|
|
21 ஜனவரி 2020 |
|
|
பொதுக்காலம் 2 ஆம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
தாவீதைச் சாமுவேல் திருப்பொழிவு செய்தார். ஆண்டவரின் ஆவி
தாவீதின் மேல் நிறைவாக இருந்தது.
சாமுவேல் முதல் நூலிலிருந்து
வாசகம் 16: 1-13
அந்நாள்களில் ஆண்டவர் சாமுவேலை நோக்கி,
"இஸ்ரயேலின் அரசராகச் சவுல் இல்லாதவாறு நான் அவனைப் புறக்கணித்ததை
நீ அறிந்திருந்தும், நீ எவ்வளவு காலம் அவனுக்காகத் துக்கம்
கொண்டாடுவாய்? உன்னிடமுள்ள கொம்பை எண்ணெயால் நிரப்பிக் கொண்டு
போ. பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகிறேன்; ஏனெனில்
அவன் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன்" என்றார். அதற்குச்
சாமுவேல், "எப்படிப் போவேன்? சவுல் கேள்விப்பட்டால், என்னைக்
கொன்று விடுவானே?" என்றார். மீண்டும் ஆண்டவர், "நீ ஒரு கன்றுக்குட்டியை
எடுத்துச் செல்! `ஆண்டவருக்குப் பலியிட வந்துள்ளேன்" என்று
சொல்; ஈசாயைப் பலிக்கு அழைத்திடு. அப்பொழுது நீ செய்ய வேண்டியது
என்னவென்று உனக்கு நான் தெரிவிப்பேன்; நான் உனக்குக் காட்டுகிறவனை
நீ எனக்காகத் திருப்பொழிவு செய்" என்றார். ஆண்டவர் கட்டளையிட்டவாறு
சாமுவேல் செய்த பின் பெத்லகேமுக்குச் சென்றார். அப்பொழுது அவ்வூரின்
பெரியோர்கள் அஞ்சி நடுங்கி அவரை எதிர்கொண்டு வந்து, "உங்கள் வருகையின்
நோக்கம் சமாதானம் தானே" என்று கேட்டனர். அதற்கு அவர், "ஆம் சமாதானம்
தான்; ஆண்டவருக்குப் பலிசெலுத்த வந்துள்ளேன்; உங்களையே
தூய்மையாக்கிக் கொண்டு என்னுடன் பலியிட வாருங்கள்" என்றார்.
மேலும் ஈசாயையும் அவர் புதல்வரையும் தூய்மைப்படுத்திப் பலியிட
வருமாறு அழைத்தார். அவர்கள் வந்தபோது அவர் எலியாவைப் பார்த்தவுடனே,
"ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும்"
என்று எண்ணினார். ஆனால் ஆண்டவர் சாமுவேலிடம், "அவன் தோற்றத்தையும்
உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில் நான் அவனைப் புறக்கணித்து
விட்டேன். மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை; மனிதர்
முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்"
என்றார். அடுத்து, ஈசாய் அபினதாபை அழைத்து சாமுவேல் முன்பாகக்
கடந்து போகச் செய்தார். அவர், "இவனையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை"
என்று கூறினார். பிறகு ஈசாய் சம்மாகுவைக் கடந்து போகச்
செய்தார். "ஆண்டவர் இவனையும் தேர்ந்து கொள்ளவில்லை" என்றார்
சாமுவேல். இவ்வாறு ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக்
கடந்து போகச் செய்தார். "இவர்களையும் ஆண்டவர் தேர்ந்துகொள்ளவில்லை"
என்றார் சாமுவேல். தொடர்ந்து சாமுவேல் ஈசாயைப் பார்த்து, "உன்
பிள்ளைகள் இத்தனை பேர்தானா?" என்று கேட்க, "இன்னொரு சிறுவன் இருக்கிறான்;
அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான்" என்று பதிலளித்தார்
ஈசாய். அதற்குச் சாமுவேல் அவரிடம், "ஆள் அனுப்பி அவனை அழைத்து
வா; ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்" என்றார்.
ஈசாய் ஆள் அனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும்
ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றமுடன் இருந்தான். ஆண்டவர்
சாமுவேலிடம், "தேர்ந்துகொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத்
திருப்பொழிவு செய்!" என்றார். உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த
கொம்பை எடுத்து, அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத்
திருப்பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின்
மேல் நிறைவாக இருந்தது. சாமுவேல் இராமாவுக்குப் புறப்பட்டுச்
சென்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா: 89: 19. 20-21. 26-27 (பல்லவி: 20a) Mp3
=================================================================================
பல்லவி: என் ஊழியன் தாவீதை நான் கண்டுபிடித்தேன்.
19 முற்காலத்தில் உம் பற்றுமிகு அடியார்க்கு நீர் காட்சி தந்து
கூறியது: வீரன் ஒருவனுக்கு வலிமை அளித்தேன்; மக்களினின்று
தேர்ந்தெடுக்கப்பட்டவனை உயர்த்தினேன். பல்லவி
20 என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால்
அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்.
21 என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே
அவனை வலிமைப்படுத்தும். பல்லவி
26 `நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை' என்று அவன்
என்னை அழைப்பான்.
27 நான் அவனை என் தலைப்பேறு ஆக்குவேன்; மண்ணகத்தில் மாபெரும்
மன்னன் ஆக்குவேன். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(எபே 1: 17-18 காண்க)
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய
எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு நம் ஆண்டவராகிய
இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சிமிகு தந்தையுமானவர் ஞானமும்,
வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஓய்வு நாள் மனிதருக்காக; மனிதர் ஓய்வு
நாளுக்காக அன்று.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
2: 23-28
ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர்
கதிர்களைக் கொய்துகொண்டே வழி நடந்தனர். அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம்,
"பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்?"
என்று கேட்டனர். அதற்கு அவர் அவர்களிடம், "தாமும் தம்முடன் இருந்தவர்களும்
உணவின்றிப் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை
நீங்கள் வாசித்ததே இல்லையா? அபியத்தார் தலைமைக் குருவாய் இருந்தபோது
தாவீது இறை இல்லத்திற்குள் சென்று, குருக்களைத் தவிர வேறு எவரும்
உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு
இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?"என்றார். மேலும் அவர்
அவர்களை நோக்கி, "ஓய்வு நாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது;
மனிதர் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஆதலால் ஓய்வு
நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே"என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
1 சாமுவேல் 16: 1-13
"மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ
அகத்தைப் பார்க்கின்றார்"
நிகழ்வு
ஒரு மாலை வேளையில் பெரியவர் ஒருவர் கடற்கரையோரமாய் நடந்து
சென்றுகொண்டிருந்தார். வழியில் ஒரு சிறிய சாக்கு மூட்டை கிடந்தது.
அதற்குள் என்ன இருக்கின்றது என்று அவர் பார்த்தபொழுது களிமண்ணால்
செய்யப்பட்ட உருண்டைகள் இருந்தன. அவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக
இருந்தன.
"யாரோ ஒருவர் களிமண்ணால் உருண்டைகள் செய்து காய
வைத்திருக்கின்றார் போலும்" என்று நினைத்துக்கொண்ட அவர், அந்தக்
களிமண் உருண்டைகளுள் ஒவ்வொன்றாக எடுத்து, கடலில் தன்னால் எவ்வளவு
தூரம் எறியமுடியுமோ அவ்வளவு தூரம் எறியத் தொடங்கினார். ஏறக்குறைய
சாக்கு மூட்டையில் இருந்த எல்லா உருண்டைகளையும் அவர் கடலில் எறிந்திருந்தார்.
இப்பொழுது அவரிடம் கையில் ஒரே ஒரு களிமண் உருண்டை மட்டும் இருந்தது.
அதை அவர் கடலில் வீசி எறிந்தபொழுது அது அருகில் இருந்த
பாறையில் பட்டுத் தெறித்தது. அப்பொழுது அதிலிருந்து வைரக்கல்
போல், ஒளிமயமான ஒரு கல் வெளிப்பட்டது.
அப்பொழுதுதான் அவருக்குத் தெரிந்தது, தான் இவ்வளவு நேரமும்
கையில் வைத்து எறிந்துகொண்டிருந்தது, களிமண் உருண்டைகள் அல்ல;
வைரக்கற்கள் என்று. "கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே...!"
என்று அவர் தன்னை நொந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் வருகின்ற பெரியவர் எப்படி வைரக்கல்லை அதன்
வெளித்தோற்றத்தைப் பார்த்து, களிமண் உருண்டை என
நினைத்துக்கொண்டு கடலில் வீசி எறிந்தாரோ, அதுபோன்றுதான் பலரும்
ஒருவருடைய வெளித்தோற்றத்தைப் பார்த்துவிட்டு இவர் இப்படிப்பட்டவர்...
அவர் அப்படிப்பட்டவர்.. என்று முடிவுசெய்கின்றனர். இன்றைய முதல்
வாசகத்திலும், சாமுவேல் ஈசாயின் மைந்தர்களின் வெளியடையாளத்தைப்
பார்த்துவிட்டு, "ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான்
இருக்கும்" என்று எண்ணியபொழுது, "அவனுடைய தோற்றத்தையும் உயரத்தையும்
பார்க்காதே...மனிதர் பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை" என்று
கூறுகின்றார். ஆண்டவராகிய கடவுள் சாமுவேலிடம் கூறுகின்ற இவ்வார்த்தைகளின்
பொருளென்ன...? இதற்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன...? ஆகியவற்றைக்
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
சவுல் புறக்கணிக்கப்படலும் தாவீது இஸ்ரயேலின் அரசராகத்
தேர்ந்தெடுக்கப்படுதலும்
இஸ்ரயேலின் முதல் அரசரான சவுல் ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து
நடக்காததால், ஆண்டவர் அவரை அரச பதவியிலிருந்து நீக்குகின்றார்.
பின்னர் அவர் சாமுவேலிடம், கொம்பை எண்ணெயால் நிரப்பிக்கொண்டு
பெத்லகேமில் உள்ள ஈசாயிடம் போ, ஏனெனில் அவருடைய புதல்வர்களுள்
ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன் என்று சொல்கின்றார். ஆண்டவர்
சாமுவேலிடம் இவ்வாறு சொன்னதும் சாமுவேல் சிறிது தயங்கினாலும்,
ஆண்டவர் அவருக்கு எல்லாவற்றையும் எடுத்துரைத்த பின்பு அவர்
பெத்லகேமிலுள்ள ஈசாவிடம் செல்கின்றார்.
ஈசாவிடம் சென்றபிறகு அவருடைய மைந்தர்களில் ஒவ்வொருவரையும்
பார்த்துவிட்டு சாமுவேல், "ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன்
இவனாக இருக்குமோ" என்று எண்ணுகின்றார்; ஆனால் அவர் எண்ணியதற்கு
மாறாக, ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த தாவீதை அருள்பொழிவு செய்யச்
சொல்கின்றார் ஆண்டவர்.
ஆண்டவராகிய கடவுள் சாமுவேலிடம், ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த
தாவீதை அரசராகத் திருப்பொழிவு செய்த நிகழ்வு நமக்கோர் முதன்மையான
செய்தியைச் சொல்கின்றது. அது என்னவெனில், ஒருவரை அவருடைய
வெளித்தோற்றத்தையோ... அவருடைய பின்புலத்தையோ... வைத்து எடைபோடக்
கூடாது என்பதாகும். யூதர்கள் இயேசுவின் வெளித்தோற்றத்தை வைத்து
எடைபோட்டார்கள். நாம் அப்படிப்பட்ட செயலைச் செய்யாமல் இருக்கவேண்டும்.
பணியில் ஈடுபட்டிருப்பவர்களைத் தன்னுடைய பணிக்கென அழைக்கும் இறைவன்
கடவுள், தாவீதை இஸ்ரயேலின் அரசராகத் திருப்பொழிவு செய்தது நமக்கு
இன்னொரு முக்கியமான செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது என்னவெனில்,
யாரெல்லாம் பணியில் ஈடுபட்டிருந்தார்களோ/ ஈடுபட்டிருக்கின்றார்களோ
அவர்களையே ஆண்டவர் தன்னுடைய பணிக்காக அழைக்கின்றார் என்பதாகும்.
மோசே, கிதியோன், எலிசா, நெகேமியா, ஆமோஸ், இயேசுவின் சீடர்களான
பேதுரு, அந்திரேயா. யோவான், யாக்கோபு, மத்தேயு இவர்கள் யாவரும்
சும்மா இருக்கும்பொழுது கடவுள் அவர்களைத் தன்னுடைய பணிக்காக அழைக்கவில்லை;
பணிசெய்துகொண்டிருந்தபொழுதே அழைத்தார். இதை வேறு வார்த்தைகளில்
சொல்லவேண்டும் என்றால், கடவுள் சோம்பேறிகளை அல்ல, சுறுசுறுப்பானவர்களை,
தங்களுடைய பணிகளைச் செய்பவர்களையே அழைக்கின்றார்.
ஆகையால், நாம் நம்முடைய பணிகளை, கடமைகளைக் கருத்தூன்றிச் செய்யவேண்டும்.
அப்பொழுதுதான் கடவுளின் அழைப்பும் அன்பும் நமக்குக்
கிடைக்கும்.
சிந்தனை
"நன்று. நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே. சிறிய பொறுப்புகளில்
நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை
அமர்த்துவேன்" (மத் 25: 21) என்பார் இயேசு. எனவே நாம் தாவீதைப்
போன்று நமக்குக் கொடுக்கப்பட்டது சிறிய பொறுப்பாக இருந்தாலும்,
அதில் நம்பிக்கைக்குரியவர்களாய் இருப்போம். அப்பொழுது இறைவன்
நமக்கு தாவீதுக்குப் பெரிய பொறுப்பினைப் கொடுத்து ஆசி வழங்கியது
போல், நமக்கும் வழங்குவார்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 2: 23-28
"ஓய்வுநாளில் செய்யக்கூடாதை ஏன் இவர்கள்
செய்கிறார்கள்?"
நிகழ்வு
ஒருவர் தான் வழக்கமாக மளிகைப் பொருள்கள் வாங்கும் மளிகைக் கடைக்குச்
சென்று, தன் மனைவி வாங்கிவரச் சொன்ன மளிகைப் பொருள்களை
வாங்கினார். எல்லாவாற்றையும் வாங்கிய பின் மளிகைக் கடைக்காரர்
வாங்கிய பொருளுக்கான இரசீதைக் கொடுத்தார். அதை வாங்கி எல்லாமும்
சரியாக இருக்கின்றதா என்று பார்த்த அந்த மனிதர், கொடுக்கவேண்டிய
தொகை 3500 என்று இருப்பதற்குப் பதில் 3800 என்று இருப்பதைப்
பார்த்துவிட்டு கொதித்தெழுந்தார்.
"நீங்கள் மளிகைக் கடை நடத்துகிறீர்களா...? இல்லை திருட்டுத்
தொழில் நடத்துகிறீர்களா...? 3500 என்று வருவதை 3800 என்று
போட்டுருக்கிறீர்களே...! இது என்ன நியாயம்...?" என்று மளிகைக்
கடைக்காரரைப் பார்த்துக் கத்தினார் அந்த மனிதர். "ஐயா! தெரியாமல்
நடந்துவிட்டது... என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்... இனிமேலும்
இப்படி நடக்காது" என்று கெஞ்சிக்கேட்டார் மளிகைக் கடைக்காரர்.
அப்படியும் அந்த மனிதர் விடமால், "உங்களை மாதிரி ஆள்களைப்
பார்க்கின்றபொழுது யாரையும் நம்பக்கூடாது என்று தோன்றுகின்றது"
என்று இன்னும் உரக்கக் கத்தினார். "ஐயா! என்னை
மன்னித்துக்கொள்ளுங்கள். தவறு நடந்துவிட்டது" என்று காலில்
விழாத குறையாகக் கெஞ்சிக் கேட்டு, 3800 என்று தவறுதலாக
இருந்ததை 3500 என்று திருத்தினார். அதன்பிறகுதான் அந்த மனிதர்
உரிய பணத்தைக் மளிகைக் கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு, வாங்கிய
பொருள்களைத் தூக்கிக்கொண்டு, வீட்டிற்குத் திரும்பினார்.
வீட்டிற்கு வந்ததும், மளிகைக் கடையிலிருந்து வாங்கிவந்த
பொருள்களைத் தன் மனைவியிடம் கொடுத்தார் அந்த மனிதர். அவருடைய
மனைவி ஒவ்வொரு பொருளாகச் சரிபார்த்து வந்தார்.
அப்படியிருக்கையில் "இரண்டு கிலோ துவாரம் பருப்புக்குப் பதில்
நான்கு கிலோ துவரம் பருப்பு" என்று இருந்தது. இதைப்
பார்த்ததும் அவருடைய மனைவி அவரிடம், "ஏங்க! இரண்டு கிலோ துவரம்
பருப்பு என்றுதான் இங்கு எழுதியிருக்கிறேன்... ஆனால்,
கடைக்காரர் நான்கு கிலோ துவரம் பருப்பு கொடுத்திருக்கின்றார்.
தயவுசெய்து கூடுதலாக இருக்கும் இந்த இரண்டு கிலோ துவரம்
பருப்பைக் கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு வாருங்கள்" என்றார்.
"என்னது... கூடுதலாக இருக்கும் இரண்டு கிலோ துவரம் பருப்பைக்
கடைக்காரரிடம் திருப்பிக் கொடுக்கவேண்டுமா..? நல்லா
இருக்கின்றது உன் பேச்சு. எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு
ஒழுங்காக உள்ளே வை" என்று அதட்டினார் அந்த "நேர்மையான மனிதர்".
பலருக்கு தாங்கள் செய்யும் தவற்றை விட, மற்றவர்கள் செய்யும்
தவறுதான் பெரிதாகத் தெரிகின்றது. இப்படிப்பட்ட மனிதர்களை நாம்
அன்றாடம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். நற்செய்தியில்
இதையொத்த மனிதர்களை நாம் சந்தித்துக்கின்றோம். இவர்களுக்குத்
தரும் செய்தியின் வழியாக, இயேசு நமக்குத் தரும் செய்தியென்ன
என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மாந்தநேயத்தை விட சட்டம் பெரிதென நினைத்தவர்கள்
நற்செய்தியில் இயேசுவின் சீடர்கள் கதிர்களைக் கொய்து உண்டதைப்
பார்த்த பரிசேயர்கள், ஓய்வுநாளில் செய்யக்கூடாதை அவர்கள்
செய்துவிட்டதாகக் குற்றம் சுமத்துகின்றார்கள். இயேசுவின்
சீடர்கள் பசியில் இருந்தார்கள். அதனாலேயே அவர்கள் கதிர்களைக்
கொய்து உண்டார்கள் என்று பெருந்தன்மையாக பரிசேயர்கள்
சீடர்களிடம் நடந்திருக்கலாம்; ஆனால், அவர்கள் அவ்வாறு
நடக்காமல், தன்னுடைய சீடர்கள்மீது குற்றம் கண்டதால், இயேசு தன்
சீடர்கள் சார்பாக நின்று பேசத் தொடங்குகின்றார். இறைவன் தன்
அடியவர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை (புல 3: 31). தன் சீடர்களை
மட்டும் கைவிட்டு விடுவாரா என்ன? அவர்களைக் கைவிடமாட்டார்
என்பதைத்தான் பரிசேயர்களுக்கு இயேசு அளிக்கும் பதில்
உணர்த்துகின்றது.
சட்டத்தை விட மாந்தநேயம் பெரிதென நினைத்த இயேசு
பரிசேயர்கள் தன் சீடர்மீது குற்றம் சுமத்தத் தொடங்கியதைப்
பார்த்த இயேசு, அவர்களிடம் தாவீது அரசருடைய வாழ்வில் நடந்த ஒரு
நிகழ்வை மேற்கோள் காட்டிப் பேசி, அவர்களை வாயடைக்கின்றார்.
தாவீதும் அவரோடு இருந்தவர்களும் பசியாய் இருந்தபொழுது
குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அர்ப்பண அப்பங்களை உண்டார்கள்.
அது பெரிய குற்றாகப் பார்க்கப்படவில்லை. அவர்களுடைய தேவைதான்
பெரிதாகப் பார்க்கப்பட்டது. இயேசு தாவீது அரசரின் வாழ்வில்
நடந்த அந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் பரிசேயர்கள்
தன்னுடைய சீடர்களுடைய செயலை அதே கண்ணோட்டத்தோடு
பார்க்கவேண்டும் என்று உணர்த்துகின்றார். ஆம், சட்டங்களை விட
மனிதரின் தேவை மற்றும் மாந்த நேயம் மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்தவை என்பதுதான் இயேசு பரிசேயர்களுக்கும் ஏன், நமக்கும்
சொல்லும் செய்தியாக இருக்கின்றது.
ஆகையால், நாம் சட்டங்களைவிட மாந்த நேயம் மிகவும்
முக்கியத்துவம் வாய்ந்தது என்ற உண்மையை உணர்ந்தவர்களாய்
வாழ்வோம்.
சிந்தனை
"அன்பே திருச்சட்டத்தின் நிறைவு" (உரோ 13:10) என்பார் புனித
பவுல். ஆகவே, திருச்சட்டத்தின் நிறைவாகிய அன்பை நம்முடைய
வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|