Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   16  ஜனவரி 2020  
    பொதுக்காலம் முதல் வாரம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 ++கடவுளின் பேழை பிடிபட்டது. இஸ்ரயேலர் தோற்கடிக்கப்பட்டனர்.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 4: 1-11

அந்நாள்களில் இஸ்ரயேலர் பெலிஸ்தியருக்கு எதிராகப் போர்தொடுத்து, எபனேசரில் பாளையம் இறங்கினர், பெலிஸ்தியரும் அபேக்கில் பாளையம் இறங்கினர். பெலிஸ்தியர் இஸ்ரயேலருக்கு எதிராக அணிவகுத்துச் செல்ல, போர் மூண்டது. பெலிஸ்தியர் இஸ்ரயேலரை முறியடித்து அவர்களுள் நாலாயிரம் பேரைப் போர்க்களத்தில் வெட்டி வீழ்த்தினர். வீரர்கள் பாளையத்திற்குத் திரும்பியபோது, இஸ்ரயேலின் பெரியோர் கூறியது: "இன்று பெலிஸ்தியரிடம் நம்மை ஆண்டவர் தோல்வியுறச் செய்தது ஏன்? ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை சீலோவினின்று நம்மிடையே கொண்டு வருவோம். அது நம்மிடையே வந்தால், நம் எதிரிகள் கையினின்று நம்மைக் காக்கும்". ஆகவே வீரர்கள் சீலோவுக்கு ஆள்களை அனுப்பி, கெருபுகளின்மீது வீற்றிருக்கும் படைகளின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையை அங்கிருந்து கொண்டுவரச் செய்தனர். ஏலியின் இரு புதல்வர்களான ஒப்னியும் பினகாசும் கடவுளின் உடன்படிக்கைப் பேழையோடு இருந்தனர். ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை பாளையத்திற்குள் வந்ததும், இஸ்ரயேலர் அனைவரும் நிலமே அதிரும் அளவிற்குப் பெரும் ஆரவாரம் செய்தனர். இந்த ஆரவாரத்தைக் கேட்டதும் பெலிஸ்தியர், "எபிரேயரின் பாளையத்தில் இப்பெரும் ஆரவாரமும் கூச்சலும் ஏன்?" என்று வினவினர். ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை பாளையத்தினுள் வந்துவிட்டது என்று அறிந்து கொண்டனர். அப்போது பெலிஸ்தியர் பேரச்சம் கொண்டு, "கடவுள் பாளையத்திற்குள் வந்துவிட்டார். நமக்கு ஐயோ கேடு! இதற்கு முன்பு இப்படி நேர்ந்ததே இல்லை! நமக்கு ஐயோ கேடு! இத்துணை வலிமைமிகு கடவுளிடமிருந்து நம்மைக் காப்பவர் யார்? இக்கடவுள்தான் எகிப்தியரைப் பாலைநிலத்தில் பல்வேறு வாதைகளால் துன்புறுத்தியவர்! பெலிஸ்தியரே! துணிவு கொள்ளுங்கள்! ஆண்மையோடு இருங்கள்! எபிரேயர் உங்களுக்கு அடிமைகளாக இருந்தது போல, நீங்களும் எபிரேயருக்கு அடிமைகளாக ஆகாதபடிக்கு ஆண்மையோடு போரிடுங்கள்!" என்றனர். பெலிஸ்தியர் மீண்டும் போர்தொடுத்தனர். இஸ்ரயேலர் தோல்வியுற, அவர்களுள் ஒவ்வொருவனும் தன் கூடாரத்திற்குத் தப்பியோடினான். அன்று மாபெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இஸ்ரயேலருள் முப்பதாயிரம் காலாட்படையினர் மாண்டனர். கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டது. ஏலியின் இரு புதல்வர்கள் ஒப்னியும் பினகாசும் மாண்டனர்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 44: 10-11. 14-15. 24-25 (பல்லவி: ) Mp3
=================================================================================
பல்லவி: உமது பேரன்பை முன்னிட்டு ஆண்டவரே, எங்களை மீட்டருளும்.

9 இப்போது நீர் எங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டீர்; இழிவுபடுத்திவிட்டீர். எங்கள் படைகளுடன் நீர் செல்லாதிருக்கின்றீர்.
10 எங்கள் பகைவருக்கு நாங்கள் புறங்காட்டி ஓடும்படி செய்தீர். எங்களைப் பகைப்போர் எங்களைக் கொள்ளையிட்டனர். பல்லவி
13 எங்களை அடுத்து வாழ்வோரின் பழிப்புக்கு எங்களை ஆளாக்கினீர்; எங்கள் சுற்றுப்புறத்தாரின் ஏளனத்துக்கும் இகழ்ச்சிக்கும் எங்களை உள்ளாக்கினீர்.
14 வேற்றினத்தாரிடையே எங்களை ஒரு பழிச்சொல்லாக்கினீர்; ஏனைய மக்கள் எங்களைப் பார்த்துத் தலையசைத்து நகைக்கின்றனர். பல்லவி
23 என் தலைவா! கிளர்ந்தெழும், ஏன் உறங்குகின்றீர்? விழித்தெழும்; எங்களை ஒருபோதும் ஒதுக்கித் தள்ளிவிடாதேயும்.
24 நீர் உமது முகத்தை ஏன் மறைத்துக்கொள்கின்றீர்? எங்கள் சிறுமையையும் துன்பத்தையும் ஏன் மறந்துவிடுகின்றீர்? பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 (மத் 4: 23)

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தொழுநோய் அவரை விட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 40-45

ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, "நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார். பிறகு அவரிடம், "இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்" என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பிவிட்டார். ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கி வந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்துகொண்டிருந்தார்கள்.


ஆண்டவரின் அருள்வாக்கு.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 1 சாமுவேல் 4: 1-11

இஸ்ரயேல் மக்களின் கீழ்ப்படியாமையும் அதனால் நேர்ந்த அழிவும்

நிகழ்வு

அரசர் ஒருவர் இருந்தார். அவர் தன்னுடைய படைவீரரர்களைத் திரட்டிக்கொண்டு எதிரி நாட்டின்மீது போர்தொடுக்கச் சென்றார். எல்லாரும் எதிரி நாட்டுக்கு அருகில் சென்ற நேரம் இருட்டிவிட்டபடியால், ஒவ்வொருவரும் தனித்தனிக் கூடாரம் அமைத்து அதில் ஓய்வெடுக்கத் தொடங்கினார்கள்.

அப்பொழுது அரசர் அவர்களிடம், "வீரர்களே! யாரும் தங்களுடைய கூடாரத்தில் விளக்கையோ, தீப்பந்தையோ ஏற்றி வைக்கவேண்டாம். ஒருவேளை நீங்கள் உங்களுடைய கூடாரத்தில் விளக்கையோ அல்லது தீப்பந்தத்தையோ ஏற்றி வைத்தால், எதிரி நாட்டவருக்கு நாம் இங்கு இருப்பது தெரிந்துவிடும். பின்னர் அதுவே நமக்கு வினையாகிவிடும்" என்றார். வீரர்களும் சரியென்று சொல்லிவிட்டு ஓய்வெடுக்கத் தொடங்கினார்கள்.

இதற்குப் பின்பு, அரசர் தான் சொன்னதற்குப் படைவீரர்கள் எல்லாரும் கீழ்ப்படிந்து நடந்திருக்கின்றார்களா என்று பார்ப்பதற்காக ஒவ்வொரு கூடாரத்தையும் பார்க்கத் தொடங்கினார். ஏறக்குறைய எல்லாக் கூடாரத்திலும் தீப்பந்தங்கள் அணைக்கப்பட்டிருந்தன. ஒரே ஒரு கூடாரத்தில் மட்டும் தீப்பந்தம் எரிந்துகொண்டிருந்தது. இதைப் பார்த்த அரசருக்கு அதிர்ச்சியாக இருந்தது. "நாம் சொன்னதற்குக் கீழ்ப்படியாமல், தீப்பந்தத்தை அணைக்காமல் வைத்திருக்கின்றாரே...! இது யாராக இருக்கும்" என்று அவர் உள்ளே குனிந்து பார்த்தார். அங்கு படைத்தளபதி இருந்தார். தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் எதையோ எழுதிக் கொண்டார்.

அரசர் அவரை அந்நிலையில் பார்த்தபொழுது அவருக்குக் கடுஞ்சினம் வந்தது. "தீப்பந்தத்தை அணைத்துவிடுங்கள் என்று சொல்லியும் அதை அணைக்காமல் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்...?"என்று அரசர் கேட்டபொழுது, படைத்தளபதி, "என்னுடைய மனைவிக்கு ஓலை எழுதிக்கொண்டிருக்கின்றேன்" என்றார். "அப்படியானால், நாளைய நாளில் நான் கொல்லப்படுவேன் என்பதையும் அதில் சேர்த்து எழுதுங்கள்" என்றார் அரசர். படைத்தளபதி தான் செய்த தவற்றுக்காக அரசரிடம் எவ்வளவோ மன்னிப்புக் கேட்டார். அரசர் அவரிடம், "உன்னைப் போன்ற கீழ்ப்படிதல் இல்லாத வீரர்கள் எனக்குத் தேவையில்லை" என்று சொல்லி, மறுநாள் அவரைக் கொன்றுபோட்டார்.

கீழ்ப்படியாமைக்கு சாவுதான் தண்டனையாகக் கிடைக்கும் என்ற உண்மையை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய முதல் வாசகத்தில் கீழ்ப்படியாமல் நடந்த இஸ்ரயேல் மக்களைக் குறித்து வாசிக்கின்றோம். அவர்கள் கீழ்ப்படியாமல் நடந்ததால், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கீழ்ப்படியாமையால் முதற்கட்டமாக நாலாயிரம் இஸ்ரயேலர் கொல்லப்படுதல்

ஆண்டவராகிய கடவுள் தான் வாக்களித்தது போன்று, இஸ்ரயேல் மக்களுக்குக் கானான் நாட்டை வழங்கினார். அதற்கு நன்றியாக அவர்கள் ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து நடந்திருக்கவேண்டும்; ஆனால், அவர்கள் இறைவனுக்குக் கீழ்ப்படியாமல் அல்லது அவரை வழிபடாமல், பிற தெய்வத்தை வழிபட்டு வந்தார்கள். இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் இஸ்ரயேல் மக்கள் கானான் நாட்டில் குடியமர்ந்ததைத் தாங்கிக்கொள்ள முடியாத பெலிஸ்தியர்கள் அவர்கள்மீது தாக்குதல் நடத்த தக்க நேரத்திற்காகக் காத்திருந்தார்கள். எல்லாம் கனிந்து வந்த வேளையில் பெலிஸ்தியர்கள் இஸ்ரயேலர்மீது தாக்குதல் நடத்தி நான்காயிரம் பேரைக் கொண்டுபோட்டனர்.

பெலிஸ்தியர்கள் இஸ்ரயேலர் மீது நடத்திய தாக்குதலை ஒரு சாதாரண நிகழ்வாகக் எடுத்துக்கொள்ள முடியாது. அதனை இஸ்ரயேலர் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்காததற்குத் தண்டனையாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.

தூய்மையாக இல்லாததால் முப்பதாயிரம் இஸ்ரயேலர் கொள்ளப்படல்

பெலிஸ்தியர்களால் நான்காயிரம் இஸ்ரயேலர் கொல்லப்பட்டதைக் கேள்விப்பட்ட இஸ்ரயேலின் பெரியோர், தங்களுடைய கீழ்ப்படியாமையால்தான் இப்படியோர் அழிவு நேர்ந்தது என்ன எண்ணாமல், உடன்படிக்கைப் பேழை தங்களோடு இல்லாததால்தான் அழிவு நேரந்தது எனத் தவறாக எண்ணிக்கொண்டு, கடவுளின் அரியணையான (விப 25: 10-22) உடன்படிக்கைப் பேழையை சீலோவிலிருந்து தங்களிடம் கொண்டு வருமாறு ஆள்களை அனுப்பி வைக்கின்றார்கள்.

இதில் நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான செய்தி, இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய வசதிக்காக உடன்படிக்கையைப் பேழையைப் பயன்படுத்தியதுதான். போரில் வெற்றிக்கொள்வதற்கு அவர்கள் ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து நடந்திருக்கவேண்டும் அல்லது போரின்பொழுது எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதன்படி நடந்திருக்க வேண்டும் (இச 30) மட்டுமல்லாமல், உடன்படிக்கையைத் தூக்கி வந்தவர்கள் தூய்மையாக இருந்திருக்கவேண்டும். ஆனால், உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிவந்தவர்களோ ஏலியின் இரு மகன்களான ஒப்னியும் பினகாசும். இவர்கள் இருவரும் தூய்மையற்றவர்கள். அதனால் பெலிஸ்தியரோடு இரண்டாம் முறையாக நடந்த போரில் இஸ்ரயேலரில் முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள்.

"தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமான நான் தூயவர்" (லேவி 19: 2) என்று ஆண்டவர் சொன்னதற்கேற்ப இஸ்ரயேல் மக்கள் தூய்மையாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் தூய்மையாக இல்லாமல் இருந்ததால், எதிரிகளிடமிருந்து அழிவைச் சந்தித்தார்கள்.

ஆகையால், நாம் இஸ்ரயேல் மக்களைப் போன்று இல்லாமல், இறைவனின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவருக்கு முன்பாகத் தூய்மையாக இருக்கும் மக்களாக இருப்போம்.

சிந்தனை

"ஒருவர் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படியாதிருப்பானால், கடவுள் அவருடைய வேண்டுதலை அருவருத்துத் தள்ளுவார்" (நீமொ 28:9) என்கின்றது நீதிமொழிகள் நூல், ஆகையால், நாம் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து, அவருக்கு முன்பாக தூய்மையானவர்களாக இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மாற்கு 1: 40-45

"நீர் விரும்பினால்..."

நிகழ்வு

இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த மறைச்சாட்சியான கன்டர்பரி நகரப் புனித தோமாவின் கல்லறைக்குப் பார்வையற்றவர் ஒருவர் வந்து, தனக்குப் பார்வை கிடைக்குமாறு தொடர்ந்து மன்றாடி வந்தார். அவருடைய இடைவிடாத அல்லது தொடர் மன்றாட்டின் பயனாக அவருக்குப் பார்வை கிடைத்தது. அப்பொழுது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர் தனக்குப் பார்வை கிடைத்த பின்பு, உலகின் அழகைக் கண்டு இரசித்தார். அது தந்த மகிழ்ச்சியில் நாளும் திளைத்திருந்தார்.

இப்படியிருக்கையில், அவருக்கோர் எண்ணம் ஏற்பட்டது. அது என்ன என்னமெனில், "புனித தோமா வழியாக இறைவனிடம் மன்றாடுகின்றபொழுது "உனக்குத் திருவுளமானால் எனக்குப் பார்வை கிடைக்கட்டும்" என்று மன்றாடவில்லை. அதனால் மீண்டுமாக புனித தோமாவின் கல்லறைக்குச் சென்று "உமக்குத் திருவுளமானால் எனக்குப் பார்வை கிடைக்கட்டும்" என்ற வார்த்தைகளைச் சொல்லி மன்றாடுவோம்" என்று முடிவுசெய்துகொண்டார்.

இதன்படி அவர் கன்டர்பரி நகரப் புனித தோமாவின் கல்லறைக்குச் சென்று, "உமக்குத் திருவுளமானால், எனக்குப் பார்வை கிடைக்கட்டும்" என்று உருக்கமாக மான்றாடினார். அவர் இவ்வாறு புனித தோமா வழியாக இறைவனிடம் மன்றாடிய சிறிதுநேரத்தில் அவருடைய பார்வை போனது. அப்பொழுது அவர், "நான் கண்பார்வையோடு இருந்தால், அதன்மூலம் பல பாவங்கள் செய்யக்கூடும் (மத் 5:29) என்பதால்தான் கடவுள் என்னுடைய பார்வையை எடுத்துக்கொண்டுவிட்டார் போலும்" என்று நினைத்துக்கொண்டு, இறைவனின் திருவுளம் நிறைவேறியதற்காக அவருக்கு நன்றி செலுத்திவிட்டு, அங்கிருந்து மெல்ல நடந்து சென்றார்.

இறைவனின் திருவுளத்தின்படியே தான் பார்வை பெறவேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்ட இந்த நிகழ்வில் வருகின்ற பார்வையற்ற மனிதர் நம்முடைய கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார். நற்செய்தியில் இறைவனின் திருவுளத்தின்படி நலம்பெற்ற தொழுநோயாளர் ஒருவரைக் குறித்து வாசிக்கின்றோம். அவர் இயேசுவிடமிருந்து நலம்பெறக் காரணமாக இருந்தது என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இறைவனின் திருவுளம் நடக்கவேண்டும் என்று விரும்பிய தொழுநோயாளர்

நற்செய்தியில் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, "நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்று முழந்தாள் படியிட்டு வேண்டுகின்றார். தொழுநோயாளரின் இச்செயலில் மூன்று முக்கியமான செய்திகள் உள்ளன. ஒன்று, அவர் இறைவனின் திருவுளம் நடக்கவேண்டும் என்று விரும்பியது. இரண்டு, இயேசுவிடம் சென்றால், நலம்கிடைக்கும் என்று நம்பிக்கையோடு வந்தது. மூன்றாவது, இறைவனுக்கு முன்பாக, தான் ஒன்றுமில்லை என்று முழந்தாள் படியிட்டு இயேசுவிடம் வேண்டியது. இந்த மூன்று செயல்களும் நற்செய்தியில் வருகின்ற இந்தத் தொழுநோயாளரை சற்று வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றன.

தொழுநோயால் பாதிக்கப்பட்டவரைத் தீட்டுப்பட்டவர்; அதனால் அவர் யாருடைய கண்ணுக்கும் தெரியாமல், ஊருக்கு வெளியே இருக்கவேண்டும் (லேவி 13,14) என்றிருந்த யூத சமூகத்தின் நற்செய்தியில் வருகின்ற தொழுநோயாளர், இயேசுவிடம் துணிவுடனும் நம்பிக்கையுடன் மிகவும் தாழ்ச்சியுடனும் வந்து இயேசுவிடமிருந்து நலம்பெற்றது உண்மையில் நம்முடைய பாராட்டிற்கு உரியதாக இருக்கின்றது.

பரிவோடு செயல்பட்ட இயேசு

யூத சமூகத்தால் தீட்டானவர்கள் என்று கருதப்பட்ட தொழுநோயாளரைப் பார்ப்பதே பெரிய செயல். மேலும் அவர்களைத் தொடுபவர் யாவரும் தீட்டுப்படுவர் (லேவி 5:3; 13: 1-16; எண் 5:2) என்று மோசேயின் சட்டம் சொல்லியிருந்த போதிலும், ஆண்டவர் இயேசு, தன்னை நோக்கி நம்பிக்கையோடும் துணிவோடும் மிகுந்த தாழ்ச்சியோடும் வந்த தொழுநோயாளர்மீது பரிவுகொண்டு, அவரைத் தொட்டு நலப்படுத்துகின்றார். இயேசு, மக்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றியெல்லாம் நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல், பரிவுகொண்டு தொழுநோயாளரை நலப்படுத்துகின்றார். இவ்வாறு இயேசு தன்னை நோக்கி நம்பிக்கையோடு வருகின்றவர்களுக்கு நலம் நல்கி, அவர்கள்மீது பரிவுகொள்ளும் இறைவனாக விளங்குகின்றார்.

இன்று நாம் வாழ்கின்ற சூழ்நிலையில் எத்தனையோ நோயாளர்களையும் வயது முதிர்ந்தவர்களையும் மாற்றுத் திறனாளிகளையும் காண்கின்றோம். இவர்களிடம் நாம் பரிவோடு நடந்துகொள்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் இவர்களை இரண்டாம் தரக்குடிகளைப் போன்று நடத்துகின்றோம் என்பதுதான் வேதனை கலந்த உண்மை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் இயேசுவைப் போன்று பரிவுள்ளம் கொண்டவர்களாக வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனை

"ஆண்டவர்! ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்" (விப 34: 6) என்கிறது இறைவார்த்தை. எனவே, நாம் இயேசுவைப் போன்று பரிவுள்ளம் கொண்டவர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!