|
|
23 ஜனவரி 2020 |
|
|
பொதுக்காலம் 2 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
என் தந்தை சவுல் உன்னைக் கொல்லத் தேடுகிறார்.
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 18: 6-9;19: 1-7.
அந்நாள்களில் தாவீது பெலிஸ்தியனைக் கொன்றபின், வீரர்கள் வீடு
திரும்பிக்கொண்டிருந்தபோது, இஸ்ரயேலின் எல்லா நகர்களிலிருந்தும்
பெண்கள் ஆடல் பாடலுடன் அரசர் சவுலைச் சந்திக்க வந்தனர்; அவர்கள்
கஞ்சிராக்களோடும் நரம்பிசைக் கருவிகளுடனும் மகிழ்ச்சிப் பாடல்
எழுப்பினர். அப்பெண்கள் அப்படி ஆடிப்பாடுகையில், "சவுல் ஆயிரம்
பேரைக் கொன்றார்; தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார்" என்று
பாடினர். இந்த வார்த்தைகள் சவுலுக்கு அறவே பிடிக்கவில்லை; அவர்
மிகவும் சினமுற்று, "அவர்கள் "தாவீதுக்குப் பதினாயிரம் பேர்"
என்றனர். எனக்கோ "ஆயிரம் பேர் மட்டுமே" என்றனர். அவனுக்கு இன்னும்
குறைவாக இருப்பது ஆட்சி ஒன்றுதான்!" என்று கூறினார். அன்று முதல்
சவுல் தாவீதைப் பொறாமைக் கண்கொண்டு பார்க்கலானார். தாவீதைக்
கொல்ல வேண்டுமென்று தம் மகன் யோனத்தானிடமும் தம் அலுவலர் எல்லாரிடமும்
சவுல் தெரிவித்தார். ஆனால் சவுலின் மகன் யோனத்தான்
தாவீதின்மீது மிகுதியான அன்பு கொண்டிருந்தார். ஆதலால் தாவீதைப்
பார்த்து யோனத்தான், "என் தந்தை சவுல் உன்னைக் கொல்லத்
தேடுகிறார்; ஆதலால் எச்சரிக்கையாய் இரு, காலையிலேயே புறப்பட்டு
மறைவான ஓர் இடத்திற்குச் சென்று ஒளிந்து கொள். நீ வெளியில் இருக்கும்
சமயத்தில் நான் என் தந்தையின் அருகில் இருந்து கொண்டு, உன்னைப்
பற்றி அவரிடம் பேச்சுக் கொடுப்பேன்; அப்படி நான் அறிகிறதையெல்லாம்
உனக்குத் தெரிவிப்பேன்" என்றார். யோனாத்தான் தாவீதைப்பற்றித்
தம் தந்தை சவுலிடம் நல்ல விதமாகப் பேசி, "அரசர் தம் அடியான்
தாவீதின் பொருட்டுப் பாவம் செய்ய வேண்டாம்; ஏனெனில் அவன் உமக்குத்
தீங்கு ஏதும் செய்ததில்லை; மேலும் அவனுடைய செயல்கள் உம் அரசில்
மிகவும் பயனுடையனவாய் இருந்தன; அவன் தன் உயிரை ஒரு பொருட்டாய்
எண்ணாது அப்பெலிஸ்தியனைக் கொன்றான்; அதனால் ஆண்டவர் இஸ்ரயேலர்
எல்லாருக்கும் பெரும் வெற்றியை அளித்தார். நீர் அதைக் கண்டுமகிழ்ச்சியுற்றீர்;அப்படியிருக்க
எக்காரணமும் இல்லாமல் தாவீதைக் கொல்வதன் மூலம் குற்றமற்ற இரத்தத்திற்கு
எதிராக நீர் ஏன் பாவம் செய்ய வேண்டும்?" என்று கூறினார். சவுல்
யோனத்தானின் வார்த்தைகளைக் கேட்டார்; அதனால் சவுல், "வாழும் ஆண்டவர்மேல்
ஆணை! அவன் கொலை செய்யப்படமாட்டான்" என்றார். பின்பு யோனத்தான்
தாவீதை அழைத்து இவ்வார்த்தைகளை எல்லாம் அவருக்குக் கூறினார்;
மேலும் யோனத்தான் தாவீதைச் சவுலிடம் அழைத்துச் செல்ல, முன்பு
போலவே தாவீது அவரது பணியில் ஈடுபட்டார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 56: 2-3. 9-10a. 10b-11. 12-13 (பல்லவி: 4b)
Mp3
=================================================================================
பல்லவி: கடவுளையே நம்பியுள்ளேன்; எதற்கும் நான் அஞ்ச மாட்டேன்.
1 கடவுளே, எனக்கு இரங்கியருளும்; ஏனெனில், மனிதர் என்னை நசுக்குகின்றனர்;
அவர்கள் என்னுடன் நாள்தோறும் சண்டையிட்டுத் துன்புறுத்துகின்றனர்.
2 என் பகைவர் நாள்தோறும் கொடுமைப்படுத்துகின்றனர்; மிகப் பலர்
என்னை ஆணவத்துடன் எதிர்த்துப் போராடுகின்றனர். பல்லவி
8 என் துன்பங்களின் எண்ணிக்கையை நீர் அறிவீர்; உமது தோற்பையில்
என் கண்ணீரைச் சேர்த்து வைத்துள்ளீர்; இவையெல்லாம் உம்
குறிப்பேட்டில் உள்ளன அல்லவா?
9ab நான் உம்மை நோக்கி மன்றாடும்
நாளில் என் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடுவர். பல்லவி
10 கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன்; ஆண்டவரின் வாக்கை நான்
புகழ்கின்றேன். பல்லவி
11 கடவுளையே நம்பியிருக்கின்றேன்; எதற்கும் அஞ்சேன்; மானிடர்
எனக்கெதிராய் என்ன செய்ய முடியும்?
12 கடவுளே, நான் உமக்குச்
செய்த பொருத்தனைகளை மறக்கவில்லை; உமக்கு நன்றிப்பலி
செலுத்துவேன். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(2 திமொ 1: 10)
அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து,
அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
"இறைமகன் நீரே" என்று தீய ஆவிகள் கத்தின. இயேசு தம்மை வெளிப்படுத்த
வேண்டாமெனச் சொன்னார்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 7-12
அக்காலத்தில் இயேசு தொழுகைக்கூடத்திலிருந்து புறப்பட்டுத் தம்
சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள்
அவரைப் பின்தொடர்ந்தனர். மேலும் யூதேயா, எருசலேம், இதுமேயா,
யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும்
பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம்
வந்தனர். மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தமக்காகப்
படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு அவர் சீடருக்குச்
சொன்னார். ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும்
அவரைத் தொட வேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்து கொண்டிருந்
தனர். தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து,
"இறைமகன் நீரே" என்று கத்தின. அவரோ, தம்மை வெளிப்படுத்த
வேண்டாமென அவற்றிடம் மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
1 சாமுவேல் 18: 6-9; 19: 1-7
பேரழிவைக் கொண்டுவந்து சேர்க்கும் பொறாமை
நிகழ்வு
மிகப்பெரிய மறைப்போதகரான டி. எல்.மூடி சொல்லக்கூடிய ஒரு கதை.
ஒரு காட்டில் கழுகு ஒன்று இருந்தது. அது அதே காட்டில் இருந்த
இன்னொரு கழுகின்மீது பொறாமையோடு இருந்தது. அதற்கு முக்கியமான
காரணம், அந்தக் கழுகு இந்தக் கழுகைவிட மிக உயரமாகப் பறந்தது என்பதால்தான்.
இப்படி இருக்கையில் ஒருநாள் அந்தக் காட்டிற்கு வேடன் ஒருவன் வந்தான்.
அவனிடம் சென்ற இந்தக் கழுகு, தன்னை விட உயரமாகப் பறக்கும் கழுகை
எப்படியாவது வீழ்த்தவேண்டும் என்று கெஞ்சிக் கேட்டது. அதற்கு
வேடன் கழுகிடம், "நான் உயரமாகப் பறக்கும் அந்தக் கழுகை அம்பினால்
குறி வைத்து அடித்து வீழ்த்தவேண்டும் என்றால், உன்னுடைய இறகுகளில்
ஒன்றை என்னுடைய அம்பினில் வைத்துக் கட்டியாக வேண்டும். அப்பொழுதுதான்
அம்பானது உயரமாகச் சென்று, மேலே பறந்து கொண்டிருக்கும் அந்தக்
கழுகினை வீழ்த்தும்" என்றான். கழுகும் அதற்குச் சரியென்று
சொல்லிக்கொண்டு, தன்னிடத்தில் இருந்த இறகு ஒன்றை வேடனுக்குக்
கொடுத்தது.
வேடன், கழுகு கொடுத்த இறகினை தன்னுடைய அம்பினில்
பொருத்திவிட்டு உயரே பறந்துகொண்டிருந்த கழுகைக் குறிபார்த்து
எய்தான். அவன் எய்த அம்பு குறி தவறவே, மேலே பறந்துகொண்டிருந்த
கழுகு தப்பித்தது. உடனே வேடன் தன்னருகில் இருந்த கழுகிடம்,
"இந்த முறை குறி தவறிவிட்டது... அடுத்த முறை நிச்சயம் அந்தக்
கழுகைக் குறிபார்த்து அடித்துவிடலாம்... அதனால் இன்னோர் இறகைத்
தா, அந்தக் கழுகைக் குறிபார்த்து அடித்துவிடலாம்" என்றான். கழுகும்
அவன் கேட்டுக்கொண்டதற்கேற்ப இன்னோர் இறகைத் தந்தது. அந்த இறகை
தான் வைத்திருந்த அம்பில் பொருத்தி, மேலே பறந்துகொண்டிருந்த கழுகை
நோக்கிக் குரிபார்த்தது செய்தான் வேடன். ஆனால், இந்த முறையும்
அவன் எய்த அம்பு குறிதவறி இன்னொரு பக்கம் செல்ல, கழுகு தப்பித்தது.
இப்படி ஒவ்வொருமுறையும் அவன் எய்த அம்பு குறிதவற, அவன் தன்னருகில்
இருந்த கழுகிடம் ஒவ்வோர் இறகாகக் கேட்டுவாங்கி, தன்னிடம் இருந்த
அம்பில் பொருத்தி, மேலே பறந்துகொண்டிருந்த கழுகை நோக்கி எய்துகொண்டே
இருந்தான். இதனால் கீழே இருந்த கழுகின் இறகுகள் ஒவ்வொன்றாகக்
காலியானதே ஒழிய, மேலே பறந்துகொண்டிருந்த கழுகு வீழ்த்தப்படவில்லை.
ஒரு கட்டத்தில் கீழே இருந்த கழுகின் உடலில் இருந்த இறகுகள் எல்லாம்
காலியானதும், அது பறக்கமுடியாமல் நின்றது. இதுதான் சமயம் என்று
வேடன் தன்னிடமிருந்து ஓர் அம்பை எடுத்து, அதைக் குறிபார்த்து
அடித்துக் கொன்றுபோட்டான். இவ்வாறு இந்தக் கழுகு இன்னொரு கழுகைக்
கொல்ல நினைத்து, அதுவே செத்து மடிந்தது.
ஒருவரிடமிருந்து இருக்கும் பொறாமை, அவருக்கு எந்தளவுக்கு ஆபத்தாக
அமைக்கின்றது என்பதை இந்தக் கதை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
இன்றைய முதல் வாசகத்தில் தாவீதின் மீது பொறாமையோடு அலையும் சவுலைக்
குறித்து வாசிக்கின்றோம். அவரிடம் இருந்த பொறாமை அவருக்கு எந்தளவுக்கு
ஆபத்தாய் அமைகின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார்; தாவீதோ பதினாராயிரம் பேரைக்
கொன்றார்
தாவீது, இஸ்ரயேலரின் படைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த
பெலிஸ்தியனாகிய கோலியாத்தைக் கொன்றுவிட்டு வீடு திரும்புகின்றபொழுது,
இஸ்ரயேலின் எல்லா நகர்களிலும் இருந்த பெண்கள் ஆடிப் பாடி அவரையும்
சவுலையும் வரவேற்றார்கள். அப்படி வரவேற்கும்பொழுது, "சவுல் ஆயிரம்
பேரைக் கொன்றார்; தாவீதோ பதினாராயிரம் பேரைக் கொன்றார்" என்று
சொல்லி வரவேற்றார்கள். இது சவுலின் உள்ளத்தில் பொறாமையை ஏற்படுத்துகின்றது.
சவுல், திருமுழுக்கு யோவானைப் போன்று (யோவா 3: 30) தனக்குப்
பின் வரும் தாவீது வளரட்டும் என்று நினைத்திருக்கலாம்; ஆனால்,
அவர் அப்படி நினைக்காமல், தன்னுடைய ஆட்சியை தாவீது பறித்துவிடுவாரோ
என்று அஞ்சுகின்றார். அதனால் பொறாமை கொள்கின்றார்.
பொறாமையினால் அவரைக் கொலைசெய்யவும் துணிகின்றார். நீதிமொழிகள்
நூல் இவ்வாறு சொல்கின்றது; "சின வெறியோ எழும்புறுக்கியாகும்."
(நீமொ 14: 30). சவுல் தாவீதின் மீதுகொண்ட பொறமை, சினமாக மாறி,
அவரைக் கொல்வதற்கும் ஏற்பாடுகளைச் செய்ய வைக்கின்றது.
ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக இருப்பவர் சவுலின் மகனாகிய யோனத்தான்.
சவுலுக்குப் பின் அரசுரிமை யோனத்தானுக்குதான் வந்திருக்க
வேண்டும் (அரசனுடைய மகன் அரசன் என்ற முறைப்படிப் பார்த்தால்).
யோனத்தானோ ஆண்டவருடைய அருள்பொழிவு தாவீதுக்குக்
கிடைத்திருக்கின்றது... அதனால் அவர்தான் அரசராக வேண்டும் என்று
தாவீதின் பொறாமைப்படாமல், அவருக்கு நல்ல நண்பாக இருக்கின்றார்.
நாம் சவுலைப் போன்று பொறாமையோடு இல்லாமல், யோனத்தானைப் போன்று
அன்போடும் நட்போடும் இருப்பது சிறப்பு.
சிந்தனை
"பொறாமையும் சீற்றமும் உன் வாழ்நாளைக் குறைக்கும்" (சீஞா 30:
24) என்கிறது சீராக்கின் ஞான நூல். ஆகையில் நம்மிடம் இருக்கும்
பொறாமையை வேரறுத்து, அன்போடும் நட்போடும் வாழப்பழகுவோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 3: 7-12
"பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள்"
நிகழ்வு
சில ஆண்டுகளுக்கு முன்பாக எடின்பர்க் என்ற நகரில் இளைஞன் ஒருவன்
இருந்தான். அவன் மிகவும் விரும்பி ஒரு நாயை வளர்த்துவந்தான்.
அந்த நாய் அவன் எங்கு சென்றாலும், அவன் பின்னாலேயே செல்லும்.
ஒருநாள் அவன் தன்னுடைய நான்கு சக்கர வண்டியில், கடைத்தெருவிற்குப்
பொருள்களை வாங்கச் சென்றான். போகிறபொழுது வண்டியில் இடமிருந்ததால்,
தன்னுடைய நாயை வண்டியில் ஏற்றிக்கொண்டு கடைத்தெருவிற்குச்
சென்றான். திரும்பி வரும்பொழுது வண்டியில் இடமில்லாமல் போனதால்,
நாயைப் பின்னால் வரவைத்துவிட்டு, வண்டியை ஓட்டிக்கொண்டு
முன்னால் சென்றான்.
போகிற வழியில் தெரு நாய் ஒன்று, அந்த இளைஞனுடைய நாயை வழிமறித்து,
அதனோடு சண்டை போடத் தொடங்கியது. அவனுடைய நாயோ அந்தத் தெரு
நாயோடு சண்டை போட்டு நேரத்தை வீணடிக்காமல், தன்னுடைய தலைவன்மீது
மட்டும் கவனத்தை வைத்து, அவனையே பின்தொடர்ந்து சென்றது. இதற்குப்
பின்னும் ஓரிரு நாய்கள் அந்த இளைஞனுடைய நாயை வழிமறித்துச் சண்டையிடத்
தொடங்கின. அப்பொழுதும் அது அந்த நாய்களோடு சண்டையிட்டு நேரத்தை
வீணடிக்காமல், தன்னுடைய தலைவன்மீது மட்டுமே கவனத்தை வைத்து,
அவனுடைய வீட்டை அடைந்தது.
இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞன்தான் இயேசு. அவன்மீது மட்டுமே
கவனத்தை வைத்து, அவனை இறுதிவரைப் பின்தொடர்ந்து சென்ற அவனுடைய
விருப்பமான நாய்தான் நாம் அனைவரும். எப்படி அந்த இளைஞனின்
நாய், அவன்மீது மட்டுமே கவனத்தை வைத்து, இறுதி வரை அவனைப்
பின்தொடர்ந்து சென்றதோ, அதுபோன்று இயேசுவின் வழியில் நடக்கின்ற
நாம் ஒவ்வொருவரும் அவர்மீது மட்டுமே கவனத்தை வைத்து, நல்ல மனத்தோடு
அவரைப் பின்தொடர்ந்து செல்லவேண்டும். அதுதான் உண்மையான சீடத்துவ
வாழ்க்கை. நற்செய்தியில், "பெருந்திரளான மக்கள் இயேசுவைப்
பின்தொடர்ந்து சென்றார்கள் என்று வாசிக்கின்றோம். உண்மையில்
அவர்கள் இறுதிவரை இயேசுவின்மீது தங்களுடைய கவனத்தைப் பதிய
வைத்து வாழ்ந்தார்களா? அல்லது எந்த நோக்கத்திற்காக அவர்கள் இயேசுவைப்
பின்தொடர்ந்து சென்றார்கள் என்பதைக் குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
பல்வேறு பகுதிகளிலிருந்தும் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்ற மக்கள்
இன்றைய நற்செய்தியில், பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் இயேசுவிடம்
வந்தார்கள் என்று வாசிக்கின்றோம். நற்செய்தியில் குறிப்பிடப்படும்
ஒவ்வோர் இடமும் நமக்கு ஒவ்வோர் உண்மையை உணர்த்துகின்றது. தீர்,
சீதோன் ஆகிய பகுதிகள் வடதிசையைக் குறிக்கின்றன. யூதேயா, இதுமேயா
ஆகிய பகுதிகள் தென்திசையையும் எருசலேம் மத்தியப் பகுதியையும்
யோர்தான் அக்கரைப் பகுதி கிழக்குத் திசையையும் குறிக்கின்றன.
இதை வைத்துப் பார்க்கின்றபொழுது, இயேசுவிடம் எல்லாப் பகுதியிலிருந்தும்
மக்கள் வந்தார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம்.
இதற்கு முந்தைய பகுதிகளில் இயேசு தொழுகைக்கூடத்தில் இருக்கும்பொழுது
அல்லது கற்பிக்கும்பொழுது பரிசேயக்கூட்டம் அவர்மீது குற்றம் கண்டுபின்பிடிக்கும்;
எதிர்ப்பினைத் தெரிவிக்கும்; ஆனால், இயேசு தொழுகைக்கூடத்தை
விட்டு வெளியே வருகின்றபொழுது சாதாரண மக்கள்கூட்டம் அவரை ஆர்வத்தோடு
பின்தொடரும். இது நமக்கு வியப்பினை அளிப்பதாக இருக்கின்றது.
பல்வேறு காரணங்களுக்காக இயேசுவைப் பின்தொடர்ந்த மக்கள்
இயேசு தொழுகைக்கூடத்தை விட்டு கடற்கரையோரமாய் வந்தபொழுது பல பகுதிகளிலிருந்தும்
அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரைப் பின்தொடர்ந்தார்கள் என்று
சிந்தித்துப் பார்த்தோம். இவர்கள் அனைவரும் எத்தகைய நோக்கத்திற்காக
இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றார்கள் என்பதையும் சிந்தித்துப்
பார்ப்பது நம்முடைய சீடத்துவ வாழ்விற்கு வலுசேர்க்கும் என்பதில்
ஐயமில்லை.
இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றவர்களில் பலர் "அவரைப் பின்தொடர்ந்து
சென்றால் வயிறார உணவு கிடைக்கும்" (யோவா 6: 26) என்று
சென்றிருக்கக்கூடும். இன்னும் ஒருசிலர் இயேசுவைப் பின்தொடர்ந்து
சென்றால் உடல்நலம் கிடைக்கும் என்று சென்றிருக்கலாம். மற்றும்
சிலர் இயேசுவின்மீது குற்றம் காண்பதற்காக அவரைப் பின்தொடர்ந்து
சென்றிருக்கலாம். வெகு சிலர் இயேசுவின் அமுதமொழிகளைக் கேட்டு,
அதன்படி வாழவேண்டும் என்பதற்காக அவரைப் பின்தொடர்ந்து
சென்றிருக்கலாம். இவர்களில் நாம் யாராக இருக்கின்றோம் என்று
சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
பல நேரங்களில் நாம் நம்முடைய தேவைகளுக்காக இயேசுவைப் பின்தொடர்ந்து
சென்றுகொண்டிருக்கின்றோம். இந்நிலையில் நாம் இயேசுவின்மீது மட்டுமே
நம்முடைய கவனத்தைப் பதிய வைத்து, நல்ல மனத்தோடு அவரைப் பின்தொடர்கின்றோமா?
என்று சிந்தித்துப் பார்த்து, அதன்படி வாழ முற்படுவோம்.
சிந்தனை
"என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்" (யோவா 8: 12)
என்பார் இயேசு. ஆகையால், உலகின் ஒளியான இயேசுவை, எல்லாருக்கும்
எல்லா நலன்களையும் அளிக்கும் இயேசுவை நேர்மையான உள்ளத்தோடு
பின்தொடர்ந்து, அவருடைய உண்மையான சீடர்களாக விளங்கி, அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|