|
|
17 ஜனவரி 2020 |
|
|
பொதுக்காலம் முதல் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நீங்கள் தேர்ந்துகொண்ட அரசனுக்கு எதிராய் முறையிடுவீர்கள்; ஆண்டவர்
உங்களுக்குச் செவிமடுக்கமாட்டார்.
சாமுவேலின் முதல் நூலிலிருந்து வாசகம் 8: 4-7, 10-22a
அந்நாள்களில் இஸ்ரயேலின் பெரியோர் அனைவரும் ஒன்று கூடிச்
சாமுவேலிடம் இராமாவுக்கு வந்தனர். அவர்கள் அவரிடம், "இதோ உமக்கு
வயது முதிர்ந்துவிட்டது. உம் புதல்வர்கள் உம் வழிமுறைகளில் நடப்பதில்லை.
ஆகவே, அனைத்து வேற்றினங்களிடையே இருப்பது போன்று ஓர் அரசனை நியமித்தருளும்"
என்று கேட்டுக்கொண்டனர். "எங்களுக்கு நீதி வழங்க ஓர் அரசனைத்
தாரும்" என்று அவர்கள் கேட்டது, சாமுவேலுக்குத் தீயதெனப் பட்டது.
சாமுவேல் ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டார். ஆண்டவர் சாமுவேலிடம்
கூறியது: "மக்கள் குரலையும், அவர்கள் உன்னிடம் கூறுவது அனைத்தையும்
கேள். ஏனெனில், அவர்கள் உன்னைப் புறக்கணிக்கவில்லை. அவர்களை
நான் ஆளாதபடி என்னைத் தான் புறக்கணித்துவிட்டனர்." ஓர் அரசன்
வேண்டும் என்று தம்மிடம் கேட்ட மக்களுக்கு சாமுவேல் ஆண்டவர்
கூறிய அனைத்தையும் கூறினார்: "உங்கள் மீது ஆட்சிசெய்யும் அரசனின்
உரிமைகளாவன: அவன் உங்கள் புதல்வர்களைத் தன் தேரோட்டிகளாகவும்
தன் குதிரை வீரர்களாகவும் வைத்துக்கொள்வான். அவர்களைத் தன்
தேர்களுக்குமுன் ஓடச் செய்வான். அவன் அவர்களை ஆயிரத்தினர் தலைவராகவும்,
ஐம்பதின்மர் தலைவராகவும், தன் நிலத்தை உழுபவராகவும், தன்
விளைச்சலை அறுவடை செய்பவராகவும், தன் போர்க் கருவிகளையும்
தேர்க் கருவிகளையும் செய்பவராகவும் நியமித்துக் கொள்வான்.
மேலும் அவன் உங்கள் புதல்வியரைப் பரிமளத் தைலம் செய்கிறவர்களாகவும்,
சமைப்பவர்களாகவும், அப்பம் சுடுபவர்களாகவும் வைத்துக்கொள்வான்.
அவன் உங்கள் வயல்களிலும், திராட்சைத் தோட்டங்களிலும், ஒலிவத்
தோப்புகளிலும் சிறந்தவற்றை எடுத்துக் கொண்டு தன் அலுவலருக்குக்
கொடுப்பான். உங்கள் தானியத்திலும் திராட்சைப் பலனிலும், பத்தில்
ஒரு பங்கை எடுத்துக்கொண்டு தன் காரியத் தலைவருக்கும் அலுவலருக்கும்
கொடுப்பான். உங்கள் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும், உங்கள்
கால்நடைகளில் சிறந்தவற்றையும் உங்கள் கழுதைகளையும் தன் சொந்த
அலுவலுக்காகப் பயன்படுத்துவான். உங்கள் மந்தைகளில் பத்தில் ஒரு
பங்கு எடுத்துக் கொள்வான். நீங்கள் அவனுக்குப் பணியாளர்களாய்
இருப்பீர்கள். அந்நாளில் நீங்களே உங்களுக்காகத் தேர்ந்துகொண்ட
அரசனை முன்னிட்டு முறையிடுவீர்கள். அந்நாளில் ஆண்டவர் உங்களுக்குச்
செவிகொடுக்க மாட்டார்." மக்களோ சாமுவேலின் குரலுக்குச்
செவிகொடுக்க மறுத்து, "இல்லை, எங்களுக்குக் கட்டாயமாய் ஓர்
அரசன் வேண்டும். அனைத்து வேற்றின மக்கள் போலவே நாங்களும் இருப்போம்.
எங்கள் அரசன் எங்களுக்கு நீதி வழங்குவார். எங்கள் போர்களை
முன்னின்று நடத்துவார்" என்றனர். மக்கள் கூறியவை அனைத்தையும்
சாமுவேல் கேட்டு, அவற்றை ஆண்டவர் காதில் போட்டுவைத்தார். ஆண்டவர்
சாமுவேலிடம் கூறியது: "அவர்கள் குரலுக்குச் செவிகொடுத்து, அவர்கள்மீது
ஓர் அரசனை ஆளச் செய்".
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 89: 16-17. 18-19 (பல்லவி: 1a)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரின் பேரன்பை நான் என்றும் பாடுவேன்.
15
விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே! உம்
முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள்.
16
அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்; உமது
நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். - பல்லவி
17
ஏனெனில், நீரே அவர்களது ஆற்றலின் மேன்மை; உமது தயவால் எங்கள்
வலிமை உயர்த்தப்பட்டுள்ளது.
18
நம் கேடயம் ஆண்டவருக்கு உரியது; நம் அரசர் இஸ்ரயேலின் தூயவருக்கு
உரியவர். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(லூக் 7: 16)
அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர்
தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்.
அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
++மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க, மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12
இயேசு
மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார்
என்னும் செய்தி பரவிற்று. பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும்
இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக்
கொண்டிருந்தார். அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து
அவரிடம் கொண்டுவந்தனர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை
இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு
மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப்
படுக்கையோடு கீழே இறக்கினர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக்
கண்டு, முடக்குவாதமுற்றவரிடம்,
"மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன''
என்றார். அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர்,
"இவன் ஏன்
இப்படிப் பேசுகிறான்? இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே
அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?'' என உள்ளத்தில் எண்ணிக்கொண்டிருந்தனர்.
உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து,
அவர்களை நோக்கி, ""உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?
முடக்குவாதமுற்ற இவனிடம் "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்பதா?
"எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட' என்பதா? எது எளிது?
மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு
என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்'' என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை
நோக்கி, ""நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை
எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ'' என்றார். அவரும் எழுந்து
உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே
சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய்,
"இதைப்போல நாம் ஒருபோதும்
கண்டதில்லையே'' என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
1 சாமுவேல் 8: 4-7, 10-22a
"அவர்கள் உன்னைப் புறக்கணிக்கவில்லை. அவர்களை நான் ஆளாதபடி என்னைத்தான்
புறக்கணித்துவிட்டனர்"
நிகழ்வு
இளைஞன் ஒருவன் பாலைவனத்தின் வழியாக நடந்து
சென்றுகொண்டிருந்தான். வழியில் வெயில் மிகுதியாக இருந்தால்,
அவனுக்குத் தாகம் எடுத்தது. அவன் கண்களை ஏறெடுத்துப்
பார்த்தான். அப்பொழுது அவனுக்கு முன்பாகப் பெரியவர் ஒருவர்
சென்றுகொண்டிருந்தார். அவரிடம் கேட்டால் நீர்ச்சுனைக்கான
வழியைச் சொல்வார் என்று, அவரருகில் சென்றான் இளைஞன்.
"ஐயா! எனக்குத் தாகம் மிகுதியாக எடுக்கின்றது. இங்கு ஏதாவது
நீர்ச்சுனை இருந்தால், அது எங்கிருந்து என்று என்னிடம் சொல்ல
முடியுமா...?" என்றான் இளைஞன். "தம்பி! இங்கு நீர்ச்சுனை எங்கிருக்கின்றது
எனக்குத் தெரியும். அதனால் என்பின்னால் வாருங்கள். நான் உங்களுக்கு
நீர்ச்சுனை எங்கிருக்கின்றது என்று சொல்கிறேன்" என்று
சொல்லிவிட்டு பெரியவர் முன்னால் சென்றார். இளைஞன் அவருக்குப்
பின்னால் சென்றான்.
வழியில் ஓரிடத்தில் நீர்ச்சுனை இருப்பது போன்று இளைஞனுக்குத்
தெரிந்தது. பெரியவரோ அந்த இடத்திற்கு அவனைக் கூட்டிக்கொண்டு
போகாமல், தொடர்ந்து நடந்து சென்றார். உடனே இளைஞன் பெரியவரிடம்,
"ஐயா! அதோ அங்கு நீர்ச்சுனை இருப்பது போன்று தெரிகின்றது. நீங்கள்
என்னை அங்கு கூட்டிக்கொண்டு போகாமல், வேறெங்கோ கூட்டிக்கொண்டு
போவது போல் தெரிகின்றது" என்றான். அதற்கு பெரியவர் அவனிடம்,
"தம்பி! அது நீர்ச்சுனை கிடையாது... கானல்நீர். அந்த இடத்திற்கு
நீ சென்றால், உன்னுடைய தாகத்தைத் தணிக்க முடியாது" என்றார்
பெரியவர். இதனால் இளைஞன் அந்தப் பெரியவர் பின்தொடர்ந்து நடந்தான்.
இன்னோர் இடத்தில் நீர்ச்சுனை இருப்பது போன்று இளைஞனுக்குத்
தெரிந்தது. ஆனால், பெரியவர் இளைஞனை அந்த இடத்திற்குக்
கூட்டிக்கொண்டு போகாமல், தொடர்ந்து நடந்து சென்றார். அப்பொழுதும்
இளைஞன் பெரியவரிடம் முன்பு கேட்ட அதே கேள்வியைக் கேட்டபொழுது,
பெரியவர் முன்பு சொன்ன அதே பதிலைச் சொல்லிவிட்டு தொடர்ந்து நடந்து
சென்றார். சற்றுத் தொலைவில் இன்னோர் இடத்தில் நீர்ச்சுனை இருப்பது
போல் இளைஞனுக்குத் தெரிந்தது. பெரியவர் அந்த இடத்திற்குக்
கூட்டிக்கொண்டு போவார் என்று இளைஞன் நினைத்தான். ஆனால், பெரியவர்
அந்த இடத்திற்கும் கூட்டிக்கொண்டு போகாமல், தொடர்ந்து நடந்து
சென்றதால் பொறுமையிழந்த இளைஞன் பெரியவரிடம், "என்ன நீங்கள்
நீர்ச்சுனைக்கு என்னைக் கூட்டிக்கொண்டு போவதாகச் சொல்லிவிட்டு,
ஆங்காங்கே நீர்ச்சுனை இருந்தும், அங்கெல்லாம் என்னைக்
கூட்டிக்கொண்டு போகாமல் எங்கோ என்னைக் கூட்டிக்கொண்டு போகிறீர்கள்...?
ஒருவேளை என்னைக் கொல்வதற்காக வேறெங்கோ கூட்டிக்கொண்டு போகிறீர்களோ...?"
என்று தன்னுடைய இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து
பெரியவரைச் சுட்டான்.
இளைஞனுடைய துப்பாக்கியிலிருந்த பாய்ந்துவந்த தோட்டா பெரியவரின்
மார்பில் பாய்ந்ததும், அவர் தரையில் சரிந்தார். அவ்வாறு அவர்
தரையில் சரியும்பொழுது இளைஞனிடம், "தம்பி! நான் உனக்கு உண்மையான
நீர்ச்சுனையைக் காட்ட விரும்பினேன். நீதான் அதைப்
புரிந்துகொள்ளாமல், பொறுமை இழந்தவனாய் என்னைச் சுட்டு
வீழ்த்திவிட்டாய்" என்று சொன்னவாறு தன்னுடைய உயிரைத் துறந்தார்.
இந்த நிகழ்வில் வருகின்ற பெரியவர் இளைஞனுக்கு உண்மையான
நீர்ச்சுனையைக் காட்ட விரும்பினார். ஆனால் அந்த இளைஞனோ உண்மை
புரியாமல் அவரைச் சுட்டு வீழ்த்தினான். இந்த நிகழ்வில் வருகின்ற
பெரியவரைப் போன்று ஆண்டவராகிய கடவுள், நல்லதொரு ஆயராக இருந்து,
இஸ்ரயேல் மக்களுக்கு நல்வழி காட்ட விரும்பினார்; ஆனால், இஸ்ரயேல்
மக்களோ தங்களுக்கென ஓர் அரசர் வேண்டும் என்று கடவுளைப் புறக்கணித்தார்கள்.
இதனால் இஸ்ரயேல் மக்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கடவுளைப் புறக்கணித்துவிட்டு தங்களுக்கென அரசர் வேண்டுமென்ற இஸ்ரயேலர்
முதல் வாசகத்தில், இஸ்ரயேலின் பெரியயோர் சாமுவேலிடம் வந்து, அனைத்து
வேற்றினங்களிடையே இருப்பது போன்று எங்களுக்கென்று ஓர் அரசரை நியமித்தருளும்"
என்கின்றார்கள். அவர்கள் இவ்வாறு கேட்டது சாமுவேலுக்குத் தீயெனப்
பட்டது. காரணம், இஸ்ரயேல் மக்கள் மற்ற நாட்டு மக்களைப் போன்று
இல்லை. அவர்களுக்கு ஆண்டவரே அரசராக இருந்தார் (விப 19: 3-6),
அவர்கள் அவருடைய மக்களாக இருந்தார்கள்.
இந்நிலையில் இஸ்ரயேலின் பெரியோர் தங்களுக்கென அரசர் வேண்டும்
என்று கேட்டது மூலம் ஆண்டவரையே புறக்கணித்தார்கள். ஆனாலும் கடவுள்
சாமுவேலின் வழியாக அவர்களுக்கென ஓர் அரசர் வரும்பொழுது என்னென்ன
தீமைகள் எல்லாம் நடக்கும் என்பதை எடுத்துக் கூறுகின்றார். அப்படியிருந்தும்
அவர்கள் தங்களுக்கென அரசர் வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால்,
சாமுவேல் சவுலை அரசராகத் திருப்பொழிவு செய்கின்றார். இஸ்ரயேல்
மக்கள் ஆண்டவரைப் புறக்கணித்துவிட்டு தங்களுக்கென ஓர் அரசரைக்
கேட்டது, அவர்கள் தலையில் அவர்களே மண்ணை அள்ளிக்கொண்டதற்கு ஒப்பிடலாம்.
அவர்கள் அரசர் வேண்டும் என்று கேட்டதால், சாலமோன் அரசரின் காலத்தில்
ஓர் அரசரால் ஆகும் எல்லாத் தீமைகளையும் அனுபவித்தார்கள் (1 அர
4: 7-28; எரே 22: 13-17).
இந்த இஸ்ரயேல் மக்களைப் போன்றுதான் நாமும் பல நேரங்களில் கடவுளைப்
புறக்கணித்துவிட்டு, நம்முடைய விருப்பத்தின் நடக்க நினைத்து அழிந்து
போகின்றோம். ஆகையால், நாம் நம்முடைய விருப்பத்தின்படி நடக்க
முற்படாமல், கடவுளின் விருப்பத்தின் படி, அவருடைய வழிகாட்டுதலில்
நமக்க முற்படுவோம்.
சிந்தனை
"வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும்
தந்தையிடம் வருவதில்லை" (யோவா 14: 6) என்பார் இயேசு. ஆகையால்,
இயேசுவே நமக்கு உண்மையான வழிகாட்டி என்பதை உணர்ந்து, அவருடைய
வழிகாட்டுதலில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 2: 1-12
நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்
நிகழ்வு
குருவானவர் ஒருவர் இருந்தார். அவர் புதிதாக ஒரு கோயிலைக் கட்டியதால்
அதில் நிறையக் கடன் ஏற்பட்டது. அதனை அடைப்பதற்கு என்ன செய்வது
என்று அவர் குழம்பிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவரைச் சந்திக்க புதியவர் ஒருவர் வந்தார். அவர்
குருவானவரிடம், "உங்களுடைய நிலைமையைக் குறித்துக் கேள்விப்பட்டேன்.
அதனால் உங்களுக்கு உதவலாம் என்று இருக்கின்றேன்" என்றார். பின்னர்
அவர் ஒரு வெற்றுக் காசோலையை எடுத்துக் குருவானவரிடம் கொடுத்து,
"இது ஒரு வெற்றுக் காசோலை... இதில் உங்களுக்கு எவ்வளவு பணம்
வேண்டுமோ, அவ்வளவு பணத்தை எழுதிக்கொள்ளுங்கள். பின்பு நான் வந்து
அதில் கையெழுத்துப் போடுகின்றேன்" என்று சொல்லிவிட்டு வெளியே
சென்றார். குருவானவர் ஒரு மணித்துளி சிந்தித்துப் பார்த்தார்.
"ஆளைப் பார்த்தால் சாதாரணமாக இருக்கின்றது. இவரிடம் நமக்கு
வேண்டிய பணம் இருக்குமா...? என்ன செய்வது...?" என்று குழம்பினார்.
பின்னர் அவர் கடன்தொகையில் பாதித் தொகையை மட்டும்
குறிப்பிட்டுவிட்டு, அந்தக் காசோலையை எடுத்து, மேசையில்
வைத்தார்.
சிறிது நேரத்தில் வெளியே சென்ற அந்த மனிதர் உள்ளே வந்தார். வந்தவர்
குருவானவர் தனக்கு வேண்டிய தொகையை எழுதி வைத்திருந்த காசோலைப்
பார்த்துவிட்டு, "இந்தத் தொகை போதுமா...?" என்றார். குருவானவர்
போதும் என்பதுபோல் தலையை ஆட்டினார். பின்னர் அந்த மனிதர் ஓர்
எழுதுகோலை எடுத்துக் காசோலையில் கையெழுத்து இட்டார். அவருடைய
கையெழுத்தைப் பார்த்தபொழுதுதான், அவர் சாதாரண மனிதர் அல்ல...
நகரில் இருந்த பெருஞ்செல்வந்தர் என்று குருவானவருக்குத் தெரிந்தது.
"நம்முடைய அவநம்பிக்கையால், வரவேண்டிய பணத்தை இப்படி இழந்துவிட்டோமே"
என்று குருவானவர் மிகவும் வருத்தப்பட்டார்.
மேலே உள்ள நிகழ்வில் வருகின்ற குருவானவரைப் போன்றுதான் பல நேரங்களில்
நாம் நம்முடைய அவநம்பிக்கையால், பலவற்றை இழந்துநிற்கின்றோம்.
இந்நிலையில் இன்றைய நற்செய்தி வாசகம், இறைவன்மீது நம்பிக்கை
வைத்து வாழ்ந்தால், நமக்கு எல்லா ஆசியும் கிடைக்கும் என்ற
செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
நால்வரின் நம்பிக்கையால் முடக்குவாதமுற்றவர் நலம்பெறுதல்
நற்செய்தியில் இயேசு கப்பர்நாகுமிற்கு வந்து,
போதித்துக்கொண்டிருக்கும்பொழுது, அவர் இருந்த வீட்டின்
கூரையில் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரை நால்வர் கட்டியில்
வைத்துக் கீழே இறக்குகிறார்கள். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக்
கண்டு, முடக்குவாதமுற்றவருக்கு நலமளிக்கின்றார். இங்கு நாம்
கவனிக்கவேண்டியது முடக்குவாதமுற்றவரைச் சுமந்துகொண்டு வந்த
நால்வரின் செயலைத்தான். "இயேசுவைச் சுற்றி மக்கள்கூட்டம் அதிகமாக
இருக்கின்றதே... அதனால் முடுக்குவாதமுற்றவரை இயேசுவுக்கு
முன்பாகக் கொண்டுசெல்வது மிகக் கடினமாயிற்றே... இன்னொரு நாள்
பார்த்துக்கொள்ளலாமே..." என்று அவர்கள் இருந்துவிடவில்லை.
மாறாக, "முடக்குவற்றவரை இயேசுவிடம் கொண்டுசென்றுவிட்டால், அவர்
எப்படியும் நலம்தருவார்" என்ற நம்பிக்கையில், முடக்குவாதமுற்றவரை
இயேசுவிடம் கொண்டுசெல்கின்றார்கள். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக்
கண்டு, முடக்குவாதமுற்றவருக்கு நலமளிக்கின்றார்.
இங்கு நாம் இன்னோர் உண்மையையும் நம்முடைய மனத்தில் பதிய
வைத்துக் கொள்வது நல்லது. அது என்னவெனில், நம்முடைய நம்பிக்கையால்
மட்டுமல்ல, நம்மோடு இருப்பவர்கள் இயேசுவின்மீது கொள்ளும் நம்பிக்கையாலும்
நாம் இறையருளைப் பெறலாம் என்பதாகும். முடக்குவாதமுற்றவர் அவருடைய
நம்பிக்கையால் அல்ல, அவரைச் சுமந்து வந்த நால்வரின் நம்பிக்கையினால்
நலம்பெற்றார். எப்படி அகுஸ்தினாரின் அன்னை மோனிக்கா ஆண்டவர்மீது
நம்பிக்கை வைத்து, அகுஸ்தினாருக்காகத் தொடர்ந்து மன்றாடியதால்,
அவர் மனம்மாறினாரோ, அதுபோன்று நால்வரின் நம்பிக்கையால் முடக்குவாதமுற்றவர்
நலமடைகின்றார்.
சில சமயங்களில் நம்முடைய நம்பிக்கை மட்டுமல்ல, நம்மோடு இருப்பவர்கள்
இயேசுவின்மீது கொள்ளும் நம்பிக்கையும் நமக்குத் தேவையான ஒன்றாக
இருக்கின்றது.
பாவ மன்னிப்பின் வழியாக நலமளித்த இயேசு
இயேசு, மற்ற எல்லாருக்கும் நலமளித்துபோல் முடக்குவாதமுற்றவருக்கு
நலமளிக்கவில்லை. மாறாக, "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்று
சொல்லி நலமளிக்கின்றார். இயேசு ஏன் இவ்வாறு சொல்லி முடக்குவாதமுற்றவருக்கு
நலமளிக்கவேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது. இயேசு
வாழ்ந்த காலத்தில் ஒருவருக்கு வருகின்ற நோய், அவர் செய்த பாவத்தினால்
வருகின்றது என்ற எண்ணம் இருந்தது (யோவா 9: 2-3). இதனாலேயே இயேசு
அவர்களுடைய எண்ணப்போக்கிலேயே முடக்குவாதமுற்றவரின் பாவங்களை மன்னித்து
அவருக்கு நலமளிக்கின்றார். இயேசு இவ்வாறு சொன்னது அங்கிருந்த
மறைநூல் அறிஞர்கள் நடுவில் சலசலப்பை உண்டாக்கினாலும், இயேசுவுக்கு
பாவ மன்னிப்பு அளிக்கின்ற அதிகாரம் உட்பட எல்லா அதிகாரமும் இருந்தது
என்பதுதான் உண்மை (மத் 28: 18). ஆகையால், நமக்கு எல்லா நலன்களையும்
அளிக்கும் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு வாழ முயற்சி
செய்வோம்.
சிந்தனை
"நம்புகிறவருக்கு எல்லா நிகழும்" (மாற்கு 9: 23) என்பார் இயேசு.
ஆகவே, இயேசுவின்மீது நம்பிக்கை வைப்போம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|