|
|
24 ஜனவரி 2020 |
|
|
பொதுக்காலம் 2 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல்
நான் கை வைக்கக்கூடாது.
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 24:
2-20
அந்நாள்களில் சவுல் இஸ்ரயேல் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட
மூவாயிரம் பேருடன் தாவீதையும் அவர்தம் ஆள்களையும் தேடி வரையாடுகளின்
பாறைகளுக்கு எதிர்ப்புறம் சென்றார். அவர் சென்றபோது வழியோரத்தில்
ஆட்டுப் பட்டிகளைக் கண்டார்; அதனருகில் ஒரு குகை இருந்தது. இயற்கைக்கடன்
கழிப்பதற்கு சவுல் அதனுள் சென்றார். அப்பொழுது தாவீதும் அவர்தம்
ஆள்களும் அக்குகையின் உட்பகுதியில் இருந்தனர். தாவீதின் ஆள்கள்
அவரிடம், " `இதோ! உன் எதிரியை உன்னிடம் ஒப்புவிப்பேன்; உன்
விருப்பத்திற்கேற்ப அவனுக்குச் செய்," என்று ஆண்டவர் சொன்ன
நாள் இதுவே!" என்றனர். உடனே தாவீது தவழ்ந்து சென்று சவுலின் மேலங்கியின்
தொங்கலை அவருக்குத் தெரியாமல் அறுத்தார். தாவீது சவுலின் தொங்கலை
அறுத்தபின் அதற்காக மனம் வருந்தினார். அவர் தம் ஆள்களைப்
பார்த்து, "ஆண்டவர் திருப்பொழிவு செய்த என் தலைவருக்கு எத்தீங்கும்
செய்யாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக! அவர் ஆண்டவரால்
திருப்பொழிவு செய்யப்பட்டவரானதால் நான் அவர்மேல் கை வைக்கக்
கூடாது" என்றார். ஆதலின் தம் ஆள்கள் சவுலைத் தாக்காதவாறு
தாவீது இவ்வார்த்தைகளால் அவர்களைத் தடைசெய்தார். பின்பு சவுல்
எழுந்து குகையை விட்டுத் தம் வழியே சென்றார். அதன் பின்
தாவீதும் எழுந்து குகையிலிருந்து வெளியேறிச் சவுலைப் பின்தொடர்ந்து,
"அரசே, என் தலைவரே!" என்று அழைத்தார். சவுல் பின்புறம்
திரும்பியபோது தாவீது தரையில் முகம் குப்புற வீழ்ந்து வணங்கினார்.
பின்பு தாவீது சவுலை நோக்கி, " "தாவீது உமக்குத் தீங்கு செய்யத்
தேடுகிறான்" என்று சொல்லும் மனிதனின் வார்த்தைகளை நீர் கேட்கலாமா?
இதோ! குகையில் ஆண்டவர் உம்மை என்னிடம் ஒப்புவித்தார் என்பதை இன்று
உம் கண்களே கண்டன; உம்மைக் கொல்ல வேண்டுமெனச் சிலர் என்னை வற்புறுத்தினார்கள்;
ஆனால், "அவர் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பெற்றவர்; என் தலைவருக்கு
எதிராக நான் கை ஓங்கக் கூடாது" என்று சொல்லி நான்தான் உம்மைக்
காப்பாற்றினேன். என் தந்தையே, பாரும்! என் கையிலிருக்கும் உம்
மேலங்கியின் தொங்கலைப் பாரும். உம்மைக் கொல்லாமல் உம் மேலங்கியின்
தொங்கலை மட்டும் அறுத்து எடுத்துள்ள என் செயலைப் பார்த்தாலே என்னிடம்
யாதொரு குற்றமோ துரோகமோ இல்லை என்பதை நீர் அறிவீர்! நீர் என்
உயிரைப் பறிக்கத் தேடினாலும், உமக்கெதிராக நான் ஒரு குற்றமும்
செய்யவில்லை. உமக்கும் எனக்கும் ஆண்டவர் நடுவராய் இருப்பாராக!
என் பொருட்டு ஆண்டவரே உமக்கு நீதி வழங்கட்டும்; ஆனால் உமக்கெதிராக
என் கை எழாது. முன்னோரின் வாய்மொழிக்கேற்ப, "தீயோரிடமிருந்தே
தீமை பிறக்கும்". ஆதலால் உம்மேல் நான் கைவைக்க மாட்டேன். இஸ்ரயேலின்
அரசர் யாரைத் தேடிப் புறப்பட்டார்? யாரைப் பின்தொடர்கிறீர்? ஒரு
செத்த நாயை அன்றோ? ஒரு தெள்ளுப் பூச்சியை அன்றோ? ஆண்டவர் நடுவராயிருந்து
உமக்கும் எனக்கும் நீதி வழங்குவாராக! அவரே எனக்காக வழக்காடி உம்
கையினின்று என்னை விடுவிப்பாராக!" என்றார். தாவீது இவ்வாறு சவுலிடம்
பேசி முடித்தபின் சவுல், "என் மகன் தாவீதே! இது உன் குரல்தானா?"
என்று சொல்லி உரத்த குரலில் அழுதார். அவர் தாவீதிடம், "நீ என்னிலும்
நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; ஆனால் நானோ உனக்குத்
தீங்கு செய்தேன். ஆண்டவர் என்னை உன்னிடம் ஒப்புவித்திருந்தும்
நீ என்னைக் கொல்லவில்லை. இதனால் நீ எனக்கு நன்மையே செய்து வந்திருப்பதை
இன்று நீ வெளிப்படுத்தியிருக்கிறாய். ஏனெனில் ஒருவன் தன் எதிரியைக்
கண்டபின் அவன் நலமுடன் செல்ல அனுமதிப்பானா? இன்று நீ எனக்குச்
செய்த நன்மைக்கு ஈடாக, ஆண்டவரும் உனக்கு நன்மை செய்வாராக! இதோ,
நீ திண்ணமாய் அரசனாவாய் என்றும் இஸ்ரயேலின் அரசை நீ உறுதிப்படுத்துவாய்
என்றும் இப்பொழுது நான் அறிகிறேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
57: 1. 2-3. 5,10 (பல்லவி: 1a)
Mp3
=================================================================================
பல்லவி: கடவுளே! எனக்கு இரங்கும்,
எனக்கு இரங்கும்.
1 கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்;
நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்; இடர் நீங்கும்வரை உம் இறக்கைகளின்
நிழலையே எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன். பல்லவி
2 உன்னதரான
கடவுளை நோக்கி, எனக்காக யாவையும் செய்து முடிக்கும் இறைவனை
நோக்கியே நான் மன்றாடுகின்றேன்.
3 வானகத்தினின்று அவர் எனக்கு
உதவி அனுப்பி என்னைக் காத்தருள்வார்; என்னை நசுக்குவோரை இழிவுபடுத்துவார்.
கடவுள் தம் பேரன்பையும் வாக்குப் பிறழாமையையும் வெளிப்படுத்துவார்.
பல்லவி
5 கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்த்தப்பெறுவீராக!
பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக!
10 ஆண்டவரே! உமது பேரன்பு
வானளவு உயர்ந்துள்ளது! உமது வாக்குப் பிறழாமை முகில்களைத்
தொடுகின்றது! பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(2 கொரி 5: 19)
அல்லேலூயா, அல்லேலூயா! உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல்
கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்.
அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தம்மிடம் இருக்கும்படி தாம் விரும்பியவர்களை
அழைத்தார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-19
இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார்.
அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப்
பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும்
அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத்தூதர் என்றும்
பெயரிட்டார். அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று
அவர் பெயரிட்ட சீமோன், செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின்
சகோதரரான யோவான் - இவ்விருவருக்கும் `இடியைப் போன்றோர்' எனப்
பொருள்படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார் - அந்திரேயா,
பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன்
யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக்
காட்டிக்கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
1 சாமுவேல் 24: 3-21
தீமைக்குப் பதில் நன்மை செய்த தாவீது
நிகழ்வு
பதினெட்டாம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்து நாட்டில் தோன்றிய மிகப்பெரிய
நாவலாசிரியர், கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர் சர் வால்டர்
ஸ்காட் என்பவர். ஒருநாள் இவர் தன்னுடைய வீட்டின் முன்பாக
நின்றுகொண்டிருந்தபொழுது, தெருநாய் ஒன்று அவ்வழியாக வந்தது. அதைப்
பார்த்ததும், இவர் பக்கத்தில் கிடந்த ஒரு கல்லை எடுத்து, அதன்மீது
ஓங்கி எறிந்தார். இவர் எறிந்ததில், அந்த நாயின் முன்னங்கால்
முறிந்து, அதிலிருந்து இரத்தம் வழியத் தொடங்கியது.
இதற்குப் பின் வால்டர் ஸ்காட் சிறிதும் எதிர்பாராத ஒன்று நடந்தது.
ஆம், முன்னங்கால் முறிந்த அந்த நாயானது வால்டர் ஸ்காட்டை
நோக்கித் தத்தித் தத்தி ஓடிவந்தது. அதைப் பார்த்துவிட்டு வால்டர்
ஸ்காட், அந்த நாய் தன்னைக் கடிக்கத்தான் இப்படி ஓடிவருகின்றது
என்று பயந்தவாறு நின்றார். அதுவோ அவருகில் வந்து அவருடைய முகத்தை
வாஞ்சையோடு நக்கிவிட்டு வேகமாக அங்கிருந்து ஓடி மறந்தது. அவர்
அப்படியே மெய்ம்மறந்து நின்றார். "நாமோ இந்த நாயின் முன்னங்காலைச்
சேதப்படுத்தி இருக்கின்றோம்... இதுவோ நம்மைக் கடிக்காமல்,
வாஞ்சையோடு நக்கிவிட்டுப் போகிறதே...! தீமைக்கும் நன்மை செய்த
இந்த நாய் அல்லவா கிறிஸ்துவின் விழுமியத்தின்படி வாழ்கின்றது"
என்று அவர் அந்த நாயைத் தன்னுடைய கடைசிக்காலம் மட்டும் நன்றியோடு
நினைத்துப் பார்த்தார்.
பகைவருக்கு அன்பு, தீமைக்கு நன்மை இதுதான் கிறிஸ்தவ நெறி. இந்த
நெறியின் படி வாழ்ந்த அல்லது தனக்குத் தீமை செய்ய நினைத்த சவுலுக்கு
நன்மை செய்ய நினைத்த தாவீதைக் குறித்து இன்றைய முதல் வாசகம் எடுத்துக்கூறுகின்றது.
அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தாவீதைக் கொல்ல நினைத்த சவுல்
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் போர்களில் வெற்றியும் மக்கள்
நடுவில் செல்வாக்கும் பெற்று வந்தார் தாவீது. இது சவுலின் உள்ளத்தில்
பொறாமையை ஏற்படுத்துகின்றது. சவுல் தாவீதின்மீது பொறாமை கொள்வதற்கு
இரண்டு முக்கியமான காரணங்களைச் சொல்லலாம். ஒன்று, தாவீதின்
செல்வாக்கு அவர் போர்களில் பெற்ற வெற்றியால் உயர்ந்துகொண்டு போனது.
அதனால் தன்னுடைய ஆட்சியுரிமை ஒருநாள் பறிபோகும் என்று சவுல்
தாவீதின்மீது பொறாமைகொண்டார். இரண்டு, தனக்குப் பின் தன்னுடைய
மூத்த மகன் யோனத்தான்தான் இஸ்ரயேலை ஆட்சி செய்யவேண்டும் என்று
சவுல் நினைத்திருக்கவேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில்
தாவீதின் செல்வாக்கு உயர்ந்துகொண்டே போனதால், சவுல் தாவீதின்
மேல் பொறாமை கொள்கின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில் சவுல் தாவீதைக் கொல்வதற்காக இஸ்ரயேல்
முழுவதிலுமிருந்து மூவாயிரம் பேருடன் வரையாடுகளின் பாறைக்கு எதிர்புறம்
செல்கின்றார். அங்கு சென்ற சவுல் மற்றும் அவருடைய ஆள்களும்
தாவீதைக் கொன்றார்களா...? அங்கு என்ன நடந்து...? ஆகியவற்றைக்
குறித்துத் தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
சவுலைக் கொல்லாமல், அவருடைய மேலங்கியின் தொங்கலை மட்டும் அறுத்த
தாவீது
சவுல் தாவீதைக் கொல்வதற்காக வருகின்றபொழுது ஒரு குகை இருப்பதைக்
காண்கின்றார். அதற்குள் அவர் இயற்கைக் கடனைக் கழிப்பதற்காக
செல்கின்றார். அந்த நேரத்தில் தாவீது, சவுலின் மேலங்கியில் இருந்த
தொங்கலை அறுக்கின்றார். தாவீது நினைத்திருந்தால், அவரோடு இருந்தவர்கள்
கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப தன்னைக் கொல்ல வந்த சவுலைக்
கொன்றிருக்கலாம்; ஆனால், அவர் அப்படிச் செய்யாமல், சவுலின் மேலங்கியில்
இருந்த தொங்கலை மட்டும் அறுக்கின்றார். இச்செயலைச் செய்ததற்குக்
கூட அவர் பின்னர் வருந்துகின்றார்.
தாவீது சவுலின் மேலங்கியின் தொங்கலை மட்டும் அறுத்தது நமக்கு
மூன்று செய்திகளை உணர்த்துகின்றது. முதலாவது செய்தி. யாரும்
யாரையும் கொலை செய்யக்கூடாது என்பதாகும் (விப 20:13). சவுல்
சாதாரணமானவர் அல்லர்; அருள்பொழிவு செய்யப்பட்ட ஒருவர். அப்படிப்பட்டவரைக்
கொலைசெய்வது மிகப்பெரிய குற்றம் என்று அவரை ஒன்றும் செய்யாமல்
விடுகின்றார் தாவீது. இரண்டாவதாக, தாவீது சவுலின் மேலங்கியின்
தொங்கலை அறுத்தது, தாவீதுக்கு அரசுரிமை வழங்கப்படுகின்றது என்ற
செய்தியைச் சுட்டிக்காட்டுகின்றது. மூன்றாவது செய்தி,
தீமைக்குப் பதில் நன்மை செய்யவேண்டும் என்பதாகும். சவுல் நடந்துகொண்டதுபோல
தாவீது நடந்திருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு நடக்காமல், நன்மை
செய்பவராக இருக்கின்றார்.
தாவீதிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் ஒன்று இருக்கின்றது.
அதுதான் தீமைக்குப் பதில் நன்மை செய்வதாகும். எனவே, பகைமை உள்ள
இடத்தில் அன்பும் தீமைக்குப் பதில் நன்மையையும் செய்வோம்.
சிந்தனை
"உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத்
துன்புருத்துவோருக்காக இறைவனிடம் மன்றாடுங்கள்" (மத் 5: 44) என்பார்
இயேசு. ஆகையால், நாம் இயேசு சொன்னதுபோன்று பகைவரை அன்பு
செய்து, துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் மன்றாடி, தீமை
செய்வோருக்கு நன்மை செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 3: 13-19
"தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார்; அவர்களும் அவரிடம்
வந்தார்கள்"
நிகழ்வு
ஒருசமயம் காடு, மலை என்று அலைந்து திரிந்த பத்துக்கும் மேற்பட்ட
கொள்ளையர்கள், ஓரிடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள்
மேய்ந்துகொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் கண்களை ஏறெடுத்துப்
பார்த்தபொழுது அந்த ஆடுகளை மேய்க்கும் ஆயன் ஒரு மரத்தின் அடியில்
படுத்துத் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். இதுதான் சரியான
சமயம் என்று அவர்கள் அந்த ஆடுகளை அங்கிருந்து ஓட்டிக்கொண்டு வேகமாகச்
சென்றார்கள்.
இதற்கிடையில் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த ஆயன் தன்னுடைய
ஆடுகள் அங்கு இல்லாதைக் கண்டு அதிர்ந்துபோனான். பின்னர் அவன்
ஆடுகளுக்கு எந்த நேர்ந்தது என்று மேட்டிலிருந்து சரிவில்
பார்த்தபொழுது, ஒருசிலரால் ஆடுகள் ஓட்டிச் செல்லப்படுவதைக்
கண்டான். அவன் ஒருநொடி செய்வதறியாமல் திகைத்து நின்றான். "இந்த
முரடர்களிடம் சென்று என்னுடைய ஆடுகளை என்னிடம் விட்டுவிடுங்கள்
என்று கெஞ்சிக் கேட்டாலும், இவர்கள் தரப்போவதில்லை; மாறாக
இவர்கள் நம்மைக் கொன்றாலும் கொல்வார்கள். எனவே
இவர்களிடமிருந்து நம்முடைய ஆடுகளை மீட்பதற்கு வித்தியாசமாக
ஏதாவதுதான் செய்யவேண்டும்" என்று சிந்திக்கத் தொடங்கினான்.
அப்பொழுது அவனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. அதன்படியே செய்வது
நல்லது என்று முடிவுசெய்துகொண்டு, தன் இரண்டு விரல்களை எடுத்து
தன்னுடைய வாயில் வைத்துக்கொண்டு, வித்தியாசமான ஓர் ஒலி
எழுப்பினான். அவனிடமிருந்து வந்த அந்த வித்தியாசமான ஒலியைக்
கேட்டு அவனுடைய ஆடுகள் வேகமாக அவனிடம் ஓடிவந்தன. ஆடுகளை
ஓட்டிச் சென்ற கொள்ளையர்களால் அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவர முடியவில்லை; அவை அவர்களுடைய கட்டுப்பாட்டை விட்டு
வேகமாக ஓடி, ஆயனிடம் தஞ்சம் புகுந்தன. அவனோ அவற்றை அங்கிருந்து
ஓட்டிச்சென்று பாதுகாப்பான இடத்தை அடைந்தான்.
இந்த நிகழ்வில் வருகின்ற ஆயன் தான் விரும்பிய ஆடுகளை
(கொள்ளையர்களிடமிருந்து) அழைத்தபொழுது, அவை அவர்களிடமிருந்து
ஓடி, ஆயனை வந்தடைந்தன. அதுபோன்று இன்றைய நற்செய்தியில்,
நல்லயானாம் இயேசு தன்னுடைய மந்தையை வழிநடத்தவும் பாதுகாக்கவும்
ஆயர்களாகப் பன்னிரு திருத்தூதர்களைத் தம்மிடம்
வரவழைக்கின்றார். அவர்களும் அவரிடம் வருகின்றார்கள். இயேசு
பன்னிரு திருத்தூதர்களை தம்மிடம் அழைப்பது நமக்கு என்ன
செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தாம் விரும்பியர்களை அழைத்த இயேசு
நற்செய்தியில் இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத்
தம்மிடம் வரவழைக்கின்றார். இங்கு நாம் கவனிக்கவேண்டிய
முக்கியமான செய்தி, இயேசு தன்னைப் பின்தொடர்ந்து வந்த
எல்லாரையும் தம்மிடம் வரவழைக்கவில்லை அல்லது அழைக்கவில்லை
என்பதைத்தான்.
இயேசுவைப் பின்தொடர்ந்து பல பகுதிகளிலிருந்து பலரும்
வந்தார்கள். அவர்கள் எல்லாரையும் இயேசு திருத்தூதர்களாகத்
தேர்ந்தெடுக்கவில்லை. விரும்பியவர்களையே தேர்ந்தெடுக்கின்றார்.
அப்படியானால் அந்தப் பன்னிரு திருத்தூதரையும் இயேசு விரும்பக்
காரணமாக இருந்தது எது எனத் தெரிந்துகொள்வது நல்லது. இயேசு
அவர்களுடைய நம்பிக்கையைப் பார்த்து, அவர்களை
விரும்பியிருக்கக்கூடுமா? என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான்
சொல்லவேண்டும். ஏனென்றால் பல நேரங்களில் அவர்கள்
நம்பிக்கையில்லாதவர்களாகவே இருந்தார்கள் (மத் 16: 8). ஒருவேளை
இயேசு அவர்களை அவர்களுடைய திறமையைக் கண்டு, விரும்பி
அழைத்திருப்பாரா என்றால், அதுவும் இல்லை என்றுதான்
சொல்லவேண்டும். ஏனென்றால், திருத்தூதர்களில் பாதிக்கும்
மேற்பட்டோர் படிப்பறிவில்லாத மீனவர்கள் (யோவா 21: 2) ஒருவர்
பாவி எனக் கருதப்பட்ட வரிதண்டுபவரான லேவி. இப்படியிருக்கையில்
இயேசு அவர்களுடைய திறமையைப் பார்த்து, விரும்பி அழைத்திருக்க
வாய்ப்பில்லை. பிறகு எதன் அடிப்படையில் இயேசு அவர்களைத்
தன்னுடைய திருத்தூதர்களாகத் தேர்ந்தெடுத்திருக்க முடியும்?
இயேசு பன்னிருவரையும் தகுதியின் அடிப்படையிலோ திறமையின்
அடிப்படையிலோ அல்ல, அவர்கள் தனக்காக உயிரையும் தரத்
துணிந்தவர்வர்களாக இருந்தார்கள் (யோவா 11: 16) அதனாலேயே இயேசு
அவர்களைத் தம் திருத்தூதர்களாகத் தேர்ந்தெடுக்கின்றார்.
இயேசுவின் அழைப்பை ஏற்று அவரைப் பின்தொடரத் தயாரா?
இயேசு பன்னிருவரையும் தம்மிடம் அழைத்தபொழுது, அவர்கள் அவரிடம்
வந்தார்கள். யாரும் "என்னுடைய வீட்டில் சொல்லிவிட்டு
வருகிறேன்" என்றோ, "வேறு வேலை இருக்கின்றது" என்றோ
சொல்லவில்லை. மாறாக அவர்கள் மனமுவந்து, இயேசுவைப்
பின்தொடர்ந்து, அவருடைய பணியைச் செய்ய அணியமானார்கள். அன்று
இயேசு திருத்தூதர்களைத் தன்னுடைய பணியைச் செய்ய
அழைத்ததுபோன்று, இன்று நம் ஒவ்வொருவரையும் தம் பணிசெய்ய
அழைக்கின்றார். நாம் அவருக்காக நம்முடைய உயிரைத் தரவும்
அவருடைய பணியைச் செய்யவும் அணியமாக இருக்கின்றோமா?
சிந்திப்போம்.
சிந்தனை
"என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம்
சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" (மத் 16:
24) என்பார் இயேசு. ஆகையால், இயேசுவின் வழியில் நடக்கும் நாம்,
அவருக்காக எதையும் இழக்கத் தயாராவோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|