும் மாண்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 51: 3-4. 5-6a. 6bcd-7. 10-11 (பல்லவி: 1a) Mp3
=================================================================================
பல்லவி: கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்.

1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.

2என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். - பல்லவி

3ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது.

4aஉமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன். - பல்லவி

4bcஉம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்.

5இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்; பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள். - பல்லவி

8மகிழ்வொலியும் களிப்போசையும் நான் கேட்கும்படி செய்யும்; நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூர்வனவாக!

9என் பாவங்களைப் பாராதபடி உம் முகத்தை மறைத்துக் கொள்ளும்; என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும். - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(மத் 11: 25)

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
++நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது. 

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 26-34

அக்காலத்தில் இயேசு கூட்டத்தை நோக்கி, "இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன்பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது'' என்று கூறினார். மேலும் அவர், "இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப்படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும் விடச் சிறியது. அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும்விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும்'' என்று கூறினார். அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 2 சாமுவேல் 11: 1-4ac, 5-10a, 13-17


சோதனையில் விழுந்த தாவீது அரசர்

நிகழ்வு

தென்கிழக்கு அமெரிக்காவில் வாழக்கூடிய ஓர் அரியவகை உயிரினம் அலிகேட்டர் ஸ்னாப்பிங் என்பதாகும். ஆமை இனத்தைச் சார்ந்த இந்த உயிரினம் நன்னீரில் வாழக்கூடியது. 250 பவுண்டுகள் எடை கொண்ட இந்த உயிரினம் பெரும்பாலும் மீன்களையே இரையாக உட்கொள்வோம். சில சமயங்களில் முதலைகளைக்கூட பிடித்துச் சாப்பிட்டு விடும். அந்தளவுக்கு இந்த உயிரினம் மிகவும் வலிமையானது, தந்திரமானதும்கூட.

இந்த உயிரினம் மீன்களையும், நீரில் வசிக்கும் பிற உயிரினங்களையும் பிடிப்பதற்கு வித்தியாசமானதோர் அணுகுமுறையைப் பின்பற்றும். அது என்ன அணுகுமுறை எனில், தண்ணீரில் வாயைத் திறந்தவாறு அசைவற்றுக் கிடக்கும் இந்த உயிரினத்தின் நாவின் முடிவில் ஒரு சிறிய, இளஞ்சிவப்பு நிறத்திலான ஒரு பகுதி இருக்கும். அது பார்ப்பதற்கு ஒரு புழு போன்றே இருக்கும். இதை இந்த உயிரினம் தண்ணீரில் அசைத்துக்கொண்டே இருக்கும். இதனை உண்மையான புழு என நினைத்துக்கொண்டு மீன்களும் பிற நீர் வாழ் உயிரனங்களும் உண்பதற்கு அருகில் வரும். அப்பொழுது அலிகேட்டர் ஸ்னாப்பிங் என்ற இந்த உயிரினம். இதுதான் சமயம் என்று அதனை ஒரே கவ்வாகக் கவ்வி தனக்கு இரையாக்கிக் கொள்ளும்.

அலிகேட்டர் ஸ்னாப்பிங் என்ற இந்த உயிரினத்தின் நாவினை புழுவென நினைத்துக்கொண்டு அதனிடம் மாட்டிக்கொண்டு தங்களுடைய உயிரை மாய்த்துக்கொள்ளும் உயிரனங்களைப் போன்றுதான், மனிதர்களில் சிலர் பார்ப்பதற்கு அழகாகவும் கவர்ச்சிகரமாகவும் இருக்கின்றதே என்று சோதனைகளில் விழுந்து தங்களுடைய வாழ்வைத் தொலைத்து நிற்கின்றார்கள். இன்றைய முதல் வாசகத்தில் தாவீது அரசர் உரியாவின் மனைவி பத்சேபாவில் அழகில் மயங்கி அவரோடு பாவம் செய்வதைக் குறித்து வாசிக்கின்றோம். இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தும் செய்தியென்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தவறிய "பெரிய மனிதர்கள்"

திருவிவிலியம் ஏனைய வரலாற்று நூல்களைப் போன்று ஒருவருடைய நல்ல பக்கத்தை மட்டும் எடுத்துக்கூறுகின்ற ஒரு நூல் அல்ல. மாறாக. ஒருவருடைய மோசமான பக்கத்தையும் எடுத்துக்கூறுகின்ற நூலாக இருக்கின்றது. திருவிவிலியம் நோவாவின் நம்பிக்கையை எடுத்துக்கூறுகின்ற அதே வேளையில் அவர் குடித்ததையும் எடுத்துக்கூறுகின்றது; ஆபிரகாமை நம்பிக்கையின் தந்தை என்று எடுத்துக்கூறுகின்ற அதே வேளையில், அவர் இரண்டு பொய் சொன்னதையும் எடுத்துக்கூறுகின்றது. இது யாக்கோபு, மோசே, பேதுரு என யாவருக்கும் பொருந்தும். அந்த வகையில் இன்றைய முதல் வாசகம் தாவீது அரசரின் இன்னொரு பக்கத்தையும் எடுத்துக்கூறுகின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் தாவீது அரசர் தன் படைவீரர்களில் ஒருவரான உரியாவின் மனைவியோடு பாவம் செய்கின்றார். தாவீது இத்தகையதொரு தவறு நடக்காமல் இருக்கமாறு செய்திருக்கலாம். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், தன்னுடைய படைவீரர்கள் எதிரிகளோடு போர்தொடுக்கச் சென்றிருக்கும்போது, அவர்களோடு சேர்ந்து அவரும் சென்றிருக்கலாம். மேலும் உரியாவின் மனைவியைப் பார்த்ததோடு விட்டிருக்கலாம். மாறாக அவர் ஓர் ஆள் அனுப்பி அவர் யாரென்று விசாரிக்கின்றார். சூழ்நிலை தனக்குச் சாதகமாக இருந்து தெரிந்ததும், அவர் பத்சேபாவோடு பாவம் செய்கின்றார்.

தவறுக்கு மேல் தவறு செய்த தாவீது

புனித யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் கூறுவார்: "ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலேயே சோதிக்கப்படுகின்றனர். அது அவர்களைக் கவர்ந்து மயக்கித் தன் வயப்படுத்துகின்றது.... பாவம் முழு வளர்ச்சியடைந்து சாவை விளைவிக்கின்றது." (யாக் 1: 14-15). பத்சேபாவின் அழகில் மயங்கும் தாவீது அவரோடு பாவம் செய்கின்றார். அதோடு தன்னுடயை தவறு வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக உரியாவைப் போர்க்களத்திற்கு அனுப்பிக் கொன்றுபோடுகின்றார். இவ்வாறு தாவீது பிறர் மனைவியைக் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் (விப 20: 17) கொலையும் செய்கின்றார் (விப 20: 14) அதன்மூலம் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்கின்றார்.

தாவீது சோதனையில் விழுந்துவிடாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர் சோதனையில் விழுந்து பாவத்திற்கு மேல் பாவம் செய்கின்றார். நாமும் கூட பலநேரங்களில் சோதனையில் விழுந்து பாவம் செய்கின்றோம். இந்நிலையில் நாம் இயேசுவைப் போன்று நமக்கு வரும் சோதனைகளை முறியடித்து, இறைவனுக்கு உகந்த வழியில் நடந்தால், இறைவனின் அன்புக்கு உரியவர்கள் ஆவோம் என்பது உறுதி.

சிந்தனை

உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்" (மத் 26: 41) என்பார் ஆண்டவர் இயேசு. ஆகவே, நமக்கு வரும் சோதனைகளில் நாம் வீழ்த்திடாமல், வெற்றி கொள்வதற்கு இறைவனிடம் விழித்திருந்து மன்றாடுவோம். இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மாற்கு 4: 26-34

"உன் பணியை முடிந்தமட்டும் செய்; மீதியை கடவுள் பார்த்துக்கொள்வார்"

நிகழ்வு

ஒருகாலத்தில் பெர்த்ராம் என்றொரு தச்சர் இருந்தார். அவர் மரத்தில் சிரூபங்களை வடிப்பதில் கைதேர்ந்தவர். அவரிடம் இருந்த இந்தத் திறமையைப் பார்த்துவிட்டு ஒரு மடாதிபதி தன்னுடைய மடத்தில் இருந்த சிறுகோயிலில் சிரூபங்களை வடித்துத் தருமாறு கேட்டுக்கொண்டார். பெர்த்ராமும் அந்த மடாதிபதி கேட்டுக்கொண்டதற்கேற்ப சிரூபங்களை வடித்துத் தந்தார். அவற்றையெல்லாம் பார்த்து மாடதிபதி மிகவும் மகிழ்ந்துபோய், சிறுகோயிலில் இருந்த பீடம், கிராதி, வாசக மேடை ஆகியவற்றையெல்லாம் அவரிடம் செய்து தரச் சொன்னார். அவரும் மடாதிபதி எதிர்பார்த்ததைவிட மிகச்சிறப்பான முறையில் செய்து தந்தார். இதனால் மடாதிபதிக்கு பெர்த்ராமின்மீது தனி மதிப்பும் மரியாதையும் உண்டானது.

இப்படியிருக்கையில் ஒருநாள் மடாதிபதி பெர்த்ராமை அழைத்து, "அடுத்த வாரம் கர்தினால் இங்கு வருகை தரவிருக்கின்றார். அவருடைய வருகையின் நிமித்தமாக, இயேசு மலைப்பொழிவினை நிகழ்த்துவது மாதிரியான ஒரு சிரூபத்தை செய்துவைத்து, அதனை அவருடைய திருக்கைகளால் அர்ச்சிக்கலாம் என்று நினைக்கின்றேன். இதற்கு நீதான் என்னோடு ஒத்துழைக்கவேண்டும்" என்றார். அவர் பெர்த்ராமிடம் இவ்வாறு கேட்டபொழுது, பெர்த்ராமிற்கு உடம்புச் சரியில்லை. அதனால் பெர்த்ராம் மடாதிபதியிடம், "இப்பொழுது எனக்கு உடம்பு சரியில்லை... மேலும் நீங்கள் கேட்பது மாதிரியான சிரூபத்தை செய்து தருவதற்குப் போதிய நேரமும் இல்லை" என்று தயங்கியவாறு சொன்னார். அதற்கு மடாதிபதி அவரிடம், "பெர்த்ராம்! உன்மீது எனக்கு நம்பிக்கையிருக்கின்றது. நிச்சயம் நீ அந்த சிரூபத்தை செய்துதருவாய். வாழ்த்துகள்" என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றார்.

பெர்த்ராம் குழப்பத்தோடு தன்னுடைய வீட்டிற்கு வந்தார். "உடல்நலம் சரியில்லை... சிரூபத்தைச் செய்து முடிப்பதற்குப் போதுமான நாள்கள் இல்லை... சிரூபத்தை தேவதாரு மரத்தில் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்... நம்மிடம் இருப்பதோ சிந்தூர மரம்தான். இதில் எப்படி இயேசு மலைப்பொழிவு நிகழ்த்துவது மாதிரியான சிரூபத்தைச் செய்வது...? சரி இந்த சிந்தூர மரத்திலேயே சிரூபத்தைச் செய்வோம்" என்று முடிவுசெய்துகொண்டு, அதில் சிரூபத்தைச் செய்யத் தொடங்கினார்.

சிரூபத்தை அவர் மெல்லச் செய்யத் தொடங்கி, ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அவரால் பணியைத் தொடர முடியாமல் போய், அசதி மிகுதியால் அப்படியே தூங்கத் தொடங்கினார். அந்நேரத்தில் திடீரென்று தோன்றிய வானதூதர் ஒருவர் பெர்த்ராமின் கையில் இருந்த கருவிகளை எடுத்துக்கொண்டு இயேசு மலைப்பொழிவினை நிகழ்த்துவது மாதிரியான ஓர் அற்புதமான சிரூபத்தை வடித்து வைத்துவிட்டு மறைந்துபோனார். காலையில் எழுந்து பார்த்த பெர்த்ராம் மிகவும் அப்படியே வியந்துபோனார். அவர் அந்தச் சிரூபத்தை எப்படி வடிவமைக்கவேண்டும் என்று நினைத்தாரோ, அதைவிடச் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. "உண்மையில் இது கடவுளின் செயலாகத்தான் இருக்கும்" என்று நினைத்தக்கொண்ட பெர்த்ராம், அந்த சிரூபத்தைத் தூக்கிக்கொண்டு, மடாதிபதியிடம் ஓடினார். மடாதிபதி அந்தச் சிரூபத்தை பார்த்துவிட்டு, மெய்ம்மறந்து நின்றார். பின்னர் பெர்த்ராம் நடந்த எல்லாவற்றையும் அவரிடம் கூற, அவர், "நீ உன்னால் முடிந்ததை செய்தாய்... கடவுளோ மீதியை செய்துவிட்டார்" என்றார்.

ஆம், ஒருபணியை நம்மால் முடிந்தமட்டும் செய்கின்றபொழுது, மீதிப் பணியினை கடவுள் செய்துமுடித்துவிடுவார் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு இறையாட்சியை தானாய் வளர்ந்துவரும் விதைக்கு ஒப்பிடுக்கின்றார். இயேசு சொல்லும் இந்த உவமை நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இறையாட்சி தானாய் வளர்ந்துவரும் விதைக்கு ஒப்பானது

நற்செய்தியில் இயேசு இறையாட்சியை தானாய் வளர்ந்து வரும் விதைக்கு ஒப்பிடுக்கின்றார். இயேசு சொல்லும் இந்த உவமையில் இரண்டு உண்மைகள் அடங்கியுள்ளன. ஒன்று, மனிதர்களாகிய நாம் நம்முடைய கடமைகளை, பணிகளை முதலில் செய்தாக வேண்டும். எப்படி இயேசு சொல்லும் உவமையில் வருகின்ற மனிதர் விதையை விதைத்தாரோ, அதுபோன்று நம்முடைய பணிகளை நாம் கடமையுணர்வோடு செய்யவேண்டும் (1 கொரி 9: 16).

இந்த உவமை சொல்கின்ற இரண்டாவது உண்மை. நாம் நம்முடைய பணிகளை கடமையுணர்வோடு செய்கின்றபொழுது, மீதியைக் கடவுள் பார்த்துக்கொள்வர் என்பதாகும். உவமையில் வருகின்ற மனிதர் விதையை விதைக்க மட்டுமே செய்தார். மீதிப் பணிகளைக் கடவுளே பார்த்துக்கொண்டார். இறையாட்சியும் இப்படிப்பட்டதாகத்தான் இருக்கும். ஆம், கடவுள் நமக்குக் கொடுத்த பணிகளை நாம் செய்துமுடிக்கின்றபொழுது, மீதிப்பணிகளைக் கடவுளே பார்த்துக்கொள்வார். புனித பவுலும் இதே கருத்தினைத்தான், "நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே விளையச் செய்தார்" (1கொரி 3: 6)" என்று கூறுவார்.

ஆகையால், நாம் நம்மிடம் கொடுக்கப்பட்ட பணிகளைத் திடப்படச் செய்வோம். மீதியைக் கடவுள் பார்த்துக்கொண்டு, இம்மண்ணுலகில் அவருடைய ஆட்சியை நிறுவுவார்.

சிந்தனை

"உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்" (எபி 10: 9) என்று சொல்லி இயேசு இறைவனின் திருவுளத்தை இம்மண்ணில் நிறைவேற்றினார். நாமும் இறைவனின் திருவுளம் நிறைவேற ஒரு கருவியாய் இருந்து செயல்படுவோம். நம் வழியாய்ச் செயல்படும் இறைவன், இறையாட்சியை நம் வழியாய்க் கட்டியெழுப்பி தன்னுடைய அருளை நிறைவாக நமக்கு நிறைவாகத் தருவார்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!