|
|
28 ஜனவரி 2020 |
|
|
பொதுக்காலம்
3 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
சாமுவேலின் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 6: 12b-15,
17-19
அந்நாள்களில் தாவீது புறப்பட்டுச் சென்று கடவுளின் பேழையை ஓபேது
- ஏதோமின் இல்லத்திலிருந்து தாவீதின் நகருக்கு அக்களிப்போடு
கொண்டு வந்தார். ஆண்டவரின் பேழையை ஏந்தியவர்கள் ஆறு அடிகள் எடுத்து
வைத்ததும் ஒரு காளையையும் ஓர் ஆட்டுக் கிடாயையும் பலியிட்டார்.
நார்ப் பட்டால் நெய்யப்பட்ட ஏபோத்தை அணிந்துகொண்டு, தாவீது தம்
முழு வலிமையோடு ஆண்டவர் முன்பாக நடனமாடிக் கொண்டிருந்தார்.
தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரவாரத்தோடும் எக்காள முழக்கத்தோடும்
ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள். ஆண்டவரின் பேழையைக் கொணர்ந்து,
அதற்கென நிறுவிய கூடாரத்தின் நடுவில் அதை வைத்தார்கள்.
தாவீது ஆண்டவர் முன்பு எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும்
செலுத்தினார். எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தியபின்
தாவீது படைகளின் ஆண்டவர் பெயரால் மக்களுக்கு ஆசி வழங்கினார்.
பிறகு தாவீது ஆண் முதல் பெண் வரை மக்கள் அனைவருக்கும் இஸ்ரயேல்
கூட்டம் முழுவதற்கும் ஆளுக்கொரு அப்பத்தையும், பொரித்த இறைச்சியையும்,
திராட்சைப் பழ அடையையும் கொடுத்தார். மக்கள் அனைவரும் தம் இல்லங்களுக்குச்
சென்றனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 24: 7. 8. 9. 10 (பல்லவி:
8a) Mp3
=================================================================================
பல்லவி:
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? ஆண்டவர் இவரே.
7
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே,
உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். -
பல்லவி
8
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர்
இவர்; இவரே போரில் வல்லவரான ஆண்டவர். - பல்லவி
9
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே,
உயர்ந்து நில்லுங்கள். மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். -
பல்லவி
10
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? படைகளின் ஆண்டவர் இவர்; இவரே
மாட்சிமிகு மன்னர். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(மத் 11: 25)
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே,
உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும்
இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 31-35
அக்காலத்தில் இயேசுவின் தாயும் சகோதரர்களும் வந்து வெளியே
நின்றுகொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள். அவரைச்
சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. "அதோ, உம் தாயும் சகோதரர்களும்
சகோதரிகளும் வெளியே நின்றுகொண்டு உம்மைத் தேடுகிறார்கள்" என்று
அவரிடம் சொன்னார்கள்.
அவர் அவர்களைப் பார்த்து, "என் தாயும் என் சகோதரர்களும் யார்?"
என்று கேட்டு, தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச்
சுற்றிலும் பார்த்து, "இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே.
கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும்
தாயும் ஆவார்" என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
2 சாமுவேல் 6: 12-15, 17-19
கடவுளின் பேழையை எருசலேமிற்குக் கொண்டு
வந்த தாவீது
நிகழ்வு
பிரான்சு நாட்டில் அரசர் ஒருவர் இருந்தார். ஒருநாள் இவர் தன்னுடைய
அமைச்சர்களோடு கடற்கரையில் நின்று பேசிக்கொண்டிருக்கும்பொழுது,
கடலில் சற்றுத் தொலைவில் ஒருசில கப்பல்கள் வேகமாகச் சென்றன.
அவற்றைப் பார்த்துவிட்டு அரசர் அவர்களிடம், "இவையெல்லாம்
யாருடைய கப்பல்கள்...? ஏன் இவையெல்லாம் இவ்வளவு வேகமாகக் கடலுக்குள்
செல்கின்றன...?" என்றார். அமைச்சர்கள் சற்றுத் தயங்கியவாறு,
"அரசே! அந்தப் கப்பல்கள் எல்லாம் கடற்கொள்ளையர்களின் கப்பல்கள்...
அவர்கள் நம்முடைய நாட்டிலிருந்து பொருள்களைக் கொள்ளையடித்துவிட்டுப்
போகிறார்கள்" என்றார்கள்.
அமைச்சர்கள் இவ்வாறு சொன்னதைக் கேட்டு மிகவும் வேதனையடைந்த
அரசர், "நான் உயிரோடு இருக்கின்றேன்... எனக்கென்று படைப்பலம்
இருக்கின்றது... இப்படி நான் இருக்கின்றபொழுதே என்னுடைய மக்களிடமிருந்து
கடற்கொள்ளையர்கள் கொள்ளையடிக்கின்றார்கள்... அவர்களைத்
துன்புறுத்துகின்றார்கள் என்றால், நான் இல்லாதபொழுது என்னுடைய
மக்களை இவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்று மிகவும் கவலைகொள்ளத்
தொடங்கினார். பின்னர் தன்னுடைய நாட்டுமக்களைக் கடற்கொள்ளையர்களிடம்
காப்பாற்ற, படைபலத்தை இன்னும் பலப்படுத்தி, மக்களோடு எப்பொழுது
உடனிருந்து, அவர்களுக்குத் தக்க பாதுகாப்புத் தந்தார்.
இந்த நிகழ்வில் வருகின்ற அரசருக்கு ஏற்பட்ட கவலையைப் போன்று ஆண்டவராகிய
இயேசுவுக்கு ஏற்பட்டது. இயேசு, தான் இவ்வுலகத்தை விட்டுப் போனபின்பு
தனக்குரியவர்கள் திக்கற்றவர்களாகி விடக்கூடாது... அவர்களோடு
தான் இறுதிவரை உடனிருக்கவேண்டும் என்பதற்கான ஒரு வழியைக் கண்டு
பிடித்தார். அதுதான் நற்கருணை ஆகும். ஆம். நற்கருணை வழியாக ஆண்டவர்
இயேசு தமக்குரியவர்களோடு இன்றும் உடனிருக்கின்றார்.
இந்த நற்கருணைக்கு முன்னடையாளமாக இருப்பது கடவுளின் பேழை. கடவுளின்
பேழை எருசலேம் நகருக்கு கொண்டு வரப்படுவதை குறித்து இன்றைய முதல்
வாசகத்தில் வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
அரியணையாக இருந்த கடவுளின் பேழை
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்,
தாவீது அரசர் கடவுளின் பேழையை ஓபேது-ஏதோமின் இல்லத்திலிருந்து
எருசலேமிற்குக் கொண்டுவருகின்றார். இந்தப் பேழையில்
வீற்றிருந்து கடவுள் மக்களை ஆட்சி செய்து வந்தார் (திபா 99:
1). மட்டுமல்லாமல் மக்களுக்கு ஆசி வழங்கி வந்தார். அதனால்தான்
தாவீது கடவுளின் பேழை எருசலேமில் இருந்தால் (இச 12: 5) அங்குள்ள
மக்களுக்கு அவருடைய ஆசி மக்களுக்கு நிறைவாகக் கிடைக்கும் என்று
அதனை எருசலேமிற்குக் கொண்டு வருகின்றார்.
கடவுளின் பேழைக்கு முன் நடனமாடிய தாவீது
ஆண்டவரின் பேழை எருசலேமுக்குக் கொண்டுவரப்பட்டபொழுது, அதன்முன்பு
தாவீது அரசர் நார்பட்டால் நெய்யப்பட்ட ஏபோத்தை அணிந்துகொண்டு
தன் முழு வலிமையோடு நடனமாடினார் என்று இன்றைய முதல் வாசகம் எடுத்துச்
சொல்கின்றது. இது தொடர்பாக தாவீதுக்கும் அவருடைய மனைவி
மீக்காலுக்கும் இடையே பிறகு வாக்குவாதம்கூட ஏற்படுகின்றது. இதை
நாம் எப்படிப் புரிந்துகொள்வது என்று சிந்தித்துப் பார்ப்போம்.
"நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி,
யாழிசைத்து, அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக" (திபா 149: 3) என்கின்றார்
திருப்பாடல் ஆசிரியர். இவ்வார்த்தைகளைக் கொண்டு பார்க்கின்றபொழுது
ஆண்டவருக்கு முன்பாக நடனம் ஆடுகின்ற வழக்கம் இருந்தது என்பதை
உறுதி செய்துகொள்ளலாம். அந்த விதத்தில் பார்க்கின்றபொழுது
தாவீதின் மனைவியும் சவுலின் மகளுமான மீக்கால் சொல்வதுபோல்
தாவீது வெட்கக்கேடான செயலைச் செய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால்
தாவீது கடவுளின் பேழைக்கு முன்பாக நடனமாடியதை மிகவும் பெருமையாகவே
கருதினார்.
மக்களுக்கு ஆசி வழங்கிய தாவீது
தாவீது கடவுளின் பேழையை எருசலமுக்குக் கொண்டு வந்ததையும் அதற்கு
முன்பாக அவர் நடனமாடியதையும் குறித்து சிந்தித்த நாம், அவர் மக்களுக்கு
ஆசி வழங்கியதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.
தாவீது ஓர் அரசராகச் செயல்பட்டதோடல்லாமல், ஒரு குருவாகவும் செயல்பட்டார்
என்றுதான் சொல்லவேண்டும். தொடக்க நூல் பதினான்காம் அதிகாரத்தில்
வருகின்ற சலேம் அரசரான மெல்கிசெதேக்கு உன்னத கடவுளின் அர்ச்சகராக
இருப்பார் மட்டுமல்லாமல், அவர் அபிராமுகுப் ஆசி வழங்குவார்
(தொநூ 14: 17-24) தாவீதும் அரசராக இருந்தாலும், ஓர் அர்ச்சரைப்
போன்று எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தி, மக்களுக்கு
ஆசி வழங்குகின்றார். இவ்வாறு அவர் குருவாகவும் அரசராகவும் விளங்கினார்.
சிந்தனை
"இதோ உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்ககளுடன் இருக்கிறேன்" (மத்
28: 20) என்பார் இயேசு. ஆகையால், நற்கருணை வடியில் நம் வடிவில்
வீற்றிருக்கும் இயேசுவின் உடனிருப்பை நம்முடைய வாழ்வில் உணர்ந்தவர்களாய்
வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 3: 31-35
யார் இயேசுவின் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்?
நிகழ்வு
அது ஒரு கிறிஸ்தவக் குடும்பம். அந்தக் குடும்பத்தில் பதின் பருவத்திலிருந்த
ஜோ தன்னுடைய அம்மா அப்பாவோடு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.
ஒருநாள் மாலைவேளையில் மிகவும் மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்த
ஜோவை அழைத்த அவனுடைய அம்மா, "தம்பி! நாளைக்குப் புதுப்படம் ஒன்று
வெளிவருகின்றது. அதனால் அப்பாவுக்கும் எனக்கும் உனக்கும் என
மூன்று இருக்கைகளை ஆன்லைனில் (நிகழ்நிலையில்) முன்பதிவு
செய்துவிடு" என்றார். "அம்மா! ஆன்லைனின் இருக்கைகளை முன்பதிவு
செய்தால், இருநூறு ரூபாய்க்கு மேல் வீணாகச் செலவாகும். ஆனால்,
நேரில் சென்றால், அந்த இருநூறு ரூபாய் நமக்கு இலாபம். எதற்காக
இருநூறு ரூபாயை வீணாகச் செலவழிக்க வேண்டும்?" என்றான் ஜோ.
"இருநூறு ரூபாய் எல்லாம் வீண் செலவா...? இப்படியெல்லாம் பேசி
நேரத்தைப் போக்காமல், வேகமாக இருக்கைகளை முன்மதிவு செய்; இல்லையென்றால்
நாளைக்குப் படத்தைப் பார்க்க முடியாமல் போய்விடும்" என்றார்
ஜோவின் அம்மா. அவருடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டு மூன்று இருக்கைகளை
முன்பதிவு செய்தான் ஜோ.
அவன் மூன்று இருக்கைகளை முன்பதிவு செய்த மறுநொடி அவனுடைய தந்தை
வீட்டுக்குள் வேகமாக வந்தார். "ஜோ! இன்றைக்குத் திகதி
ஒன்றாகிவிட்டது... ஊரில் இருக்கின்ற பாட்டிக்கு ஆயிரத்து
இருநூறு ரூபாய் பணம் அனுப்பவேண்டும். சீக்கிரம் வா" என்றார்
அவர். "இதோ வருகின்றான்பா" என்று சொல்லிக்கொண்டு தந்தையை
நோக்கி ஓடினான் ஜோ. இதற்கிடையில் ஜோவின் அப்பா அவனிடம் சொன்ன
சொற்களை காதில் வாங்கிய ஜோவின் அம்மா அவரிடம், "ஏங்க! ஊரில்
இருக்கின்ற அத்தைக்கு வழக்கமாக ஆயிரம் ரூபாய்தானே
அனுப்புவீர்கள்... இந்தமுறை எதற்கு ஆயிரத்து இருநூறு ரூபாய்
அனுப்புகிறீர்கள்?" என்றார். அதற்கு ஜோவின் அப்பா அவரிடம்,
"இருக்கின்ற விலைவாசியில் ஆயிரம் ரூபாய் எப்படிக்
கட்டுப்படியாகும்...? அதனால்தான் இருநூறு ரூபாய் கூடுதலாக
அனுப்புகிறேன்" என்றார். "அதற்குச் சொல்லவில்லை. வயதான
காலத்தில் எதற்கு ஆயிரத்து இருநூறு ரூபாய்...? ஆயிரம் ரூபாயே
போதுமானது. கூடுதலாக இருநூறு ரூபாயை அனுப்பினால், அவர்கள்
வீணாகச் செலவழித்துவிடுவார்கள். அதற்குச் சொன்னேன்" என்று
இழுத்தார் ஜோவின் அம்மா.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஜோவிற்கு ஒன்றும் புரியவில்லை.
"புதுப்படம் பார்ப்பதற்காக இருக்கைகளை முன்பதிவு செய்வது வீண்
செலவு இல்லையா...? ஊரில் இருக்கும் பாட்டிக்குக் கூடுதலாகப்
பணம் அனுப்புவதுதான் வீண் செலாவா...? எதற்காக நம்முடைய அம்மா
இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்...?" என்று
குழம்பிப் போனான்.
பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுக்கு சிறந்த முன்மாதிரியாக
இருந்து, அவர்களை இறைவழியில் நடத்தி, இயேசுவின் உண்மையான
தாயாக, சகோதரர், சகோதரியாக இருக்கவேண்டும். அதைவிடுத்து
அவர்கள் தங்களுடைய குழந்தைகளுக்குமுன் துன்மாதிரியான வாழ்க்கை
வாழ்ந்தால், அவர்கள் இயேசுவின் உண்மையான தாயாக, சகோதரர்,
சகோதரியாக இருக்க முடியாது. இன்றைய நற்செய்தி வாசகம் யார்
இயேசுவின் தாய், சகோதரர், சகோதரி என்ற கேள்விக்கு விடையாக
இருக்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
இயேசுவைப் பார்க்க வரும் அவருடைய தாயும் சகோதரர்களும்
இயேசு உண்பதற்குக்கூட நேரம் கிடைக்காமல் இறைப்பணியைச்
செய்துகொண்டிருந்தபொழுது, அவரைப் பிடிக்காத ஒருசிலர் "அவர் மதி
மயங்கிவிட்டார்" (மாற் 3: 21) என்று தவறாகப் பேசத் தொடங்கினர்.
இது மக்கள் வழியாக இயேசுவின் தாய் மற்றும் அவருடைய
சகோதர்களுக்குத் தெரியவருகின்றது. எனவே, அவர்கள் இயேசுவைப்
பார்க்க அல்லது பிடித்துக்கொண்டு போக அவரிடம் வருகின்றார்கள்.
இந்நிலையில் என்ன நடந்தது என்பதுதான் இன்றைய நற்செய்தி வாசகமாக
இருக்கின்றது.
கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுகின்ற யாவரும் இயேசுவின் தாய்,
சகோதரர் மற்றும் சகோதரி
இயேசுவின் தாயும் அவருடைய சகோதரர்களும் அவரைப் பார்க்க வந்த
செய்தி, அவரிடம் சொல்லப்பட்டபொழுது, அவர், "... கடவுளின்
திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும்
ஆவார்" என்கின்றார். இவ்வாறு இயேசு சொல்வது நமக்கு இரண்டு
உண்மைகளை எடுத்து கூறுகின்றன. ஒன்று, யாராக இருந்தாலும் அவர்
கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவராக இருந்தால், அவர்
இயேசுவின் தாயாகவும் சகோதரராகவும் சகோதரியாகவும் மாறமுடியும்.
இரண்டு, இயேசுவின் இரத்த உறவாகவே இருந்தாலும், அவர் கடவுளின்
திருவுளத்தை நிறைவேற்றவில்லை என்றால், அவர் இயேசுவின்
தாயாகவும் சகோதரராகவும் சகோதரியாகவும் மாறமுடியாது. மரியா
கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி வந்ததால் (லூக் 1: 38) அவர்
இரண்டு விதங்களில் இயேசுவுக்குத் தாயாகின்றார்.
நாம் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி அவருடைய தாயாகவும்
சகோதரராகவும் சகோதரியாகவும் மாறுவது எப்பொழுது? சிந்திப்போம்.
சிந்தனை
"கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர் என்றும்
நிலைத்திருப்பார்" (1 யோவா 2:17) என்பார் யோவான். ஆகையால்,
நாம் கடவுளின் திருவுளத்தை மரியாவைப் போன்று நிறைவேற்றி
என்றும் நிலைத்திருப்போம்; இயேசுவின் தாயாகவும் சகோதரராகவும்
சகோதரியாகவும் மாறும் பேறுபெற்று, இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|