Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   18  ஜனவரி 2020  
    பொதுக்காலம் முதல் வாரம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 +இதோ நான் உனக்குச் சொன்ன மனிதன் சவுல்! இவனே என் மக்கள்மீது ஆட்சிபுரிவான்.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 9: 1-4.17-19; 10: 1a
அந்நாள்களில் பென்யமின் குலத்தில் கீசு என்ற ஆற்றல்மிகு வீரர் ஒருவர் இருந்தார். அவர் பென்யமினியன் அபியாவுக்குப் பிறந்த பெக்கோராத்தின் மகனான செரோரின் மகன் அபியேலுக்குப் பிறந்தவர். அவருக்குச் சவுல் என்ற ஓர் இளமையும் அழகும் கொண்ட மகன் இருந்தார். இஸ்ரயேலின் புதல்வருள் அவரைவிட அழகு வாய்ந்தவர் எவரும் இலர். மற்ற அனைவரையும்விட அவர் உயரமானவர். மற்ற அனைவரும் அவர் தோள் உயரமே இருந்தனர். சவுலின் தந்தை கீசின் கழுதைகள் காணாமற் போயின. கீசு தம் மகன் சவுலை அழைத்து, "பணியாளன் ஒருவனை உன்னோடு கூட்டிக் கொண்டு, கழுதைகளைத் தேடிப் போ" என்றார். அவர் எப்ராயிம் மலைநாட்டையும் சாலிசா பகுதியையும் கடந்து சென்றார்; அவற்றைக் காணவில்லை; சாலிம் நாட்டு வழியே சென்றார், அங்கும் அவை இல்லை; பென்யமின் நாட்டைக் கடந்து சென்றார், அங்கும் அவை தென்படவில்லை. சாமுவேல் சவுலைக் கண்டதும், ஆண்டவர் அவரிடம், "இதோ நான் உனக்குச் சொன்ன மனிதன்! இவனே என் மக்கள்மீது ஆட்சிபுரிவான்" என்றார். சவுல் வாயிலின் நடுவே சாமுவேலை நெருங்கி, "திருக்காட்சியாளரின் வீடு எங்கே? தயைகூர்ந்து சொல்லும்" என்று கேட்டார். சாமுவேல் சவுலுக்குக் கூறியது: "நானே திருக்காட்சியாளன். எனக்கு முன்பாக தொழுகை மேட்டுக்குச் செல். இன்று நீ என்னோடு உண்ண வேண்டும். உன் உள்ளத்தில் இருப்பது அனைத்தையும் நாளைக் காலையில் நான் உனக்கு எடுத்துரைத்து உன்னை அனுப்பிவிடுகிறேன்."அப்போது சாமுவேல் தைலக் குப்பியை எடுத்து, அவர் தலைமீது வார்த்து, அவரை முத்தமிட்டுக் கூறியது: "ஆண்டவர் தம் உரிமைச் சொத்துக்குத் தலைவனாக இருக்கும்படி உன்னைத் திருப்பொழிவு செய்துள்ளார் அன்றோ?''


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 21: 2-3. 4-5. 6-7 (பல்லவி: 1a) Mp3
=================================================================================
பல்லவி: உமது வல்லமையில் ஆண்டவரே, அரசர் பூரிப்படைகின்றார்.
1
ஆண்டவரே, உமது வல்லமையில் அரசர் பூரிப்படைகின்றார்; நீர் அளித்த வெற்றியில் எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்!
2
அவர் உள்ளம் விரும்பியதை நீர் அவருக்குத் தந்தருளினீர்; அவர் வாய்விட்டுக் கேட்டதை நீர் மறுக்கவில்லை. - பல்லவி

3
உண்மையில் நலமிகு கொடைகள் ஏந்தி நீர் அவரை எதிர்கொண்டீர்; அவர் தலையில் பசும்பொன்முடி சூட்டினீர்.
4
அவர் உம்மிடம் வாழ்வு வேண்டி நின்றார்; நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை அவருக்கு அளித்தீர். - பல்லவி

5
நீர்அவருக்கு வெற்றியளித்ததால் அவரது மாட்சிமை பெரிதாயிற்று. மேன்மையையும் மாண்பையும் அவருக்கு அருளினீர்.
6
உண்மையாகவே, எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிகளை அவர் பெற்றுள்ளார்; உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கச் செய்தீர். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(லூக் 4: 18-19)

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
++நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன். 

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-17


இயேசு மீண்டும் கடலோரம் சென்றார். மக்கள் கூட்டத்தினர் எல்லாரும் அவரிடம் வரவே, அவர் அவர்களுக்குக் கற்பித்தார். பின்பு அங்கிருந்து அவர் சென்றபோது அல்பேயுவின் மகன் லேவி சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், "என்னைப் பின்பற்றி வா"என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். ஏனெனில் இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள். அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், "இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?" என்று கேட்டனர். இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, "நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார்.


ஆண்டவரின் அருள்வாக்கு.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 1 சாமுவேல் 9: 1-4, 17-19, 10: 1

சவுல் இஸ்ரயேலின் அரசராகத் திருப்பொழிவு செய்யப்படல்

நிகழ்வு

அரசர் ஒருவர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். அந்த அரசருக்கு வயதாகிக்கொண்டே போனதால், தனக்குப் பின் தன் மூன்று மகன்களில் யாரை அரசராக நியமிக்கலாம் என்று யோசித்தார். பின்னர் அவர் மூன்றுபேருக்கும் ஒரு போட்டி வைத்து, அவர்களில் ஒருவரை அரசராக நியமிக்கலாம் என்று முடிவுசெய்தார்.

மறுநாள் அரசர் தன் மூன்று மகன்களையும் தன்னிடம் வரவழைத்து, அவர்களிடம், "நீங்கள் மூவரும் கையில் ஒரு சாக்குப் பையை எடுத்துக்கொண்டு காட்டிற்குச் சென்று, இரண்டு வாரங்களுக்குத் தேவையான பழங்களைப் பறித்துக்கொண்டு வந்து, இங்கிருக்கின்ற ஏழைகளுக்குக் கொடுங்கள். நீங்கள் என்ன மாதிரியான பழங்களைப் பறித்துக்கொண்டு வருகிறீர்கள் என்பதை நான் பார்க்கப்போவதில்லை" என்றார்.

இதைத் தொடர்ந்து அரசருடைய மூன்று மகன்களும் தங்களுடைய கையில் ஆளுக்கொரு சாக்குப் பையை எடுத்து, காட்டுக்குள் சென்றார்கள். மூத்த மகன் நல்ல பழங்களாகப் பார்த்துப் பறித்து, சாக்குப் பையை நிறைத்துகொண்டு அரண்மனைக்குத் திரும்பினான். இரண்டாவது மகன் "மரத்தில் ஏறி பழங்களைப் பறிப்பது கடினமான செயல்" என்று கீழே கிடந்த அழுகிய பழங்களை எல்லாம் எடுத்துச் சாக்குப் பையில் போட்டுக்கொண்டு அரண்மனைக்குத் திரும்பினான். மூன்றாவது மகனோ "பழங்களை ஏழைகள்தானே சாப்பிடப்போகிறார்கள்" என்று தரையில் கிடந்த சருகுகளை அள்ளி சாக்குப் பையில் போட்டுக்கொண்டு அரண்மனைக்கு வந்தான்.

மூன்று மகன்களும் அரண்மனைக்குத் திரும்பியதும், அரசர் அவர்களிடம், "நான் சொன்னது போல், சாக்குப் பையில் பழங்களைப் பறித்துக்கொண்டு வந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்... இப்பொழுது நீங்கள் பறித்துக்கொண்டு வந்த பழங்களை நீங்களே சாப்பிடுங்கள். ஏனெனில், நான் ஏழைகள் என்று குறிப்பிட்டது உங்களைத்தான்" என்றார். அரசர் இவ்வாறு சொன்னதும் மூத்த மகன் தன்னுடைய சாக்குப் பையைத் திறந்து பழங்களைச் சாப்பிடத் தொடங்கினான். இரண்டாவது மற்றும் மூன்றாவது மகன்கள் இருவரும் பதறியவாறு நின்றார்கள்.

அவர்கள் இருவரையும் அப்படிப் பார்த்த அரசர், "நீங்கள் இருவரும் ஏன் பழங்களைச் சாப்பிடாமல் இப்படி நிற்கிறீர்கள்?" என்றார். அவர்களோ நடந்த அனைத்தையும் அவரிடம் எடுத்துச் சொல்லி மிக வருத்ததோடு நின்றார்கள். இதற்குப் பின்பு அரசர் மூத்த மகனைப் பார்த்து, "நான் சொன்னதற்குக் கீழ்ப்படிந்து, உண்மையாய் நீ நடந்துகொண்டாய். அதனால் நான் உன்னை எனக்குப் பின் இந்நாட்டின் அரசராக நியமிக்கின்றேன்" என்றார்.

இந்த நிகழ்வில் வருகின்ற மூத்த மகன், தன் தந்தை சொன்னதற்குக் கீழ்ப்படிந்து உண்மையாய் நடந்துகொண்டதால் அரசனாக நியமிக்கப்பட்டான். இன்றைய முதல் வாசகத்தில் தன் தந்தையின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடந்த ஒருவர் அரசராகத் திருபொழிவு செய்யப்பட்டதைக் குறித்து வாசிக்கின்றோம். அவரைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தன் தந்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்ததால் அரசராக்கப்பட்ட சவுல்

இன்றைய முதல் வாசகத்தில் சவுல் எப்படி சாமுவேலால் இஸ்ரயேல் மக்களின் அரசராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார் என்பதைக் குறித்து வாசிக்கின்றோம்.

சவுல் பென்யமின் குலத்தைச் சார்ந்த கீசுவின் மகன். இஸ்ரயேலில் இருந்த பன்னிரண்டு குலங்களில் பென்யமின் குலம் மிகவும் பின்தங்கிய, புறக்கணிக்கப்பட்ட குலம் (நீத 19-20). பென்யமினைக் குறித்து யாக்கோபு குறிப்பிடும்பொழுது, "பிறிக்கிழிக்கும் ஓநாய்" (தொநூ 49: 27) என்று குறிப்பிடுவார். இப்படிப்பட்ட ஒரு பின்புலத்திலிருந்து வரும் சவுலை அவருடைய தந்தை கீசு, காணாமல் போன கழுதைகளைக் கண்டுபிடித்து வருமாறு கேட்கின்றார். சவுலும் அதற்குக் கீழ்ப்படிந்து கழுதைகளைத் தேடித் புறப்படுகின்றார். அப்பொழுதுதான் அவர் சாமுவேலைக் காண்கின்றார்.

இங்கு நாம் நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான செய்தி, ஒருவேளை சவுல் மட்டும் தன்னுடைய தந்தையின் சொல்லுக்குக் கீழ்ப்படியாமல், காணாமல் போன கழுதைகளைத் தேடி வராமல் இருந்திருந்தால், அவர் சாமுவேலைக் கண்டிருக்கமுடியாது; அவர் சவுலை இஸ்ரயேல் மக்களின் அரசராகத் திருப்பொழிவு செய்திருக்க முடியாது. சவுல் தன் தந்தையின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடந்ததால்தான், அவர் சாமுவேலைச் சந்திக்க முடிந்தது... சாமுவேல் சவுலை இஸ்ரயேல் மக்களின் அரசராக முடிந்தது. சவுல் இளமையும் அழகும் நிறைந்தவர்தான்; ஆனால், அவை அவர் அரசராகத் திருநிலைப்படுத்தப்படக் காரணங்களாக அமையவில்லை. அவருடைய கீழ்ப்படிதல், அவர் அரசராகத் திருநிலைப்படுத்தப்பட காரணமாக அமைந்தது.

அப்படியானால் நாம் இறைவனுக்கும் நம் பெற்றோருக்கும் கீழ்ப்படிந்து நடந்தால், கடவுளின் ஆசியைப் பெறுவோம் என்பது உறுதி.

சிந்தனை

"கடவுளுக்கு அஞ்சி நட; அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படி. இதற்காகவே மனிதர் படைக்கப்பட்டனர்" (சஉ 12: 13) என்கிறது சபை உரையாளர் நூல். ஆகையால், நாம் இறைவனுக்கும் நம்முடைய பெற்றோருக்கும் கீழ்ப்படிந்து நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மாற்கு 2: 13-17

"என்னைப் பின்பற்றி வா"


நிகழ்வு

சீனாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சார்ந்த இரண்டு இளைஞர்கள் ஒருநாள் நகரில் இருந்த கடைத்தெருவுக்குச் சென்றார்கள். அவர்கள் இருவரும் அங்கு சென்ற நேரம், நற்செய்திப் பணியாளர் ஒருவர் கையில் கொஞ்சம் திருவிவிலியங்களை வைத்துக்கொண்டு, "பெரியோர்களே! தாய்மார்களே! இதோ என்னுடைய கையில் இருக்கின்ற திருவிவிலியம் மிகவும் வல்லமையுள்ள நூல். இதை நீங்கள் வாசித்து, இதன்படி நடந்தால், கடவுள் உங்களுடைய வாழ்வைத் தன்னுடைய ஆசியால் நிரப்புவார்" என்றார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த இரண்டு இளைஞர்களும் ஒரு திருவிவிலியத்தை விலைக்கு வாங்கிகொண்டு தங்களுடைய வீட்டிற்கு வந்தார்கள்.

வீட்டிற்கு வந்ததும், அவர்கள் இருவரும் புதிய ஏற்பாட்டின் ஒவ்வோர் அதிகாரமாக வாசிக்கத் தொடங்கினார்கள். மத்தேயு நற்செய்தி 16: 24 ல் வருகின்ற, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு, என்னைப் பின்பற்றட்டும்" என்ற இறைவார்த்தையை வாசித்தபொழுது, அந்த இறைவார்த்தையால் அவர்கள் தொடப்பட்டார்கள். அதனால் அவர்கள் இருவரும் மூங்கில் மரத்தில் ஆளுக்கொரு சிலுவை செய்து, அதைத் தங்களுடைய தோளில் வைத்துக்கொண்டு, எங்கு சென்றாலும் அதைத் தூக்கிக்கொண்டு சென்றார்கள்.

இப்படி இருக்கையில் முன்பொரு நாள் அவர்கள் இருவரும் கடைத்தெருவில் பார்த்த நற்செய்திப் பணியாளர், அவர்கள் இருவரும் சிலுவையைத் தங்கள் தோள்மேல் சுமந்துகொண்டு திரிவதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஆதலால், அவர் அவர்கள் இருவரையும் தம்மிடம் வரவழைத்து, "கிறிஸ்துவின்மீதும் இறைவார்த்தையின்மீதும் நீங்கள் கொண்டிருக்கும் ஆர்வம் என்னை வியக்கவைக்கிறது. எனவே, நீங்கள் கிறிஸ்துவைக் குறித்து இன்னும் ஆழமாக அறிந்துகொண்டு, அவரைக் குறித்து எல்லாருக்கும் அறிவித்தால், பலரும் பயன் பெறுவார்கள்" என்றார். "கிறிஸ்துவைக் குறித்து நாங்கள் இருவரும் இன்னும் ஆழமாக அறிந்துகொள்வதற்கு என்ன செய்யவேண்டும்?" என்று அவர்கள் கேட்டபொழுது, அவர் அவர்களிடம், "நீங்கள் இருவரும் நகரில் இருக்கக்கூடிய, திருவிவிலியம் பற்றிப் போதிக்கப்படக் கூடிய பாடசாலைக்குச் செல்லுங்கள். அங்கு நீங்கள் இயேசுவைக் குறித்து இன்னும் ஆழமாகத் தெரிந்துகொள்வீர்கள்" என்றார்.

அவர் சொன்னது போன்றே, அந்த இரண்டு இளைஞர்களும் திருவிவிலியம் சொல்லித்தரப்படும் பாடசாலைக்குச் சென்று, திருவிவிலியத்தைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் ஆழமாகத் தெரிந்துகொண்டார்கள். மட்டுமல்லாமல் அங்கிருந்த குருவானவரிடம் திருமுழுக்குப் பெற்று, புதிய உத்வேகத்துடன் வீட்டிற்குத் திரும்பி, எல்லாவற்றையும் துறந்து, இயேசுவைப் பற்றி எல்லா மக்களுக்கும் அறிவிக்கத் தொடங்கினார்கள்.

சாதாரண மனிதர்களாகிய அந்த இரண்டு இளைஞர்களும் இயேசுவால் தொடப்பட்டு, அவரைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கத் தங்களுடைய வாழ்க்கையே அர்ப்பணித்தது மிகவும் பாராட்டிற்குரியது. நற்செய்தியில் இயேசுவால் அழைக்கப்பட்ட மத்தேயு, எல்லாவற்றையும் துறந்து, இயேசுவைப் பின்தொடர்வதைக் குறித்து வாசிக்கின்றோம். மத்தேயு அல்லது லேவியின் அழைப்பு நமக்கு என்ன செய்தியைத் தருகின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

எல்லாவற்றையும் துறந்து இயேசுவைப் பின்தொடர்ந்த லேவி

நற்செய்தியில் இயேசு சுங்கச் சாவடியில் வரிவசூலித்துக் கொண்டிருந்த லேவியை, "என்னைப் பின்பற்றி வா" என்று அழைக்கின்றார். இயேசு லேவியை அழைத்ததும், அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்து செல்கின்றார்.

லேவி செய்துவந்த வரிவசூலிக்கும் தொழில் அல்லது வேலையைச் சாதாரணமாகப் பெற முடியாது. இன்று ஒருசிலர் பணம்கொடுத்து வேலையைப் பெறுவது போலத்தான், பணம் கொடுத்துப் பெறவேண்டும். அந்த வேலையைக் கூட, இயேசு அழைத்ததும், உதறித் தள்ளிவிட்டு, அவரைப் பின்தொடர்ந்து செல்கின்றார் லேவி. இவ்வாறு அவர் இயேசுவைப் பின்தொடர்ந்து செல்கின்றவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக விளங்குகின்றார்.

பாவிகளை அழைக்கவந்த இயேசு

மத்தேயுவின் அழைப்பு நமக்கொரு முக்கியமான செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது என்னவெனில், ஆண்டவர் இயேசு இவ்வுலகிற்கு வந்தது, பாவிகளை அழைக்க அல்லது இழந்து போனதைத் தேடி மீட்கவே (லூக் 19: 10). இங்கு ஒரு கேள்வி எழலாம். இயேசு பாவிகளைத்தான் அழைக்க வந்தாரா...? நேர்மையாளர்களை அழைக்க வரவில்லையா..? என்பதுதான் அந்தக் கேள்வி. இவ்வுலகில் பிறந்த அனைவருமே பாவிகள்தான். எனவே பாவிகள் யாவருக்காகவும் இயேசு வந்தார். ஆனால், பலர் பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களைப் போன்று, தாங்கள் பாவி என்பதை உணரவில்லை. அதனாலேயே இறைவன் தந்த ஆசியை இழந்தார்கள். நாம் பாவிகள் என்பதை உணர்ந்து, இயேசு தருகின்ற ஆசியைப் பெறத் தயாரா? சிந்திப்போம்.

சிந்தனை

"அறுவடையோ மிகுதி; வேலையாட்களோ குறைவு" (மத் 9: 37) என்பார் இயேசு. நற்செய்தி அறிவிக்கப்படவேண்டிய தேவை மிகுதியாக இருப்பதால், லேவியைப் போன்று நாம் நற்செய்திப் பணிக்காக நம்மை இயேசுவிடம் ஒப்படைப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!