Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   22  ஜனவரி 2020  
    பொதுக்காலம் 2 ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
தாவீது கவணும் கல்லும் கொண்டு, பெலிஸ்தியனை வீழ்த்தினார்.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 32-33, 37, 40-50

அந்நாள்களில் தாவீது சவுலை நோக்கி, "இவன் பொருட்டு யாருடைய இதயமும் கலங்க வேண்டியதில்லை; உம் அடியானாகிய நானே சென்று அந்தப் பெலிஸ்தியனோடு போரிடுவேன்" என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம், "இந்தப் பெலிஸ்தியனை எதிர்த்துப் போரிட உன்னால் இயலாது; நீயோ இளைஞன், ஆனால் அவனோ தன் இள வயதுமுதல் போரில் பயிற்சியுள்ளவன்" என்றார். மேலும் தாவீது, "என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த ஆண்டவர் இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார்" என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம், "சென்றுவா! ஆண்டவர் உன்னோடு இருப்பார்" என்றார். தாவீது தம் கோலைக் கையில் எடுத்துக் கொண்டார்; நீரோடையிலிருந்து வழுவழுப்பான ஐந்து கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்து இடையனுக்குரிய தம் பையில் போட்டுக் கொண்டார்; தம் கவணைக் கையில் பிடித்துக் கொண்டு பெலிஸ்தியனை நோக்கிச் சென்றார். தன் கேடயம் ஏந்துபவன் முன் செல்ல, அந்தப் பெலிஸ்தியனும் தாவீதை நோக்கி நடந்து அவரை நெருங்கினான். பெலிஸ்தியன் தாவீதைக் கூர்ந்து பார்த்து ஏளனம் செய்தான்; ஏனெனில் அவன் சிவந்த மேனியும் அழகிய தோற்றமும் உடைய இளைஞனாய் இருந்தான். அப்பெலிஸ்தியன் தாவீதைப் பார்த்து, "நீ கோலுடன் என்னிடம் வர, நான் என்ன நாயா?" என்று சொல்லித் தன் தெய்வங்களின் பெயரால் தாவீதைச் சபிக்கத் தொடங்கினான். மீண்டும் பெலிஸ்தியன் தாவீதை நோக்கி, "அருகே வா! வானத்துப் பறவைகளுக்கும் வனத்து விலங்குகளுக்கும் உன் உடலை இரையாக்குவேன்" என்றான். அப்பொழுது தாவீது பெலிஸ்தியனிடம், "நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய்; நானோ நீ இகழ்ந்த இஸ்ரயேலின் படைத்திரளின் கடவுளாகிய, படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன். இன்றே ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்புவிப்பார்; நான் உன்னை வீழ்த்தி உன் உடலைத் துண்டிப்பேன்; பெலிஸ்தியரின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் பூவுலக விலங்குகளுக்கும் கையளிப்பேன்; இஸ்ரயேலரிடையே கடவுள் இருக்கிறார் என்பதை உலகிலுள்ள எல்லாரும் இதனால் அறிந்துகொள்வர். மேலும், ஆண்டவர் வாளினாலும் ஈட்டியினாலும் மீட்கின்றவர் அல்லர் என்று இந்த மக்கள் கூட்டம் அறிந்து கொள்ளட்டும்; ஏனெனில் இது ஆண்டவரின் போர்! அவரே உங்களை எங்கள் கையில் ஒப்புவிப்பார்" என்றார். பெலிஸ்தியன் எழுந்து தாவீதை நோக்கிப் புறப்படுகையில், தாவீதும் அவனுடன் போரிட பெலிஸ்தியப் படைத்திரளை நோக்கி விரைந்து ஓடினார். தாவீது தம் பையில் கை வைத்து ஒரு கல்லை எடுத்தார்;அதைக் கவணில் வைத்துச் சுழற்றிப் பெலிஸ்தியனுடைய நெற்றியைக் குறி பார்த்து எறிந்தார். அந்தக் கல்லும் அவனது நெற்றிக்குள் தாக்கிப் பதியவே, அவன் தரையில் முகம் குப்புற விழுந்தான். இவ்வாறு தாவீது, கையில் வாளேதும் இன்றிக் கவணும் கல்லும் கொண்டு பெலிஸ்தியன்மீது வெற்றிகொண்டு, அவனை வீழ்த்திக் கொன்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 144: 1. 2. 9-10 (பல்லவி: 1a) Mp3
=================================================================================
 பல்லவி: என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!

1 என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! போரிட என் கைகளுக்குப் பயிற்சி அளிப்பவர் அவரே! போர்புரிய என் விரல்களைப் பழக்குபவரும் அவரே! பல்லவி
2 என் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே! என் கேடயமும் புகலிடமும் அவரே! மக்களினத்தாரை எனக்குக் கீழ்ப்படுத்துபவர் அவரே! பல்லவி
9 இறைவா, நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்; பதின் நரம்பு வீணையால் உமக்குப் புகழ் பாடுவேன்.
10 அரசர்களுக்கு வெற்றி அளிப்பவர் நீரே! உம் ஊழியர் தாவீதைக் கொடிய வாளினின்று தப்புவித்தவரும் நீரே! பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(மத் 4: 23)

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஓய்வு நாளில் எது செய்வது முறை? உயிரைக் காப்பதா, அழிப்பதா? 

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-6

இயேசு மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர். இயேசு கை சூம்பியவரை நோக்கி, "எழுந்து, நடுவே நில்லும்'' என்றார். பின்பு அவர்களிடம், "ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?'' என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள். அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி, "கையை நீட்டும்'' என்றார். அவர் நீட்டினார். அவருடைய கை மீண்டும் நலமடைந்தது. உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 மாற்கு 3: 1-6

(தொடர்ந்து) நன்மை செய்வோம்

நிகழ்வு

முன்பொரு காலத்தில் பாக்தாத்தில் அரசர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தார். ஒருநாள் அவர் இளவரசர் ஆற்றில் குளிக்கச் சென்றார். குளிக்கும்பொழுது அவர் திடீரென மாயமானவர். அவரோடு இருந்தவர்கள் இளவரசர் மாயமானதை அறிந்து திடுக்கிட்டுப் போனார்கள். உடனே அவர்கள் அரசரிடம் சென்று நிகழ்ந்த அனைத்தையும் எடுத்துச் சொன்னார்கள். அரசர் தன் மகன் ஆற்றில் மாயமானதை எண்ணி மிகவும் வருத்தப்பட்டார். பின்னர் அவர் நாட்டு மக்களிடம், இளவரசரை மீட்டுத் தருகின்றவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து இளைஞரைத் தேடும் வேட்டை தொடங்கியது. பலரும் ஆற்றில் மாயமான இளவரசரைத் தேடும் முயற்சியில் இறங்கினார்கள்.

ஒருநாள், இரண்டு நாள் என்று நாள்கள் சென்றுகொண்டே இருந்தன. இளவரசர் மட்டும் யாருடைய கண்ணுக்கும் தெரியவில்லை. ஒருவாரம் கழித்துத்தான் இளைஞன் ஒருவன், ஆற்றின் ஓரத்தில் இருந்த ஒரு குகையில் இளவரசர் பத்திரமாக இருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ந்தான். பின்னர் அவன் இளவரசரை மீட்டுக்கொண்டு வந்து, அரசரிடம் ஒப்படைத்தான். இளவரசர் நலமாகவும் திடகாத்திரமாகவும் இருப்பதைக் கண்டு அரசர் மிகவும் மகிழ்ந்தார்.

"ஒருவார காலம் ஆற்றுக்குள் இருந்திருக்கின்றாய்...? எப்படி உன்னால் இந்தளவுக்கு நலமாகவும் திடகாத்திரமாகவும் இருக்க முடிகின்றது...?" என்று அரசர் இளவரசரிடம் கேட்டதற்கு இளவரசர், "நான் இருந்த பகுதியில் ரொட்டித் துண்டுகள் தண்ணீரில் மிதந்துகொண்டு வந்தன. "முசலேம்" என்று முத்திரையிடப்பட அந்த ரொட்டித் துண்டுகளை எடுத்து உண்டதால்தான் நான் இந்தளவுக்கு நலமாகவும் திடகாத்திரமாகவும் இருக்கின்றேன்" என்றார். இதற்குப் பின்பு அரசர் "முசலேம்" என்பவர் யார் எனக் கண்டுகொண்டு, அவரை அரண்மனைக்கு அழைத்துக்கொண்டு வருமாறு தன்னுடைய படைவீரர்களுக்கு உத்தரவிட்டார். படைவீரர்களும் நீண்ட நெடிய தேடலுக்குப் பின்பு முசலேமை அரசரிம் அழைத்து வந்தார்கள்.

"நீர்தாம் முசலேமா? நீர்தாம் ஆற்றில் ரொட்டித் துண்டுகளைப் போடுபவரா?" என்று அரசர் கேட்டதற்கு அவர், "ஆமாம், நான்தான் முசலேம்... நான்தான் ஆற்றில் ரொட்டித் துண்டுகளைப் போடுபவன்" என்றார். அதற்கு அரசர் அவரிடம், "இப்படிப்பட்ட செயலை நீ செய்வதற்குக் காரணமென்ன...? இதனை நீ எத்தனை நாள்களாகச் செய்து கொண்டிருக்கின்றாய்?" என்றார் அரசர். "நாம் செய்யும் ஒரு சிறு நன்மை அடுத்தவருக்குப் பெரிய அளவில் பயன்படும் என்ற நோக்கத்தில் பல ஆண்டுகளாக இதைச் செய்துகொண்டிருக்கின்றேன்" என்றார் முசலேம். முசலேம் இவ்வாறு சொன்னதைக் கேட்டு அரசர் பெரிதும் மகிழ்ந்து, அவருக்கு ஐந்து நகர்களைத் தானமாகத் தந்தார்.

நன்மை செய்யவேண்டும்... அதுவும் தொடர்ந்து நன்மை செய்யவேண்டும். அப்படிச் செய்தால் அதற்கான பலன் ஒருநாள் நிச்சயம் கிடைக்கும் என்ற செய்தியை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசமும் நன்மை செய்பவர்களாக வாழ அழைத்துத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஓய்வுநாளில் நன்மை செய்த இயேசு

நற்செய்தியில் இயேசு கைசூம்பிய மனிதரைக் குணப்படுத்துகின்றார். அவர் அந்த மனிதரைக் குணப்படுத்துகின்ற நாளோ ஓர் ஓய்வுநாள்.

"ஓய்வுநாளின் தூய்மையை கெடுக்கிறவன் கொல்லப்படவேண்டும்; அந்நாளில் வேலை செய்பவன் எவனும் தன் மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்" (விப 31: 14-17) என்று சொல்லும் மோசேயின் சட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், ஓய்வுநாளில் இயேசு கைசூம்பிய மனிதரை எப்பொழுது நலப்படுத்துவர்... அவர்மீது எப்பொழுது குற்றம் சுமத்தலாம் என்று கொலைவெறியோடு பரிசேயக் கூட்டம் மறுபக்கம் இருந்தாலும், இயேசு யாரைப் பற்றியும் நினைத்துக் கவலைப்படாமல் கைசூம்பிய மனிதரை நலப்படுத்துகின்றார். இன்னும் சொல்லப்போனால் இயேசுவுக்கு முன்பாக கைசூம்பிய மனிதர் நலம்பெறுவது மட்டும் தெரிந்தது; வேறு எதுவும் தெரியவில்லை. அதனாலேயே இயேசு அவரை நலப்படுத்துகின்றார்.

இயேசுவின் இத்தீரமிக்க செயல் நமக்கு உணர்த்துகின்ற செய்தி ஒன்றே ஒன்றுதான். அதுதான் நாம் எத்தகைய இடர்வரினும் நன்மை செய்வதற்கு மட்டும் சோர்ந்துபோகக்கூடாது என்பதாகும் .புனித பவுலும் இதைத்தான், "நீங்கள் நன்மை செய்வதில் மனந்தளரவேண்டாம் (1 தெச 3:13) என்பார். எனவே, நாம் தேவையில் உள்ள மக்களுக்கு எல்லாச் சூழ்நிலையிலும் நன்மை செய்யக் கற்றுக்கொள்வோம்.

சிந்தனை

"இயேசு எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்" (திப 10: 38) என்கிறது இறைவாரத்தை. ஆகையால், நாம் எங்கும் எல்லாச் சூழ்நிலையிலும் நன்மை செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 1 சாமுவேல் 17: 32-33, 37, 40-51

படைகளின் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்த தாவீது

நிகழ்வு

தாவரவியலார் ஒருவர் இருந்தார். அவர் தன்னுடைய ஆய்வுக்காக அரியவகைத் தாவரம் ஒன்றைப் பல மாதங்களாகத் தேடி அலைந்துகொண்டிருந்தார். முடிவில் அவர் தேடியலைந்த தாவரம் ஒரு பள்ளத்தாக்கில் இருப்பது தெரிய வந்தது. எனவே, அவர் அதை பறிப்பதற்கு முடிவுசெய்தார்.

"தாவரம் பள்ளத்தாக்கில் இருக்கின்றது... அதை அங்கு சென்று பறிப்பது மிகவும் கடினம்... உயிருக்கு உத்திரவாதம் இல்லை" என்று பலரும் அவர் குறிப்பிட்ட தாவரத்தைப் பறித்துத் தருவதற்குப் பின் வாங்கினார்கள். ஒருகட்டத்தில் அவர் தனது மகனுடைய இடுப்பில் கயிற்றைக் கட்டி, அவனைக் கீழே இறக்கித் தாவரத்தைப் பறிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்தார். அதன்படி அவர் தன்னுடைய மகனின் இடுப்பில் கயிற்றைக் கட்டி, கயிற்றின் இன்னொரு முனையை அவர் பிடித்துக்கொண்டு அவனைக் கீழே இறக்கினார்.

சிறிதுதூரம்தான் அவர் தன்னுடைய மகனைக் கீழே இறக்கியிருப்பார். அதற்குள் அவர் தன்னுடைய மகன் பயப்படுவானோ என்று எண்ணிக்கொண்டு, "மகனே உனக்குப் பயமாக இருக்கின்றதா...?" என்றார். அவனோ சிறிதும் பதற்றமில்லாமல், "அப்பா நான் எதற்குப் பயப்படவேண்டும்...? நீங்கள்தான் என்னை இறுகப் பிடித்திருக்கின்றார்களே! அப்படியிருக்கும்பொழுது நான் எதற்குப் பயன்படவேண்டும்...?" என்றான்.

இந்த நிகழ்வில் வருகின்ற சிறுவன் தன் தந்தையின்மீது நம்பிக்கை வைத்துப் பள்ளத்தாக்கில் இறங்கி, அந்த அரியவகைத் தாவரத்தைத் தன் தந்தைக்குப் பறித்துத் தந்தான். இன்றைய முதல் வாசகத்தில் தாவீது ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, பெலிஸ்தியனான கோலியாத்தை வெற்றி கொள்கின்றார். தாவீது ஆண்டவர்மீது கொண்டிருந்த நம்பிக்கை எத்தகையது? அந்த நம்பிக்கை அவருக்கு எப்படி வெற்றியைத் தந்தது? ஆகியவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தாவீதைக் குறைத்து மதிப்பிட்டவர்கள்

பெலிஸ்தியனான கோலியாத்து இஸ்ரயேலின் படையைப் பார்த்து, உங்களில் ஒருவனை என்னிடம் அனுப்பி வையுங்கள். அவன் என்னோடு போரிட்டு வெற்றிகொண்டு விட்டால், பெலிஸ்தியர் உங்களுக்கு அடிமை... ஒருவேளை நான் அவனை வெற்றிகொண்டால் இஸ்ரயேலர் பெலிஸ்தியருக்கு அடிமை என்று சொல்லி நாற்பது நாள்களாகச் சவால்விட்டுக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்து இஸ்ரயேலின் படையிலிருந்த அனைவரும் அஞ்சி நடுங்கினார்கள். இந்த வேளையில் அங்கு தாவீது வருகின்றார். அவரைப் பார்த்துவிட்டு, தாவீத்தின் மூத்த சகோதரர் எலியாபு, "நீ ஏன் இங்கு வந்தாய்...? அந்தச் சில ஆடுகளையும் பாலையத்தில் நீ யாரிடம் ஒப்படைத்தாய்...?" என்கின்றார். தாவீதின் சகோதரர் எலியாயு சொல்லக்கூடிய இவ்வார்த்தைகள், தாவீது ஏதோ ஆடு மேய்க்கத்தான் இலாயக்கு என்பதுபோல் இருக்கின்றது. இதற்குப் பின்பு தாவீது சவுலிடம் பேசுகின்றபொழுது, சவுல், "நீயோ இளைஞன்!" என்று கூறுகின்றார்.

தாவீதின் சகோதராக இருக்கட்டும், சவுலாக இருக்கட்டும் இரண்டு பேருமே தாவீது எப்படிப்பட்டவர் என்பதை அறியாதவர்களாக அல்லது அவருடைய திறமையைக் குறைத்து மதிப்பிடுபவர்களாகவே இருக்கின்றார்கள். இயேசுவின் குடும்பத்தாரும் உறவினர்களும் அவரைக் குறைத்து மதிப்பிட்டார்கள் (மத் 10: 36) என்றுதான் நற்செய்தி நூல் சான்றுபகர்கின்றது. இந்த வேளையில் தன்னைக் குறைத்து மதிப்பிட்ட சவுலிடம் தாவீது, "சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த இறைவன் இந்தப் பெலிஸ்தியனிடமிருந்தும் தப்புவிப்பார்" என்று சொல்ல, சவுல் தாவீதைப் பெலிஸ்தியானோடு சண்டையிட அனுப்பி வைக்கின்றார்.

ஆண்டவர்மீது நம்பிக்கைகொண்டு கோலியாத்தை வெற்றிகொண்ட தாவீது

தாவீது கோலியாத்தோடு சண்டையிடச் செல்கின்றபொழுது கையில் ஒரு கோலையும் ஐந்து கூழாங்கற்களையும் எடுத்துக்கொண்டு\ ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துச் செல்கின்றார். அதைப் பார்த்துவிட்டு கோலியாத், "நீ கோலோடு என்னிடம் வர, நான் என்ன நாயா?" என்கின்றான். இதைத் தொடர்ந்து தாவீது அவனிடம், "நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய்; நானோ.... படைகளின் ஆண்டவர் தம் பெயரால் வருகின்றேன்" என்று சொல்லி, அவன்மீது கவணில் கல்லை வைத்துத் தாக்க அவன் தரையில் முகங்குப்புற விழுந்து இறந்துபோகின்றான்.

தாவீது ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துச் சண்டையிட்டதால், அவருக்கு கோலும் கூழங்கற்களுமே போதுமானவையாக இருந்தன. தாவீது செய்த இந்தச் செயலின் வழியாக அவர் ஆண்டவரின் திருப்பெயரை விளங்கச் செய்தார். நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரின் திருப்பெயரை விளங்கச் செய்யவேண்டும். அதற்கு நாம் தாவீதைப் போன்று ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழவேண்டும்.

ஆகவே, நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்வோம். அப்பொழுது ஆண்டவர் நம் வழியாக வல்ல செயல்களைச் செய்வார். நாமும் அதன்மூலம் ஆண்டவரின் திருப்பெயரை விளங்கச் செய்ய முடியும்.

சிந்தனை

ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார்" (திபா 115: 11) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துச் செயல்படுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!