Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   30  ஜனவரி 2020  
    பொதுக்காலம் 3 ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 ++என் ஆண்டவரே! நீர் என்னை வழி நடத்த நான் யார்?

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 18-19, 24-29

அந்நாள்களில் தாவீது ஆண்டவர் திருமுன் வந்து அமர்ந்து இவ்வாறு பேசினார்: "என் தலைவராம் ஆண்டவரே! இதுவரை நீர் என்னை வழிநடத்தி வந்தமைக்கு, நான் யார்? என் குடும்பம் யாது? இருப்பினும் என் தலைவராம் ஆண்டவரே, உம் திருமுன் இது சிறிதே. உம் ஊழியனின் குடும்பத்தைப் பற்றிய எதிர்காலத்தைப் பற்றியும் நீர் பேசியுள்ளீர்! என் தலைவராம் ஆண்டவரே, மனித வழக்கம் இதுவல்லவே! என்றும் உம் மக்களாகவே நிலைத்து இருக்குமாறு இஸ்ரயேலரை நீர் உமக்குரியவர் ஆக்கினீர்! ஆண்டவரே! நீரே அவர்களின் கடவுள் ஆனீர்! ஆண்டவராகிய கடவுளே! உமது ஊழியனைப் பற்றியும் அவனது குடும்பத்தைப் பற்றியும் நீர் தந்த உறுதிமொழியை என்றும் நிலைநாட்டும்! நீர் வாக்குறுதி அளித்தவாறே செய்யும்! உமது பெயர் என்றும் மாட்சி பெறுவதாக! அப்பொழுது மாந்தர் "படைகளின் ஆண்டவரே இஸ்ரயேலின் கடவுள்" என்பர். உமது ஊழியன் தாவீதின் குடும்பமும் உம் திருமுன் நிலைத்திருக்கும். ஏனெனில், படைகளின் ஆண்டவரே! இஸ்ரயேலின் கடவுளே! "நான் உனக்கு ஓர் இல்லம் எழுப்புவேன்" என்று உமது ஊழியனுக்கு வெளிப்படுத் தியவர் நீரே! ஆகவே இவ்வாறு மன்றாட உம் ஊழியனுக்கு மனத் துணிவு ஏற்பட்டது. தலைவராம் ஆண்டவரே! நீரே கடவுள்! உமது வார்த்தைகள் நம்பிக்கைக்கு உரியவை! இந்த நல்வாக்கை அடியேனுக்கு அருளியவர் நீரே! உம் ஊழியனின் குடும்பம் என்றும் உம் திருமுன் இருக்குமாறு நீர் அருள்கூர்ந்து அதற்கு ஆசி வழங்கும்! தலைவராகிய நீர் உரைத்துள்ளீர்! உம் ஊழியனின் குடும்பம் என்றும் உமது ஆசியைப் பெறுவதாக!"

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 132: 1-2. 3-5. 11. 12. 13-14 (பல்லவி: லூக் 1: 32) Mp3
=================================================================================
பல்லவி: தாவீதின் அரியணையை ஆண்டவர் அவருக்கு அளிப்பார்.

1ஆண்டவரே! தாவீதையும் அவர் பட்ட இன்னல்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்தருளும்.

2அவர் ஆண்டவராகிய உமக்கு ஆணையிட்டுக் கூறியதை, யாக்கோபின் வல்லவராகிய உமக்குச் செய்த பொருத்தனையை நினைவுகூர்ந்தருளும். - பல்லவி

3""ஆண்டவருக்கு ஓர் இடத்தை, யாக்கோபின் வல்லவருக்கு ஓர் உறைவிடத்தை நான் அமைக்கும் வரையில்,

4என் இல்லமாகிய கூடாரத்தினுள் செல்லமாட்டேன்; படுப்பதற்காக என் மஞ்சத்தில் ஏறமாட்டேன்;
5
என் கண்களைத் தூங்கவிடமாட்டேன்; என் இமைகளை மூடவிடமாட்டேன்" என்று அவர் சொன்னாரே. - பல்லவி

11ஆண்டவர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டுக் கூறினார்; அவர்தம் வாக்குறுதியினின்று பின்வாங்க மாட்டார்: "உனக்குப் பிறந்த ஒருவனை அரசனாக ஏற்படுத்தி உன் அரியணையில் வீற்றிருக்கச் செய்வேன். - பல்லவி

12உன் மைந்தர் என் உடன்படிக்கையையும், நான் அவர்களுக்குக் கற்பிக்கும் என் நியமங்களையும் கடைப்பிடித்தால், அவர்களுடைய மைந்தரும் என்றென்றும் உன் அரியணையில் வீற்றிருப்பர்". - பல்லவி

13ஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்; அதையே தம் உறைவிடமாக்க விரும்பினார்.

14இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்; இதை நான் விரும்பினதால் இதையே என் உறைவிடமாக்குவேன். - பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 (திபா 119: 105)

அல்லேலூயா, அல்லேலூயா! என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
++எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 21-25

அக்காலத்தில் இயேசு மக்களிடம், "விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின்மீது வைப்பதற்காக அல்லவா? வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்றார். மேலும் அவர், "நீங்கள் கேட்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்; இன்னும் கூடுதலாகவும் கொடுக்கப்படும். ஏனெனில், உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்" என்று அவர்களிடம் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 2 சாமுவேல் 7: 18-19, 24-29

இறைத்திருவுளத்தை மகிழ்வோடு ஏற்றுக்கொண்ட தாவீது

நிகழ்வு

ஓர் ஊரில் இறையடியார் ஒருவர் இருந்தார். அவர் தன்னுடைய வாழ்க்கையில் துன்பங்களுக்கு மேல் துன்பங்களைச் சந்தித்து வந்தார். ஒருநாள் அவரைப் பார்க்க வந்த அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் அவரிடம், "நண்பா! இறைவன்மீது ஆழமான கொண்ட உன்னுடைய வாழ்க்கையில் துன்பங்களுக்கு மேல் துன்பங்கள் வருகின்றனவே...! இது குறித்து நீ என்ன நினைக்கின்றாய்" என்றார்.

"எனக்கு இறைவன்மீது ஆழமான நம்பிக்கை உண்டு என உனக்குத் தெரியும். அவரை நான் என்னுடைய தந்தையைப் போன்றுதான் பார்க்கின்றேன். தந்தையானவர் தன்னுடைய பிள்ளைக்கு எதைச் செய்தாலும், நல்லதுக்குத்தான் செய்வார். என் வாழ்வில் நான் சந்திக்கின்ற இந்தத் துன்பங்கள் எல்லாம் என்னுடைய நல்லதுக்காகவேதான் இருக்கும். அதனால்தான் அவர் இந்தத் துன்பங்களை எல்லாம் என்னுடைய வாழ்க்கையில் அனுமதிக்கின்றார்" என்று தீர்க்கமாகப் பதில் கூறினார் அந்த இறையடியார்.

தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த துன்பங்களையெல்லாம் இறைவனின் திருவுளமாக ஏற்றுக்கொண்ட அந்த இறையடியாரின் உயர்ந்த எண்ணம் நம்முடைய கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் இறைவனின் திருவுளத்தைத் திறந்த மனத்தோடு அல்லது மகிழ்வோடு ஏற்றுக்கொண்ட தாவீது அரசரைக் குறித்து வாசிக்கின்றோம். எனவே, நாம் இன்றைய இறைவார்த்தையின் வழியாக இறைவனின் திருவுளத்திற்குப் பணிந்து நடப்பது எப்படி என்று இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நிகழ்காலத்தை நினைவுகூர்ந்த தாவீது

தாவீது அரசர் ஆண்டவருக்கென ஒரு கோயிலைக் கட்ட நினைத்தார். ஆனால், ஆண்டவரோ இறைவாக்கினர் நாத்தான் வழியாக, தாவீது தனக்காகக் கோயிலைக் கட்ட வேண்டியதில்லை... தாமே ஓர் இல்லத்தை கோயிலைக் கட்டப்போவதாகக் கூறுகின்றார். ஆண்டவர் இவ்வாறு உரைத்தது நிச்சயம் தாவீதுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்திருக்கும். ஆனாலும் அவர் அதை இறைத்திருவுளமென ஏற்றுக்கொள்கின்றார். மட்டுமல்லாமல், சாதாரண ஆடுமேய்க்கும் இளைஞனாக இருந்த தன்னை ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேலின் அரசராக உயர்த்தியதை அவர் நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றார்.

தாவீதின் விரும்பம் நிறைவேறாமல் போனது போன்று, நம்முடைய விருப்பமும் சில நேரங்களில் நிறைவேறாமல் போகலாம். இதற்காக நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல், "சரி, இது இறைவனின் திருவுளம்" என ஏற்றுக் கொண்டு அதற்குப் பணிந்து நடப்பது மிகவும் நல்லது.

கடந்த காலத்தில் கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு செய்த நன்மைகளை நினைத்துப் பார்த்தல்

ஆண்டவராகிய கடவுள், சாதாரண நிலையிலிருந்த தன்னை மிகப்பெரிய அளவிற்கு உயர்த்தியதை நன்றியோடு நினைத்துப் பார்த்த தாவீது அரசர், இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் என்னென்ன நன்மைகளையெல்லாம் செய்தார் என்பதையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றார் (2 சாமு 7: 22-24). ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களைத் தன் சொந்த மக்களாகத் தேர்ந்தெடுத்தார் (இச 4: 34) மட்டுமல்லாமல், அவர்களுக்கு அவர் பல்வேறு நலன்களையும் நன்மைகளையும் தொடர்ந்து செய்துவந்தார். இத்தனைக்கும் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு உண்மையுள்ளவர்களாக இல்லாததுபோதும்! இதையெல்லாம் தாவீது அரசர் நன்றியோடு நினைத்துப் பார்த்தார்.

எதிர்காலத்தில் தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்குக் கடவுள் ஆசி வழங்குமாறு கேட்ட தாவீது

தாவீது அரசர், இறைவன் தனக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் செய்த நன்மைகளை நன்றியோடு நினைத்துப் பார்த்த அதே வேளையில், எதிர்காலத்தில் அவருடைய ஆசி தன்னுடைய குடும்பத்திற்குத் தொடர்ந்து கிடைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றார்.

ஆண்டவராகிய கடவுள் தாவீதின் வழிமரபையும் அவருடைய குடும்பத்தையும் ஆசியால் நிரப்புவதாகவும் அவருடைய குடும்பத்திலிருந்து ஓர் அரசர் தோன்றுவார் என்றும் அவருடைய ஆட்சி என்றுமுள்ள ஆட்சி என்றும் வாக்குறுதி தந்தார். இவ்வாக்குறுதிகளை ஆண்டவர் நினைவுகூருமாறு கேட்டுக்கொள்கின்றார் தாவீது. ஆண்டவரும் தாவீதுக்கு வாக்குறுதி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார். இவ்வாறு கடவுள் தாவீதுக்கும் அவருடைய குடும்பத்திற்கும் சிறப்பான ஆசியை வழங்குகின்றார்.

தாவீது அரசர் நமக்குக் கற்றுக்கொடுக்கும் செய்தி ஒன்றே ஒன்றுதான். அதுதான் நாம் இறைவனின் திருவுளத்தின் படி நடக்கவேண்டும் என்பதாகும். தாவீது இறைவனின் திருவுளத்தை ஏற்று நடந்தார்; ஆசி பெற்றார். நாமும் இறைவனின் திருவுளத்தின் படி நடந்து ஆசி பெறுவோம்.

சிந்தனை

"என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக் கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும்" (மத் 26: 42) என்பார் இயேசு. ஆகையால், நாம் நம்முடைய வாழ்வின் எல்லாச் சூழ்நிலையிலும் இறைவனின் திருவுலத்திற்குப் பணிந்து நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மாற்கு 4: 21-25

"நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்"

நிகழ்வு

இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் ஒரு தனியார் நிறுவனத்தில் மிகவும் குறைந்த சம்பளத்தில் வேலைபார்த்து வந்தான். இது குறித்து அவன் மிகவும் வேதனையடைந்தான். "என்ன வாழ்க்கை இது..! எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் சம்பளத்தை நிறுவனத்தில் உயர்த்தமாட்டேன் என்கிறார்களே...! என்ன செய்வது...?" என்று குழம்பினான்.

இப்படியிருக்கையில் ஒருநாள் அவன் தன்னுடைய பங்குத்தந்தையைச் சந்தித்து, தன்னுடைய நிலையை எடுத்துச் சொல்லி, "எனக்கு மட்டும் சம்பளம் உயர்ந்தது என்றால், நான் என்னுடைய வருமானத்தில் பத்தில் ஒரு பகுதியை கோயில் வளர்ச்சிப் பணிகளுக்காகத் தருகிறேன்" என்று வாக்குறுதி தந்தான். இதைத் தொடர்ந்து பங்குத்தந்தை அவனுக்காக இறைவனிடம் மிக உருக்கமாக மன்றாடி அனுப்பி வைத்தார். பங்குத்தந்தை அவனுக்காக மன்றாடிய அடுத்த மாதத்தில் அவனுக்கு ஒரு பெரிய நிறுவனத்தில், மாதம் முப்பதயிராம் உரூபாய் சம்பளம் கிடைத்தது. அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். தான் வாங்கிய சம்பளத்தில் பத்து சதவீதத்தை எடுத்துக்கொண்டு கோயிலுக்கு வந்து பங்குத்தந்தையைச் சந்தித்து, அதை அவரிடம் கொடுத்துவிட்டுப் போனான்.

நாள்கள் மெல்ல நகர்ந்தன. அவனுக்கு சம்பளம் இப்பொழுது ஐம்பதாயிரமாகக் கூடியது. அவன் இன்னும் மகிழ்ந்தவனாய் தன்னுடைய சம்பளத்தில் பத்து சதவீதத்தை எடுத்துக்கொண்டு, பங்குத்தந்தையிடம் கொடுத்துவிட்டு வந்தான். ஆண்டுகள் மெல்ல உருண்டோடின. அவன் வேலை பார்த்துவந்த நிறுவனத்தில் இருந்தவர்கள், அவனுடைய பொறுப்புணர்வைக் கண்டு அவனுக்கு நிறுவனத்தில் மிக உயர்ந்த பகுதியைக் கொடுத்தார்கள். இப்பொழுது அவனுக்குச் சம்பளம் ஒரு இலட்சத்திற்கும் மேல் வரத் தொடங்கியது.

அவன் சிந்திக்கத் தொடங்கினான். "வருகின்ற வருமானத்தில் பத்து சதவீதம் கோயிலுக்குக் கொடுப்பது மிகுதியாக இருக்கின்றதே...! அதைக் குறைப்பது குறித்து பங்குத்தந்தையிடம் பேசிப் பார்ப்பலாமே" என்று நினைத்துக்கொண்டு பங்குத்தந்தையிடம் சென்று, "வருகின்ற சம்பளத்தில் பத்து சதவீதத்தை கோயிலுக்குக் கொடுப்பது மிகுதியாக இருப்பதுபோல் எனக்குத் தோன்றுகின்றது... கொஞ்சம் குறைத்துக் கொடுக்கலாமா...?" என்றான். பங்குத்தந்தை அவனை ஒரு வினாடி உற்றுப் பார்த்துவிட்டுப் பேசத் தொடங்கினார்: "தம்பி! வாங்குற சம்பளத்திலிருந்து குறைத்துத் தரலாமா என்று கேட்கின்றாய்! கடவுளுக்கு நீ கொடுத்த வாக்குறுதியை மீறமுடியாது. அதனை நிச்சயம் நிறைவேற்றியாகவேண்டும்; ஆனால் ஒன்று செய்யலாம்... ஒரு இலட்ச ரூபாய்க்கு மேல் இருக்கின்ற உன்னுடைய சம்பளத்தை பத்தாயிரம் என்று குறைத்துத் தருமாறு இறைவனிடம் வேண்டுவோமா..?."

பங்குத்தந்தை இவ்வாறு சொன்னதற்குப் பதிலேதும் பேசமுடியாமல் அமைதியாக இருந்தான் அந்த இளைஞன். அப்பொழுது பங்குத்தந்தை அவனிடம் மிக உறுதியாகச் சொன்னார்; "தம்பி! கடவுளுக்கு நீ மிகுதியாகக் கொடுக்கத் தொடங்கினாய். அதனால் உன்னுடைய சம்பளமும் மிகுதியானது. ஒருவேளை நீ கடவுளுக்கு மிகக் குறைவாகக் கொடுக்கத் தொடங்கினால், உன்னுடைய சம்பளமும் குறைவதற்கு வாய்ப்பிருக்கின்றது. அதனால் நீ கடவுளுக்கு எவ்வளவு மிகுதியாகக் கொடுக்கின்றாயோ, அவ்வளவு மிகுதியாக உன்னுடைய சம்பளம் உயரும்." பங்குத்தந்தை சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்டு, அவன் அறிவு தெளிந்தவனாய் தன்னுடைய வீட்டிற்குச் சென்றான்.

ஆம், நாம் எந்தளவுக்கு கடவுளுக்கும் பிறருக்கும் கொடுக்கின்றோமோ அதே அளவுக்கு நமக்குக் கொடுக்கப்படும் என்ற உண்மையை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தியில் இயேசு, "நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்" என்கின்றார். இயேசு கூறும் இவ்வார்த்தைகளின் பொருளென்ன என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

உள்ளத்தனைய உயர்வு

இன்றைய நற்செய்தி வாசகமானது இயேசுவின் பல போதனைகளின் தொகுப்பாக இருக்கின்றது. அப்படியிருந்தாலும் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கின்றன.

விளக்கானது விளக்குத் தண்டின்மீது இருக்கவேண்டுமே ஒழிய, மரக்காலின் உள்ளேயோ அல்லது கட்டிலின் கீழோயோ இருக்கக்கூடாது என்று சொல்கின்றார். இயேசு குறிப்பிடும் விளக்கு நாம்தான் (மத் 5:14). விளக்காக அல்லது உலகிற்கு ஒளியாக இருக்கவேண்டிய நாம் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கின்ற திறமைகள், வாய்ப்பு வசதிகளைக் கொண்டு உலகிற்கு ஒளியாக இருக்கவேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், கடவுள் நம்மிடம் கொடுத்திருக்கின்ற திறமைகள், கொடைகள் ஆகியற்றவை கடவுளின் திருப்பெயர் விளங்கவும் எளியவர் வாழ்வு உயர்வும் கொடுக்கவேண்டும். அப்படிக்கொடுத்தால், கடவுளின் ஆசி நம்மிடம் இன்னும் மிகுதியாகவும். ஒருவேளை கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் கொடைகளை யாருக்கும் பயன்படாமல் நாம் மட்டும் வைத்திருந்தால் நம்மிடம் இருப்பதும் நம்மை விட்டுப் போய்விடும். அதைத்தான் இயேசு கூறுகின்றார்.

ஆம், நம்முடைய உள்ளத்தில் கொடுக்கவேண்டும் என்ற சிந்தனை எந்தளவுக்கு மேலோங்கி இருக்கின்றதோ, அந்தளவுக்கு நம்முடைய வாழ்வும் மேலோங்கி இருக்கும்.

சிந்தனை

"முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்" (2 கொரி 9:7) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் கடவுள் நமக்குக் கொடுத்த கொடைகளை கடவுளுக்கும் சரி, பிறருக்கும் சரி முக மலர்ச்சியோடு கொடுப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!