Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   15  ஜனவரி 2020  
    பொதுக்காலம் முதல் வாரம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்

சாமுவேலின் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 1-10, 19-20

அந்நாள்களில் சிறுவன் சாமுவேல் ஏலியின் மேற்பார்வையில் ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தான். அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்தது. காட்சியும் அவ்வளவாக இல்லை. அப்போது ஒரு நாள் ஏலி தம் உறைவிடத்தில் படுத்திருந்தார். கண்பார்வை மங்கிவிட்டதால் அவரால் பார்க்க முடியவில்லை. கடவுளின் விளக்கு இன்னும் அணையவில்லை. கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தான். அப்பொழுது ஆண்டவர், "சாமுவேல்"என்று அழைத்தார். அதற்கு அவன், "இதோ! அடியேன்" என்று சொல்லி, ஏலியிடம் ஓடி, "இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?" என்று கேட்டான். அதற்கு அவர், "நான் அழைக்கவில்லை. திரும்பிச் சென்று படுத்துக்கொள்" என்றார். அவனும் சென்று படுத்துக்கொண்டான். ஆண்டவர் மீண்டும் "சாமுவேல்"என்று அழைக்க, அவன் எழுந்து ஏலியிடம் சென்று, "இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?" என்று கேட்டான். அவரோ, "நான் அழைக்கவில்லை மகனே! சென்று படுத்துக் கொள்" என்றார். சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை. அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. மூன்றாம் முறையாக ஆண்டவர், "சாமுவேல்"என்று அழைத்தார். அவன் எழுந்து ஏலியிடம் சென்று, "இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?" என்று கேட்டான். அப்பொழுது சிறுவனை ஆண்டவர்தாம் அழைத்தார் என்று ஏலி தெரிந்துகொண்டார். பின்பு ஏலி சாமுவேலை நோக்கி, "சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ, "ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்"என்று பதில் சொல்" என்றார். சாமுவேலும் தன் இடத்திற்குச் சென்று படுத்துக்கொண்டான். அப்போது ஆண்டவர் வந்து நின்று, "சாமுவேல், சாமுவேல்"என்று முன்புபோல் அழைத்தார். அதற்குச் சாமுவேல், "பேசும், உம் அடியான் கேட்கிறேன்"என்று மறுமொழி கூறினான். சாமுவேல் வளர்ந்தான்; ஆண்டவர் அவனோடு இருந்தார்; சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை. சாமுவேல் ஆண்டவரின் இறைவாக்கினராக நியமிக்கப்பட்டுவிட்டார் என்று, தாண் முதல் பெயேர்செபா வரையிலும் அனைத்து இஸ்ரயேலரும் அறிந்து கொண்டனர்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 40: 2,5. 7-8a. 8b-9. 10 (பல்லவி: 7a,8a) Mp3
=================================================================================
பல்லவி: உமது திருவுளம் நிறைவேற்ற இதோ வருகின்றேன் ஆண்டவரே!
1
நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.
4
ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்; அத்தகையோர் சிலைகளை நோக்காதவர்; பொய்யானவற்றைச் சாராதவர். - பல்லவி

6
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.
7a
எனவே, "இதோ வருகின்றேன்."- பல்லவி

7b
என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது;
8
என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். - பல்லவி

9
என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 10: 27)
அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசு பல்வேறு பிணிகளால் வருந்தியவரைக் குணப்படுத்தினார்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-39

இயேசுவும் சீடர்களும் தொழுகைக்கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார். மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டு வந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை. இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், "எல்லாரும் உம்மைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்கள். அதற்கு அவர், "நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்" என்று சொன்னார். பின்பு அவர் கலிலேய நாடு முழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றிப் பேய்களை ஓட்டி வந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 1 சாமுவேல் 3: 1-10, 19-20


சாமுவேலைத் தன் பணிக்கென அழைத்த ஆண்டவர்

நிகழ்வு

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தோன்றிய மிகப்பெரிய மறைப்பணியாளர் ஜான் ஹென்றி ஜோவேட். இவர் எப்படிக் கடவுளால் அழைக்கப்பட்டார் என்பதைச் சொல்லக்கூடிய நிகழ்வு இது.

ஜோவேட்டை அவருடைய தந்தை ஒரு பெரிய வழக்குரைஞராக உருவாக்க நினைத்தார். அதனால் அவர் ஜோவேட் பள்ளிக்கல்வியை முடித்ததும், சட்டம் படிக்க சட்டக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தார். ஜோவேட்டும் தன்னுடைய தந்தையின் விருப்பத்திற்கு இணங்கி, சட்டம் பயில, சட்டக் கல்லூரிக்குச் சென்றார். போகிற வழியில் ஜோவேட், தனக்கு ஞாயிறு மறைக்கல்வி சொல்லிக்கொடுத்த மறைக்கல்வி ஆசிரியரைச் சந்தித்தார். அவர் ஜோவேட்டிடம், "தம்பி! எங்கே சென்றுகொண்டிருக்கின்றாய்?" என்று கேட்டார். அதற்கு ஜோவேட், "நான் சட்டம் படிப்பதற்காகச் சட்டகல்லூரி சென்றுகொண்டிருக்கின்றேன்?" என்றார். "என்னது...! சட்டம் படிக்கச் சொல்கின்றாயா...? எதிர்காலத்தில் நீ ஒரு பெரிய மறைப்பணியாளராக ஆவாய் என்றெல்லவா நான் விரும்பினேன்... அதற்காக நான் ஒவ்வொருநாளும் இறைவனிடம் வேண்டினேனே..! நீயோ இப்படிச் சட்டம் படித்து வழக்குரைஞராக ஆகப் போவதாகச் சொல்கிறாயே....!" என்று வருத்தத்தோடு சொல்லிவிட்டு, அங்கிருந்து கடந்து சென்றுவிட்டார்.

அந்த மறைக்கல்வி ஆசிரியர் சொன்ன சொற்கள் ஜோவேட்டின் உள்ளத்தில் குழப்பத்தை ஏற்படுத்தின. அதனால் அவர் சட்டக் கல்லூரிக்குச் செல்லாமல், வீட்டுக்குத் திரும்பி வந்து, அதைக் குறித்து யோசிக்கத் தொடங்கினார். அன்று இரவு அவர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் இயேசு தோன்றி, "என் அன்பு மகனே ஜோவேட்! நீ என்னுடைய பணியைச் செய்யத் தயாரா?" என்று கேட்டுவிட்டு மறைந்துபோனார். தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த ஜோவேட், "ஆண்டவர் தன்னுடைய பணியைச் செய்ய என்னை அழைக்கிறார். இதற்கு மேலும் நான் கால தாமதம் செய்யக்கூடாது"என்று முடிவுசெய்துகொண்டு, தன் தந்தையின் அனுமதி பெற்று, உரிய கல்வி கற்று, ஆண்டவருடைய பணியை செய்யத் தொடங்கினார்.

ஜோவேட் மறைப்பணி செய்த மொத்த ஆண்டுகள் 35. அந்த 35 ஆண்டுகளிலும் ஆண்டவர் அவரோடு இருந்து, அவரை வழிநடத்தினார்.

ஆண்டவராகிய கடவுள் ஜோவேட்டைத் தன்னுடைய பணிக்காக அழைத்தது போன்று, நம் ஒவ்வொருவரையும் அவருடைய பணியைச் செய்ய அழைக்கின்றார். நாம் அவருடைய பணியைச் செய்தத் தயாரா என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது. இன்றைய முதல் வாசகத்தில் சாமுவேலின் அழைப்பைக் குறித்து வாசிக்கின்றோம். சாமுவேலின் அழைப்பு நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்த காலமது

சாமுவேல் முதல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள், குரு எலியின் மேற்பார்வையில் ஊழியம் செய்துவந்த சாமுவேலின் அழைப்பைக் குறித்து வாசிக்கின்றோம். சாமுவேலின் அழைப்பைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பது முன், சாமுவேல் அழைக்கப்பட்ட காலம் எத்தகையது எனத் தெரிந்துகொள்வது நல்லது.

சாமுவேல் அழைக்கப்பட்ட காலத்தில் ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்தது; காட்சியும் அவ்வளவாக இல்லை. இதற்கு முக்கியமான காரணம் ஆண்டவரின் திரு இல்லத்தில் ஊழியம் செய்து வந்த குருக்கள் தூய்மையில்லாமலும் மக்கள் கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாமலும் இருந்தார்கள். இதனாலேயே அவர்களுக்கு ஆண்டவரின் வார்த்தையும் அவருடைய காட்சியும் கிடைக்கவில்லை (திபா 74: 9). இன்னும் சொல்லப்போனால், ஆண்டவர் இப்படி எதுவும் பேசாமல் இருந்தது, அவர் மக்களுக்குக் கொடுத்த தண்டனை என்றுதான் சொல்லவேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் கடவுள் சாமுவேலை அழைக்கின்றார்.

சாமுவேலை அழைத்த ஆண்டவர்

கடவுள் சாமுவேலை நான்கு முறை அழைக்கின்றார்; ஆனால், நான்காம் முறைதான் தன்னை அழைப்பது கடவுள் என சாமுவேல் உணர்ந்துகொள்கின்றார். கடவுள் சாமுவேலை அழைக்கும்பொழுது அவருக்கு வயது பன்னிரண்டு. கடவுள் சாமுவேலை அழைத்ததும் அவர், "ஆண்டவரே பேசும். உம் அடியான் கேட்கின்றேன்" என்கின்றார். இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருடைய வார்த்தைகளைக் கேட்காமல், அதன்படி நடவாமல் இருந்தபொழுது, சாமுவேல் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்தார். அதனால் ஆண்டவர் அவரோடு இருந்து, ஓர் இறைவாக்கினராக அவர் பேசிய வார்த்தைகளைத் தரையில் விழாமல் செய்தார்.

கடவுள் சாமுவேலிடம் பேசியபொழுது, சாமுவேல் அதற்குக் கீழ்ப்படிந்து நடந்ததால் கடவுள் அவரோடு இருந்தது போன்று, நாமும் கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், கடவுள் நம்மோடு இருப்பார் என்பது உறுதி. எனவே, நாம் கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, அவர் பணிசெய்யத் தயாராவோம்; அவருடைய வழியில் நடப்போம்.

சிந்தனை

"இயேசு அவர்களை அழைத்தார்... அவர்கள் அவர் பின் சென்றார்கள்" (மாற் 1:20) என்கின்றது இறைவார்த்தை. ஆகையால், நாம் இறைவன் நம்மை அழைக்கின்றபொழுது, அவருடைய அழைப்பிற்குச் செவிமடுத்து, அவர்பின் செல்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மாற்கு 1: 29-39

"பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் நலப்படுத்தினார்"


நிகழ்வு

உலகமெங்கிலும் கிளைகளைக் கொண்ட மிகவும் புகழ்பெற்ற ஒரு மருந்தகம், மயோ மருந்தகம் (Mayo Clinic) ஆகும். இதனுடைய நிறுவனர் அமெரிக்காவைச் சார்ந்த மருத்துவர். வில் மயோ என்பவர் ஆவார். இவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வு இது.

ஒருமுறை மருத்துவர் வில் மயோ இருந்த பகுதியில் புதுவகையான தொற்றுநோய் பரவியது. இந்த நோயால் தாக்கப்பட்ட பலர் மயோவின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட பலரும் செத்து மடிந்தார்கள். இதனால் இவர் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றார். இந்த நேரத்தில் மயோவின் மருத்துவமனைக்குக் குருவானவர் ஒருவர் வந்தார். அவர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவர்மீதும் கைகளை வைத்து உருக்கமாக வேண்டிவிட்டுச் சென்றார். ஆச்சரியம் என்னவென்றால், குருவானவர் கைகளை வைத்து, வேண்டிய அத்தனைப் பேரும் நலமடைந்தார்கள்.

பின்னாளில் இது குறித்துப் பேசிய மருத்துவர் வில் மயோ, "எப்படிப்பட்ட நோயையும் என்னால் நலப்படுத்த முடியும் என்று நம்பியிருந்தேன். இந்த நிகழ்விற்குப் பிறகு கடவுளுக்கும் அவருடைய ஆற்றலுக்கும் முன்பாக நான் ஒன்றுமில்லை என்பதை உணர்ந்தேன்" என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் வருகின்ற கடவுளின் அடியவராம் குருவானவரின் மூலம் பலர் நலமடைந்ததுபோல், நற்செய்தியில் இயேசுவால் பலர் நலமடைவதைக் குறித்து வாசிக்கின்றோம். இந்த நிகழ்வு நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

சீமோனின் மாமியாரை நலப்படுத்திய இயேசு

தொழுகைக்கூடத்தை விட்டு வெளியே வருகின்ற இயேசு சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குச் செல்கின்றார். அங்கு காய்ச்சலாய்க் கிடந்த சீமோனின் மாமியாரின் கையைப் பிடித்துத் தூக்கி, நலப்படுத்துகின்றார்.

கப்பர்நாகும் வருகின்றபொழுதெல்லாம் சீமோனின் வீட்டில் வந்து தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்த இயேசு (மாற்கு 2:1, 3:20, 9:33, 10:10), இன்றைய நற்செய்தியிலும் சீமோனின் வீட்டிற்கு வருகின்றார். அவர் அங்கு வருகின்றபொழுது சீமோனின் மாமியார் காய்ச்சலாய்க் கிடப்பதைக் காண்கின்றார். உடனே அவர் அவருடைய கையைப் பிடித்துத் தூக்கி அவரை நலப்படுத்துகின்றார். அவரும் அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்குகின்றார்.

இங்கு நாம் இரண்டு செய்திகளை நம்முடைய கருத்தில் கொள்வது நல்லது. ஒன்று, இயேசு சீமோனின் மாமியாரைத் தொட்டதால் அல்லது கையைப் பிடித்துப் தூக்கியதால் நலம்பெற்றது. தூய ஆவியாரின் வல்லமையைப் பெற்றிருந்த இயேசு (திப 10:38), தொட்டதெல்லாம் துலங்கியது. அந்த வகையால் இயேசு சீமோன் மாமியாரைத் தொட்டதால் அல்லது கையைப்பிடித்துத் தூக்கியதால் அவர் நலம்பெற்றதில் வியப்பேதும் இல்லை. இரண்டு. இயேசுவிடமிருந்து நலம்பெற்ற சீமோனின் மாமியார் அவர்களுக்குப் பணிவிடை செய்தது. சீமோனின் மாமியார் இயேசுவிடமிருந்து நலம்பெற்றதும், அதை அப்படியே மறந்துவிடவில்லை. இன்றைக்குப் பலர் கடவுளிடமிருந்து ஏராளமான ஆசியைப் பெற்றுவிட்டு, அதனை அப்படியே மறந்துபோய்விடுகின்றவர்களாக இருக்கின்றார்கள். சீமோனின் மாமியார் இப்படிப்பட்ட மனிதர்களப் போன்று இல்லாமல், பெற்றுக்கொண்ட நன்மைக்கு நன்றியுள்ளவராக, இயேசுவுக்கும் அவரோடு இருந்தவர்களுக்கும் பணிவிடை செய்கின்றார்.

பல்வேறு பிணிகளால் வருந்தியவர்களை நலப்படுத்திய இயேசு

இயேசு சீமோனின் மாமியாரை நலப்படுத்திய பின்பு, கதிரவன் மறையும் நேரத்தில் வீட்டு முன்பு கூடியிருந்த பல்வேறு பிணிகளால் வருந்திய பலரைக் குணப்படுத்துகின்றார்; பேய்களை ஓட்டுகின்றார். இயேசு சீமோன் மாமியாரைக் நலப்படுத்தியது ஓர் ஓய்வுநாளாகவே இருந்திருக்கவேண்டும். ஏனென்றால், சீமோனின் வீட்டிற்கு முன்பாகக் கதிரவன் மறையும் நேரத்தில் கூடியிருந்தவர்கள், கதிரவன் மறைவதற்கு முன்பாக இயேசுவிடமிருந்து நலம்பெற்றால் அது பெரிய குற்றமாகிவிடும்... கதிரவன் மறைந்த பின் ஓய்வுநாள் முடிந்துவிடும், அதன்பிறகு நலம்பெற்றால் சிக்கலில்லை... என்பதாலேயே அந்த நேரத்தில் கூடியிருக்கின்றார்கள். இயேசு அவர்கள் அனைவருக்கும் நலமளிக்கின்றார். இவ்வாறு அவர், இறைவாக்கினர் எசாயா உரைப்பது போன்று, எல்லாருடைய பிணிகளையும் தம் மேல் தாங்கிக்கொள்கின்றார் (எசா 53:4).

இறைவனிடம் வேண்டிய இயேசு

இயேசு, சீமோனின் மாமியாரை நலப்படுத்தியதிலிருந்து பல்வேறு பிணிகளால் வருந்தியவர்களை நலப்படுத்தியது வரைக்கும் அவருக்கு ஒன்று உந்து சக்தியாக இருந்தது. அதுதான் அவர்செய்து வந்த இறைவேண்டல். இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார் என்று வாசிக்கின்றோம். ஆம், இயேசுவின் செய்த இறைவேண்டல் அவருடைய பணி வாழ்விற்கு உந்து சக்தியாக இருந்தது.

பலவேறு பணிகளைச் செய்கின்ற நாம் இறைவனிடம் வேண்டுவதற்கு நேரம் ஒதுகுகுகின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.

சிந்தனை

"இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்"(1 தெச 5: 17) என்பார் புனித பவுல். ஆகவே, நாம் பல்வேறு பணிகளைச் செய்தாலும், நம்முடைய வாழ்வின் ஆற்றலாக இருக்கும் இறைவேண்டலை இயேசுவைப் போன்று மேற்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!