Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   25  ஜனவரி 2020  
    பொதுக்காலம் 2 ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்  திருத்தூதர் பவுல் மனமாற்றம் விழா
=================================================================================
 எழுந்து இயேசுவின் திருப்பெயரை அறிக்கையிட்டு உமது பாவங்களிலிருந்து கழுவப்பெற்றுத் திருமுழுக்குப் பெறும்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 22: 3-16

அந்நாள்களில் பவுல் மக்களை நோக்கிக் கூறியது:

"நான் ஒரு யூதன்; சிலிசியாவிலுள்ள தர்சு நகரத்தில் பிறந்தவன்; ஆனால் இந்த எருசலேம் நகரில் வளர்க்கப்பட்டவன்; கமாலியேலின் காலடியில் அமர்ந்து நம் தந்தையரின் திருச்சட்டங்களில் நுட்பமாகப் பயிற்சி பெற்றவன்; நீங்கள் அனைவரும் இன்று கடவுள்மீது ஆர்வம் கொண்டுள்ளதுபோன்று நானும் கொண்டிருந்தேன்.

கிறிஸ்தவ நெறியைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் கட்டிச் சிறையில் அடைத்தேன்; சாகும்வரை அவர்களைத் துன்புறுத்தினேன். தலைமைக் குருவும் மூப்பர் சங்கத்தாரும் இதற்குச் சாட்சி. இவர்களிடமிருந்து தமஸ்கு நகரிலுள்ள சகோதரர்களுக்குக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டு அங்குள்ள கிறிஸ்தவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவந்து தண்டிப்பதற்காக அங்குச் சென்றேன்.

நான் புறப்பட்டுத் தமஸ்கு நகரை நெருங்கியபோது நண்பகல் நேரத்தில் திடீரென வானிலிருந்து ஒரு பேரொளி என்னைச் சூழ்ந்து வீசியது. நான் தரையில் விழுந்தேன். அப்போது, "சவுலே, சவுலே நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?" என்ற குரலைக் கேட்டேன். அப்போது நான், "ஆண்டவரே நீர் யார்?" என்று கேட்டேன். அவர், "நீ துன்புறுத்தும் நாசரேத்து இயேசு நானே" என்றார். என்னோடு இருந்தவர்கள் ஒளியைக் கண்டார்கள்; ஆனால் என்னோடு பேசியவரது குரலைக் கேட்கவில்லை. "ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும்?" என நான் கேட்க, ஆண்டவர் என்னை நோக்கி, "நீ எழுந்து தமஸ்குவுக்குச் செல். நீ செய்வதற்கெனக் குறிக்கப்பட்டுள்ளவை அனைத்தும் அங்கே உனக்குக் கூறப்படும்" என்றார்.

அந்த ஒளியின் மிகுதியால் நான் பார்க்க முடியவில்லை. என்னோடு இருந்தவர்கள் எனது கையைப் பிடித்துத் தமஸ்குவினுள் அழைத்துச் சென்றார்கள். அங்கு அனனியா என்னும் ஒருவர் இருந்தார். அவர் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்துக் கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர்; அங்கு வாழ்ந்து வந்த யூதர் அனைவரிடமும் நற்சான்று பெற்றவர். அவர் என்னிடம் வந்து அருகில் நின்று, "சகோதரர் சவுலே, மீண்டும் பார்வையடையும்" என்றார். அந்நேரமே நான் பார்வை பெற்று அவரைப் பார்த்தேன்.

அப்போது அவர், "நம் மூதாதையரின் கடவுள் தம் திருவுளத்தை அறியவும் தம் நேர்மையாளரைக் காணவும் தம் வாய்மொழியைக் கேட்கவும் உம்மை ஏற்படுத்தியுள்ளார். ஏனெனில், நீர் கண்டவைகளுக்கும் கேட்டவைகளுக்கும் அனைவர் முன்பும் நீர் சாட்சியாய் இருக்க வேண்டும். இனி ஏன் காலம் தாழ்த்த வேண்டும்? எழுந்து அவரது திருப்பெயரை அறிக்கையிட்டு உமது பாவங்களிலிருந்து கழுவப்பெற்றுத் திருமுழுக்குப் பெறும்" என்றார்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

அல்லது

சவுல் "ஆண்டவரே நீர் யார்?" எனக் கேட்டார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 9: 1-22


அந்நாள்களில் சவுல் சீறியெழுந்து ஆண்டவரின் சீடர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார். தலைமைக் குருவை அணுகி, இந்தப் புதிய நெறியைச் சார்ந்த ஆண், பெண் யாராய் இருந்தாலும் அவர்களைக் கைது செய்து எருசலேமுக்கு இழுத்துக்கொண்டு வரத் தமஸ்கு நகரிலுள்ள தொழுகைக் கூடங்களுக்குக் கடிதங்களைக் கேட்டு வாங்கினார். இவ்வாறு அவர் புறப்பட்டுச் சென்று தமஸ்குவை நெருங்கியபோது திடீரென வானத்திலிருந்து தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியது.

அவர் தரையில் விழ, "சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?" என்று தம்மோடு பேசும் குரலொன்றைக் கேட்டார். அதற்கு அவர், "ஆண்டவரே நீர் யார்?" எனக் கேட்டார். ஆண்டவர், "நீ துன்புறுத்தும் இயேசு நானே. நீ எழுந்து நகருக்குள் செல்; நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும்" என்றார். அவரோடு பயணம் செய்தோர் இக்குரலைக் கேட்டனர்.

ஆனால் ஒருவரையும் காணாமல் வாயடைத்து நின்றனர். சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள். அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார். அந்நாள்களில் அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை.

தமஸ்குவில் அனனியா என்னும் பெயருடைய சீடர் ஒருவர் இருந்தார்.

ஆண்டவர் அவருக்குத் தோன்றி, "அனனியா" என அழைக்க, அவர், "ஆண்டவரே, இதோ அடியேன்" என்றார்.

அப்போது ஆண்டவர் அவரிடம், "நீ எழுந்து நேர்த்தெரு என்னும் சந்துக்குப் போய் யூதாவின் வீட்டில் சவுல் என்னும் பெயருடைய தர்சு நகரத்தவரைத் தேடு. அவர் இப்போது இறைவனிடம் வேண்டிக்கொண்டிருக்கிறார். அனனியா என்னும் பெயருடைய ஒருவர் வந்து தாம் மீண்டும் பார்வையடையுமாறு தம்மீது கைகளை வைப்பதாக அவர் காட்சி கண்டுள்ளார்" என்று கூறினார்.

அதற்கு அனனியா மறுமொழியாக, "ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமில் உள்ள இறைமக்களுக்கு என்னென்ன தீமைகள் செய்தான் என்பதைப் பற்றிப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன். உம் பெயரை அறிக்கையிடும் அனைவரையும் கைது செய்வதற்காகத் தலைமைக் குருக்களிடமிருந்து அதிகாரம் பெற்று இங்கே வந்திருக்கிறான்" என்றார்.

அதற்கு ஆண்டவர் அவரிடம், "நீ செல். அவர் பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச்செல்ல நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட கருவியாய் இருக்கிறார். என் பெயரின் பொருட்டு அவர் எத்துணை துன்புறவேண்டும் என்பதை நான் அவருக்கு எடுத்துக்காட்டுவேன்" என்றார்.

அனனியா அங்கிருந்து போய் அந்த வீட்டுக்குள் சென்று கைகளை அவர்மீது வைத்து, "சகோதரர் சவுலே, நீர் வந்த வழியில் உமக்குத் தோன்றிய ஆண்டவராகிய இயேசு நீர் மீண்டும் பார்வையடையவும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படவும் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார்" என்றார்.

உடனே அவருடைய கண்களிலிருந்து செதிள்கள் போன்றவை விழவே, அவர் மீண்டும் பார்வையடைந்தார். பார்வையடைந்ததும் அவர் எழுந்து திருமுழுக்குப் பெற்றார்.

பின்பு சவுல் உணவு அருந்தி வலிமை பெற்றார். சில நாள்களாக சவுல் தமஸ்குவில் சீடர்களுடன் தங்கியிருந்தார். உடனடியாக அவர் இயேசுவை இறைமகன் என்று தொழுகைக் கூடங்களில் பறைசாற்றத் தொடங்கினார். கேட்டவர் அனைவரும் மலைத்துப்போய், "எருசலேமில் இந்தப் பெயரை அறிக்கையிடுவோரை ஒழிக்க முற்பட்டவன் இவனல்லவா? அவ்வாறு அறிக்கையிடுவோரைக் கைது செய்து, தலைமைக் குருக்களிடம் இழுத்துச் செல்லும் எண்ணத்தோடு இங்கே வந்தவன்தானே இவன்" என்றார்கள்.

சவுல் மேன்மேலும் வல்லமை பெற்றவராய், "இயேசுவே கிறிஸ்து" என்பதை மெய்ப்பித்துத் தமஸ்குவில் வாழ்ந்து வந்த யூதர்கள் அனைவரும் மனம் குழம்பச் செய்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 117: 1. 2 (பல்லவி: மாற்16:15)
=================================================================================

பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
1 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! - பல்லவி

2 ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. அல்லேலூயா! - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 15: 16)
அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-18

இயேசு அவர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்.

நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்;

பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்" என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 2 சாமுவேல் 1: 1-4, 11-12, 19, 23- 27

தாவீதின்மீது பேரன்பைப் பொழிந்த யோனத்தான்

நிகழ்வு

ஓர் ஊரில் பார்வையற்ற பெண் ஒருவர் இருந்தார். அவருக்கு இவ்வுலகின் அழகைக் கண்டு இரசிக்கவேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஆனால், அவரால் அது முடியவில்லை. நாள்கள் மெல்ல நகர்கையில் அவர், "இவ்வுலகின் அழகைத்தான் என்னால் கண்டு இரசிக்க முடியவில்லை... குறைந்தது பெளர்ணமியின்பொழுது அந்த இரவு எப்படி இருக்கும் எனத் தெரிந்துகொள்ள ஆசை... அதற்கு யாராவது உதவி புரிவீர்களாக?" என்று தனக்கு அறிமுகமானவர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

இச்செய்தி அவருடைய நண்பர் ஒருவருக்குத் தெரிய வந்தது. அந்த நண்பர் ஒரு மிகப்பெரிய இசைமேதை. அவர் தன்னுடைய தோழி பெளர்ணமி இரவு எப்படி இருக்கும் என்பதை உணர்ந்துகொள்ளும் வகையில் ஓர் இசைக்கோர்வையைப் படைத்தார். அந்த இசைக்கோர்வையின் பெயர், "Moonlight Sonata". அந்த இசைக்கோர்வையை உருவாக்கியவர் வேறு யாருமல்ல, மிகப்பெரிய இசை மேதையான பீத்தோவன் என்பவரே ஆவார்.

பீத்தோவன் தன்னுடைய தோழி அல்லது நண்பி பெளர்ணமி இரவின் அழகை உணர்ந்துகொள்வதற்காக ஓர் இசைக்கோர்வையையே உருவாக்கினார். ஆம், உண்மையான நண்பர்கள் தங்களுடைய நண்பர்களுக்காக எதையும் செய்வார்கள். இன்றைய முதல் வாசகத்தில் நட்பிற்கு இலக்கணமாகத் திகழ்ந்த தாவீதின் நெருங்கிய நண்பராகிய யோனத்தானின் இறப்பையும் அவருடைய தந்தையான சவுலின் இறப்பைக் குறித்தும் வாசிக்கின்றோம். ஆகவே, நாம் யோனத்தான் மற்றும் சவுலின் இறப்பையொட்டிய செய்திகளையும் தாவீதுக்கும் யோனத்தானுக்குமிடையே நிலவிய நட்பு எப்படிப்பட்டதாக இருந்தது என்பதைக் குறித்தும் இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தன் ஈட்டின்மீது சாய்ந்து மடிந்த பவுல்

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், தாவீதிடம் ஓடிவருகின்ற ஒருவன், சவுலும் யோனாத்தனும் போரில் இறந்த செய்தியைச் சொல்கின்றான். உடனே தாவீது அவனிடம், அவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்று கேட்க, அவன், போரில் யோனத்தான் இறந்துவிட்டான் என்று சொல்லிவிட்டு, சவுல் தன் ஈட்டியின்மீது சாய்ந்துகொண்டிருந்தார். அவ்வழியாக வந்த என்னிடம் அவர், என்னைக் கொல் என்று சொல்ல, நான் அவர்மீது ஏறி நின்று அவரைக் கொன்றேன் என்று கூறுகின்றான். அவனோ ஓர் அமலேக்கியன். அவன் சொன்ன செய்தியைக் கேட்டு தாவீதும் அவரோடு இருந்தவர்களும் தங்களுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, போரில் இறந்தவர்களுக்காக நோன்பிருக்கின்றார்கள். பின்னர் தாவீது அந்த அமலேக்கியனிடம், அருள்பொழிவு செய்யப்பட்ட ஒருவரை எப்படிக் கொல்லலாம் என்று அவனை இன்னொருவன் மூலமாகக் கொல்கின்றார்.

இங்கு நாம் இரண்டு செய்திகளைக் கருத்தில் கொள்ளவேண்டும். ஒன்று, தாவீது சவுலிடம் உயர்வாக நடந்துகொண்டது. சவுல் பொறாமையால் தாவீதைக் கொல்லத் துணிந்தார். அப்படியிருந்ததும், தாவீது சவுலை உயர்வாகவே கருதி வாழ்ந்தார். அதனால்தான் சவுல் இறந்தபொழுது தாவீது தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு கண்ணீர்விட்டு அழுகின்றார்; கழுகை விட வேகமாகச் செல்பவர் என்றும் அரியைவிட வலிமைமிக்கவர் என்றும் அவரை உயர்வாகப் பேசுகின்றார். இங்கு நாம் கருத்தில் கொல்லவேண்டிய இரண்டாவது செய்தி, அருள்பொழிவு செய்யப்பட்டவருக்குத் தீங்கு செய்வோர் அதற்குரிய தண்டனை பெறுவர் என்பதாகும். சவுல் இஸ்ரயேல் மக்களுக்கு நல்லாட்சியை வழங்காவிட்டாலும், அவர் அருள்பொழிவு செய்யப்பட்டவர் என்ற முறையில், அவரைக் கொன்ற அமலேக்கியன் கொல்லப்படுகின்றான். அப்படியானால், அருள்பொழிவு செய்யப்பட்டவருக்கு எதிராகச் செய்யப்படும் தீமைக்கு உரிய தண்டனை உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது.

யோனத்தான் மற்றும் தாவீதுக்கு இடையே இருந்த உண்மையான நட்பு

அமேலேக்கியருடனான போரில் சவுலும் தன் நண்பன் யோனத்தானும் கொல்லப்பட்ட செய்தியைக் கேள்விப்படும் தாவீது அவர்களை நினைத்து இரங்கற்பா பாடுகின்றார். குறிப்பாக யோவானத்தைக் குறித்து தாவீது கூறுகின்ற, "எனக்கு உவகை அளித்தவன் நீ; என்மீது பொழிந்த பேரன்பை என்னென்பேன்; அது மகளிரின் காதலையும் மிஞ்சியதன்றோ!" என்ற சொற்கள் நம்முடைய சிந்தனைக்குரியவையாக இருக்கின்றன.

யோனத்தானின் தந்தை சவுல் தாவீதைக் கொல்ல நினைத்தபொழுது யோனத்தான்தான் தாவீதை காப்பாற்றினார். இன்னும் பல்வேறு விதங்களில் யோனத்தான் தாவீதுக்கு உற்ற துணையாக இருந்தார். அதனால்தான் தாவீது யோனத்தனைக் குறித்து அவ்வாறு இரங்கற்பா பாடுகின்றார். உண்மையில் யோனத்தான் தாவீதின்மீது கொண்ட அன்பையும் நட்பையும் விவரிப்பதற்கு வார்த்தைகள் இல்லை. இவர்கள் இருவரிடமும் இருந்த அன்பையும் நட்பையும் நாமும் கொண்டு வாழ்ந்தால், அவற்றை விட வாழ்க்கையை அழகாக்குபவை வேறு இல்லை.

சிந்தனை

"அன்பும் நட்பும் எங்குள்ளதோ எங்கே இறைவன் இருக்கின்றார்" என்கிறது பழைய கிறிஸ்தவப் பாடல். ஆகையால், நாம் அன்போடும் நட்போடும் இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மாற்கு 3: 20-21

"அவர் மதிமயங்கி இருக்கிறார்"


நிகழ்வு

பின்லாந்து நாட்டில் பிறந்த மிகச்சிறந்த வயலின் இசைக்கலைஞர் ஜீன் சிபெலியுஸ் (Jean Sibelius). ஒருமுறை இவரைப் பார்க்க ஓர் இளம் இசையமைப்பாளர் வந்தார். அவர் சிபெலியுஸிடம், "மக்கள் என்னுடைய இசையைச் சகட்டுமேனிக்கு விமர்சிக்கின்றார்கள். இதனால் என்னால் சரியாக இசையமைக்க முடியவில்லை" என்று வருத்தத்தோடு சொன்னார்.

அவர் சொன்னதை அமைதியாகக் கேட்டுவிட்டு சிபெலியுஸ் அவரிடம், "தம்பி! இப்பொழுது உன்னிடம் சொல்லப்போவதை உன்னுடைய மனத்தில் பதிய வைத்துக்கொள். நீ சாகிறவரைக்கும் உன்னை விமர்சிப்பவர்கள் விமர்சித்துக்கொண்டுதான் இருப்பார்கள். அவர்களைக் கண்டுகொள்ளாதே. ஆனால், ஒன்றுமட்டும் உண்மை. இந்த உலகம் விமர்சகர்களுக்கு அல்ல, நல்ல கலைஞர்களுக்கே சிலை வடிக்கும். அதனால் யாருடைய விமர்சனத்தைக் கண்டும் துவண்டுவிடாமல், தொடர்ந்து உன்னுடைய பணியைச் செய்துகொண்டே இரு. ஒருநாள் இந்த உலகம் உன்னை வியந்து பார்க்கும்" என்றார்.

சிபெலியுஸ் சொன்ன இந்த உற்சாக வார்த்தைகளைக் கேட்டு, அந்த இளம் இசையமைப்பாளர் புதிய உத்வேகத்துடன் இசையமைக்கத் தொடங்கினார்.

நம்மீது சுமத்தப்படும் விமர்சனங்கள், பழிச்சொற்கள் ஆகியவற்றைக் கண்டு துவண்டுவிடாமல், தொடர்ந்து நமது இலக்கை நோக்கி நடைபோட்டால், நிச்சயம் ஒருநாள் நம்முடைய இலக்கை அடைவோம் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியில் இறைப்பணியை ஓய்வில்லாமல் செய்துவந்த இயேசுவை "மதிமயங்கிவிட்டார்" என்று மக்கள் பேசத் தொடங்குகின்றார்கள். இதனை இயேசு எப்படி எதிர்கொண்டார் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இயேசுவின்மீது விமர்சனம்

தூய ஆவியால் அருள்பொழிவு செய்யப்பட்ட இயேசு, ஆண்டவருடைய வார்த்தையை எடுத்துச் சொல்லியும் நோயுற்றிருந்த மக்களை நலப்படுத்தியும் வந்தார். இதனால் மக்கள்கூட்டம் அவரை மிகுதியாகப் பின்பற்றத் தொடங்கியது. இதற்கு நடுவில் அவர் "மதிமயங்கி விட்டார்" என்ற குற்றச்சாட்டு அவர்மீது வைக்கப்படுகின்றது. இக்குற்றச்சாட்டை யார் இயேசுவின்மீது வைத்தார்கள் என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

இயேசு தன்னுடைய பணிவாழ்வை எல்லா மக்களின் ஈடேற்றத்திற்காகவும் அர்ப்பணித்தார். ஆனால், பாவிகள், வரிதண்டுபவர்கள் யூத சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்கள்தான் மிகுதியாக அவரிடம் வந்தார்கள் (லூக் 15: 1). இது பரிசேயர்கள் நடுவில் சலசலப்பை ஏற்படுத்தியது. "ஒரு இரபியாக, போதகராக இருப்பவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் பழகமாட்டார். இவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் பழகுகின்றார். அப்படியானால் இவர் நிச்சயம் மதிமயங்கி இருக்கவேண்டும்" என்று இயேசுவின்மீது எப்பொழுதும் வெறுப்போடு இருந்த பரிசேயர்கள் அவரைப்பற்றி இப்படியொரு தவறான செய்தியை மக்கள் நடுவில் பரப்புகின்றார்கள். மக்களும் அதனை உண்மையென நம்பி, எல்லாரிடம் பரப்புகின்றார்கள்.

இதற்கிடையில் இயேசு மதிமயங்கிவிட்டார் என்று பரப்பப்பட்ட செய்தி அவருடைய குடும்பத்தாருக்கும் தெரிய வருகின்றது. எனவே அவர்கள் இயேசுவைப் பிடித்துப் போக அவரிடம் வருகின்றார்கள். இங்கு நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான செய்தி, இயேசுவின் குடும்பத்தார், "இயேசு யார், அவர் எப்படிப்பட்டவர் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும்?" என்று சொல்லி மக்கள் இயேசுவின்மீது வைத்த குற்றச்சாட்டை, தவறான செய்தியைப் புறந்தள்ளி இருக்கலாம். ஆனால், அவர்கள் மக்கள் சொன்னதை அப்படியே நம்பி, இயேசுவைப் பிடித்துக்கொண்டு வரப்போனதுதான் நமக்கு மிகவும் வியப்பாக இருக்கின்றது. இது இயேசுவின் குடும்பத்தார் அவர்மீது நம்பிக்கை கொள்ளவில்லை என்பதைக் காட்டுகின்றது (யோவா 7:25)

விமர்சனங்களைப் புறந்தள்ளிய இயேசு

இயேசுவைப் பிடிக்காத பரிசேயர்கள் அவர்மீது தவறான விமர்சனங்களை வைத்தாலும், அவர் அந்த விமர்சனங்களைக் கண்டுகொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். காரணம் அவற்றில் உண்மை இல்லை. தவறாக வைக்கப்படும் விமர்சனங்களில் எதற்கு நேரத்தைச் செலவழிக்கவேண்டும் என்று இயேசு அவற்றைக் கண்டுகொள்ளாமல், தன்னுடைய இலக்கை நோக்கித் தொடர்ந்து நடைபோடுகின்றார். இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் ஒவ்வொருவருக்கும் இத்தகைய அணுகுமுறையை நம்முடைய வாழ்வில் கடைப்பிடிப்பது நல்லது. இல்லையென்றால் நம்மீது தவறாக முன்வைக்கப்படும் விமர்சனங்களை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் நமது வாழ்க்கைதான் பாழாகும்.

ஆகையால், இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் ஒவ்வொருவரும் நம்மீது வைக்கப்படும் விமர்சனங்களைக் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து இயேசுவின் வழியில் நடந்து, இறையருள் பெறுவோம்.

சிந்தனை

சிப்பி தனக்குள் விழுந்த மணலை முத்தாக மாற்றிவிடுகின்றது. வெற்றியாளர்களும் இப்படித்தான். அவர்கள் தன்மீது விழும் விமர்சனங்களை வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றி, உயர்ந்த இடத்தை அடைந்துவிடுகின்றார்கள். நாம் நம்மீது விழும் விமர்சனங்களை வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றி, உயர்ந்த இடத்தை அடைவது எப்போது?
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================

சனவரி 25 - திருத்தூதர் பவுல் - மனமாற்றம் விழா

நிகழ்வு

அக்காலத்தில் சவுல் சீறியெழுந்து எழுந்து ஆண்டவருடைய சீடர்களை கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார். ஆண் பெண்களை கொன்றுவிட அனுமதிபெற்று தமஸ்கு நோக்கி வரும்வழியில், தீடீரென வானத்தில் ஓர் ஒளி அவரை ஆட்கொண்டது. அவர் தரையில் விழ "சவுலே, சவுலே ஏன் என்னை துன்புறுத்துகின்றாய்?" என்று ஒர் குரல் தொடர்ந்து கேட்டது. அதற்கு அவர் "ஆண்டவரே நீர் யார்?" எனக் கேட்டார். இயேசு மறுமொழியாக "நீ துன்புறுத்தும் இயேசு, நானே!, உடனே நீ நகருக்குள் செல்! நீ என்ன செய்ய வேண்டும் என்று உனக்கு அறிவிக்கப்படும்" என்று கூறினார். அக்குரலை உடனிருந்தவர்களும் கேட்டனர். ஆனால் வியப்பில் ஆழ்ந்தனர். சவுல் எழுந்தபோது கண்கள் திறந்திருந்தும் எதனையும் காணும் திறனை இழந்திருந்தார். உடனிருந்தவர்கள் அவரது கைகளை பிடித்து தமஸ்கு நகருக்கு அழைத்து சென்றார்கள். அங்கே மூன்று நாள் பார்வையற்று இருந்தார். எதுவும் உண்ணவும் குடிக்கவுமில்லை.

அந்நகரில் அனனியா என்ற சீடர் இருந்தார். ஆண்டவர் அவரிடம், "நீ எழுந்து நேர்த்தெரு என்னும் சந்துக்குப் போய் அங்கே தர்சு நகர சவுல் தேடு. அவர் ஒரு காட்சியை கண்டுள்ளார். அக்காட்சியில் அனனியா என்பவர் வந்து சவுல் பார்வையடைய வேண்டுமென்று தமது கைகளை அவர் மீது வைப்பதாக காட்சி கண்டுள்ளார்" என்று கூறினார். அதற்கு அனனியா "அவன் கிறிஸ்துவர்களை அழிக்க கங்கனம் கட்டித்திரிபவன் ஆயிற்றே" என்று கூற, ஆண்டவர் "நீ அங்கு செல், என் மீட்பு பணியை உலகெங்கும் பறைசாற்றிட தேர்ந்து கொண்டவரே அவர்! எனது கருவியாக செயல்படுவார். பிற இனத்தாருக்கும் அரசர்களுக்கும், இஸ்ரயேல் மக்களுக்கும் இயேசுவின் பெயரை எடுத்துரைக்கும் கருவியே! என்றார். என் பொருட்டு அவர் எத்துன்பம் அடைய வேண்டும் என்பதும் அவருக்கு காட்டுவேன்" என்றார்.

உடனே அனனியா நகருக்குச் சென்று தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, ஆண்டவர் பெயரால் அவர் மீது கைகளை வைக்க தூய ஆவியின் ஒளி கீற்றுக்கள் அவரது விழிகளை திறக்கச் செய்து அதிலிருந்து செதில்கள் விழுந்தன. மீண்டும் சவுல் பார்வை பெற்றவராய் ஆண்டவரின் ஒளியை பெற்று கிறிஸ்துவின் கருவியாக மாறினார்.

வாழ்க்கை வரலாறு


இன்று நாம் பவுலடியாரின் மனமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். அதனால் தூய பவுலைப் பற்றி ஒருசில உண்மைகளை அறிந்துகொள்வோம்.
தூய பவுல் கி.பி. 9 ஆம் ஆண்டளவில் யூதாவின் பன்னிரு குலங்களில் ஒன்றான பெஞ்சமின் குலத்தில் பிறந்தார். இவரது யூதப் பெயர் சவுல். இன்றைய துருக்கி நாட்டின் பகுதியான சிலிசியா மாநிலத்தின் உரோமைக் குடியிருப்பான தர்சு நகரத்தில் இவரது குடும்பம் வாழ்ந்து வந்தது. செல்வமும் செல்வாக்கும் பெற்றிருந்த இவரது குடும்பத்திற்கு உரோமைக் குடியுரிமையும் இருந்தது. இவர் இளமையிலிருந்தே யூதச் சட்டங்களையும் நெறிமுறைகளையும் கற்றறிந்தார். உலகப் பொதுமொழியாயிருந்த கிரேக்கத்தையும் கற்றுத் தெளிந்தார். பின்னர் எருசலேம் சென்று, புகழ்பெற்ற கமாலியேல் என்னும் யூத ரபியிடம் கல்வி பயின்றார். யூதக் கோட்பாடுகளைக் கில்லேல் என்பவரது விளக்கங்களைத் தழுவிக் கடைப்பிடிக்கும் பரிசேயர் சமயப் பிரிவின் ஆர்வமிக்க உறுப்பினராக இருந்தார். இயேசு வாழ்ந்த காலத்தில் இவர் பாலஸ்த்தீனாவில் இருந்திருக்கலாம் எனக் கூற இடம் உண்டு.

இப்படிப்பட்டவர் யூத மதத்தின்மீது இருந்த பற்றினால் கிறிஸ்தவர்களை அதிகமாகத் துன்புறுத்தத் தொடங்கினார். ஸ்தேவானைக் கல்லெறிந்து கொல்வதற்கு இவர் உடன்பட்டிருந்தார் என்று திருத்தூதர் பணிகள் நூலிலே நாம் வாசிக்கின்றோம் (திப8:1). ஒருமுறை கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதற்காகத் தமஸ்கு நகருக்குச் செல்லும் வழியில்தான் ஆண்டவராகிய இயேசு அவரைத் தடுத்து ஆட்கொள்கிறார். அவரை புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவுக்கும் கருவியாக ஏற்படுத்துகிறார்.

தூய பவுல் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க மூன்று திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டார் என்று சொல்லப்படுகின்றது. முதல் நற்செய்திப் பயணத்தைக் கி.பி. 46-48 ஆண்டுகளில் மேற்கொண்டு, சைப்பிரசுக்கும் சின்ன ஆசியா நாட்டுப் பகுதிகளுக்கும் சென்று திருச்சபையை நிறுவினார் (திப 13,14; 2 திமொ 3:11). கி.பி. 49 ஆம் ஆண்டில் எருசலேம் பொதுச்சங்கத்தில் கலந்துகொண்டு பிற இனத்தாரிடையே தூய ஆவி செயல்படுதலைப் பற்றி எடுத்துரைத்துத் தமது பணிக்குச் சங்கத்தின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டார் (திப15; கலா 2:3-9). கி.பி. 50-52க்கு உட்பட்ட காலத்தில் பவுல் தமது இரண்டாவது நற்செய்திப் பயணத்தை மேற்கொண்டு, தாம் ஏற்கனவே நிறுவிய சபைகளை வலுப்படுத்தினார். பின்னர் மாசிதொனியா, அக்காயா பகுதிகளுக்குச் சென்று நற்செய்தியை அறிவித்து, அங்கும் திருச்சபைகளை நிறுவினார் (திப 15-18). கி.பி. 53-57 வரை மூன்றாம் நற்செய்திப் பயணத்தின்போது கலாத்தியா, பிரிகியா, கொரிந்து, மாசிதோனியா, இல்லிரிக்கம் ஆகிய இடங்களுக்குச் சென்று திருப்பணி ஆற்றினார்.

அதன்பிறகு எபேசு நகரை மையமான பணித்தளமாகக் கொண்டு பவுல் செயல்பட்டார். அங்குச் சிறைப்பட்டார். அக்காலத்தில் அவர் சில சிறைக்கூட மடல்களை எழுதியிருக்கலாம். பின் கி.பி. 58 ஆண்டு எருசலேமில் கைதானார். கி.பி. 60 வரை செசரியாவில் சிறைப்பட்டிருந்தார். உரோமைப் பேரரசர் சீசரே தமக்குத் தீர்ப்பளிக்க வேண்டும் என்று பவுல் கேட்டுக்கொண்டதால் உரோமைக்கு அனுப்பப் பெற்றார். அங்கு போகும் வழியில் கப்பல் அழிவுற நேரிட்டதால் மால்தா தீவினருக்கு நற்செய்தி அறிவிக்கும் வாய்ப்பைப் பெற்றார். பின்பு பவுல் உரோமை வந்தடைந்து இரு ஆண்டுகள் வீட்டுக் கைதியாகவே இருந்துகொண்டு நற்செய்தி அறிவித்து வந்தார். பின்பு பவுல் விடுதலை பெற்று ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றிருப்பார் என நம்ப இடமிருக்கிறது. மீண்டும் கி.பி. 60 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு நீரோ மன்னன் காலத்தில் பவுல் மரண தண்டனை பெற்றார் என மரபு கூறுகிறது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்


தூய பவுலடியாரின் மனமாற்றம் அவருக்கு மட்டுமல்ல, திருச்சபையின் வரலாற்றிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால், பவுலடியாரின் மனமாற்றத்திற்குப் பிறகுதான் ஆண்டவரது நற்செய்தி உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது, திருச்சபை இன்னும் அதிகமாக வலுப்பெற்றது.

மேலும் விவிலியத்தில் ஒரு நிகழ்வு மூன்றுமுறை இடம்பெறுகிறபோது அது மிகவும் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இயேசு தன்னுடைய பாடுகளைக் குறித்து மூன்றுமுறை முன்னறிவிக்கின்றார். இயேசுவின் வாழ்வில், மீட்பின் வரலாற்றில் பாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இது நமக்கு உணர்த்துகின்றது. அதைப் போலவே பவுலின் மனமாற்ற நிகழ்வு மூன்றுமுறை இடம்பெறுவதை வைத்துப் பார்க்கும்போதே (திப 9,22, 26) அது திருச்சபையின் வரலாற்றில் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என நாம் புரிந்துகொள்ளலாம். ஆகவே, இந்த வேளையில் தூய பவுலடியாரின் மனமாற்ற விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. நாம் ஒவ்வொருவரும் மனமாறவேண்டும்

பவுலடியார் யூத மதத்தின்மீது கொண்ட ஆழமான பற்றுறுதியினால், அம்மதத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த கிறிஸ்தவ மதத்தையும் அதனைப் பின்பற்றியவர்களையும் வேறொரு அழிக்க நினைத்தார். அதாவது தான் செய்வது தவறு என்று தெரியாமலே தவறுசெய்கிறார் தூய பவுல். அப்போதுதான் ஆண்டவர் இயேசு அவரைத் தடுத்தாட்கொண்டு அவருக்கு உண்மையை உணர்த்துகிறார், கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவது தன்னையே துன்புறுத்துவது என எடுத்துரைக்கிறார். உடனே அவர் தன்னுடைய தவற்றை உணர்ந்து, யாரைத் துன்புறுத்தத் துணிந்தாரோ, அவருக்காகத் தன்னுடைய உயிரையும் இழக்கத் துணிகிறார். ஆகவே, பவுலடியாரைப் போன்று நாமும் நம்முடைய தவற்றை உணர்ந்து இறைவனுக்கு உகந்த வழியில் நடக்கவேண்டும். இதுதான் நமக்கு முன்னால் உள்ள சவாலாக இருக்கின்றது.

பலநேரங்களில் நாம் "தவறு செய்கிறோம்" என்று தெரியாமலே செய்கிறோம். இதுதான் நம்மிடம் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கின்றது.
ஒரு கிராமத்தில் இருந்த மக்கள் அனைவரும் நொண்டி நொண்டி நடந்தார்கள். நீண்ட நாட்களாக அவர்கள் இப்படியே நடந்து வந்ததால், நொண்டி நொண்டி நடப்பதுதான் இயல்பானது என அவர்கள் நினைத்துக்கொண்டார்கள்.

ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு புதிய ஆள் வந்தார். அவர் நன்றாக நடக்கக்கூடியவர். அவர் அங்கே இருக்கும் மக்கள் நொண்டி நொண்டி நடப்பதைப் பார்த்துவிட்டு, என்ன இந்த மக்கள் இப்படி நடக்கிறார்களே, இவர்களுக்கு எப்படி நடக்கவேண்டும் என்று கற்றுத்தரவேண்டும் என முடிவுசெய்து அவர்களிடத்தில் சென்றார். அவர் நடந்து வருவதைப் அந்த ஊரைச் சேர்ந்த ஒருசில பெரியவர்கள், அவரை வித்தியாசமாகப் பார்த்தார்கள். இவர் அம்மனிதர்களிடம், "நான் நடப்பது போன்று இப்படி நடக்கவேண்டும் என்று அவர்களிடத்தில் எடுத்துச் சொன்னபோது, அவர்கள் அவரை ஏளனமாகப் பார்த்தார்கள். ஒருசிலர், "நாங்கள் நடப்பதுதான் சரியானது, உமக்கு ஒன்றும் நடக்கத் தெரியவில்லை, எப்படிப் பேசவேண்டும் என்று கூடத்தெரியவில்லை" என்று சொல்லி அவரைப் பார்த்து சத்தமாகச் சிரித்தார்கள்.

இதை பார்த்த அந்த புதிய மனிதர், நமக்கெதற்கு வம்பு என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தார்.
கதையில் வரும் அந்த ஊர்க்கார்கள் போன்று தான் நாமும், நாம் செய்வது தவறு என்று தெரியாமலே செய்துகொண்டிருக்கிறோம். ஆகவே, நாம் தூய பவுலடியாரைப் போன்று, நம்முடைய தவற்றை உணர்ந்து திருந்தி நடப்பதுதான் இறைவனுக்கு உகந்த காரியமாகும்.


2. கிறிஸ்தவர்களில் கிறிஸ்து

பவுலின் மனமாற்றம் நமக்குத் தரும் இரண்டாவது செய்தி கிறிஸ்தவர்களில் கிறிஸ்து வாழ்கிறார் என்பதாகும். பவுலடியார் எருசலேமிலிருந்து தமஸ்கு நகரை நோக்கிச் செல்கிறபோது, வானத்திலிருந்து தோன்றிய ஒளியானது அவரைச் சூழ்ந்துகொள்ள அவர் தான் பயணம் செய்த குதிரையிலிருந்து கீழே இடறி விழுகிறார். அப்போது அவர், "ஆண்டவரே நீர் யார்? என்று கேட்கிறார். அதற்கு இயேசு, "நீ துன்புறுத்தும் இயேசு நானே" என்கிறார் (திப 9:6). இங்கே இயேசு தன்னை கிறிஸ்தவர்களோடு, திருச்சபையோடு இணைத்துகொள்கிறார் அல்லது அடையாளப்படுத்திக் கொள்கிறார் என்பது உண்மை. நாம் நம்மோடு வாழும் சகோதர சகோதரிகளுக்கு ஒன்று செய்ய, அது இறைவனுக்கே செய்வதாகும் (மத் 25:40) என்ற உண்மையை இங்கே நாம் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.

எனவே, தூய பவுலடியாரின் மனமாற்ற விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாமும் நம்முடைய தவறுகளை உணர்ந்து மனமாறி, ஆண்டவரிடம் திரும்பி வருவோம், அதே நேரத்தில் அடுத்தவரில் ஆண்டவர் இயேசு இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்து, எல்லாரையும் அன்புசெய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!