Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   20  ஜனவரி 2020  
    பொதுக்காலம் 2 ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 கீழ்ப்படிதலே பலிகளை விடச் சிறந்தது.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 15: 16-23

அந்நாள்களில் சாமுவேல் சவுலை நோக்கி, "நிறுத்தும், இன்றிரவு ஆண்டவர் எனக்குக் கூறியவற்றை உமக்குச் சொல்கிறேன்" என, சவுல், "சொல்லுங்கள்" என்றார். சாமுவேல் கூறியது: "நீர் உமது பார்வைக்கே சிறியவராய் இருந்த போதல்லவா இஸ்ரயேல் குலங்களுக்குத் தலைவர் ஆனீர்? ஆண்டவரும் உம்மை இஸ்ரயேலின் அரசராகத் திருப்பொழிவு செய்தார். ஆண்டவர் உமக்கு வழிகாட்டி, "நீ சென்று அந்தப் பாவிகளான அமலேக்கியரை அழித்துவிட்டு வா. இறுதிவரை போரிட்டு அவர்களை ஒழித்துவிடு" என்று சொன்னார். அப்படியிருக்க, நீர் ஏன் ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை? கொள்ளைப்பொருள்மீது பாய்ந்து ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்ததேன்?" அதற்குச் சவுல், சாமுவேலை நோக்கி, "ஆண்டவரின் குரலுக்கு நான் செவிகொடுத்தேன், அவர் காட்டிய வழியிலும் சென்றேன். அமலேக்கியரின் மன்னன் ஆகாகைக் கொண்டு வந்தேன். ஆனால் அமலேக்கியரை அழித்துவிட்டேன். ஆனால் வீரர்கள் உம் கடவுளாகிய ஆண்டவருக்குக் கில்காலில் பலி செலுத்த, தடை செய்யப்பட்ட கொள்ளைப் பொருளினின்று சிறந்த ஆடுகளையும், மாடுகளையும் கொண்டு வந்தனர்" என்றார். அப்போது சாமுவேல் கூறியது: "ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரிபலிகள், பிற பலிகள் செலுத்துவதா? அவரது குரலுக்குக் கீழ்ப்படிவதா? கீழ்ப்படிதல் பலியை விடச் சிறந்தது, கீழ்ப்படிதல் ஆட்டுக் கிடாய்களின் கொழுப்பை விட மேலானது! கலகம் சூனியத்திற்கு நிகரான பாவம்! முரட்டுத்தனம் சிலைவழிபாட்டுக்கு ஒப்பான குற்றம். நீர் ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்தீர்! அவரும் உம்மை அரச பதவியினின்று நீக்கிவிட்டார்."


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 50: 8-9. 16bc-17. 21,23 (பல்லவி: திபா50:23)
=================================================================================
பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளின் மீட்பைக் கண்டடைவர்.
 பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் எனது மீட்பைக் கண்டடைவர்.

8 நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை; உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன.
9 உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக் கிடாய்களையோ, நான் ஏற்றுக்கொள்வதில்லை. பல்லவி
16bc என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை?
17 நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். பல்லவி
21 இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்; நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்; ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்; உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்து உரைக்கின்றேன்.
23 நன்றிப் பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(எபி 4: 12)

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மணமகன் விருந்தினரோடு இருக்கிறார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 18-22

யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்து வந்தனர். சிலர் இயேசுவிடம், ``யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?" என்று கேட்டனர். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ``மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்க முடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பு இருக்க முடியாது. ஆனால் மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள். எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்தப் புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் பெரிதாகும். அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; மதுவும் தோற்பைகளும் பாழாகும். புதிய மது புதுத் தோற் பைகளுக்கே ஏற்றது" என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 1 சாமுவேல் 15: 16-23

கீழ்ப்படிதல் பலியை விடச் சிறந்தது

நிகழ்வு

படைவீரர் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் கையில் மிகப்பெரிய துப்பாக்கியை வைத்துக்கொண்டு பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். அப்பொழுது அங்கு வந்த இராணுவ அதிகாரி, "உன்னால் நான் குறிப்பிடும் இலக்கை நோக்கிச் சரியாகச் சுடமுடியுமா?" என்றார். "இதில்லென்ன ஐயம். என்னால் இலக்கை நோக்கிச் சரியாகச் சுட முடியும்?" என்றார் படைவீரர். "அப்படியானால், அதோ தெரிகின்றதே ஒரு பாலம். அந்தப் பாலத்திற்கு இடப்பக்கம் உள்ள குடிசையில் கட்டப்பட்டிருக்கின்ற வெள்ளைத் துணியில் சுடும்" என்றார்.

இராணுவ அதிகாரி இவ்வாறு சொன்ன மறுவினாடி படைவீரர் இலக்கை நோக்கிச் சரியாகச் சுட்டார். சுட்டுவிட்டு அவர் கண்ணீர் விட்டு அழுதார். அவர் ஏன் அழுகின்றார் என்பதற்கான காரணம் புரியாமல், இராணுவ அதிகாரி அவரிடம், "நான் சொன்னதுபோல், நீ இலக்கை நோக்கிச் சரியாகச் சுட்டிருக்கின்றாய். இதை நினைத்து நீ மகிழ்ச்சியடையாமல், ஏன் இப்படிக் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருக்கின்றாய்...?" என்றார்.

"அது வேறொன்றும் இல்லை. நீங்கள் சுடச் சொன்ன அந்தக் குடிசை வீடு என்னுடையது. இந்த உலகத்தில் எனக்கென்று இருந்த ஒரே சொத்து அதுதான். அதுவும் இப்பொழுது தீப்பற்றி எரிந்துவிட்டதே! அதை நினைத்துத்தான் இப்படி அழுதுகொண்டிருக்கின்றேன்" என்றார் படைவீரர். படைவீரர் சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்டு, அப்படியே வியந்துநின்ற இராணுவ அதிகாரி, "உன்னை விட பதவியில் உயர்ந்தவர் ஒருவர் சொன்னார் என்பதற்காக உன்னுடைய குடிசையையும் சுட்டாயே! உன்னுடைய கீழ்ப்படிதல் எனக்குப் பிடித்திருக்கின்றது. உன்னுடைய குடிசைக்கான இழப்பீட்டினை நான் தந்துவிடுகின்றேன். மேலும் உன்னிடம் இருக்கின்ற இந்தக் கீழ்ப்படிதல் என்ற உயர்ந்த பண்பிற்காக உன்னைப் பெரிய பொறுப்பில் அமர்த்துகிறேன்" என்றார்.

இந்த நிகழ்வில் வருகின்ற படைவீரரின் கீழ்ப்படிதல் அவரைப் பெரிய பொறுப்பில் அமர்த்தியது; ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, இறைவனுக்குக் கீழ்ப்படியாமல் நடந்த ஒருவரின் நிலை என்ன ஆனது என்பதை இன்றைய முதல் வாசகம் எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடக்காத சவுல்

ஆண்டவராகிய கடவுள் சவுலிடம், பாவிகளாகிய அமலேக்கியரை அழித்துவிட்டு வா... அவர்களோடு இறுதிவரை ஒழித்துவிட்டு வா... என்று சொன்னார்; ஆனால், சவுலோ அமலேக்கியரை அழித்துவிட்டு, அவர்களுடைய அரசனான ஆகாக்கைக் கொல்லாமல் வந்தார். மட்டுமல்லாமல், அவருடைய வீரரர்கள் கொள்ளைப் பொருள்களிலிருந்து சிறந்தவற்றை தங்களோடு எடுத்துக்கொண்டார்கள். இதனால் சாமுவேல் சவுலிடம், "நீர் ஆண்டவருக்கு கீழ்ப்படியாமல், அவருடைய வார்த்தைகளைப் புறக்கணித்தீர்! அவரும் உம்மை அரச பதவியின்றி நீக்கிவிட்டார்" என்கின்றார்.

சவுல், தன்னுடைய தந்தைக்கு கீழ்ப்படிந்து நடந்தார் என்றும் மிகவும் தாழ்ச்சியோடு இருந்தார் (1 சாமு 9:21) என்றும் திருவிவிலியம் நமக்குச் சான்று பகர்கின்றது. அப்படிப்பட்டவர் கடவுளின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாமல் நடந்து, பொய் சொல்பவராக மாறுவது (1 சாமு 15: 3,20,21) நமக்கு வியப்பாக இருக்கின்றது. சவுல் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் நடந்ததால், அவருடைய அரச பதவி அவரிடமிருந்து எடுக்கப்பட்டு, தாவீதுக்குக் கொடுக்கப்படுகின்றது.

கீழ்ப்படிதல் பலியைவிடச் சிறந்தது

சாமுவேல் சவுலிடம் பேசுகின்றபொழுது உதிர்க்கின்ற "கீழ்ப்படிதல் பலியைவிடச் சிறந்தது" என்ற சொற்கள் நம்முடைய சிந்தனைக்குரியவையாக இருக்கின்றன. சவுல் ஆண்டவருக்குப் கில்காலில் பலிசெலுத்துவதைப் பெரிதென நினைத்தார்; ஆனால், ஆண்டவர் சாமுவேல் வழியாக, கீழ்ப்படிதல் பலியை விடச் சிறந்தது என்று எடுத்துக் கூறுகின்றார்.

திருவிவிலியத்தின் பல பக்கங்கள், பலியில் இறைவன் மகிழ்வதில்லை (திபா 50: 7-15) என்றும் கடவுளுக்கு ஏற்ற பலி நொறுங்கிய உள்ளமே (திபா 51: 16-17) என்றும் பலியை விட இரக்கத்தையே இறைவன் விரும்புகின்றார் (ஓசே 6:6) என்றும் எடுத்துக் கூறுகின்றன. இப்படியிருக்கையில் பவுல் கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்காமல், பலி செலுத்துவதில் ஆர்வம் காட்டியது வியப்பாக இருக்கின்றது. இன்றைக்குக் கூட பலர் இறைவனின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்காமல், வெளியடையாளங்களில் கவனம் செலுத்துவது மிகவும் வியப்பாக இருக்கின்றது. இத்தகையோர் இறைவனின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்பது நல்லது.

சிந்தனை

"உமது முன்னிலையில் முழு உள்ளத்தோடு உமக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் உம்முடைய அடியார்க்கு உம்முடைய உடன்படிக்கையின் பேரன்பைத் தவறாது காட்டி வருகின்றீர்" (1 அர 8: 23) என்கிறது இறைவார்த்தை. ஆகையால், நாம் நம்முடைய வாழ்வின் எல்லாச் சூழ்நிலையிலும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 2: 18-22

"இயேசு தந்த புதிய சாசனம்"

நிகழ்வு

இத்தாலியில் தோன்றிய மிகப்பெரிய கவிஞர் தாந்தே அலிகிரி (Dante Alighieri). ஒருமுறை இவர் கோயிலுக்குச் சென்று, திருவழிபாட்டில் கலந்துகொண்டார். வழிபாடு தொடங்கி, திருப்பலியை நிறைவேற்றிய ஆயர் நற்கருணை மன்றாட்டைச் சொல்லும் வேளையில் எல்லாரும் முழந்தாள்படியிட்டிருந்தார்கள். தாந்தே மட்டும் மெய்ம்மறந்து, அப்படியே நின்றுகொண்டே இருந்தார்.

தாந்தேயை அந்நிலையில் பார்த்த அவருக்குப் பிடிக்காத ஒருவர், "தாந்தேயை ஆயரிடம் மாட்டிவிடுவதற்கு இந்த ஒருசெயல் போதும்" என்று மனத்தில் நினைத்துக்கொண்டார். திருப்பலி முடிந்தபின்பு, நேராக ஆயரிடம் சென்ற அந்த மனிதர், நடந்தது அனைத்தையும் ஆயரிடம் எடுத்துச்சொல்லிவிட்டு, "தாந்தே நற்கருணை ஆண்டவரை அவமதித்துவிட்டார். அதனால் அவர் தண்டிக்கப்படவேண்டும்" என்றார்.

அந்த மனிதர் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்ட ஆயர் அவரிடம், "நற்கருணை மன்றாட்டுச் சொல்லப்படும் வேளையில் தாந்தே நின்றுகொண்டிருந்தார் என்பதற்காக அவர் தண்டிக்கப்படவேண்டும் என்றால், நற்கருணை ஆண்டவர்மீது மனத்தையும் கண்களையும் பதிய வைக்க வேண்டிய நீர், அவ்வாறு செய்யாமல் மெய்ம்மறந்து நின்றுகொண்டிருந்த தாந்தேயின்மீது கண்களைப் பதியவைத்ததால் நீரும் தண்டிக்கப்படவேண்டியவர்தானே...! மேலும் இறைவனை இப்படித்தான் வழிபடுவேண்டும் என்று அடுத்தவர்களிடம் சொல்வதற்கு நீர் யார்?" என்றார். வந்தவர் எதுவும் பேச முடியாமல் வாயடைத்து நின்றார்.

மேலே உள்ள நிகழ்வில் வருகின்ற மனிதரைப் போன்று பலரும் தங்களுடைய எண்ணங்களை, கருத்துகளை, சித்தாந்தைகளை அடுத்தவர்மீது செலுத்தி, இவர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும்; இப்படித்தான் செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். இது மிகப்பெரிய வன்கொடுமை. நற்செய்தியிலும் இதையொத்த நிகழ்வு நடைபெறுகின்றது. இந்த நிகழ்வின் வழியாக இயேசு நமக்குக் கூறுகின்ற செய்தியென்ன என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தாங்கள் செய்வது போன்றே மற்றவர்களும் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கும் மடையர்கள்

நற்செய்தியில் சிலர், "யோவானின் சீடர்களும் பரிசேயர்களும் நோன்பிருக்க உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை?" என்று கேட்கின்றார்கள். இங்கு "சிலர்" என்று குறிப்பிடப்படுவது மத்தேயு நற்செய்தியில் (மத் 9: 14) யோவானின் சீடர் என்று வருகின்றது. அப்படியானால், யோவானின் சீடர்கள்தான் இயேசுவிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்டிருக்கவேண்டும் என்று உறுதி செய்துகொள்ளலாம்.

யோவானின் சீடர்கள் "நோன்பிருப்பதாகக்" கூறுகின்றார்களே... அது என்னமாதிரியான நோன்பு எனத் தெரிந்துகொள்வது நல்லது. யூதர்கள் ஆண்டுக்கொருமுறை பாவப்பரிகார நாளில் நோன்பிருந்து வந்தார்கள் (லேவி 23: 27) பின்னாளில் இதனை பரிசேயக்கூட்டம் தங்களுடைய வசதிக்கேற்ப மாற்றிக்கொண்டு, வாரத்திற்கு இருமுறை நோன்பிருக்கத் தொடங்கியது (லூக் 18: 12) திருமுழுக்கு யோவானின் சீடர்கள் இந்தக் கூட்டத்தைப் பார்த்துவிட்டுத்தான் அடிக்கடி நோன்பிருக்கத் தொடங்கினார்களோ அல்லது திருமுழுக்கு யோவானைப் பார்த்துவிட்டு அடிக்கடி நோன்பிருக்கத் தொடங்கினார்களோ என்று தெரியவில்லை. இவர்கள் அடிக்கடி நோன்பிருந்ததைக் கூட விட்டுவிடலாம்; ஆனால், இயேசுவிடம் "நாங்களும் பரிசேயர்களும் அடிக்கடி நோன்பிருக்க உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருக்கவில்லை?" என்று கேட்பதுதான் வியப்பாக இருக்கின்றது.

யோவானின் சீடர்கள் இயேசுவிடம் இப்படிக் கேட்பது, "நாங்கள் சரி... உம்முடைய சீடர்கள் சரியில்லை" என்று சொல்வது போன்று இருக்கின்றது. இந்நிலையில் யோவானின் சீடர்களுக்கு இயேசு என்ன பதிலளித்தார், அதன்வழியாக நாம் அறிந்துகொள்ளவேண்டிய உண்மை என்ன ஆகியவற்றைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.

புதிய சாசனம் எழுதும் இயேசு

இயேசு, திருமுழுக்கு யோவானின் சீடர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் "மணமகன் மணவீட்டார்", "பழைய ஆடை- புதிய துணி" "பழைய தோற்பை- புதிய மது" "புதிய தோற்பை புதிய மது" ஆகிய உருவகங்களைப் பயன்படுத்துகின்றார். இங்கு குறிப்பிடப்படும் பழையன எல்லாம் சட்டங்களைக் குறிப்பனவாக இருக்கின்றன. இச்சட்டங்கள் எல்லாம் மக்களுக்குச் சுமக்க முடியாத சுமைகளாக இருந்தன (மத் 23: 4; 11: 28). ஆனால், ஆண்டவர் இயேசு கொண்டுவந்த அன்பின் சட்டமோ அல்லது அன்பு கட்டளையோ (யோவா 13: 34) மக்களுக்குச் சுமையாக இல்லை; மாறாக அது சுகமாக, மகிழ்வினைத் தருவதாக (யோவா 15: 11) இருந்தது. அதனால் இயேசு யோவானின் சீடர்களிடம், "மணமகன் மணவீட்டாரோடு இருக்கும்பொழுது அவர்கள் துக்கம் கொண்டாட முடியுமா?" என்று கேட்கின்றார்.

ஆம், நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இயேசு, பரிசேயர்களைப் போன்று சட்டங்களைக் கொடுக்கவில்லை. மாறாக அன்புக் கட்டளையைக் கொடுத்திருக்கின்றார். ஆகையால், நாம் இந்தப் புதிய, அன்புக் கட்டளையின் படி நடந்து, ஒருவர் ஒருவர்மீது தேவையற்ற சுமைகளை இறக்கி வைக்காமல், அன்பு செய்யக் கற்றுக்கொள்வோம்.

சிந்தனை

"அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்" (1 கொரி 13:7) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் புனித பவுல் சொல்வது போன்று, இயேசு நமக்குத் தந்த புதிய கட்டளையான அன்பை நம்முடைய வாழ்வில் கடைப்பிடித்து, ஒருவர் மற்றவரை அன்பு செய்து, அவர் செய்யும் குற்றங்களைப் பொறுத்துக்கொண்டு, கிறிஸ்துவின் மதிப்பிடுகளின்படி வாழ்வோம். எவர்மீதும் எக்கருத்தினையும் திணிக்காதிருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



 
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!