|
|
27 ஜனவரி 2020 |
|
|
பொதுக்காலம்
3 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
+நீயே என் மக்கள் இஸ்ரயேலுக்கு ஆயனாக இருப்பாய்.
சாமுவேல் இரண்டாம்
நூலிலிருந்து வாசகம் 5: 1-7,10
அந்நாள்களில் இஸ்ரயேலின் அனைத்துக்
குலங்களும் எபிரோனுக்கு வந்து தாவீதிடம் கூறியது: "நாங்கள் உம்
எலும்பும் சதையுமானவர்கள். சவுல் எங்கள் மீது ஆட்சி செய்த கடந்த
காலத்திலும் கூட நீரே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர். "நீயே என்
மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய்; நீயே இஸ்ரயேலுக்குத் தலைமை
தாங்குவாய்" என்று உமக்கே ஆண்டவர் கூறினார்." இஸ்ரயேலின்
பெரியோர்கள் எல்லாரும் அரசரைக் காண எபிரோனுக்கு வந்தனர். அரசர்
தாவீது எபிரோனில் ஆண்டவர் திருமுன் அவர்களோடு உடன்படிக்கை
செய்து கொண்டார். இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத்
திருப்பொழிவு செய்தனர். முப்பது வயதில் அரசரான தாவீது, நாற்பது
ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். எபிரோனில் தங்கி யூதாவை ஏழு ஆண்டுகள்
ஆறு மாதங்களும், பிறகு எருசலேமில் தங்கி அனைத்து இஸ்ரயேல்-யூதாவை
முப்பத்து மூன்று ஆண்டுகளும் அவர் ஆட்சி புரிந்தார். அரசரும்
அவருடைய ஆள்களும் அம்மண்ணின் மைந்தர் எபூசியருக்கு எதிராக எருசலேம்
சென்றபோது, அவர்கள் தாவீதை நோக்கி, "நீர் இங்கே வர முடியாது;
பார்வையற்றவரும் முடவரும்கூட உம்மை அப்புறப்படுத்தி விடுவார்கள்"
- அதாவது "இங்கே தாவீது வர முடியாது" என்றனர். இருப்பினும்,
தாவீது சீயோன் கோட்டையைக் கைப்பற்றினார். அதுவே தாவீதின் நகர்.
தாவீது தொடர்ந்து வளர்ச்சி பெற்றார். படைகளின் கடவுளாகிய ஆண்டவர்
அவரோடு இருந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா:
89: 19. 20-21. 24-25 (பல்லவி: 24a)
Mp3
=================================================================================
பல்லவி: என் வாக்குப் பிறழாமையும்
பேரன்பும் அவனோடு இருக்கும்.
19 முற்காலத்தில் உம் பற்றுமிகு
அடியார்க்கு நீர் காட்சி தந்து கூறியது: வீரன் ஒருவனுக்கு வலிமை
அளித்தேன்; மக்களினின்று தேர்ந்தெடுக்கப்பட்டவனை உயர்த்தினேன்.
பல்லவி
20 என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால்
அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்.
21 என் கை எப்பொழுதும் அவனோடு
இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும். பல்லவி
24 என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்; என்
பெயரால் அவனது வலிமை உயர்த்தப்படும்.
25 அவன் கையைக் கடல்வரைக்கும்
அவன் வலக்கையை ஆறுகள் வரைக்கும் எட்டச் செய்வேன். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(2 திமொ 1: 10)
அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து,
அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
++சாத்தானின் அழிவு.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
3: 22-30
அக்காலத்தில் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர்,
"இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது'' என்றும் "பேய்களின்
தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்'' என்றும் சொல்லிக்
கொண்டிருந்தனர். ஆகவே இயேசு அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு
உவமைகள் வாயிலாகக் கூறியது: "சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட
முடியும்? தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும்
நிலைத்து நிற்க முடியாது. தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த
வீடும் நிலைத்து நிற்க முடியாது. சாத்தான் தன்னையே எதிர்த்து
நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே
அவனது அழிவு. முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய
வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட
முடியாது; அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக்
கொள்ளையிட முடியும். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியாரைப்
பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார்;
அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார். ஆனால் மக்களுடைய
மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு
மன்னிக்கப்படும்.'' `இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது' என்று
தம்மைப்பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
2 சாமுவேல் 5: 1-7, 10
இஸ்ரயேலுக்குத் தலைமை தாங்கிய தாவீது
நிகழ்வு
அயர்லாந்து நாட்டில் அரசர் ஒருவர் இருந்தார். அவருக்குப் பல ஆண்டுகளாகக்
குழந்தையே இல்லை. இதனால் அவருக்கு, "தனக்குப் பின் யாரை அரசராக
நியமிப்பது?" என்று குழப்பம் இருந்துகொண்டே இருந்தது. இதற்கு
முற்றுப்புள்ளி வகையில் அவருக்கு ஓர் எண்ணம் ஏற்பட்டது. அதன்படியே
அவர் செய்ய முடிவுசெய்தார். மறுநாள் தன்னுடைய அமைச்சரை அழைத்த
அரசர், "தனக்குப் பின் இந்த ஆட்டை ஆளப்போகிறவரை அரசர்
தேர்ந்தெடுக்கப் போகிறார். அதனால் விருப்பமுள்ள இளைஞர்கள் அரண்மனைக்கு
வரலாம். ஆனால், ஒரு நிபந்தனை, அவர்கள் இறைவன்மீது பற்று கொண்டவராகவும்
எல்லாரையும் அன்பு செய்பவராக இருக்கவேண்டும்" என்பதை எல்லா மக்களுக்கு
அறிவிக்கச் சொன்னார். அமைச்சரும் அரசர் சொன்னதுபோன்றே மக்களுக்கு
அறிவித்தார்
அரசர் கொடுத்த இவ்வறிவிப்பைக் கேட்டு இளைஞர்கள் பலரும் அரண்மனைக்கு
மிக உற்சாகமாக வருகை புரிந்தார்கள். ஒரு சிற்றூரில் இருந்த ஏழை
இளைஞனும் அவர்களில் உள்ளடங்குவார். அந்த இளைஞனுக்கு இறைவன்மீது
ஆழமான பற்றும் எல்லா மக்களை அன்புசெய்தும் வந்தான். அப்படிப்பட்டவன்
ஊர்மக்கள் தனக்குப் பரிசாகக் கொடுத்த புத்தாடையை அணிந்துகொண்டு
அரண்மனைக்கு வந்துகொண்டிருந்தான். வரும் வழியில் கிழிந்த உடையுடன்,
குளிரில் நடுங்கியவாறு பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பதை
அவன் கண்டான். உடனே அவன் தான் அணிந்திருந்த புத்தாடையை அதாவது
மேலாடையை அவருக்குக் கழற்றிக்கொடுத்து அரண்மனைக்கு வந்தான்.
அரண்மனையில் அவனைப் போன்று பல இளைஞர்கள் வருகை
புரிந்திருந்தார்கள். எல்லாரும் பளபளப்பான ஆடையுடனும் மிடுக்குடனும்
இருந்தார்கள். அவர்களையெல்லாம் அவன் பார்த்தபொழுது அவனுக்கு ஏதோபோல்
இருந்தது. அதனால் அவன் ஓரமாக நின்றுகொண்டான். சிறிதுநேரம் கழித்து
அரசர் அங்கு வந்தார். அவரைப் பார்த்த அந்த இளைஞனுக்கு ஆச்சரியமாக
இருந்தது. ஏனெனில், வரும் வழியில் பிச்சைக்காரராகப் காட்சியளித்தவர்தான்
தற்பொழுது அரசராக நின்றுகொண்டிருந்தார்.
அவர் அங்கிருந்த இளைஞர்களைப் பார்த்து, "நான் விடுத்த அழைப்பை
ஏற்று இங்கு வருகை புரிந்திருக்கும் உங்களை மனதார
வாழ்த்துகின்றேன். உங்களிலிருந்து அதோ தனியாக
நின்றுகொண்டிருக்கின்றாரே அவரை எனக்குப் பின் அரசராக ஏற்படுத்துகின்றேன்"
என்றார். அரசர் இவ்வாறு சொன்னதும் அனைவரும் அவரைத் திரும்பிப்
பார்த்தார்கள். அப்பொழுது அரசர் நடந்த அனைத்தையும் அவர்களிடம்
எடுத்துச் சொல்லி, "இந்த இளைஞர் எளியவரிடம் அன்போடு இருக்கின்றார்.
நிச்சயம் இவர் இறைவனிடம் பற்றுகொண்டவராகத்தான் இருக்கவேண்டும்.
இதனாலேயே இவரை நான் அரசராக நியமிக்கிறேன்" என்றார்.
இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞன் ஆண்டவரிடம் நம்பிக்கையும் அல்லது
இறைப்பற்றும் அனைவரிடமும் அன்பும் கொண்டிருந்தான். அதனால் அவன்
அயர்லாந்து நாட்டின் அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். இன்றைய
முதல் வாசகத்தில் ஆண்டவரின்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்த
தாவீது இஸ்ரயேலின் அரசராக உயர்த்தப்படுவதைக் குறித்து
வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
ஆண்டவரிடம் நம்பிக்கையோடு இருந்த தாவீது அரசராக ஏற்படுத்தப்படல்
"நம்பிக்கையாலும் பொறுமையாலும் இறைவாக்குறுதிகளை உரிமைப்பேறாகப்
பெற்றவர்களைப் போல் வாழுங்கள்" (எபி 6: 12) என்பார் எபிரேயர்
திருமுகத்தின் ஆசிரியர். இவ்வார்த்தைகளுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாய்
வாழ்ந்தவர்தான் தாவீது. ஆம், தாவீது ஆண்டவரால் அருள்பொழிவு
செய்யப்பட்ட பின் உடனடியாக இஸ்ரயேலின் அரசராக உயர்ந்துவிடவில்லை.
அப்பொழுது அரசராக இருந்த சவுலால் துரத்தப்பட்டார். அவரிடமிருந்து
பத்தாண்டுகள் விலகியிருந்த தாவீது நம்பிக்கையோடும்
பொறுமையோடும் இருந்தார். சவுலின் நான்காவது மற்றும் கடைசி மகனாகிய
இஸ்பொசேத்தின் (2 சாமு 2 : 8- 4:12) இறப்புக்குப் பின்னரே
தாவீது இஸ்ரயேலின் அரசராக உயர்கின்றார். ஆகையால், தாவீது ஆண்டவரிடம்
கொண்டிருந்த நம்பிக்கை அவரை இஸ்ரயேலின் அரசராக உயர்த்தியது என்றால்
அது மிகையில்லை.
இணைச்சட்ட நூல் 17: 14-20 இஸ்ரயேலின் அரசராக இருக்கப்போகிறவர்
யாரால் தேர்ந்தெடுக்கப்படுவார், அவர் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்
என்று கூறுகின்றது. இஸ்ரயேலின் அரசராக இருப்பவர் ஆண்டவரால்
தேர்ந்தெடுக்கப்படவேண்டும் (இச 17:15) தாவீது, சவுலைப் போலன்றி
ஆண்டவராலே தேர்ந்தெடுக்கப்பட்டார் (திபா 78: 70-72). அதனாலேயே
ஆண்டவரோடு உடனிருந்தார்.
எருசலேமைத் தலைநகராக தெரிவுசெய்த தாவீது
இஸ்ரயேலின் அரசராகத் தாவீது தலைமை தாங்கியபிறகு எருசலேமைத் தலைநகராகத்
தேர்ந்தெடுக்கின்றார். இதற்கு முக்கியமான காரணம் அந்நகர் வடநாட்டிற்கும்
தென்னாட்டிற்கும் பொதுவாக இருந்தது. இஸ்ரயேலின் பன்னிரு குலங்களை
ஒன்றாக ஆளுவதற்கு பொதுவான, கடவுளின் நகர் (இச 12:5; திபா 87:
3) ஒன்று தாவீதுக்குத் தேவைப்பட்டது. அதற்கு எருசலேமே சரியாக
இடமாக இருந்தது. எருசலேமைத் தலைநகராகக் கொண்டு இஸ்ரயேல் மக்கள்
ஆண்ட தாவீது அரசர், ஆண்டவரின் துணையால் அதைச் சிறப்பாக ஆண்டார்.
சிந்தனை
"நம்பிக்கையினாலேயே இவர்கள் அரசுகளை வென்றார்கள்" (எபி 11: 33)
என்கிறார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். ஆகவே, தாவீது அரசர்
எப்படி ஆண்டவர்மீது நம்பிக்கையோடு இருந்து அவருடைய ஆசியைப்
பெற்றாரோ, அதுபோன்று நாமும் ஆண்டவரிடம் நம்பிக்கையோடு இருப்போம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 3: 22-30
"இயேசுவும் பெயல்செபூலும்"
நிகழ்வு
இத்தாலியில் உள்ள ப்ளோரான்ஸ் நகரில் தோன்றிய மிகச்சிறந்த சிற்பக்
கலைஞர் டொனாடெல்லோ. இவர் தன்னுடைய சொந்த ஊரில் "பெயர் சொல்லும்படியான
சிற்பங்களை வடித்து வைத்துவிட்டு, சில ஆண்டுகளுக்கு பிசா நகரில்
போய்த் தங்கினார். அங்கும் இவர் அற்புதமான சிற்பங்களை வடிக்கத்
தொடங்கினார். இவரிடம் விளங்கிய இந்தத் திறமையைப்
பார்த்துவிட்டு, பிசா நகர மக்கள் இவரை வானளாவப் போற்றிப் புகழ்ந்தார்கள்.
இப்படியிருக்கையில் ஒருநாள் இவர். பிசா நகரில் தனக்கு அறிமுகமான
ஒருவரிடம், "நான் இந்த நகரை விட்டு என்னுடைய சொந்த ஊருக்குப்
போகிறேன்" என்றார். இதைக் கேட்டு அந்த மனிதர் அதிர்ந்துபோய்,
"இந்த நகரில் இருக்கின்ற எல்லாரும் உங்களுடைய சிற்பங்கள் அனைத்தும்
அருமையான இருக்கின்றன என்றுதானே புகழ்கின்றார்கள். பிறகு எதற்கு
இந்த நகரைவிட்டு உங்களுடைய சொந்த ஊருக்குப் போகவேண்டும் என்று
சொல்கிறீர்கள்" என்று கேட்டார்.
டொனாடெல்லோ அவரிடம், "இந்த நகரில் இருப்பவர்கள் எப்பொழுதும்
நான் வடிக்கக்கூடிய சிற்பங்களைப் ஏகத்துக்கும் புகழ்ந்துகொண்டே
இருகின்றார்கள். இவர்கள் என்னுடைய சிற்பங்களில் இருக்கும் குறைகளைச்
சுட்டிக்காட்டிவதில்லை. என்னுடைய சிற்பங்களை விமர்சிப்பதுமில்லை;
இதனால் நான் எனக்குள் இருக்கும் முழு ஆற்றலையும் வெளிப்படுத்த
முடியாமல் போய்விடுமோ என்று அச்சமாக இருக்கின்றது. ஆனால், என்னுடைய
சொந்த ஊரில் இருக்கும் மக்கள் அப்படியில்லை. அவர்கள் என்னுடைய
சிற்பங்களில் குறையிருக்கும்பொழுது, நேருக்குநேர் சொல்வார்கள்.
சில சமயங்களில் கடுமையாக விமர்சிப்பார்கள். அது எனக்குள் இருக்கும்
முழு ஆற்றலையும் வெளிபடுத்த உதவியாக இருக்கும். அதனால்தான்
நான் என்னுடைய சொந்த ஊருக்குப் போகிறேன்" என்றார்.
நல்ல விதத்தில் முன்வைக்கப்படும் விமர்சனம் ஒருவருடைய வளர்ச்சிக்குத்
தூண்டுதலாக இருக்கும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு
நமது சிந்தனைக்குரியது.
.நல்ல விதத்தில் முன் வைக்கப்படும் விமர்சனங்கள் விமர்சிக்கப்படுபவருடைய
வளர்சிக்குக் தூண்டுதலாக இருக்கும். அதே நேரத்தில் ஒருவரை
வீழ்த்தவேண்டும் என்ற எண்ணத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்களால்
விமர்சிக்கப்படுவருக்கு எந்த விதத்திலும் பயன்படாது. நற்செய்தியில்
இயேசுவை வீழ்த்த நினைத்து பரிசேயர்கள் அவரை விமர்சிக்கின்றார்கள்.
இயேசு அந்த விமர்சனத்தை எப்படி எடுத்துக் கொண்டார் என்று
சிந்தித்துப் பார்ப்போம்.
தூய ஆவியாரின் துணையால் எங்கும் நன்மைசெய்து வந்த இயேசு
ஆண்டவர் இயேசு கிறிஸ்து தூய ஆவியாரின் அருள்பொழிவால் நிரப்பப்பட்டு,
எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார் (திப 10: 38) குறிப்பாக
அவர் பிணிகளைப் போக்கி, பேய்களை ஓட்டி வந்தார். இதனால் மக்கள்கூட்டம்
அவரை மிகுதியாகப் பின்பற்றத் தொடங்கியது. இதையெல்லாம் பார்த்த
பரிசேயர்கள் "அவர் பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு
பேய்களை ஓட்டுகின்றார்" என்று விமர்சிக்கத் தொடங்குகின்றார்கள்.
பரிசேயர்களுக்கு நன்றாகவே தெரியும், இயேசு பேய்களை ஓட்டுவது இறை
வல்லமையால்தான் என்று. ஆனாலும் அவர்கள் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளத்
தயங்கினார்கள். அதற்கு முக்கியமான காரணம், இயேசு இறைவல்லமையால்
தீய ஆவிகளை விரட்டுகின்றார் என்று ஏற்றுக்கொண்டால், அவரை
மெசியா என்று ஏற்றுக்கொள்ளவேண்டி வரும். இது தங்களுடைய வளர்ச்சிக்குத்
தடையாக இருக்கும் என்பதால், இயேசு பெயல்செபூலைக் கொண்டு பேய்களை
ஓட்டுகின்றார் என்று விமர்சிகின்றார்கள்.
தன்னை விமர்சித்தோருக்கு சரியான பதிலடி கொடுத்த இயேசு
பரிசேயர்கள், தான் பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு
ஒட்டுவதாக விமர்சித்ததைக் கண்டு இயேசு "சும்மா" இருக்கவில்லை.
மாறாக அவர்களுக்கு அவர் சரியான பதிலடி கொடுக்கின்றார். ஆம், பரிசேயர்கள்
இயேசுவைத் தவறாக விமர்சித்ததும், இயேசு இரண்டுவகையான கருத்துகளை
அவர்கள் முன் எடுத்து வைத்து அவர்களுடைய வாயை அடைக்கின்றார்.
இயேசு முன்வைக்கும் முதல் கருத்து, "தனக்கு எதிராகத் தானே பிளவுபடும்
எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது" என்பதாகும். எந்தவோர்
அரசும் வளரேண்டும் என்றுதான் விரும்பே ஒழிய, அழிந்துபோகவேண்டும்
என்று விரும்பாது. அந்த வகையில் சாத்தானும் தன்னுடைய அரசு வளரவேண்டும்
என்று விரும்புமே ஒழிய, அழிந்துபோகவேண்டும் என்று விரும்பது.
ஆகையால், தான் பெயல்செபூலைக் கொண்டு அல்ல, தூய ஆவியாரின்
துனையாலேயே பேய்களை ஒட்டுவதாக இயேசு எடுத்துச் சொல்கின்றார்.
இரண்டாவதாக இயேசு முன் வைக்கும் கருத்து, "வலியவரைக் கட்டினாலன்றி
அவ்வலியவனுடைய வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையிட முடியாது" என்பதாகும்.
இதன்படி பார்த்தால், "வலியவனாகிய" சாத்தானை தான் வெற்றிகொண்டதால்
(திவெ 20: 10) தான் சாத்தானை விடப் பெரியவர் என்று இயேசு எடுத்துக்கூறுகின்றார்.
இயேசு தூய ஆவியின் வல்லமையால் பேய்களை ஓட்டினார். அது
பிடிக்காத பரிசேயர்கள் அவரைத் தவறாக விமர்சித்தார்கள். இயேசுவுக்கு
நேர்ந்த இந்நிலை இன்று நமக்கும் ஏற்படலாம். ஆதலால், நாம் இயேசுவைப்
போன்று விமர்சனங்களை விவேகத்தோடு எதிர்கொண்டு, தொடர்ந்து இலக்கை
நோக்கி நடப்பது நல்லது.
சிந்தனை
"விமர்சிக்கப்படுகின்றோம் என்பதற்காக விலகிப்போனால் என்றால்,
விமர்சனங்கள் மிகுதியாகுமே ஒழியே குறையாது" என்பர். ஆகையால்,
நாம் நம்மீது சுமத்தப்படும் விமர்சனங்களை முன்மதியோடு எதிர்கொண்டு,
இறைப்பணியைத் தொடர்ந்து செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|