Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   29  ஜனவரி 2020  
    பொதுக்காலம் 3 ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 சாமுவேலின் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 4-17

அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: "நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: "நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப் போகிறாயா?" இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து நான் அழைத்துவந்தது முதல் இந்நாள்வரை நான் ஒரு நிலையான இல்லத்தில் தங்கவில்லை; மாறாக, ஒரு நடமாடும் கூடாரமே எனக்குத் தங்குமிடமாய் இருந்தது. இஸ்ரயேலர் அனைவரும் சென்ற இடமெல்லாம் நானும் உடன் சென்றேன்.

அப்பொழுது என் மக்கள் இஸ்ரயேலைப் பேணும்படி குலத் தலைவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன், அவர்களுள் எவரிடமாவது "எனக்காகக் கேதுரு மரங்களால் ஒரு கோவில் கட்டாதது ஏன்?" என்று ஒரு வார்த்தை சொல்லியிருப்பேனா? எனது ஊழியன் தாவீதிடம் படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்ற இடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்; உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்; மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர்போல் நீ புகழுறச் செய்வேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன்; அவர்கள் அந்த இடத்திலேயே நிலைத்து வாழச் செய்வேன்.

என் மக்களாகிய இஸ்ரயேல்மீது நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்க காலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டதுபோல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு ஓய்வு அளிப்பேன். மேலும், ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார். உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். எனது பெயருக்காக கோவில் கட்ட இருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலை நிறுத்துவேன். நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறு செய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன். உன் முன்பாக நான் சவுலை விலக்கியதுபோல், என் பேரன்பினின்று அவனை விலக்க மாட்டேன். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!" மேற்கூறிய வெளிப்பாட்டின் வார்த்தைகள் அனைத்தையும் நாத்தான் தாவீதுக்கு எடுத்துரைத்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 89: 4-5. 27-28. 29-30 (பல்லவி: 28a) Mp3
=================================================================================
பல்லவி: எனது பேரன்பு என்றும் நிலைக்கச் செய்வேன்.
3
"நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்து கொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:
4
உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்." - பல்லவி

26
"நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை" என்று அவன் என்னை அழைப்பான்.
27
நான் அவனை என் தலைப்பேறு ஆக்குவேன்; மண்ணகத்தின் மாபெரும் மன்னன் ஆக்குவேன். - பல்லவி

28
அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும்.
29
அவனது வழிமரபை என்றென்றும் நிலைநிறுத்துவேன்; அவனது அரியணையை வான்வெளி உள்ளவரை நிலைக்கச் செய்வேன். - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் வார்த்தையே விதை; அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைந்தவரோ என்றென்றும் நிலைத்திருப்பார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-20

அக்காலத்தில் இயேசு மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார்.

அவர் அவர்களுக்குக் கற்பித்தது: "இதோ, கேளுங்கள். விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன. ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கி விடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்."

அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்துகொண்டு, உவமைகளைப் பற்றி அவரிடம் கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், "இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ எல்லாம் உவமைகளாகவே இருக்கின்றன. எனவே அவர்கள் "ஒருபோதும் மனம் மாறி மன்னிப்புப் பெறாதபடி கண்ணால் தொடர்ந்து பார்த்தும் கண்டுகொள்ளாமலும் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாமலும் இருப்பார்கள்" " என்று கூறினார்.

மேலும் அவர் அவர்களை நோக்கி, "இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்? விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார். வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால் அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான்.

பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள்.

முட்செடிகளுக்கு இடையில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டும், உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால், பயன் அளிக்க மாட்டார்கள்.

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக்கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர்" என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 2 சாமுவேல் 7: 4-17

"எனது பெயருக்காகக் கோயில் கட்டவிருப்பவன் அவனே"

நிகழ்வு

சிறுவன் ஒருவன் தன் தாய் தந்தையோடு கடற்கரைக்குச் சென்றான்.கடற்கரையில் அவனுடைய தாயும் தந்தையும் ஓரிடத்தில் அமர்ந்து பேசத் தொடங்கியதும், அவன் அவர்களை விட்டுச் சற்றுத் தள்ளிச்சென்று எதையோ கட்டத் தொடங்கினான்.

சிறுவனின் பெற்றோர் ஒருசில மணித்துளிகள் பேசி முடித்துவிட்டு, சற்றுத் தொலைவில் எதையோ மும்முரமாகக் கட்டிக்கொண்டிருந்த தங்களுடைய மகனிடம், "தம்பி! எதையோ தீவிரமாகக் கட்டிக்கொண்டிருப்பது போல் தெரிகின்றது...! அப்படி என்ன கட்டிக்கொண்டிருக்கின்றாய்...?" என்றார்கள். "நான் கோயில் கட்டிக்கொண்டிருக்கின்றேன்... அதனால் அமைதி காக்கவும்" என்றான் மகன். உடனே அவனுடைய தந்தை அவனிடம், "கோயில் கட்டுவது சரி... எதற்காக நாங்கள் அமைதி காக்கவேண்டும்...?" என்றார். அதற்குச் சிறுவன் அவர்களிடம், "கோயிலில் பேசிக்கொண்டா இருப்பீர்கள்; அமைதியாக அல்லவா இருப்பீர்கள். அதனால்தான் உங்களிடம் அமைதி காக்கவும் என்று சொன்னேன்" என்றான்.

சிறுவன் ஒரு முதிர்ச்சியடைந்த மனிதன் பேசுவதைப் போன்று பேசுவதைக் கேட்டு, அவனுடைய தந்தை அவனைக் கட்டி அணைத்துக்கொண்டார்.

கோயில் சாதாரண இடம் கிடையாது... ஆண்டவன் உறையும் இல்லம். அப்படிப்பட்ட இல்லத்தில் அல்லது இடத்தில் அமைதியாகவேண்டும் என்ற புரிதல் கடற்கரை மணலில் கோயிலைக் கட்டிய அந்தச் சிறுவனுக்கு இருந்தது நம்முடைய கவனத்திற்கு உரியவனாக இருக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் தாவீது அரசர் ஆண்டவருக்காகக் கோயிலைக் கட்ட விரும்புகின்றார். இதைத் தொடர்ந்து என்ன நடந்து என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

ஆண்டவருக்குக் கோயிலைக் கட்ட நினைத்த தாவீது

ஆண்டவராகிய கடவுள் தாவீது அரசருக்கு சுற்றிலும் இருந்த எதிரிகளின் தொல்லையிலிருந்து ஓய்வு அளிக்கின்றார். இதற்குப் பின் அவர் மற்ற அரசர்களைப் போன்று கேளிக்கையில் ஈடுபடவோ அல்லது தன்னுடைய பெயர் விளங்குமாறு மாட மாளிகைகளை அல்லது கோட்டைக் கொத்தளங்களைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று நினைக்கவில்லை. மாறாக, தான் கேதுரு மரங்களால் ஆன அரண்மனையில் இருக்கும்பொழுது ஆண்டவரின் பேழை கூடாரத்தில் இருக்கின்றதே. எனவே ஆண்டவருக்கென ஒரு கோயிலைக் கட்டலாம் என்று நினைக்கின்றார். தாவீது அரசர் இவ்வாறு எண்ணியது அவர் எப்பொழுது ஆண்டவரை நினைத்துக் கொண்டிருந்தார் என்பதை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது திருப்பாடல் 132: 1-5 வரையுள்ள பகுதியில் வருகின்ற இறைவார்த்தை இதற்குச் சான்று பகிர்கின்றது.

இது இவ்வாறு இருக்க, ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் நாத்தானுக்குக் கனவில் தோன்றி, தன்னுடைய விருப்பத்தை தாவீது அரசரிடம் எடுத்துச் சொல்லுமாறு சொல்கின்றார். தன்னுடைய விருப்பமாக ஆண்டவராகிய கடவுள் நாத்தானிடம் சொன்னது என்ன என்று தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவர்தாமே வீட்டைக் கட்டப் போவதாகச் சொல்லுதல்

தாவீது அரசர் ஆண்டவருக்குக் கோயில் கட்ட நினைத்தபொழுது, ஆண்டவராகிய கடவுள் நாத்தான் இறைவாக்கினர் வழியாக, தாவீது தனக்காகக் கோயிலை கட்டவேண்டாம் என்றும் தாமே அவருடைய வீட்டைக் கட்டப்போவதாகக் கூறுகின்றார். கடவுள் தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்த தாவீது அரசரை ஏன் கோயிலைக் கட்டவேண்டாம் என்று சொன்னார் என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது. இதற்கான பதிலை நாம் 1 குறிப்பேடு 22:8 ல் இவ்வாறு வாசிக்கின்றோம்: "நீ மிகுதியான குருதியைச் சிந்தினாய்; பெரும் போர்களை நடத்தினாய்; எனக்கு முன்பாகத் தரையில் நீ மிகுதியான குருதியைச் சிந்தியதால் என் பெயருக்கு நீ கோயில் கட்டவேண்டாம்."

ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் நாத்தான் வழியாக தாவீதிடம் இவ்வாறு சொன்னது அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்திருக்கும்; ஆனாலும் அதை தாவீது இறைவனின் திருவுளமென ஏற்றுக்கொள்கின்றார். இன்னும் சொல்லப்போனால், கடவுள் தாவீது அரசரிடம் கோயில் அல்லது இல்லம் என்று இன்னொன்றைச் சொல்கின்றார். அது என்ன என்று தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தாவீதின் அரியணை என்றுமே நிலைத்திருக்கும் என்று வாக்குறுதி அளிக்கப்படல்

கடவுள் தாவீது அரசரிடம், தாமே வீட்டை அல்லது கோயிலைக் கட்டப்போவதாகச் சொல்வது எருசலேம் திருக்கோயில் அல்ல, அதை விட உயர்ந்தது. அது தாவீதின் வழி வந்த இயேசுவால் இப்புவியில் நிறுவப்பட்ட என்றுமுள்ள அரசு. அதைத்தான் ஆண்டவர் நாத்தான் இறைவாக்கினர் வழியாக தாவீது அரசரிடம் சொல்கின்றார்.

சில சமயங்களில் தாவீது ஆண்டவரிடம் கேட்டது அவருக்கு நடக்காதது போன்று நமக்கும் நடக்காமல் இருக்கலாம். ஆனால், நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு, அவருடைய திருவுளத்தின் படி நடந்தோமெனில் கடவுள் அதைவிடவும் மேலான ஒன்றை நமக்குச் செய்து தருவார். ஆகையால், நாம் எப்பொழுதும் இறைவனின் திருவுளத்தின் நடக்கக் கற்றுக்கொள்வோம்.

சிந்தனை

"நான் ஆண்டவரின் அடிமை; உமது சொற்படியே எனக்கு நிகழட்டும்" (லூக் 1: 38) என்று மரியா இறைத்திருவுளத்திற்குப் பணிந்து நடப்பார். நாமும் மரியாவைப் போன்று தாவீதைப் போன்று இறைத்திருவுளத்திற்குப் பணிந்து நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மாற்கு 4: 1-20

"இயேசு கற்பிக்கத் தொடங்கினார்; மாபெரும் மக்கள்கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வந்தது"

நிகழ்வு

அது ஒரு பழமையான பங்கு. அந்தப் பங்கில் இருந்த பாடகற்குழுவில் பெரியவர் இருந்தார். அவருக்குச் சரியாகப் பாட வராது. இருந்தும், அவரிடம் ஆள் பலமும் பண பலமும் இருந்ததால், அவர் தொடர்ந்து பாடகற்குழுவில் இருந்து "பாடல்" பாடிவந்தார். . இதற்கிடையில் அவருடைய குரலைக் கேட்டுக் கடுப்பான ஒருசிலர் அங்கிருந்த பங்குத்தந்தையிடம் சென்று, "சுவாமி! அந்தப் பெரியவரைப் பாடகற்குழுவிலிருந்து முதலில் நீக்குங்கள். அப்பொழுதுதான் பாடகர்குழு உருப்படும்" என்று சொல்லிவிட்டுப் போனார்கள். பங்குத்தந்தையும் அவரை நீக்குகிறேன் என்று சொல்லிவிட்டு, "அவரைப் பாடகர்குழுவிலிருந்து நீக்கினால் சண்டைக்கு வருவாரோ?" என்று அமைதியாக இருந்தார்.

ஒருநாள் அந்தப் பெரியவர் பாடிய விதத்தைப் பார்த்துவிட்டு கோயிலுக்கு வந்த பலரும் எரிச்சலடைந்தார்கள். அதனால் அவர்கள் வழிபாடு முடிந்ததும், நேராகப் பங்குத்தந்தையிடம் சென்று, "சுவாமி முதலில் அந்தப் பெரியவரைப் பாடகற்குழுவிலிருந்து நீக்குங்கள். இல்லையென்றால் நாங்கள் யாரும் கோயிலுக்கு வரமாட்டோம்" என்று சற்று கோபத்தோடு சொல்லிவிட்டுப் போனார்கள்.

"இதற்கு மேலும் அமைதியாக இருந்தால், பிரச்சனை பெரிதாகும்" என்று நினைத்த பங்குத்தந்தை அந்தப் பெரியவரை அழைத்துப் பேசத் தொடங்கினார்; "ஐயா! நான் சொல்கிறேன் என்று என்னைத் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம். கோயிலுக்கு வருகின்ற பலர், "உங்களுடைய குரல் நன்றாகவே இல்லை... நீங்கள் பாடகற்குழுவை விட்டு நீங்கவேண்டும்" என்று சொல்கிறார்கள். அதனால் நீங்கள் பாடகற்குழுவை விட்டு நீங்கிக்கொள்கிறீர்களா...?" என்றார். பங்குத்தந்தை இவ்வாறு சொன்னதைக் கேட்டு அந்தப் பெரியவர் சிறிதுநேரம் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் பங்குத்தந்தையிடம், "உங்களைப் பற்றியும்தான் மக்கள் "சாமியாருக்கு சரியாகப் பிரசங்கம் வைக்கத் தெரியவில்லை", "மக்கள் எல்லாரும் பிரசங்க நேரத்தில் தூங்கித் தூங்கி வழிகிறார்கள்" என்று சொல்கின்றார். அதற்காக நீங்கள் இந்தப் பங்கைவிட்டு நீங்கிவிடுகிறீர்களா...?" என்றார். பங்குத்தந்தையால் எதுவும் பேச முடியவில்லை.

இந்த நிகழ்வில் வருகின்ற பெரியவர் பங்குத்தந்தையிடம் உண்மையைப் பேசினாரோ அல்லது அவருக்குப் பதிலளிக்கவேண்டும் என்பதற்காகப் பேசினாரோ என்று தெரியவில்லை; ஆனால், ஆண்டவருடைய வார்த்தையைப் போதிப்பது அல்லது கற்பிப்பது ஒரு கலை. அந்தக் கலை இயேசுவுக்கு மிகச் சிறப்பாக வந்தது. இன்றைய நற்செய்தியின் தொடக்கத்தில், இயேசு கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கியபொழுது, மாபெரும் மக்கள்கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வந்தது என்று வாசிக்கின்றோம். இதற்குக் காரணமாக இருந்தவை எவை என சிந்தித்துப் பார்ப்போம்.

இறைவேண்டலோடு எல்லாவற்றையும் செய்த இயேசு

இயேசு கற்பித்ததைக் கேட்க, மாபெரும் மக்கள்கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வந்ததற்கு முதன்மையான காரணமாக, அவர் செய்த இறைவேண்டலைச் சொல்லலாம். ஆம், இயேசு ஒவ்வொரு செயலையும் இறைவேண்டலோடு தொடங்கினார். விடியற்காலையில் தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று இறைவனிடம் வேண்டிய இயேசு (மாற் 1: 35) சீடர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னரும் தன்னுடைய நண்பர் இலாசரை உயிர்பிப்பதற்கு முன்னரும் இறைவனிடம் வேண்டினார் என்று நற்செய்தி நூல்கள் நமக்குச் சான்றுபகர்கின்றன. அந்த வகையில் அவர் மக்களிடம் கற்பிப்பதற்கு முன்னரும் இறைவனிடம் வேண்டியிருக்கவேண்டும் என்று உறுதியாகச் சொல்லலாம். அப்படியானால் இறைவார்த்தையை எடுத்துரைக்கும் குருவானவரும் சரி, இறையடியார்களும் சரி இறைவனிடம் வேண்டிவிட்டு இறைவார்த்தையைக் கற்பித்தால், அது பலருடைய உள்ளத்தைத் தொடுவதாக இருக்கும் என்பது உறுதி.

அதிகாரத்தோடு போதித்த இயேசு

இயேசு கற்பித்தது பலரையும் கவர்ந்திழுக்க இரண்டாவது முக்கியமான காரணம். அவர் அதிகாரத்தோடு போதித்தார் என்பதாகும். இயேசுவுக்கு எல்லா அதிகாரமும் விண்ணிலிருந்து தரப்பட்டது (மத் 28: 18) என்பது ஒருபக்கம் இருந்தாலும், அவர் மறைநூல் அறிஞர்களைப் போன்று சொல்வது ஒன்றும் செய்வது வேறொன்றுமாக (மத் 23: 3) இல்லாமல், சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராக (லூக் 24: 19) இருந்தார். அதனால்தான் அவர் கற்பித்ததைக் கேட்க மக்கள் கூட்டம் கூட்டமாய் வந்தார்கள்

அப்படியானால் இறைவாக்கை எடுத்துரைக்கும் குருக்களின், இறையடியார்களின் வாழ்க்கை இயேசுவைப் போன்று சொல்லிலும் செயலில் சிறந்ததாக இருந்தது என்றால், அவர்கள் கற்பிப்பத்தைக் கேட்க மக்கள் வருவார்கள் என்பது உறுதி. இயேசு மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் சிறு சிறு கதைகளையும் பயன்படுத்திப் போதித்தார் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

இயேசு இறைவேண்டலோடு எதையும் தொடங்கினார்; சொல்லிலும் செயலில் வல்லவராக விளங்கினார் என்று சிந்தித்துப் பார்த்த நாம், அவரைப் போன்று இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்த்து, அவர் காட்டிய வழியில் நடக்க முயற்சி செய்வோம்.

சிந்தனை

"அவரைப் போல எவரும் என்றுமே பேசியதில்லை" (யோவா 7: 46) என்று இயேசுவைப் பார்த்து, காவலர்கள் சொல்வார்கள். இயேசுவின் பேச்சு, அவருடைய போதனை எல்லாரையும் கவிர்ந்திழுக்க அவருடைய இறைவேண்டலும் அவருடைய வாழ்வும் காரணமாய் அமைந்தன. நமது போதனையும் வாழ்வும் எல்லாரையும் கவிர்ந்திழுக்க இயேசுவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!